அஞ்சனாதேவி திருப்பதியில் தவம் செய்ததால் கிடைத்த பிள்ளை ஆஞ்சநேயர். அதற்கு நன்றிக்கடனாகத் தன் பிள்ளையிடம், வெங்கடாஜலபதி சந்நிதி முன் எப்போதும் வணங்கிய கோலத்தில் நிற்கும் படி கட்டளையிட்டாள். சிறுகுழந்தையான ஆஞ்சநேயர், குறும்புத் தனத்தால் வானமண்டலத்தில் பறக்கத் தொடங்கினார். கோபம் கொண்ட தாய், ஆஞ்சநேயரை மீண்டும் திருமலைக்கு இழுத்து வந்தாள். மற்ற வானரங்களின் உதவியோடு விண்வெளியை மாயக் கயிறாக்கி பிள்ளையைக் கட்டி வைத்தாள். கைகளில் விலங்கிட்ட நிலையிலுள்ள அந்த ஆஞ்சநேயரே திருமலையில் வெங்கடேசப் பெருமாளின் முன்னிலையில் இன்றும் பேடி ஆஞ்சநேயராக வீற்றிருக்கிறார். முதலில் இவரை தரிசித்த பின்னரே திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற நியதியும் இங்கு பின்பற்றப்படுகிறது.