பாசார் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாறநாயனார் திருமடம் துவக்க விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2020 10:10
ரிஷிவந்தியம்; பாசார் மரகதாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இளையான்தன்குடி மாறநாயனார் திருமடம் துவக்க விழா நேற்று நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருங்கற்கலால் கட்டப்பட்ட மரகதாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மாவும், விஷ்ணுவும் வழிபட்டதாக வரலாறு. கோவிலைச் சுற்றியுள்ள பாறைகளில் கல்வெட்டுகள் உள்ளன.குறிப்பாக ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முதல் மாசி மாதம் வரை கோவில் மூலவரான பிரம்மபுரீஸ்வரர் மீது, சூரியஒளி படுகிறது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிவனடியார்கள் புதுப்பிக்கத் துவங்கியுள்ளனர்.முதல்கட்டமாக கோவிலுக்கு அருகே இளையான்தன்குடி மாறநாயனார் திருமடம் கட்டப்பட்டு, துவக்க விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சிவனடியார் நடராஜன் தலைமை தாங்கினார். திருவாசக சித்தர் தாமோதரன் துவக்கி வைத்தார். மகேஸ்வர பூஜையை ராஜம்மாள் சங்கரன் துவக்கி வைத்தார். மூன்று கலசங்கள் அமைத்து, பழங்கள், பூக்களைக் கொண்டு செண்டை மேளங்கள் முழங்க சிறப்பு வேள்வி பூஜை நடத்தப்பட்டது.தங்கதுரை பூஜைகளை செய்தார். காமேஸ்வரன் சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொண்ட உழவார திருக்கூட்டம் அறக்கட்டளை நிறுவனர் சிவபாலா செய்திருந்தார். சுற்று வட்டார கிராம மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.