பதிவு செய்த நாள்
11
அக்
2020
04:10
மணலிபுதுநகர் : அய்யா கோவிலில், சரவிளக்கு பூஜை, கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், இன்று நடக்கிறது.
சென்னை, மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்திப் பெற்றது. இங்கு, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், ௧௦ நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு திருவிழா, 2ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் திருவிழாவில், அய்யா, காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்தார். எட்டாம் நாளான, நேற்று முன்தினம் இரவு, சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை நடைபெற்றது.
முன்னதாக, லட்டு, அதிரசம், பனியாரம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை, பக்தர்கள் செண்டை மேளம் முழங்க, ஊர்வலமாக கொண்டு வந்து, அய்யாவின் முன் படையலிட்டனர்.சன்னிதியின் வாயிலில் இருக்கும் பிரம்மாண்ட சரவிளக்குகள், கதவில் உள்ள, 108 திருவிளக்குகளும் ஏற்றப்பட்டு, வைகுண்ட தர்மபதி, ஒளி வெள்ளத்தில் எழுந்தருளினார்.கோவில் வளாகத்தில், 800க்கும் மேற்பட்ட பெண்களும், முககவசம் அணிந்து, இடைவெளியுடன் வரிசையாக அமர்ந்து, விளக்குகள் ஏற்றி, திருக்கல்யாண ஏடு வாசிப்பை உச்சரித்தனர். பின், அய்யா, குதிரை வாகனத்தில் பதிவலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், இன்று காலை நடக்கிறது. பக்தர்கள் முகவசம் அணிந்து, இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.