பதிவு செய்த நாள்
12
அக்
2020
10:10
கிருஷ்ணகிரி : பர்கூரில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரி செலுத்துவது குறித்த கல்வெட்டை, வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவினர், பர்கூர் தாலுகா சாப்முட்லு கிராமத்தில், ஆய்வு செய்தனர். இதில், பட்டன் கொட்டாய் பெருமாள் கோவிலுக்கு அருகில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட, கல்வெட்டு கண்டறியப்பட்டது.இது குறித்து, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இக்கல்வெட்டு, கி.பி. 1413ல் பொறிக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தை விஜயநகர மன்னர் முதலாம் தேவராயர் ஆட்சி செய்தார்.
ஆனால், கல்வெட்டில் மன்னரின் பெயரை குறிக்காததால், சிறு தலைவர்களால், இப்பகுதி ஆளப்பட்டு வந்ததை யூகிக்க முடிகிறது.இதில், வசூலிக்கப்படும் வரிகள் மற்றும் எள் போன்ற பயிர்கள், வெள்ளாடு, எருமை, எருது போன்றவற்றுக்கு விதிக்கப்படும் வரிகள் மூலம், லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு மாலை மற்றும் திருவிளக்கு ஏற்ற வேண்டும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்பகுதியை ஆண்ட அரும்பார்கிழார் தியாக பெருமாள் என்பவரின் தானத்தை, இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.மேலும், சாப்முட்லு என தற்போது அழைக்கப்படும் இந்த ஊர், 600 ஆண்டுகளுக்கு முன், செப்புமுற்றல் என, அழகிய தமிழில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.