இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இந்து கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஒருவர் கைதாகியுள்ளார்.
கரியோ கன்வார் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமதேவ் கோவில் முகமது இஸ்மாயில் ஷீடி என்பவரால் சேதப்படுத்தப்பட்டதாக அசோக்குமார் என்ற பாகிஸ்தான் வாழ் இந்தியர் அளித்த புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து இதனை விசாரித்தனர்.கோவிலை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இஸ்மாயில் மனநலம் பாதிக்கப்பட்டவரா என போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் திட்டமிட்டு கோவிலை சேதப்படுத்தினாரா எனவும் பாகிஸ்தான் போலீசார் ஆய்வு செய்தனர்.
பாகிஸ்தானில் பெரும்பான்மை மக்களான இஸ்லாமியர்களை அடுத்து அதிக எண்ணிக்கையில் வாழும் சிறுபான்மையினர் ஹிந்துக்கள் ஆவர். குறிப்பாக சிந்து மாகாணத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகம். கரியோ கன்வர் பகுதி கோலி, மங்குவார், குவாரி, கரியா உள்ளிட்ட இந்து இனத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியாகும். தற்போதுவரை பாகிஸ்தானில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 75 லட்சம் இந்துக்கள் வசித்து வருகின்றனர். பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த மனிதவள ஆர்வலர் மற்றும் சிறுபான்மை நல அமைப்பு தலைவர் மணிலா குல்சார் கூறுகையில் 428 ஹிந்து கோவில்கள் பாகிஸ்தானில் இருந்தன. ஆனால் அவற்றுள் தற்போது 20 கோவில்கள் மட்டுமே மிச்சம் உள்ளன எனக் கூறியுள்ளார். மத வேற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஹிந்து கோவில்கள் சில திட்டமிட்டு அங்கு வாழும் பெரும்பான்மையினரால் தகர்க்கப்படுகின்றன அல்லது சேதம் செய்யப்படுகின்றன என அவர் கூறியுள்ளார். ஹிந்துக்கள் போலவே பாகிஸ்தானில் வசிக்கும் கிறிஸ்தவர்களின் மத வழிபாட்டு தலங்களுக்கு சேதம் உண்டாவது குறிப்பிடத்தக்கது.