பதிவு செய்த நாள்
22
அக்
2020
05:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் வரும் 26-ம் தேதி மன்னன் ராஜராஜசோழனின் 1035-வது சதய விழா நடைபெறம் நிலையில், கோவிலுக்குள் குறைந்தளவில் பக்தர்களை அனுமதிப்பது என சதய விழா குழுவினர் முடிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் பெரிய கோவிலில் சதய விழா குழுத் தலைவர் திருஞானம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: மாமன்னன் ராஜராஜசோழனின் 1035-வது சதய விழா வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது.
தற்போது கொரோனா தொற்று வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருப்பதால், அரசின் வழிகாட்டுதலைகளை கடைபிடித்து விழாவினை கொண்டாட உள்ளோம்.
மாமன்னன் ராஜராஜசோழனின் புகழை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் சதய விழாவில் வழக்கமாக கொண்டாடப்படும் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ராஜவீதிகளில் வீதிவுலாக்கள் இன்றி, ஒரு நாள் விழாவாகவும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி 26-ம் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையும், 6.30 மணிக்கு கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதலும், 7 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும், அதைத் தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தில் ஓதுவார்களின் பாராயண ஊர்வலமும், காலை 9.15 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேராபிஷேகமும், மதியம் 1 மணிக்கு தீபாரதனையை தருமபுர ஆதீனம் மடம் சார்பில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி புறப்பாடு கோயில் உள்பிரகார வளாகத்தில் நடைபெறவுள்ளது. விழாவில் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, அறநிலையத்துறை உதவி கமிஷனர் கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் மாதவன், சதயவிழா குழு உறுப்பினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சதயவிழாவையொட்டி, கோவிலில் பக்தர்கள் வந்து செல்ல தடுப்புகளும், ராஜராஜசோழன் சிலையை துாய்மை செய்து வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.