Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலா ஸ்நானம்: காவேரி நதியில் 66 கோடி ... மகா சமாதி தினம்: தங்க கவசத்தில் சாய்பாபா அருள்பாலிப்பு மகா சமாதி தினம்: தங்க கவசத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நம்மை இயக்க வைப்பவளுக்கு நன்றி செலுத்துவோம்!
எழுத்தின் அளவு:
நம்மை இயக்க வைப்பவளுக்கு நன்றி செலுத்துவோம்!

பதிவு செய்த நாள்

25 அக்
2020
10:10

ஜயம் என்றால் வெற்றி; விஜயம் என்றால், சிறப்பான வெற்றி என்றும், அபார வெற்றி என்றும் கூறலாம். நல்ல விஷயங்களுக்காக ஒரு இடத்திற்குச் செல்வது, ஒரு காரியத்தைத் துவங்குவது என, எல்லாவற்றிற்கும் பொருந்தும் சொல், விஜயம் என்பதாகும். மற்ற விரதங்கள், வழிபாடுகள் எல்லாவற்றையும் விட சிறப்பானது, நவராத்திரி விரதம். எழுதும் பேனா, படிக்கும் புத்தகம், தொழில் செய்ய இயந்திரங்கள், மண்வெட்டி, கத்தி, கடப்பாரை, ஏர் கலப்பை, பயணம் செல்ல உதவும் மாடு, குதிரை வண்டிகள், இன்றைய நாகரிக உலகில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர மோட்டார்கள், பாலுக்குப் பசுக்கள் என, நம் வாழ்க்கைத் துணைகளாக எத்தனையோ கருவிகளைச் சொல்லலாம். ஒரு வேலையானது முழுமையாக நடைபெற வேண்டுமானால், மூன்று விஷயங்கள் ஒன்றுபட வேண்டும் என்பது நியதி. காரியம், கரணம், கர்த்தா ஆகியவையே அவை. காரியம் என்றால் வேலை; அதைச் செய்பவர் கர்த்தா.
கர்த்தா, காரியத்தைச் செய்ய வேண்டுமானால், அதற்கு பயன்படும் பொருட்கள் மற்றும் கருவிகள் அனைத்துமே கரணங்கள் எனப்படுகின்றன.

வேலை செய்பவர்கள் தக்க கருவிகளைக் கொண்டு திறமையாகச் செயல்பட்டால், காரியம் நல்லபடியாக முடிந்து, தக்க பலன் கிடைக்கும் என்ற அடிப்படையில், திறமை என்பது சரஸ்வதியின் அருளாலும், பலன் என்பது லட்சுமியின் அருளாலும், கருவிகளின் இயக்கம் துர்கையின் அருளாலும் நிகழ்த்தப்படுவதால் தான், இம்மூன்று தெய்வங்களையும் நவராத்திரியில் வழிபடுவதுடன், இந்நாட்களில் கரணங்கள் எனப்படும் அனைத்துக் கருவிகளையும், பூஜையில் வைத்து வழிபட வேண்டும். கர்த்தா எனப்படும் நாம் அனைவருமே, அன்னையை வழிபடுவதையே காரியமாகக் கொண்டு விரதமிருக்க வேண்டும். இது சாத்தியமா என்று கேட்கலாம்.

பழங்காலத்தில் மன்னர்கள் இப்படித்தான் நவராத்திரியைக் கொண்டாடியுள்ளதாக புராணங்களும், வரலாறுகளும் கூறுகின்றன. அரண்மனையின் அனைத்து உபயோகப் பொருட்களையும், வாகனங்களையும் தினமும் கொலு மண்டபத்தில் வைத்து பூஜை செய்திருக்கின்றனர். அதற்கான பூஜை விதிமுறைகள் மற்றும் மந்திரங்கள் அடங்கிய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இவ்வழக்கமே, இக்காலத்தில் பொம்மைகளாக எல்லாவற்றையும் கொலு வைப்பது என, மாறியுள்ளது. நவராத்திரி ஒன்பது நாட்களும் அன்னையையும், ஆயுதங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, விஜயதசமி நன்னாளில் படிப்பு, வேலை, தொழில் மற்றும் வியாபாரம் என, எதைத் துவங்கினாலும், வெற்றியைத் தரும் என, சாஸ்திரங்கள் கூறுகின்றன; காலம் காலமாய் நாமும் கொண்டாடி வருகிறோம். இன்றைய அவசர வாழ்க்கையில், தேவைக்கேற்ப சரஸ்வதி பூஜையன்றே ஆயுத பூஜை செய்து, மறுநாள் விஜயதசமியில் எடுத்துப் புழங்கும் வழக்கம், இடையில் தான் ஏற்பட்டுள்ளது.

எல்லாத் திருக்கோவில்களிலும் கூட, அம்புச் சொக்கர் என்ற பெயரில், சிவபெருமானும், அம்மன் திருக்கோவில்களில் துர்கை, காளி முதலிய தெய்வங்களும் புறப்பாடாகி, ஊர் புறத்தேயுள்ள வன்னி மரத்தில் அம்பு எய்தருளும் விழா, இன்றளவும் நடைபெற்று வருகிறது.விஜயதசமியில் தான் கருவிகளை உபயோகப்படுத்த துவங்க வேண்டும் என்பதை, இறைவனே செய்து நமக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது. மகாபாரதத்தில் கவுரவர்களின் சூழ்ச்சியால், சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், ஒப்பந்தப்படி, 12 ஆண்டுகள் வனவாசம் முடித்து, ஒரு ஆண்டு யாராலும் கண்டுபிடிக்க முடியாத அக்ஞாதவாசத்தை, விராட தேசத்தில் மாறுவேடம் பூண்டு, யாரும் அறிய முடியாதபடி வாழ்ந்தனர்; ஓராண்டு பூர்த்தியாகும் வரை, ஆயுதங்களையும் மறைத்து வைத்திருந்தனர்.அர்ஜுனனின் புகழ் வாய்ந்த காண்டீபம் எனும் வில்லும், அம்புகளும் மற்றும் அவனது ஒளி பொருந்திய போர்க் கவசங்களும், ஒரு வன்னி மரத்தின் பொந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

ஓராண்டு முடியும் சமயம், நவராத்திரியும் வந்ததால், திரவுபதியுடன், பாண்டவர்களும், அம்பிகை விரதம் இருந்து, மானசீகமாக வழிபட்டு வந்தனர். இப்படியிருக்க, பாண்டவர்கள் விராட தேசத்தில் ஒளிந்திருப்பதை, ஒற்றர்கள் மூலம் அறிந்த கவுரவர்கள், தந்திரமாக விராட தேசத்தின் மீது போர் தொடுத்தனர். அதாவது, போர் என்று வந்தால், வீரமிக்க பாண்டவர்கள் ஒளிந்திருக்க மாட்டார்கள்; வெளியே வருவர். யாரும் கண்டுபிடிக்க முடியாமல், ஓராண்டு வாழ வேண்டும் எனும் ஒப்பந்தத்தை மீறினர் என, பழி சுமத்தி மீண்டும், 12 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி விடலாம் என்பது, கவுரவர்களின் தீய எண்ணம்.

போர் துவங்கியது. விராடனின் மகன், உத்தரனுக்குத் தேரோட்டியாக அர்ஜுனன் கிளம்பினான். உத்தரனுக்குப் போர் பயிற்சி அவ்வளவாக கிடையாது; தேரோட்டுபவன் அர்ஜுனன் என்பதும் அவனுக்குத் தெரியாது. போர்க்களத்திற்குச் செல்லும் முன், வன்னி மரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தன் போர்க்கவசங்களை அணிந்தும், காண்டீபம் எனும் வில்லையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டும், தேரில் ஏறினான் அர்ஜுனன். தன் தேரோட்டியாக இருப்பவன், அர்ஜுனன் என்பதையறிந்த, விராட இளவரசன் உத்தரன் மகிழ்ச்சியில் அதிர்ந்தான். அதேசமயம், அர்ஜுனன் தன் வில்லின் நாண் கயிறை இழுத்து, டணார்.... எனும் பெரும் ஒலியெழுப்பினான். காண்டீபத்தின் சத்தத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே, கவுரவர் படை பயத்தில் அதிர்ந்தது; பல வீரர்கள் மூர்ச்சையாயினர்; சிலர், ஒப்பந்தம் மீறப்பட்டதால், பாண்டவர்கள் மீண்டும் காட்டுக்குச் செல்ல வேண்டும் எனக் கூவினர்.

அர்ஜுனன் சிரித்தவாறு, கவுரவர்கள் பக்கம் நின்ற, தம் ஆசான் துரோணாச்சாரியாரின் திருவடிகளின் முன் விழுமாறு, ஒரு அம்பை எய்து, வீர வணக்கம் செலுத்தினான்; ஆசாரிய துரோணரும், புன்முறுவலுடன் ஏற்று, கவுரவர்களைப் பார்த்து, நேற்றோடு ஓராண்டு பூர்த்தியாகி விட்டது. இன்று விஜயதசமியில் விஜயன் போருக்கு வந்துள்ளதில் தவறில்லை; பேசிக் கொண்டிருக்காமல் காண்டீபத்திற்கு பதில் சொல்லுங்கள்... என்றும் கூறி கண்டிக்க; போர் துவங்கியது. இப்படிச் சிறப்பு வாய்ந்த விஜய தசமி நன்னாளில், காலை நல்ல நேரத்தில் முதல் நாள் பூஜையில் வைத்த புத்தகங்கள், பேனா மற்றும் அனைத்து ஆயுதங்களையும், ஓம் ஸ்ரீதுர்க்காயை நமஹ... ஓம் ஸ்ரீமகாலக்ஷ்ம்யை நமஹ...
ஓம் ஸ்ரீசரஸ்வத்யை நமஹ... என, அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபினி|
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே ஸதா||
எனும் சுலோகத்தைச் சொல்லி மாணவர்கள் படிக்கத் துவங்கவும்;
அவரவர்கள் தொழிலையும், அந்த நல்ல நேரத்திலேயே துவங்கவும்.
இனி வரும் நாட்கள், அன்னையின் அருளால் வெற்றியாகவே அமைய, வாசகர்களை,
தினமலர் வாழ்த்தி மகிழ்கிறது! --ஏ.வி.சுவாமிநாத
சிவாச்சாரியார்
மயிலாடுதுறை

இன்றைய கோலம் ஹ்ருதய கமலம்

நிவேதனம் : புளியோதரை, தயிர் சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் ஆகிய நிவேதனங்களை செய்து, சூடம் ஏற்றி, தீபாராதனை செய்து, புஷ்பாஞ்சலி செய்து, நமஸ்காரம் செய்யவும்.

சுலோகம்
அக்ஷஸ்ருக்பரசும் கதேஷுகுலிசம்
பத்மம் தனுஷ்குண்டிாம்|
சங்கம் சக்ரமஸிம்ச சர்ம ஜலஜம்
கண்டாம் ஸுராபாஜனம்||
சூலம் பாச ஸுதர்சனேச தததீம்
ஹஸ்தை: ப்ரஸன்னாநநாம்|
ஸேவே ஸைரிப மர்த்தினீமிஹ
மகாலக்ஷ்மீம் ஸரோஜஸ்திதாம்||
- ஸ்ரீதேவீமகாத்மியம்

பொருள்: ஸ்ரீமகாலட்சுமி, துர்கையின், பதினெண் கரங்களில் உள்ள ஆயுதங்கள், ஜப மாலை, தாமரை, அம்பு, வாள், வஜ்ராயுதம், கதாயுதம், சக்கரம், திரிசூலம், கோடரி, சங்கு, மணி, பாசக்கயிறு, சக்தி, வேல் தண்டம், கேடயம், வில், கிண்ணம், கமண்டலம்.
இவ்வளவு ஆயுதங்களையும், பதினெட்டு கரங்களில் வைத்து, சிரித்த முகத்துடன், மஹிஷாசுர மர்த்தினியாக இருக்கும் அன்னை துர்கையே, உன்னை வணங்குகிறோம்.
இந்த ஆயுதங்களைக் கொண்டு உழைக்கும் எங்களை காப்பாற்றுவாயாக என, பூஜையில் வைத்த ஆயுதங்களை பிரார்த்திக்க வேண்டும். பூஜையில் வைத்த புத்தகங்களில் புஷ்பம் போட்டு, ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபினீ|
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவது

மே ஸதா||

பொருள்: அழகியத்தோற்றமுடைய சரஸ்வதி தாயே! உமது வடிவாகிய நுால்களைப் பூஜித்துப் படிக்கத் துவங்குகிறோம். கல்வி ஞானம் அருளுவாயாக!!
எனப் பிரார்த்தித்து பாடம் படிக்கத் துவங்க வேண்டும்.

நவராத்திரி பத்தாம் நாளுக்கான நிவேதனம்: நவராத்திரிக்கு நிவேதன உணவு செய்யச் சொல்லிக் கொடுக்க, ஜி.ஆர்.டி., ஓட்டல் தலைமை சமையல் கலைஞர் சீதாராம் பிரசாத் முன் வந்தார். ஒவ்வொரு பெயராகச் சொல்லச் சொல்ல, நிமிட நேரங்களில் எல்லாவற்றையும் தயார் செய்து அசத்தினார். இனி தினமும், சீதாராம் பிரசாத் சொல்லிக் கொடுப்பார்.

புளியோதரை!

தேவையான பொருட்கள்

பச்சரிசி -
500 கிராம்
புளியோதரை பொடி செய்ய...
தனியா - 15 கிராம்
வெந்தயம் - 5 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
வெள்ளை எள் - 15 கிராம்
மிளகு - 10 கிராம்
புளி காய்ச்சலுக்கு...
நல்லெண்ணெய் -
100 மில்லி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2
தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் துாள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 குச்சி
வேர்க்கடலை - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
புளி - 100 கிராம்

செய்முறை: பச்சரிசியை, 20 நிமிடம் ஊற வைத்து, பொல பொல என்று வேக வைக்கவும். புளியோதரை பொடிக்கான பொருட்களை, வெறும் வாணலியில் வறுத்து, பொடி செய்து கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கடுகு, கடலை பருப்பு தாளித்து, புளி தண்ணீர் சேர்த்து, 20 நிமிடம் மூடி கொதிக்க வைக்கவும். பின், அதில் அரைத்து வைத்த புளியோதரை பொடி சேர்த்து, கொதிக்க விட்டு ஆற வைக்கவும். ஆறிய பின், வேக வைத்த சாதம் சேர்த்து கலக்கவும்.இதில் அடங்கிஉள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 3563.4; கார்போஹைட்ரேட், 497.5; புரதம், 70.9; கொழுப்பு, 137.5.

தயிர் சாதம்!

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 250 கிராம்
தயிர் - 250 கிராம்
பால் - 60 மில்லி
வெண்ணெய் - 50 கிராம்
எண்ணெய் - 30 மில்லி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
உளுந்தம் பருப்பு -
1 தேக்கரண்டி
துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி -
1 தேக்கரண்டி
மாதுளை முத்துகள் -
1 மேஜை கரண்டி
துருவிய கேரட் - 30 கிராம்
ஊற வைத்த முந்திரி - 30 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை: பச்சரிசியை, 20 நிமிடம் ஊற வைத்து, வெண்ணெய் மற்றும் பால் சேர்த்து வேக வைக்கவும். பின், இதை லேசாக மசித்துக் கொள்ளவும். இதில் தயிர், ஊற வைத்த முந்திரி, உப்பு சேர்த்து கலக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்தம் பருப்பு, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளிக்கவும். இதை தயிர் சாதத்தில் போட்டு கலக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மாதுளை முத்துக்களுடன், துருவிய கேரட் சேர்க்கவும்.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 1900; கார்போஹைட்ரேட், 222.5; புரதம், 36.9; கொழுப்பு, 93.5.


எலுமிச்சை சாதம்!
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 500 கிராம்
எலுமிச்சை சாறு - 30 மில்லி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
பெருங்காயம் -
1 தேக்கரண்டி
மஞ்சள் துாள் -
1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை - 50 கிராம்
எண்ணெய் - 60 மில்லி
கொத்தமல்லி -
1 தேக்கரண்டி

செய்முறை: அரிசியை, 20 நிமிடம் ஊற வைத்து, சாதம் வடிக்கவும். வாணலியில், சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி, வேர்க்கடலையை வறுத்து தனியாக வைக்கவும். பின், அதே வாணலியில் மீண்டும் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அடுப்பை அணைத்து விட்டு, பெருங்காயம், மஞ்சள் துாள், எலுமிச்சை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை வடித்த சாதத்தில் சேர்த்து உப்பு, வறுத்த வேர்க்கடலை மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 1900; கார்போஹைட்ரேட், 222.5; புரதம், 36.9; கொழுப்பு, 93.5.மூன்று ரெசிப்பிகளும், தலா ஐந்து பேர் சாப்பிடலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar