பதிவு செய்த நாள்
28
அக்
2020
11:10
திருநெல்வேலி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில், தசரா திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் நடந்தது. துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் - முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் தசரா திருவிழாவில், பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடமிட்டு, ஆடிப்பாடி நேர்த்தி கடன் செலுத்துவர்.தசரா விழா அக்., 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோன பாதிப்பால், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். தினமும் இரவில், அம்மன் வெவ்வேறு வாகனங்களில், வீதிஉலா வந்தார்.
மகிஷா சூரசம்ஹாரம்: நேற்று முன்தினம் நள்ளிரவில், கடற்கரைக்கு பதிலாக கோவில் வளாகத்தில் நடந்தது. பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.அதேபோல, திருநெல்வேலியில் தசரா திருவிழா தெற்கு பஜார் ஆயிரத்தம்மன் கோவிலில் அக்., 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவில், ஆயிரத்தம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளிஅம்மன், உலகம்மன், துாத்துவாரி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்தும், அம்மன்கள் சப்பரங்களில் எழுந்தருளினர். எருமைகிடா மைதானத்தில், சூரசம்ஹாரம் நடந்தது. கலெக்டர் ஷில்பா பங்கேற்று கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசினார்.