பதிவு செய்த நாள்
29
அக்
2020
10:10
பொது நோக்கத்துக்காக கோவில் நிலங்களை பயன்படுத்துவது தொடர்பான அரசாணைகள், நீதிமன்ற தீர்ப்புகள், கள்ளக்குறிச்சி அர்த்தநாரீஸ்வரர் சொத்துகள் விஷயத்தில், அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக, அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல், நில மோசடியாளர்கள் போன்று, கோவில் நிலம் அதிகாரிகளால் பறிக்கப்படுவது, பக்தர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், திருக்கோவில்களுக்கு மன்னர்களாலும், நிலச்சுவான்தாரர்களாலும் வழங்கப் பட்ட, நிலங்களில் இருந்து வரும் வருமானம் வாயிலாக பூஜைகள், திருப்பணிகள் நடந்து வருகின்றன. பக்தர்களின் காணிக்கைக்கு அப்பால், நிலங்களில் இருந்து வரும் வருவாயே பிரதான நிதி ஆதாரமாக உள்ளது. இதில், அறநிலையத் துறை அதிகாரிகள் அலட்சியத்தால், பெரும்பகுதி கோவில் சொத்துக்கள் தனியாரால் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதற்கு போட்டியாக, பொது நோக்கம் என்ற பெயரில், அரசு நிர்வாகமே கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்வது, பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:கோவில் சொத்துக்களை பொது நோக்கத்துக்கு பயன்படுத்துவது தொடர்பாக, உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், பல்வேறு தீர்ப்புகள் வழங்கியுள்ளன. இந்த வழிகாட்டுதல்களை, அரசு அதிகாரிகள் புறக்கணிப்பதையே, வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பொது நோக்க அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தும்போது, கோவில் நிலங்கள் விஷயத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், 1894 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ், அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்காக, 1984ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இதன்படி, திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தினால், கோவிலின் வருவாய் பாதிக்கப்படும்.நிலம் கேட்பு துறையினர், கடைசி கட்டமாக தவிர்க்க முடியாத நிலையில் தான், கோவில் நிலங்களை கையகப்படுத்த பரிசீலிக்க வேண்டும். கோவில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான தவிர்க்க முடியாத காரணத்தை விளக்க குறிப்பு வாயிலாக தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு திருக்கோவில் நிர்வாக வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட எதிர்ப்பின்மை சான்றிதழ், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலத்தில் இருந்து, கோவில் எந்த பயனும் பெற இயல வில்லை என்பதை சான்றளிக்க வேண்டும்.இந்த நடைமுறையை பின்பற்ற, அனைத்து கலெக்டர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும். இதற்கு மாறாக, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு, கோவில் நிலம் எடுக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.இத்தகைய விதிமீறல் நடவடிக்கைகளை, தமிழக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். - - நமது நிருபர் - -