பதிவு செய்த நாள்
07
நவ
2020
02:11
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், இந்தாண்டு கந்த சஷ்டி விழா, சுவாமி வீதியுலா இல்லாமல் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் காலை, மாலையில் சுவாமி ஊர்வலம் நடைபெறும். மேலும், பக்தர்களுக்காக லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வரும், 15ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்க இருக்கிறது. 20ல் சூரசம்ஹாரம், 21ல் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, சுவாமி வீதியுலா, சூரசம்ஹாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த முடியாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அறநிலையத் துறை உதவி ஆணையர் ரேணுகா தேவி கூறுகையில், இந்தாண்டு கந்த சஷ்டி விழா, சுவாமி வீதியுலா இன்றி, கோவில் உட்புறத்தில் நடைபெறும். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.