பதிவு செய்த நாள்
08
நவ
2020
11:11
கள்ளக்குறிச்சி: உலகியநல்லுார் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லுார் கிராமத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரவந்த நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 7 நிலைகள், 99 அடி உயர ராஜகோபுரத்துடன் உள்ள இக்கோவிலில், கணபதி, காசி விஸ்வநாதர், சொக்கநாதர், குபேந்திரன், முருகன், பிரம்மா, தட்சணாமூர்த்தி, பைரவர், நவக்கிரகம் உட்பட பல்வேறு சாமி சிலைகள் உள்ளன.இக்கோவிலில் கிரிவலம், பிரதோஷம், பைரவர் பூஜைகளின் போது சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். சிறப்பு மிக்க இக்கோவில், கடந்த 13 தலைமுறைகளுக்கு மேலாக கும்பாபிேஷகம் செய்யப்படாமல் உள்ளது.முறையான பராமரிப்பு இல்லாததால் ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமடைந்தும், செடிகள் வளர்ந்து இருப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். கோவில் மதில் சுவரைச் சுற்றி புதர்மண்டிக் கிடப்பதால், அதன் புனித தன்மையினை இழந்து வருகிறது.எனவே, ராஜகோபுரத்தில் உள்ள செடிகளை அகற்றி, சேதமடைந்த சிலைகளை புனரமைப்பு செய்வதுடன், கும்பாபிேஷக திருப்பணிகளை மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.