பதிவு செய்த நாள்
12
நவ
2020
05:11
அவிநாசி: பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்பட்ட புடவைகள், அவிநாசி தாலுகாவில் உள்ள கோவில்களில் அம்மனுக்கு அலங்காரம் செய்ய வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மனுக்கு, பக்தர்களால் புடவைகள் சாத்தப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த புடவைகள், அவிநாசி தாலுகாவை சுற்றியுள்ள, 64 கோவில்களில் உள்ள அம்மனுக்கு அலங்காரம் செய்வதற்காக வழங்கும் நிகழ்ச்சி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது. அவிநாசி, சேவூர், கருவலூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள, ஒரு கால பூஜை நடக்கும், 64 கோவில் பூசாரிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு கோவிலுக்கும், தலா, 60 புடவை வீதம் வழங்கப்பட்டன. திருப்பூர், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் செயல் அலுவலர் சரவணன், கருவலூர் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் புடவைகளை கோவில் பூசாரிகளுக்கு வழங்கினர்.