பதிவு செய்த நாள்
14
நவ
2020
04:11
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளார், பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும், தீபாவளி அருளாசி வழங்கியுள்ளார்.
பங்காரு அடிகளார் வழங்கிய ஆசி:தீபாவளி பண்டிகை என்பது,ஒருவருக்கொருவர் கொடுத்து உதவும் பண்டிகை. சந்தோஷம், நற்பயன் அளிப்பதே தீபாவளி.பொதுவாக, மெய்ஞானத்துடன் செயல்பட்டு, உழைத்து வாழும்போது, நல்ல எண்ணங்கள், செயல்கள் உண்டாகிறது. இயற்கையுடன் சேர்ந்து வாழும்போது, நோய் ஏற்படாது.
தீபாவளி பலகாரத்திற்கு, மாவில் இயற்கை பொருட்களான வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்து, முன்பு இனிப்பு செய்தனர். அப்போது, ஆரோக்கியமாக இருந்தோம்.தற்போது, சாக்ரீம் சேர்த்து செய்வது உடலுக்கு கேடு விளைவிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. மெய்ஞானத்தை மறந்து, விஞ்ஞானத்திற்கு வந்தபோது, உலகம் ஆட்டம் காண்கிறது. முதியோர், சித்தர் பண்டிகைக்கு அறிவுரை கூறி, வீட்டை சுத்தம் செய்து, ஆன்மிக மெய்ஞானத்தை பின்பற்றியபோது, நற்பயன் ஏற்பட்டது. இன்று, காட்சிப்பொருளாக பண்டிகை மாறிவிட்டது.தற்போது வந்துள்ள கொரோனா வைரஸ் என்பது மாரியம்மை. இது வந்தால், வேப்பிலையை, மஞ்சள் நீரில் சேர்த்து, வீட்டில் தெளிப்போம். வேப்பிலைக்கும், மஞ்சளுக்கும் அவ்வளவு மகிமை உள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டால், திப்பிலி, மிளகு உள்ளிட்ட பொருட்களால் தயாராகும் கஷாயம் அருந்த, நோய் சரியானது. இப்போது, பல வியாதிகள் ஏற்பட்டு வருகிறது. ஆனால், கஷாயத்தை விட்டுவிட்டு மருத்துவரிடம் ஓடுகிறோம்.விமானம் படைத்தான்விஞ்ஞானத்தால் காற்றை கண்டுபிடித்தாலும், கொரோனாவை தடுக்க வழி கண்டுபிடிக்க முடியவில்லை. பறவை கண்டு, விமானம் படைத்தான். இப்போது, பறவைகள் சுதந்திரமாக திரிகின்றன. விமானமோ, கொரோனா சூழலில், பறக்காமல் தரையில் உள்ளது. இந்தியாவை, ஆன்மிக நாடாக அறிந்து, வெளிநாட்டு பறவைகளும், இங்கு வந்து இனம் பெருக்குகின்றன. நம் நாட்டு பறவைகளோ, வெளிநாடு செல்வதில்லை. காரணம், அங்கு அழிவு தான் என்பது, அவற்றுக்கு தெரியும்.
இயற்கை புறக்கணிப்பு: முற்காலத்தில், குடிசை வீடாக இருந்தாலும், இயற்கை, காற்றோட்டத்துடன் இருந்தது. இப்போது, இயற்கையை புறக்கணித்து, வீடு கட்டி பணம் ஆக்குகின்றனர். விலங்குகள் காட்டில் வாழ்ந்து, மனிதன் வீட்டில் வாழ்ந்தான். விலங்குகள், இப்போது, வீட்டிற்கே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.மெய்ஞானம், இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும். அன்பு, பாசம் இருக்க வேண்டும். பெற்றோரை வணங்க வேண்டும். உழைக்க வேண்டும். வாசகர்கள், பக்தர்கள், செவ்வாடை தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்.இவ்வாறு, பங்காரு அடிகளார் ஆசி தெரிவித்தார்.