ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில், 300ஆண்டுகள் பழமையான கோவிலில், சாணியடி திருவிழா கோலாகலமாக நடந்தது. ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில், 300 ஆண்டு பழமையான பீரேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்துவரும் நான்காவது நாளில், சாணியடி திருவிழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா நேற்று காலை துவங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள பசுமாடுகளின் சாணம் சேகரிக்கப்பட்டு, கோவிலின் பின்புறம் குவிக்கப்பட்டது. இதை அடுத்து அலங்கரிக்கப் பட்ட பீரேஸ்வரருக்கு, சிறப்பு பூஜைகள் செய்து, கிராம மக்கள் சட்டை அணியாமல் கோவிலுக்கு சென்றனர். பின், கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை, உருண்டைகளாக பிடித்து, ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து, கொண்டாடினர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் விழாவை ரசித்தனர். பின் அனைவரும் குளத்தில் குளித்து விட்டு, பீரேஸ்வரரை வழிபட்டனர்.