சபரிமலை நடை அடைக்கும் நேரம் மாற்றம்: 3 பேருக்கு தொற்றால் கவலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2020 08:11
சபரிமலை : சபரிமலையில் நடை அடைக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பணியில் இருந்த எஸ்.ஐ., உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று பாதித்ததால் அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். சபரிமலையில் மண்டல காலம் கோவிட் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து பகல் ஒரு மணிக்கும், மாலை, 5:00 மணிக்கு நடை திறந்து இரவு, 10:00 மணிக்கும் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் இரவு, 7:00 மணிக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதி கிடையாது. இதனால் இரவு நேரத்தில் நீண்ட நேரம் நடை திறந்திருக்க வேண்டாம் என்று தந்திரியுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.
இதன் படி மாலை, 5:00 மணிக்கு பதிலாக, 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு, 9:00 மணிக்கு பதில், 8:00 மணிக்கு அத்தாழ பூஜை முடிந்து, 9:00 மணிக்கு அரிவராசனம் பாடி, 9:30 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கிடையில் சன்னிதானத்தில் பணிக்கு வந்த ஒரு எஸ்.ஐ.க்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நிலக்கல்லில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். சபரிமலை அமைந்துள்ள பத்தணந்திட்டை மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு உள்ளது. இதனால் பக்தர்கள் கவனமாக பயணம் மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.