காஞ்சி மடத்திற்கு வந்த பக்தர் ஒருவர், ‘‘சுவாமி! நான் பரம ஏழை. இதுவரை வாழ்வில் புண்ணியம் தேடவில்லை. எப்படி கடைத்தேறுவது... எனக்கு நல்வழி காட்ட வேண்டும்’’ எனக் கண்ணீர் விட்டார். ‘‘புண்ணியம் சம்பாதிக்கப் பணம் தேவையில்லை. நல்ல மனசு தான் தேவை. நான் சொல்வதை கடைப்பிடிச்சா போதும்’’ என்றார் காஞ்சி மகாபெரியவர். ‘‘கட்டாயம் சுவாமி’’ என்றார் பக்தர். எளிமையான பத்து விஷயங்களை எடுத்துச் சொன்னார். 1. காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். 2. எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் முதலில் பிரார்த்தனை செய்வது அவசியம். 3. புண்ணிய நதிகள், பசு, நல்லவர்களை ஒரு நிமிடம் மனதால் வணங்க வேண்டும். 4. வாரத்தில் ஒருநாளாவது கோயிலுக்குச் செல்ல வேண்டும். ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்னும் அவ்வையாரின் வழிகாட்டுதலை மறக்கக் கூடாது. 5. அக்கம்பக்கத்தினரை நேசிக்க வேண்டும். யார் மீதும் பகை எண்ணம் கூடாது. 6. சாப்பிடும் முன் விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும். குறிப்பாக காக்கைக்கு சோறு வைப்பது அவசியம். 7. முடிந்தளவு தினமும் தர்மம் செய்ய வேண்டும். 8. நெற்றியில் அவரவர் சம்பிரதாயப்படி திருநீறு, திருமண், குங்குமம், சந்தனம் இட வேண்டும். இதனால் நம்மை பார்ப்பவர்களுக்கும் நல்ல சிந்தனை ஏற்படும். ‘நீறில்லா நெற்றி பாழ்’ என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 9. துாங்கச் செல்லும் முன் அன்றன்று செய்த நல்லது, கெட்டதுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். இனி நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இது கற்றுக் கொடுக்கும். 10. இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை ஜபித்துவிட்டு துாங்கச் செல்ல வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றினால் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.