பதிவு செய்த நாள்
27
நவ
2020
10:11
திருக்கார்த்திகையன்று காலையில் ஏற்றப்படுவது பரணிதீபம். இத்தீபத்தை அண்ணாமலையார் கருவறையில் ஏற்றுவர். பரம்பொருள் ஒன்று என்பதை காட்டுவதற்காக ஒரு பெரிய கற்பூரக் குவியலில் ஜோதி ஏற்றி தீபாராதனை செய்வர். அதிலிருந்து ஒரு மடக்கில் உள்ள நெய்த்திரியில் விளக்கு ஏற்றப்படும். அந்த தீபத்தை நந்திதேவரின் முன் காட்டி ஐந்து மடக்குகளில் நெய் விளக்கேற்றுவர். விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளையும் இந்த ஐந்து தீபங்கள் குறிக்கும். முதலில் ஏற்றப்பட்ட நெய்தீபத்தை உண்ணாமுலை அம்மன் சந்நிதிக்கு கொண்டு செல்வர். அங்கே ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றுவர். இது தேவியின் பஞ்சசக்திகளைக் குறிக்கும். அதன்பின் எல்லா சந்நிதிகளிலும் தீபம் ஏற்றப்படும்.
பரணி நட்சத்திர வேளையில் ஏற்றுவதால் இதை பரணிதீபம் என்பர். இந்த தீபங்கள் அனைத்தும் மாலையில் ஒன்று சேர்க்கப்படும். உலகம் எல்லாம் பரம்பொருளின் மாறுபட்ட கோலங்களே. அவை அனைத்தும் மீண்டும் பரம்பொருளில் ஐக்கியமாகிவிடும் என்பதை உணர்த்தும் விதத்தில் இதைச் செய்வர். மாலையில் பின்னர் பஞ்சமூர்த்திகளும், அர்த்தநாரீஸ்வரரும் கோயிலுக்குள் எழுந்தருள்வர். இவர்களுக்கு தீபாரதனை செய்யும் போது மலையில் தீபம் ஏற்றப்படும்.
அண்ணாமலை தீபம்: கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது. மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் 3500 கிலோ நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகிறது. இந்த பெருஞ்சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாகத் தெரிகின்றது. தீபம் குளிர்ந்த பின்னர், மலையுச்சியில் இருந்து திருக்கோயிலுக்கு தீப கொப்பரை எடுத்துவரப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அதனை அப்படியே பாதுகாத்து, மார்கழி- ஆருத்ரா தரிசன திருநாளில், கொப்பரையில் இருந்து தீப மை சேகரித்து, அதனுடன் இதர வாசனைத் திரவியங்கள் சேர்த்து, நடராஜருக்கு சார்த்தி வழிபாடுகள் நடைபெறும். பிரசாத மை பக்தர்களுக்கும் வழங்கப்படும். அதை, தினமும் அண்ணாமலையாரை தியானித்து நெற்றியில் இட்டு வர, துயரங்கள் நீங்கி நன்மைகள் பெருகும்; நம் இல்லத்தை தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை.
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும். பெரும் தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் தோன்றிய புயலின் வேகம் தணிக்கப்படும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் ஒருங்கே பிரசன்னமாகி அருள் பாலிக்கின்றனர். சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது. ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையிலுள்ள உறவை திருவிளக்குகள் உணர்த்துகின்றன. விளக்கில் சுடர் எரிவது நமக்கு நன்றாக தெரியும் புறத்தோற்றமாகும். ஆனால் அந்தச்சுடர் எண்ணெயை மெல்ல கிரகித்து எரிகின்றது என்பது நாம் உணர வேண்டிய அகத்தோற்றமாகும். வாழ்க்கையில் தெளிவான புறத்தோற்றத்தையும் அதற்கு அடிப்படையான, நுட்பமான அகத்தோற்றத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை தீப வழிபாடு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. திருவிளக்கால் அறியத்தக்க மறைபொருள்கள் பல இருக்கின்றன என்பதை தெரிந்து செயல்பட்டால் வாழ்வில் இருள் நீங்கி, ஒளி பெருகும்.