பார்வதிதேவியை சிவபெருமான், தன் இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனதைக் குறிக்கும் வகையில், கார்த்திகையன்று மாலையில் திருவண்ணாமலை கோயிலுக்குள் அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு நடக்கும். இந்த ஒருநாள் மட்டுமே இவருடைய தரிசனம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடிமரத்தின் அருகே பரணிதீபங்கள் ஒன்று சேர்ந்ததும், தீ பந்தத்தை அடையாளமாகக் காட்டுவர். அதற்கு ஜலால் என்று பெயர். உடனே, மலையில் கார்த்திகைதீபம் ஏற்றப்படும். மலைதீபத்தை ஏற்றும் உரிமை பர்வதராஜ குலமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்கும் தொழிலைக் கொண்ட இவர்கள் தங்கள் குலதெய்வமாகிய பார்வதி தேவிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இவ்வழிபாட்டைச் செய்கின்றனர். இவர்கள், காலையில் கோயில் நிர்வாகத்தினரிடம் தீபம் ஏற்றும் மடக்கு, நெய், திரி ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு மலையேறுவர். முற்காலத்தில் வெண்கலப்பாத்திரத்தில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டு வந்தது. 1991ல் இரும்புக் கொப்பரையாக மாற்றப்பட்டது. 92 கிலோ செம்பும், 110 கிலோ இரும்புக் கொப்பரையில், மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருக்கும். சுற்றியுள்ள ஊர் மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே தீபத்தை வழிபடுவர்.