பதிவு செய்த நாள்
30
நவ
2020
08:11
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு கார்த்திகை தீபமும், சொக்கப் பனை கொளுத்தப்பட்டது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமியம்மன், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், மேற்கு ரதவீதி லிங்கேஸ்வரர், நாகல் நகர் வரதராஜ பெருமாள், பாரதி புரம் புவனேஸ்வரி அம்மன் கோயில்களில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப் பனை கொளுத்தப்பட்டது. வீடுகளில் பெண்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர். சிறப்பு பூஜைகளும் செய்தனர்.
பழநி: மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். மேற்கு வெளிப்பிரகாரத்தில் தீபக்கம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதே போல் திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில்களில் தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில் குமார் பங்கேற்றனர். கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலையில் கோயில் முன்பு படி மேடையில் அமைந்துள்ள கம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர்.வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், திருமஞ்சனம் நடந்தது. மாலையில் மகா தீபம், சொக்கப்பனை ஏற்றப்பட்டது. வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பாலமுருகன், தென்னம்பட்டி சவடம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.