பதிவு செய்த நாள்
30
நவ
2020
08:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மீது திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். இன்று தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.
கோயிலுக்குள் அனுக்ஞை விநாயகர் முன் மாலை 5:00 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தன. அதே நேரத்தில் மலை மீதுள்ள தீப மண்டபம் அருகிலுள்ள உச்சிப்பிள்ளையார் முன் கும்பங்களில் புனிதநீர் நிரப்பி வைத்து, விநாயகர் பூஜை, அக்னிலிங்க பூஜை, வர்ணபூஜை, தீபாராதனைகள் முடிந்து, தீப கொப்பரையில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கோயிலுக்குள் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பாலதீபம் ஏற்றப்பட்டது.கோயில் மணி அடிக்கப்பட்டதும், மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றினர்.மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன் மூன்று முறை பாலதீபம் ஆரத்தி நடந்தது.
உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருவாட்சி மண்டபத்தில் அலங்காரத்தில் எழுந்தருளினர். வழக்கமாக கார்த்திகை திருவிழா அன்று காலை தேரோட்டம், இரவு தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி 16கால் மண்டபம் முன் எழுந்தருள அங்கு சொக்கப்பனை தீப காட்சி முடிந்து சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பார். இந்தாண்டு கொரோனா தடை உத்தரவால் இந்நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.