பதிவு செய்த நாள்
28
மே
2012
03:05
2. தர்ம ஸம்ஹிதை
காப்பு: நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ ரோத்தமம், தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத் - ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் மனிதரில் சிறந்த உத்தமச் சைவரையும் சரஸ்வதி தேவியையும் வியாச பகவானையும் வணங்கிய பிறகு ஜெய சப்தத்தைச் சொல்லக் கடவன்.
பராசரருடைய குமாரரும் சத்யவதி தேவியின் மனதிற்கு மகிழ்ச்சியை தருபவருமான வியாசபகவான் யாவரினும் மேலாக விளங்குகின்றார் அத்தகைய வியாச பகவானுடைய முகத்தாமரையிலிருந்து பெருகுகிற சொற்களாகிய அமுதத்தை உலகம் பருகி மகிழ்கின்றது.
(எத்தகைய பகவான், ஸத்வகுணத்தையடைந்து, உலகங்களைக் காத்தும், ரஜோகுணத்தை அடைந்து உலகங்களைப் படைத்தும் தமோகுணத்தையடைந்து உலகங்களைச் சங்கரித்தும் இம் முக்குண ஸ்வரூபமாகவுள்ள மாயைக்கு அதீதப்பட்டும் விளங்குகிறாரோ, அத்தகைய சத்ய ஸ்வரூபியாயும் ஆத்ம ஸ்வரூபியாயும் பேரறிவாளராயும், தோஷரஹிதராயும் பிரமம் முதலிய திருநாமங்களுக்கு வாங்யராயும் நித்தியராயும் தத்துவ ஆராய்ச்சியால் அறியத் தக்கவராயும், ஸர்வ பரிபூரணராயும் விளங்கும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன்)
1. உபமன்யு முனிவர் எடுத்துரைத்த மகிமை
நைமிசாரணிய வாசிகளை நோக்கிச் சூதபுராணிகர் கூறலானார்.
முனிவர்களே! ஒரு காலத்தில் தேவகீ நந்தனரான கிருஷ்ண பரமாத்மா தமக்குப் புத்திர பாக்கியம் இல்லாமையால் அதை எவ்வாறு அடைவது என்று தனிமையில் யோசித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது வியாக்ரபாத முனிவர் புத்திரரும் சிவபெருமானால் திருப்பாற்கடலை அருந்தியவருமான உபமன்யு முனிவர் அங்கு வந்தார். அவரைக் கண்டதும் ஸ்ரீ கிருஷ்ணர் சாஸ்திர முறைப்படி அவரைப் பூஜித்து தகுந்ததொரு பீடத்தில் அமர்த்தி முனிவரே, நீங்கள் நாள்தோறும் அன்புடன் யாரைப் பூஜித்து அர்ச்சனை செய்கிறீர்கள்? என்று கேட்டார்.
உபமன்யு முனிவர் அகமிக மகிழ்ந்து, கிருஷ்ணா! நான் பூர்வத்தில் அதிகமான தவத்தை அநேக காலம் செய்யும்போது, பகவானாகிய சிவபெருமான் பெருங்கருணையோடு பிரத்யட்சமானார் அப்போது முத்தலையோடு விளங்குவதும் தன்னை எப்போதும் பணிவோருக்குச் சுகங்கொடுப்பதும் ஒரு காலையுடையதும் பயங்கரப் பற்களையுடையதும் ஜ்வாலையோடு கூடிய ஜோதி மயமான முகங்களையுடையதும், இரண்டாயிரம் கிரணங்களோடு விளங்குவதும் ஆயுதங்கள் யாவற்றிலும் சிறப்புடையதும் யாவற்றிலும் முதன்மையானதும் அநேகவித சின்னங்களையுடையதும் பலகோடிச் சத்துருக்களை அழிக்கத் தக்கதும் மஹேஸ்வரனால் பிரயோகிக்கப்படும் போது அண்டரண்ட பிரம்மாண்டங்களையெல்லாம் சங்கரிப்பதும் பிரம விஷ்ணுக்களாலும் தேவர்களாலும் ஜெயிக்கப்படாததுமாகிய குலத்தை அவர் புறத்தில் கண்டனே அதைவிட உயர்ந்த ஆயுதம் மூன்று உலகங்களிலுமில்லை அதைச் சர்வேஸ்வரனுடைய திரிசூலம் என்று யாவரும் பிரசித்தமாகப் புகழ்வார்கள். அது சமுத்திரங்களையெல்லாம் உலரச் செய்யவல்லது, அதை மாந்தாதா என்ற பேரரசன் சிவானுக்கிரகத்தால் அடைந்து, மன்னவர் அனைவரையும் வென்று அஸ்வமேதயாகம் செய்திருக்கிறான். இலவணாசுரன் சிவானுக்கிரகத்தால் அதைப் பெற்றுத் தன் வீட்டில் வைத்துக் கொண்டு, கர்வம் மிகுந்து சத்துருக்கினன் என்னும் அரசனைப் போருக்கு அறைகூவி அழைத்து அவனால் மாண்டான். சத்துருக்கினன் அவனை வென்ற பிறகு அவனுடைய பொருள்களைச் சுவாதீனம் செய்து கொண்ட போது அதி தீக்ஷண்யமானதும் யாவரையும் அஞ்சச் செய்வதும் சர்ப்பமணிந்ததும் சொல்ல முடியாத பிரவாகத்தையுடையதும் முத்தலைகளைப் புருவங்களாகக் கொண்டு பயமுறுத்துவதும், புகையில்லாத நெருப்பை போன்றதும் உதயசூரியனைப் போன்றதும் யமனைப் போன்றதுமான அந்தச் சூலாயுதம் அவனுக்குச் சுவாதீனமாகாமல் சிவபெருமானிடம் போய்ச் சேர்ந்தது.
அடுத்து கூர்மையானதும் அநேக சர்ப்பங்களால் அலங்கரிக்கப்பட்டு, பிரளய காலாக்கினியாலேயே புருஷ ரூபமடைந்துள்ளதுமான மழுவாயுதத்தை அந்த மஹாதேவரின் மற்றொரு புறத்தில் கண்டேன் இந்தப் பரசு என்ற ஆயுதத்தைப் பரசுராமன் அரசர்களை அழிக்கும் பொருட்டுச் சிவானுக்கிரகத்தால் பெற்று அது தன்னிடத்திருப்பதால் வலிமையும் ஆற்றலும் மிகுந்து எழுபத்து மூன்று முறை க்ஷத்திரிய குலத்தை நாசஞ் செய்தான்.
ஆயிரம் முகங்களையுடையதும் வியாப்தமானதும் இரண்டாயிரம் புஜங்களையுடையதும் புருஷாகிருதியானதும் இரண்டாயிரம் கண்களையுடையதும் ஆயிரம் கால்களையுடையதுமான சுதர்சனம் என்னும் சக்கரம் அப்பெருமானின் பக்கத்தில் விளங்கக் கண்டேன் இவை தவிர வஜ்ராயுதம், சக்தியாயுதம், தூணீரம், கட்கம், பாசம், அங்குசம் கதை, முதலிய திக்குப் பாலகர்களுடைய ஆயுதங்களும் அந்தச் சர்வேஸ்வரனின் அருகில் இருக்கக் கண்டேன். இவ்வாறு எனது திடபக்தியைப் பரீக்ஷிக்க வேண்டி, அப்பெருமான் பெருங்கோர உருவமாகக் காட்சித்தந்து அருளினார்.
அவருடைய வலது புறத்தில் அன்னவாகனத்தை தூரத்தில் இருத்தி நிற்கிற பிரமதேவனையும் இடது புறத்தில் சங்கு, சக்கர, கதை, கட்க, கோதண்டங்களை அணிந்து, கருட வாகனத்தைச் சமீபத்தில் இருத்தி நிற்கும் விஷ்ணுவையும், பராசக்தியாகிய பார்வதிதேவியையும், பார்வதிதேவியின் பக்கத்தில் மயூரவாஹனமும் திவ்ய தேஜஸோடுக்கூடிய வேலாயுதத்தை ஏந்திய சுப்பிரமணியரையும் சூலப்படையைக் கையில் ஏந்திய நந்தி தேவரையும் அங்குச பாசங்களை அணிந்து ஒரு புறத்திலிருக்கும் விநாயகரையும் பூதகணங்களையும் சப்தமாதர்களையும் கண்டேன் அவர்கள் சிவபெருமானின் பரிவாரங்களாகச் சூழ்ந்து துதி செய்யவும், உலகிலுள்ள யாவுமே அவரருகே விளங்கக்கண்டு ஆனந்தத்துடன் அதிசயித்துக் கைகூப்பி வணங்கினேன். அப்போது பகவான் சாம்பவமூர்த்தி புன்னகை செய்து, வேதியனே யான் எவ்வளவு பயங்கரமாகத் தரிசனம் கொடுத்ததும் உன் மனம் சலனமடையவில்லை, நீ நன்றாய்ப் பரீக்ஷிக்கப்பட்டவன். எனது நிரதிசயமான பக்தியை நீ அடைந்திருக்கிறாய். உனக்கு மங்களம் உண்டாகுக. தேவர்களுக்கும் அரிய வரத்தை விரைவில் கேள்! என்றார்.
நான் பரமபதியைப் பணிந்து பகவானே! உமக்குச் சந்தோஷம் உண்டானதால், அடியேனுக்குத் தங்களிடம் நீங்காத பக்தியிருக்கத் தயை செய்யவேண்டும் அத்தகையப் பக்தியால் திரிகால ஞானம் கைகூடும். என் வமிசத்தாரும் நானும் பாலும் அன்னமும் குறைவின்றிப் புசிக்க வரங்கொடுக்க வேண்டும் சர்வேஸ்வரரே! என்னுடைய ஆசிரமத்தில் தாங்கள் எக்காலமும் தரிசனமளித்துக் கொண்டிருக்கவேண்டும் என்று வேண்டினேன்.
அதற்குச் சிவபெருமான், நீ, நரை, திரை, மூப்புக்களை விலகுக முனிவர்களிலே புகழுடையவனாக அவர்களாலும் புகழத்தக்கவனாகுக சீலம் உருவம், குணம் செல்வம் முதலியவை என் கருணையால் உனக்கு மேன்மேலும் பெருகுக, நீ பாலைப்பருக விரும்பியதால் உனக்குப் பாற்கடலையே கொடுத்தோம் நீ விரும்பும்போது அது உன்னை அடைக. நீ விரும்பிய பொருள்களும் அப்போதே உன்னை அடையும் பாற்கடல் அமுத சொரூபமாகையால் அதை நீ அருந்துவதினால் வைவஸ்வத மநுவந்தரம் முடியும் வரை உன் வமிசத்தாருடன் கூடி வாழ்வாய் உன் கோத்திரம் எப்போதும் அபிவிருத்தியடையும். உன் ஆசிரமத்தில் எப்போதும் என் தரிசனத்தையும் உனக்கு நீங்காத பக்தியையும் கொடுப்போம். இன்னும் உனக்கு வேண்டிய வரம் ஏதேனுமிருப்பின் அதையும் தருவோம் நீ விரும்பத்தக்கது பிரிதொன்றும் இல்லை என்று திருவாய் மலர்ந்தருளி திருவுரு மறைந்தார். கிருஷ்ணா இவ்வாறு சிவபெருமான் கோடி சூர்யப் பிரகாசமாய் திவ்யதரிசனம் தந்து வரங்களைக் கொடுத்து அருளினார்; அவரது கட்டளைப்படியே அவரது கருணையால் நானும் அனைத்தையும் அடைந்தேன் கந்தர்வாதி கணங்களுக்கும், முனிவர்களுக்கும், வித்தியாதரர்களுக்கும் மனோரம்மியமான மலர்ச் செவிடிகளையும் மணம் வீசுவதும் ஆண்டு முழுவதும் குறைவின்றி மலர்வதுமான உத்தியானவனத்தையும் பிறவற்றையும் பெற்றேன் சர்வேஸ்வரனாகிய அந்தச் சாம்பசிவமூர்த்தியின் திருவருளால் நினைத்தபோது நினைத்த பொருளை அடையும் வல்லவனானேன் என்று உபமன்யு முனிவர் ஸ்ரீகிருஷ்ணருக்குச் சொன்னார்.
2. உபமன்யு கிருஷ்ணர் சம்வாதம்
துவாரகாபுரி வாசியான கிருஷ்ணரை நோக்கி உபமன்யு முனிவர் மேலும் சொல்லுகிறார். ஸ்ரீ சர்வேஸ்வரரான சூலபாணியின் அனுக்கிரகத்தால் சர்வஞானமும், பூதபவிஷ்ய வார்த்தமானங்களும் உணர்ந்தேன் பிரம, விஷ்ணு முதலான தேவர்களாலும் பூஜித்ததற்கரிய அமர நாயகனாகிய அரவாபரணனை நான் பிரத்யக்ஷமாகத் தரிசித்தேன் என்னைவிடத் தன்னியர் திரிலோகங்களிலும் யார் உண்டு? இருபத்தாறாவது என்று பிரசித்தமானதும் நித்தியமானதும் வேத முனிவர்களால் தியானிக்கப்பட்டதும் நாசமற்றதுமாக விளங்குகிற பரதத்துவப் பொருள் எல்லாத் தத்துவங்களையும் படைத்து சாக்ஷிபூதமாக நின்று, ஷட்குண ஐஸ்வரிய ஸம்பந்தனான மகா தேவனேயாகும். அவனே பிரதான புருஷேஸ்வரன் அந்தக் கடவுளே, தன் வலது புறத்திலிருந்து உலகங்களுக்குச் சிருஷ்டி கர்த்தாவான பிரமனையும் இடது புறத்திலிருந்து உலகரக்ஷண கர்த்தாவான விஷ்ணுவையும் படைத்தவர் பிரளயகாலத்தில் தம் இதயத்திலிருந்து உலகச்சங்காரஞ் செய்யத்தக்க உருத்திரனைப் படைப்பவர் யுகமுடிவில் ஊழிக்காற்றாக இருப்பவர்; காலஸ்வரூபமாக இருந்து சகல பூதங்களையும் அழிப்பவர். சர்வவியாபியாயுள்ளவர் சர்வபூதாத்மகமானவர் சர்வ பூதங்களுக்கும் பிறப்பிடமானவர் அத்தகைய மஹேஸ்வரன் பெருந்தேவர்களாலும் தரிசிப்பதற்கு அரியவர் அந்த மஹாதேவரைப் புத்திர லாபம் உண்டாகும் பொருட்டு, நீ அவசியமாக ஆராதிக்கவேண்டும் கிருஷ்ணா! இதுவரையில் சிவபெருமானை ஆராதித்து அவர் அருளால் தமது மனோபீஷ்டங்களை அடைந்தவர்கள் சிலரது சரிதங்களை உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.
பூர்வத்தில் ஹிரண்யகசிபன் பத்து லக்ஷம் வருஷம் சர்வ தேவர்களுடைய ஐஸ்வரியத்தையும் சர்வேஸ்வரனுடைய அனுக்கிரகத்தால் அடைந்தான் கடைசியில் இரண்டாயிரம் வருஷம் ஆயுளையுடைய பிரஹலாதனைப் புத்திரனாக அடைந்தான் அவன் சிவாநுக்கிரகத்தால் இந்திர நந்தனன் என்ற பெயரைப் பெற்று, விஷ்ணுவின் சுதரிசனச் சக்கிரமும் இருந்திரனுடைய வஜ்ஜிராயுதமும் தன் தேகத்தில் பட்டால் அவை பொடியாகவுதிர்ந்து போகத்தக்க திவ்விய தேகத்தைப் பெற்றான் சர்வேஸ்வரனுடைய வரத்தால் எந்த ஆயுதமும் அவன் தேகத்தை அணுகாத வரத்தைப் பெற்று, க்ருஹன் என்ற பெயரையுடைய மஹா பலசாலியாக இந்திரநந்தனன் விளங்கினான். அவன் ஈஸ்வர வரம் பெற்றுத் தன் பரிவாரத்துடன் தேவர்களை எதிர்த்துத் துன்புறுத்த தேவர்கள் அவனை ஜெயிக்கமுடியாமல் திகைத்தார்கள். அவன் சிறப்பாகச் செய்துவந்த சிவபூஜையினால் களிப்படைந்த சிவபெருமான் திரிலோக சம்பத்தும் லக்ஷவருஷ ராஜ்யபாரமும் அநேகம் புத்திரரும் உண்டாக அநுக்கிரகம் செய்து இறுதியில் சாயுஜ்யமும் குசத் வீபத்தில் சுபகரமான ராஜபோகமும் உண்டாகும்படி வரந்தந்தருளினார் கண்ணா! பிரமனால் படைக்கப்பட்ட சுதமகன் என்ற தைத்தியன் சிவபெருமானைக் குறித்து நூறாண்டுகள் கடுந்தவம் செய்து அவரருளால் ஆயிரம் நகரங்களை அடைந்தான் பூர்வத்தில் வேதங்களில் பிரசித்திப் பெற்ற யாஞ்ஞவல்க்கிய மஹரிஷி, சர்வேஸ்வரனை ஆராதித்து உத்தம ஞானத்தை அடைந்தார். வேதவியாச பகவான் சிவார்ச்சனைச் செய்து ஈடிணையற்ற புகழையும் ஞானத்தையும் அடைந்தார். இந்திரனால் அவமதிக்கப்பட்ட வாலகில்லியர்; சர்வேஸ்வரனை அர்ச்சித்து ஸோமஹர்த்தாவாக ஒருவராலும் ஜெயிக்க முடியாத கருடனை ஜெயித்தார் ஜடாதரனாகிய சிவபெருமானுடைய கோபாக்கினியால் ஜலம் முழுவதும் வறண்டு போக தேவர்கள் யாவரும் ஸப்தகபால புரோடாஸத்தால் சிவபெருமானை அர்ச்சித்து தங்கள் விருப்பம் போல மீண்டும் ஜலத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். அத்திரி முனிவரின் மனைவியான அனுசூயை சிவபெருமானை குறித்து முந்நூறு ஆண்டுகள் கொம்பின் மேனிருந்து கடுந்தவம் செய்து, தத்தாத்திரேய முனிவரையும் சந்திரனையும், துர்வாச முனிவரையும் புத்திரர்களாகப் பெற்றாள். விகர்ணன் என்ற முனிவன் மஹாதேவனை ஆராதித்து இஷ்டசித்திகளை அடைந்தான். சாகல்லிய முனிவன் மகிழ்ச்சியுடன் ஒன்பதாயிரம் ஆண்டுகள் சிவராதனையை மானஸீகமாகச் செய்து இறையருளால், நீ கிரந்தகர்த்தன் ஆகுக! உன்கீர்த்தி அழியாது திரிலோகங்களிலும் விளங்குக மஹாருஷிகள் பலர் உன் குலத்தில் பிறக்கட்டும்! உன் குலத்தில் பிறந்தவன்ஸுத்ர கர்த்தா ஆவான்! அவன் ஸாவர்ணி என்னும் பெயரைப்பெறுவான்! அவன் கிருத யுகத்தில் முனிவனாக இருந்து அறுநூறு ஆண்டுகள் தவஞ்செய்வான்! என்றும் வரங்கொடுக்கப் பெற்றான் இவ்விதமாகச் சர்வேஸ்வரன் முன்னார்களான பெரியோர்களால் துதிக்கப் பெற்றவர் கிருஷ்ணா! நீயும் அவ்விதமே சங்கரபகவானை ஆராதிப்பாயானால் மனதிலுள்ள விருப்பங்கள் அனைத்தையும் அடைவாய். அவரது பெருமைகளை,ஒற்றை நாக்குடைய நான், ஆயிரம் ஆண்டுகள் சொன்னாலும் முடியாது!
இவ்வாறு உபமன்யு முனிவர் கூறியதைக் கேட்டதும் கண்ணபிரான் பரமாச்சரியம் அடைந்து தூய உள்ளம் வாய்ந்த உபமன்யு முனிவரை நோக்கி தவஞானியே! அந்தணோத்தமரே! நீர் தன்னியர் உம் ஆசிரமத்தில் தேவாதி தேவனுடையஸாந்நித்யம் விளங்குகிறது உம்மைப் போன்ற பெரியோர்களின் தரிசனத்தால் சர்வேஸ்வரனாகிய பரமசிவன் எனக்கும் திருவருள் செய்வான்! என்று கூறினார்.
கிருஷ்ணா! நீ விரைவில் பரமேஸ்வரனைத் தரிசிக்கப்போகிறாய்! உமையொரு பாங்கரான அந்த எம்பெருமானால் நீ இருபத்து நான்கு வரங்களைப் பெறுவாய், நீயே சாக்ஷõத் விஷ்ணு வாகையால் அவர் உனக்கு நல்வரங்கள் கொடுப்பார். நீ தேவர்களில் எல்லாம் பூஜ்யனாவாய் அச்சுதா! சிரத்தையான மனமுடைய உனக்கு ஜெபஞ்செய்வதற்குத் தகுதியான ஒரு மந்திரத்தைநான் உபதேசிக்கப் போகிறேன் அந்த மந்திர உபாசனையால் நீ பிரம்ஹன்யனாகி நிச்சயமாகச்சர்வேஸ்வரனை விரைவில் தரிசித்து உனக்குச் சமமான வலிமையுள்ள புத்திரனைச் சிவனருளால் பெறுவாய் கிருஷ்ணா! நீ சிவபெருமானைத் தரிசித்து, மகேஸ்வரா! நான் உம்மைத் தரிசித்தேன். எனக்குப் பிள்ளைப் பேறு தந்தருள வேண்டும் என்று வரம் கேட்பாயாக! என்றார்.
இவ்வாறு உபமன்யு கிருஷ்ண சம்வாதத்தில் சிவப்பிரபாவங்களால் எட்டு நாட்கள் க்ஷணமாகக் கழிந்தன ஒன்பதாவது நாளன்று கிருஷ்ணமூர்த்தி உபமன்யு முனிவரால் தீøக்ஷ செய்யப்பட்டார் அதர்வசிகரமாக விளங்கும் சிறந்த ஸ்ரீ பஞ்சாக்ஷர மந்திர உபதேசம் பெற்று கிருஷ்ணமூர்த்தி முன் ஜடாதராகிப் பிறகு முண்டிதம் செய்து கொண்டு, சிவ சம்பந்தமாகவே நிற்பேன்! என்று சங்கல்பம் செய்து கொண்டு, ஆசார நியமத்துடன் யோக தண்டம் ஏற்று, தர்ப்பையால் அரைஞாண் அணிந்து, சிவதீøக்ஷ செய்யப்பெற்றவராய் தவம் மேற்கொண்டார். முதல் மாதத்தில் ஆகாரமின்றி இருந்தும் இரண்டாவது மாதத்தில் நீர் மட்டும் அருந்தியும் மூன்று நான்கு ஐந்து ஆகிய மூன்று மாதங்களில் காற்றை மட்டும் உட்கொண்டும், கால் பெருவிரல்களின் மேல் நின்று கொண்டும் ஆறாவது மாதத்திலிருந்து பதினைந்தாவது மாதம் வரையில் தோள்களை உயர்த்திக் கைகளைக் குவித்துக் கொண்டும் தவமியற்றினார். பதினாறாவது மாதத்தில் இந்திரதனுசுடன் கூடிய மேகங்கள் உலகம் முழுவதும் வியாபித்திருக்கையில் சிவபெருமான் அவருக்குத் தரிசனம் தந்தார். பார்வதி சமேதராகவும் சந்திரசேகரராகவும், சர்வ ஆச்சரிய ஸ்வரூபியாகவும் விளங்கும் சர்வேஸ்வரனான சிவபெருமானைக் கிருஷ்ணமூர்த்தி தரிசித்து கைகூப்பி வணங்கியவாறு எதிரே நின்று பலவிதமான ஸ்தோத்திரங்களால் துதித்து சகஸ்ர நாமங்களால் சங்கரனைப் பூஜிக்கையில், வேத கந்தர்வ வித்தியாதரர்கள் மலர்மாரி பொழிந்தார்கள் பலமுறை பூமாரி பொழிந்து இறுதியில் கிருஷ்ணரின் சிரம் மீதும் புஷ்பமாரி பொழிந்தார்கள். சித்தர் முனிவர் அப்சரஸ்கள் முதலானவரால் சூழப்பெற்று விளங்கும் சிவபெருமான் தம் இடதுபுறத்தில் திகழும் பார்வதி தேவியின் திருமுகத்தைப் பக்தவாத்ஸல்யத்தோடு, பார்த்து இந்தக் கண்ணன் செய்த தவத்திற்கு நான் மகிழ்ந்தேன் என்று கூறி கிருஷ்ணரைப் பார்த்து, கிருஷ்ணா! நான் உன் பக்தியை அறிவேன் நீ திடவிரதத்தை உடையவன் என்றும் நான் அறிவேன். ஆகையால் மூவுலகத்திலும் கிடைப்பதற்கு அரிய வரங்களில் எட்டு வரங்களைக் கேள்! என்று கூறினார். கிருஷ்ணன் அஞ்சலி செய்து மகேஸ்வரா! என் மனம் எப்போதும் தர்ம நெறியிலேயே இருக்கவேண்டும். என் கீர்த்தி உலகில் உள்ளவருடையக் கீர்த்திக்கெல்லாம் சிறப்பானதாக இருக்கவேண்டும். நான் பெரும் பலசாலியாக இருக்க வேண்டும். உமது அருகிருப்பு (சாமீப்யம்) எனக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும். உம்மிடம் எப்போதும் எனக்குத் திடபக்தி உண்டாயிருக்க வேண்டும். பத்துப் புத்திரர் எனக்கு நிஷ்க்குஷ்டமாக இருக்க வேண்டும். என் பகைவர்கள் பலவான்களாக இருந்தாலும் என்னை எதிர்த்தால் அழிய வேண்டும் யோகிகளுக்கெல்லாம் நான் தலைவனாக இருக்க வேண்டும் என்று எட்டு வரங்களை கேட்டார். சிவபெருமான் அவ்வரங்களை அவ்வாறே பெறுக என்று கூறி, உன் புத்திரர்களில் சாம்பன் என்ற மகாபராக்கிரம சாலியான ஒரு புத்திரன் ஒரு முனிவர் சாபத்தால் மானுடனாகப் பிறப்பான் இன்னும் நீ வேண்டியவை ஏதேனும் இருந்தால் அவற்றையும் அடைவாயாக என்று வரங்கொடுத்தார் அவரை ஸ்ரீகிருஷ்ணர் பலவிதமாக தோத்திரங்கொண்டு மகிழச் செய்தார்.
சவுனகாதி முனிவர்களே! அதன் பின்னர் கிருஷ்ணர் பார்வதி தேவியாரையும் வேதோக்தமான தோத்திரங்களால் துதித்துப் போற்றினார். பார்வதிதேவி அவரை நோக்கி கிருஷ்ணா! நீ பரமபக்தன் உலகத்தில் உள்ளவருக்குத் துர்லபமான வரங்களை நான் உனக்குக் கொடுக்கிறேன் வேண்டிய வரங்களைகேள் என்று கூறினாள். கிருஷ்ணர் கும்பிட்டு; மஹா தேவீதாயே! நீ மகிழ்வுறுவதானால் அவ்வண்ணமே அரியவரங்களை தந்தருள்க; ஜகத்ஸ்வரூபிணீ! எனக்கு வேண்டிய வரங்களாவன ஜீவஹிம்சையில்லாத விரதத்தால் பிராமண சமானனாகவும் எனக்கு எப்பொழுதும் சத்துருக்கன் இல்லாதவனாகவும் பிராமண பூஜை செய்யத்தக்க பக்தியை உடையவனாகவும் விளங்கவேண்டும், என் பெற்றோர் எப்போதும் மகிழ்ந்திருக்கவும்; சகல பூதங்ளும் என்னிடம் அனுகூல மனமுடையவையாக இருக்கவும் எவ்விடத்தும் என்னை எதிர்ப்பவர்கள் இல்லாமலிருக்கவும்; தங்கள் சேவை கிடைத்த எனது வமிச பரம்பரை சதாசார சம்பத்தையுடையதாக இருக்கவும் வேண்டும். நூறு யாகங்கள் செய்து இந்திராதிதேவர்களைத் திருப்தி செய்யவனாக நான் விளங்க வேண்டும். எங்கள் வீட்டில் எப்போதும் ஆயிரத்தேழுயதிகளும் ஆயிரத்தேழு அதிதிகளும் போஜனம் செய்து திருப்தியடையவும் உற்றார் உறவினரிடம் எனக்குப் பிரீதி உண்டாகியிருக்கவும். எப்போதும் எல்லாச் சுகங்களுமுண்டாகவும் வேண்டும். சுந்தரமான தேகத்தையுடைய ஆயிரம் மனைவியருக்கு நான் நாயகனாகவும் அக்ஷீணரேதசுடையவனாகவும் விளங்கவேண்டும் அன்னத்தைக் காட்டிலும் எனக்குச் சத்தியவான்கள் ப்ரீதியாக இருக்கவும் வரமளிக்க வேண்டும்! என்று வேண்டினார் மங்களம் அனைத்திற்கு அதிமுதல்வியான பார்வதிதேவி ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளைக்கேட்டு மகிழ்ந்து அவ்வாறே ஆகுக என்று வரமளித்து உனக்கு மங்களம் உண்டாகுக என்று வாழ்த்தினாள் பிறகு பார்வதி பரமேஸ்வரர் அந்தர்த்தானமானார்கள்.
பிறகு ஸ்ரீகிருஷ்ணர் கேசி என்னும் அரக்கனைச் சங்கரித்து, பதரிகாசிரமத்தையடைந்து தம் தீக்ஷõ குருவான உபமன்யு முனிவரை வணங்கி நடந்தவைகளையெல்லாம் அவரிடம் விண்ணப்பித்தார். அவரை உபமன்யு முனிவர் நோக்கி கிருஷ்ணா! சிறந்த வரங்களால் உலகத்திலுள்ளவரைக் காத்தருள்பவர் சர்வேஸ்வரனான சிவபெருமானையன்றித் திரிலோகங்களிலும் யாவருளர்? ஒருவருமில்லை! அப்பரமசிவன் குரோத புத்தியுடை யாருக்கும் சிறிது கஷ்டத்துடன் தரிசனமளிப்பார். ஞானத்திலும் தபத்திலும் சவுகரியத்திலும், தைரியத்திலும் சம்புவினுடைய மேம்பாடுகளைச் சொல்கிறேன் எனக் கூறுகையில் கிருஷ்ணர் சிரத்தையோடு சந்திர மவுலியாகிய சிவபெருமானிடம் மனஞ் செலுத்தியிருந்தார். அவ்வாறிருக்கும் கண்ணனை நோக்கி உபமன்யு முனிவர் கூறலானார்.
கிருஷ்ணா! பகவானான சங்கரன் பூர்வத்தில் பிரமலோகத்தில் மகாத்மாவும் பிரம யோகவானுமாகிய தண்டி என்னும் மகரிஷியால் சகஸ்ர நாமங்களால் தோத்திரஞ் செய்யப்பட்டார். மகா விசாலமானதும் நிகண்டும் ஞானச் சாத்திரமுமாகவுள்ள அந்தத் தோத்திரம் சாங்கிய மதத்தர்களாகிய சிலரால் படனஞ் செய்யப்படுகின்றது. மானீடரோ அதைத் தோத்திரஞ் செய்ய அசக்தராயிருப்பார்கள். ஆயினும் உலகத்தில் ஒரே இடத்தில் சிலர் அதைப் படனஞ் செய்து அதனால் பெருமானை ஆராதித்துச் சர்வேஸ்வரா நுக்கிரகத்தால் இஷ்டமான வரங்களைப் பூர்வத்திற் பெற்றிருக்கின்றனர் அவ்வாறு வரம் பெற்ற மகரிஷிகளில் சிலருடைய சரிதங்களையும் உனக்குச் சொல்லுகிறேன். கேள் அத்திரி முனிவன் கோகர்ண ÷க்ஷத்திரத்தில் சர்வேஸ்வரனை நோக்கி நூறு வருடந் தவஞ்செய்து நூறு புத்திரர்களையும் அழியாத கீர்த்தியையும் பெற்று வாழ்ந்திருக்கிறான். பிறப்பு இறப்புப் பந்தங்களை ஒழித்தவர்களும், தர்மங்களை உணர்ந்தவர்களும் நூறாயிரவருட ஆயுளையுடையவர்களும், அயோனிஜர்களும் நூறாயிரவருட ஆயுளையுடைவர்களுமான அப்புத்திரர்களில் ஒருவன் நிலத்தின் எல்லையைக் குறிப்பதில் அக்கிரமமான விவாதஞ்செய்து பிரமஹத்தியடைந்தான் எல்லா ரிஷிகளும் அவனை பிரமஹத்தி செய்தவன், என்று விலக்கினார்கள். அவ்வாறு பாபியானவனைச் சிவபெருமான் பரமரகிதனும் சிரேஷ்டனுமாகச் செய்தார் பரசுராமன் சர்வவியாபகரான சிவபெருமானை ஆராதித்து க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்ட தன் தந்தையான ஜமதக்னி முனிவரைக் கருதிச் சிவசன்னதியில் துக்கித்து அவரது கண்ணோக்கால் மகா கடூரமான பரசு ஆயுதத்தைப் பெற்று எழுபத்து மூன்று தரம் க்ஷத்திரிய வமிசத்தை நாசஞ் செய்தான். பிரசன்னமாயிருக்கும் சிவபெருமானுடைய அநுக்கிரகத்தையடைந்து க்ஷத்திரிய வதையால் தனக்கு நேர்ந்த உபபாதகத்தை மகேந்திரகிரியில் தவஞ்செய்து விலக்கி, பிறரால் வெல்லமுடியாத சிரஞ்சீவியாகி இன்னும் தவஞ்செய்து கொண்டும் சிவலிங்கார்ச்சனை செய்து கொண்டும் சித்தர் சாரணர் முதலானாருடன் மகேந்திரகிரியில் காணப்படுகிறான். அவ்வகைய சிரஞ்சீவியான பரசுராமன் கல்பாந்தத்தில் மீண்டும் தன் வைகுண்டத்தை அடைவான். அஸித முனிவருக்குத் தம்பியான தேவலன் என்னும் முனிவன் முற்காலத்தில் இந்திரனால் சபிக்கப்பட்டு அஞ்ஞானத்தால் கோபமுற்று உலகத்திற்கெல்லாந் தொந்தரை செய்ய எத்தனித்து, அதர்மமான தபசை செய்து இறுதியில் இஷ்டகாமியங்களையெல்லாம் எளிதிற் கொடுக்கவல்ல சிவலிங்க பூஜை செய்து, நிலையான புகழையும் தர்மத்தையும் ஆயுளையும் அடைந்தான்.
மனுவிற்குக்கண்ணால் பிறந்த வசிஷ்டமுனிவர் சாமகானஞ் செய்வோர் சபையில் க்ருத்ஸமதன் என்னும் ரிஷியை நீ மனங்கெட்டு ரதந்தரம் என்னும் சாமத்தை அபஸ்வரமாக ஏன் கானஞ்செய்கிறாய்? என்று கோபித்து இருபத்தொன்பதாயிர வருஷம் நீர்த்துளியும் சருகுமில்லாததும் துஷ்ட மிருகங்கள் சஞ்சரிப்பதுமான தண்டகாரண்யத்தில் அறியாமையோடு துக்ககரமுள்ள ஒரு மிருகமாக இருக்கக்கடவாய் என்று சபித்தார். அந்தச் சாபத்தால் துன்பப்படும் க்ருத்ஸமதன் மகா பயங்கரமும் ஜலமற்றதும் பழந்தரும் மரங்கள் ஒன்றுமில்லாததுமான இடத்தில் அப்பொழுதே மிருகமாகச் சென்று, சிவபெருமானைத் தியானித்துப் பலவிதமாகப் பணிந்து, பெரும்பக்தியோடு பிரணவத்துடன் கூடிய சிவபஞ்சாக்ஷர மந்திரத்தை மனதில் தியானித்துக் கொண்டிருந்தான். அதனால் களி கூர்ந்த சிவபெருமானால் மிருக முகமுடைய ஒரு கண நாதனாகிச் சிவபெருமானை அடைந்து சாபத்தை விலக்கிக்கொண்டு லம்போதராகணத்தை அடைந்தனன் சிவலிங்கார்ச்சனையே எப்பொழுதும் விரும்பிச் செய்த மகா தபசியான ஜவுகீஷவ்யன் என்னும் முனிவன் பூர்வத்தில் காசி÷க்ஷத்திரத்தில் சகல போகங்களையும் விடுத்து நிஷ்காமிய மணமுடையவனாய் சிவபெருமானை அர்ச்சித்து அவ்வெம்பெருமான் கடாக்ஷத்தால் அணிமாதி அஷ்ட-சித்திகளும் பெற்றுத் தவச் சிரமத்திலிருந்து நீங்கினான். சர்வேசுவரன் தன்னை நோக்கித் தவஞ்செய்த கர்க்கிய முனிவருக்கு மோட்சங் கொடுக்கத் தக்கதும் உலகத்தில் துர்லபமானது மான வரம் கொடுத்து. சரீர சம்பந்தமான பிரமாண்ய விஷயத்தால் பிரத்தியக்ஷமாகும் நான்கு ஸ்கந்தங்களையுடைய ஜோதிஷ சாஸ்திரம் என்னும் கணித சாஸ்திரத்தையும் நிலையான எல்லா வித்தைகளில் தேர்ச்சியையும் அவரைப் போன்ற ஆயிரம் புத்திரர்களையும் கொடுத்தருளினார்.
பராசர முனிவர் தன்னைத் தியானித்தபோது நரை திரை மூப்பில்லாத வேத வியாசர் என்னும் யோகியைப் புத்திரராகச் சந்தோஷத்துடன் கொடுத்தருளினார். மாண்டவிய முனிவர் பத்து லக்ஷவருஷம் சூலாக் கிரத்தினின்று பிராணனை விட்டுவிடுவேன் என்று தன்னுள் நியமணஞ் செய்துகொண்டு தவஞ்செய்து மனோவியாதி நீங்கிமிக்க சூலை வியாதிகளிலிருந்து விடுபட்டுச் சுகமுற்றார். தரித்திரனாகவுள்ள ஒரு பிராமணன் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைச் சபித்து சிவாநுக்கிரகத்தால் காலவன் என்னும் புத்திரனைக் குருவின் வீட்டில் விடுத்து, மகா இரகசியமாகவுள்ள யாகசாலையிலிருந்து தன் மனைவியை நோக்கி, பெண்ணே! யாராகிலும் அதிதிகள் வந்தால் நாம் தனமில்லாதிருத்தலின் வந்த அதிதியைப் பூஜிக்கச் சக்தியில்லையே அது பற்றி அவருக்கு நான் வெளியே போயிருக்கின்றேன் எனக் கூறுக! என்று கூறியிருந்தான். அப்படியிருக்கும் போது ஒரு சமயத்தில் மிகப் பசியால் வருந்தும் அதிதியொருவர் அங்குவர, அப்பார்ப்பினி அவரை நோக்கி, சுவாமி என் கணவர் எங்கேயோ போயிருக்கிறார் என்றாள். அதிதி தன் ஞானத்தால் உண்மையை உணர்ந்து கொண்டு பெண்ணே! அவன் அப்படியேயில்லாமல் போகுக! என்று கூறவே அப்போது அக்னிச்சாலையிலிருந்த வேதியன் அப்பொழுதே மரணமடைந்தான். பிறகு விஸ்வாமித்திர முனிவன் கருணையைப் பெற்று வந்த காலவன் என்னும் புதல்வன் தன் தாயால் நடந்த விருத்தாந்தங்களை அறிந்து கொண்டு சிவபெருமானையாராதித்து சாம்பவி என்னும் யாகத்தைச் செய்து அதனால் தன் தந்தை உயிர் பெற்று அந்த யாகசாலையினின்றும் புறம்பே வர அவனைக் கண்டு கைகுவித்து நின்றான். பிராமணன் அவ்வாறு பணிந்து நிற்குங்குமாரனைக் கண்டு நான் சிவாநுக்கிரகத்தால் கிருதார்த்தனானேன் தனவானாகவும் புத்திரவந்தனாகவுமானேன் உன்னைப் புதல்வனாகப் பெற்ற தால் இறந்தும் பிழைத்தேன் என்றான்.
கேட்டாயோ கிருஷ்ணா! நீயும் விருப்பங்கள் அனைத்தையும் சிவபெருமானால் அடைந்தாய்! இனி உன்னிடத்திற்குச் செல்க! என்று உபமன்யு முனிவர் கட்டளையிட்டார். அவரைக் கிருஷ்ணமூர்த்தி சாஷ்டாங்கமாக வணங்கி விடைபெற்றுத் தம் துவாரகாபுரியை அடைந்தார்.
முனிவர்களே! அப்பரமசிவனது குணாநுபவங்களை முற்றும் எடுத்துரைப்பதற்கு ஆதிசேடன்போல் ஆயிரம் முகங்களையுடையவனாகயிருந்தாலுங்கூட என்னால் சிறிதுஞ் சொல்லிவிட முடியாது! இவ்வாறு சூதமுனிவர் நைமிசாரணிய வாசிகளை நோக்கிக் கூறினார்.
3. திரிபுரச் சங்காரம்
சவுனகாதி முனிவர்கள் சூத முனிவரை நோக்கி மகாத்மாவே! சிவபெருமான் திரிபுரச் சங்காரஞ் செய்ததை ஆதியில் வியாச மகரிஷியால் தாங்கள் கேள்வியுற்ற வண்ணம் எங்களுக்குச் சொல்லியிருப்பினும், அதை மீண்டும் நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஆகையால் தயை வைத்து அதை சுருக்கிச் சொல்ல வேண்டும். மங்களகரமும் மனோகரமுமான சிவபெருமானுடைய அநந்தக் கல்யாணக் குணங்களை விசாரணை செய்வோருக்கும் சிவாராதனை செய்வோருக்கும் உண்டாகும் பலன்களையும் சங்கிரகமாகச் சொல்லியருள வேண்டும். திரிபுராசுரர் எந்த வமிசத்தில் பிறந்தவர்கள் என்பதையும், அப்புர மூன்றும் ஒரு காலத்தில் ஒன்று கூடியபொழுது ஒரே கணையால் மகாபலபராக்கிரமசாலியானச்சிவபெருமான் எவ்வாறு சங்கரித்தார் என்பதையும் கூறியருளவேண்டும் என்று வேண்டினார்கள் அவர்களை நோக்கிச் சூதபுராணிகர் கூறலானார்!
வேத வியாச பகவானால் கேள்விப்பட்ட வகையே உங்களுக்கு முன் கூறியவற்றைச் சுருக்கிச் சொல்லுகிறேன்; கேளுங்கள் திரிபுராசுரர்களில் தாரகாக்ஷன் மூத்தமவன் கமலாக்ஷன் இரண்டாமவன் வித்யுன்மாலி இளையவன், இவர்கள் மூவரும் சமானமான பலமுடையவர்களும் ஐம்புலன்களை வென்றவர்களும் உலகினை வெல்ல விரும்பினவர்களும், சமதமாதிகுண சம்பந்திகளும், சத்தியவான்களுமாக விளங்கினார்கள் அவர்கள் மேரு மலையை அடைந்து, வசந்தகாலத்தில் தவஞ்செய்தற்கு வேண்டி, புஷ்பம் முதலான போகங்களையும் வீணை மிருதங்கம் புல்லாங்குழல் முதலான நாதங்களையும் வெறுத்தும், கிரீஷ்ம காலத்தில் சூரியகாந்தியை லக்ஷியஞ் செய்யாமல் பஞ்சாக்கினி மத்தியில் இருந்தும் தங்கள் மனோபீஷ்டங்களைப் பெறும் வண்ணம் அன்போடு யாகஞ் செய்தார்கள். மகாப் பிரதாபத்துடன் மழைக் காலத்தில் ஆறுகள் தலைக்கு மேலே ஓடும்படியும், சரத்காலத்தில் மிக்க ரம்மியமான நெய் முதலியவற்றால் பக்குவஞ் செய்த மனதுக்கு விருப்பந்தரத்தக்க கிழங்குகளையும் பழங்களையும் சாப்பிட்டுக் கொண்டும்; புலன் உணர்ச்சிகளை நீக்கியும் பசி தாகங்களை வெறுத்தும், பசியுடையவர்களுக்கு கந்தமூல பழங்களைக் கொடுத்து உதவியும் கலங்காத மனத்துடன் ஆகாரத்தை வெறுத்தும் இருந்தார்கள். ஹேமந்தருதுவில் தைரியத்தால் மலை உச்சியில் பனிசலத்தால் உடல் நனையப் பெற்றும், மெல்லிய நனைந்த ஆடையுடுத்தியவராகியும் விளங்கினார்கள். சிசிருதுவில் ஜலத்திலிருந்து கொண்டும் மனவிருப்பங்கள் கைகூடுமென்று உற்சாகமுடையவர்களாய்க் கிரமங்கிரமமாகப் பெருந் தவஞ்செய்து இரவும் பகலும் பொழுது தெரியாமல் நூறாயிர வருஷங்களை நொடிப் பொழுதாகக் கழித்தார்கள் பிறகு பிரமன் தேவமுனி கணங்களால் புடைசூழப்பட்டு அவர்கள் தவத்திற்கு இரங்கிக் காட்சியளித்து சந்தோஷத்துடன் அவர்களை நோக்கி நல்ல வார்த்தைகளால் ஓ! தைத்திரிய சிரேஷ்டரே! நீங்கள் எதைக் கருதி இவ்வளவு கடுந்தவஞ் செய்கிறீர்களோ அதைச் சொல்ல வேண்டும். நான் உங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பேன். உங்கள் கருத்தை வெளியிட வேண்டும்! என்று கேட்டார். அசுரர் மூவரும் உலகங்களுக்குப் பிதா மகனான பிரம தேவனை வணங்கிக் கைகட்டி நின்று சிருஷ்டி கர்த்தாவே! இவ்வளவு பலமுடைய எங்களுக்குத் தக்க வீடு ஒன்று வேண்டியிருக்கின்றது. பகைவர்களால் வெல்ல முடியாததும் சுகத்தைக் கொடுக்க வல்லதும் தேவர்களாலும் அழிக்க முடியாததும், பொன் மயமானதுமாக விளங்கும் பட்டணத்தை விரும்பினேன்! என்று தாரகாக்ஷன் வேண்டுமெனக் கமலாக்ஷன் கேட்டான்; வச்சிரம் போற்கட்டியாயிருக்கும் இரும்பால் செய்த பட்டணம் வேண்டும் என்று வித்யுன்மாலியுங் கேட்டான்.
தாரகாசுரன் புதல்வர்களாகிய அம்மூவருக்கும் கேட்டபடியே கைகூடும் என்று பிரமதேவர் கூறினார். மீண்டும் அம்மூவரும் எங்களை ஒருவருஞ் ஜெயிக்க முடியாதபடி எங்களுக்கு சாகாவரம் தரவேண்டும்! என்று வேண்டினார்கள் அதற்கு பிதா மகன், அசுரர்களே! மடியாதிருப்போர் வையகத்தில் ஒருவருமிலர். கற்ப காலங்கழியின் யானும் இந்திராதி தேவர்களும் திருமாலும் கூட மடிவோம் ஈசனொருவனே சாகாத தன்மையன் ஆதலின் சாகாவரத்தைத் தவிர வேறேதெனும் வேண்டியவற்றைக்கேளுங்கள்! என்று கூறினார். அதற்கு அசுரர்கள் அண்ணலே! அவ்வாறானால் பொன் வெள்ளி இரும்பினால் அமையும் எங்கள் மூன்று புரங்களும் பூமி அந்தரசுவர்க்கம் என்னும் திரிலோகங்களில் ஆயிரம் வருடத்திற்கொரு முறையொன்று சேர்வதும். மீண்டும் விரும்பியவிடத்திற்குச் செல்வதுமாக வரமளிக்க வேண்டும். அப்புரங்கள் மூன்றும் ஒன்றுபடும் போது உலகங்கட்கெல்லாஞ் சுத்த வீரராகவும் தன்னிகரற்றவருமாக விளங்கும் சங்கரபகவானே வருஷா காலத்தில் அபிஜித்முகூர்த்த நேரத்தில் அழித்தாலன்றி வேறொருவராலும் நாங்கள் சாகாதிருக்கவும் வரமருள வேண்டும் என்று கேட்டார்கள் கமலாசனன் அவ்வண்ணமே கைகூடுக! என்று கூறித் தம் சத்திய லோகஞ் சேர்ந்தார்.
தாரகாக்ஷன் முதலானோர் அளவிறந்த அவுணர் சேனையோடு மயன் என்னும் தானவத் தச்சனால் தங்கள் விருப்பின்படி முப்புரங்களைச் செய்து கொடுக்கப் பெற்று தங்களுக்கு வேண்டியதொன்று மின்றிச் சிவபூஜையைக் குறைவின்றிச் செய்து வந்தார்கள் தங்கள் குடிக்குணங்குறையாது வைகுண்ட முதலிய தேவநகரங்களையும் உலகத்திலுள்ள பல பட்டணங்களையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து வந்தமையால் திருமால் சினங்கொண்டு இந்திரன் முதலிய இமையவருடன் சென்று அசுரரை எதிர்த்துப் போர் புரிந்து ஆற்றாமல் தேவர்களுடன் புறமுதுகிட்டுத் திரும்பி மேருமலையில் தவஞ்செய்து சிவபெருமானைத் தரிசித்து முப்புராதிகள் செய்யுந் துன்பத்தைக் கூறினார். இறைவன் அவர்கள் எம்மடியாராதலின் அவர்களை அழிக்கப் படாது! என்று கூறி மறைந்தார். அதனால் மனம் வருந்திய விஷ்ணுமூர்த்தி புத்தவடிவேற்று நாரதமுனிவரைச் சீடராகக் கொண்டு திரிபுரத்தை அடைந்து அவர்களுக்குப் பலவகையாகப் போதித்து அவர்களைப் புறசமயவாதிகளாக்கினார். அவர்களில் மயங்காது நின்றோர் மூவரே நாரதமுனிவர் பதிவிரதா தர்மத்தால் பயனில்லையென்று போதித்து மங்கையரையெல்லாம் மதிமயங்கினார். புத்தனும் நாரதனும் தமது சீடர்களை நோக்கித் தமது மாயையில் அகப்படாத மூவரையுங் கொடியோர் என்று கூறி, அவர்களை முகாலம்பனஞ் செய்யாவண்ணம் வற்புறுத்தி விட்டு மேருமலையை அடைந்தார்கள். திருமால் சிவபெருமானைப் பணிந்து மகாதேவா! அவர்கள் வேதவிருத்தர்களாயிருத்தலின் இனியேனும் தேவரீர் அவர்களை அழிக்கவேண்டும் என்று வேண்டினார். அதற்கு சிவபெருமான் விஷ்ணுவே! அவ்வாறாயின் விரைவிற் போர்க் கருவிகளைச் சித்தஞ் செய்யக்கடவை! என்று கட்டளையிட்டார். விஷ்ணுமூர்த்தி தேவர்களுடன் யோசித்து இரதம், வில், அம்பு குதிரை முதலியனவாகத் தேவர்களையும், இரதசாரதியாகப் பிரமனையும், பிறகருவிகளாகப் பிறதேவர்களையும் நியமித்துக் கொண்டு, சிவசன்னிதியில் விண்ணப்பித்தார்கள் தேவர் வேண்டு கோளுக்கு இரங்கிய சிவபெருமான் உமாதேவியாருடன் இரதத்தில் அமர்ந்து, விநாயகர், சுப்பிரமணியர், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் தத்தம் வாகனங்களில் ஏறிப் புடைசூழ்ந்து வரவும், சப்தரிஷிகள், ஆசீர்வதிக்கவும், ரிஷிகன்னியர் மங்கலப்பாட்டு பாடவும், நந்தி தேவர் பொற்பிரம்பு ஏந்தி முன் செல்லவும், பானு கம்பன் வாணன் சங்கு கர்ணன் முதலிய கணநாதர்கள்வாத்தியம் வாசிக்கவும், திரிபுரத்தை அடைந்தார். அப்பொழுது புரங்கள் மூன்றும் ஒன்று சேர்ந்து சரத்காலத்தில் அபிஜித முகூர்த்தமாயிருக்கவே தேவர்கள் சிவபெருமானை வணங்கி இவர்களை வெல்ல இதுவே சமயம்! என்றார்கள். சிவபெருமான் மேருவாகிய வில்லைவளைத்து வாசுகியாகிய நாணையேற்றி அக்கினியைக் கூர்வாயாகவும் வாயுவைச் சிறகாகவுஞ் சேர்க்கப்பட்டுள்ளன. திருமாலான அம்பைக்கையில் எடுத்தார். போர்க்கருவிகளாக அமைந்திருந்த இறுமாந்தார்கள் அதை உணர்ந்த எம் பெருமான் அந்த அஸ்திரத்தைப் பிரயோகஞ் செய்யாமல் புன்னகை செய்தார் அதனால் விஷயங்களைச்சுருக்கிச் சொன்னேன். இவ்வாறு சூத புராணிகர் கூறினார்.
4. அந்தகாசுரன் கதை
நைமிசாரணிய வாசிகளாகிய சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நோக்கி, சுவாமி தாங்கள் சொல்லிய சிவ சரித்திரங்களைக் கேட்டு ஆனந்தித்தோம், பரமாத்ம ஸ்வரூபியான சிவபெருமான் அந்தகாசுரனைச் சங்கரித்தாரல்லவா? அவ்வந்தகன் உலகத்திலே யார் வமிசத்தில் பிறந்தவன்? அவன் யாருடைய புதல்வன்? அவன் எவ்வாறு கொல்லப்பட்டான்? இந்த விபரங்களை எல்லாம் வேத வியாச பகவானால் தாங்கள் விசாரித்து உணர்ந்தவண்ணம் கிரமமாக எங்களுக்குச் சொல்லவேண்டும், என்று கேட்டார்கள். சூத முனிவர் கூறலானார்.
மகரிஷிகளே! அனைத்துலக நாதனான சிவபெருமானின் கண்களை முன்னொரு காலத்தில் மந்திரகிரியிலே ஜகன்மாதாவாகிய பார்வதிதேவியார் மாந்தளிர் போன்ற தன் கைகளால் வேடிக்கையாக மூடினாள். அவ்வாறு மூடிய ஓர் வினாடியிலே உலகமெங்கும் அந்தகாரம் நிறைந்தது. அவ்வாறு சிவபெருமானது கண்களை மூடிய பார்வதிதேவிக்கு உடனே உண்டான அச்சத்தால் வியர்வையுண்டாயிற்று, அவ்வியர்வையானது எம்பெருமானின் லலாடநேத்திரமாகிய அக்கினியாற் சூடுண்டு அவ்விரலிலேயே பயமுறத்தக்கதும் கொடூரமான குரூர புத்தியுடையதுமான ஒரு கர்ப்பமாயிற்று. அவ்வகைய கர்ப்பத்தில் விலக்ஷ்ணமும் விரூபமும், ஜடாமுடியும் தாடி மீசையும், கருமையும் சுருண்டு நெரிந்தமயிரும் அழுகையும் சிரிப்பும் பாடலும் நடித்தலும் பசித்தலும் பிரளயகாலமேகம் போன்ற குரலும் உடைய ஒருவன் பிறந்தான்.
மகா ஆச்சரியமான உருவத்தோடு பிறந்த அவனைச் சிவபெருமான் கண்டு பார்வதியை நோக்கிச் சிரித்து, பெண்ணே! என்விழிகளை நீ வேடிக்கையாக மூடி இவ்வகையாக ஒருவனைப் பிறப்பித்து என்னைப் பயப்படுத்துகிறாயா? என்று வினோதமாகக் கூறினார். பார்வதி அவ்வார்த்தைகளுக்குச் சிரித்து அவ்விழிகளில் பொத்தியதன் கைகளை எடுத்தாள். இவ்வகைய கோரரூபத்துடன் அந்தகாரத்தால், இருளால், பிறத்தலின் அவன் கண்ணிலாத அந்தகனாக இருந்தான். அப்பொழுது மகாதேவி மகாதேவனை நோக்கி சுவாமி இவன் யார்? குருடனையும் குரூபியாகவுமிருக்கிறான் எந்த நிமித்தத்தால் இவன் இவ்வாறு பிறந்தான்? இவன் யாருடைய புதல்வன்? இவ்வுண்மையைச் சொல்ல வேண்டும் என்று கேட்டாள். அதற்குச் சிவபெருமான், பார்வதி இவன் மகா பராக்கிரமசாலி என் விழிகளை நீ மூடினையே; அப்பொழுது உன் கை வியர்வையில் உண்டாகி அந்தகன் என்னும் பெயர் பெற்றான் இவனுக்குத் தந்தை நானே! நீ அனுகூலப் புத்தியோடு உன் கண் சகிதமாய் இவனை ஒரு வருடம் காக்க வேண்டும்! என்றார்.
பார்வதி தேவியும் சிவபெருமான் கட்டளைப்படித் தோழிகளோடு கூடி அவ்வந்தகனைத் தன் புத்திரன் போலவே பாதுகாத்து வந்தாள். சில நாட்கள் கழிந்த பின் உலகத்தில் ஹிரணியாக்ஷன் என்னும் அசுரன் தனக்குப் புத்திரரின்றி வனத்தையடைந்து தேகமெல்லாம் இளைக்க இராகத் துவேஷங்களின்றி சிவதரிசனத்தை விரும்பிப் பெருந்தவஞ் செய்தான். சிவபெருமான் அவன் தவத்திற்கு உள்ளம் கனிந்து அவன் தவஞ் செய்யுமிடத்தை அடைந்து நீ பஞ்சேந்திரியங்களை யடக்கி இவ்வகைய தவம் யாது கருதிச் செய்கிறாய்? உனக்கு வேண்டிய வரத்தைக் கேள், கொடுப்பேன்? என்றார்.
ஹிரணியாக்ஷன், சர்வேஸ்வரா! எனக்குப் பராக்கிரமசாலியும் அசுர குலத்தை ஆதரிப்பவனுமான புத்திரன் வேண்டும். ஆகவே இவ்வித விரதத்தை ஆச்சிரயிக்கிறேன். நான் விரும்பிய வண்ணமே அனுக்கிரகஞ் செய்ய வேண்டும். என் தமயனுக்கு பிரஹலாதன் முதலான நான்கு புதல்வர்கள் உண்டு! எனக்கு மட்டுஞ் சந்ததியில்லாவிடில் என் கஷ்டத்தால் சம்பாதித்த இராச்சியம் என்னவாகும்? பிறனொருவனுடைய ராஜ்யத்தைப் பராக்கிரமத்தால் சம்பாதித்து, தந்தையின் இராஜ்யத்தைப் பாதுகாத்துக் கொண்டு வருகிறவனே புதல்வன். அவ்வகைய புதல்வனாலேயே அவனைப் பெற்றோன் புகழ்பெறுவோன் தர்ம சிரேஷ்டர்களாகிய முனிவர்களாலே அபுத்ரஸ்ய கதிர் பத்தினியிடம் ஒரு புத்திரன் உண்டாகவேண்டும்! என்றான். அவ்வார்த்தைகளுக்கு சிவபெருமான் மனங்களித்து ஓ தைத்தியாதிபனே! உன் வீரியத்தால் சனித்த புத்திரன் உனக்கு இருக்க மாட்டானாகையால் எனக்குப் புத்திரனாயிருப்பதும், உனக்குச் சமான பராக்கிரம முடையவனும் பிறர் ஒருவராலும் ஜெயிக்கமுடியாத அந்தகன் என்னும் புத்திரனைப் பெறுக! துக்கத்தை விடுக! என்று திருவாய் மலர்ந்தருளினார்.
ஹிரணியாக்ஷன் அந்தகனைப் புத்திரனாகப் பெற்றுக்கொண்டு பரமசிவனையும் பார்வதி தேவியையும் பிரதக்ஷிண நமஸ்காரஞ் செய்து பலவிதமான தோத்திரங்களால் துதித்து சிவபெருமானிடம் விடை பெற்றுக்கொண்டு தன் இராஜ்யத்தை அடைந்து அந்தகனை ரஸாதலத்திலே நிறுத்தி தேவர்களையெல்லாம் ஜெயித்து உலக முழுவதையும் பாய்போலச் சுருட்டிக்கொண்டு தன் பாதாலலோகத்திற்குச் சென்றான். அதனால் தேவர்களும் மகரிஷிகளும் ஒன்றுகூடி விஷ்ணுமூர்த்தியை வேதமாகப் பூஜிக்கவே திருமால் ஸ்வேத வராக அவதாரஞ்செய்தார். அவர் மஹா பராக்கிரமசாலியாகத் தோன்றி மூக்கினருகுள்ள தந்தங்களால் தோண்டிக் கொண்டு பாதாளத்தையடைந்து, தனது தந்தம் முதலியவற்றாலும் கோரைப் பற்களாலும் பலமுறை அசுரரைச் சூர்ணித்து, வஜ்ராயுதத்திற்குச் சமானமான கால்களின் அடியால் அசுரச்சேனையை அநந்த முறை அழித்தார். கோடி சூரியப் பிரகாசமான காந்தியுடைய சுதரிசனம் என்னுஞ் சக்ரத்தால் ஹிரண்யாக்ஷனைச் சங்கரித்து அவனோடிருந்த துஷ்டர்கள் அனைவரையும் நாசஞ்செய்தொழித்து, இறந்த ஹிரண்யாக்ஷன் மகனாகிய அந்தகாசுரனைப் பாதாள லோகாதிபதியாய்ப் பட்டாபிஷேகஞ் செய்து நிறுத்தி, ஹிரண்யாக்ஷன் பாதாளத்திற்குக் கொண்டுபோன பூமியைத் தன் கொம்பின் மேல் வைத்து எடுத்துக்கொண்டு வந்து பழையபடியே இருத்தித் தன் வைகுண்ட பதவியை அடைந்தார்.
சவுனகாதி முனிவர்களே! அது முதல் அந்தகாசுரன் உலக முழுவதும் அரசு செலுத்திக் கொண்டிருந்தான். அந்நாட்களில் பிரமதேவர் அங்கு சென்று அந்தகனுக்குத் தரிசனங் கொடுத்தார். அவரை அந்தகாசுரன் பலவிதமாகத் துதித்து வணங்கினான். அதனால் நான்முகப் பிருமா அவனை நோக்கி, அந்தகனே! உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார் அப்போது அந்தகன் அறியாமையால் பிதாமகரே! எப்பொழுதும் எவ்வகைய அஸ்திர சஸ்திர பாச வஜ்ர முதலிய ஆயுதங்களாலும் மரங்களாலும், மலைகளாலும் ஜலத்தினாலும் அக்னியினாலும், சத்துருக்களாலும், சுவர்க்க மத்திம பாதங்களிலும், இரவிலும், பகலிலும், சந்தியா காலங்களிலும் எனக்கு மரண பயமில்லாதிருக்க வரங் கொடுத்தருள வேண்டும்! என்று கோரினான்.
பிரம்ம தேவர் அவனை நோக்கி அந்தகா! நான் அவ்வாறே உனக்கு வரங்கொடுத்தேன். நீ எட்டுக் கோடி வருஷம் தானவராச்சிய பரிபாலனஞ் செய்வாய்! என்று கூறித் தன் சத்தியலோகம் அடைந்தார். இவ்வாறிருக்க ஹிரண்யாக்ஷன் இறந்தமையாலும் அந்தகாசுரன் இராச்சியாபிஷேகஞ் செய்யப்படினும் அந்தகனாயிருந்தமையாலும், ஹிரண்யாக்ஷன் தம்பியாகிய ஹிரண்யகசிபனே அரசனாயிருந்தமையின் அவன் கதையை இடையிலே சொல்கிறேன்; கேளுங்கள்.
முனிவர்களே ஹிரண்யகசிபன் தர்மங்களையெல்லாம் அழித்துப் போர் செய்து தேவர்களையெல்லாம் வென்றடக்கித் துன்புறுத்தினான். இந்திரன் முதலிய தேவர்கள் க்ஷீராப்தியை அடைந்து, அங்கே யோக நித்திரையிலிருந்த திருமாலைக் கண்டு பலவிதமான தோத்திரங்களால் துதி செய்தார்கள். திருமால் அகம்மகிழ்ந்து அமரர்களே! உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டு உணர்ந்தார் சூரியகாந்தி போல் விளங்குந் திருமால் அவர்களை ஆதரித்த ஜடையும் வக்கிரதந்தங்களும் கோரைப் பற்களும், கூர்மையான நகங்களும் சிறந்த மூக்கும் குகைபோலத் திறந்து கொண்டிருக்கும் வாயும் கோடி சூர்யப் பிரகாசமும் நல்லகோர ஸ்வரூபமும் பிரளயகாலாக்கினி போன்ற ஸ்வரூபமுடைய வர்ணிக்கச் சாத்தியமில்லாத நரசிங்கவதாரம் எடுத்து சூரியாஸ்தமான வேளையில் அசுரர் புரத்தையடைந்து அங்கிருந்த அசுரர்களைப் போர் புரிந்து வதைத்தார். அகண்ட பராக்கிரமத்தைக் காண்பித்துக் கிறுகிறு வெனச் சுழன்று வனங்களையழித்தும் வனகாவலரை வதைத்தும் விளங்கும் விஷ்ணுமூர்த்தியை அங்கிருந்த அசுரர்கள் சிங்கமே என்று எண்ணித் திகைக்கையில் பக்தனாகிய பிரகலாதன் மாத்திரம் இவர் ஸ்ரீமந் நாராயணனே என்று கருதித் தன் தந்தையான ஹிரண்யகசிபனை நோக்கி, இது சிங்கமன்று யுத்தம் செய்வதில் பலனில்லை! இவர் விசேஷர் ஷட்குணை சுவரிய சம்பன்னர் முடிவில்லாதவர்! அவ்வகைய நாராயணனே உன் நகரத்தை அடைந்தார். ஆகவே யுத்தத்தை நிறுத்தி அந்நரசிங்கத்தை நீ சரணமடைந்தால் திரிலோகங்களிலும் அகண்டமான ராச்சியத்தையும் அனுபவிப்பாய் அவரைப் பணிய வேண்டும்! என்று கூறினான். ஹிரண்யகசிபன் கோபித்து அடா பிரகாதா! இந்நரசிங்கம் எனக்கெவ்வளவு? இதற்கு நீ பயந்தாயா? என்று சொல்லி தன்னருகே நிற்கும் சேவர்கர்களைப் பார்த்து, நீங்கள் இந்த சிங்கத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும்! என்றான். சேவகர்கள் யாவரும் நரசிங்கத்தை அணுகித்தீயினையடைந்த சருகுபோலச் சாம்பலானார்கள். அதைக்கண்டதும் ஹிரண்யகசிபன் அஸ்திர சஸ்திர சத்திபாச அங்குச ஆக்நேயப்படை முதலிய படைகளால் நரசிங்கமூர்த்தியோடு ஒரு முகூர்த்தகாலம் யுத்தம் செய்து இறுதியில் இருவரும் கொடூரமான மல்யுத்தம் செய்தார்கள். அது உலகினருக்குப் பெருங் கஷ்டமாயிருந்தது. ஹிரண்யாக்ஷன் சூலத்தால் பெருங்கடினமான போர் செய்கையில் நரசிங்கமூர்த்தி கோபமிகுந்து தன் கைவிரல் நகங்களால் அவனைக் கழுத்திற் குத்திப் பிளந்து கொன்றார். இறந்து விழுந்த ஹிரணியனின் உடலை நரசிம்மமூர்த்தி பலவிதமாகத் துவம்சஞ்செய்து உதிரப்பெருக்கோடுகையில் அதனைச் சூர்ணஞ் செய்தார். ஹிரண்யகசிபன் இறந்த பின்னர், பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து கொண்டிருக்கும் பிரகலாதனைக் கண்டு களித்துக் கோபசாந்தியாய் அருகே அழைத்து அன்புடன் தனயனுக்குத் தந்தையின் இராச்சியத்தை முறைப்படி பட்டாபிஷேகம் செய்து வைத்து, உலக முழுதும் விஷ்ணு பக்தியைப் பிரசித்தஞ் செய்பவனை வாழ்த்தித் தன் வைகுண்ட பதவியை அடைந்தார்.
அதன் பின்னர் பிரகலாதன் முதலிய சகோதரர்கள் வேடிக்கையாக ஓ அந்தகா! உன் தந்தையான ஹிரண்யாக்ஷன் அஞ்ஞானத்தால் பலகாலம் மேருமலையின் குகையில் சிவபெருமானை நோக்கித் தவஞ் செய்து அவரது கருணையால் விரூபமும் கோரமும் குருடுமாயிருக்கும் உன்னைப் புத்திரனாக வரம் பெற்றான்! நீ உன் தந்தையின் இராச்சியத்திற்குரியவனல்லன், தவறி யாருக்காவது புத்திரனாகாமற் போனாயே! என்று கூறினார்கள். அந்தகன் அவற்றைக் கேட்டு, மனதிலேயே யோசித்து வருந்தி, தன் வாய்மொழியால் அவர்களுக்கு ஏற்ற சமாதானஞ் சொல்லி ஒரு நாளிரவில் வனத்தையடைந்து அநேக வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று ஆகாரமின்றிக் கையையுயர வெடுத்து கொண்டு தேவாசுரர்களால் செய்யமுடியாத ஜபதபஞ்செய்தான். பிறகு ஒரு வருஷகாலம் கூர்மையான அம்புகளால் தன் தேகத்தைச் சிறிது சிறிதாகக் கொய்து தினந்தோறும் யாகத்திலிட்டுச் உதிரஞ் சொரியும் எலும்புமாத்திரமிருக்கப் பெற்றவனானான். அப்பொழுதும் பிரம்மன் பிரசன்னமாகாமையால் எஞ்சி நின்ற எலும்பினையும் ஹோமஞ் செய்ய உத்தேசித்திருந்தான் அதைக் கண்டதும் பிரம்ம தேவன் அவனுக்கு வரங்கொடுக்கக் கருதி வருகையில் வழியிற்கண்டதேவர்களும், முனிவர்களும், அன்னவாகனரே அந்த அந்தகாசுரன் மகாபாவி அவனுக்கு வரங்கொடுத்தால் பெருந்தீமைகள் உண்டாகும் கொடுக்காவிட்டால் அவன் எலும்புகளையும் நெருப்பில் போட்டொழிவான் என்று தடுத்தார்கள். ஆனால் அதைக் கேளாமல் பிருமா அந்தகனையடைந்து அந்தகா நீ வேண்டிய வரங்களை கேட்டுக் கொள்! என்றார் அந்தகன் அகங்களித்து நமஸ்கரித்து சிருஷ்டிகர்த்தாவே மகாபலசலிகளான பிரகலாதன் முதலான என் தம்பிமார்களால் என் இராச்சியம் கைக் கொள்ளப் பட்டதாதலின் அஃதெனக்குக் கைகூடவும் அவர்கள் என் சேவர்களாகவும் நான் கண் பார்வையும் நல்லுருவமும் பெறவும், இந்திராதி தேவர்கள் எனக்குக் கப்பங்கட்டவும் தேவராக்ஷச சுந்தர்வ யக்ஷமானிடர்களாலும் என் தந்தையைக் கொன்ற நாராயணனாலும் இன்னும் வேறு வகையாலும் நான் கைகூடுமாயினும் சாவாதிருக்க முடியாது அவ்வாறு இறவாதவர் திரிகாலங்களில் ஒருவருமிலர் உலகத்தில் சத்புருஷர்கள் தீர்க்காயுசை விரும்பமாட்டார்கள் என்று தந்திர வார்த்தை கூறினார்! அதனால் அந்தகன், சிருஷ்டி கர்த்தாவே! முக்காலத்திலும் உள்ளவளும், மிக உன்னதமும், உத்தம, மத்திம வயசும் அதி அழகும் வாய்ந்த மங்கையர்களுக்கிடையில் மகா அலங்கார பூதமாகியும் எனக்குத் தாயாகியும் மனவாக்குக் காயங்களாலும் பாவிக்கப்படாத ஸ்திரீயை நான் மோகிக்கையில் மட்டும் எனக்கு நாசமுண்டாகட்டும்! என்று வரம் கேட்டான். ஆகவே பிரம்மதேவன் புன்சிரிப்புடன் அவ்வாறே யாகுக! என்று வரங்கொடுத்து இனி தவச் செயலொழிக பலபராக்கிரமசாலியாய்ப் போர் செய்ய வல்லவனாவாய்! என்றார். அந்தகன் அவரை நோக்கி நான் அஸ்தி சேஷமாயிருப்பதால் என்னைத் தங்கள் திருக்கரத்தாற் பரிசித்தப் பூர்ண தேகமுடையவனாக்க வேண்டும்! என்று பிரார்த்தித்தான். பிரமன் அவ்வாறே செய்து, தனது சத்திய லோகம் அடைந்தான்.
அந்தகாசுரன் தான் பெற்றுக்கொண்டே வரத்தின் விசேஷத்தால் கண்களையும், பூர்ண தேகத்தையும் சிறந்த வல்லபத்தையும் பெற்றுத் தன் நகரத்தை அடைந்தான். அவனைக் கண்ட பிரகலாதனாதியோர் அவன் பிரமதேவனால் வரம் பெற்றுள்ளான் என்பதையுணர்ந்த அவனை எதிர்க்க முடியாமல் அரசாக்ஷி முழுவதையும் ஒப்படைத்துவிட்டு அவனுக்கடங்கியிருந்தார்கள். பிறகு அந்தகாசுரன் சுவர்க்கலோகத்தை ஜெயிக்கக் கருதி பரிசனங்களுடன் சுவர்க்கலோகத்தை அடைந்து, தேவர்களையும் அவர்கள் சைனியங்களையும் வென்று, இந்திரனைக் கப்பங்கொடுக்கச் செய்தான். நாகர்களையும் ஸுபர்வர்களையும், அசுரர்களையும், கந்தர்வர்களையும், யக்ஷர்களையும், மானிடரையும், பர்வதவிருஷ முதலிய எல்லாவற்றையும், சிங்க முதலிய சதுஷ்பாத ஜந்துக்களையும் பொருந்திய திரிலோகத்தையும் பரிபூரணமாக வென்றடக்கினான். அவர்களில் அதிரூப சவுந்தரியமும் இளவயதும் வாய்ந்த மங்கையர்கள் நூற்றுவரை அபகரித்து, ரசாதலத்து ஸ்திரீகளைப் பூலோகத்தில் கொண்டு வந்து சுவாதீனப்படுத்திக் கொண்டான். சுந்தரிகளோடு ஏகாந்தமான நதிதீரங்களிலும் பலவித பூக்களோடு பொலிவுறும் மலைச்சாரல்களிலும் பூந்தோட்டத்திலும் விளையாடிக் கொண்டு அவர்களோடு கூடி மகிழ்ந்து கொண்டிருந்தான். அன்றியும் ருசியான பழங்களையும் மதுவையும் அம்மங்கையர்களுக்கு ஊட்டி அவர்கள் புசித்து எஞ்சியதைத் தான் உட்கொண்டும் களியாட்டம் நடத்தினான். விமான வாகனங்களில் பறந்தும், மயனால் நியமிக்கப்பட்டு மலர் மணங்கமழும் திவ்விய மாட மாளிகைகளில் மதனாகம முறைப்படி அச்சுந்தரிகளைக் கூடி மகிழ்ந்தும் ஆயிர வருஷங்கள் கழித்தான். இதுவரையில் அந்தகன் பரார்த்தமான கிரியை ஒரணுவளவும் செய்ததேயில்லை தன் புதல்வர்களில் சிறந்தவர்களைக் குதர்க்க வாதத்தால் வேதமார்க்க விரோதிகளாக்கினான். தனக்குற்ற ஐசுவரியத்தால் ஆணவம் மிகுந்து, வேதம் ஓதும் பிராமணர்களையும், தேவர்களையும், குருவையும் மதியாமலும் மரணம் அதிவிரைவில் வருகின்றதென்பதை உணராமல் உலகமுழுவதும் தன் சைனியங்களுடன் யாத்திரை செய்து அநேக கோடி வருஷங்கள் சந்தோஷமாகவே இருந்தான். அவ்வாறிருக்கையில் அவன் ஒரு சமயம் மந்தர மலையை அடைந்து, அங்கு மகாப்பிரகாசத்துடன் சுவர்க்கலோகத்தை யொத்த குகையொன்றைக் கண்டு தன் சைனியத்துடன் மதுபானஞ் செய்து வெறிகண்டு அங்கே ஆடியும் பாடியும் இது நாம் வசிப்பதற்குத் தக்கதென்று கருதி ஆங்கிருக்கத் தீர்மானித்தான். அங்கு அதி விநோதமான நகரமொன்று நியமித்துக் கொண்டு, அம்மந்திரகிரியில் குகையில் மயனால் நிர்மாணஞ் செய்யப்பெற்ற அந்நகரத்தில் நகரப் பிரவேசஞ் செய்தான்.
சவுனகாதி முனிவர்களே! அந்தகாசுரன் இவ்வாறு அந்நகரத்திற் சிறிது காலம் ஆனந்தத்தோடும் காமக்களியாட்டங்களோடும் கழித்த பிறகு அவன் மந்திரிகளாகிய துர்யோகதனன் வைபவஸன் ஹஸ்தி என்னும் மூவரும் அதிசுந்தரமான ஒரு மங்கையைக் கண்டு வினாடி காலத்திற்குள் விரைந்து வந்து அந்தகனை அணுகிச் சொல்லானார்கள். நாங்கள் விநோதமாக விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு குகையையும், அக்குகையில் தியான யோகத்தில் அமர்ந்து விழிகளை மூடிக்கொண்டிருக்கும் பேரழகுடைய ஒரு முனிவரைப் பார்த்தோம். பிறைச் சந்திரனால் அலங்கரிக்கப் பெற்ற தலைமயிரும், இடையிற் புலித்தோலுடையும், ஆதிசேடனுடைய பணாமுடிகளால் அலங்கரிக்கப்பட்ட தேகமும், கபாலமாலிகாபரணமும், ஜடையும் கையில் ஜபமாலையும், கட்கமும், யோகதண்டமும், உடையவராக அம்முனிவன் விளங்கினான் அவன் அருகில் ரிஷிபமுகமும் அதிகோரமும் திறந்த வாயும் சர்வாபரணமும் தீக்ஷணமான காந்தியும் வெண்ணிறமுடைய ஒருவன் அம்முனிவனுக்குப் பணிவிடை செய்கிறான். அவ்வாறு தியான யோகத்திலிருக்கும் முனிவனுக்கருகில் ஒரு கட்டழகியையும் பார்த்தோம் அவள் நல்ல திவ்விய ரூபமும், யவ்வன பருவமும், மிருதுவான இனிய வசனமும் பவளம், நவமணிகள், முத்துக்கள், இரத்தினங்கள், வஸ்திரங்கள், பொன் மலர் மாலை முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட திவ்ய தேகமுடையவளாக மாதர்களுக்குள் மிகச் சிறந்த இரத்தினம்போல் விளங்குகிறாள். அவ்வனிதையைக் கண்டவனே கண்களைப் பெற்றதனாலுண்டான பலனை அடைவான் அவளைக் காணாதவன் கண்கள் பயன் பெறாதவனே யாவான்! அம்முனி மங்கையை தேவலோக ஸ்திரீ என்று நாங்கள் நினைத்தோம்! என்றார்கள். இவ்வாறு கூறிய மந்திரிகளின் வார்த்தையைக் கேட்ட அந்தகாசுரன் மன்மத பாணங்களால் காமதுரனாகி மந்திரிகளே! நான் சொல்லும் வார்த்தைகளை அம்முனிவனிடஞ் சென்று சொல்லவேண்டும்! என்று கூறியனுப்பினான். அவர்கள் அவ்வாறே அம் முனிவனையடைந்து கூறலாயினர்.
முனிவனே! தைத்திய ராஜனான அந்தகாசுரன் சரிதத்தைச் சொல்கிறோம். அதைக் கேட்டுக்கொண்டு உன்னுடைய சமாசாரத்தையுஞ் சொல்ல வேண்டும் அந்தகாசுரனோ ஹிரண்யாக்ஷனுடைய குமாரன். மகாத்மா! நீ யார்? இங்கே ஏன் இருக்கிறாய்? இளம் பருவமும் பேரழகுமுடைய இப்பெண் யார்? யோசித்துப் பார்க்கையில் உன் மனைவி என்றே நினைக்கிறோம். இவளுடைய மெல்லிய தேகமோ அதிகோமளமானது நீயோ உடல் முழுதும் சாம்பலைப் பூசிக்கொண்டு எலும்பு மாலையை ஆபரணமாகப் பூண்டிருக்கிறாய், ஏ, விரூபி, அம்பறாத்தூணி, வில், அஸ்திரம், டமருகம், சூலம், மழு தோமரம் முதலியவற்றை ஏந்தியிருக்கிறாய்! உன் தேசத்தில் ஒரு நதி பிரவாகிக்கிறது சந்திரன் ஒருவன் இருக்கிறான். முகத்தில் கோரமான நெருப்புப் பிரகாசிக்கிறது சாப்பங்கள் உன்மீது உலாவுகின்றன எருது வாகனத்தை எதிரே நிற்க வைத்துக் கொண்டு அதை எந்நேரமும் பார்த்துக் கொண்டிருக்கிறாய்! தர்மவான்போலத் தியான யோகத்திலிருக்கிறாய்! உன் உணவுகள் எவை என்றும் தெரியவில்லை இப்படிப்பட்ட சாமானியனான உனக்கு அந்த சவுந்தர்யமான மங்கையுடன் சம்பந்தமானது விருத்தமாகத் தோன்றுகிறது ஆகவே எங்கள் பிரபுவான அந்தகாசுரனுக்கு அவளை நன்மையாகவே கொடுத்துவிடு அப்படி நீ இப்பொழுதே கொடாவிடில் அவன் திரிலோகங்களையும் ஜெயித்தவனாதலின் அந்தக் கட்டழகியை பலாத்காரமாகக் கொண்டுபோய் விடுவான். இதில் தடையில்லை எங்கள் சொல்லைக் கேட்டு உன்னுடைய அஸ்திர சஸ்திரங்களை விடுத்து இவ்வணங்கை அந்தகனுக்கு உவந்தளித்து அதன் பின்னர் அருந்தவஞ்செய்க! இவ்விஷயத்தை நீ ஒப்பு கொள்ளவில்லையென்றால் நாங்கள் உன்னுடைய கருத்தை அந்தகாசுரனுக்கு அறிவிப்போம் அப்பொழுது உன் உடல் உனக்கு நிலைக்காது! என்று கூறினார்கள். அதைக் கேட்டதும் முனி வேடங்கொண்ட சிவபெருமான் புன்சிரிப்புடன் அசுரர்களே! சிவபெருமான் இருக்கும்போது என்னாலும் உங்களாலும் என்ன நடக்கலாம்? என் தந்தை என்று ஒருவருமில்லை அவனை நானறியேன் இக்குகையிலிருந்து ஏதோவொன்றை ஸ்மரித்துக் கொண்டிருக்கிறேன். இதுவே என் பாசுபத விரதம். நான் தாயை அறியேன் என் விரதமிது. இது விலக்கற்பாலதன்று என் தவத்திற்குச் சித்தி பூதமாக இருக்கும் இச்சுந்தரவதியே என் மனைவி உங்களுக்குச் சாத்தியமானால் அவளைக்கொண்டு போகலாம்! என்று கம்பீரமாகச் சொன்னார். அதைக்கேட்டதும் அசுரர்கள் அம்முனிவனைப் பணிந்து, திரிலோக நாசகனாக விளங்கும் தங்கள் அரசனான அந்தகாசுரனிடம் திரும்பி வந்து மதுபானத்தால் தன்னை மறந்து புரளும் அவனை நமஸ்கரித்துச் சொன்னார்கள்.
அசுராதிபனே! அங்கிருப்பவர்களும் அம்முனிவனும் ஆ ஆ! அந்த அந்தகாசுரன் எவ்வளவினன்? அவன் வலிமை எத்தகையது? என்று புன் சிரிப்புடன் கேலியாக, ஜயஜய வென்று கூறினார்கள் என்று மந்திரிகள் கூறினார்கள். அப்பேச்சைக் கேட்டு. குரூரனும் மகா பாபியுமான அந்தகாசுரன் சிரித்து, அசுரன் என்றால் சாமானியனா? என் பெயரைக் கேட்ட யமனும் அஞ்சுவான். இமாசலம் போன்ற புயங்களையுடைய எனக்குச் சமானமான வீரனொருவன் உலகில் இருக்கிறானா? என் பாணங்களுக்குச் சமானமான பாணங்கள் யாரிடம் இருக்கின்றன? யமனும் அஞ்சுமாறு போர் புரியவல்லேன் கிழப்பருவத்தால் உடன் வளைந்த அவ்வீரனாகிய சேவகன் எங்கே? மகாபலசாலியானவன் எங்கே மந்தபாக்கியனான அம்முனிவனுக்கு மகாரூபவதியான அந்தப் பெண் தகுதியா? என்று குமுறியெழுந்தான் மந்திரிகள் அவனை நோக்கி அரசனே அம்முனிவன் வார்த்தைகளையெல்லாம் அப்படியே சொல்லுகிறோம். உம்முடைய பலம் எவ்வளவு? நான் பெருந்தவஞ் செய்து சிறந்தபலனை அடைந்திருக்கிறேன் கூடுமானால் என்னை எதிர்த்து உங்கள் வலிமையைக் காட்டலாம். வஜ்ராயுதம் போன்ற பாணங்கள் என்னிடம் இருக்கின்றன உங்கள் தேகங்களோ மிருதுவானவையெனவும் அம்முனிவன் கூறினான். ஆகவே நீங்கள் அம்முனிவனுடன் அஸ்திர யுத்தஞ்செய்வது யுத்தமல்ல அம் முனிவன் மகா கர்வமுடையவன் பலவிதமான யோசனையால் பயனென்ன? அம் முனிவனை எதிர்த்தால் நீங்கள் அபஜயப்பட்டுப் பலராலும் ஸ்மரிக்கப்படுவராவீர், என்று கூறினார்கள் அவ்வார்த்தையால் அந்தகன் அவமானரோஷமுற்று நெய் சொரிந்த யாகாக்கினி போலக் கொதித்தெழுந்து அம்மந்திரிகள் சொரிந்த யாகாக்கினி போலக் கொதித்தெழுந்து அம்மந்திரிகள் வார்த்தை சத்தயமாயினும் தனக்கு இதமாயிராததால் கபடமாகக் கருதினான். உடனே அவன் கட்கத்தைக் கையிலேந்தி எனக்கு நிலையானவரம் இருக்கும்போது பயன் என்ன? என்று பெருந்தொனி செய்து மதுபானம் விசேஷமாகச் செய்து கட்குடியாலும் கோபத்தாலும் கண்கள் சிவந்து, மத யானைபோல நடந்து அக்குகையை அடைந்தான்.
அங்கு திரிநேத்திரதரனான சிவபெருமானது சார பூதமாகிய உமாபிராட்டியாரைக் கண்டு, சிவபெருமானையும் அவர் கரத்திலிருந்த அஸ்திர சஸ்திரங்களையும் நந்தி தேவரையும் ஒரே பிடியாகப் பிடித்துக் கொண்டு போகவேண்டுமென்று நினைத்தான். பார்வதி தேவியின் அழகைக் கண்டு மன்மத பாணங்களுக்கு ஆளாகி மதி மயங்கி, அக்கினியில் விழும் புழுவைப்போல் அந்தகாசுரன் துடித்தான் திருநந்தி தேவரால் காவல் செய்யப்பட்டிருக்குங் குகைக்குள் புகுந்தான். அந்தகன் அவ்வாறு நுழையும் போது நந்தி தேவர் பாறைகள் மரங்கள் வஜ்ரம் ஜலம் அக்கினி நாகாஸ்திரம் முதலிய பயங்கரமான பல பொருள்களால் பாதித்து அடா! நீ யார்? ஏன் இங்கு வந்தாய்? என்று கேட்டார். அந்த வீர வாக்கியத்தைக் கேட்டு அந்தகன் கருத்தைக்கூறி இறுதியில் ஒரு முகூர்த்தகாலம் புத்திக்கு எட்டாத ஆச்சரியகரமான யுத்தம் செய்தான். பிறகு பராஜிதனாகி அவ்விடம் விட்டுப் பசிதாகங்களால் வருந்தி மது வெறி தெளிந்து புறங்காட்டி ஓடினான் கத்தி முதலிய பலபகைகளால் சின்னாபின்னஞ் செய்யப்பட்டதேகத்துடன் அவன் ஓடிப்போன பிறகு, விகஸாதன் முதலிய மந்திரிகளும் பிரகலாதனாதி வீரர்களும் நந்திதேவரோடு அஸ்திர சஸ்திரங்களால் பயங்கரமான யுத்தம் செய்து நாணமென்னும் அங்குசத்தாற் குத்தியிழுக்கப்பட்ட புத்தியையுடையவர்களாய்ப் பிரிந்தார்கள். பிறகு விரோசனன், பலி, பாணன், சஹஸ்ரபாஹு, ரஞ்சன், ஸுரஞ்சன், சங்கரன், விருத்திரன் முதலிய அசுரர்கள் பலர் நந்திபகவானோடு அகண்டமான யுத்தம் செய்து வென்றடக்கப் பட்டர்களாய் மடிந்தார்கள். இவ்வாறு போர்புரிந்திருந்த அசுரர் தொகையைக் கேட்ட சித்த சாரணர் ஜயஜய என்ற கோஷங்களோடு சிவபெருமானைப் புகழ்ந்தார்கள். கண்ட பேருண்ட பட்சிகளின் அபிநயமும் இராக்ஷல சமூகத்தால் வியாகூலமும் பயங்கரமும் இரத்தத்தால் சேறுபட்டும் மாமிசம் இரத்தம் முதலியவற்றின் துர்மணம் போர்க்களத்தில் நிறைந்திருந்தன. அங்கு சர்வகாலனாகிய பிநாகபாணி பார்வதி தேவியுடன் எழுந்தருளி உமாதேவியைப்பார்த்து நாயகியே! நான் எவ்வளவு கடினமான பாசுபதவிரதத்தை எடுத்திருந்தேனோ, அந்த விரதத்தின் பலன் இதுவே! என்று நன்மொழிகளால் கூறி நான் இன்னும் சிறிது காலம் இப்பாசுபத விரதத்தை ஆச்சிரயிக்க எண்ணினேன் ஆகையால் நான் வேறோரிடத்தை அடைகிறேன் நீ இவ்விடத்திலேயே இரு உன் குமாரனான நந்தி உன்னைக் காத்திருப்பான் நான் இவ்விரதத்தை முடித்து வருமளவுத் துக்கமின்றிச் சந்தோஷத்துடன் நிர்ப்பயமாக இருப்பாயாக! என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். அவர் புண்ணியமயமான வேறொரு வனத்தை அடைந்து தம்மைத்தாமே பூஜித்துக் கொண்டு ஆயிரம் வருஷகாலம் கழித்தார் பார்வதி தேவியோ எப்பொழுதும் தனித்திருந்த பயமுற்றுத் தன் புத்திரனான வீரகனோடு உரையாடிக் கொண்டும் தன் நாயகரின் வருகையைக் கருதித் துக்கித்துக் கொண்டும் அம்மந்தர பர்வதக்குகையில் சிவத்தியானத்தோடு தங்கியிருந்தாள்.
இவ்வாறு பார்வதிதேவி இருக்கையில் வர தானத்தால் மகாமத்தனான அந்தகாசுரன் பற்பல சைனியங்களுடன் பயமின்றி மீண்டும் போர் புரியக் கருதி அக்குகைக்கு வந்தான். நந்திதேவரோடு அவன் இரவும் பகலும் பசி தாகநித்திரைகளின்றி நூற்றைந்து வருஷங்கள் கடுங்கோபத்துடன் போரிட்டால்; கட்கம், குந்தம், பிண்டி, பாலம், கதை, புசுண்டி அஸ்திரங்கள், அர்த்தசந்திர, பாணங்கள் எரிந்து கொண்டிருக்கும் நாராசங்கள் தீக்ஷண்யமான சூலம், மழு, தோமரம், பர்வதம் விருக்ஷம் முதலிய பலதிறப் படைகளால் அதிவினோதமான யுத்தம் செய்தான். அவ்வாறு அவன் பிரயோகித்தப் பாணங்களால் நந்திதேவர் மிகவும் அடிபட்டு அக்குகை மார்க்கத்திலேயே தைத்தியர்கள் குதூகலிக்கும்படி க்ஷணநேரம் மூர்ச்சையானார். அசுரர்கள் ஆனந்தத்தால் குதித்து குகையின் கதவைத் திறக்க யத்தனித்து அது அசாத்தியம் என்று இருந்தார்கள். இதையெல்லாம் உணர்ந்த பார்வதிதேவி அச்சமுற்றுத் தோழிகளோடு சேர்ந்து கொண்டு, பிரம்ம விஷ்ணுக்களையும், வீரபத்திரரையும் அவரது சைனியங்களையும் அஷ்டதிக்குப் பாலகரையும் நினைத்து ஸ்மரித்தாள். இவ்வாறு நினைத்தவுடனேயே பிருமா விஷ்ணு முனிவர்கள், சித்தர்கள், நாகர்கள், குய்யகர்கள் யாவரும் வந்தார்கள். அந்தப்புரத்திலிருக்கும் மகாராணியாதலின் அம்மகா தேவியைத் தரிசிக்க எல்லோரும் பெண்வடிவங்களெடுத்து தங்கள் சைனீயங்களுடன் குகைகளுக்குச் சென்று தங்கள் திவ்விய ரூபங்களைக் காண்பித்தார்கள். பெண் வடிவேற்று வந்த தேவமுனி கணங்களும் பார்வதி தேவியோடு பெருந்தொனியுடன் உரையாடிய போது குகை முழுவதும் எதிரொலி உண்டாயிற்று அதன் பின்னர் பார்வதிதேவி அவர்களை எல்லாம் சேனையாகக்கொண்டு போர் புரியத் திருவுள்ளங்கொண்டாள். அப்பொழுது அவரவர் தங்கள் சங்கங்களைப் பூரித்து யுத்த பேரிகை முழங்கினார்கள். அவ்வோசையைக் கேட்ட நந்திதேவர் மூர்ச்சை தெளிந்தெழுந்து ரதத்தில் ஏறி அநேக வகையான ஆயுதங்களால் அசுரர்களை அடித்துக் கொண்டிருந்தார் இதற்குள் பிரமனிடத்திற்றோன்றிய குகை முகத்திலிருந்து புறம் போந்தாள் விஷ்ணுவினிடந் தோன்றிய நாராயணி என்னும் சக்தி, கதை, சங்கு, சக்கரம், வில் பழுக்கக் காய்ச்சின கத்தி முதலியவற்றை ஏந்திரத்த நிறத்தோடு வந்தாள்.
இந்திரனிடம் தோன்றிய சக்தி வஜ்ராயுதமேந்தி ஆயிரங்கண்களோடு அசுரர்கள் நடுங்கும்படித் தோன்றினாள். அக்கினியிடந் தோன்றிய சக்தி தண்டந்தாங்கி, கரத்தைதூக்கிக்கொண்டு வந்தாள். நிருதி, சம்பந்தமான நைஸாசர் மகா கொடூரத்துடன் கட்கமேந்திவந்தாள். யம சம்பந்தமான சக்தி காலதண்டந் தாங்கிப் புறப்பட்டாள் வருண சம்பந்தமான சக்தி வருணாஸ்திரத் தரித்து போர் புரியக் கருதியும், வாயு சம்பந்தமான சக்தி அங்குச பாசந்தரித்துப் பிரளய காலவாயுவை வீசிக்கொண்டும் குபேர சம்பந்தமான சக்தி(ய÷க்ஷசுவரி) ஊழித்தீயை நிகர்த்த கதையைக் கரத்திலேந்தியும் போராட வந்தாள். ஈசான சம்பந்தமான சக்தி தீக்ஷண்யமான முகமும் கோர ரூபமும் பாம்பும் பயப்படத்தக்க நகங்களே ஆயுதமுமகாக் கொண்டும் வந்தாள். அவ்வாறு அஷ்டதீக்குப் பாலர்கள் சக்தியும் பல தேவர்களால் தோன்றிய எண்ணிறந்த சக்திகளும் ஒரு சேர வந்து யுத்த பூமியையும் அபாரமான அசுரச் சேனையையும் கண்டும் ஆச்சரியமடைந்தார்கள். பிறகு அச்சக்திகள் திருநந்தி தேவரைச் சேனாதிபதியாகக் கொண்டு, முன்னொரு காலத்தும் நடந்திராததும், கண்டோர் அதிசயிக்கத் தக்கதும், இயமனும் அஞ்சத்தக்கதுமான யுத்தத்தைப் பார்வதி தேவியாருடன் சேர்ந்து செய்தார்கள் இவ்வாறு பெரும்போர் நிகழுகையில் சேனாதிபதியான நந்தி தேவர் பலவித யூகங்கள் கட்டியிருப்பதை அந்தகாசுரன் உணர்ந்து வேறொரு வகையான யூகம் வகுத்து கிலனென்னும் பெயருடன் உலகத்தையே விழுங்குவது போல் அங்காந்தவாயுடன் போர் புரிந்தான் அப்போது தம்மைத்தாமே பூஜித்துக் கொண்டிருந்த சிவபெருமான் சர்வ வியாபியாதலால் அதை உணர்ந்து தம் பூஜையை நிறுத்திவிட்டுப் புறப்பட்டார். பிரளயகால சூரியர் ஆயிரவர் ஒருங்கே உதித்தது போன்ற தேக காந்தியோடு போர்முனைக்கு வந்தார். சிவபெருமானது வருகையைக் கண்ட திருநந்தி தேவரும் ஸ்திரீபமுற்ற தேவர்களும் பெருங்களிப்புடன் பயமின்றிப் போர் புரிந்தார்கள் பார்வதி தேவியும் சிவபெருமானைச் சிரத்தால் பணிந்து விசேஷமான யுத்தம் செய்தாள். அப்போது சிவபெருமான் எல்லாவற்றையுங்கண்டு பர்வதராச புத்திரியான உமாதேவியைத் தம் திருக்கரத்தால் எடுத்துக் கொண்டு குகைக்குச் சென்றார். பிராமி நாராயணி முதலிய சக்திகளும் உடனே உட்சென்றார்கள் அப்பொழுது பார்வதி தேவியார் அச்சக்திகளுக்குத் தக்க துணிமணி முதலிய வெகுமதிகளை அளித்தாள் நந்திதேவர் ஒருவரே தனித்து நின்று அசுரர்களோடு போராட்டிப் பல காயங்கள் பட்டுச் சிவ சன்னிதியை அடைந்து தலைவணங்கி, சுவாமி! அந்தகாசுரன் தன் விகஸனென்னும் மந்திரியை அனுப்பினான் அந்தகனும் வருகிறான், அவன் சொன்னதை அப்படியே கூறுகிறேன்! பெண்ணால் உமக்குப் பிரயோசனமில்லையாகையால் அப்பெண்ணை எனக்குக் கொடுக்க வேண்டும், அவ்வாறு கொடுத்த பிறகு உம்காரிங்களைச் செய்து கொள்ளலாம். அம்மங்கையைக் கொடுக்காவிட்டால் நீரே அவளை விடும்படிச் செய்வேன்! அப்பொழுது முனிவர் என்று அழைக்கப்படமாட்டாய்! சத்துருவாவாய் அசுரர்களுக்கு எப்பொழுதும் துன்பம் செய்து வருவதால் தடையின்றி நீ கொல்லப்படுவாய் ஆதலால் உன்னுடைய ஸ்திரீயை உடனே அனுப்பிவிட வேண்டும் என்று கூறினான்! என்றார்.
அசுர ராஜனான அந்தகாசுரன் குதூகலத்தோடு வரும் தன் மந்திரியான விகஸனுடைய கருத்தை அவன் வருகையிலேயே உணர்ந்து தன் சைனியங்களுடன் போர் புரியச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டான். சித்தம் செய்து கொண்டு தன் பாதி உடலை சிங்க உருவமாக்கிக் கொள்ள இந்திரன் முதலிய தேவர்களாலும் ஜயிக்க முடியாத வலிமையுடைய கிலாசுரன் என்னும் பெயர் வகித்துத் தன் பரிவாரங்களுடன் சிவபெருமான் வீற்றிருக்கும் குகையை அடைந்தான். அப்பொழுது அவர்களில் சில அசுரர்கள் அக்குகை வாயிலைத் தங்கள் ஆயுதங்களால் புடைத்தார்கள். சிலர் நந்திதேவரைப் பலவிதமான அம்புகளாற் பலவிதமாகவும் அடித்தார்கள் சிலர் பார்வதி தேவியைச் சூழ்ந்து கொண்டார்கள். சிலர் அக்குகை வாயிலில் அன்னியர் வரவொட்டாமல் காவலாய் நின்றார்கள் சிலர் பழங்கள், கிழங்குகள் பலவிதப் புஷ்பங்களை எல்லாம் அழித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் உத்தியான வனங்களையும் திவ்வியமான ஜலம் முதலானவற்றைக் கொடுத்தார்கள். சிலர் மகிழ்ச்சியால் மலையுச்சியில் ஏறி, அதன் சிகரங்களை உருட்டித் தள்ளினார்கள். இவ்வாறு அசுர சேனைகள் துவம்சஞ் செய்வதைக் கண்டதும் சிவகணங்களையும் பூதங்களையும் தத்தம் பரிவாரங்களோடு போர்க்கோலங் கொண்டு வரவேண்டுமென்று அவர் திருவுள்ளத்தில் நினைத்தார். உடனே கணநாதர்கள் யாவரும் தங்கள் படைவரிசைகளோடும் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் விமானங்கள் குதிரைகள், ரிஷபங்கள், பசுக்கள், ஓட்டைகள், பறவைகள், சிங்கங்கள் முதலிய வாகனங்களிலிருந்தும் வந்தனர்கள். விஷ்ணுமூர்த்தி முதலிய தேவர்கள் தங்கள் சைனியங்களோடு புலி, மான், பன்றி, சர்ப்பம், பசாசம் விமான முதலியவற்றிலிருந்து வந்தார்கள். உருத்திரர்கள் நாகர்கள், யக்ஷர்கள், கருடர்கள் கின்னரர்கள், வித்தியாதரர்கள் நதி நதங்கள், முதலியயாவரும் கபர்த்தியாகிய கருணாமூர்த்தியின் திருச்சன்னி தானத்தினின்று நமஸ்கரித்துப் புறஞ்சூழ்ந்து நின்றார்கள். அப்போது சிவபெருமான் அங்கடைந்துள்ள அனைவரையுங் கண்டு நந்திதேவரை அவர்களுக்குத் தளபதியாக்கி போர் புரிக என்று கட்டளையிட்டு அனுப்பினார். இறையனாரின் கட்டளையை நந்திதேவர் சிரமேற்கொண்டு எம்பெருமானால் ஆசீர்வதிக்கப் பட்டமையால் நாம் தடையின்றி ஜயமடைவோம்! என்று மகிழ்ச்சியுடன் புறப்பட்டு வந்தார். விகஸனென்னும் பெயரையுடைய அசுரனுடன் சொல்ல முடியாததும் யுகாந்தத்திற்குச் சமானமானதுமான யுத்தம் புரிந்தார். அப்போது விகஸன் சினந்து பயங்கரமான யுத்தம் செய்து தன்னோடு போர் புரிந்து கொண்டிருக்கும் திருமால் பிரமன், இந்திரன் முதலிய கணக்கிட்டுரைக்க முடியாத தேவாதிரளையும், பூதகூட்டங்களையும், சிவகணங்களையும் பசியுற்றவன் தன் கண் எதிர்ப்பட்ட உணவைக் கபளீகரிப்பதுபோல, அந்தகாசுரன் கட்டளைப்படி அந்தக்ஷணமே விழுங்கி விட்டான். விகஸனால் தன் சேனை முழுவதும் விழுக்கப்பட்டுத் தனித்து நின்ற நந்தியெம்பெருமான் உடனே ஒன்றும் தோன்றாமல் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் குகைக்குள் நுழைந்து சிவபெருமானை வணங்கி நடந்த விருத்தாந்தங்களை விண்ணப்பித்துத் துக்கித்து கூறலானார்.
சுவாமி! என் சேனை முற்றும் விகஸனால் விழுங்கப்பட்டது உலகத்திற்கு காத்தல் கடவுளாக விளங்குபவரும் அசுரச் சேனையை வினாடியில் துவம்சஞ் செய்ய வல்லவருமான திருமாலையும் அவன் விழுங்கினான். சூரிய சந்திர்களும் அவனால் விழுங்கப்பட்டார்கள் பிரம்மதேவனும், இந்திரனும், இயமனும், வருணனும், வாயுவும் விழுங்கப்பட்டார்கள். நானொருவனே எஞ்சி நிற்கிறேன் நான் தனியொருவனாக என்ன செய்த்தகும்? அந்தத் தைத்திய ராஜனான அந்தகாசுரன் மகா மகிழ்ச்சியோடு குதிக்கிறான். அவன் வாயு வேகத்துடன் விரைந்து அபஜயன் என்றறியாமல் தங்களிடமும் வருகிறான் ஆதலின் சர்வேஸ்வரா! யாது செய்யத்தக்கதோ அதை அதிவிரைவில் திருவுள்ளம் செய்ய வேண்டும், அந்தகன் சாமானியமானவன் அல்ல. அவன் மந்திரியாகிய விகஸனும் வெல்லுவதற்கு அசாத்தியமானவன் உலகப் பயங்கரமான ஹிரண்யகசிபனைத் தன் நகங்களால் கிழித்தெறிந்த ஸ்ரீ மகாவிஷ்ணு மூர்த்தியும் அவன் கோபத்திற்கு அடங்கிவிட்டார். இவ்விகஸன் முன்பொரு சமயம் உலகங்களை விழுங்க வேண்டுமென்று வாயைத் திறந்து கொண்டு புறப்படுகையில் உலகங்களுக்கு புனிதரும் சிரேஷ்டருமாகவுள்ள வசிஷ்டர் முதலிய ஸப்தரிஷிகளால் சபிக்கப்பட்டான். பிறகு அவர்களைப் பிரிய வசனத்தால் அவன் வசீகரித்து சுவாமிகளே! இச்சாபம் எனக்கு எப்போது விலகும்? என்று வேண்டிக் கேட்க அவர்கள் விகஸா! நீ போர்க்களத்தில் சூரிய சந்திர்களைக் கஷ்டப்படுத்துவாய் அப்பொழுது பல வித பாணங்களாலும் முஷ்டிகளாலும் நன்றாய் அடிக்கப்பட்டு நரநாராயணருக்கு வாசஸ்தானமாகிய வதரீகாரண்யத்தில் பவித்திரர்களாகிய அந்நர நாராயணர்களால் உன் பாபங்களை ஒழித்துச் சிறந்த பதவியையடைவாய்! என்று கருணையோடு சாப விமோசனம் கூறினார்கள். அவர்கள் வாக்கியப்படி இவன் பெரும் பசியுடையவனாய் போர்க்களத்தில் திரிந்து கொண்டும் மகிழ்ந்து கொண்டும் அந்தகாசுரனுக்கு மந்திரியாயுமிருக்கின்றான். இவ்வகைய துஷ்டர்களாகிய அசுரர்களுக்குச் சுக்கிர பகவான் மிக நண்பராகவும் குருவாகவும் நம்மையொத்தவர்களுக்குச் சத்துருவாகவும் விளங்குகிறார். அமரர்களாற் சங்கரிக்கப்பட்ட அசுரர்களை அந்தசுக்கராச்சாரியார் மிருத்யுஞ்சய மந்திர சக்தியால் உயிர்ப்பித்து யுத்தகாயம் முதலியன ஒன்றுமில்லாதவர்களாகச் செய்கிறார். அவ்வாறு செய்து வருவதனாலேயே அசுரர்கள் உலக மாதாவாகிய உமாதேவியாரை எடுத்துக் கொண்டு போவார்கள். இவ்விஷயம் நடப்பதற்கு முன்னரே நான் மாண்டு விடுவதே உசிதம்! என்று நந்திதேவர் கூறினார்.
பூதபதியான சிவபெருமான் தீர்க்காலோசனை செய்து, திரிலோகங்களையுங் கண் கூசச்செய்யுங் கோடி சூரிய கிரணங்களின் காந்தியைப்போல ஒளியுள்ள ஸோம மென்னும் பெயரையுடைய சாமத்தைக் கானஞ் செய்தார். அப்பொழுது அந்தகாசுரன் சிறிது வலிகுன்றியவனாக இருந்தான். அவர் அச்சாமாகானத்தை நிறுத்தவே அந்தகன் பழையபடியே மகாபல பராக்கிரமசாலியாய் நந்தி பகவானை எதிர்த்து நானாவிதமாகப் போர் புரிந்தான். நந்தி தேவரோ அநேக காலம் ஜலத்திலிருந்து கடுந்தவஞ் செய்து யமனையும் வெல்லத்தக்க மகாவலிமை பெற்றவர். அத்தகைய நந்தி நாயனாரையும் கபளீகரித்து விட்டார்கள். பின்னர் சிவபெருமான் அதைக்கண்டு ஐயோ, பாணம், சூலம் கட்கம், முதலிய ஆயுதங்களை ஏந்தியவனும் போர், வீரர்களில் சிறந்தவனும் ரிஷிகளுக்கெல்லாம் மேலான மகிமையுடையவனும் வேத வேதாங்க முதலிய வித்தைகளுக்கெல்லாம் வாசஸ்தானமானவனும் சமதமதைரியாதி குணங்களால் நிரம்பப் பட்டுள்ளவனுமாகிய நந்தியையும் விழுங்கினானல்லவா? என்று கோபத்தோடு அந்தகனைப் பார்த்து ரிஷப வாகனத்தில் வந்து அவனை நெருங்கிபோருக்கு அறைகூவி அழைத்தார். இதுவரையில் விகஸ அந்தகரால் விழுங்கப் பட்டவர்கள் வெளியே வரும்படி ஒரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, இடி போன்ற அம்பும் மகாமேருவைப் போன்ற வில்லும் தாங்கி நின்றார். விகஸனால் விழுங்கப்பட்ட வீரகனாகிய நந்தியும், விஷ்ணு, பிரமன் இந்திரன், முதலிய யாவரும் சிவபெருமானுடைய மந்திரஜபத்தால் அவர்கள் நெற்றி வழியாகப் புறம் வந்து சிவபெருமானை அடைந்து மகிழ்ச்சியுடன் விளங்கினார்கள். இவ்வாறு கூடிய சிவகணங்கள் முதலிய யாவரும் அந்தகனுடன் போர் புரிந்தார்கள். அசுரர்களில் சிலர் புறமுதுகிட்டோடினார்கள், அநேகர் இறந்தனர். அவ்வாறிருக்கும் அசுரர்களைச் சுக்கிரம் மீண்டும் உயிர் பிழைக்கச் செய்தான். இவனாலல்லவா நாமெல்லோரும் துன்புறுகிறோம்! என்று கோபித்து, சுக்கிரனைக் கைப்பிடியாகப் பிடித்து வந்து பூதபதிக்குப் பசுவைக் கொடுத்தாற் போலக் கொடுத்தனர். சுக்கிரன் அவ்வாறு நஷ்டமான பின்னர் அசுரச் சேனையில் பல மாண்டன. பல ஓடின பல காயமுற்றன. அந்த யுத்த பூமியில் பூதப்பிரேத பேதாள பிரமராக்ஷஸாதி கணங்களும் நரி முதலிய மிருகங்களும். அசுரர்கள் மாமிசத்தைப் புசித்து உதிரத்தைப் பருகிக் குதித்துக் கொக்கரித்துச் சந்தோஷித்துக் கானஞ் செய்து கொண்டிருந்தன. பிரஹலாதனாதி அந்தக சகோதரர்கள் நெடுங்காலம் விஷ்ணுவாதி தேவர்களோடு பெரும் போர் செய்து தோல்வியடைந்து அங்கிருப்பதற்குப் பயந்து ஜலமார்க்கத்திலும் பூ மார்க்கத்திலும் பாதாளலோகத்தை அடைந்தார்கள்.
அந்தகன் தன் சைனியங்கள் நாசமடைந்ததற்காகத் தேவர்கள் மீது பெருங்கோபங் கொண்டு திருநந்தி தேவரது சைனியங்களோடு பெரும் போர் செய்தான். அப்போது அச்சேனையில் ஒரு வீரனாக விளங்கும் விஷ்ணுமூர்த்தியால் தேகமுற்றும் காயமுறும்படி அடிக்கப்பட்டும் நான் இவர்களால் இறவாது பிரமனால் வரங் கொடுக்கப் பெற்றுள்ளவன் என்னும் தைரியத்தால் யுத்தத்தை விடாமல் நடத்தினான். அப்போது மகேந்திரனால் மீண்டும் மூர்ச்சையுறத்தக்க அடிபட்டான். அதனால் வீராவேசமுற்ற அந்தகன் தருக்கன்மலைகள் முதலியவற்றால் அவர்களை அடித்து விலக்கிச் சிவபெருமானையடைந்து, இனி நீ போருக்கு வா? என்று கூறினான் அருகிலுள்ள சிவகணங்கள் எதிர்த்தன. அவற்றையும் அந்தகன் வென்று சிவபெருமானை எதிர்த்தான். அப்பொழுது நந்தி பகவான் எதிர்க்க அவரையுஞ் ஜெயித்தான். சிவகடாக்ஷத்தால் நந்தி தேவர் மீண்டும் வலிமையும் அஸ்திர சஸ்திரங்களும் பெற்று அந்தகனைப்பலவாறு அடித்தார். அவன் உடலினின்றுஞ் சொரிந்த இரத்தத்திலிருந்து இராக்ஷஸ மாயையால் விஷ்ணு, பிரமன், இந்திரன் அந்தகன் முதலிய அநேக ரூபங்கள் தோன்றின. அப்போது சிவபெருமான் பிரளய காலாக்னி போலக் கொதித்து; அவர்களைச் சூலத்தாற்புடைத்தார். அவர்களுதிரங்களினின்றும் பலர் தோன்றிச்சைனியங்களுக்குச் சைனியங்களாய்ப் பெருகின. அவ்வாறு அசுரச்சேனைப் பெருகவொட்டாமல் சிவ பெருமான் விஷ்ணு யோகத்தாற் பயங்கரமான முகமும், அநேக புயங்களும் இரண்டு விழிகளும் சர்ப்பங்களாகிய உரோமமுடைய எண்ணிறந்த ஸ்திரீகணங்களைச் சிருஷ்டித்தார். அவ்வாறு சிருஷ்டி செய்த சாம்பவமூர்த்தியின் வலது தோளிலிருந்து நான்கு கால்களுடைய ஒரு சக்தி தோன்றி அந்த ஸ்திரீகணங்கட்குத் தலைவியாய் தேவர்களால் தோத்திரஞ் செய்யப்பட்டு சிவகடாக்ஷம் பெற்றுப் பெரும் பசியோடு அந்தகன் சைனியத்தை அழிப்பதனால் உண்டாகும் உதிரத்தைப் பானஞ்செய்து கொண்டிருந்தாள். அதனால் அந்தகன் பலமற்றவனாய் உடல் இளைத்துச் சிவபெருமானுடன் கத்தி, வேல், அம்பு, வாள்; தோமரம்; முசலம் பிண்டிபாலம் முதலிய ஆயுதங்களாலும் வச்சிராயுதம் போன்ற தனது நகங்களாலும், புயங்களாலும் க்ஷத்ரிய தருமம் விடாமல் போர்புரிந்தான் சிவபெருமான். அவனைத் தமது சூலத்தில் முனையில் குத்தி உயரத்தூக்கிச் சூரிய கிரணத்தால் தகிக்கச் செய்தும் அவன் உயிர் விடவில்லை விகஸன் முதலிய அந்தக சைனியம் அழிந்தது; யுத்தமுடிவில் தேவர்கள் யாவரும் சிவபெருமானைப் பணிந்து அவரிடம் விடைபெற்றுக் கொண்டு தத்தமக்குரிய தானங்களையடைந்தனர். சிவபெருமான் சக்திகளோடு தமது குகையையடைந்து பார்வதிதேவியைப் பார்த்து நடந்த விருத்தாந்தங்களைக் கூறிச் சந்தோஷத்துடன் வீற்றிருந்தார்.
5. ம்ருத்யுஞ்சய மந்திரமும் அந்தகாசுரன் முக்தியும்!
அந்தகாசுரனுடைய சரித்திரத்தைக் கேட்டுவந்த முனிவர்கள் புராணிகரை நோக்கி, ஞான சிரேஷ்டரே! தாங்கள் கூறி வந்த விஷயங்களால் நாங்கள் பரம சந்தோஷம் அடைந்தோம் முன் கூறிய அந்தகாசுர யுத்தத்தில் சுக்கிரன் சிவபெருமானால் விழுங்கப் பட்டார் அல்லவா? அந்தச் சர்வேசுவரனுடைய உதராக்கினி கல்பாந்தங்களை எல்லாம் வினாடியில் அழிக்கும் ஆற்றலுடையதல்லவா? அவ்வகைய அக்கினி மகா தபோ சம்பந்தரும் மகிமாதி ஐசுவரியமும் தேஜோருபமும் உடைய இக் கவியைத் தகிக்காத காரணம் யாது அவ்விறைவனின் திருவயிற்றினின்று சுக்கிரன் எவ்வாறு வெளிவந்தார்? எவ்வளவு காலம் எம்மந்திரத்தால் தியானித்தார்? அந்தகாசுரன் எவ்வாறு கணநாதனாக்கப்பட்டான், இவ்விஷயங்களைப் பூர்ணமாக உணரவேண்டுமென்று விரும்புகிறோம். எங்கட்குத் தெளிவாக விளக்கியருள வேண்டும்? என்றார்கள். உண்மையாக நடந்தவற்றைக் கூறுகின்றேன்! என்று புராணிகர் சொல்லத் தொடங்கினார்.
அந்தகனுடைய பெரும் போராட்டத்தில் சிவபெருமானால் விழுங்கப்பட்ட சுக்கிரன் பனித்துளி போன்றும் சந்திரன் போன்றுங்குளிர்ந்துள்ளதும், வருணதேவ தாகமானதும் பெருங் பயம் வளைக்கும் மிருத்யுவை நாசஞ் செய்யக்கூடியதும் எல்லாச் சித்திகளையும் கொடுக்கக் கூடியதும் மங்களகரமானதும் தொன்று தொட்டு ஆன்றோரால் உபாசிக்கப்பட்டதுமான ம்ருத்யுஞ்சய மந்திரத்தை அனுஷ்டித்தார் அந்த மந்திரம்.
ஓம் நமஸ்தே தேவேசாய ஸுராஸுர நமஸ்க்ருதாய பூதபவ்யமஹாதேவாய நம
ஓம் ஹரிபிங்களலோசனாய பலாய புத்திரூபிணே நம
ஓம் வையாக்ரவஸ நச்சதாய அரணேயாய நம
ஓம் த்ரை லோக்யப்ரபவே நம
ஓம் ஈசுவராயநம
ஓம் ஹராய ஹரித நேத்ராய நம
ஓம் யுகாந்தகரணாய நம
ஓம் அநலாய நம
ஓம் கணேசாய லோகம் பவே நம
ஓம் லோக பாலாய் நம 10
ஓம் மஹாபுஜாய மஹா ஹஸ்தாய நம
ஓம் சூலினே நம
ஓம் மஹாதம்ஷ்ட்ரிணே நம
ஓம் மஹேசுவராய காலாயநம
ஓம் காலரூபிணே நம
ஓம் நீலக்ரீவாய நம
ஓம் மஹாத்ராய கணாத்யக்ஷõய நம
ஓம் ஸர்வாத்மநே நம
ஓம் ஸர்வ பாவனாய நம
ஓம் ஸர்வகாய ம்ருத்யவே நம 20
ஓம் ம்ருத்யுதூதாய பாரியாத்ரஸுவ்ரதாய ப்ரஹ்மசாரிணே நம
ஓம் வேதாந்தகாய நம
ஓம் பசுபதயே நம
ஓம் அவ்யயாய நம
ஓம் சூலபாணிகனே நம
ஓம் வருஷ கேதவே நம
ஓம் ஹரயே நம
ஓம் ஜடினே நம
ஓம் முண்டினே நம
ஓம் கண்டினே நம 30
ஓம் லகுடினே நம
ஓம் மஹயஸெ நம
ஓம் பூதேசுவராய நம
ஓம் குஹாவாஸிநே நம
ஓம் வீணா பணவதூணவதே அமராய நம
ஓம் தாநீயாய பாலஸுர்ய நிபாய ஸ்மானசாரிணே பகவதே நம
ஓம் உமாபதயே நம
ஓம் அரிந்தமாய நம
ஓம் பகஸ்யாக்ஷி பாதினே நம
ஓம் பூஷ்ணோதன நம 40
ஓம் நானாய நம
ஓம் க்ரூரகர்த்ரே நம
ஓம் பாஹஸ்தாய நம
ஓம் பரளயகாலாய நம
ஓம் உலகாமுகாய நம
ஓம் அக்னிகேதவே முனயே நம
ஓம் தீப்தாய நம
ஓம் விரம்பதயே உன்மாதாய லேபனகாய நம
ஓம் சதுர்தகாய நம
ஓம் அரிந்தமாய நம 50
ஓம் பகஸ்யாக்ஷி பாதினே நம
ஓம் பூஷ்ணோதன நம
ஓம் நானாய நம
ஓம் க்ரூரகர்த்ரே நம
ஓம் பாஹஸ்தாய நம
ஓம் பரளயகாலாய நம
ஓம் உலகாமுகாய நம
ஓம் அக்னிகேதவே முனியே நம
ஓம் தீப்தாய நம
ஓம் விரம்தயே நம 60
ஓம் உன்மாதாய லேபனகாய சதுர்தகாய நம
ஓம் லோக ஸத்தமாய நம
ஓம் வாமனாய நம
ஓம் வாமதேவாய வாக்தாக்ஷியாய நம
ஓம் வாமதோபிக்ஷவே நம
ஓம் பிக்ஷரூபிணே நம
ஓம் ஜடினே நம
ஓம் ஸ்வயம் ஜடிலாய க்ரஹ ஸ்தப்ரதிஷ்டம்பகாய வஸுநாம்ஸ் தம்பகாய நம
ஓம் ருதவே நம
ஓம் ருதுகாரகாய நம 70
ஓம் காலாய மேதாவினே நம
ஓம் நித்ய மாரம பூஜிதாய நம
ஓம் ஜகத்தாத்ரே நம
ஓம் ஜகத்கர்த்ரே புருஷாய சாசுவதாய நம
ஓம் த்ருவாய நம
ஓம் தர்மாத்யக்ஷõய நம
ஓம் த்ரிவர்தமனே பூதபாவனாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் பஹுரூபாய நம
ஓம் ஸுர்யாயுதஸ மப்ரபாய நம 80
ஓம் தேவாய தேவாதி தேவாய நம
ஓம் சந்த்ராங்கித ஜடாய நர்த்தகாய நம
ஓம் லாஸகாய நம
ஓம் பூர்ணேந்துஸத்ருனானாய ப்ரஹ்மண்யாய நம
ஓம் ரண்யாய நம
ஓம் ஸர்வ தேவமயாய நம
ஓம் ஸர்வ தூர்யநிநாதினே! ஸர்வபந்த மோசனாய நம
ஓம் பந்தனாய நம
ஓம் ஸர்ப்பதாரிணே நம
ஓம் தர்மோத்தமாய நம 90
ஓம் புஷ்பதந்தாய பிங்களாய நம
ஓம் முக்யாய நம
ஓம் ஸர்வஹராய நம
ஓம் ஹிரண்யகசிரவனே நம
ஓம் த்யாரிணே நம
ஓம் ஸ்ரீமயாய நம
ஓம் பீமபராக்ரமாய நம
ஓம் நமோநம 98
இவ்வகைய சிவநாமஸ்வரூபமான ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஜபித்து; சிவபெருமானது லிங்கக்குறி வழியாக சுக்கில ரூபமாகப் புறம்பே வந்தவரும்; நாசமற்றவரும் மகா சம்பத்துடைய வரும்; மூவாயிர வருஷங்கள் சிவபெருமானது கர்ப்பத்திலிருந்து வேத நிதியுமான சுக்கிரமுனி ஸ்ரீ பார்வதி தேவிக்குப் புத்திர ராகப் பரமேசுவரரால் படைக்கப்பட்டாற்போலப் பிறந்தார். இதுநிற்க: சூலாயுதத்தின் முனையிற்கிடந்தும் தன் தைரியத்தை விடாது தொங்கிக்கிடந்தான் அந்தகாசுரன்.
மஹா தேவம்: விருபாக்ஷம் சந்திரார்த்தக்ருத கேரம்: அம்ருதம்; சாசுவதம்; ஸ்தாணும்; நீலகண்டம்; பிநாகினம் வ்ருஷபாக்ஷம்; மஹாஜ்ஞேயம்; புருஷம்; ஸர்வகாமதம்; காமாரியம்; மஹாஜ்ஞேயம்; புருஷம்; ஸர்வகாமதம்; காமாரியம்; காமதஹநம்; காமரூபம்; கப்ர்த்திநம்; விரூபம்; கிரி ஸ்ரீமம் சிரக்விணம்; ரக்தவாஸஸம்; யோகிநம்; காலதஹநம்; த்ரிபுரக்நம்; கபாலிநம்; கூடவ்ரதம்; குப்தமந்தரம்; கம்பீரம்; பாவகோசரம்; அணி மாதிகுணாதாரம்; த்ரிலோகைசுவரிய தாயகம்; வீரம்; வீரஹணம்; கோரம்; விரூபம்; மாம்ஸலம் படும் மஹாமாம்ஸம் வஸோந்மத்தம் பைரவம்; பரமேசுவரம்; தரைலோக்ய டாமரம்; லுப்தம் லுப்தகம், யஞ்ஞஸுதநம், க்ருத்திகா நாம் ஸுதேரக்தம், உன்மத்தம் க்ருத்திவாஸஸம் கஜக்குரத்தி பரீதரகம், க்ஷúப்தம், புஜக பூஷணம், தத்தாலம்பம் சபேதாளம், கோரகோஷம் வநஸ்பதிம், பஸ்மாங்கம், ஜடிலம் சுத்தம், போண்டதஸே விதம், பூதேசுவரம், பூதநாதம், பஞ்சபூதாசிரிதம், ககம், க்ரோகிதம், நிஷ்குரம், சண்டம், சண்டீசம், சண்டிகாப்ரியம் சண்டதுண்டம், க்ருத்மந்தம், நிஸ்த்ரிம், சம், சம்போஜனம், லேலிஹாநம், மஹாரௌத்ரம், பத்யும் ருச்யோரம், கோசரம், ம்ருத்யோர் ம்ருத்யும், மஹசேநம், ஸ்மசாநாரண்ய வாசிநம் ராகம், விரேகம், ராகந்தம், வீதராகம். சதார்சிஷம், ஸத்வம், ரஜஸ்தமோ, தர்மம், அதர்மம், வாஸராநுஜம் ஸத்யம், அஸத்யம், ஸ்த்ரூபம், அஸத்ரூபம், அஹேதுகம், அர்த்தநாரீசுவரம் பாநும், பாநுகோடி, சதப்பிரபம், யஜ்ஞம், யக்ஞபதிம், ருத்ரம், ஈஸாநம், வரதம், சிவம், மஹாதேவம் என்று அஷ்டோத்தர சதநாமங்களையும் நூற்றெட்டு மூர்த்திகளாகத் தியானித்துக் கொண்டிருந்தார்.
சிவபெருமான் இத்தோத்திரத்தால் களிப்புற்றார் சூலத்தின் முனையில் குத்தி வைத்துக் கொண்டிருந்த அந்தகாசுரனை அச்சூலத்தினின்று நிலத்தில் இறக்கினார். அவனுக்கு உபதேசகரமாக தன் மொழிகளைச் சொல்லி அவனுடலைக் கையால் தொட்டு அந்தகனே! உனக்குண்டாகிய இந்திரிய நிக்கிரக(தபம்) த்தால் என்னையே இதுகாறும் தியானித்தாலும் சவுரிய தைரியாதி சம்பத்துக்களாலும், பல காலமாகப் பல ரூபமாக என்னையே துதித்தமையாலும் நான் உன் விஷயத்தில் பெருங்களிப்படைந்தேன். நீயும் இதுகாறுங் மதியீனத்தாற் செய்த பாவங்களை எல்லாம் விலகினவனாகுக. நல்ல விரதஞ் செய்தவனே. நீ விரும்பிய வரத்தைகேள். நானும் உன் விஷயத்தில் தடையின்றி வரங்கொடுப்பேன். நீயும் வரமேற்கத்தக்க பாத்திரவானாக இருக்கிறாய்! உயர் பதவியை இப்பொழுதே விரும்புக. மூவாயிர வருஷங்கட்குப் பின்னர் மோக்ஷம் உண்டாகும் என்றார்.
அந்தகன் அசக்தனாக இருந்தமையால் கைகால்களை நிலத்தில் ஊன்றிக் கொண்டெழுந்து உடல் நடுங்கிக் கைகுவித்து நின்று உமாபதியாகிய சிவபெருமானைப் பலவாறாகவும் துதித்து, பகவானே! மகா நீசனாயிருந்த நான் போர்களத்தில் செய்த துஷ்டச் செயல்களைப் பொறுத்தருள வேண்டும். காமதோஷத்தால் அடியேன் அறியாமையுற்று உலகமாதாவாகிய மகாதேவி விஷயத்தில் செய்த பெரிய அபராதத்தையும் மனம் பொறுத்தருள வேண்டும். உலகத்தில் கஷ்டத்தால் துக்க முற்றவன் விஷயத்தில் தயை செய்வது வழக்கம் அதிலும் பக்தி செய்து வரும் அடியார்களுக்கு விசேஷமாகச் செய்வது வழக்கம். ஆதலில் நான் பெருங்கஷ்ட மனுபவித்தவன். தங்களைத்தவிர எனக்கு வேறொருவருங்கதியிலர். தீனபாவமடைந்தவனாகவும், பக்தியுடையவனாகவும் உம் திருவருளின் மகிமையாலேயே இருக்கிறேன். தேவரீருக்கு நமஸ்காரம்! ஜகந் மாதாவாகிய பார்வதி தேவியாரும் நான் செய்த அபராதங்களை மன்னித்துச் சிறிதுங் குரோதமின்றித் தயை வைத்து அம்மகா தேவியாருடைய அடிமையாகிய என்னைப் புத்திர பாவத்துடன் பார்க்கவேண்டும். குரோதமூர்க்காதி குணங்களையுடைய நான் எங்கே? சந்திரசேகர பரமதயாளூவாய் லோகநாயகரான தாங்கள் எங்கே? காமாதி துர்க்குணங்களோடு கூடிய சாமானியனாகிய யானெங்கே மகாபலசாலியாகிய தங்கள் சேனாநாயகனாகிய நந்தி பகவானெங்கே? தங்கள் புதல்வராகிய நந்திதேவரும் அவரது கோபமொழிந்து தன் சேவகனாக என்னைக்கருணையோடு பார்க்கவேண்டுகிறேன்! என்று சொல்லி, பார்வதி தேவியாரைப் பார்த்து ஓ ஜகந்மாதா! இதுவரையில் நான் அநேக அபசாரங்கள் செய்திருப்பினும் நாணமின்றி வேண்டிக் கொள்கிறேன் தங்களுக்கு நந்திதேவர் எப்படி கணாதிபதியாய் இருக்கிறாரோ அது போலவே நானும் அவருக்குச் சமானனாக இருக்க வேண்டும். மகா கவுரவமான புத்தியோடு தங்களைத் தாயாகக் கருதியிருக்கவும் சிவபெருமானையும் தங்களையும் நாடோறும் போற்றிப் பணிசெய்யவும், தேவர்களுடன் விரோதமின்றி ஒத்திருக்கவும், ஞானவானாகவும், சிவகணங்களில் ஒருவனாகவும், மீண்டும் எக்காலத்திலும் ராக்ஷஸப் பிறவியை அடையாமலும் இருக்க அனுக்கிரகிக்க வேண்டும்! என்று விண்ணப்பஞ் செய்து கொண்டு, திரிலோசனனாகிய பரமேசுவரனையும் ஜகந்மாதாவாகிய பார்வதிதேவியாரையும், சாஷ்டாங்கமாகப் பணிந்து கைகட்டி நின்றான்.
சிவபெருமான் மகிழ்ச்சியில் புன்னகை செய்து அந்தகனைப் பார்த்து அந்தகன் பிறந்ததையும் அவன் வலிமை பெற்றதையும், அவன் செய்கைகளையும் சிந்தித்து. அந்தகன் நம்மிடத்திலேயே ஜனித்தவன்னறோ? அவன் அவ்வரங்களைப் பெறுக என்று அனுக்கிரத்தார். அதனால் அவன் அப்பொழுதே அவ்வண்ணமாயினான், அந்தகன் காணாபத்தியமடைந்து தனக்கு மாதாபிதாக்களாகிய பார்வதியையும் பரமசிவனையும் சாஷ்டாங்கமாகப் பணிந்து கிருத கிருத்தியனாயினான்; இத்தகைய குமாரனைப் பார்வதி பரமேசுவரர் இருவரும் மூர்த்தா க்ரஹணஞ் செய்து சந்தோஷித்திருந்தனர். சவுனகாதி முனிவர்களே! அந்தகாசுரனது சரிதத்தையும். ம்ருத்யுவை நாசஞ்செய்யும், ம்ருத்யுஞ்சய மந்திரத்தையும் பக்தியோடு படனஞ்செய்தவர்கட்கு எல்லாக் கோரிக்கைகளும் கைகூடும்! என்று சூத முனிவர் கூறியருளினார்.
6. குருவின் மோகாந்தகாரக் கதை
நைமிசாரணிய வாசிகள் சூத முனிவரை நோக்கி மகாத்மாவே! தாங்கள் கூறிய விஷயங்களால் பெருங்களிப்படைந்தோம்! ஆயினும் மகா பதிவிரதையாகவும் உலகங்கட்கெல்லாம் தாயாகவும் சத்தியமே விரதமாகியும்; தவசொரூபியாகவும் ஆத்மரக்ஷணஞ் செய்துகொள்ள அசக்தியாகவுமிருக்கும் பார்வதிதேவியைச் சிவபெருமான் எவ்வாறு ரக்ஷித்தார்? பார்வதிதேவியின் உக்கிரப் பிரபாவம் எத்தகையது? அதையும் தாங்கள் வியாச பகவானிடம் கேள்வியுற்றவிதமாகவே கூற வேண்டும்! என்று கேட்கவே சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார்.
மாதவர்களே! எந்தக் காரணத்தால் எந்தக் காலத்தில் எந்த வகையாகத் தனக்கு இதமானதும் இதமற்றதுமாகவுள்ள நல்வினை தீவினைகளை எவன் செய்கிறானோ அவன் அந்தக் காரணத்தால் அந்தக் காலத்தில் அந்தவகையாக அவ்வக்காலம் வரையில் தெய்வ வசத்தால் அந்தக் கர்மபலனை அனுபவிக்கிறான் மனோஹரமான உருவமும் ஸ்தன கர்மபலனை அனுபவிக்கிறான் மனோஹரமான உருவமும் ஸ்தனபாரங்களால் முறியும் இடையும், காந்தி பொருந்திய உடலும், பிடியானையை யொத்த நடையும்; முழுநிலா போன்ற முகமும் வாய்ந்த லோகமாதாவான தாக்ஷõயணி தேவியைப் பொதியமலையில் ஒரு காலத்தில் ருரு என்னும் அசுரன் கண்டான். உடனே அவன் மதிமயங்கி மன்மத பாணங்கள் இதயத்தை ஊடுருவ மோக வசப்பட்டான். அதனால் அவன் தன் தாபம் தீரத்தவம் செய்ய நிச்சயித்தான் அதற்காகப் பல கோடி வருஷங்கள் சூரிய கிரணங்களால் தகிக்கப்பட்ட தேகமுடையவன் போன்றவனாகி ஆகார தேகாபி மானங்கள் நீக்கி, நிச்சலமான தபசு செய்து கொண்டிருந்தான். அப்போது தாமரைமலர் போன்ற தேக காந்தியுடைய பிரம தேவர் பிரசன்னமாகி, ஓ அசுரேசா! யாது கருதி இவ்வகைய கொடூரமான கடுந்தவஞ் செய்கிறாய்? அதைச் சொல்! என்று கேட்டார். அதனால் ருரு தியான யோகத்தால் அரைக்கண் மூடிக்கொண்டிருப்பவனாயிருந்து சதுர்முகப் பிதாவே! பேரழகியாயிருக்கும் தாக்ஷõயணி எனக்கு மனைவியாக வேண்டும் சிவபெருமான் என்னிடத்தில் விருப்பமுடையவராய் இருக்கவேண்டும்! மாதர்களின் காரணமாக எனக்கு மரணம் வராமலும் மங்கைப் பருவப் பெண்கள் அநேகர் எனக்கு ஆசை நாயகிகளாகவும் வேண்டும்! என்னைப் பகைத்தவர்கள் மகாதைரிய காம்பீரியவான்களாயிருந்தாலும் சாமானியர்களாய், எதிர்க்கும் சக்தியின்றிப் பலஹீனர்களாக வேண்டும்! இந்த வரங்கள் தான் எனக்கு வேண்டும் என்று கேட்டான்.
பிரமதேவர் புன்சிரிப்புடன் நீ விரும்பிய வரங்கள் திரிலோகங்களிலேயும் கிடைத்தற்கு அசாத்தியமானவை. இவற்றிற்சில பெருங்கஷ்டத்துடன் கிடைப்பினுங் கிடைக்கலாம். ஆயினும் உலக மாதாவாகிய தாக்ஷõயணி முக்காலங்களிலும் உனக்கு நாயகியாகக் கிடைப்பாள் என்பது நடக்கவே நடக்காது! அடா துர்ப்புத்தி! சிவபெருமானும் உனக்கு அடங்கியிருக்கப் போகிறதும் இல்லை. தாக்ஷõயணியாகிய பார்வதி உனக்கு மனைவியாகும் பக்ஷத்தில் சர்வேஸ்வரவாகிய சிவபெருமான் வேறொரு ஸ்தீரியைத் தேடிக்கொள்ள வேண்டும். அப்பெருமானே அம்மகா தேவியை மனைவியாகக் கொண்டமையால் அத்தேவிக்குச் சுகோதய நிமித்தமாகத் தம் விரிசடையில் கங்கையையும் சந்திரனையும் அணிந்து கொண்டு; அவ்வம்மைக்கு உபசாரஞ் செய்யும் பொருட்டு அநேக மாதர்கள் ஏற்படுத்தி இருக்கிறார். இத்தகைய பெருமாட்டி உனக்குச் சாத்தியமானவள் அல்ல! நீ அதி அழகான தேவ பிராணனைக் காத்துக்கொள் நான் கூறிய வார்த்தைகள் உனக்கு இதமாகக் காணப்படாவிட்டால் நீயே அம்மகாதேவியிடம் நேரில் சென்று துதித்து உன் விருப்பத்தை விண்ணப்பித்துக்கொள் அப்பொழுதே காள ராத்திரியான தாக்ஷõயணியும் திரிபுராரியான சிவபெருமானும் உன்னைச் சங்கரித்து விடுவார்கள்! என்று கூறி அந்தர்த்தானமானார்.
ருரு உடனே மலயாசலத்திற்குச் சென்று பரமசிவனை நோக்கி கடுந்தவஞ்செய்தான். ருருவின் தவத்தின் விசேடத்தால் தோன்றிய அக்கினியானது அந்தப் பர்வதம் முழுவதையும் தகிக்க ஆரம்பித்தது. சிவபெருமான் தாக்ஷõணியை அழைத்துக் கொண்டு அவனது தபோக்னிக்குப் பயந்தாற்போல வேறு இடத்திற்குச் செல்ல முயன்றார். அப்போது பார்வதிதேவி, சுவாமீ! என்ன காரணமாக இப்பொழுது இவ்விடம் விட்டுச் செல்கிறீர்கள்? லோகநாயகரான தங்களால் இவ்வக்கினியை அடக்கமுடியாதா? அவ்வாறு அடக்கிவிட்டால் வேறு இடத்திற்குச் செல்வானேன்? இதன் உண்மையைச் சொல்லுங்கள்! என்று கேட்டாள். அதற்கு சிவபெருமான் ஓ பிரிய நாயகி! ருரு என்னும் அசுரன் உன்னை மனைவியாக அடையக் கருதி உக்கிரமான தவம்செய்கிறான் அவன் தவத்தாலெழுந்த தபோக்கினி திரிலோகங்களையும் கொளுத்துகிறது நான் அதை நிவாரணஞ் செய்து திரிலோகத்துதிலுமுள்ள சராசரங்களையும் காத்து ஆத்மரக்ஷணஞ் செய்து கொள்ளலாம் என்மீது கோபம் கொள்ள வேண்டாம். நீ வேற்றுருவெடுத்து அவனிடஞ் சென்று அவன் தவத்தையழிக்க வேண்டும்! என்று கூறினார்.
பார்வதிதேவி அதைக்கேட்டு முதலில் அச்சமுற்று உடனே ஆத்திரமும் தைரியமும் கொண்டு பெருங்கோபத்துடன் பொதிய மலையின் வனத்திற்குச் சென்றாள். அங்கு தேவி ஒரு யானை மத்தகத்தைக் கை முஷ்டியால் உடைத்து அதன் தோலை உரித்து அதன் சருமத்தைப் போர்த்திக் கொண்டாள். பல யானைகளைக் கொன்று புசித்து உடல் முழுதுந் தடவிச் சிவக்கச் செய்து கொண்டாள். பெருவயிற்றுடன் விகாரரூபம் எடுத்து அண்டமுகடு பிளவுறத்தக்க அநேக ஹுங் காரஞ் செய்து கொண்டு அவ்வசுரனிருக்கும் குகையையணுகினாள். தன் பாதங்களாலுங்கை முஷ்டிகளாலும் அக்குகையை அடைத்திருந்த கதவை உடைத்து, ஹ ஹ ஹ ஹ என்று அட்டகாசமாகச் சிரித்து, பிரளயகால மேக கோஷம் போலக் கர்ச்சித்தாள். பிறகு அரைக்கண் பார்வையிலிருக்கும் அவ்வசுரனை தேவி பார்த்து இதோ நீ கோரியிருந்த தாக்ஷõயணியாகிய நான் வந்திருக்கிறேன். என்னை என்ன செய்யப் போகிறாய்? இதற்காக ஏன் இன்னுங் கஷ்டமான தவஞ்செய்கிறாய்! உன் மனத்திலுள்ள கோரிக்கைகளைச் சொல் நீ தவம் செய்து அனுபவிக்கக் கருதிய கோரிக்கைகளை இப்பொழுதே சுலபமாக அனுபவிக்கலாம்! என்று சொன்னாள். கோரைப் பல்லோடு கூடிய மகா பயங்கர சுரூபமுடைய தாக்ஷõயணியைப் பார்த்து ருரு அசுரன் பயந்து உடல் நடுநடுங்கி நிலத்தில் விழுந்தான். பிறகு அவன் மீண்டுந் தைரியத்துடன் எழுந்து, நீ தாக்ஷõயணியன்று! உண்மையைச் சொல் காளராத்திரியே! தாக்ஷõயணியோ மிக மனோரம்மியமான தேகமும், முழுநிலாப்போன்ற முகமும், பேரழகும் இளமையின் பூரிப்பான ஸ்தன பாரங்களும் வாய்ந்திருப்பவள். நீயோ கோரரூபி! நீ பார்வதியில்லை நானே என் தபோக்னியால் மூன்று உலகங்களையும் சுட்டெரித்து விடுவேன். நீ எங்கிருந்தாலும் எரிந்து போவாய்! விரைவில் உயிர் பிழைத்தோடிப் போய்விடு, அப்படி நீ போகாவிட்டால் இப்பொழுதே உன்னை யமபுரத்திற்கு அனுப்பிவிடுவேன் என்று கூறிக் கதாயுதத்தால் பார்வதிதேவியையடித்தான். அதனால் பார்வதிதேவி கடுங்கோபங் கொண்டு தன்கை முஷ்டியால் அவ்வசுரனை அடித்தாள். ருரு ஆத்திரம் கொண்டுயுத்தம் புரிய முனைந்து அஸ்திர சஸ்திரங்களால் காளராத்திரி தேவியை, அடிக்கலானான் மாதேவி மலைப் பாறைகளாலும் மாபெரும் மரங்களாலும் அநேகவிதமான ஜலாக்னி வருஷங்களாலும், விஷ சர்ப்பங்களாலும், தந்தங்களாலும் நகங்களாலும் அவனைத் தாக்கினாள். குரூரனாகிய ருருவேதன் உடலிலிருந்து சிந்தும் உதிரத்துளிகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு ருரு வடிவமாக உருவாக்கி பேருருவு உடையோரும் இளைத்தவுடலுடையோரும், கோரரூபமுடையயோரும் விகார ரூபமுடையோரும் இணையற்ற வலிமையுடையோருமாகப்பலரை மாயையால் காட்டினான்.
எண்ணிறந்த ருரு வடிவேற்ற ராக்ஷஸத் தொகுதியை மகாதேவி பார்த்து தன் நிஜயோகத்தால் அபாரமான சத்துருசேனையைப் பக்ஷிக்கத்தக்க வலிமையுடைய மகாவிகுர்த கோரரூபமுடைய சண்டிகா சைனியத்தைச் சிருஷ்டித்தாள். அச்சண்டிகாகணம் ராக்ஷஸத் தொகுதியைக் கொன்று அவர்கள் உதிரத்தை ஒரு துளிக்கூடக் கீழே விழாமற் பருகி பிரமத்தனாக இருக்கும் ருருவின் மாயையையும் அழித்தார்கள். பார்வதிதேவியும் அவ்வசுர இரத்தத்தை அருந்தி கோரரூபத்துடன் எண்ணிறந்த புயங்களோடு எஞ்சி நின்ற மாயையையும் விலக்கினாள். மீண்டும் அற்புதக் கணக்கான மாயைகள் படைத்த ருருவுடன் போர் புரிந்தாள். அதனால் ருரு பெருங் கோபங்கொண்டு பார்வதியைப் பிரமிக்கச் செய்ய வேண்டுமென்னுங் கருத்துடன் வாயுவேகமாய்த் திரிலோகங்களிலும் திரிந்து க்ஷணநேரத்தில் சுவர்க்கலோகத்தை அடைந்தான். ஆனால் அடுத்த க்ஷணமே பாதலலோகத்தை அடைந்து அங்கு மிங்கும் போவதும் வருவதுமாகத் திரிந்து ஒருவருக்கும் தெரியாமல் விரைந்து சென்று கொண்டிருந்தான். தேவி ஸ்தூலகாரமாய்ச் சிறிது நின்று பிரளயகால சூரியர் போன்ற அதியாச்சரியமும் பராக்கிரமமும் கணக்கிட்டு சொல்ல முடியாத ஒரு விசுவரூபம் எடுத்து நின்றாள். இந்தச் சண்டிகா நாயகியின் உருவம் இவ்வளவு பிரமாண மிருந்ததெனக் கூறச் சதுர்முகப் பிரமனுக்கும் சாத்தியப்படாது. இதுவரையில் இருந்தவர்களிலாவது, இப்பொழுதிருப்பவர்களிலாவது, இனிப் பிறப்பவர்களிலாவது ஒருவருக்கும் சாத்தியப்படாது, இந்தப் பிரமாண்ட விசுவரூபமான ஒரு சுவல்பவஸ்துவாயிருந்து, பிரளய கால ருத்திரனும், சிருஷ்டியாதிபஞ்சகிருத்தியத் தலைவர்களாகிய பிரமவிஷ்ணு ருத்திர மகேஸ்வராதிகளும் அவ்வுருவத்தின் முன் அணுவளவாகத் தோன்றினார்கள். இவ்வண்ணமாக ஜகதீசுவரியான பார்வதிதேவி விசுவரூங் கொண்டிருக்கையில் ருரு அசுரன் காலெடுத்து வைக்கவும் இடமற்றவனாய் அப்பொழுதும் தன் மூடத்தனத்தால் தன் பராக்கிரமத்தைக் காட்டக் கருதிப் பாய்ந்தான். மகாதேவி அவன் கைகளைப்படித்து வஜ்ராயுதம் போல் பிரகாசிக்கும் தமது கை நகத்தால் அவன் சிரசைக் கிள்ளி எறிந்து அவன் தோலையுரித்துத் தனது உடலின்மேல் போர்த்திக் கொண்ட ருருவின் உடலைக் கை முஷ்டிகளால் குத்தி அதினின்று கொப்புளித்துக் கொண்டு புறப்பட்ட இரத்தத்தை வாய் வைத்துப் பருகி, அவனது மாமிசத்தையும் புசித்துக் களிப்புற்றாள். ருருவின் தலையை மாமிசம் நீக்கிக் கபால ஓடாக்கிக் கரத்திற்றாங்கினாள். அநேக பிரமத கணங்கள் புடைசூழ ஷட்குணை சுவரிய சம்பன்னனாக விளங்கும் சிவபெருமான் இருக்குமிடத்திற்கு தேவி சென்றாள். கபாலமாலிகாபரணராகிய சிவபெருமான் பார்வதிதேவியைக் கண்டு மனங்களித்தார். தேவிக்கு அநேகவித உபசார வார்த்தைகள் கூறினார். தேவியின் கரத்தில் ஏந்தியிருக்கும் ருருவின் மண்டையோட்டைப் பார்த்தார் அதில் அம்மகாதேவி பானஞ்செய்து மிகுந்ததில் சிறிது தானும் பானஞ் செய்ய விரும்பினார். உமாதேவி அதைக்கொடுக்க சிவபெருமான் சிவபெருமான் வாங்கி இரத்த பானஞ் செய்தார். யானைத்தோலும் சிங்கத்தோலும் ருருவின் தோலுமணிந்துகொண்டு அவ்வசுரனின் உதிரத்தால் நனைந்து விளங்கும் உமாதேவியின் தேகத்தை, சிவபெருமான் தன் தேகத்தோடணைத்துக் கொண்டார் அத்தோற்றமானது பலாசக்காடு பூத்துள்ள இமாசலத்தையொத்திருந்தது. பின்னர் உமாதேவி விநோதார்த்தமாக சிங்கத்தோலையும், பெரிய யானைத் தோலையும் சந்தோஷபூர்வமாகச் சிவபெருமானுக்குக் கொடுத்தாள் சிவபெருமான். அந்த இரு சருமங்களையும் பெற்று, சிங்கத்தோலை இடையில் கட்டி விசாலமான யானைத்தோலை உடல் முழுதும் போர்த்துக் கொண்டார். பார்வதி தேவி தன் சத்துருவான ருருவின் சருமத்தைத் தரித்துக்கொண்டு சந்தோஷத்துடன் தன் தோழிமாரோடிருந்தாள்.
இவ்வாறிருக்கையில் அநேக சுராசுரர்கள், மகரிஷிகள், கின்னரர்; கிம்புருடர்; பிரமன்; திருமால் முதலிய யாவரும் தேவியிடம் வந்து; லோக ஸம்ரக்ஷண நிமித்தமாக ருரு என்னும் அசுரனைச் சங்கரித்து இத்தகைய சண்டிகாரூபத்தைத் தரித்தீர்கள், பயங்கரமான இவ்வுருவத்தைத் தாங்கள் இனி நீக்க வேண்டும்; சரத்கால சந்திரன் போன்ற காந்தியோடு விளங்க வேண்டும்! என்று பலவாறு பிரார்த்தித்துப் பூஜித்தார்கள். அதனால் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் திவ்ய சுந்தர வடிவம் தாங்கி மகிழ்ந்தார்கள்.
7. அப்சர கன்னிகளின் சோதனையும் உஷையின் சாதனையும்
நைமிசாரண்ய வாசிகளாகிய சவுனகர் முதலான முனிவர்கள் சூத புராணிகருக்கு நமஸ்காரம் செய்து; சுவாமி! சிவசக்தி ஸ்வரூபமாக இருக்கும் இப்பிரபஞ்சத்திற்குக் காரண பூதமாக உள்ளவர் சிவபெருமானோ? சக்தி தேவியா? குணச்சிறப்புகளால் இவ்விருவரில் சிறந்தவர் யார்? இவ்விஷயம் எங்களுக்குச் சந்தேகமாக இருத்தலின் இச்சந்தேகத்தை விளக்கியருள வேண்டும்! என்று பிரார்த்திக்கவே சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார். தவசீலர்களே! உலகத்தில் பெண்கள் சிறப்புடையவர்கள் அவர்களுக்குக் குணதோஷங்கள் அதிகம். அவர்களே மாயாஸ்வரூபிகள் இதில் ஓர் இரகசியம் உண்டு அது என்னவென்று விளக்குகிறேன். உலகத்திலுள்ள இப்பெண்கள் ஆண்கள், பசு, பறவை முதலான எல்லாப் பிராணிகளுக்கும் எழுபத்தீராயிரம் நாடிகள் இருக்கின்றன. இந்நாடிகளைத் தவிரப் பெண்களுக்கு மட்டும் ஜகன்யா என்னும் ஒரு நாடி விசேஷமாக உள்ளது. கர்ப்ப தாரணத்திற்கு அந்த நாடியே யோக்கியமானது. அந்நாடியிருப்பதால் குணதோஷங்களால் அதிகப்பட்டவளான பெண்ணை ஆடவன் மாயை வசப்பட்டு மோகிக்கிறான் ஸ்திரீ பாவத்தாலாவது புருஷ பாவத்தாலாவது இருவரும் கூடி மகிழ; பெண் குழந்தையாவது ஆண் குழந்தையாவது பிறக்கிறது. இத்தகைய விசேஷ நாடி வாய்க்கப் பெற்றிருக்கும் பெண் எப்பொழுதும் ஆடவனைத் தன் மாயையால் வசியம் செய்து கொள்கிறாள். அதனால் தான் பெண்களே உலகத்தில் சிறந்தவர்களாவார்கள். ஸ்திரீகளே மாயாசக்தியாற் சிறந்தவர்கள் என்பதற்கு புண்ணிய கரமும் செவிக்கினிமையாயுமான புராதனக் கதை ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்.
பூர்வத்தில் பாணாசுரனது சோணிதபுரியை அடுத்த நதி தீரத்தில் சர்வேஸ்வரனான சிவபெருமான் தேவாசுரர்களோடுங் கூடி விநோதார்த்தமாக எழுந்தருளியிருந்தார். அப்சரசுகள் நடனமாடினார்கள். கந்தருவர்கள் கானம் இசைத்தார்கள். முனிவர்கள் பெருமானைப் பணிந்தும் பூஜித்தும் துதித்தும் இருந்தார்கள். எல்லாப் பிரமதகணங்களும் சேவித்துக் கொண்டிருந்தார்கள். மகரிஷிகள் ஹோமம் செய்தார்கள், சித்தர்கள் தமது மனதை சிவபிரானிடத்து நிறுத்தி வைத்தார்கள். ஈஸ்வரனே இல்லை என்று குதர்ககவாதம் செய்யும் நாஸ்திகர் சிவபெருமானைக் கண்டவுடனே சூரியனைக்கண்ட இருள்போலத் தம் அஞ்ஞான மொழிந்து ஆஸ்திகமதப்பிரவேசமானார்கள் பகைவர் பயந்து ஓடினார்கள் சப்தமாதர்கள் எதிரே நின்றார்கள். உலகத்துக்கு மகா பயங்கரமாயுள்ளவர்கள் சாந்த புத்தியடைந்தார்கள். சிவபக்தர்கள் ஸம்சார சம்பந்தமான தோஷங்கள் ஒழித்தார்கள். அங்கிருந்தை சபையோர் பரமானந்தத்தையடைந்தனர் அச் சபையில் தேவகன்னிகளான அப்சரஸ் முதலியோர் ஆடல் புரிவதைக்கண்டு அங்கிருந்த சித்தர் முதலானோர்கள் ஆனந்தப் பட்டார்கள்! வசந்தாதிருதுக்கள் ஆறும் தத்தம் புஷ்பித்தல் பழுத்தல் முதலிய செயல்களை இயற்றிக் கொண்டிருந்தன. மந்தமாருதம் சுகந்தமான மகரந்தத்தோடு, வீசியது புஷ்பபாரங்களால் வளைந்திருக்கும் விருஷங்களின் மலர்களிலிருந்து வண்டுகள் அவற்றின் தேனையுண்டு மகரந்தப் பொடிகளைப் பூசிக் கொண்டு ஆனந்த ரீங்காரம் செய்து கொண்டிருந்தன. விரக்தர்களும் மனம் மாறி மன்மதாகாரமடையும்படி தேமா மரங்களில் மதுரமான குரலுடன் குயில்கள் கூவின. அப்பொழுது இதன் முன்னரே காமதேவனான மன்மதனை ஜெயித்திருக்கும் சிவபெருமான் பார்வதிதேவியோடிருப்பது உசிதமென்று கருதினார். அவர் வினோதமாக நந்தியை அழைத்து, நீ கைலாயமடைந்து புனிதையாய் மகா அலங்காரத்துடன் விளங்கும் பார்வதியை நான் அழைத்ததாகக் கூறி அழைத்து வா! என்று கட்டளையிட்டார். உடனே நந்திதேவர் சிவாக்கினைப்படியே திருக்கைலாயகிரிக்குச் சென்று பார்வதிதேவியைச் சந்தித்து மகாதேவீ! சிவபெருமான் தங்களைச் சர்வாபரண பூஷிதையாகக் காண விரும்பினார்! என்று கூறினார். பார்வதிதேவியும் அவ்வாறேயாகுகவென்று தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள். உடனே நந்திதேவர் சிவபெருமானிடம் விரைவாக வாயு வேகத்துடன் திரும்பி வந்தார், உமாதேவி அலங்காரம் முடிந்து வரவில்லை. சிவபெருமான் நந்தி! நீ உமையை விரைவில் அழைத்து வருக என்று மீண்டும் அனுப்பவே நந்திதேவர் கைலாயத்தை அடைந்து பார்வதியை நோக்கி, தாயே! அதிசுந்தரமாக அலங்காரம் செய்து கொண்டு விரைந்து வரவேண்டும்மென சிவபெருமான் விரும்புகிறார் என்று கூறினார். பார்வதிதேவி தம் தோழிகள் ஐவரை நந்திதேவருடன் அனுப்பி நான் விரைவில் வருகிறேன் எனக் கூறுங்கள் என்று கட்டளையிட்டனுப்பினாள்.
இந்நிலையில் அச்சபையிலிருந்து அப்சரசுகள் நம்மில் யாருக்குத் தேவதாசிகளில் எல்லாஞ் சிறந்தவளாயிருக்கும் பெருமை யுண்டாகும்? ஸப்த மாதர்களில் யார் கவுரீரூபமுடையவள்? என்றிவ்வண்ணம் யோசித்து கடைசியில் சிவபெருமானையே நாம் கேட்போமெனச் சமீபித்துச் சென்று ஒருத்தியும் வாய் திறந்து கேட்க வல்லமையில்லாமல் மவுனமாக இருந்தார்கள். பின்னர் பாணாசுரன் மந்திரியான குபாண்டன் என்பவனுடைய குமாரத்தியாகிய சித்திரலேகை, நானே கவுரீரூபம் வகித்துச் சிவபெருமானை இவ்விஷயத்தைப் பற்றிக் கேட்கிறேன்! என்று சொன்னாள். பிறகு அப்சரஸ்களை அழைத்து உங்களில் ஒருத்தி நந்தி கேஸ்வர வடிவமும், மற்றவர்கள் பார்வதியின் தோழிகள் வடிவமுமாக உருவெடுக்க வேண்டும்! என்று கூறினாள். அதைக் கேட்டு விஷ்ணுமூர்த்தியின் (ஊரு) தொடையிலிருந்து தோன்றியவளான ஊர்வசி என்னும் தேவகன்னி விஷ்ணு சம்பந்தமான மாயையால் நந்தி தேவரைப் போல் வடிவமெடுத்தாள். க்ருதாசி என்னும் அப்சரஸ் காளி உருவத்தையும், விசுவாசி என்பவள் சண்டிகா உருவத்தையும், பிலம்லோசை என்பவள் சாவித்திரி உருவத்தையும், மேனகை என்பவள் காயத்திரி உருவத்தையும் ஸஹஜந்யா என்பவள் ஜயை வடிவத்தையும், புஞ்ஜகஸ்தலீ என்பவள் விஜயை வடிவத்தையும், க்ரஸ்துதலி என்பவள் விநாயக ரூபத்தையும் வேறு சில அப்சரசுகள் ஸப்த மாதர் வடிவத்தையும் தரித்துக் கொண்டார்கள். அவ்வாறு வடிவேற்றவர்களைக் கண்ட குபாண்டன் புத்திரியாகிய சித்திரலேகை சரி என்று மனதைத் திடஞ்செய்து கொண்டு விஷ்ணு சம்பந்தமான ஆத்மயோகத்தாலடைந்த ஞானத்தால் அதியற்புத அழகுள்ள பார்வதி தேவியின் வடிவமெடுத்தாள். அம்மகா தேவியின் திவ்வியத் திருவுருவம் எப்படியிருந்தது என்பதை வர்ணிப்போம்; செந்தாமரை மலரின் காந்தியும் மேன்மையும் வாய்ந்த பாதங்கள், முறையே உயர்ந்த ரம்மியமான மாந்தளிர் போன்ற விரல்கள் , சந்திரகிரணங்களாற் பிறந்து சந்திரகையை வீசுகிற நகங்கள், எண்டிசையிலும் கல் கல் என்று ஒலிக்கும் நூபுரம், குறுகியுருண்ட பரடு, பொன்மலையாகிய மேருவைப் போன்ற புஷ்டங்கள் மிருதுவாகிய நுண்ணிய ரோம ரேகை, கனத்த வாழைத் தண்டுப் போன்ற தொடை, மதயானையின் கர்ச்சனை போன்ற ஒலியையுடைய மேகலாபரணம் விலையுயர்ந்த பலநிற சித்திரப்பட்டாடை, பாலசந்திர சூரியப் பிரதிமைகளாகிய தலையணிகள், சிறிது நாணமுற்றாற் போன்ற புன்சிரிப்புடன் கூடிய முகம், வச்சிர ரத்தினத்தால் செய்த மேகலையணிந்த உடுக்கை போன்ற இடை, பொன்னாற் செய்தபடியோவென்று சொல்லத்தக்க உந்தி, பொற்றாமரைத்தண்டு, போன்ற பூர்ணமான மூன்று (வயிற்று) ரேகையும், புடமிட்ட பொன் போன்ற வயிறும் ஜாதரூப நிறமுடைய மார்பும், கோடி சந்திரர்களுக்குச் சமானமானதும் முத்தாரங்களின் தேஜஸுடையதும் மிருதுவுமான புயங்கள் மலர் கொய்தலில் மிகவும் பழகிய கைநகங்கள் பிரகாசிக்கும் பலவிதமான விலையுயர்ந்த ஆபரணங்களும் பதக்கங்களும் அணிந்த கழுத்துச் செம்பவளத்துண்டு போன்ற மெல்லிய அதரம்; பாலசந்திரர்கள் வரிசையாக நிற்பது போன்ற பற்களின் வரிசை; செந்தாமைர மலர்மொட்டு போன்ற நிறமுடைய நாக்கு; எள்ளின் மலரையொத்த பொன்னிற நாசியும்; விகாரமற்ற சிறிய நாசிகாரந்திகள் சந்திரமண்டலமும் சாணைக் கல்லும் போன்ற கபோலங்கள்; ஆழமான வள்ளைக்கொடி போன்ற காதுகள்; இரத்தினமயமான பொன்னாற் செய்த குண்டலங்கள்; வெண்மை செம்மை; கருமைகள் கலந்து பிரகாசிக்கும் விழிகள்; மன்மதன் வில்லையொத்த புருவங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும் விழிகளில் சிருங்கார சேஷ்டைகள்; சிறிதே ஆடி அசைந்துப் பிரகாசித்துக் கறுத்த நெற்றி முன் கேசம் அஷ்டமிச் சந்திரன் போன்ற முகம் குங்குமம் முதலிய பரிமள வஸ்துக்களாலாகிய திலகம்; நெற்றிமுன் மயிரிற்கலந்திருக்கும் பொன்மணி பவளங்களால் செய்யப்பட்ட தலைச்சாமான் நவரத்தின கிரீடம்! நவராத்தினமயமான ஜடைநாகம் அதிலணிந்துள்ள மணிகளின் கோகிலசுரம் ஐவகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தல்; மலர்மாலைகளும் உடைத்தாகி ஒவ்வோரணியையுங் கண்டோர் இது விசுவகர்மனாற் சிருஷ்டிக்கப்பட்டது. தானோ வென்று சொல்லத்தக்க சிறந்த அணிமணிகள் இவற்றோடு பார்வதி தேவியின் வடிவமெடுத்து சித்திர லேகை தனக்கேற்ப தன்னுடன் வருவோரெல்லோரும் அழகு வடிவேற்கச் செய்தாள். நந்தி வடிவேற்றிருக்கும் ஊர்வசி தன் கணங்களுடன் கூடி சர்வேஸ்வரனிடம் சென்று சுவாமி! கைலாசகிரியிலிருந்து பார்வதிதேவியை அழைத்துக் கொண்டு வந்தேன் ஸப்த மாதர்களும் சிவகணங்களும் வந்திருக்கிறார்கள்! என்று விண்ணப்பம் செய்தாள்.
சிவபெருமான் எல்லாம் உணர்ந்தவராயினும் அவர்களுக்கேற்பத் தாமும் ஒரு திருவிளையாடல் செய்ய விரும்பினார். அதனால் அவர் பெருங்களிப்புற்றாற் போலப் பீடத்திலிருந்து விரைந்தெழுந்து ஏழடி தூரம் எதிர்சென்று வரவேற்றார். அப்பொழுது அவருடன் பிரமாதி தேவர்களும் தைத்திய தானவராக்ஷஸர்களும், மகரிஷிகளும், சித்தர்களுந் தொடர்ந்து பார்வதி போலக் கபடவேடங் கொண்டிருப்பவள் முன் சென்று பல விதமான தோத்திரங்களால் துதித்து மகிழ்ந்தார்கள். அப்போது சிவபெருமான் பார்வதி வரவேற்று வந்திருக்குஞ் சித்திரலேகையைக் கைலாகு கொடுத்து அழைத்து வந்து நானாவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் சப்பிரகூட மஞ்சத்திலேறி அநேகவிதமாகக் கூடியிருந்தார். கபடவேடமேற்ற ஸப்த மாதர்களில் சிலர் நடனமாடி நடித்தார்கள் சிலர் கானஞ் செய்தார்கள். சிலர் உருத்திர ஜெபஞ் செய்தார்கள். சிலர் விளையாடினார்கள், சிலர் நகைத்திருந்தார்கள். சிலர் இராகங்களை ஆலாபித்துக் கொண்டிருந்தார்கள். கபடவேடப் பார்வதியும் பலவித கானஞ் செய்தாள். யாவுஞ் சிருங்கார ரசகோஷ்டமாக நாட்டிய கானம் முதலியன நடந்து கொண்டிருந்தன இந்த அப்சர ஸ்திரீகள் செய்யும் கபடத்தை உணர்ந்தார் சிவபிரானையன்றிப் பிறரொருவருமிலர் கபடநந்தி முதலாயினோர் சிவார்ச்சனையில் ஆசக்தியுடையவராயிருந்தார்கள். இவ்வாறிருக்கையில் பார்வதிதேவி திருக்கைலாசகிரினின்றுஞ் சர்வாலங்கார பூஷிதையாய், பிருங்கி முனிவர், நந்தி, மகாகாளர்; தண்டீசர், லம்போதரர் முதலிய பிரமதகணங்களால் துதிசெய்யப்பட்டு ஆகாச வழியாகத் தன் நாயகரான சாம்பவமூர்த்தியின் சன்னிதானத்தை வந்தடைந்தாள். அங்கு அவள் விஷயத்தை யுணர்ந்தாள். ஆஹா இது யார்? என்னைப் போலவே ஒரு பார்வதியும் எனது பரிவாரங்களைப் போலவே பரிவாரங்களும், பிரமதகணங்களைப் போலவே கணங்களுமாகக் காணப்படுகிறார்களே? என்று ஆலோசித்திருந்தாள். இதைக் கண்டு கபடவேஷதாரிகள் பயந்தார்கள் அப்பொழுது கண்டவர்கள் இரண்டு பார்வதி தேவிகளுக்கும் இரண்டு ஸப்த மாதர்களுக்கும், நந்த முதலிய கணங்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை, பின்னர் சிவபெருமானின் அருகிலிருக்கும் கபடவேஷப் பார்வதிதேவியைப் பார்த்து மனம் வருந்தி அஞ்சி நின்றாள். அதைக் கண்ட பார்வதி தேவி இது அப்சரஸ்திரீகளின் கபடச் செயலெனச் சிறுநகை செய்தாள் அப்பொழுது அங்கிருந்த கலகலவென்றுச் சிரித்தாரகள் இதைக்கண்டு சந்திரசேகரான சிவபெருமான் மாதர்களின் சமத்காரத்திற்காகப் பெருங்களிப்பெய்தினார். பின்னர் கபட பார்வதியாகிய சித்திரலேகையும் நந்தி முதலிய வடிவேற்று நின்ற அப்சரஸ்களும் தங்கள் நிஜ வடிவையடைந்து தங்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். மகரிஷிகளே! ஸ்திரீகளாலே சர்வேஸ்வரனாகிய சிவபெருமான் இவ்வாறு ஆனந்தப் படுத்தப்பட்டார்.
பார்வதிதேவி பரமேஸ்வரருடன் கூடி மகிழ்ந்திருக்கும் போது, பார்வதிதேவியைக் கண்ட வாணாசுரன் புதல்வியாகிய உஷை என்பவள் நானும் இவ்வாறு ஒரு நாயகனோடு சேர்ந்து இந்நதி தீரத்தில் கிரீடித்துக் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமே இவ்வாறு வாழ்வோரே புண்ணியர்கள் எனக்கு இப்பேறு எப்பொழுது கிடைக்கும்? என்று தனக்குத்தானே துக்கித்து, நியமமாகப் பார்வதிதேவியை வணங்கிப் போற்றி இவ்வகைய கோரிக்கையை ஈடேறச் செய்து கொள்ளவேண்டுமென்று தீர்மானித்தாள். அதனால் உஷை இந்திரிய நிக்கிரகஞ்செய்து விரதமிருந்து பார்வதிதேவியை ஆராதித்தாள். விதர சீலையாயிருக்கும் உஷையின் கருத்தையுணர்ந்த உமா தேவி உஷையை நோக்கி ஓ பாபமற்றவளே! இந்நதி தீரத்தில் அதிசீக்கிரத்தில் கணவனுடன் கூடிப் பலவிதமாகச் சுகமனுப்பவிப்பாய்! என்று கூறினாள். உஷை அதைக்கேட்டு மனத்தில் நம்பிக்கை கொண்டு, தாயே! நான் மந்த பாக்கியமுடையவள் எப்பொழுது கணவனுடன் கூடிச் சுகமுறுவேன்? அதைக் கூறவேண்டும் என்று கேட்டாள். அதற்குத் தேவி இது கார்த்திகை மாதமல்லவா? இதன்மேல் ஏழுமாதங்கள் சென்று வைகாசி மாதத்தில் சுக்ல பக்ஷத் துவாதசியில் உபவாசமிருந்து நடுராத்திரியில் நித்திரை செய்யும் உன்னை எவன் அநுபவிக்கிறானோ அவனே உன் கணவன் அவனுடனே சகல சுகங்களையும் அனுபவித்து அவனுடனே செல்லப் போகிறாய் நீ இளம் பருவத்திலிருந்து விஷ்ணு பக்தி செய்து வந்தால் உனக்கு இத்தகைய கணவன் பேறு உண்டாகும் என்று கூறினாள். உஷை நாணத்தால் தலை குனிந்து நின்றாள். சிறிதுகாலங்கழித்துச் சிவபெருமான் பார்வதி சிவகணங்களுடன் திருக்கைலாய கிரியை அடைந்தார். பின்னர் அங்கு வந்திருந்த தேவர்களும் அசுரர்களும் தத்தம் வாகனங்களில் அமர்ந்து ஆகாச மார்க்கமாகத் தங்கள் வாசுஸ்தலத்தை அடைந்தார்கள். சிறிது காலங் கழித்தபின்னர் வாணாசுரன் சிவபெருமானை அடைந்து கைகூப்பி நின்று பெருந்துக்கத்தோடும் தெய்வகதியாகக் கர்வத்தோடும் கூறலானான்.
சர்வேஸ்வரா! மலைகளைப்போல் பூரித்து வலிமைபெற்றிருக்கும் எனது ஆயிரம் புஜங்கட்கும் யுத்தமில்லாதிருத்தலின் யாது பிரயோசனம்? இந்திரன், அக்கினி யமன் முதலிய அட்டதிக்குப் பாலர்களையும் வென்றிருக்கிறேன். இவர்களில் தேவர்கட்கெல்லாம் அரசனாகிய இந்திரனை எனக்கு கப்பங்கட்ட வேண்டியவனாகவும் செய்திருக்கிறேன். யோக மாயைகளில் வல்லஸைரந்திரியையும் என் ஸ்வாதீனஞ் செய்து கொண்டேன் என் சத்துருக்கள் பிரயோகிக்கும் பாணங்களால் என் தோள் தினவு எப்பொழுது தீரப் போகிறது? எப்பொழுது பெரும்போர் சம்பவிக்கும்? இவ்விஷயத்தைச் சொல்ல வேண்டும்! என்று கேட்டான். அதை சிவபெருமான் கேட்டது, ஆஹா! இவனுக்கு இவ்வளவு கர்வமிருக்கிறதா? என்று கருதிச் சினந்து அட்டகாசஞ்செய்து, ஓ தைத்திய அதமனே! உன் கர்வம் அளவு மீறிவிட்டது உனக்குள்ள விசேஷ கர்வமானது பங்கப்படத்தக்க கடினமான யுத்தம் விரைவில் சம்பவிக்கப் போகிறது. சத்துருக்களுடைய பாணங்களால் உன் மலைபோன்ற ஆயிரம் தோள்களும் துண்டிக்கப்பட்டுத் தீயிற் சொரிந்த காஷ்டம் போல நிலத்தில் விழுந்து போகும் உனது மயூரத்துவஜம் காற்று முதலியன எதுவுமின்றி தானாகவே ஒடிந்து விழும். அதுவே பெரும்போர் நிகழுங்காலம் என்று தெரிந்து கொள்! அந்த யுத்தத்தில் நீ சர்வசைனியங்களோடும் தோல்வியடைவாய், இப்பொழுது அம்மயூரத்துவஜம் நாட்டப்பட்டுள்ள இடத்திற்கு விரைந்து செல்க நீ இன்னும் ஒரு மஹோத்பாதத்தையுங் காணப்போகிறாய்! என்று கூறினார். வாணாசுரனோ திவ்யமான மலர்களால் மகாதேவனை அருச்சித்து கைகூப்பி சம்போ சங்கர மஹாதேவா! என்று துதித்து விடைபெற்றுத் தன் ஆயுதச் சாலையையடைந்தான். நடந்தவிருத்தாந்தங்களை குபாண்டன் என்னும் தம் மந்திரியிடம் சொன்னான் என்னுடைய மயூரத்து வஜம் உடைந்தவுடனே எனது சைனியங்களுடன் புறப்பட்டுச் சங்கிராமயாகஞ் செய்து மாபெரும் யுத்தத்திற்கு நீ வரச்சித்தமாக இருக்கவேண்டும் என்று கூறினான். எக்காலத்தில் எல்லா அஸ்திரசஸ்திரங்களின் பிரயோகத்தையும் அறிந்து எவன் என்னோடு யுத்தம் செய்ய வரப்போகிறான்? எப்பொழுது என் தோள்களை வெட்டப்போகிறான், எப்பொழுது அவன் தலையை நான் வெட்டப் போகிறேன். என்று சிந்தித்தபடி காலத்தை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.
இப்படியிருக்கையில், முன் பார்வதிதேவி வாணபுத்திரியான உஷைக்கு வரமளித்த விதமே வைகாசியும் வந்தது. அம்மாதத்தில் விஷ்ணுபக்தியுடைய உஷை ஸ்நானஞ்செய்து, அணிமணிகளினால் அலங்கரித்துக் கொண்டு விஷ்ணுமூர்த்தியைப் பூஜித்து மகாராத்திரியில் அந்தப்புரத்தில் மோகாவஸ்தைப் பட்டுக்கொண்டு படுத்திருந்தாள். அப்பொழுது கிருஷ்ணபரமாத்மாவின் பேரனாகிய அநிருத்தன் என்பவன் பார்வதிதேவியின் யோகமாயையால் பிரேரேபிக்கப்பட்டவனாய் சோணிதபுரத்தையடைந்து அங்கு உப்பரிகையில் உறங்கும் உஷையைப் பலவந்தமாய் கனவிலே புணர்ந்து பலவிதமான சுகத்தை அனுபவித்து, நான் இப்பொழுது எங்கிருக்கிறேன், எப்படி இங்கு வந்தேன்? என்று துக்கித்துக் கொண்டிருந்தான். அப்போது மீண்டும் பார்வதிதேவியின் யோகமாயையால் துவாரகையில் கொண்டுபோய் விடப்பட்டான். பின்னர் உஷையானவள் சுரதலீலையால் மனவருத்தத்துடன் கண்விழித்துப் பார்த்து தன்னோடு கூடிமகிழ்ந்த ஆடவனை அருகில் காணாமல் தன் தோழிகளிடம் பலவிதமாகக் கூறி நான் இந்தக் கணத்திலேயே உயிர் விடுகிறேன் என்று மூர்ச்சித்து விழுந்தாள். அதை கண்டதும் அவள் தோழியான சித்திரலேகை பனிநீர் முதலியன தெளிந்து சைத்தியோபசாரங்களால் மூர்ச்சை தெளிவிக்க உஷை எழுந்திருந்து முன்பு நடந்த விருத்தாந்தங்களை எல்லாம் மனோகரமான வார்த்தைகளால் சொல்லி ஆனந்தப்பட்டாள். பிறகு அவள் தன் தோழியை நோக்கி சகியே! பூர்வத்தில் ஜகன் மாதாவாகிய பார்வதிதேவியாரை நோக்கி நான் விரதமிருந்த போது தேவி மகாதயாள பூதையாய், உஷையே! உன்னை நித்திரையில் வந்து உன்னோடு கூடிமகிழ்பவனே உனக்குக் கணவனாவான்! என்று வரம் கொடுத்திருக்கிறாள். உன்னுடைய உபாயத்தால் தான் நான் விதிபூர்வமாக அந்நாயகனையடைய வேண்டும் அவன் எக்குலத்தவனென்று அறிந்து கொள்ளாவிட்டாலும் என் மனது அவனால் கவரப்பட்டது! என்று சொன்னாள்.
சித்திரலேகை உஷையே! நீ சொப்பனத்திற் கண்டவன் இன்னவனென நான் அறியேன். ஆகவே அவன் யாரென்று எவ்வாறு கண்டுபிடிப்பேன்? என்றாள். அதற்கு உஷை, சகியே! நீ அவ்வாறு சொல்வாயானால். பிறரொருவரால் இது செய்ய முடியாதது பற்றி நான் காமவேதனை தாங்காமல் மடிந்துவிடுவேன்? என்றாள். அது உண்மையே என்று சித்திரலேகை உணர்ந்து உஷையை! நீ எதற்கும் கவலைப்படாதே. உன்னைக் கனவிற் புணர்ந்து சென்ற கணவனை நான் எவ்வகையிலேனும் ஏழுதினங்களிற் கொண்டுவந்து உன்னிடம் சேர்க்கிறேன்! என்று உறுதியாகக் கூறி தன் மாயையால் எல்லா அசுரர்களையும் துணையாகக் கட்டிக் கொண்டு கனவில் கூடிச்சென்ற ஆடவனைத் தேடிச் சென்றாள். கூடி மகிழ்ந்தவன் அநிருத்தன் என்று அறிந்து கொண்டு, மகா சந்தோஷத்துடன் நீ திருட்டுத்தனமாய் ஏதோவோர் உபாயத்தால் என் பிராண ரத்தினமாகவுள்ள உஷா கன்னிகையை ஸ்பரிசித்து அப்பொழுதே அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய். நீ எந்த குலத்தவன் எவ்வமிசத்தவன் உன் பெயர் யாது? என்று கேட்டு அநிருத்தனின் விருத்தாந்தங்களைத் தெரிந்து கொண்டாள். எவனை நீங்கி என் தோழியாகிய உஷை க்ஷணநேரமும் பிழைத்திருக்க மாட்டாளோ, அவனைக் கொண்டு வரத்தக்க உபாயம் யாதென்று சிறிது தன்னுள்ளே யோசித்துத் தன் சிநேகிதியான வாணபுத்திரியுடன் நல்ல வார்த்தைகள் பேசி ஆனிமாச கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் உதய முகூர்த்தத்தில் மனோவேகத்துடன் க்ஷணப்பொழுதில் யோக மாயையின் வன்மையால் ஆகாச மார்க்கமாக துவாரகையை அடைந்து அந்தப்புரத்திலுள்ள உத்தியான வனத்தில் பல மங்கையரோடு மதுபானஞ் செய்து விளையாடிக் கொண்டிருக்கும் அநிருத்தனைக் கண்டாள். அப்பொழுது அநிருத்தன் மலர்ப்பாயலும் பஞ்சணையுமுடைய தன் சப்ரகூட மஞ்சத்தில் ஏறினான்.
சித்திரலேகை அதைக் கண்டு அங்கிருப்பவரையும் அநிருத்தினையும் தனது மாயா சக்தியால் ஒன்றுமுணராதவர்களாகச் செய்து அநிருத்தனைக் கட்டிலுடன் தூக்கித் தன் சிரமேல் வைத்துக்கொண்டு வானவெளியில் பறந்தாள். காம மயக்கத்தால் ஒன்றுமுணராது பலவிதமான சிங்கார பாவங்களைப் பித்தம் பிடித்தவள் போலச் செய்து கொண்டிருக்கும் உஷா கன்னிகையிருக்குஞ் சோணிதபுரத்தை வினாடியிற் சேர்ந்தாள். சித்திரலேகையால் இவ்வண்ணங் கொண்டு வரப்பட்ட அநிருத்தனைக் கண்டதும் உஷை ஆனந்தப் பரவசமடைந்தாள் வலிமைமிக்க அசுரர்களாற் காக்கப்பட்டிருக்கும் அந்தப்புரத்தில் உஷை அநிருத்தனோடு பலவாறாகவும் கூடிக்குலாவிக் கிரீடித்துக் கொண்டிருந்தாள். அப்பகுதியில் ஆயுதங்கள் தாங்கிக் காவல் செய்யும் அசுரர்கள் அங்கே நடக்கும் இங்கிதங்களால் தங்களுக்குள் சந்தேகித்து உஷையின் நடத்தையைக் கண்டு பிடித்தார்கள். அதி திவ்விய தேகமும் இளம் பருவமும் கண்களுக்கு ரம்மியமான அழகும் யுத்தப் பிரீதியும் தீரமுமுடைய ஒரு மனிதன் நம்முடைய வாணாசுர புத்திரியுடன் அந்தப்புரத்தில் இருக்கிறான் என்று நன்றாகத் தெரிந்து கொண்டு மாவலியின் புத்திரனும் தங்கள் ராஜனுமாகிய வாணாசுரனிடம் ஓடிச் சென்று மன்னவரே! எங்களாற் காக்கப்பட்டிருக்கும் அந்தப்புரத்தில் மகாபலசாலியாகிய தங்கள் புத்திரியை பலாத்காரமாக எவனோ ஒருவன் சுவாதீனஞ் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்திருக்கிறான். தாங்களே போய் அவனைக் காணலாம்! என்று கூறினார்கள். அவ்வாறு கூறிய அந்தப்புர துவாரபாலகர்களின் வார்த்தையைக் கேட்டதும் வாணாசுரன் அளவு கடந்த ஆத்திரம் கொண்டு உஷையின் அந்தப்புரத்திற்கு விரைந்து சென்றான். அங்கு நீலமேகம் போன்ற நிறமும் வாலிப வயதுமுடைய அநிருத்தனைக் கண்டு ஆச்சரியமும், குரோதமும், குரோதத்தாற் சிரிப்பும் கொண்டு இவன் எவ்வளவு பேரழகுடையவன்? எவ்வளவு தைரியசாலி?இவன் என் குல கவுரவத்தையும் என் வமிசத்தையும் என் குமாரத்தியையுங் கொடுத்து பலர் நகைக்கச் செய்தானன்றோ? என்று கருதி தன் வீரர்களை வருவித்து, நீங்கள் துன்மார்க்க சம்பன்னனான இவனை உடனே அஸ்திர சஸ்திரங்களால் நறுக்கி பாசத்தாற்கட்டிக் காராக்கிரகத்திற் சிறை செய்து காலம் வருமளவும ஓடிப்போக வொட்டாமல் காவல் புரியுங்கள்! என்று கூறினான். வாணவீரர்களின் ஒரு லக்ஷம் பேர் அநேக ஆயுதங்களைத் தாங்கி அநிருத்தனைப் பிடித்து வரச் சென்றார்கள். அதைக் கண்டதும் அநிருத்தன் கர்ச்சித்து அந்தப்புர வாயிற்படியிலிருந்த ஒரு கம்பத்தைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு போர் செய்யப் புறப்பட்டான். அக்கோலமானது இயமன் வச்சிராயுதம் ஏந்தி நிற்பது போலிருந்தது உடனே அநிருத்தன் அவ்வீரர்களையெல்லாங் கொன்றுவிட்டு மீண்டும் அந்தப்புர மடைந்து உஷையுடன் சேர்ந்திருந்தான்.
முனிசிரேஷ்டர்களே! கோபத்தால் உதிரம் போலச் செந்நிறம் வாய்ந்த பரந்த கண்களையுடைய அநிருத்தன் அவ்வீரர்களையெல்லாங் கொன்ற செய்தியை வாணாசுரன் அறிந்ததும் பெருங் கோபங் கொண்டு தன் மந்திரியான குபாண்டனைக் கூவியழைத்து நீ லக்ஷம் குதிரை வீரர்களுடன் போய் மகா பராக்கிரமசாலியான அத்தீயோனோடு தொந்த யுத்தஞ் செய்து ஜெயித்து வர வேண்டும்! என்று கட்டளையிட்டான். குபாண்டன் அவ்வண்ணமே பெருஞ்சேனையுடன் அநிருந்தன் மீது போருக்குச் சென்று அவனை எதிர்த்துப் போர் செய்தான். அநிருத்தன் அந்த யுத்தத்தில் தனக்குக் கிடைத்த ஒரு கட்கத்தால் அவர்களில் அநேகரைக் கொன்றான் சிலர் ஓடிப் போனார்கள். அதை வாணாசுரன் அறிந்ததும் பிரளய காலாக்கினி போன்ற சுவாலையையுடைய ஒரு சக்தியை அநிருத்தன் மீது பிரயோகித்தான். அநிருத்தனோ அச்சக்தியை விளையாட்டாகப் பிடித்துக் கொண்டு, அச்சக்தியாலேயே வாணாசுரனை யடித்தான் வாணன் அவ்வடியால் இரத நிழலில் மூர்ச்சித்து விழுந்தான். பிறகு தன் மந்திரி குபாண்டன் செய்த சைத்தியோபசாரங்களால் மூர்ச்சைத் தெளிந்து எழுந்திருந்தான். அவனை அசுரர்கள் உபசாரஞ் செய்து கொண்டு போனார்கள். அநிருத்தன் சிறிதுஞ் சலியாது நின்றான். அவ்வநிருத்தனது பராக்கிரமத்தை வாணனுடைய மந்திரியின் சேனைகளைக்கண்டு இவனோடு நியாயமாகப் போர் செய்தால் காரியங் கைகூடாது கபடமார்க்கமாகவே வெல்ல வேண்டும் என்று தீர்மானித்து பலவிதமான அஸ்திரசஸ்திரங்களால் துன்புறுத்தி வஞ்சகமாக வீரர்கள் அநேகர் முன்னும் பின்னும் நின்று அவனை நாகாஸ்திரத்தால் கட்டி வாணாசுரனிடம் இழுத்துக் கொண்டு போய்க் காட்டினார்கள்.
வாணன் கடுங் கோபங் கொண்டு இவன் தமது குலத்துக்கு அவமானம் விளைத்தவன்? இவனைச் சிரச்சேதஞ் செய்யுங்கள் இவனுடலைத் துண்டந் துண்டமாகச் செய்து அசுரர்கள் உண்ணும் படிக் கொடுத்து விடுங்கள், அல்லது நரிகளுக்காவது இரையாக்குங்கள் அல்லது இவனை ஆழமான பாழுங்கிணற்றினுள் தள்ளுங்கள்! என்று மிகக்கோபத்தோடு கூறினான். அதைக் கேட்டதும் மந்திரி குபாண்டன் மகா தர்மபுத்தியுடன் தலைவனே! இப்பொழுது தாங்கள் கோபசாந்தமாக வேண்டும், இவனை நாம் இப்படிக் கொல்வோமாயின் நம்முடைய உயிரை கொன்றவர்களாவோம். இவன் பராக்கிரமத்தால் விஷ்ணுவுக்கு சமானனாகவுஞ் சிவகடாக்ஷத்தைப் பெற்றவனாகவும் இருக்கிறான். இவ்வளவு கஷ்டத்தில் அகப்பட்டுக் கொண்டும் வீரத்துடன் விளங்குகிறானேயன்றி மனம் வருந்தவில்லையே? மகா சர்ப்பங்களால் கடிக்கப்பட்டிருக்கும் இவன் பலபராக்கிரம சாலிகளாகிய நம்மையே ஒரு துருணமாக நினைக்கிறான் என்று கூறி, அநிருத்தனைப் பார்த்து நீ யாவன்? எக்குலத்தினன்! எந்த உபாயத்தால் இங்கு வந்தாய்? ஓ துராசார சம்பன்னா! ஓ நராதமா! தைத்திய ராஜனாகிய வாணாசுரனைத் தோத்திரஞ்செய் நமஸ்காரஞ்செய். அடிக்கடி நான் உங்களால் செயிக்கப்பட்டேன் என்று சொல்லிக் கொள். இவ்வாறு செய்வாயானால் நீ கட்டுத்தளையிலிருந்து நீக்கப்படுவாய்! என்று கூறினான். ஆனால் அநிருத்தனோ, அடா தைத்தியாதமா! பரபிண்டோப ஜீவிகா! நிசாசரா துராசார சம்பன்னா! க்ஷத்திரிய தருமத்தை அறியாமல் என்னைக் கேட்டுக் கொள்ளும்படி நீ கூறுகிறாய்! சூரனுக்கு மரணத்தைக் காட்டிலும் அவமானமும் தோல்வியும் புறங்கொடுத்தலுஞ் சிறந்தவையன்று வீணாக அபகீர்த்தியைத் தேடிக் கொள்வதைக் காட்டிலும் நேர்முகமாக நின்று போர் புரிந்து உயிர் துறத்தலே புகழைத்தரும். இழிவான வார்த்தைகள் கூறி உன்னை வேண்டிக்கொண்டு உலகத்தில் உயிர் வாழ வேண்டுமென்னுங் கருத்து எனக்கில்லை. இப்படி இழிவடைவதைக் காட்டிலும் மரணமாவது ஸந்நியாசமாவது பெறுவதே உசிதம் உனக்குப் பேசத் தெரியாவிட்டால் ஊமைபோல் ஒன்றும் சொல்லாமல் இரு அநேக ராக்ஷஸர்களும் திரிலோகங்களும் எப்பொழுதும் என் பாட்டனுக்குப் பணி செய்து துதிப்பவர்களாக இருக்கிறார்கள். அவ்வகைய வமிசத்தவனான நானோ அறுத்தெறியப்பட்ட கைகளாகிய வனத்திற் சஞ்சரிக்கும் சிங்கம் போன்ற சுத்த வீரனென்றறிந்து கோள்! என்று கூறினான். வாணாசுரன் மந்திரியின் வார்த்தைகளால் அநிருத்தனைக் கொல்லாமல் அந்தப்புரத்தையடைந்து, வீரபானஞ் செய்திருந்தான்.
அநிருத்தன் மகா விஷத்தையுடைய நாகாஸ்திரத்தால் கட்டப்பட்டுத் தன் மனதை உஷையினிடத்தில் செலுத்தித் தன் இஷ்டதேவதையான பார்வதியைத் தியானித்துக் தாயே! நான் நாகாஸ்திரத்தால் கட்டப்பட்டு அதனாற் கடிக்கப்பட்டிருக்கிறேன். உன் பக்தர்களுக்குத் துவேஷிகளிடத்தில் உனக்கு ரோஷமிருந்தால் விரைவாக வந்து என்னைக் காக்கவேண்டும் என்று துதித்தான். அதனால் பார்வதிதேவி கருமலை போன்ற வடிவுடன் வந்து ஆனிமாத கிருஷ்ண சதுர்தசியில் நடுராத்திரியில் அநிருத்தனையடைந்து தன் வலிமை பொருந்திய கைமுஷ்டியால் நாகாஸ்திரத்தை உடைத்து, அந்த அஸ்திரத்தைப் பஸ்பஞ் செய்து, அவன் துயர்தீர்த்து அந்தப்புரத்தில் உஷையிடம் அவனைச் சேர்த்து விட்டு அந்தர்த்தானமானாள். அநிருத்தன் சந்தோஷத்துடன் வாணாபுத்திரியைக்கூடி இச்சைப்படியெல்லாம் மகிழ்ந்திருந்தான். அங்கிருக்கும் ஸ்திரீ ஜனங்கள் அவன் பட்ட கஷ்டங்களைக் கருதித் துக்கித்தனர். இவ்விஷயங்களையெல்லாந் துவாரகபுரியில் இருக்குங் கிருஷ்ணமூர்த்தி நாரத முனிவரால் கேள்வியுற்று பிரத்யும்னன் பலராமன் முதலிய வீரர்களுடன் எண்ணிறந்த சேனைகளைக் கூட்டிக் கொண்டு உடனே சோணிதபுரியை அடைந்தார். அக்கினி, யமன், சிவபெருமான் மூன்று சிரங்கள் மூன்று கால்களோடுங் கூடிய சுரன், குமாரக்கடவுள்; பிரமதகணங்கள் மகா பயங்கரமான சத்துருக்களின் வீரத்தைக் கொள்ளத்தக்க திகம்பர ஸ்தீரிகள்(நிர்வாணப் பெண்கள்) முதலானவர்களோடு சென்று மாபெரும் யுத்தம் புரிந்து இறுதியில் வாணாசுரனுடன் போர் புரிந்தனர். பின்னர் மஹேசுவர சம்பந்தமான ஜ்வரங்கட்கும் போர் நிகழ்ந்தன.
வாணன் கிருஷ்ணமூர்த்தியை எதிர்த்துத் தன் மந்திரி முதலான எண்ணிறந்த சேனையுடன் போர் புரிந்து தன் சைனியங்கள் யாவுமழியப் பெற்று இறுதியில் கண்ணனால் விடப்பட்ட சுதர்சனத்தால் தனது ஈராயிரம் புயங்களும் அறுபட்டான். கிருஷ்ணன் வாணன் சிரத்தைக் கொய்ய வேண்டுமெனக் கருதும் போது, சிவபெருமான் கண்ணனைப் பலவாறு சந்தோஷிக்கச் செய்து அவனைக் கொல்ல வேண்டாம். இதுவரையில் செய்தது போதும் உன் சுதரிசனத்தை வருவித்துக்கொள். இச்சுதரி சனத்தைப் பூர்வகாலத்தில் உனக்கு நான் கொடுத்தேன் நீயே ஜயமுற்றாய், நீ யோகவான், பக்திப் பிரியன் ஷட்குணைசுவரிய சம்பன்னனாகி யாவருக்கும் நன்மை செய்யக் கருதுகிறாய்! வாணனுக்கு மிருத்யு பயமின்றி வரங் கொடுத்திருக்கிறேன். நீ அவனைச் சங்கரிக்காவிடின் என் சொல்லைக் காப்பாய் என்று கூறினார். அதைக் கேட்டு கிருஷ்ணமூர்த்தி தன் சக்கிராயுதத்தை வருவித்துக் கொண்டு தன் தேகத்தில் சிறிதுங்காயமின்றி ஜயமடைந்து தன் பேரனாகிய அநிருத்தனையும் அவன் காதல் நாயகியான உஷையையும் ஆசீர்வதித்து அழைத்துக் கொண்டு இரத்தினம் முதலியவற்றைக் கொள்ளை கொண்டு உஷையின் பிரியமுள்ள தோழியாகிய சித்திரலேகையையும் கூட்டிக் கொண்டு கிளம்பினார். தன் வாகனமான கருடனை விடுத்து ஓரிடத்தில் ஏறித் துவாரகாபுரியை யடைந்து சந்தோஷமாக வீற்றிருந்தார்.
கிருஷ்ணன் சென்ற பிறகு ரக்தமயமான தேகத்துடன் துக்கித்துக் கொண்டிருக்கும் வாணனை நந்திபகவான் பார்த்து நீ வருந்தற்க சிவபெருமான் சன்னதியில் நிருத்மகோற்சவஞ் செய்க! என்று கூறினார். வாணன் அவ்வாறே நடனம் செய்யக் கருதி தன் இரண்டு கரங்களோடு நின்று உவலிற்பட்ட காயங்களால் உதிரமொழுக்கி பூமியை நனைத்து பிரத்தியாலீட முதலிய நால்வகை நிலையினின்று புருவ முதலியவற்றின் செயல்களாகிய அபிநயங்களமைய ஸஹஸ்ர சிரக்கம்பனஞ் செய்து அநேக முறை பிரத்தியானீஞ் செய்து பலவிதமாகச் சுழன்று சிவபெருமான் கிருபை செய்யுமாறு நடனமாடினான். அன்பர்களிடத்தில் அதிக விசுவாசமும் நடன கீதங்களின் பேரானந்தமுமுடைய சிவபெருமான் அவ்வாணன் செய்த நிருத்தத்திற்கு ஆனந்த மிகுந்து வாணாசுரா! உன் கருத்திற்கிசைந்த வரம் ஏதேனுங் கோருக, எனக்கேட்டார். வாணன் சிவபெருமானைப் பணிந்து, சுவாமி! என் தோளிலுள்ள காயங்கள் நீங்க வேண்டும் அழிவில்லாத காணாபத்தியத்தை எனக்குக் கொடுத்தருள வேண்டும். இச்சோணிதபுரியின் இராசிகத்திற்கு என் குமாரத்தியின் கணவனாகிய அநிருத்தனது புதல்வன் அரசனாகவேண்டும் எனக்குத் தேவர்களுடன் விரோதமில்லாதிருக்கவும் கல்பாந்தத்தில் விஷ்ணுமூர்த்தியால் எனக்கு மரணமுண்டாகவும், இராக்ஷஸத்துவம், எப்பொழுதும் இல்லாதிருக்கவும் விஷ்ணு ஆராதனை எனக்கு எப்பொழுதும் இருக்கவும், சர்வஜனமித்திரத்துவமும் வேண்டும்! என்று கோரினான்.
சிவபெருமான், அவ்வாறேயாகுக வென்று வரமளித்து அந்தர்த்தானமாயினர் பின்னர் வாணாசுரன் சிவகணத்தலைவர்களில் ஒருவனாயினான். அவன் குமாரி உஷையினிடம் விஸ்வஜித் என்னும் பெயரையுடைய ஒரு புத்திரன் தோன்றினான். கிருஷ்ணமூர்த்தியின் விருப்பத்தின்படி குபாண்டன் முதலிய மந்திரிகள் விஸ்வஜித்தை அரசனாக்கினார். அவ்வமிசத்தில் கல் பாந்தவரையில் பிறந்தவர்களும் பிறப்பவர்களும் உஷையும் சித்திரலேகையும் விஸ்வஜித்தும் சிவபெருமானுடைய திருவடிநிழலை அடைவார்கள். இவ்வண்ணமாக உலகத்திலுள்ள சகல குருவிற்குஞ் சற்குருவாய் சூலபாணியாய் மன்மதனென்னும் வனத்திற்கு அக்கினீ வடிவமாய் விளங்கும் திரிநேத்திரதரனாகிய சிவபெருமானின் சரித்திரத்தை என் புத்திக் கெட்டியவரையில் பெரியோர்களாற் கேள்விப்பட்டபடி உங்களுக்குச் சொன்னேன். இச்சரிதத்தால் காரியங்களையும் நடத்துவரென்று உணரவேண்டும். சிவமும் சக்தியும், பூவுமணமும்; மணியுமொலியும்; தீயும் உஷ்ணமும் நீருந்தட்பமும் போல அபேதமாக விளங்குவர். இவ்வாறு சூதமுனிவர் சவுனகாதி முனிவர்களை நோக்கி கூறினார்.
8. காமத்தின் கதை
சவுனகாதி முனிவர்கள் சூதமுனிவரை நோக்கி சுவாமி காமமாகிய வனத்திற்கு அக்கினி போன்ற சிவபெருமானும் காம இச்சைக்கு ஆளானார் என்றுத் தாங்கள் கூறியது மிகவும் ஆச்சரியகரமாயிருக்கிறது! ஆதலின் சிவபெருமானையும் மோகிக்கச் செய்ய வல்ல காமம் எத்தன்மையது? ஆகாயம் வாயு அக்கினி, ஜலம், பிருதிவி, புத்தி, மனம், சித்தம், அகங்காரம் முதலியன யாவும் பிரகிருதியால் உண்டாயின என்றும், புருஷன் அங்குஷ்டமாத்திரப் பிராமணமாக விளங்குகிறான் என்றும் கேட்டிருக்கிறோம், இவ்விஷயம் எங்களுக்குச் சந்தேகமாயிருப்பதால் எங்களுக்கு நன்கு விளங்கும்படி கூறியருள வேண்டும்! என்று கேட்டார்கள். சூத முனிவர் சொல்லத் தொடங்கினார். மகரிஷிகளே! அளவிறந்த தேஜஸோடு கூடிய வியாஸபகவான் சொல்லிய வண்ணமே உங்களுக்குச் சொல்கிறேன்? கேளுங்கள் காமத்தின் சொரூபமானது பிரம்ம, விஷ்ணு ருத்திராதிகளின் சொரூபமாக இருப்பதும் எல்லா ஜீவ பூதங்களுக்கும் ஆத்ம ஸ்வரூபமாக இருப்பதும், ஸாத்வீகம் ராஜஸம் தாமஸம் என்னும் முக்குணங்களுடையதும், பிரபஞ்ச ரூபமாகப் பரிணமித்திருப்பது, அது தன்னைக் காட்டிலும் விரும்பத்தக்கது பிறிதொன்றுமில்லாததுமாக விளங்கும் சிவபெருமான் நிஷ்காமமாய் விளங்குகையில், காமமானது இல்லாததாக முடியும். சிவபெருமானும் விஷ்ணுவும்; பிரம்மனும், சூரியனும்; சந்திரனும் காமசொரூபிகளல்லர் எதை அவலம், பித்து, ஸ்நானம், தியானம்; யோகம்; இயமம்; தானம்; வேதபாதம்; ஸ்மிருதி; விசுத்தி; பரபீடை; சுவர்க்கம்; மோக்ஷம் சிநேகம் விரோதம் முதலியனவும் தேவர்களின் அஷ்டயோனிகள் மானிடயோனி பசு, பக்ஷி மிருகங்களின் ஐவகை யோனிகள் ஆகக்கூடிய பதினொரு யோனிகளில் பிறந்தனவும் பிறக்கின்றனவும் பிறப்பனவுமாக யாவும் உண்டாயினவோ அதுவே காமம் என்பதாகும். ஆதலின் அவ்வகைய காமத்தினாலேயே யாவுந்தோன்றிப் பெருகி நசிக்கின்றன பலவித யோனி பேதமான அன்னியோன்னிய புத்தியுடைய தம்பதிகளுக்குச் சிரமமாக உண்டாகும். இச்சாபேதத்தால் காமம் பல திறப்படும் அஃதெவ்வாறெனில் பிறப்பும் இறப்புமுடைய சம்சாரத்தில் சப்தாதிகளாயிருக்கும் விஷயங்களால் நிஸ்ஸாரமான சமுசார சுகத்தால் நான் பிரமன் யான், உபேந்திரன்; நான் உருத்திரன்; தேவன்; தானவன்; சுகவான்; கந்தர்வன் மனுஷன் பந்து; மித்திரன். ஆசாரியன் ரக்ஷணகர்த்தா செய்பவன், கொடையாளி குரு. கற்பகவிருக்ஷம், அண்ணன், தந்தை தாய்; யமன் என்று சொல்லிக்கொண்டு நரகபாதையின்றிச் சொர்க்கப் பிராப்தியுண்டாக வேண்டும் என்றிது போன்ற இச்சாவிசேஷம் பலவிதமாக விளங்கும் காமத்தின் குணத்தை இவ்வளவென்றும் இத்தகைய தென்றுஞ் சொல்ல ஒருவராலும் முடியாது.
முனிவர்களே! இந்திரியாதி தத்துவங்களுக்குப் பரமாயிருப்பதும் பூதங்கட்கெல்லாம் அந்தர்யாமியாயிருப்பதும் புத்தியினால் மட்டுமே உணரத்தக்கதும் ஸ்பரிசத்தால் அனுபவிக்கத் தக்கதும் ஆனந்தங்களுக்கெல்லாம் ஆனந்தமானதும் அமிர்தமானதுமாக விளங்குவது பரம்பொருள், சூரிய சந்திராக்கினிகளின் தேஜஸ் எத்தேஜஸின் முன் இல்லாது மழுங்குமோ, எப்பொருளால் எல்லாவிகாரங்களும், சூரிய சந்திர, அக்கினி, பிரமன், விஷ்ணு. வாதியர் மனுஷர், மிருக பசு, பக்ஷியாதிகளும் பிறந்திறப்பரோ, அப்பொருளே பரம்பொருள் அப்பொருளைப் பரமாத்மா என்றும் பரமசிவம் என்றுங் கூறுவர். அப்பரம்பொருளாலேயே உண்டாகும் விகாரமானது காமம் என்று சொல்லப்படுகிறது சாக்கிர சொப்பனாதி அவஸ்தைகளையுற்றவரிடத்தெல்லாம் இருந்து எல்லாக் காரியங்களையுஞ் செய்யும் அப்பொருளே பரம் பொருள். இவ்வாறு சர்வேஸ்வரனால் செய்யப்பட்டக் காரியத்திற்கு காமம் என்று பெயர். சக்தி சக்திமானாகிய இவ்விருவராலேயே பிரபஞ்சமானது சிருஷ்டிக்கப் படுகிறது. பிரியமும் அப்பிரியமுமான வார்த்தைகளும் ஸ்பரிசமும் ரூபமும் ரசமும், கந்தமும் எவன் அறிகின்றானோ எவன் ஹிரண்ய கர்ப்ப பிபீலிகாதி ப்ரியந்தம் தானே விளங்குகிறானோ அவனே பரமாத்மா அவனே செய்பவனும் செய்பொருளும் என்று நூல்கள் கூறும் காரியங்களெல்லாம் இறுதியில் அழிவுறுமாயினும் அவற்றையெல்லாஞ் செய்து வரும் பரமாத்மா ஒரு காலத்தும் நசிக்க மாட்டார். சித்திர வேலைக்காரன் பலவிதமாக செயல்களைச் செய்யுமாறு சர்வேஸ்வரன் ஒருவனாயிருந்து பல காரியங்களைச் செய்து வருகிறான். சர்வேஸ்வரன் ஒருவனாயிருந்து பல காரியங்களைச் செய்துவருவதை உலகினர் உணராது பலர் பலப்பல காரியங்களைச் செய்வதாகக் கூறுகின்றனர். சுயேச்சையால் எல்லாக் காரியங்களுக்குங் கர்த்தாவாக விளங்குபவன் சிவபெருமான் ஒருவரே! உலகத்திலிருக்கும் எல்லாப் பொருள்களும் சர்வேஸ்வர ஸ்வரூபமேயென்று நினைக்க வேண்டும் இவ்வாறு சர்வேஸ்வரன் உலக ஸ்வரூபியாயுள்ளவன் தனக்குத் தானே தெரிந்து கொள்ளத் தக்கவன். பரதத்வஸ்வரூபன் அவ்வகைய சர்வேஸ்வரனாலேயே இவ்வுலகத்தில் காமமும் ஞானமும் பிறந்தன. சங்கல்பத்தாலேயே தோன்றியகாமமென்றுங் கூறப்படுவன் வெண்ணிறம் சதுர்புஜம் மனோகரம் சங்கு சக்கரதரருமாய் நான்கு முங்களுடன் விலையுயர்ந்த இரத்தின சுவர்ண புஷ்பங்களால் அலங்கரிப்பட்டு சரஸ்வதி இரதி முதலியவர்களுடன் பிரீதி, கீர்த்தி, சாந்தி, புஷ்டி, துஷ்டிகளோடும் கருடனுங் கூடிக் கிருதயுகத்தில் பிரத்யும்னன் எனப் புருஷனாகப் பிறந்தான்.
இலக்குமி சமேதனாகத் திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது யோக நித்திரை செய்யும் விஷ்ணுமூர்த்திக்குப் புத்திரனாகத் தோன்றிய அக்காமனே உலகங்கட்கெல்லாம் பிரியவானாகி பூர்ணச்சந்திரன் போன்ற முகமும், சாமவர்ணமும், திவ்விய காந்தியையுடைய நேத்திரங்களும், வளைந்த தலைமயிரும், பொன்னாற் செய்த நவரத்திரனங்களிழைத்த ஆபரணங்களும், பாசாங்குசங்களும் பெற்று மன்மதனென்றும் பெயருடன் தோன்றினான். அவனைத் தேவர்கள் யாவரும் சமீபித்துக் பிரார்த்தித்துக் கைலாச சிகரத்தில் சந்திரப்பிரபை என்னும் பட்டணத்தில் யோக நிஷ்டையில் இருக்கும் சிவபெருமானை எவ்வகையிலேனும் மோகிக்கச் செய்ய வேண்டும்! என்று கூறினார்கள். மன்மதன் உடனே உம்பர் வேண்டுகோளுக்கிரங்கி அங்கிருந்து புறப்பட்டு அநேகவித மதுர சங்கீதத் தொனிகளுடன் புஷ்பபாணங்களைத் தாங்கி சிவபெருமானையடைந்து நீ யார்! என்று கேட்டான். சிவபெருமான் மன்மதனை நோக்கி, நீ யார்! என்று கேட்டார். நான் காமன்! என்றான் மன்மதன். யாது கூறினை? என்று மீண்டும் இறைவன் கேட்டார். அதற்கு மன்மதன் நீ என்னையறியாயா? அறியாயாகில் அறிவிக்கிறேன் என்றான். அவனைப் பார்த்து சிவபெருமான். இங்கு நீ யாது காரணமாக வந்தாய்? என்று வினவினார். அதற்கு மன்மதன் உன்னை மோகிக்கச் செய்ய வந்தேன் என்றான் எதனால் மோகிக்கச் செய்வாய்? என்றார் சிவபெருமான். பலத்தாற் செய்வேன், என்றான் மன்மதன். உவக்கவ்வளவு பலமுண்டா என்றார். இதோ பாணங்களாகிய மலர்களைப்பார் என்று மன்மதன் தன் புஷ்ப பாணங்களால் இறைவனை மோகிப்பிக்க முயன்றான். அப்பொழுது சிவனாரின் நெற்றிக் கண்ணினின்றுந் தோன்றிய அக்கினி ஜ்வாலையால் மன்மதன் சாம்பலானான். அவ்வாறு மன்மதன் மடிந்ததால் அவன் மனைவியான இரதி சிவபெருமானை வேண்டினாள். சிவபெருமான் நீ துவாபரயுக முடிவில் மயன் என்பவனுக்குப் புத்திரியாகப் பிறப்பாய்; சம்பரன் உன்னைக் கொண்டுபோவான் அப்பொழுது பிரத்யும்னன் என்னும் பெயரில் பிறந்திருக்கும் மன்மதன் அவனைச்சங்கரித்து உன்னை மனைவியாகக் கொள்வான் என்று வரங்கொடுத்தார் இது நிற்க.
முனிவர்களே! சிவபெருமானது தீ விழியாற் சாம்பராக்கப்பட்ட மன்மதன் துவாரகாபுரியில் கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்தில் பிரத்யும்னன் என்னும் குழந்தையாகப் பிறந்தான். இரதியும் மயன் புத்திரியாகப் பிறந்து மாயாவதி என்னும் பெயருடன் பேரழகியாக வளர்ந்து கொண்டிருந்தாள். அவளைக் கண்ட சம்பரன் அவளது அழகுக்கு மனமகிழ்ந்து மனைவியாகச் செய்து கொள்ளக் கருதித்தன் நகரத்திற்கு அவளைத் தூக்கிக் கொண்டு போய் போஷித்து வந்தான். இவ்வாறிருக்கும் போது சம்பரன் பிரத்யும்னனையுங் கொண்டு போய் மாயாவதியிடம் விட்டு வளர்க்கச் சொன்னான். அவளும் அன்புடன் வளர்த்தாள் பின்னர் சம்பரனுக்கும் பிரத்யும்னனுக்கும் போர் நிகழ்ந்தது. அதில் சம்பரனை பிரத்யும்னன் கொன்று பூர்வம் சிவப்பிரசாதப்படி மாயாவதியை மனைவியாக்கிக் கொண்டு சம்பராரி என்னும் பெயர் பெற்று மாயாவதியை அழைத்துக் கொண்டு துவாரகையை அடைந்தான். சம்பரன் ராஜ்ஜீய முழுவதையும் தன் தந்தையான கிருஷ்ணமூர்த்தியின் கிருபையில் அங்கிருந்த படியே பரிபாலித்துக் கொண்டிருந்தான்.
துவாரகாபுரியில் உத்தியான வனத்தில் ஒரு காலத்தில் விநோதாற்புதமாக மனைவியுடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்த பிரத்யும்னனை சும்பன் என்பவன் பிடித்துக் கொண்டு போய்த் தன் தமையனாகிய நிசும்பனிடம் விட்டு, இப்பசுவை நீ பக்ஷணஞ் செய்க என்றான். நிசும்பன் தன் தம்பி கொடுத்த இரையை ஆகாயமார்க்கமாக நெடுந்தூரங் கிளம்பி அங்கே விட்டான். பிரத்யும்னன் தெய்வயோகத்தால் வாயுவசமுற்று சும்பன் ப்வணத்திலிருக்கும் ஒரு பர்வதத்துச்சியில் விழுந்து மூர்ச்சித்துச் சிறிது நேரத்தில் தெளிந்து எழுந்தான் அவ்வுத்யானத்தில் உலாவிக்கொண்டிருந்த சும்பபுத்திரியாகிய லக்ஷ்மி என்னும் கன்னிகையைக் கைப்பற்றி க்ஷத்திரிய தர்மமாகிய காந்தர்வ மணத்தால் அவளோடு கூடிக் கலந்தான். இச்செய்தியையுணர்ந்த சும்பன் இருவரையும் நாகாஸ்திரங்களால் கட்டி விந்தகிரியின் உச்சியில் வைத்துக் கடைசியில் இமாசலத்திலுள்ள விதஸ்தாநதி தீரத்தில் வஜ்ர பஞ்சரங்கட்டி அதில் வைத்து அசுரச் சேனையால் காத்து வந்தான். விஷயத்தைச் சொரியும் நாகங்களால் கடிக்கப்படும் பிரத்யும்னன் மகாபலமுடைய விஷ்ணுசக்தியாகிய துர்க்கா தேவியை நோக்கி, இக்கஷ்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். உடனே பார்வதிதேவி, அங்கடைந்து அவ்வஜ்ர பஞ்சரத்தையுடைப்பது அருமையாயிருத்தலின் நாகணவாய்ப் பறவை வடிவேற்று உட்சென்று ஒரு திவ்யப் பேருருவம் எடுத்து பஞ்சரத்தைப் பஞ்சாக்கினாள் அதைக் கண்டதும் அசுரச்சேனை எதிர்த்து. பிரத்யும்னன் அவர்களோடு பெரும் யுத்தம் செய்து அனைவரையும் அரை வினாடியில் அழித்தான். இவ்விவரங்களையெல்லாம் ஒற்றராலுணர்ந்த சும்ப நிசும்பர்கள் தங்கள் சைணியங்களைக் கூட்டிக் கொண்டு போர் புரியவந்தார்கள். அங்கே துர்க்கையின் அழகைக் கண்டு அவர்கள் மதிமயங்கி மிகவும் மோகித்து துர்க்கையையடைந்து தம்மைக்கூடும்படி இருவருங் கேட்டார்கள். அதற்கு துர்க்கை உங்களிருவரில் வல்லவனெவனோ அவனே என்னை அடைக! என்று கூறினாள். சும்ப நிசும்பர் ஒருவரோடொருவர் எதிர்த்துப் பெரும் போர் புரிந்து இருவரும் ஒருவராலொருவர் வெட்டுப்பட்டு உயிரொழிந்தார்கள். துர்க்காதேவி பிரத்யும்னனை மனைவியோடு துவாரகையில் கொண்டு போய் விட்டு அந்தர்த்தானமானாள். பிரத்யும்னனுக்கும் சும்ப புத்திரியான லக்ஷ்மிக்கும் பிறந்த விஷ்வக்சேனன் சம்பரநகரத்திற்கு அரசனாக்கப்பட்டான். மாயாவதியிடம் பிறந்தவன் மயன் என வழங்கப்பட்டான். அவன் சம்பரபுரத்திற்கு மன்னனாக்கப்பட்டான். ரிஷிசிரேஷ்டர்களே! காதுக்கு இனிமையான வாக்குகளால் காமத்தின் மகத்துவத்தை யுங்களுக்குச் சொன்னேன் உலகத்தையெல்லாம் வருத்தும்படி பிறந்த மன்மதனுடைய பிரபாவத்தையுஞ் சொல்கிறேன் கேளுங்கள். இவ்வாறு சூத முனிவர் மேலும் சொல்லலாயினார்.
9. பாற்கடலில் பிறந்த பாவையரின் கதை
மச்சம், கூர்மம், வராகம், நரசிங்க, வாமனம், பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர், கிருஷ்ணர், புத்தர், கலிபுருஷர் என அவதாரங்கள் செய்து பிரசித்தராயும், யோகநிஷ்டாபரரில் சிறந்தவராயும், சமுசாரத்தால் விளையுந்துன்பங்களை நாசஞ்செய்பவராயும், தீயோரைத் தீர்ப்பவராயும் விளங்கும் ஸ்ரீமகா விஷ்ணுவனாவர் காமதேவனான மன்மதனால் பலவிதமாகப் பாதிக்கப்பட்டுப் பாற்கடலின் குமாரத்தியாகிய லக்ஷ்மிதேவியைத் தன் திருமார்பிலேயே தரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று சூத புராணிகர் கூறும்போது சவுனகாதி முனிவர்கள் குறுக்கிட்டு மகாஞானியே! ஸ்ரீமகாலக்ஷ்மி க்ஷீராப்திக்கு எவ்வாறு புத்திரியாயினாள் என்பதையும் கூறவேண்டும்! என்று கேட்டார்கள். சூதமுனிவர் சொல்லலானார்.
மகரிஷிகளே! பூர்வத்தில் தேவர்களுக்கும் அவுணருக்கும் நேரிட்ட போரில் இருதிறத்தவரிலும் பலர் மடிந்ததால், யாங்கள் இறவாது நெடுநாள் போர் புரியக் கருதினோம் ஆகையால் பாற்கடலைக்கடைந்து அமுதளிக்க வேண்டும் என வேண்டினார்கள். பதுமன் திருமாலிடத்திற் கூறிக் கருதியது முடிப்பிப்பேன் என்றுரைத்து அவர்களுடன் க்ஷீராப்தியை (பாற்கடலை) அடைந்து சேஷ சயனத்திற் சனகனாதியர் பரமயோக நித்திரை புரியும் திருமாலை வணங்கி அவர்கள் விருப்பத்தை அறிவித்தார். விஷ்ணுமூர்த்தி அதற்கிணங்கினவராய் அவ்வாறே யாகுக என்று கூறினார். பிறகு மந்தரமலையை மத்தாக நட்டுச் சந்திரனை அடைதூணாக்கி அட்ட நாகங்களுளொன்றாகிய வாசுகி என்னும் சர்ப்பத்தை பாம்பாகப் பூட்டி தேவர் ஒரு புறமும் அசுரர் மறுபுறமுமாக ஈர்க்கும்படி கட்டளையிட்டு தாம் கூர்ம(ஆமை) வடிவேற்று மந்தரமலையின் அடியையும் முடியையும் முதுகினாலுங் கைகளாலும் பற்றி நின்றார். தேவாசுரர்களைப் பெய்தக்காலம் பல கடைந்தமையால் கயிறாகிய வாசுகி வருந்தமாற்றாது உடல் பதைத்து நாத்துடிக்கத் தனது ஆயிரம் வாய்களாலும் தனது விஷத்தைச் சிந்தியது. அவ்விஷம் எங்கும் இருளடையும்படிப் பரவியது தேவர் முதலாயினர் பயந்தோடினார்கள். அதைக்கண்ட விஷ்ணு அமரர்களைக் காப்பேனென்று ஆற்றல்கூறி அவர்கள் மேற்செல்லும் ஆலகால விஷத்தைத் தாமெதிர் சென்று பார்த்தார் அவ்விஷம் அவர் திருமேனியைக் கருநிறமாக்கவே அவரும் நிற்பதற்கஞ்சி ஓடினார். அப்பொழுது யாவரும் ஒருங்கு சென்று திருக்கைலாய கிரியை அணுகி, திருநந்திதேவரது ஆக்ஞையால் சிவ சன்னிதானத்தினுள் சென்று கருணாநிதியாகிய கண்ணுதல் பெருமானைத் தரிசித்துக் கைகட்டி வாய்ப் பொத்தி நின்றார்கள். சிவபெருமான் திருமாலை நோக்கி ஓ மாதவா! உருவம் வேறு பட்டுத்தேவர் குழுவுடன் வந்தது யார்? என்று அறியார் போல் வினவினார் அதற்கு மகாவிஷ்ணு பரமபதியே! தங்கள் கட்டளையின்றிப் பாற்கடலைக் கடைய முயன்றதால் அமுது பெறாதுவிஷம் பெற்றோம். எங்களைக் காத்தருள் புரிய வேண்டும் என்றிரந்து நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தார். சிவபிரான் தமது இடப்பக்கத்திலுள்ள பார்வதியை நோக்க உமையவள் இவர்களைக் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தாள்.
சர்வான்மாக்களின் இடுக்கண்களை அகற்றும் ஜம்புகேஸ்வரர் ஆலகால விஷத்தை வாங்கித் திருக்கரத்தில் வைத்துக் கொண்டு ஓ தேவர்களே! இதை உண்ணவா? விட்டு விடவா? என்றார் தேவர்கள் மகாதேவா! உம் திருக்கரத்தில் வரவே இது தன்னுருவஞ் சிறுத்தது. இதை விட்டால் உலகை அழிக்கும். எவ்வௌற்றினும் முற்பக்கம் உம்முடையதே யாதலிவ் விஷமாயிருப்பினும் இதைத்தேவரீர் உட்கொண்டருள வேண்டும்! என்று பிரார்த்தித்தார்கள். சிவபெருமான் அவ்வாறே சம்மதித்து ஆலகால விஷத்தைத் திருவமுது செய்கையில் அது கண்டத்தளவு செல்ல அதனை அனைவருங்கண்டு, எங்கள் உயிர்களைக் காத்தற்குச் சாக்ஷியாக இவ்விஷத்தைக் கண்டத்திலேயே தரித்தருளல் வேண்டும் என்று வேண்டினார்கள். சிவபெருமான் அவர்கள் வேண்டுகோளுக்கிரங்கி அங்கேயே ஒரு நீலமணி போன்று நிறுத்தி மணிகண்டர் நீலகண்டர் சீலகண்டர் முதலிய திருநாமங்களைப் பெற்றார். பிறகு பெருமானருள் பெற்றுப் பாற்கடலைக் கடையும் போது அக்கடலில் லக்ஷ்மிதேவி, தன்வந்தரி, சந்திர சூரியர், கல்பகத்தரு, உச்சைச்சிரவசு, காமதேனு, கவுத்தவம், அமிர்தம் முதலானவை பிறந்தன. அமிர்தம் பிறக்குங் காலத்தில் அமிர்தபிந்துக்கள் வெளியே சிந்தினபடியால் பார்ப்பதற்குச் சவுந்தரிய உருவமுள்ள அப்சரஸ்கள் தோன்றினார்கள். சரத்காலத்தில் பிரகாசிக்கும் பூரண சந்திரன் போன்ற முகமும், மின்னல், சூரியன், அக்னி, போலும் தேக காந்தியுமுடையவர்களாய்த் திகழ்ந்தார்கள். அவர்களில் சிலர் நிலோத்பல நிறமும், சிலர் பொன்னிறமும் சிலர் பவள நிறமும், சிலர் இந்திர நீலநிறமும், சிலர் வெண்ணிறமும், சிலர் பதும் கர்ப்பம் போற் செம்மையும் வெண்மையுங் கலந்த நிறமும், சிலர் நீலமலர் நிறமும் வாய்ந்தவர்களாய் கணக்கில்லாத அநேகக் கோடு அப்சரசுகள் தோன்றி தாங்கள் தேககாந்தியால் பத்துத்திக்குகளையும் பிரகாசப் படுத்தினார்கள். வயோதிகம் துக்கம் சோகம், மரணம், ரோகம் முதலியன நீங்கி ஹாரங்கள் நூபுரங்கள் கடகங்கள் முதலிய இரத்தினாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாய் சிருங்காரம் முதலான ரசயுக்தமான மதுரமானகுரராய் அமிர்த்துல்யமான கண்பார்வையால் உலகமுழுவதையும் பிரமிக்கச் செய்து கொண்டிருந்தார்கள். பாற்கடலில் தோன்றி பல பொருள்களில் காமதேனு பாரிஜாதம், உச்சைச் சிரவசும் என்பனவற்றை தேவேந்திரன் பெற்றுக் கொண்டான். கவுத்துவ மணியையும் இலக்ஷ்மியையும் விஷ்ணுமூர்த்தி அடைந்தார். தன்வந்தரியை எல்லோரும் அடைந்தார்கள். அமிர்த்தம் எங்களுக்கு என்று தேவாசுரர்கள் பிரளய காலகோஷம் போற்கொதித்து அக்கினி சூரியன் போலக் குரூரத்துடன் கோபித்துப் போர் செய்து, அப்போரில் அசுரர்கள் தமது வலிமிகுதியால் அமிர்த்தத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதனைக் கண்டதும் விஷ்ணுகாந்தியே சொரூபமாகவுள்ள லக்ஷ்மி என்னும் மாயையோடு மகாவிஷ்ணு கூடி, அசுரர்களை விளித்து நான் உங்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளிப்பேன் என்றார்.
அசுரர்கள் சம்மதித்து அவ்வாறே சமபாகம் பெறத் தீர்மானித்தார்கள். பிறகு அவர்கள் தங்களை மோகிக்கச் செய்த விஷ்ணு மூர்த்தி கையில் அமிர்த கலசத்தைக் கொடுத்து விட்டு அப்பாற்கடலில் தோன்றிய அப்சரஸ்களைக் கண்டு மதிமயங்கி விஷ்ணுமாயையால் காமமிகுந்து அவர்களை உடன் கொண்டு சுவர்க்க லோகத்திலுஞ் சிறந்து விளங்கும் தங்கள் நகரங்களுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவ்வாறு தங்கள் நகரங்களை அடைந்த பின்னர், ஐயோ அமிர்தத்தை மறந்துவிட்டு தேவர்கள் விட்டு விட்ட இந்த ஸ்திரீகளை வீணேகொண்டு வந்தோமே? என்று மனம் வருந்தி அக்கன்னிகைகளை விட்டுவிட்டு தங்கள் பட்டணங்களை அகழிமதில் முதலிய காவல்களிற் குறைவின்றி விளங்கச் செய்தார்கள், தங்களை வஞ்சித்து அமிர்தத்தைக் கைக் கொண்ட தேவர்களோடு யுத்தம் புரியக்கருதி ஆகாயமுழுதும் மறையும்படி புழுதியெழும்பக் கடுநடை நடந்து சங்கநாதமும் வாத்திய முழக்கமுஞ் செய்து கொண்டு, அமிர்தத்தில் பாகம்பெற வேண்டுமென்று புறப்பட்டு வந்தார்கள். அவ்வாறு போர்க்கோலங் கொண்டு வந்த அசுர சேனையைக் கண்டதும் அமரர்களும் போர்கோலங் கொண்டார்கள். அவ்விரு திறத்தவருக்கும் பெரும்போர் நிகழ்ந்து அநேகவிதமான அஸ்திரசஸ்திரங்களால் அடித்துக் கொண்டார்கள். அப்போரில் அநேகதானவரைத் தேவர்களும் அநேகந் தானவரைத் திருமாலுங் கொன்றார். இந்த யுத்தத்தில் உயிர் பிழைத்தாற் போதுமென்று சிலர் பாதாளத்திற்கு ஓடிவிட முயன்றார்கள் மகா பல பராக்ரமசாலியான விஷ்ணு மூர்த்தி தம் சக்ராயுதத்தைக் கையிற்றாங்கி அவ்வாறு ஓடுவோரையுங் கொல்ல வேண்டுமென்றும் உட்கிடையால் அவர்களைப்பின் தொடர்ந்து தாமும் பாதாள லோகத்தையடைந்தார். அங்கு ஒளிந்து கொண்டவர்களை அவர் தேடிக் கொண்டியிருக்கையில் அமிர்த சம்பவமும் பூர்ணசந்திரன் போன்ற முகமும், அதிக சவுந்தரியத்தால் தருக்கு முற்றிருக்கும் அநேக ஸ்திரீகளைக் கண்டு மோகமுற்று மன்மத பாணத்தால் அடிபட்டு தான் வந்த காரியத்தை மறந்து அம்மாதர்களுடன் விளையாடிக் கொண்டும் பலவிதமாகக் காமக் கிரீடை செய்து கொண்டும் அநேக காலமிருந்தார். அதன் விளைவாக உலகத்தில் கண்டோர் யாவரும் அஞ்சத்தக்க ஆண் தன்மையும் போர்த்திறமுமுடைய புத்திரர் பலரைப் பெற்றார்.
இவ்வாறிருகையில் பிரமதேவன் கைலாயகிரியையடைந்து சிவபெருமானைப் பணிந்து சுவாமி! தாங்கள் கட்டளையிட்டு அருளியபடி நான் சிருட்டியும் விஷ்ணு ஸ்திதியும் செய்ய வேண்டியவர்களன்றோ? விஷ்ணுமூர்த்தி இப்பொழுது காமாந்த காரத்தில் மூழ்கிப் பாதாளலோகத்தில் மங்கையர் பலருடன் விநோதமாகக் காலங்கழித்துக் கொண்டிருக்கிறார். அவரது காத்தல் தொழில் நடக்கும்படி தாங்கள் அங்கு சென்று திருமாலின் மனதைத் திருப்பியருள வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் அவ்வாறேயாகுகவென்று காளை உருவமெடுத்துப் பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டு பிநாகவில்லைத் தாங்கிப் பாதாளத்தை அணுகி மகா பயங்கரமான பலவிதத் தொனிகளைச் செய்தார். அவ்வொலியால் அங்கிருந்த புரங்கள் யாவும் அஞ்சின அப்பொழுது விஷ்ணு மூர்த்தியின் புதல்வர்கள் இவ்வாறு பேரொலியால் நம்மையும் நமது பட்டணத்தையும் பயமுறுத்துவோன் யார்? என்று கோபித்து யுத்தஞ் செய்யக் கருதி புறப்பட்டனர்; சர்வேசுவரனான உருத்திரபகவான் தம் குளம்புகளாலும் கொம்புகளாலும் அவர்கள் யாவரையுங் கொன்றார். அவ்வாறு புத்திரர் இறந்தனரென்னுஞ் செய்தியைக் கேள்வியுற்ற அச்சுதன் மகாகோபத்துடன் யுத்தம் செய்யச் சிவபெருமானைச் சமீபித்து! பலவிதமான அஸ்திர சஸ்திரங்களை ரிஷப ரூபமாக வந்திருக்கும் பெருமான் மீது பிரயோகித்தார். பகவான் அந்த எண்ணிறந்த திவ்யாஸ்திரர்களை விநோதார்த்தமாகக் கிரகித்துக் கொண்டார். அதைக்கண்டதும் விஷ்ணுமூர்த்தி ஓகோ! ஜகத்பதியாகவுள்ள உமாசமேதனே இங்கு இடபரூபமாக வந்திருக்கிறாரே தவிர வேறில்லை! என்று உணர்ந்து கம்பீரமான வாக்கால் சர்வேசுவரா! சங்கரா! பகவானே! ஷட்குணைசுவரிய சம்பன்னா! ஸ்வாமீ! நான் செய்த குற்றத்தை க்ஷமித்தருளவேண்டும் என்று பிரார்த்தித்தார். அந்தப் பிரார்த்தனைக்கு சிவபெருமான் இளகி கேசவா! நீ இரக்ஷித்தல்!தொழிலையுடையவன் என்பதை என்ன காரணத்தால் மறத்தாய்! இனி இப்பாதாளத்தில் ஸ்திரீலோலனாயிருப்பதை நீக்க வேண்டும்! எனக் கட்டளையிட்டார். அதைக் கேட்டவுடனே விஷ்ணுமூர்த்தி, ஆகா சிறியேனாகிய நான் செய்த இந்த அறிவீனமான காரியத்தை ஜகதீஸ்வரன் தெரிந்து கொண்டானால்லவா? என்று நாணமுற்று, சர்வேஸ்வரா! அடியேனுக்கு தேவரீர் பிரசாதித்தருளிய சுதர்சனமென்னுஞ் சக்ராயுதம் இவ்விடத்தில் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு வினாடியில் வருகிறேன்! என்றார் சிவபெருமான். அதனைக்கேட்டு, நாரண! இப்பாதாளம் அநேக துஷ்டராக்ஷஸர்களுக்கு வாசஸ்தவமாயிருக்கிறது இவர்கள் எப்பொழுது கர்வித்துத் துன்மார்க்கஞ் செய்கிறார்களோ அப்பொழுது இவர்கள் நாணமுறும்படி சிøக்ஷ செய்ததற்காக இச்சக்கிராயுதம் இங்கேயே இருக்கட்டும், உனக்கு இதற்குச் சமானமானதும் மகா பயங்கரமானதுமாகிய மற்றொரு சக்கிராயுதத்தைக் கொடுக்கிறேன்! என்று கூறி, அவ்வாறு திருவுள்ளத்திற் சங்கற்பஞ் செய்த பொழுதே பிரளய காலாக்னி போன்ற காந்தியோடு கூடிய ஓர் சக்கிராயுதம் உண்டாயிற்று. அதைச் சிவபெருமான் மகாசந்தோஷத்துடன் பிரளய கால சூரியரின் கிரணங்களைப் போன்ற கிரணத்தையுடைய சக்கிராயுதத்தைச் சிவப்பிரசாதமாக பெற்றுக் கொண்டார். திருமாலும் சிவபெருமானும் பாதாளத்தை விலகித் தத்தம் பதவியடைந்தார்கள்.
முனிவர்களே! அதன் பின்னர் விஷ்ணுமூர்த்தி இந்திராதி தேவர்களைப் பார்த்து அமரர்களே! பாதாளத்தில் மகாயவுவனமான காந்தி லாவண்யங்களுடைய எண்ணிறந்த ஸ்திரீகள் இருக்கிறார்கள். அவர்களுடன் பலகாலம் பலவகையாகக் கல்வி செய்தவனே கல்வி செய்தவனாவான்! என்று கூறினார். அதைக் கேட்டதும் அமரர் காமாக்கினியால் தகிக்கப்பட்டு, எவ்வகையிலாவது பாதாளத்தையடைந்து அம்மங்கையர் சுகத்தை அனுபவிக்க வேண்டுமென்று உறுதி கொண்டு புறப்பட்டார்கள். அப்போது ஷட்குணைசுவரிய சம்பன்னனான சிவபெருமான் முற்றுணர்வுடையனாதலின் அவர்கள் கருத்தையுணர்ந்து, யாவனொருவன் இவ்வுலகை நீங்கிப் பாதாளஞ் செல்கிறானோ அவன் உடனே உயிரொழிக என்று கடுஞ்சாபமிட்டார். அதைக் கேட்டதும் அமரர்கள், ஐயோ! இவ்வகை கொடுஞ் சாபத்திற்கு யாது செய்வோம்? என்று தங்கள் மனதை திருப்பிக் கொண்டு தத்தம் புரத்தையடைந்தனர். சிறிது காலஞ் சென்ற பின்னர், சிவபெருமான் ஒரு காலத்தில் சிந்தாகுலமுற்றார் போன்றிருந்தார் அந்தச்சமயத்தில் உமாதேவி பெருமானைப் பார்த்து, சுவாமி! தாங்கள் எல்லாப் பூதங்களையும் படைத்தீர்கள் சராசரப் பிரபஞ்ச முடிவதற்கும் காரணமாக இருக்கிறீர்கள். இவ்வாறிருந்தும் தாங்கள் மனவருத்தமாக ஆலோசிக்க வேண்டிய காரணம் என்ன? என்று வினவினாள். அதற்கு சிவபெருமான் பிரியே! பாதாளத்திலிருக்கும் பெண்களின் திவ்யவடிவத்தைக் கருதிச் சிந்திக்கிறேன் திரிலோகங்களிலும் சிருஷ்டிமுதல் இது வரையில் அவ்விதமான சிறந்த அழகு வாய்ந்த ஸ்திரீகளே கிடையாது! என்றார். உடனே பார்வதி தேவி சுவாமி! தங்களுக்கும் வியப்பினையுண்டாக்கதக்க அழகுள்ள அப்பெண்களின் வடிவத்தைக் கட்டளையானால் நான் போய்க்கண்டு வருவேன் என்று கூறினான், அவ்வண்ணமே பார்த்து வருக என்று சிவபெருமான் அனுமதி கொடுக்க, பார்வதி விடை பெற்றுக்கொண்டு, கண்ணாடியில் முகபிம்பம் பிரதி பிம்பிக்குங்காலத்திற்குள் பாதாள லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தாள் அங்கிருக்கும் மங்கையர்கள் சூரியன்தான் இங்கு வந்ததோ என்று கூறத்தக்க பிரகாசமுள்ள பர்வதப் புத்திரியான பார்வதியைப் பார்த்தார்கள். ஆனால் தங்கள் ரூபலாவண்யத்தால் மகாகர்விகளாகி நல்லமொழிகளால் உபசரியாமலிருந்தார்கள். அம்மங்கையர் வடிவைப் பார்வதிதேவி பார்த்து பெண்களே! நீங்கள் திவ்யமான உருவத்தையடைந்திருக்கும் கணவரின்றிப் பலனற்றிருக்கிறீர்கள், அதியற்புத தேகமுடையவர்களாக இருந்தும், ஆகாயத்தில், புஷ்பங்களும் பழங்களுமிருந்தால் ஒருவருக்கும் பயன்படாத போலவும், ஆழமானதும் அகலமானதுமாகிய நீரில் பூத்திருக்கும் தாமரைகள் போலவும், நிஷ்ப்புருஷமாகிய இப்பாதாளத்திலிருந்து புருஷ சம்பவமின்றி உங்கள் வனப்பு அவலமாகிறது பிரமதேவன் பெண்களைப் புருஷர்களுக்கு உபயோகப்படும்படி படைத்திருந்தும் உங்களால் ஒருவருக்கும் பயனில்லை! என்று எடுத்துரைத்தாள். சுந்தரிகள் நெடுநேரம் யோசித்து பார்வதி என்று உணர்ந்து சாஷ்டாங்கமாகத் தண்டஞ் செய்து பலவிதமாகத் தோத்திரம் செய்து மகிழ்வூட்டுனார்கள். உமாதேவி திருவுள்ளங்களித்து ஓ கன்னிகைகளே, உங்களுக்குப் புருஷராயிருக்கத் தக்கவர்கள் உங்களைக் கருதிப் பாதாளத்துக்கு வர ஆயத்தமாயிருக்கையில், சிவபெருமான் அவர்களை நோக்கி, நீங்கள் பாதாளலோகஞ் சென்றால், உடனே இறப்பீர்களென்று சபித்துவிட்டார். எனவே அவர்களும் உங்களுக்குப் புருஷர்களாக மாட்டார்கள். ஞானவான்களாயும் மகாமந்திர பாராயண முடையவர்களாயும் தபோ நிஷ்டர்களாயும் மனுஷரூபம் வகித்து என் புதல்வர்களாகவும் சிவபெருமானுக்குக் கணங்களாகவுமிருக்கிறார்கள். அவர்கள் அதிரூபயவுவன சம்பன்னர்களாகவும் இருப்பதால் அவர்களைப் புருஷர்களாகக் கொண்டு பலவிதமான இரதி கேளிக்கைகளை அனுப்பவிப்பீர்களாக! என்று கூறி அந்தர்த்தானமானாள்.
முனிவர்களே! இவ்வண்ணமாக மகாவிஷ்ணுவும் ஒரு காலத்தில் தன் சகோதரர்களாகிய தைத்தியர்களைச் சங்கரித்து அவர்களில் ஓடினவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் ஸ்திரீகளைச் சரச சல்லாப உல்லாசமாக அநேககாலம் அனுபவித்து கொண்டிருந்தார், திரோதியுகத்தில் விஷ்ணுமூர்த்தி பிறகு ஸ்ரீராமவதாரஞ் செய்து சீதையை மணந்து அநேககாலங்கள் கூடி வாழ்ந்திருந்து அந்த சீதாதேவியின் தேகம் மறைந்த பிறகு மதனாவஸ்தையைத் தாளமாட்டாமல் பலவிதமாய்க் காம வேதனையை அனுவித்தாரல்லவா? துவாபரயுகாந்தத்தில் மீண்டும் அவ்விஷ்ணுவே மதுராபுரியில் வசுதேவனுக்கும் தேவகிக்கும் புத்திரனாகத் தோன்றி மகாபலவானாகி வாலிபத்திலேயே கோபிகாஸ்திரீகளுடன் பிருந்தாவனத்தில் விசேஷமான இரதிகிரீடையை நடத்தி, பத்துலக்ஷம் புத்திரரைப் பெற்று அதோடும் திருப்தியடையாமல் அதியவுவனத்தில் ருக்மணிதேவியைக் கவர்ந்து இராக்ஷஸ மணமாகக் கொண்டுவந்து மணஞ்செய்து பிரத்யும்னனாதி புத்திரரைப் பெற்று அதோடும் திருப்தியடையாமல் பிராக்ஜோதிஷபட்டணத்தின் மன்னனாகிய நரகாசுரனைப் பலாத்காரமாகச் சங்கரித்து அவனது ஆயிரம் மனைவியரையுங் கிரகித்துக்கொண்டு அவர்களோடு தொண்ணூறு புதல்வரைப் பெற்று மீண்டும் அத்தையாகிய ராதா என்னும் பெயரையுடைய ஸ்திரீயைக் கூடி, அநேகவிதமாகச் சுகமனுபவித்தும் இன்னும் எண்ணிறந்த பல பெண்களோடு பல வகையாகச் சுகமனுபவித்தும் திருப்தியடைந்திலர். சமானமான வயதுடைய ரூபயவுவன சம்பன்னர்களானஸ்திரீ புருஷர்கட்கு மன ஒற்றுமை உண்டாயிருக்கும் பொழுது அதுமோக்ஷ சுகத்தைக் காட்டிலும் விசேடித்த சுகமென்று நினைக்கும்படி இருக்கும். இவ்வாறு காமார்த்தமாயுள்ளவன் தர்மா தர்மத்தையுங் குலத்தையும் கவனிக்கமாட்டான் அது எப்படியென்றால் சாந்தமும் சர்வேஸ்வர தியானத்திலேயே பொருந்திய மனதும், மகத்துக்கட்கெல்லாம் மகத்தும், செந்நிற தேகமும் நான்கு முகங்களும் அயோ நிஜமும் வேதவேதங்கவுணர்ச்சியுமுடைய உலக குருவெல்லோருக்கும் பரமகுருவாகிய பிரமதேவன் ஒரு காலத்தில் திருமணக் கோலங் கொண்டிருந்த பார்வதிதேவியின் பாதத்தைக் கண்டு மனங்கலங்கி மீண்டும் ஜகன்மாதா விஷயத்தில் அபராதியானேனேயென்று பரிஹாரமாகப் பலவித விரதங்களிலிருந்து அம்மகாதேவியாரைப் பிரார்த்தித்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டான், இவ்வாறு மகாவிஷ்ணுவுக்கும் மன்மதனால் விளையவிருந்த தீமையைச் செயித்த பிரமதேவனுக்கும் சம்பவித்த காம விசேஷங்களை உங்களுக்குச் சொன்னேன்.
10. மன்மதன் ஆற்றலுக்கு வசப்பட்ட மகேஸ்வரர் கதை
மகரிஷிகளே! வெண்மை, செம்மை, நீலம் முதலிய நிறங்களையுற்றுப் பலவிதரூபங்களையடைந்து சாந்தம், கோபம், குரோதம், இந்திரீய, நிக்கிரகம் இச்சையின்மை ஆகியவற்றையுடைய சிவபெருமானுக்குச் சிருஷ்டி செய்து வைத்து விருப்புண்டாக்கி ஜலமும் பிராணிகளின் இதயமுந் தானமாகவுடைய நாராயணனைச் சிருஷ்டித்தார். அவ்வாறு படைக்கப்பட்ட நாராயணன் தவஞ் செய்து இறுதியில் திருப்பாற்கடலில் அநேக காலஞ்சயனித்திருக்க, அந்நாராயணனது உந்தியினின்று ரஜோ குணத்தால் பிரமன் தோன்றினார். அவர் முதலில் விருக்ஷ முதலிய ஐவகைத் தாமஸ் சிருஷ்டியைச் செய்து பின்னர் மானிடர் முதலான ராஜஸ சிருஷ்டியைச் செய்து இறுதியில் தேவர் முதலிய எண்வகைச் சத்துவ சிருஷ்டியையும், பின்னர் உலகங்கள் தர்மங்கள் பரிபாலனங்கள் ஜீவிதங்கள் ஆகாரங்கள் முதலிய சிருஷ்டிகளையும் செய்தார். அச்சிருஷ்டிகளிலெல்லாம் பரமாத்மா பிரவேசித்து விளங்கினார், இச்செயல்களெல்லாம் முடிந்த பின்னர் நாராயணன் துயிலொழிந்து, தான் சிருஷ்டி காமியாய்யோக நித்திரையிலிருந்தமையால் படைக்கப்பட்டிருக்கும் பிரபஞ்சத்தையும் ஜீவராசிகளையும் கண்டு இச்சகத்து யாரால் படைக்கப்பட்டதென்று ஆலோசித்தார். அப்போது ஓர் அக்கினி மயமான தாணுலிங்கம் தோன்றியது.
அது ஜ்வாலாகாரமாயும் மகா பயங்கரமாயும் திரிலோகங்களுக்கும் ஒரே ஸ்தம்பாகாரமாயும் ஆதிமத்தியாந்த மறிய வசமில்லாததாயும் அளவிட்டுரைக்க முடியாததாயும் தேஜோமயமாயும் விளங்கியது. பிரம்ம விஷ்ணுக்களிலிருவரும் ஒரு காலத்தில் ஒருவரையொருவர் சந்தித்து நான் பரம் நான் பரம் என்று தருக்கெய்தி வாதாடினார்கள். பிறகு கடலிடையே ஜோதி மயமாக விளங்கும் அந்தத் தாணுலிங்கத்தை நோக்கி, இங்கிவ்வாறு விளங்குவது யாது? என்று நினைத்து, இது நம் மிருவராலும் படைக்கப்பட்டதன்று. இது தானாகவே உண்டானதாகக் காணப்படுகின்றது இது. ஆதலால் நாமிருவரும் ஜெகத்காரணரென்று சொல்லிக் கொள்வது அவலம்! என்று காலம் நீங்கி இருவரும் சிநேக பாவமாக ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு, இப்பொருள் என்ன? இதனது வரலாற்றினை உணர வேண்டும்! என்று அடிக்கடி யோசித்து, அதைக் கண்டறிவதே நலமென்று தீர்மானித்துக் கொண்டார்கள். அப்பொழுது நான் இதன் அடியைக் காண்பேன்! என்று விஷ்ணுவும் முடியைக் காண்பேன் என்று பிரம்மனும் நியமித்துக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது அசரீரி பிரம்ம விஷ்ணுக்களே! இது சிவபெருமானேயன்றி பிறிதன்று அவர் உங்கள் வல்லபத்தையறியக் கருதி ஜ்யோதிர் மயமாக நின்றார். இந்தத் தாணுலிங்கத்தை நீங்கள் பூஜித்தால் மகத்தான இஷ்ட சித்திகளை அடைவீர்கள். புஷ்பம், கந்தம், தூபம், தீபம், நிவேதனம் முதலியவற்றால் தன்னை ஆராதித்தவர்கட்குச் சிவபெருமான் சந்தோஷமுற்றுப் பக்தவத்சலனாதலின் இஷ்டகாமியங்களைக் கொடுத்தருள்வார் என்று கூறியது உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் மலர் முதலிய பூஜா உபகாரணங்களால் தாணுலிங்கத்தை விதிப்படி பூஜித்து, வேதோக்தமாகத் துதித்து இஷ்டசித்திகளையெல்லாம் அடைந்தார்கள். மற்றொரு பக்கத்தில் சர்வேஸ்வரனும், காமாரியுமாக விளங்குஞ் சிவபெருமானும், தம் தேவியான பார்வதி தேவியாருக்குத் தம் உடலில் பாதி சரீரம் கொடுத்து அர்த்த நாரீஸ்வரர் என்ற பெயரெய்தி அடியவர்கட்கெல்லாம் சேவையளித்துக் கொண்டு விளங்குகிறார்.
மற்றொரு காலத்தில் பார்வதிதேவியை சிவபெருமான் திருமணம் புரிந்து இமாசலத்திலுள்ள ஒரு குகையில் பூதசேனைகளுடன் அநேக காலம் எழுந்தருளியிருந்து விளையாடினார். அப்பொழுது பார்வதிதேவி தனக்கிருக்கும் காளவடிவம் நீக்கிக் கவுரவ வடிவத்தை அடைவதற்கு விரும்பி அதை எவ்வாறு அடைவது என்று யோசித்து, தவஞ் செய்வதாகத் தீர்மானித்தாள். தன் நாயகர் தன் திருமணத்திற்கு முன்னரே கங்கையை ஜடாமுடி மேல் அணிந்திருப்பதால் இதுபோல இன்னும் வேறெவரையேனும் விருப்பமுறாமல், தன் தோழியாகிய உத்தாம குஸுமை என்பவளையும் தன் புதல்வனாகிய வீரகனையும் ஒவ்வொரு வாசலில் காவலாக வைத்து வேறொரு ஸ்திரீயையும் உள்ளே விடக்கூடாதென்று உறுதியாகக் கட்டளையிட்டாள். அவர்கள் அவ்வாறே வாயில் காப்பதாகக் கூறியதும் பார்வதிதேவி தபோவனத்திற்குச் சென்று தடாகங்களுடையதும் அரசர்கள் பூர்வம் வசித்துத் தவஞ் செய்ததும் ஜபந்தியென்னும் பெயருடையதுமான அங்கிருக்கும் ஒரு குகையைக் கண்டு இதுவே நல்ல இடம் என்று துணிந்து அங்கேயே தவஞ்செய்து கொண்டிருந்தாள்.
முனிவர்களே! இவ்வாறு ஜகன்மாதாவாகிய பார்வதிதேவி தவஞ்செய்து கொண்டிருக்கையில், ஆடி என்னும் பெயருடைய அசுரனொருவன் பிரம்மனை நோக்கிப் பலவிதமாகத் தவஞ்செய்ய பிரமன் பிரத்தியக்ஷமாகி, யாது வரம் வேண்டும் என்று கேட்டார் அதற்கு ஆடி அசுரன் நான் இறவாதிருக்க வரமளிக்க வேண்டும்! என்று கோரினான். உனக்கு இவ்வுடம்புடனே இறவாத் தன்மை கைகூடாது. அது கைகூடுவதற்கு ஏதேனுங் காரணங் கோருக! என்றார். பிரம்மா அதைக் கேட்டதும் தைத்தியன் சிருஷ்டிகர்த்தாவே! சந்திர தேவதாகமான நக்ஷத்திரத்தோடு கூடிய உருத்திர தேவதாகமான முகூர்த்தத்தில் இந்திரன் மேக காலங்களாற் பெருமழை பெய்விக்கையில் நான் மகா கபடியாய் வேற்றுருவம் எப்பொழுதெடுப்பேனோ அப்பொழுது மரணமடைய வேண்டும்! என்றான். அவ்வாறே நடக்குமென்று பிரம்மதேவர் கூறிவிட்டு அந்தர்த்தானமானார். அவ்வரத்தால் இறுமாப்புற்ற அசுரன் மதுபானஞ் செய்து மதங் கொண்டு ஹிமாசலத்தையடைந்து சிவபெருமான் இருக்கும் குகையைக் கண்டு குகை வாசலில் காவலிருக்கும் வீரகனையும் உத்தாம குஸுமையையும் பார்த்து அவர்களோடு உரையாடினான் அவர்களால் பார்வதிதேவி தவஞ் செய்யச் சென்றிருப்பது முதலிய சங்கதிகளை அறிந்து கொண்டு இப்பொழுது சிவபெருமான் தன் மனைவியைப் பிரிந்திருப்பதால் மதன விரகமுற்றிருக்கலாமென்று நினைத்து நான் இவ்வலியவடிவுடன் உட்புகுவதானால் துவார பாலகர் தடுப்பார்கள் என்று கருதி அவ்வடிவை நீங்கி சர்ப்ப ரூபந்தரித்துத் துவாரபாலகரறிய வொட்டாமல் குகைக்குள் நுழைந்து விட்டான். பிறகு அவ்வசுரன் சர்ப்ப உருவத்தை நீக்கிவிட்டு திவ்யமான கவுரீ ரூபத்தை க்ஷண நேரத்தில் வகித்துக் கொண்டு, சிவபெருமான் அருகில் சென்று, விரகவாதனையுடைய மங்கை போல காம போதையோடு எதிர் நின்று, சந்திர சேகரா! நான் பார்வதிதேவி நான் அருந்தவஞ் செய்து பொன்னறிமான தேகம் பெற்று வந்திருக்கிறேன், நான் விரகமுற்றிருக்கிறேன். என்னைக் கலந்தணைய வேண்டும் என்று கொஞ்சினான்.
சிவபெருமானோ ஒன்றுமறியாமற்போன்று ஆகா! அப்படியா? நீ என் மனைவியா? வந்தனையா? என்று தம் திருக்கரத்தால் அந்தப் போலிப் பார்வதியைக் கட்டியணைத்து புறந்தொழிலியற்றிக் கிரீடிக்க முயன்றார். அப்போது மாயாவிகாரமான அந்த ஸ்திரீயிடம் மயனால் நிர்மிக்கப்பட்டு விளங்கும் ஆண் அம்சம் ஒன்றைக் கண்டார். மாயை செய்ய வந்தவன் மிக்க மதியீனனேயாம் இவனைத் திரிசூலத்தால் சங்கரிப்பேன்! என்று சிவபெருமான் நினைத்தார். ஆனால் அவ்வசுரன் விரும்பிய படியே தம்மைக் கூடியதாகத் திருப்தியடையட்டுமென்று திருவுள்ளங் கொண்டு விசேஷமாக ரதிக்கிரீடை செய்வார் போலத் தோற்றுவித்தார் ஸ்திரீ வேஷமுற்று வந்திருக்கும் அசுரன், இச்சமயத்தில் சிவபெருமானை எவ்வகையிலாவது சங்கரிக்க வேண்டும் என்று துன்மார்க்க எண்ணங்கொண்டு, இவருடைய ஆண் அம்சத்தை அறுக்கவேண்டுமென்று எத்தனித்தான். சிவபெருமான் அவன் கருத்தையுணர்ந்து தம்முடைய அந்த அம்சத்திலிருந்தே சூலம் பாசம் முதலியவற்றை உண்டாக்கினார் அதனையுணர்ந்த ஆடி அசுரன் தன் பெண் வடிவு நீங்கி ஆண்வடிவையடைந்தான். அவனைச் சிவபெருமான் அவ்வாயுதங்களாலடிக்க, அவன் சிவபெருமானை நோக்கி, சர்வேசுவரா! நான் துர்ப்புத்தியுடைய அசுரன் உம்மால் அடிபட்டேன் ஆனால் நான் மடிந்த செய்தியை என் தமையன் கேட்டு மகா பல பராக்கிரமசாலியாய், உம்மை சங்கரிக்கக் கருதி பார்வதிதேவியின் வடிவு கொண்டு, இங்கு வந்து உம்மை கொல்வான். அல்லது என்னைப் போலவே மடிவான்! என்று சொல்லிக் கொண்டே நிலமிசை விழுந்து உயிர் நீங்கினான். அவனது தேகத்தை அப்புறப்படுத்திப் புத்திரனாகிய நந்திதேவருக்கு இச்செய்தியையும் மாதர்கள் மாயையில் மிகவும் வல்லவர்கள் என்றுங்கூறி அவ்வசுரன் வழங்கிய வார்த்தையை மனதில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
சவுனகாதி முனிவர்களே! தவச்செயல் மேற்கொண்டிருந்த பார்வதிதேவி புடபாக சோபிதமான பொன் நிறமுற்றுக்கவுரி என்னும் பெயருடன் திருக்கைலாயகிரிக்குத் திரும்பி வந்தாள். உத்தாமகுஸ்மை என்னும் தோழியானவள் தன் தலைவியும் லோகநாயகியும் பசுமை நிறமொழிந்து பொன்னிறமுமாக விளங்கும் பார்வதிதேவியைப் பார்த்து சமீபித்து நமஸ்கரித்து தாயே! உன் நாயகராகிய சர்வேஸ்வரனைக் காமார்த்தனாகவொட்டாமற் காக்க எனக்குச் சக்தியில்லாமற் போயிற்று, உன் புத்திரனான வீரகேசனது அஜாக்கிரதையால் அதியவுவன மங்கை யொருத்தி சிவபெருமானை நெருங்கி விட்டாள். பிறை சூடிய நம் பெருமான் அவளுடன் அநேகடிதமாகக் கிரீடித்திருக்கையில் யானும் அந்த ரதி சின்னத்தைக்கண்டு நாணமுற்றேன்! என்று கூறினாள். அதைக் கேட்டதும் பார்வதிதேவி வீரகன்மீது கடுங்கோபங் கொண்டு அவனைச் சபிக்க வேண்டுமென்று கருதி கிழக்கு முகமாகத் திரும்பி நீர் கொண்டு ஆசமனீயஞ் செய்து, என் புதல்வனான வீரகன் பிற ஸ்திரீகளை உள்ளே அனுப்புவதில்லை என்று என்னிடம் நியமஞ் செய்துகொண்டு தவறிய குற்றத்தினால் நரை திரை மூப்பினையடையும் மானிட தேகமுற்று ஒரு பிரமாணனுக்குப் புத்திரனாகுக! என்று சபித்தாள். நான் இங்கே சிறுதுகாலம் இராததால இவ்வளவு காரியங்கள் நடந்தனவே என்று ஆச்சரியமுற்றுத் தன் அந்தப்புரத்தையடைந்து அங்கிருக்கும் தன் புத்திரனான வீரகனைக் கோபத்துடன் பார்த்தாள். வீரகன் பார்வதியின் கோபத்தைப் பார்வையாலேயே உணர்ந்து தாயின் திருவடிகளில் வீழ்ந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து தாயே! ஆடி என்னும் அசுரன் மாயையால் சர்வேஸ்வரன் நலிவுறாமல் பிழைத்தது உன் தவப்பலனே, நீயே பாக்யவதி! என்று கூறினான். அதைக் கேட்டதும் துக்கித்து, வீரகா! உன் அஜாக்கிரதையாலல்லவா இவ்வளவு தீமைகள் விளைந்தன. ஆதலின் நீ அஞ்ஞானத்துடன் உலகத்தில் சிலாதன் என்னும் வேதியனுக்குப் புத்திரனாகத் தோன்றி பன்னிரண்டு வருஷங்கள் அவனிடம் வளர்ந்து, பின்னர் சாபவிமோசனம் பெற்று அத்தேகத்துடனே எனக்கும் புத்திரனாவாய்! என்று கூறினாள். அவ்வாறே வீரகன் சிலாத முனிவன் புதல்வனாய் ஜெனித்து, தனக்கு நியமித்துள்ள பன்னிரு வருஷங்களும் தவஞ்செய்து கொண்டிருந்து கிரமமாகப் பார்வதிதேவியாரிடம் மீண்டும் புதல்வனாக வந்து சேர்ந்தான்.
இவ்வாறு சூதமுனிவர் கூறியதும் சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி, சுவாமி! வீரகன் சிலாத புத்திரனாகப் பிறந்த சரிதத்தையுஞ் சொல்லவேண்டும்! என்று கேட்டார்கள் சூதபுராணிகர் கூறத் தொடங்கினார். சிலாதர் என்றது காரணப் பெயர்! அவர் பிள்ளைப் பருவத்தில்கன் வீட்டிற்குப் பிச்சைக்கு வந்த வேதியனது அன்ன பாத்திரத்தில் அவ்வந்தணன் அறியாது ஒருசிறு கல்லை எறிந்தார். அந்தணன் அச்சிறு கல்லுடன் உணவைப் புசித்தார். அவர் வயது வளருந்தோறும் விவேகவானாகி ஞானம் முதலியன குறைவின்றிப் பெற்றுத் தமது தவப்பலனால் பரமலோகங்களைத் தோழர்களுடன் சென்று பார்த்துவந்தார். யம புரத்தில் அந்தகனது அரசிருக்கைக்கருகே ஒரு பெரும் பாறையிருப்பதை அவர் பார்த்து இதென்ன இந்நல்ல இடத்தில் பெரும் பாறையிருக்கிறதே! என்று விசாரித்தார். உலகத்தில் ஒருவன் சத்பாத்திரமான பிரமாணனது போஜனத்தில் அவிவேகத்தால் கல்லெறிந்தான். அதுவே இப்பெரும் பாறையாக வளர்ந்திருக்கிறது. அவ்வாறு கல்லைப் போட்டவன் மடிந்தபிறகு இவ்வளவையும் எங்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டு அவன் புசிக்க வேண்டும்! என்றார்கள். அப்பொழுது அவருக்கு இது தன்னுடைய செயலேயென்று தெரிந்து மனந்துடித்து, இதற்கு ஏதேனும் பரிகாரமுளதோ? என்று வினவினார் யமகிங்கரர். அவன் இவ்வளவு பாறையைப் பூமியிலேயே அரைத்துக் குடித்தால் இது கரையும்! என்றார்கள் அதைத் தெரிந்து கொண்டு சிலாத முனிவர் தம் நகரத்தையடைந்து வினையுடைய பாறையொன்றைக் குறிப்பிட்டு,. சிவயோகம்! என்று அதில் சிறிதுடைத்துப் பொடித்துக் கரைத்துக் குடிப்பதுமாக அம்மலைவடிவான பாறையைக் கரைத்து விட்டார். யமபுரத்தில் தனக்காக வளர்ந்திருந்த பாறைச்சிலையை ஹதஞ் செய்த காரணத்தால் சிலாதரெனப் பெயரெய்தினார். பின் ஒரு காலத்தில் அவர் சகல வேதாகமங்களையுணர்ந்த சிவஞானச் செல்வராயிருந்தும் புத்திரப் பேறில்லார்க்கு முத்தியில்லை என்பதை உணர்ந்தவராய் பிள்ளைப் பேற்றை விரும்பித் திருவையாற்றிற்குச் சென்றார். அங்கு அவர் அயனரி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து சிவபெருமானுடைய திருமுன்னே நின்றுவணங்கி, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் செபித்துப் பஞ்சாக்கினி மத்தியில் ஒரு காலால் நின்று அநேக நாட்கள் தவம் செய்துகொண்டிருந்தார். சிவபெருமான் அத்தவத்திற்கிரங்கி ரிஷப வாகனத்தின் மீது பார்வதி சமேதராய் எழுந்தருளி வந்து, முனிவனே! நீ விரும்பிய வரத்தைக் கேள்! என்றார்.
எம்பெருமானே! அடியேனுக்கு ஒரு சற்புத்திரனைத் தந்தருளவேண்டும்! என்று சிலாதர் பிரார்த்தித்தார். சிவபெருமான் மகிழ்ந்து, சகல சற்குணங்களும் நிரம்பிய ஒரு புத்திரன் பதினாறு வயதுடையவனாய் நீ செய்யும் யாக பூமியில் உழுபடையின் மூலமாக வெளிப்படுவான் என்று கூறி மறைந்தார். பின்னர் சிலாதமுனிவர் யாகஞ் செய்யப் பொன்னேர் பூட்டியாக சாலையை உழுதபோது அக்கொழுவின் மூலமாக ஒரு மாணிக்கப் பெட்டித் தோன்றியது. அதை முனிவர் திறந்து பார்த்தார். அதனுள்ளே நெற்றிக் கண்ணும், இளம்பிறைத் தவழுஞ் சடையும் நான்கு தோள்களுமாக விளங்குஞ் சிவமூர்த்தத்தைக் கண்டு மயங்கித் தோத்திரஞ் செய்து நின்றார். அப்போது சிவபெருமான் அசரீரியாக முனிவனே! அப்பெட்டியை மூடித்திற! என்று கூறினார் அவ்வாறே மூடித்திறந்த பொழுது அவ்வெம்பெருமான் ஓர் இளங்குழந்தையாகி அழுதார். முனிவர் அக்குழந்தையை எடுத்து தமது மனைவியிடம் கொண்டு போய் பாலூட்டி வளர்த்து செப்பேசுவரருக்குப் பதினாறு வயதுவர அவரது தாய் தந்தையர் தம் புத்திரரது அற்ப ஆயுளைக் குறித்து வருந்துவதை உணர்ந்து, அஞ்சாதீர்கள், நாம் அழியாவரம் பெறுகிறேன் என்று தேறுதல் கூறித் திருக்கோயிலை அடைந்து அயனரி தீர்த்த மத்தியினின்று அருந்தவஞ் செய்தார். சிவபெருமான் ரிஷபவாகனத்தின் மேல் உமாதேவியாரோடு எழுந்தருளி செப்பேசுவரனுக்கு நித்திய தேகந்தந்து அவரது திருமுடியின் மேல் திருக்கரம் வைத்து தீøக்ஷ புரிந்து அவருக்குரிய பண்டைய சாரூப்பியமளித்து, திருநந்திதேவர் என்று அபிஷேகத் திருநாமஞ் சாத்தி, குருசதானம், விளங்க வேத சிவாகமங்களைச் சனத்குமாரர் முதலிய முனிவர்களுக்கு உபதேசிக்கக் கட்டளையிட்டார். பிறகு நந்திதேவனுக்கு சுயசை என்னும் கன்னிகையைத் திருமணம் புணர்த்திச் சிவகணங்களுக்குத் தலைவராயிருந்து சகல சிவாலயங்களிலும் அதிகாரஞ் செலுத்தும்படி சுரிகையும் பிரம்பும் கொடுத்தருளினார். முனிவர்களே! நந்தி எம்பெருமான் பார்வதி தேவியாருக்கு புத்திரராகத் தோன்றிய சரிதமுஞ் சொன்னேன் இது நிற்க! பொன்னிறத்துடன் வந்த பார்வதிதேவி திரிபுரதகனராகிய சிவபெருமானைச் சாஷ்டாங்கமாகப் பணிந்தாள், சிவபெருமான் முன் ஆடி என்னும் அசுரன் கூறியபடி அவன் தமையன் வரவில்லை பார்வதியே வந்தாள் என்று சந்தோஷத்துடன் வரவழைத்து ஆனந்தித்திருந்தார்.
சிறிது காலஞ்சென்ற பின் தாருகாவன முனிபத்தினிகள் பேரழகிகளாய், கற்பில் மேம்பட்டு இறுமாப்பு அடைந்தார்கள். அவர்கள் கற்பையழித்துக் கர்வபங்கம் செய்ய வேண்டுமென்று சிவபெருமான் நினைத்தார். பிரதம கணங்களுடன் பச்சைகர்ப்பூரம் முதலியன கூட்டிய விபூதியை உடல் முழுதும் உத்தூளனமாக அணிந்து, திகம்பரராய்(நிர்வாணராய்) மயிற்பிஞ்ச புஞ்சங்களைக் கையில் தாங்கி யோகதண்டத்தில் கட்கம் கதை முதலியன கட்டித் தொங்கவிட்டுப் பூர்ணச் சந்திர கண்டமோ வென்று சொல்லத்தக்க கபாலத்தைக் கரத்திலேற்று காந்தியும் யவுவனமுற்றுச் சென்றார். அவர் ஸ்தீரிகளைப் பிரமிக்கச் செய்து புன்சிரிப்பாகிய சந்தோஷத்தால் விநோதங்கள் காட்டிக் கொண்டு ஆகாயத்தில் தோரணமாகக் கட்டிய நீலமலர்களோ வென்று சொல்லத்தக்க மனோரம்மியமான திருமுகமும், முனிமங்கையர் மோக முறும்படிப் பார்த்து அசைந்து கொண்டிருக்கும் மதர்த்துப் பரந்த விழிகளும், பூரித்த தேகமும் செங்கமலம் போன்ற கரங்களும், பாதங்களும், நல்ல மலர்மாலைகளும், ஆபரணங்களுமுடையவராய்த் தாருகாவனத்தை அடைந்தார். பதினான்கு தோஷங்களற்றதும், மந்தரதார மத்திம ஸ்வரங்களுடன் கூடியதும், பலவகைத் தாளங்களையுடையதும், ஆரோகண அவரோகணாதி மூர்ச்சைகளையுடையதும் இசை ஏழினையுடையதுமாய்ப் பலவித பாஷா பேதங்களோடு கூடிய தோற்கருவி, துறைக்கருவி, கஞ்சக்கருவி, நரம்புக் கருவியோடு கூடிய தாயுள்ள கானத்தைப் பூதகணங்களோடு பாடிக்கொண்டும் சிறிது நேரம் ஆடிக்கொண்டும் ஆச்சரியமாகச் சிரித்துக் கொண்டும் நதிகளின் கரையில் வசித்துக் கொண்டும் தன்கணங்களிலொருவராக வந்திருக்கும் விஷ்ணுமூர்த்திக்குத் தன்சாந்த ரஸத்தோடு கூடிய நாட்டியத்தைக் காட்டிக் கொண்டுமிருந்தார்.
அவ்வாறிருக்கையில், வசிஷ்டர் மனைவியான அருந்ததியைத்தவிர மற்ற ரிஷிபத்தினிகள் அனைவரும் இந்நிச்சலமான வனத்தில் யாரோ ஒருவன் ஒரு கிராத ஸ்திரீயுடன் வந்து மதுரமான திவ்யப் பாடல்களைப் பாடிக் கொண்டு முனிவர்கள் ஆச்சிரம மத்தியில் வெட்கமின்றி பிச்சையெடுக்கிறான். அழகோ அற்புதமானது! என்று ஆலோசித்தார்கள் அப்பத்தினிகளில் சிலர் மோக மயக்கத்தால் மூர்ச்சித்தார்கள். சிலர் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் பெருங்களிப்பால் கண்ணீர் விட்டார்கள். சிலர் காம விகாரத்தால் காம சேஷ்டை செய்து கொண்டுருந்தார்கள். சிலர் காமத்தால் உடை சேர்ந்தார்கள். இவ்வாறு அந்த ஸ்திரீகள் மன்மதாவஸ்தைப் பட்டுக்கொண்டு வசிஷ்ட பத்தினி நீங்கலாக மற்றெலோரும் காமக்கடலில் ஆழ்ந்து திகம்பரரோடு எவ்வாறாவது பேசவேண்டுமென்று சில வார்த்தைகள் பேசலானார்கள். ஓ சுந்தரா! ஏன் இந்த தவவேடம் தரித்தாய்? இத்தவத்தால் யாது பயன்? தவத்தை போக சித்தி கருதிச் செய்கிறது உலகவழக்காதலின் அவ்வகைய போக சித்தியும் உனக்குப் பரதாரங்களாகிய எங்களால் சித்தியாகும் புண்ணியஹீனனாகிப் புருஷனை பரஸ்திரீகள் ஒரு போதுங் கோர மாட்டார்கள். நாங்கள் உன்னிடத்தில் பெருவிருப்புடையோமாதலின் எங்களை நீ புறக்கணிக்க வேண்டாம், அநேக புண்ணியத்தால் கிடைக்க வேண்டியது உனக்குச் சுலபத்தில் கைகூடும்போது விட்டுவிட வேண்டாம். திவ்விய தேகமுடைய உன்னைக் காணுந்தோறும் எங்களுக்கு கிருபை உண்டாகிறது! இதுபோலப் பல பேச்சுகளைப் பேசிக் கொண்டும் இறைவன் பிக்ஷõர்த்தமாகச் செல்லுகையில் அவரைப் பின் தொடர்ந்தும் ரிஷிபத்தினிகள் செல்லலானார்கள். அத்தாருகவன ரிஷிகளோ தங்கள் மங்கையர் கற்புநிலை தவறியவற்றை அறிந்து மனந்தாளாராய் பலவித சாப மொழிகளைப் பகர்ந்தார்கள். அவை சிவபெருமானைச் சிறிதும் நெருங்கவில்லை. ஆனால் வசிஷ்டரும் அருந்ததியும் திகம்பரராக வந்தவர் சிவபெருமானென்றும் உடன் வந்த மாது-மலையரசன் புத்திரி என்றும் கணங்களாக வந்தோர் விஷ்ணுவாதி தேவர்களென்றும் உணர்ந்து பலவிதமாகப் பூசித்தார்கள். சிவபெருமான் அகமகிழ்ந்து அருந்ததியை நோக்கி, உன் கணவன் வாலிபனாகுக என்று வரங்கொடுத்தருளினார். தாருகவன முனிவர்கள் திகம்பரனாகிய சிவபெருமானை ஒன்றுஞ்செய்ய இயலாதவர்களாய் தங்கள் சாபங்கள் பலியாவாயினும் அதற்குப் பதிலாகப்பலவித ரோகங்களாலும் வறுமையாதிகளாலும் துன்பங்களாலும் பீடிக்கப்பட்டவர்களாய் யாது செய்வோம் என்றும் வசிட்ட முனிவரையும் பிரமதேவரையும் வினவி அது சிவ நிந்தையின் பலன்! என்று உணர்ந்து சிவலிங்கார்ச்சனை செய்து சிவபெருமானின் திருவருளை அடைந்தார்கள்.
முனிவர்களே! இதனால் காமஇச்சை சிவபெருமானைப் பாதித்ததென்று ஒருபோதுஞ் சொல்லக் கூடாது சப்தாதி விஷயங்களும், மாயா சம்பந்தமான போகங்களும் மாயையும் அச்சர்வேசுவரனிடத்து லயமடைய வேண்டியனவே யாதலின், காமரூபமான சாஞ்சல்லிய தோஷமானது ஆத்மஸ்வரூபியான பரமசிவத்துக்குத் தோஷமாகக் கொள்ளப்பட்டது உலகத்தில் பதிவிரதா ஸ்திரீகளும் சித்தர்களாகிய புருஷர்களும் இருவரும் இல்லற தருமம் நடத்தி, சற்பாத்திரமாகிய அதிதிகளைப் பூஜிக்கிறார்களேயன்றி நீசர்களாயும் தனவான்களாயும், அஞ்ஞானிகளாயும், மோக்ஷஞானமில்லாதவர்களாயும், ரோகவான்களாயும், பதிதர்களாயும் காமக் குரோதாதிகளாயும் சீதோஷணங்களாலும் எப்போதும் துக்கமனுபவித்துப் புத்திர வாஞ்சை முதலிய விருப்பத்தால் மனோசஞ்சலப்பட்டுக் கொண்டு அதிதி பூஜை முதலிய சத்கருமங்களைச் செய்யாது காமத்தாற் பீடிக்கப்பட்டிருக்கும் தீயோரைப் போன்று இல்லறத்தை மேற்கொண்டவர்களல்லர் உலகத்தில் கிரகஸ்தாச்சிரமத்தைச் சார்ந்தவர்களில் சிவபெருமானையே அதிதியாகக் கொண்டு பன்னிரண்டு வருஷகாலம் ஆசனம் போஜனம் ஸ்நானம் முதலியவற்றினால் உபசரித்தவர்கள் வசிஷ்டரையன்றியாவர் இருக்கின்றனர்! சிவபெருமானைக்கண்டு அவர் அழகில் மோகம் கொள்ளாத ரிஷிபத்தினிகளில் அவ்விசிஷ்ட முனிவர் மனைவியான அருந்ததியையன்றி யார் இருக்கிறார்கள்? இப்பொழுதும் உலகத்தில் விவாக காலத்தில் மணமக்கள் இருவரையும் அருந்ததியைப் பார்க்கச் சொல்லி, இவ்வருந்ததியைத் தரிசித்தால் உனக்கு மகாபதிவரதா ஸ்வரூபமும் புத்திரபாக்கியம் முதலியனவும் உண்டாகும். இந்த அருந்ததி பூர்வத்தில் சிவபெருமான் யவுவன வேடந்தரித்துத் திகம்பரராய் வந்த காலத்திலும் மனங்கலங்காதக் கற்பினையுடையவள் ஆதலின் அவ்வருத்ததியைத் தரிசித்து என் கணவன் எப்பொழுதும் என்னிடத்தில் அன்புடையவராகவும் தனவானகவும், பிற மகளிரைக் கலத்தலின்றி என்னையே கூடிவாழ்ந்து சந்ததி விருத்தியை உண்டாகவுந் தயை புரியவேண்டும் என்று கூறச்செய்து அவ்விருவரையும் நமஸ்கரிக்கச் செய்கிறார்கள். அவ்வருந்ததியின் கற்பின் பெருமையை யாதென்று சொல்லத் தகும்! சிவபெருமானும் விஷ்ணுமூர்த்தியும் பிரமதேவனும் மற்றெல்லோருங் காமத்தின் வழி மனஞ் செலுத்தினவர்களேயாவர். மகரிஷிகளே! எல்லா முனிவர்கட்குஞ் சற்குருவும் பார்வதிநாயகனும் மதனவிகார சூனியனும் தேவ தேவனுமாகிய சிவபெருமானுடைய லீலா காம விகாரம் முழுவதையும் உங்களுக்குச் சொன்னேன் இன்னுஞ் சிலவற்றைச் சொல்கிறேன் கேளுங்கள்.
11. காமனுக்கு வசப்பட்டவர்களின் கதைகள்
முனிவர்களே! இந்திரன் பூர்வத்தில் யக்ஷர் தானவர் தைத்தியர் முதலானோரை ஜெயித்து தேவர், அசுரர் உரகர் முதலானவர்களைத் தன் சுவாதீனஞ் செய்துகொண்டு புலோமசை மனைவியோடும் பேரழகு வாய்ந்த எண்ணிறந்த அப்சரக் கன்னிகளோடும் இன்பந்துய்த்து, மூவுலகங்களையும் அரசு செய்து காமவிகாரத்தால் மோகமுற்றான். தவத்தால் என்பு மாத்திரமாயிருக்க இளைத்த தேகமுடைய கவுதம முனிவருடைய தர்மபத்தினியான அகல்யா தேவியை அனுபவிக்க இந்திரன் விரும்பி பர்ணசாலையில் அகல்யா தனித்திருக்கும் போது இந்திரன் அம்முனிவரை வஞ்சித்து அகல்யாவிடம் காமசுகத்தை அனுபவித்து, அவளை விட்டுப் பிரியமுடியாமல் மோகசித்தத்தால் அங்கேயே இருந்தான். இந்திரன் அகல்யைக் கூடிமகிழ்ந்து கொண்டிருக்கையில் கவுதம முனிவர் பழம், கிழங்கு முதலியனவற்றைச் சேகரஞ் செய்து கொண்டு தன் பர்ணசாலைக்குத் திரும்பி வரவே, அகல்யை ஐயோ! சர்வேசவரனே போன்ற என் கணவனை விட்டு மதியீனமாகக் கற்பிழந்தேனே! என்று பயமுற்று ஒன்றுஞ் செய்ய முடியாமல் ஸ்தம்பாகாரமாக நின்றாள். கவுதமர் ஆச்சரியமுங் கோபமுங் கொண்டார். இந்திரன், மகாமுனிவரின் மனைவியைக் கூடிக் கலந்தேனே! என்று பயமும் நாணமுமுற்றுத் துண்ணென்றெழுந்து சென்றான். கவுதமர் பிரளய காலாக்னி ருத்திரர் போலக் கொதித்து அடா துஷ்டா என்னை வஞ்சித்து என் மனைவியை நீ அந்தரங்கமாகக் கூடி மகிழ்ந்தாய் காமாதுரத்தாற் பரதார சம்போகஞ் செய்த உனது பீஜங்கள் நிலமிசை விழக் கடவன? என்று தன் கரத்தே வைத்திருந்த யோகதண்டத்தைப் பூமியிலடித்துச் சபித்தார். அவ்வண்ணமே இந்திரனுடைய விருஷணங்கள் விழுந்து போயின அதனால் அவன் ஆண்மையற்றவனானான். தேவர்கள் யாவருங் கூடி மேஷத்தின் அண்டத்தைக் கொண்டு வந்து இந்திரனுக்கு அண்டமாகச் சேர்த்து வீரிய வந்தனாகச் செய்வித்து மேஷபிருஷ்ணன் என்ற காரணப் பெயர் சூட்டினார்கள். இவ்வண்ணம் இந்திரன் மீண்டும் வீரிய வந்தனாகச் செய்யப் பட்டதைக் கேள்வியுற்ற கவுதம முனிவர், இவன் ஓர் பெண் உறுப்பைக் கருதி இவ்வளவு பாடுபட்டமையால் இவன் உடலெல்லாம் பகக்குறியும் (பெண் உறுப்பும்) இலங்கையிலிருக்கும் இராவணன் முதலிய ராக்ஷஸர்களால் சுமார் இலக்ஷ வருஷங்கள் சிறையிருப்பும் பெறுக என்று சபித்தார். அச்சாபத்தால் தேவேந்திரனுக்கு இந்திரப்பட்டம் ஸ்திரமில்லாததாயிற்று. பின் அதிரூபவதியாய்ப் பரபுருஷனைக் கூடி மகிழ்ந்த அகல்யையை, கவுதமர் பார்த்து பெண்ணே! நீ கல்லைப் போல பிறபுருஷன் கையில் கிடந்தாயாகையால் அப்படியே கல்லாகுக என்று சபித்தார். அகல்யை தன் கணவரைப் பணிந்து ஸ்வாமீ! இச் சாபம் எனக்கு எப்பொழுது நீங்கும்? அதை விரைவில் விலகும்படி கிருபை செய்தருள வேண்டும் என்று கேட்டாள்.
அசுரகுலமாகிய காட்டிற்கு அக்கினியாகிய திருமால் இராமாவதாரஞ் செய்யப் போகிறார். அக்காலத்தில் அவருடைய ஸ்பரிசத்தால் உன் நிஜவடிவை நீ மட்டும் அடைவாய் என்று சாபானுக்கிரகஞ் செய்ய அகல்யை அவ்வண்ணமே பாறையாய்க் கிடந்தாள். இந்திரனும் தான் பெற்ற சாபப்படி உடல் முழுதும் பெண் உறுப்புடையவனாகி காணுதற்கும் அருவருப்புடன் விஷ்ணு மூர்த்தியை ஆராதித்து அவர் கிருபையால் அக்கவுதமர் அனுக்கிரகிக்க அவை பிறர் கண்களுக்குக் கண்களாகவும் தன் கண்களுக்குமட்டும் குறிகளாகவும் காணுமாறு விமோசனம் பெற்று மகிழ்ந்தான். இந்திரன் கவுதம முனிவரால் இவ்வளவு துன்பத்தை அனுபவித்தும் புத்தி வராமல் மீண்டும் ஒரு காலத்தில் சுõமார்த்தனாகி பாரிக்ஷிதன் என்னும் அரசன் மனைவியும் ரூபலாவண்யங்களுடையளுமாகிய வபுஷ்டமை என்னும் பெயருடைய ஸ்திரீயைக் கண்டு அவளது இளமை வளத்தை மனத்திற் கொண்டான். எவ்வகையிலேனும் நான் இவளைக் கூடி மகிழ வேண்டும் என்று கருதிப் பலகையாக முயன்றும் பயனுறாது இறுதியில் மானிடதேகமெடுத்து அவளது அந்தப்புறத்திற் சென்று பலவிதமாகச் சமயம் பார்த்து வஞ்சிக்க யத்தனித்துத் தன் கோரிக்கை முடிவுறாது வருந்திக் கொண்டிருந்தான். அப்போது வபுஷ்டையின் கணவன் அசுவமேதயாகஞ் செய்ய உத்தம லக்ஷணம் அமைந்த யாகப் பசுவாகிய அப்புரவியைக் கொல்வதை இந்திரன் பார்த்து இதுவே நல்ல சமயம் இதை விட்டால் இனிக்கிட்டுமா காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று கருதி, உயிர் நீத்த அப்புரவியின் தேகத்திற் புகுந்து நின்றான். யாக முறைப்படி இறந்த குதிரையின் களேபரத்திற்கும் யாககர்த்தாவின் மனைவிக்குந் தேகசம்பந்தஞ் செய்ய வேண்டி அவ்வாறு செய்ய குதிரையை அவ்விரஜஸ்திரீயோடு சேர்த்தார்கள். அப்போது குதிரையுட் பிரவேசித்திருந்த இந்திரன் தன் விருப்பம் கைகூடிற்று என்று சந்தோஷித்து அவ்வபுஷ்டமையைக் கூடித் திருப்தியடைந்தான். அந்த யாகத்திற்கு பசுவாக வந்த புரவியில் இந்திரன் புகுந்து விபசாரஞ் செய்தானாகையால் அவ்யாகம் பலனற்றதாயிற்று. இந்திரன் காமத்தால் இத்தகைய அடாத காரியங்களையுஞ் செய்தான்.
சவுனகாதி முனிவர்களே! இன்னும் பிறதேவர்களின் காமச் செயல்களையுஞ் சொல்கிறேன் கேளுங்கள். ஒரு காலத்தில் அக்கினிதேவன் சப்தருக்ஷிகளின் மனைவியார் மீது மோகித்துக்காம விகார முற்றான். அம்மாதர்கள் தனக்குச் சுகங்கொடாமையால் விரக்தனாகி வனத்தையடைந்து மன்மத வேதனையால் தவித்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் தெய்வீகமாகவும் விதிவசமாகவுஞ் சம்பவித்த கிருத்திகைப் பெண்கள் அறுவரும், மகாபதி விரதையாகிய அருந்ததி நீங்கலாக ஏனைய ரிஷிபத்தினிகள் அறுவரது வேடந்தாங்கி, அக்கினி தேவனுடன் கூடி, அவனைக்காமதுரத்தினின்றும் தப்பிப் பிழைக்கச் செய்தார்கள். அக்கினியும் ஷட் கிருத்திகைகளுடன் கூடிக்களித்தது போல, தன் மனைவியாகிய ஸ்வாகாதேவியுடன் கூடியக்காலத்திலும் அவ்வளவு இன்பம் அனுபவித்ததில்லை சிறிது காலம் சென்ற பின்னர், தென்திசையிலுள்ள மாஹீஷ்மதி என்னும் பட்டணத்தை வேதியவடிவுடன் அடைந்து, அப்பட்டணத்தின் அரசனான நீலன் என்பவனின் அதி சவுந்தரிய யவுவனமுள்ள மனைவியருடன் கூடி மகிழக்கருதினான். அதையறிந்ததும் அரசன் நீலன் உடனே அக்கினி தேவனைப் பிடித்துத் தன் ஊழியக்காரனாகக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டான். அக்கினிதேவன் அவ்வாறு அநேக காலம் இருந்துகொண்டு ஒரு சமயம் மாயையால் ஜ்வாலை வடிவமாகப் புறப்பட்டு விருப்பின் படி போனான்.
இனி வாயுதேவன் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் உலகங்களுக்கு ஆயிர்ப்பூதமும் மகா பலமுடையவனுமாவான். தாவர சங்கமங்களாகிய பிரபஞ்சத்தின் தேகத்தில் பிராணன் அபானன் வியானன், உதானன் சமானன் என ஐவகையாக இயங்குபவன். இந்திரனின் உலகம் முழுவதும் சஞ்சரிப்பவன் திதிபுத்திரனாக இருந்தும் இந்திரனின் இரக்கத்தால் தெய்வத்தன்மை பெற்றவன். எப்போதும் யோகியரால் பரமாத்மஸ்வரூபம் என்று தியானிக்கபட்டவன். நித்தியன் ஜகத்சிரேஷ்டன் அத்தகைய வாயுதேவனும் காமத்தால் பீடிக்கப்பட்டு பிருமாவின் பவுத்திரனான குசனாபன் என்பவனின் புத்திரிகள் நூற்றுவரைக் கண்டு மோகித்தான். அவர்களது இளமை கட்டழகு தேககாந்தி, நாணம் ஆகியவற்றைக் கண்டு அவர்களை எப்படியாயினும் கூடியனுபவிக்க வேண்டும் என்று காமம் மிகவும் கொண்டு, பலவித உபாயங்களையும் கையாண்டான். ஆனால் அவை எதுவும் பயன்தரவில்லை நூறு கன்னிகைகளும் ஒரே மாதிரியான குணப்பண்புகளோடும் அழகோடும் விளங்கினார்கள். எனவே வாயுத்தேவன் அவர்கள் முன்னால் தோன்றி நூற்றுவராக இருக்கும் கட்டிளம் பெண்களே! வாயுதேவனான நான் காற்றுக்கும் அதிபன் மூவுலகில் உள்ளவர் அனைவராலும் போற்றிப்பூஜிக்கப்படுபவன். பரமாத்ம ஸ்வரூபி! ஜகத்சிரேஷ்டன் கிழத்தன்மையும் மரணமும் இல்லாதவன் சகல பொருட்களையும் அனுபவிப்பவன் எல்லாஜந்துக்களையும் படைத்தவன் எல்லாப் பிராணிகளுக்கும் ஜீவபூதமாக இருப்பவன். அமிர்தமயமானவன் இத்தகைய சிறப்பு வாய்ந்த நான் உங்களிடம் யாசிக்கிறேன் நான் மிகவும் காமவயப்பட்டுத் தாபம் தணிவதற்காக உங்களிடம் நேரில் வந்திருக்கிறேன் எனக்கு உங்கள் தேகங்களைப் போகார்த்தமாகக் கொடுக்க வேண்டும் என்றான். அதைக் கேட்டதும் நூறு பெண்களும் கலகலவென்று சிரித்து ஏளனம் செய்து நீ எத்தகைய சிறப்புடையவனாயினும் பரமாத்மாவேயானாலும் எத்தகைய சிறப்புடன் பிறந்திருந்தாலும், எந்தப் பரமாத்மாவுக்குப் ப்ரீதியான பக்தனாயினும் பரமாத்மாவின் அபரரூபியாயினும் காரிய நிமித்தமாக ஜனித்தவனாயினும் ஆகுக ஓ, கிழவனே! நீ எங்களுக்குக் கணவனாக வேண்டாம் எங்கள் தந்தையின் கட்டளைப்படி நாங்கள் கன்னிப் பெண்களாகவே இருக்கிறோம். ஆகையால் எங்கள் தகப்பனார். எங்களை யாருக்குப் பத்தினிகளாகக் கொடுப்பாரோ அவருக்கே நாங்கள் வசியமாவோம்! என்றார்கள். அதைக்கேட்டதும் வாயுத்தேவன் கோபங்கொண்டு அவர்களையெல்லாம் குப்ஜர் (சிறிய தேகமுடையவர்) களாகவும் விகாரரூபிகளாகவும் ரோகிகளாகவும் மாறும்படி செய்தான். சில நாட்கள் சென்றன, அப்பெண்கள் பிதாமகனான குசமுனிவர் அவர்களது சரிதத்தைக் கேட்டு, தம் தவவலிமையினால் அவ்வனிதையர்கள் யாவரையும் முன்பு இருந்த சவுந்தரியத்தோடும் ஆரோக்கியத்துடனும் இருக்கச் செய்தார். பிறகு அக்கன்னிகைகளை, வாயுதேவனுக்கேத் திருமணம் செய்து கொடுத்தார் இது நிகழ்ந்தராஜ்ஜியம் இன்றும் கன்னியாகுப்ஜம் என்று வழங்கப்படுகிறது.
முனிவர்களே! இனி சூரிய பகவானின் விஷயத்தைச்சொல்கிறேன் அவன் பிரளய காலப்பெருநெருப்பைப் போன்றவன். பிரசண்டமான கிரணங்களையுடையவன் பயங்கர ரோமங்கள் நிறைந்த நெருப்புமலை போன்ற விழிகளும் ஆகாயத்தில் வசித்தலும் யோகியரது தியானத்தால் புகழும் பிரமாதி தேவர்களால் சதா அர்ச்சனையும் கொண்டவன் அத்தகைய சூரியபகவானோ துவஷ்டா என்பவருடைய புதல்வியான சஞ்ஞிகையைக் கண்டு காம வசப்பட்டு அவளையே, மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் ஆசையால், பலவிதமான இன் சொற்களால் சஞ்ஞிகையிடம் கெஞ்சிக் கூத்தாடினான். ஆனால் சஞ்ஞிகையோ சூரியனின் உருவத்தை உற்றுநோக்கி நீ தீக்ஷண்யமான தேகமுடையவன் ஆகையால் உன்னோடு கூடிச் சங்கமிக்க எனக்குச் சக்தியில்லை என்றாள். சூரியனோ பெண்ணே! நான் விரும்பும் வடிவை எடுப்பேன்! என்றான். உடனே சஞ்ஞிகை, புன்னகை செய்து நீ என் விருப்பத்திற்கு இணங்குவது உண்மையானால் என் தந்தையால் செய்யப்படும் சாணையில் ஏறவேண்டும்! உன்னை என் தந்தையும் தேவர்களும் சாணைபிடித்து, உன்னுடைய விசேஷமான தேஜஸை நீக்குவார்கள். அதனால் மந்ததேஜஸை அடைவாய் அப்போது நான் உன்னை மணப்பேன்! என்றாள் காமம் மிகவும் கொண்ட சூரியன் சம்மதித்தான். சாணையில் ஏறினான் தேவர்களும் துவஷ்டாவும் அவனைச் சாணைப்பிடித்துத் தேய்த்தார்கள். அப்போது சூரியனின் உடலிலிருந்து உதிர்ந்த பொடிகளைக் கொண்டு தேவர்கள் சுதர்சனம் முதலான ஆயுதங்களைச் செய்து கொண்டார்கள், அதன் பிறகு சூரியனை சஞ்ஞிகை மணந்து சிறிது காலம் இன்பத்தின் திளைத்து வந்தாள். மீண்டும் சூரியனின் உடல் வெப்பத்தைச் சகிக்கமுடியாமல் பெண்குதிரையின் வடிவமெடுத்து விலகி ஓடினாள். அதைக் கண்டதும் சூரியனும் ஆண் குதிரையின் வடிவமெடுத்து மோகத்தோடு பெண் குதிரையான சஞ்ஞிகைகையப் பின் தொடர்ந்து சென்றான். அதை சஞ்ஞிகை பார்த்ததும் தன் பெண் அம்சத்தை மறைத்துக் கொண்டு எதிர்முகமாக நின்றாள். அப்போது சூரியனின் தேஜஸ் பெண் குதிரையின் முகத்தில்விழ, அதை அவள் நாசிகாரந்திர வழியாக ஆக்கிரணித்தாள். அதனால் அவளுக்கு நாசிவழியாக இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள், அவர்களே தேவ வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள்! பிறகு, சில காலஞ்சென்றதும் சஞ்ஞிகை, வைவஸ்வதமனு, யமன், யமுனை ஆகியவர்களைப் பெற்றெடுத்தாள் பின்னரும் சூரியனது உடல் சூட்டைத் தாங்கமுடியாமல் தன் சாயையைத் தந்திரமாக நிறுத்தினாள் சூரியன் காமத்தால் சாயையைக் கூடியனுபவித்தான். அதனால் சாவணி மனு சனி என்பவர்களையும் பத்திரை என்ற பெண்ணையும் சாயாதேவி பெற்றெடுத்தாள், பிறகு சூரியன் ராஜகன்னிகையான குந்தியால் பிரார்த்திக்கப்பட்டு காமார்த்தனாக அவளுடன் கூடியனுபவித்தான் அதன் விளைவாக கவசகுண்டலங்களுடன் கூடிய ஒரு புத்திரன்(கர்ணன்) பிறந்தான். அப்புத்திரனை கன்னித்தாயான குந்தியிடமே விட்டு விட்டுச் சூரியன் போய் விட்டான்.
இனிச் சந்திரன் விஷயத்தைக் கூறுகிறேன். பாற்கடலைக் கடையும்போது அத்திரி முனிவரின் மனைவியான அநுசூயா தேவியின் கர்ப்பத்திலிருந்து தோன்றி உலகத்துக்கெல்லாம் ஆனந்தகரத்துடன் விளங்குபவன் சந்திரன். அவன் விஷ்ணு மூர்த்தியால் பயிர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் பிராமணர்களுக்கும் பிரபுத்தன்மை பெற்று மகாபல பராக்கிரமசாலியாய் இராஜசூய யாகஞ்செய்து, தக்ஷனுடைய குமாரிகளான இருபத்தேழு பெண்களையும் திருமணம் புரிந்து கொண்டான். ஆனால் அவ்விருபத்தி ஏழு பத்தினிகளிடமும் சமமான அன்பு காட்டாமல்,அவர்களில் ரோகிணி என்பவளிடம் மட்டுமே அளவிலாத காமம் கொண்டு அவளிடமே எப்போதும் அதிகமாகக் கூடிமகிழ்ந்தான். அதனால் தக்ஷன் அவனை சபித்தான் அந்தச் சாபத்தால் சந்திரன் க்ஷயரோகம் அடைந்தான் கிருஷ்ண பக்ஷத்தில் தேய்பவனாகவும் எப்பொழுதும் சுரதப் ப்ரீதியுடையவனாகவும் இருந்தான். அவன் வாலிப வயதில் பிரஹஸ்பதி முனிவருடைய தர்ம பத்தினியான தாரையை குருபத்தினி என்றும் கருதாமல் காமத்தால் களவாடிச் சென்றான். அதற்காகப் போர் புரிந்து இந்திராதி தேவர்களின் விருப்பப்படித் தாரையைப் பிரஹஸ்பதியிடமே திருப்பியனுப்பி விட்டுத் தன்புத்திரனாகத் தாரையிடம் தோன்றிய புதன் என்பவனை மட்டும் எடுத்துக் கொண்டான். இனி அகோர தவஞ்செய்த மித்ரா வருணர் என்ற இரு ரிஷிகளின் விஷயத்தைச் சொல்கிறேன். ஊர்வசி என்ற அப்சரஸ் விஷ்ணுவின் தொடையிலிருந்து தோன்றி யாகங்களுக்கு உதவியாக இருந்து வந்தாள். அந்த ஊர்வசியின் அதிமதுரமான மோகன அழகைக் கண்டு மித்ரா வருணர் இருவரும் அளவிலாத மோகம் கொண்டார்கள். அதன் விளைவாக ஒருவர் தமது ரேதஸைக் கும்பத்திலும் மற்றொருவர் ஜலத்திலுமாக விட்டார்கள். ஜலத்திலிருந்து வசிஷ்டர் தோன்றினார் கும்பத்திலிருந்து சப்தசமுத்திரங்களையும் ஆசமனீயம் செய்யத் தக்க வலிமையும் வடவாக்கினி போன்ற காந்தியுமுள்ள அகஸ்தியர் தோன்றினார் முனிவர்களே, இதுவரையில் நான் உங்களுக்கு இந்திரன், அக்கினி, வாயு, சூரியன், சந்திரன், மித்திரா, வருணர் ஆகியோர் காமங்கொண்டு வருந்திய சரிதங்களைச் சுருக்கமாகச் சொன்னேன், இனிமேலும் சொல்கிறேன் கேளுங்கள்.
12. முனிவர்களின் மோகதாபக் கதைகள்
மாதவர்களே! மென்மைத் தன்மை, உற்சாகம், பகவத் ஸ்மரணை, புஷ்டி, விரக்தி, சாந்தி ஸ்நானதானம் முதலியவற்றாலும் பிரம்மச்சரியம் முதலிய விரதங்களாலும் மேம்பட்டு விளங்கிய தக்ஷப்பிரஜாபதியும் பூர்வகாலத்தில் காமாந்தகாரனாக இருந்து, வித்யுத்பரணை என்ற பரஸ்தரீயை விரும்பினான். எல்லாவற்றிலும் விரக்தியும் எப்போதும் பகவத் ஸ்மரணையும் உள்ள நாரத முனிவருங்கூட அந்த வித்யுத்பரணை என்பவளைப் பிரமலோகத்தில் கண்டு காமங் கொண்டார். பிரமதேவனும் தன்னிடத்தில் சிறிதும் விருப்பமில்லாத அவளைக் கண்டு மோகித்தார். அவள் பிரம்மனை விரும்பவில்லை எனவே விக்யுத்பரணை கபிலவர்ணமுள்ள பசு வடிவம் கொண்டாள். அப்பொழுதும் நான்முகப்பிரமன் அவளை விடாமல் மோக வேட்கையால் துன்புறுத்தினார். அதன் பின்னும் தன் காமத்தைப் பிரமனால் அடக்க முடியவில்லை, அவர் படைத்த செல்வியான ஸரஸ்வதிதேவியையே மனைவியாக்கிக் கொண்டு மானச, வாசக, காயகச் சிருஷ்டிகளைச் செய்தார். காசிபர் வம்சத்தில் தோன்றிய மரீசி என்னும் மாமுனிவர் காம இச்சை வசப்பட்டு தக்ஷப்பிரஜாபதியை அடைந்து. அவரது புதல்வியைத் தமக்குக் கொடுக்கும்படிக் கோரினார். தக்ஷன் தன் புதல்விகளில் பதின்மூவரை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். மரீசி, அவர்களுடன் பலவிதமாகச் சுகித்து இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பூரணமாக விளங்கும் தேவாதிகளான புதல்வரைப் பெற்றார்.
மகாயோகியும் பிரளய காலாக்கினி போன்ற தேஜஸ் உள்ள வரும் சமுத்திர ஜலத்தை உளுந்து அளவாகக் கொண்டு, ஆகமனஞ் செய்தவரும் விந்நியமலையின் இறுமாப்பை அடக்கியவரும் வாதாபி என்ற வலிய அசுரனை விழுங்கியவருமான குறுமுனி அகஸ்தியருங் கூட காமவிருப்பத்தால், விதர்ப்பராஜனின் குமாரியான உலோபாமுத்திரையை மணந்து அவ்வம்மையாரின் சொற்படியே நடந்தார். தவத்தில் சிறந்த சகேரீஷி என்பவர் ஒருசமயம் ஆகாயத்திலிருந்து நீ எனக்குப் பிரியவானாக இருந்து உன் உயிரை எனக்குக் கொடுத்து என்னைக் காப்பாற்ற வேண்டும்! என்று எழுந்த மதுரமான வாக்கைக் கேட்டு, ஆஹா யாரோ ஒரு திவ்வியமான மங்கை, என்மீது மோகங்கொண்டு இப்படிக் கூறுகிறாளே என்று கருதி! மனத்திலே காமங்கொண்டார். அதன்விளைவாகத் தம் வீரியத்தை அருகிலுள்ள ஒரு உலர்ந்த சருகில் விட்டார். அந்த விரீயத்தில் மகாரோஷமுடைய பிருங்கீ என்பவர், ரிஷபமுகத்துடன் தோன்றினார். பிருகுவின் குலத்தினரும் ஆகாயத்தில் உதித்தவர்களுமான தவசிகள் என்னும் நக்ஷத்திரங்களுக்குச் சந்திரன் போன்ற ருரு என்னும் முனிவர் காமத்தால் பிரமத்வரை என்னும் கன்னிகையைக் கடிமணம் புரிந்து கொண்டு பல காலம் காமசுகத்தை அனுபவித்து வந்தார். பிறகு காமங்களஞ் சியமான அந்தப் பத்தினி விஷந்தீண்டியதால் உயிர் நீத்துவிடவே ருருமுனிவர் மிகவும் துக்கித்து என் ஆசை மனைவியை இழந்த பிறகு இனி நான் உயிர்தரியேன்! என்று தம் உயிரையும் போக்கிக் கொள்ள முயன்றார். அப்போது தேவர்கள் அவரை நோக்கி, நீ தற்கொலை செய்து கொண்டால் மகாபாவியாவாய்! ஆகையால் உயிர்விட வேண்டாம் நீ உன் ஆயுளில் பாதியை உன் மனைவிக்குக் கொடுத்தால் அவள் உயிர் பிழைப்பாள், நீயும் அவளை அனுபவித்துச் சுகமடையலாம் என்றார்கள். அதைக் கேட்டதும் ருரு மிகவும் மகிழ்ந்து அவர்கள் சொன்னவாறு தம் ஆயுளில் பாதியை மடிந்த மனைவிக்குக் கொடுத்தார். மனைவியும் உயிர் பெற்று எழுந்து, தன் கணவனை ஆலிங்கனம் செய்து கொண்டாள். அன்று முதல் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி வாழ்ந்திருந்தார்கள்.
அந்தகரான சவனமுனிவர், மகாயோகத் தவசியாக இருக்க விரும்பினார். மழைக்காலத்தில் ஜலத்திலுள்ள தூய்மையான மிருத்திகையால் தம் உடலையெல்லாம் முத்திரை செய்து கொண்டு தம் விழிகளை நாசி முனையில் நிறுத்திப் பல ஆண்டுகள் தவஞ்செய்தார். அதனால் அவரது உடல் முழுவதும் மண்புற்றினால் மறைக்கப்பட்டது இவ்வாறு அவர் இருக்கும் போது மங்கைப்பருவமுடைய ஒரு கிராதமங்கை அந்தப்புற்றைத் தோண்டவே சவனமுனிவர் அதிலிருந்து எழுந்தார். உடனே வேடமங்கை அவரை அரசன் முன்பு கொண்டு நிறுத்தி நடந்தவற்றை அரசனிடம் வெளியிட்டாள். அரசன் முனிவரை மஹான் என்று அர்க்கியபாத்திய ஆசமனாதிகளால் உபசரித்து உயர்ந்த ஆசனத்தில் இருத்து இவர் இழந்த கண்களைத் திரும்பவும் பெற வேண்டும் என்று கருதி அஸ்வினி தேவர்களை வரவழைத்து. அவர்களால் சவனமுனிவர் கண்பார்வை பெறும்படிச் செய்தான். இத்தகைய சவனமகாமுனிவரும் பிறகு அந்த வேடமங்கையைக் கண்டு மோகங் கொண்டு வாலிப தேகமடைந்து அநேக காலம் கூடிமகிழ்ந்தார்.
இனி பக்ஷீஸ்வரன் என்பவனின் காமங் கதையைச் சொல்கிறேன், அவர் ஆமையைப் போலவே நீட்டுவதும் சருக்குவதுமான கழுத்து அமையப் பெற்றவர். காசியப மனைவியர் பதின் மூவரில் விந்தை என்பவளது புத்திரர் மகாயோகியும் பரமாத்ம ஞானமும் சாந்த சொரூபமும் எலும்பு மாத்திரமான தேகமும் கொண்டார். பாற்கடல் அலைநீர்த்துளிகள் சிலவற்றைப் பருகிவருவதால் உயிர் தாங்குபவர் அத்தகைய பக்ஷீஸ்வரன் என்னும் முனிவர், ஒரு காலத்தில் அந்தச் சமுத்திரத்திடையே ஆணினங்களாகிய, மீன், நண்டு தவளை முதலிய ஜலசரங்கள் பெண் இனங்களோடுக் கூடி இன்ப சுகம் அனுபவிப்பதைப் பார்த்துப் பார்த்து தாமும் அவ்வாறு ஸ்திரீகளுடன் கலந்து மகிழ வேண்டும் என்று நினைத்து சுதன்மன் என்னும் அரசனிடம் கன்னிகாதானம் யாசிக்கச் சென்றார். அரசன் அவரை வரவேற்று உபசரித்து அவர் வந்த விஷயத்தை விசாரித்தான். பக்ஷீஸ்வர முனிவர் மகிழ்ந்து அரசே நான் காசிப மகரிஷியின் குமாரன் ஸ்திரீகளைக் கோரி வந்திருக்கிறேன் உனக்குப் புதல்வி இருந்தால் அவளை எனக்குக் கொடுக்க வேண்டும்! என்று கேட்டார். அவரது வடிவை அரசன் உற்றுப் பார்த்து விட்டு மனம்குழம்பி இவருக்குப் பெண் கொடாவிட்டால் இவர் சபித்தாலும் சபித்து விடுவார்! பெண்ணைக் கொடுக்கலாம் என்றாலோ இவரது உருவம் அகோரமாக இருக்கிறதே! என்று சிந்தித்தான். பிறகு அவன் ஓர் உபாயத்துடன் அவரை நோக்கி மாமுனிவரே எனக்கு ஒரு பெண் மட்டுமல்ல பதினைந்து அழகான பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் தாமே விரும்பிய வரனை நான் மணஞ் செய்து கொடுக்க வேண்டியவனே தவிர என் இச்சையாக ஒருவருக்கும் மணஞ் செய்து கொடுக்க முடியாதவனாக இருக்கிறேன். நான் இப்படிச் சொல்கிறேனே என்று தாங்கள் கோபிக்க வேண்டாம் நீங்களே என் புதல்விகள் இருக்கும் அந்தப்புரத்திற்குச் சென்று தங்களை விரும்பும் பெண் இவள் என்று காட்டினால் நான் அவளை உங்களுக்கு மணஞ்செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி, அவரை அந்தப்புரத்தினுள்ளே கொண்டு விடச் செய்தான். அந்தப்புரத்தை அடைந்ததுமே முனிவர் தம் யோக வலிமையால் மன்மத வடிவம் எடுத்து ரூபலாவண்ய யவுவனங்களுடன் மிகவும் மினுமினுத்து அரசகுமாரிகளின் எதிரே நின்றார் அவரை ராஜகன்னிகைகள் ஆவலோடு உற்றுப் பார்த்து இத்தகைய அழகுடைய இவர் யார்? மன்மதனோ? என்று காதலால் உள்ளமுருகி ஒவ்வொரு கன்னிகையும் தன்னை மணஞ்செய்து கொள்ளும்படிஅவரை வேண்டினார்கள். இந்தச் செய்தியை கேள்வியுற்ற சுதன்மன் அக்கன்னியரை யெல்லாம் பக்ஷீஸ்வர முனிவருக்கேத் திருமணஞ் செய்து கொடுப்பேன்! என்றான். பிறகு சுக்கிரன் முதலிய கிரகங்கள் சுப÷க்ஷத்திரத்தில் உச்சமாகிய திரிகோணமுற்று, புத்திர சவுபாக்கியச் சம்பத்துகளைக் கொடுக்கத் தக்கதாக இருக்கும் நல்ல திவ்ய முகூர்த்தத்தில் திருமணஞ் செய்து கொடுத்தான். முனிவர் அம்மங்கையார்களைக் கூடி பெருங்களிப்புடன் இராஜபோகங்களை நெடுங்காலம் அனுபவித்து தன்னைப் போன்ற புதல்வர்கள் பலரைப் பெற்று ஆயுள் முடிவில் சொர்க்கத்தை அடைந்தார்.
இனிக் கருடனின் மோகத்தைக் கூறுகிறேன் ஹிமாசலமலையில் வசிக்கும் அதிரூபவதியும் அக்கினித் தேவனின் புத்திரியுமான சாண்டிலீ என்ற பெயருடைய பேரழகியைக் கருடன் கண்டான். உடனே அவள்மீது மோகங்கொண்டு இவளை எப்படியாவது சொர்க்கலோகத்திற்குத் தூக்கிக் கொண்டு போய் விட வேண்டும் என்று கருதினான். அதை சாண்டிலீ என்பவள் அறிந்து இந்தக் கருடன் கொடியவன்! என்று கருதிக் கோபத்தோடு உன் இறகுகள் அழிக! என்று சபித்தாள். கருடன் தன் இறகுகளை இழந்தான். பிறகு அவன் அந்த அக்கினி புத்திரியிடம் சிறகுகளை கெஞ்சி அவளது மனதை இளக்கித் தங்கமயமான சிறகுகளை அடைந்து, அவளைப் புகழ்ந்து விட்டுத் தன் நகரத்தை அடைந்தான்.
நீண்ட மீசையும் சடையும் சுஷ்கித்த உடலும் கூர்மையான நகங்களையும் உடைய விபாண்டக முனிவர் ஒரு காலத்தில் ஒரு புனிதநதியில் நீராடும்போது அதிதூரத்தில் வரும் ஒரு யவுவன மங்கையைக் கண்டு மன்மத விகாரமுற்று அதன் விளைவாகத் தம் வீரியத்தை அந்நதி நீரில் ஒழுக்கினார். தெய்வ கதியால் அந்த வீரிய சம்பந்தமான ஜலத்தை ஒரு பெண்மான் குடித்துக் கருவுற்று ரிஷ்யசிருங்க முனிவரைப் பெற்றது. அப்புத்திரனைக் கண்ட விபாண்டக முனிவர், அவனை வளர்த்து, முனிவர்களுக்குரிய உபநயனாதி கிரியைகளையும் வேத அத்தியயனத்தையும் செய்து வைத்தார், சிறுவனான ரிஷ்யசிருங்கர் இளமையிலேயே சாந்தம், இந்திரியநிக்கிரகம் முதலிய நற்குணங்களைப் பெற்றவராய் வளர்ந்து தக்க வயது வந்தவுடன் சுத்தசாந்த பிரம்ச்சாரியாகி, இலை கிழங்கு புன்செய் தானியங்களைச் சாப்பிட்டுக் கொண்டும் தம் தந்தைக்குப் பணிவிடைகள் செய்து கொண்டும் ஆண் பெண் பேதமே தெரியாமல் இருந்து வந்தார். அப்போது அங்கு தேசத்தில் மழை பெய்யாமல் பெரும் பஞ்சம் உண்டாயிற்று. அந்தத் தேசத்து மன்னனான உரோமபாதன் யோசித்து ரிஷ்ய சிருங்க முனிவரைத் தன் தேசத்திற்கு அழைத்து வந்தால் மழை பெய்யும் என்று கருதி அவரை அழைத்து வந்தான். அங்கே பலவகை தாசிகளின் பலவித சிருங்காரங்களால் ரிஷ்யசிருங்கரை உபசரித்தான். ரிஷ்யசிருங்கரும் அத்தாசிகளின் காமவினோத சிருங்காரங்களை ரசித்து மகிழ்ந்தார்.
பராவசு என்ற முனிவர், ஓரரசனுக்கு யாகஞ் செய்விப்பதற்காகச் சென்றிருந்தபோது, அவரது பத்தினி தபோவனத்து ஆசிரமத்தில் தனித்திருந்தாள். அவள் மிக இளமையும் அதிஅழகும் வாய்ந்தவள் அவளை யவக்கிரீவன் என்ற முனிவன் கண்டு, காமசிந்தையுடன் அவளைக் கவர்ந்து மோகம் மூட்டி அவளோடு இரதி கேளிக்கைகளை அனுபவித்துக் கொண்டிருந்தான். அப்போது பராவசு முனிவரின் தந்தையும் ரிஷிபத்தினியின் மாமனாருமான ஸாப்பிய முனிவர் என்பவர் அந்த முறை கெட்ட மோகலீலைகளை அறிந்து மருகியை அழைத்து கடுங்கோபத்துடன் அவள் உடலைவெட்டித் துண்டித்து. அவளுடைய மாமிசத்தையெல்லாம் அக்கினியில் ஹோமம் செய்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் அவர் தம்யோக மாயையால் மருகியில் தோலைச் சேர்த்து மகாக் கொடுமையுள்ள ஓர் அரக்க மங்கையை உற்பத்தி செய்து பெண்ணே! அயோக்கியனான அந்த யவக்கிரீவனை நீ விழுங்கி விடவேண்டும்! என்று கட்டளையிட்டு அனுப்பினார், அந்த கொடிய அரக்கி தன் மாயைத் திறமையால் தன் கோரரூபம் நீங்கி அந்த ரிஷபத்தினியின் வடிவமெடுத்துக் கொண்டு யவக்கிரீவனிடம் சென்று ஓ முனிவரே! என் மாமன் யாகசாலைக்கு வந்திருக்கிறான் நீ அவனைக் கொன்று விட்டால், நாம் பழையபடியே சுகித்திருக்கலாம் என்றாள். அவன் அவளது வஞ்சனையை அறியாமல் அவளுடன் வனத்தின் வழியாக வந்து கொண்டிருக்கும் போது அந்தக் காட்டில் சூலபாணியாக இருந்த அரசன் ஒருவன் யவக்கிரீவனைக் கொன்றுவிட்டு அந்த ஸ்திரீயைக் கொண்டு போனான். பிறகு யவக்ரீவனின் தந்தை அவ்விடம் வந்து இறந்து கிடக்கும் தம் குமாரனைப் பார்த்து புத்திர சோகத்தால் பெருங் கோபங் கொண்டு, ஸாப்யமுனிவரே தம் மைந்தனைக் கொன்றவர் என்று சிந்தித்து ஸாப்ய முனிவரிடம் சென்று நீ என் புத்திரனைக் கொன்றதால் நீ உன் புதல்வனால் உயிரை இழப்பாயாக! என்று சபித்து விட்டு அந்த வனத்திலேயே தீ மூட்டித் தன் மகனுடைய தேகத்தைத் தகனஞ் செய்தார். சிறிது தூரத்திலிருந்து தடாகத்திற்குச் சந்தியாவந்தனஞ் செய்யச் சென்றார். அப்போது மான் தோலை போர்த்திக் கொண்டு போனார். அவர் குமாரரான பராவசுமுனிவர் யாகத்தை முடித்து விட்டு அவ்வரசன் தானமாகக் கொடுத்த பலவகைப் பொருள்களையும் எடுத்து கொண்டு தம் ஆசிரமத்திற்குச் திரும்பி வந்து சேர்ந்தார். அதற்குள் அவருடைய தந்தை ஸாப்பிய முனிவர் தம் ஸந்தியாவந்தனம் முடித்துக் கொண்டு மான்தோலைப் போர்த்தியவண்ணமே தம் இருக்கைக்குத் திரும்பும்போது பராவசு அதைப் பார்த்து விட்டு மான் என்றே சந்தேகித்து, அந்த உருவத்தை நோக்கி அம்பெய்தார் அதனால் ஸாப்பியமுனிவர் மாண்டு விட்டார். பிறகு பராவசு தம் தந்தை இறந்துவிட்டதை அறிந்து கொண்டு, அன்றிரவே அவருடலைத் தகனஞ் செய்தார் பொழுது புலர்ந்ததும் பராவசு முனிவர் தம் சகோதரரான பாரத்வாஜ முனிவரிடம் சென்று நமது தந்தையை மிருகம் என்று கருதிப் பயந்து அஸ்திரப்பிரயோகஞ் செய்து கொன்று விட்டேன்! அந்தத் தோஷ நிவர்த்திக்காக என்ன பிராய்ச்சித்தம் செய்யத் தக்கதோ அதைக் கட்டளையிட்டு என்னை அனுப்பவேண்டும்! என்று கேட்டார். அதற்கு பாரத்வாஜ முனிவர் அந்தோ! இந்தப் பெரும்பாவத்தை நீக்க நீ வல்லவனவல்ல நீ இங்கேயே இரு! நான் உனக்காக வனத்திற்குச் சென்று அகோரமான தவம் இயற்றி உன் பிரமஹத்தி தோஷத்தை ஒழிப்பேன் என்று கூறிவிட்டு வனத்தை அடைந்து கடுந்தவஞ் செய்து பிரமஹத்தியை ஒழியச்செய்து சிறிது காலத்தில் தம் சகோதரனின் ஜாகையை அடைந்தார். அவரைக் கண்டதும், பராவசு முனிவர், அடே துஷ்டா! தந்தையைக் கொன்று தவஞ்செய்யச் சென்ற நீ என் இருக்கையினுள்ளே நுழையாதே வெளியே போய் விடு! என்று கூச்சலிட்டார். பாரத்வாஜமுனிவர் ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் ஸ்தம்பித்து நின்றார். அப்போது அரசனின் படை வீரர்கள் இதை அறிந்து, பாரத்வாஜ முனிவரைக் கட்டி இழுத்துக் கொண்டு போய் நரஹத்தி செய்தவன்! என்று பலவாறு அவரைத் துன்புறுத்தினார்கள். அவர் மஹாஞானியாகையால் சிறிதும் கோபம் கொள்ளாமல் தம் கைகளைத் தலைக்கு மேலே உயர்த்திக் குவித்து இந்திரா! அக்கினி; வருணா! தேவர்களே! நான் என் தந்தையைக் கொன்றிருப்பேனாகில் மஹாப்பாபியாகிய என்னை நீங்களே கொன்று விடுங்கள். அவ்வாறில்லையென்றால் அமிர்த்தாரைகளால் என்னை நனைத்து குளிர்ச்சியூட்டுங்கள். நான் இதுவரையில் காலாகாலத்தில் ஹோமஞ் செய்தும் பெரியோருக்குத் தொண்டு செய்தும் இருந்தால் இப்போது இறந்த ஸாப்பிய முனிவரும் யவக்ரீவ முனிவரும் உயிர் பெற்று வரட்டும்! என்று பிரார்த்தித்தார். தேவர்கள் அவருக்கு அனுக்கிரகஞ் செய்ய வேண்டிக் காட்சியளித்து, திவ்யமான அமிர்தத் துளிகளால் பாரத்வாஜரை நினைத்து, அவரது உடம்பில் பட்ட காயங்களை விலக்கி ஸாப்பிய முனிவரையும் யவக்ரீவ முனிவரையும் மீண்டும் உயிர் பெற்று வரச் செய்தார்கள். பாரத்வாஜ முனிவர் மகிழ்ச்சியுடன் தம் இருக்கையை அடைந்தார். காமத்தால் இத்தகைய தீமைகள் எண்ணற்றனவாக நிகழ்ந்துள்ளன.
எப்போதும் யோகசமாதியில் இருப்பவரும் பிரமநிஷ்டரும் சம்சார தோஷத்திலிருந்து நீங்கியவரும் வனத்திலேயே வசிப்பவருமான கவுதம முனிவர் ஒரு சமயம் பெருந்தவஞ் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது கடுந்தவத்தை அறிந்த இந்திரன் இதனால் தன்பதவிக்கு என்ன தீங்குகள் விளையுமோ என்று பயந்து இந்த முனிவரின் தவத்தையழித்து இவரது மனதைச் சஞ்சலப்படுத்த வேண்டும் என்று நிலைத்தான். எனவே பலவித நறுமணமலர்கள் மலர்ந்து திவ்யமான மந்தமாருதம் வீசுகிற காலத்தில், ஓர் அப்ஸரஸ்திரீயைக் கூப்பிட்டு அந்தக் கவுதம முனிவர் மதிமயங்கி மனங்கலங்கினார் மேலும் அவரை மோகவசப்படுத்துவதற்காக அந்த அப்ஸரமங்கை, ஆடையின்றி அவர் முன்பு எதிரே நின்றாள் கவுதமர் அந்தத் திகம்பரியான தேவமங்கையைப் பார்த்துப் பார்த்து மன்மத÷க்ஷõபித மனசுடையவராய் தத்தளித்தார் அதன் விளைவாக உண்டான வீரியத்தை அவர் துரோணத்தில் (வில்லில்) விடவே அந்தத் துரோணத்திலிருந்து வில்லைப் பிடித்த வீரர்களுக்கெல்லாம் ஆசாரியரான துரோணர் பிறந்தார்.
ஒருகாலத்தில் பிரமதேவர் சூரியனைக் கண்டு, நீ பூமியில் அரசனாக இருந்து, பிரம்மச்சரியம் முதலிய ஆசிரம தர்மங்களை சம்ரக்ஷணை செய்து வரவேண்டும் என்று சொன்னார். அவ்வாறே தேவர்களில் உயர்ந்தவனான சூரியபகவான் அயோத்தியாபுரியில் உபரிசரவஸு என்னும் பெயர் பெற்ற மன்னனாக இருந்து ஆஸ்ரம தர்மங்களை நிலைநிறுத்தி புலி சிங்கம் முதலிய துஷ்டமிருகங்களையும் பகைவர்களையும் கொன்று ஆட்சி செய்து தர்மத்தை நடத்தி வந்தான். அவன் சேணம், வில், அம்பு முதலியவற்றை எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஓர் விமானத்தில் ஏறி இராஜ்ஜியங்களைச் சுற்றிப் பார்த்து வருவான். ஒரு சமயம் அவன் வனத்தில் சஞ்சரிக்கும் போது வசந்த ருதுக்காலம் வரவே அவன் தன் மனைவியார் யாருமே அருகில் இல்லாததால் மதன விகாரமுற்று மனம் வருந்தித் தன்னிடமிருந்து வெளிப்பட்ட ரேதஸை ஒரு பலாஸ இலையாற் செய்த தொன்னையில் விட்டு ஐயோ! இவ்வீரியம் வீணாயிற்றே என் மனைவி அயோத்திலிருப்பதால் இது அவளை அடைந்தால் அவள் ஒரு புத்திரனைப் பெறுவாளே என்று யோசித்துக் குழம்பினான். அதைச் சேணம் என்ற பறவை உணர்ந்து அரசே! அதை என்னிடம் கொடுத்துக் கட்டளையிட்டால் நான் அயோத்தியை அடைந்து உன் மனைவியிடம் அதைக் கொடுப்பேன்! என்று கூறி வீரியமுள்ள தொன்னையை வாங்கித் தன் மூக்கால் கவ்விக்கொண்டு வான்வழியாகப் பறந்து அயோத்தியை நோக்கி வந்தது அப்போது அதன் மூக்கில் கவுவப்பெற்ற பலாசத் தொன்னையைக் கண்ட மற்றொருடேகை இது மாமிசமாக இருக்குமோ! இதை நாம் கைப்பற்ற வேண்டும்! என்று எண்ணமிட்டு அந்தச் சேணப் பறவையோடு சண்டையிட்டது.
அந்தச் சண்டையிலே, பலாஸத் தொன்னையிலிருந்த ரேதசு யமுனையாற்றில் விழுந்தது; அந்த யமுனையாற்றில் பிரம சாபத்தால் மீன் வடிவமுற்று இருந்த கிரிகை என்ற அப்சரஸ்திரீ அந்த ரேதஸைப் பானஞ் செய்து அப்போதே கர்ப்பமுற்றாள். பிறகு அவள் பிரசவவேதனைப்படும் போது வலைஞன் ஒருவன் எறிந்த வலையில் மீன் அகப்பட்டுக்கொண்டது வலைஞன் அதைத் தன் வீட்டிற்குக் கொண்டுவந்து மீனை இரண்டு துண்டாக வெட்டினான். அதன் கர்ப்பத்தில் ஆண் குழந்தையொன்றும் பெண் குழந்தையொன்றும் இருந்தன. அவற்றை வலைஞன் பார்த்து வியப்புற்றான். பிறகு தனக்குக் கிடைத்த பொருளில் சமபாகத்தை அரசனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நியதிப்படி விலையுயர்ந்த இரத்தினத்திலும் சிறந்த அந்தப் புத்திரனை உபரிசரவஸு மன்னனுக்கே கொடுத்து விட்டான் மன்னன் அதைப் பெற்றுக்கொண்டு, அந்தக் குழந்தையிடம் ராஜ லட்சணங்கள் பொருந்தியிருப்பதைக் கண்டு தீர்க்க ஆலோசனை செய்து, இவன் ராஜபுத்திரன் என்பதில் சந்தேகமேயில்லை! என்று நினைத்து அந்தக் குழந்தையின் வரலாற்றைப் பற்றி வலைஞனிடம் விசாரித்தான் வலைஞன் தான் யமுனை நதியில் வலை வீசியதையும் அதில் கிடைத்த ஒரு மீனச் சோதித்ததில் அதன் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தன என்பதையும் எப்பொருள் ஒருவனுக்குக் கிடைத்தாலும் அதில் பாதியை அரசனுக்குக் கொடுக்க வேண்டும் என்னும் முறைப்படியே இரு குழந்தைகளில், ஆண் குழந்தையை அரசனிடம் ஒப்படைத்ததாகவும் சொன்னான். அதனால் அம்மன்னன் வீரியத்தைத் தன் சேணப் பறவையின் மூலமாக அனுப்பியபோது; அது யமுனை யாற்றில் விழுந்ததால் அதனின்று தோன்றிய குழந்தைகளே அவைகள் என்று தெரிந்து கொண்டும்; மிகவும் மகிழ்ந்து, ஆண் குழந்தையை அன்போடும் ஆசையோடும் வளர்த்து வேதிவிதிப்படி உபநயனஞ் செய்து தன் மச்சதேசத்திற்கு அவனை மன்னனாக்கி முடிசூட்டினான்.
வலைஞன் தனக்குரிய பெண் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து, தன் வமிசத்தில் இருந்த ஒரு முதியவனின் பெயரால் மார்த்தாண்டி என்றும் பெயர்களில் ஒன்றாகிய கோகினி என்றும், கிரிகை என்பவள் மச்சவடிவில் இருக்கும் பெற்றதால் கிரிஜா என்றும் பெயர் வரத்தக்க அந்தப் பெண்ணிற்குச் சத்தியவதி என்று பெயரிட்டான். அவள் தன் தந்தைக்குச் சொந்தமானதொரு படகை யமுனை ஆற்றில் ஓட்டிக் கொண்டிருந்தாள். அப்போது தெய்வகதியாய் பராசரமுனிவர் அந்த ஓடத்தில் ஏறி நதியைக் கடக்கையில், ஓடம் ஓட்டும் பெண்ணான சத்தியவதியின் மீது கண்ணோட்டம் செலுத்தினார். சத்தியவிதியின் பூரணச்சந்திரன் போன்ற முகமும் நீலோத்பல மலர் போன்ற தேககாந்தியும் செம்பவளத் தண்டு போன்ற அதரமும் வள்ளைக்கொடி போன்ற காதும் சேற்கொண்டை போன்றவிழியும் கமல மொட்டுக்கள் போன்ற கொங்கைகளும், சுருங்கிய இடையும், அதிசுந்தர அவயவங்களும் அவரது மனத்தைக் கவரவே அவர் காமவசப்பட்டு மன்மதவாதையுற்று தத்தளித்தார். மச்சகெந்தி என்று காரணப்பெயர் சொல்லும்படிமீன் வீச்சமான துர்நாற்றம் வீசும் உடலுள்ள சத்தியவதி என்ற அந்தச் சுந்தரமங்கையை பரிமளகெந்தி என்னும் காரணப்பெயரையுடையவளாக உடலில் நறுமணம் பரிமளிக்கும்படி செய்து அவளோடு கூடி மகிழ்ந்தார், அதன் விளைவாக சத்தியவாதி கருவுற்று அவளுக்குப் புத்திரராக வியாசபகவான் தோன்றினார். அந்தவியாசரோ சாந்திரமதமாதி சத்குணங்களையுடையவராக இருந்தும் தேவர்களுடைய நலனைக்கருதி, விசித்திவீரியன் சித்தராங்கதன் என்பவர்கள் இறந்த பிறகு, அவன் மனைவியைக் கூடி திருதராஷ்டிரன் பாண்டு, விதுரன் என்னும் மூன்று மன்னர்களை உற்பத்தி செய்தார். பிறகு வியாசர் ஒரு காலத்தில் ஆரணியத்தில் அரணியைக் கடைந்து அதனிடமாக அக்கினியோடு சாகர் என்ற பரிசுத்த பிரம்மஞானியைப் புத்திரராகப் பெற்றார். அந்தச் சுகமாக முனிவரோ கவுரவம், கபிலம், கிருஷ்ணம், நீலம் என்னும் பெயரையுடைய நான்கு புத்திரர்களையும் யோகசாலியான ஒரு புதல்வியையும் பெற்றார். உடல் முழுவதும் கபால மாலையணிந்துள்ள வாமசிரமுனிவர் என்பவர் பூர்வத்தில் நாகலோகத்திலிருந்த ஒரு கட்கத்தைக் கொண்டு வரமுயன்று, பாதாளத்தை அடைந்து. ஓர்வேள்விக் குண்டம் நியமித்து, சுற்றிலும் முளையடித்து. அதைக் சுற்றி பஞ்சவர்ணமான நூலைக்கட்டி, ஒரு வகையான ஜெபஹோமம் செய்து, அதனால் பாதாளலோகத்தைக் கஷ்கிக்கச் செய்தார். அதனால் அங்கிருந்த நாகங்கள் வருந்தி அந்தச் கட்கத்தை அவருக்கு அளித்தன அப்பொழுது அங்கிருந்த ஒரு வேசி ஆடையின்றி பிறந்த கோலமாக நிற்கவே அவளை வாமசிர முனிவர் பார்த்துக் காமத்தால் மோகமுற்று இந்தக் கட்கத்தால் எனக்கு என்ன பிரயோஜனம்? என்று நினைத்து தான் ஹோமஞ்செய்து கொண்டிருந்த ஸ்ருவத்தை விட்டு விட்டுப் பூரண ஆகுதியும் செய்யாமல் எழுந்து; வியாகூலமனத்துடன், அந்த நாகதாசியோடு கூடிக் கலந்து ஆனந்தம் அனுபவித்தார் இவ்வாறு மாமுனிவரான ஒருவர் காமத்தாலும் ஒரு தாசியாலும் வஞ்சிக்கப்பட்டாரல்லவா? அந்தச் சுரதமுடிவில் அவர் விரதம் பங்கமடைந்தால் நாகங்கள் அந்தக் கட்கத்தை முன்புபோலக் கொண்டுபோய் விட்டன. சவுனகாதி முனிவர்களே! மன்மதனால் காமாவஸ்தைப்பட்டுவருந்திய மாமுனிவர்களது சரித்திரங்களை யெல்லாம் ஒருவாறு உங்களுக்குச் சுருக்கமாகச் சொன்னேன் இனியும் சிலவற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.
13. பிற மகளிரை விரும்பும் இராடணனின் மோகப் பித்து
முனிவர்களே! க்ஷத்திரிய குலமணியும் காசிராஜன் புத்திரனாகவும் விளங்கிய விஸ்வாமித்திர முனிவர் முன்பொரு சமயம் வசிஷ்ட முனிவருடைய விரதலக்ஷ்மியைக் கண்டு, மனத்தில் பொறாமை கொண்டு, தானும் பிராமணத்துவம் அடைந்து, மூவுலகங்களையும் வருத்தவேண்டும் என்று நினைத்து தீர்மானமாகத்தீøக்ஷ செய்து காட்டை அடைந்து உடல் முழுவதும் இளைக்கும்படி அநேக காலம் அருந்தவஞ் செய்தார், அப்போது தேவர்கள், இவர் செய்யும் தவத்தால் என்ன விபரீதம் விளையுமோ என்று பயந்து அவரது தவத்தைக் கலைக்க நினைத்து அவ்விஸ்வாமித்திரருடைய ஆஸ்ரமத்திற்கு மேனகை என்ற அப்சரமங்கையை அனுப்பினார்கள். அவர், அவளைக்கண்டு மோகங்கொண்டு அறிவிழந்தார் தவம் இழந்தார். அதுபோலவே தேவர் தானவர்களாகவும் வெல்லவதற்கு அரிய வல்லமையுடைய சும்ப நிசும்பர்கள் மஹாரூப யவுவன சுந்தரமுடைய கோபேந்திர கன்னியைக்கண்டு மோகித்து அவளை அடைவதற்காக இருவரும் மல்யுத்தப் போட்டியிட்டு அதிலே ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மாண்டார்கள். அந்த சும்பநிசும்பரது புத்திரர்களான சுந்தோபசுந்தர் என்னும் இரு அரக்கர்களோ திலோத்தமை என்ற அப்ஸர மங்கையைக் கண்டு காமங்கொண்டு அவர்கள் இருவரும் ஒருவரோடுடொருவர் போர் புரிந்து மடிந்தார்கள். இக்ஷ்வாகு வம்சத்தில் தோன்றிய ஒருவன் இந்திரபுரியைப் போன்ற இராஜ்யத்தை அரசு செய்து கொண்டிருந்து ஒருகாலத்தில் தண்டக ஆரணியஞ் சென்று, சுக்கிர பகவானின் குமாரியான சூரிய பிரபையைப் பார்த்து காமாவேசம் கொண்டு, அவளைக் காந்தர்வ மணத்தால் கலந்தான். அதை சுக்கிராச்சாரியார் தெரிந்து கொண்டு அவனோடு எட்டு நாட்கள் அகோர யுத்தம் புரிந்து, தேவாசுரர்களாலும் ஜெயிக்க முடியாத அவனைப் பாசத்தால் கட்டித் தண்டித்து இறுதியில் அவனை அவனுடைய இராஜ்யத்துடன் சுட்டு எரித்தார் அந்தப் போர்க்களம் பாணங்களால் சுடப்பட்டு நாளது வரையில் புல், பூண்டு, முதலியன ஒன்றும் முளையாமல் இருக்கிறது.
முன்பொரு சமயம் மன்மதன், சிவபெருமானது நெற்றிக் கண் நெருப்பால் எரிந்து சாம்பலான பிறகு, அவன் மனைவியான இரதிதேவி மயன் வீட்டில் சுந்தரவடிவோடு பிறந்து வளர்ந்தாள். அவளை சம்பரன் என்னும் அசுரன் பலாத்காரமாக தூக்கிக்கொண்டு போனான் இரதியோ மரத்தினால் பதுமை ஒன்றைச் செய்து அதனை மணியணிகளால் அலங்கரித்து தன் யோக மாயையால் தன்னைப் போன்ற வடிவம் உடையதாகச் செய்து, பிராணதாரணை செய்து தன் கணவனாகப்பிறந்திருக்கும் பிரத்யுமனனிடம் சென்றாள். அதன் பிறகு கபடவேடங் கொண்டிருந்த பதுமையை மயன் புத்திரியாகிய மாயாவதியே என்று கருதிய சம்பரன் மிகவும் காமமுடையவனாய், அதோடு இரவும் பகலும் கிரீடித்துக் கொண்டிருந்தான். இனி இராவணனின் காமக் கதையைச் சொல்கிறேன். கரியமலை போன்றமேனியும் பத்து முகமும் பார்ப்பதற்குப் பயங்கரமான அகோரரூபமும் இருபது புஜங்களும், பராக்கிரமம் கொண்டவனாய் விச்சிரவசுவுக்கும் கேசி என்பவளுக்கும் புத்திரனாகப் பிறந்தவன் இராவணனாகப் அவன் தனக்குச் சமானமான மேகநாதன் என்னும் புத்திரனைச் சகாயமாகக் கொண்டு, இந்திரனைப் பிடித்துப் பாசத்தால் கட்டிச் சிறையில் அடைத்து, மூவுலகத்திலும் ஏகபோக ஆட்சி செலுத்தி, அதிரூபசுந்தரிகளான அநேகம் அப்சரமங்கையருடன் கிரீடித்தும், மயன் என்பவளது புத்திரியாகிய மந்தோதரியை மணந்து அவளோடு சுகித்து கொண்டுமிருந்தான். இவ்வாறு பெருஞ்செல்வமும் பல சுந்தரிகளின் சுகமும் அனுபவிப்பவனாக இருந்தும் பரஸ்திரீகளையும் கூடியனுபவிக்க வேண்டும் என்று எண்ணமிட்டு காமமோகிதமான சித்தத்துடன் இருந்தான்.
சம்பரனுடைய மாயா மனைவியான மரப்பதுமையின் கட்டழகைத் தன் கண்கள் இருப்பதாலும் இராவணன் பார்த்து காமபோதை கொண்டு, எவ்வகையிலாவது அவளைக் கொண்டுவர வேண்டும் என்று கருதித் தன் படைவீரர்களோடு பாதாள லோகத்தை அடைந்து அங்கே விஸ்வக்கர்மனால் நிர்மிக்கப்பட்ட சம்பரனது இரத்தின மாளிகையில் நுழைந்தான். அங்கு நழைந்தவுடனேயே, அங்கு மயனால் நிர்மிக்கப்பட்டிருக்கும் சூத்திரபாசங்களால் கட்டப்பட்டு வஜ்ரமயமான காராக் கிரகத்தில் பந்திக்கப்பட்டு; அங்குள்ள சூத்திரங்களாகிய மேஷங்களால் முட்டப்பட்டும் மிதிக்கப்பட்டும் மிகவும் துன்பமடைந்தான். அதைக் கேள்விப்பட்டதும் அவன் பத்தினியான மந்தோதரி மிகவும் துக்கித்து பாதாளலோகம் சென்று தன் தந்தையாகிய மயனிடம் மிகவும் கெஞ்சி, தந்தையே! என் கணவனை எவ்விதத்திலாவது சைன்னிய சகிதமாய்ச் சிறையிலிருந்து விடுதலைசெய்ய வேண்டும்! என்று பிரார்த்தித்தாள் அதனால் மயன் மாயாவதியைப் பார்த்து அந்த இராவணன் என் குமாரியான மண்டோதரியின் கணவனாதலின் நீயே உன் நாயகனுக்கு இதவார்த்தைகளைச் சொல்லி அவனை விடுதலை செய்து கொள்! என்றான் அவ்வாறே மாயாவதி சம்பரனிடம் சொல்லி, லஜ்ரமயமான சிறையிலிருந்த இராவணனை அவனது சைனீயங்களுடன் விடுதலை செய்தாள். இராவணன் பெருமூச்செறிந்து நாணத்தோடும் தாகத்தோடும் பசியோடும் வெளியே வந்து மாயாதேவியைக் கண்டான். அவள் அவனுடன் பேசத் தொடங்கினாள்.
இராவணா! உன்னடைய முகம் தசா என்னும் கரும்பாம்பு போல அகோரமாகவும் உன் ரூபம் பைசாசம் போலப் பரம விகாரமாகவும் இருக்கின்றன. இத்தகைய நீ தேவர்களுக்குங் கிடைத்தற்கரிய என்னைப் போன்ற பெண்மணியை அடைவதென்பது உனக்குச் சாத்தியமாகுமா? நிசாசரா உலகத்தில் தன் வீட்டில் கட்டிய மனைவியிருக்கப் பிறன் மனைவிகளை விரும்பிப் பாசபந்தமாகித் துன்பம் அடைவது ஏன்? அப்படிக் கோருவதற்காவது தன் நாயகியைக் காட்டிலும் பரஸ்திரீயிடத்தில் அப்படி யென்னவிசேஷம் இருக்கிறது? உன்னைப் போன்ற துஷ்டனுக்கும் பிறன் மகளிரிடம் விருப்பமுண்டாவது அவனுடைய ஆயுளைக் குன்றச் செய்து அவயங்களுக்கெல்லாம் உபாதையுண்டாக்குவதற்கேயல்லாமல் வேறெதற்குப் பயன்படும்? பரஸ்திரீகளே மனம் விரும்புவார்களானால் அப்பொழுது அவர்களை கூடியனுபவிப்பனுக்கு ஆயுள் குறைந்தாலும் சிறிதளவு சுகமாவது உண்டாகும் அப்படியில்லாமல் உலகத்தில் ரூபவதிகளாக இருக்கும் மங்கையர்களின் யுக்தா யுக்தம் பாராமல் அவர்களின் வெறும் உடல் அழகிற்காகவீணாக மோகிப்பவர்களுக்கு ஆயுள் க்ஷீணமாவதற்குத் திருஷ்டாந்தமாக அப்பொழுதே மரணம் ஏற்படும் மிக்க அருவருக்கத்தக்கதும் கிருமியாதிகளுக்கும் பிறப்பிடமானதும் பெண்கள் பார்ப்பதற்கும் அஸங்கியமானதுமாகி யதவளை போன்ற தேகமுடைய ஆடவர் சிலர், தமது தேக சுகத்தை விரும்பி பரதாரகமனம் முதலியமகா பாதங்களைத் தேடிக் கொள்ளுகிறார்கள். ஆடவருக்குப்பிறன் மனைவியை விரும்பி மோகிப்பதால் உண்டாகும் சுகம் அணுவளவாக இருந்து, பிறகு அது மலைப்போல் பரிணமித்துத் துக்க ஸ்வரூபமாகும். உலகத்தில் புருஷர்களாவது மாதர்களாவது இவ்வுண்மையை அறியாமலேயே உன்னைப் போலத் தீச்செயல்கள் புரிகிறார்கள். உடலைத்தரித்த புண்ணியசாலிகள் அப்பொழுது சிறிது துக்கமாக இருந்தாலும் அதுவே பின்னர் சுகாத்மமாயும் எண்ணிறந்ததாயும் விருத்தியடையத் தக்க நற்செயல்களையே செய்வார்கள். ஆகையால் உனக்கு இவை நன்கு விளங்க சிறிது எடுத்துச் சொன்னேன் இனி எப்போதும் இத்தகையச் செயலை விரும்பவேண்டாம் விரைவில் இங்கிருந்து ஓடிப்போய் விடு. இப்பாதாள உலகத்து மங்கையர்கள் எப்பொழுதும் துன்புறுத்துவர்களே ஒழியச் சுகம் உண்டாக்கமாட்டார்கள் இனி இவர்களைக் கனவிலும் நினைக்க வேண்டாம். இவர்கள் மேகத்தில் அக்கினி இருந்தாற்போன்றவர்கள். விஷசர்ப்பங்களையே கத்திகளாகக் கொண்டவர்கள் பலவித மாயைகளை அறிந்தவர்கள் துஷ்ட புத்தியை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய பாதாளலோகப் பாவையர்களை வஞ்சிக்க ஒருவனும் சாமர்த்தியம் உடையவனாக மாட்டான் ஆகையால், நீ உடனே இங்கிருந்து போய்விடு என்றாள். அவளிடம் இராவணன் ஒன்றும் பதில் சொல்லாமல் தன் சேனை பரிவாரங்களோடு அங்கிருந்து புறப்பட்டு ஒரு பிலத்தின் வழியாகப் பூலோகத்தையடைந்து அவிவேகியாகையால் உலகத்தில் பழைய புத்தியுடனேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
முனிவர்களே! இராவணன் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துங்கூட பிற மகளிரை மோகிக்கும் பித்து அவனைவிட்டு அகலவில்லை. ஆங்கிரஸ முனிவரின் புத்திரியான வேதவதி என்பவள் அழகான கன்னிகையாயிருந்தும் மரவுரிதரித்து தவக்கோலம் பூண்டு விஷ்ணுமூர்த்தியையே எப்போதும் தியானித்துக் கொண்டு ஆனந்தத்தோடும் இந்திரிய நிக்கிரக சாமர்த்தியத்தோடும் இருந்து வந்தாள். தவக்கோலத்தில் மினுமினுக்கும் அவளது அழகை வழிப்போக்கனான இராவணன் கண்டு மீண்டும் காம மோகங்கொண்டவனாய், அவளிடம் தன் காமத்தைத் தீர்க்கும்படி கேட்டான். அவள் ஒன்றும் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். அப்போது இராவணன் பலாத்காரமாக அவளைப் பிடித்திழுத்தான். அதனால் வேதவதி வெகுண்டு மகாபாபியாகிய இவன் ஸ்பரிசித்த இந்தத் தேகம் இனி வேண்டியதில்லை என்று தன் பிராணனை அக்கினியில் விடுத்து, இராவணனை எப்படியும் கொல்ல வேண்டும் என்று மிதிலாபுரிக்கு அரசனாகிய ஜனக மகாராஜனின் யாககுண்டத்தில் புனர்ஜன்மம் எடுத்து சீதை என்ற பெயரில் வளர்ந்து விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீராமபிரானுக்கு ஏகபத்தினியாகி, பிரதிதினமும் தன் கணவனால் மகிழ்ச்சியடைந்து, முற்பிறவியில் தனக்குத் தீமை செய்த இராவணனைத் தன் கணவனால் கொல்வித்து, இரண்டு புதல்வரைப் பெற்று, இனித் திருப்பாற்கடலில் நமது நாதரான மகாவிஷ்ணுவோடு கூடி வாழ்ந்திருக்கவேண்டும் என்று நினைத்து பூமிவழியாகச் சென்று மறைந்தாள். ஸ்ரீராமமூர்த்தி சீதாதேவியின் பிரிவாற்றாதியை அடைந்து அவளுடன் கூடிச் சுகித்திருப்பேன் என்று எண்ணிக் கொண்டிருந்தார். அதற்கு முன் ஒரு சமயம் கையிலை மலைக்கு அருகில் குபேரனுடைய புத்திரனான களகூபரனைக் கட்டியணைக்க வேண்டும் என்று பேரழகியான அரம்பை அதிசுந்தரமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு சென்றாள். அப்போது இராவணன் அவளைப் பார்த்து விட்டான். பிற மகளிரை விரும்பும் மோகப் பித்தனான அவன் அப்போது மதுபானத்தால் மத்தனாக இருந்ததால், தன் மருகி என்றும் சிறிதும் யோசிக்காமல் அரம்பையை பலாத்காரமாக பிடித்து இழுத்து ஆசைதீர அனுபவித்து விட்டான். அதை அரம்பை தன் கணவனான களகூபரனிடம் சொல்ல, அவன் அப்போதே பெருங்கோபங்கொண்டு இனி இராவணன் பரஸ்திரீகளைப் பலாத்காரமாகக் கூடினால் உடனே அவன் சிரசு ஆயிரம் சுக்கல்களாகுக என்று சாபமிட்டான்.
பிறகு சிறிது காலம்கழித்து இராவணன் பாதாளலோகத்தை ஜெயிக்க வேண்டும் என்று அங்கு சென்றான். அங்கே பார்ப்பதற்கு மனோகரமான உருவமும் நீலமேகநிறமும் செவ்வரிபடர்ந்த விழிகளும் பிரளய காலாக்கினி ஜ்வாலையைப் போன்ற ரோம ரேகைகளும் மின்னல் போன்ற தேகமும் ஜடைகளும், ஆயிரஞ்சூரியர் போன்ற தேக காந்தியும் சர்ப்பங்களின் விஷத்தால் தோன்றிய அக்கினியையே வஸ்திரமாகக் கொண்டு விளங்கும் மகாவிஷ்ணுவைக் கண்டு. அப்புருஷனின் அருகில் இருக்கும் க்ஷீராப்தியின் புதல்வியாகிய மகாலக்ஷ்மியின் பேரழகை இராவணன் தன் இருபது கண்களாலும் கண்டு மையல் கொண்டான். இந்த ஸ்திரீயை எவ்வகையிலாவது அபகரித்துக்கொண்டு போக வேண்டும் என்று யோசித்தான். அப்போது அம்மகானுடைய நிசுவாச மூச்சால் இராவணன் நூறு காத தூரத்தில் எடுத்து எறியப்பட்டுச் செயலற்றுக் கிடந்தான். பிறகு விஷயம் இன்னது என்பதை அவன் உணர்ந்து, பயபக்தியுடன் அம்மகா விஷ்ணுவை அணுகி, பகவானே! அடியேனுக்கு உம்முடைய கையாலேயே மரணம் அடிக்கடி சம்பவிக்கும்படி அனுக்கிரகிக்க வேண்டும் என்று கேட்டான் திருமால் அவ்வாறே உத்தரவு கொடுத்தார். அதை இராவணன் பெற்றுக்கொண்டு முன்னரே அங்கு சிறையிடப்பட்டிருக்கும் மாவலிச் சக்கரவர்த்தியை விடுதலை செய்யவேண்டும் என்று நினைத்து அவ்விடம் செல்ல அந்த வாசலில் பெருங்கருமையாய் இரண்டு கரங்களில் இரும்புலக்கைத் தாங்கி சங்குசக்கரங்களை ஏந்திக் காவலாக நிற்கும் துவார பாலகரைக் கண்டு, ஓஹோ! இவன் விஷ்ணுமூர்த்தி போல இருக்கிறான் நான் இங்கே இவனருகே சென்றால் தீமை விளையும், என்று பயந்து பாதாளத்தை விட்டு உடனே விலகிப் பூலோகத்தை அடைந்தான். சிறிது காலத்திற்குப் பிறகு க்ஷத்திரிய வம்சத்தில் அவதாரம் செய்திருந்த ஸ்ரீ ராமமூர்த்தியின் பத்தினியான சீதாதேவியுடன் சென்று வனவாசம் புறப்பட்டத் தன் கணவரைப் பெருவிருப்போடு பின் தொடர்ந்து தண்டகாரணியத்தில் மரவுரியுடுத்தி கந்தமூலபலாதிகளைப் புசித்துக் கொண்டும் உடல் முழுவதும் புழுதியாகத் திரித்து கொண்டும் பர்ணசாலையில் வசித்திருந்தாள். அப்பொழுது இராவணன் அவளைக் கண்டு காம மோகிதனாய் அவளை எப்படியாவது தூக்கிச் சென்றுவிட வேண்டும் என்று நினைத்து தன் அமைச்சனாகிய மாரீசனை அழைத்துத் தன் மோகத்தை அவனிடம் சொல்லி நீ பவளத்தால் கொம்புகளும் வைடூரியத்தால் விழிகளும் மரகதத்தால் பிருஷ்டபாகமும் பூர்ணசந்திரன் போன்ற முகமும் முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட தேகமும் பத்மராகத்தால் கால்களும் உடைய ஓர் பொன்மானின் வடிவை எடுத்து, ராமபத்தினியாகிய சீதைகாணும்படி, அவள் முன்பு உலாவவேண்டும் அப்படிச் செய்தால், அவள் உன்னைப் பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று தன் கணவனைக் கேட்பாள். அப்பொழுது இராமன் உன்னைப்பின் தொடர்வான் அந்தச்சமயத்தில் நான் ஒரு சன்னியாசி வேடத்தில், அந்தப் பர்ணசாலையை அடைந்து சீதையைத் தூக்கிக் கொண்டு போய்விடுவேன் என்றான். மாரீசன் அதற்கு இணங்கித் தன்னிடம் ராவணன் கூறியபடி பொன்மான் வடிவு எடுத்து, சீதை முன்பு விநோதமாக உலாவினான். சீதை அந்த மானை விரும்பி தன் கணவனாகிய இராமமூர்த்தியிடம் அதைத் தனக்குப் பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று பிடிவாதம் செய்தாள். இராமமூர்த்தி தன் தம்பி இலஷ்மணன் சீதைக்குக் காவலாகப் பர்ணசாலையில் நிறுத்தி வைத்துவிட்டு அந்தப் பொன்மானைப் பின்தொடர்ந்து சென்றார். நெடுந்தூரம் பின் தொடர்ந்தும் அந்தமான் அகப்படாமையால் அஸ்திரப்பிரயோகம் செய்ய மாயமானான் மாரீசன். அடிப்பட்டு கீழே விழுந்து உயிர் துறக்கும் போது தான் இராவணனுக்கு நன்மை செய்வதாகக் கூறிவந்ததை நினைத்து வஞ்சகமா சகோதரா! நான் இறந்தேன்! என்று கூறியபடி உயிரைவிட்டான். இவ்வாக்கியத்தை பர்ணசாலையிலிருக்கும் சீதையும் லக்ஷ்மணனும் கேட்டார்கள். சீதை தன் கணவனுக்கு ஏதோவோர் அபாயம் சம்பவித்தது என்று தன் மைத்துனனாகிய இலக்ஷ்மணனை அனுப்ப அச்சமயத்தில் இராவணன் சன்னியாசிவேடம் தரித்துப் பர்ணசாலையை அடைந்து, க்ஷணகாலத்தில் சீதையைத் தூக்கிக் கொண்டுப்போய் இலங்கையை அடைந்து தன்னை விரும்பும்படி சீதையிடம் பலவாறாகவும் கெஞ்சினான். அநேகம் அசுரர்களையும் அசுரமங்கையரையும் அவளுக்கு காவலிட்டு அசோகவனத்தில் பாதுகாத்து வந்தான். அதை உணர்ந்த இராமன் தன்னைச் சந்தித்த அனுமன் சொற்படி சுக்ரீவனைக்கண்டு வாலியை வதைத்து சுக்ரீவனுக்கு முடிசூட்டி எழுபது வெள்ளம் வானரசேனைகளோடு தென்கடலை அடைந்து சேதுபந்தனம் செய்து அந்த இராவணனோடு போர் செய்யத் தொடங்கினார்.
அந்தச் சமயம் இராவணன் தம் தம்பியான கும்பகர்ணனின் உதவி இருந்தால் வெற்றி பெறலாம் என்று நினைத்தான். கும்பகர்ணனோ மது மாமிச பக்ஷணஞ் செய்து. வாயைத் திறந்து கொண்டு பிரளய காலாக்கினி போலத் தன் நாக்கைத் தொங்க வைத்துக்கொண்டு மஹாபயங்கர ஸ்வரூபத்துடன் நித்திரை செய்து கொண்டிருந்தான். இராவணன் தன் வீரர்களைக் கொண்டு பெருங்கோஷங்கள் போடச் செய்தான் குதிரைகள் முதலியவற்றால் கும்பகர்ணனை மிதிக்கச் செய்தான் கத்தி. கோடாரி அக்கினி ஜல முதலியவற்றால் அடித்தும் கும்பகர்ணனின் பேருறக்கம் தெளியவில்லை. எனவே ஸ்திரீகள் அவன் மேல் விழுந்து குசங்களாலும் உறுப்புகளாலும் தாடனம் செய்ய, கும்பகர்ணன் காமாக்கிராந்த சித்தமுடையவனாதலின் சிறிது கண் விழித்தான். அதைக் கண்ட இராவணன் மகிழ்ந்து தம் தம்பியான கும்பகர்ணனைத் துணையாகக் கொண்டு, இராமமூர்த்தியை எதிர்த்துப் பெரும்போர் புரிந்து அவன் புத்திர, மித்திர குடும்ப சகிதமாய் இராமபாணத்துக்கு இரையானான். அவ்வரக்கர்களில் இராமபிரானைச் சரண் அடைந்த விபீஷணன் ஒருவனே உயிர் பிழைத்தான் ஏனையோர் நெருப்பு பொறிபட்ட பஞ்சுபோலானார்கள் சவுனகாதி முனிவர்களே! காமக்குரோதாதிகளைக் களைந்து தர்ம புத்தியையுடைய மாமுனிவர்களும் அனுபவித்த மன்மதாவஸ்தைகளையும் விசுவாமித்திரரின் மோகவினோத காமப்பித்துகளையும் சும்பநிசும்பர்கள், அவர்கள் புத்திரராகிய சுந்தோபசுந்தரும் கொண்ட மன்மதவிகாரத்தையும் சக்கரவர்த்தித் திருமகனாகிய ஸ்ரீராம பிரானின் மனைவியைக் கண்டு காமுற்றுத் துன்புற்ற இராவணனுடைய காமாதூரத்தையும் கும்பகர்ணனின் மதனாவஸ்தைகளையும் உங்களுக்குச் சொன்னேன்.
14. எவரையும் வெல்லவல்ல மன்மதன்!
மாதவர்களே! இன்னுஞ் சில சரித்திரங்களைச் சொல்கிறேன் சூரியவமிசத்தில் பிறந்த தசரஞ் சக்கரவர்த்திமானுட தேகத்துடனேயே சொர்க்கலோகத்துக்குப் போவதும் வருவதுமாக இருந்து அங்கேயே தன் பிதுர்க்களுக்குத் திலோத பிண்டங்களைக் கொடுக்கும் சாமார்த்தியமுடையவராக இருந்து, அறுபதினாயிரம் ஆண்டுகள் ஏகச் சக்கராதிபதியாய் அரசு செலுத்தியும் காமாக்கிராந்தச் சித்திராய்த் தன் மனைவியாகிய கைகேயியின் சொற்களைக் கேட்டு தன் உயிரையும் இராஜ்யத்தையும் புத்திரனையும் துறந்தார். அவருக்குப் புத்திரனும் போர்க்களத்தில் சுத்தவீரனும் மஹா புத்திமானும் தர்மவானும் இந்திரிய நிக்கிரகமுடையவனும் எல்லோருடைய மனத்திற்கும் ரம்மியமானவனும் எல்லாப் பூதங்களுக்கும் பிரியவானும் மகாமானியும் மூவுலகங்களிலும் வெற்றியுடையவனுமாகிய இராமமூர்த்தியும் காமத்தால் மோகிக்கப்பட்டு கிஷ்கிந்தையின் வேந்தனான வாலி, தன் தம்பியாகிய சுக்ரீவனோடு பெரும்போர் செய்து. அவன் இராஜ்யத்தையும் மனைவியையும் அபகரித்துக் கொண்டான் என்பதைக் கேள்வியுற்று நிரபராதியாகிய வாலியை, பிரளயகாலாக்கினி போன்ற பாணத்தால் கொன்றான். அயோத்தியில் அரசுபுரிந்த சூரிய குலத்திற்கே ஒரு சூரியனைப் போன்ற தசரதச்சக்கரவர்த்தியும் தேவர்கள் அனைவராலும் துதிக்கப்படும் கீர்த்தியுள்ள, விஷ்ணுவின் அவதாரமாய் அந்தத் தசரதனின் மகனாகத்தோன்றிய இராமபிரானும் காமாக்கிராந்த சித்தமுற்ற சரித்திரங்களை உங்களுக்குச் சொன்னேன். ஆகையால் மன்மதன் எல்லாத் தேவர்களுக்கும் முதல்வனாய் தேவர், முனிவர், மானிடர், பசு, பக்ஷியாதி எல்லோருடைய இதயங்களிலும் இருந்து இவ்வாறு தன் செயலை நடத்திக் கொண்டு வருகிறான் என்று அறிய வேண்டும். உலகநாதனாகிய சிவபெருமான் அந்த மன்மதன் பிறரால் ஜெயிக்கப்படாதவன் என்று கருதி, உலகத்திற்கு நன்மை செய்யும் பொருட்டு பார்வதியை மணந்து காண்பித்து இலிங்கஸ்வரூபமானார். இத்தகைய இலிங்கத்தைக் கண்ட ஆகாயவாணி முனிவர்களே! தேவர்களே! தைத்திரியர்களே! உத்தமமான பக்தியால் நீங்கள் இதைப் பூஜிக்கும் பக்ஷத்தில் உங்களுக்குள்ள இஷ்டகாமியங்களை அடைவீர்கள் என்று கூறினான். இவ்வாறு சூதமா முனிவர் நைமிசாரண்ய முனிவர்களிடம் கூறினார்.
15. நித்திய நைமித்திக பூஜாவிதிகள்
நைமிசாரணிய வாசிகளான சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நோக்கி, மகாத்மாவே பற்பலசாஸ்திரங்களிலிருந்து வியாசபகவான் தங்களுக்கு உபதேசித்த யாவற்றையும் எங்களுக்கு நீங்கள் சொன்னீர்கள்! நாங்கள் அவற்றைக்கேட்டுக் கிருதார்த்தர்களானோம். இகபரலாபங்களைக் கொடுக்க வல்ல சிவதர்மங்களை இப்போது நீங்கள் சிறிது சொன்னீர்கள். சிவலிங்கார்ச்சனை செய்வதால் வரும் பயனை வியாசபகவான் சொல்லக் கேட்ட நீங்கள், உலகிற்கு இதம் உண்டாகும்படிச் சவிஸ்தரமாக சொல்லியருள வேண்டும் உலகிற்காக ஹிதாஹிதங்களைச் சொல்பவன் தர்மார்த்த காமமோக்ஷங்களுக்கு உத்கிருஷ்டமான பயனை அடைவான் என்று மகாமுனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் தர்மங்களில் முக்கியமானது எது? சர்வேஸ்வரனுடைய வாக்கு எத்தகையது? இலிங்கமூர்த்தத்தில் எவ்விதியால் ஆவாஹனஞ் செய்து பூஜித்தால், சிவபெருமான் பிரசன்னமாவார்? சிவதானம், சிவயாகம் யாவை? இவ்விஷயங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆயினும் அவற்றை யாவருக்கும் விளங்கும்படித் தாங்கள் சொல்லியருள வேண்டும். புண்ணியங்களில் சிறந்தது எது? அதை எப்படி! அடையாலம்? சிருகஸ்தன் எந்தச் செயலால் சொர்க்கலோகத்தையடையலாம்? கிரகஸ்தன் எந்தச் செயலால் மானுடனாகப் பிறந்து ஈஸ்வர அனுக்கிரகத்தை அடைவான்? கர்மயாகம், தபோயாகம் ஸ்வாத்யாய யாகம், தியானயாகம், ஞானயாகம் என்ற ஐவகை யாகங்களில் எது உத்தமமானது? யாகங்களின் கதிகள் என்ன? இந்த யாகங்களால் என்ன பயன் கிடைக்கும்? தர்மாதர்மங்கள் எத்தனை வகைப்படும்? என்னென்ன பாவத்தால் எவ்வெவ்வினையை அனுபவிக்க வேண்டும் தர்மாதர்மங்களாகிய அலைகளால் கலக்கப் பெற்று, காமாதிகளால் உண்டான துக்கங்களாகிய நுரைகளால் பூரணமாக இருக்கும் சமுசாரமாகிய சமுத்திரத்திலிருந்து ஆன்மாக்கள் எவ்வாறு நீக்கமுறுகின்றன? இவற்றை யெல்லாம் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். சூதபுராணிகர் கூறலானார். மாமுனிவர்களே! பூர்வத்தில் இதே விஷயங்களைத் தத்துவதரிசிகளான மகரிஷிகள் வியாசபகவானை கேட்க அவர் சொல்லுகிறார். நான் பூர்வ காலத்தில் இந்த விஷயத்தை ஸனத்குமார முனிவரிடம் கேட்டேன் அப்போது ஸ்வர்க்க மோக்ஷ பயன்களைக் கொடுக்கத்தக்க சர்வேஸ்வரனைப் பணிந்து அவ்வெம்பெருமானால் சொல்லப்பட்ட வகையிலேயே சிவதர்மங்களைச் சொல்லுகிறேன் என்று சொல்லலானார்.
சிவதர்மம் சிரத்தை பூர்வமாகச் செய்ய வேண்டும் சிரத்தையே தர்மத்திற்கு ஆதரவாகும் சிரத்தையே பிரதிஷ்டையாகும் ஆகையால் சிரத்தை மயமாகவே சிவதர்மங்கள் விளங்குகின்றன அவை சிரவணஞ் செய்த மாத்திரத்தாலேயே ஆனந்தங் கொள்ளத்தக்கவை சூக்ஷ்மமானவை பாசம், பசு, பதி என்னும் இவற்றால் பிரதிபாதிக்கப்பட்டவை சிரத்தையாலன்றிக் கையல்ல தேக கஷ்டம் தானம் முதலியவற்றால் கிரகிக்கத் தக்கவையல்ல. தேவர்களானாலும் சிரத்தையன்றி இதனைக் கிரகிக்க அசாத்தியராவர் சிரத்தையேபரம தர்மமும் சூக்ஷ்ம தத்துவமும் தானமும், தவமும், சுவர்க்கமும், மோக்ஷமும், ஜகத்துமாகும் ஒருவன் சிரத்தையின்றிச் செல்வம் முழுவதையும் தன் பிராணனையும் தானஞ்செய்தாலும் சிறிது பயனும் பெறமாட்டான். ஆகையால் சிரத்தையே பரமபதம்! சிரத்தா ஸ்வரூபமாகவே சிவ தர்மங்கள் எல்லாமே சொல்லப்படுகின்றன சிரத்தையாலேயே சர்வேசுவரனாகிய சிவபெருமானை அடையவும் தியானிக்கவும் பூஜிக்கவும் கூடுமாகையால் மகா சாரமானதும் மோக்ஷம் அளிக்கத்தக்கதும் சிவாக்கினியின் சித்தி ரூபமானதும் மனோஹரமான வாக்கு மயமானதும் சர்வேஸ்வரப் பிரதிபாதமானதும் அநேகம் சித்திகளையளிப்பதும் உலகில் உள்ள யாவரும் விரும்பத் தக்கதும் உச்சரித்தற்குச் சுலபமானதும் எண்ணிறந்த பொருள்களைக் கொடுப்பதுமாக உள்ள சிவமூல மந்திரத்தை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் அதிசூஷ்மமானதும் தர்மார்த்த காமமோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கையும் சம்பாதிக்கத் தக்கதும் ஆலவிருக்ஷத்தின் மரம் பெரிதும் விதை சிறியதாகவும் இருப்பது போல மந்திரம் சிறிதாயினும் உபாசிப்பவர்களுக்கு எல்லையற்ற பயனைக் கொடுக்கத்தக்கதும் ஆதி அக்ஷரத்துடன் ஆறு அக்ஷரங்களையுடையதும் ஆகிய ஓம் நமசிவாய என்பது சிவப்பிரதிபாதமான மூலமந்திரம் என்பதாம். உலகத்திலுள்ள சூக்ஷ்ம மந்திரங்களும் அலங்காரர்த்தமான விசேஷ மந்திரங்களும் இந்தச் சிவமந்திரத்தில் அடங்கியிருக்கின்றன. இவ்வகையான ஷடக்ஷரமுடைய சூஷ்மமாகப் பிரவேசித்திருப்பவருமாகிய ஜகதீஸ்வரன் பஞ்சப்பிரமதேகமுற்று வாச்சிய வாசக சம்பந்தத்தால் பிரத்யக்ஷமாக விளங்குகிறார். அநாதியாக உள்ள சிவபெருமான் அதை விலக்கும்படியிருக்கிறார். வியாதிக்கு வைத்தியனும் மருந்தும் போல சம்சார வியாதிக்கு சிவபெருமான் பரம அவுஷதமாகவும் பரம வைத்தியனாகவும் விளங்குகிறார். சூரியன் இல்லாத பிரபஞ்சம் இருள்மயமாவது போல ஜகதீஸ்வரன் இல்லை என்று சொல்லும் பக்ஷத்தில் உலக முழுவதும் தமோகுணமாகும். ஆகையால் அநாதியாயும் சர்வக்ஞராயும் இயல்பாகவே சர்வபரிபூரணரும் முக்தி காரணரும் ஞானத்தைப் பிரகாசிக்கச் செய்தவருமாகிய பரமசிவன் ஒருவன் இருக்கிறான். அப்பெருமானை அடையத்தக்கது இந்த மகாமந்திரமே! அம்மந்திரத்தின் பொருள் சிவபெருமானே! அபிதான அபிதேய சம்பந்தத்தால் சிவபெருமானே அம்மந்திரமாவான் முக்திகாமிகள் இம்மந்திரத்தை ஷடாக்ஷரரூபமாக ஜெபிக்க வேண்டும் உன்று வேதங் கூறும் அநேகவித மந்திரங்களாலும் சாஸ்திரவிசாரணையினாலும் பயனில்லை, இம்மந்திரம் ஸ்திரமாக மனத்தில் இருக்கப் பெற்றவன் யாவற்றையும் வாசித்தவனும் யாவற்றையும் கேட்டவனும் யாவற்றையும் அனுஷ்டித்தவனுமாவான். இம்மந்திரத்தை எப்போதும் பயின்றவன் உலகத்தில் பரம சிரேஷ்டனாவான். மற்ற ஞானமும் கல்வியும் தவமும் யாவும் இம்மந்திரத்திற்குப் பதினாறில் ஒரு கலைக்கும் ஈடாகாது. இந்த மந்திரம் சிவஸ்வரூபம் என்று உறுதிகொண்டிருக்கும் வரையில் அவன் பரமபதத்தில் இருப்பவனாவான் இவ்வாக்கியம் விதிவாக்கியமேயன்றி அர்த்தவாக்கியமன்று இது சத்தியம் உலகரக்ஷகனாகிய சிவபெருமான் சர்வக்ஞனும் பரிபூரணனும் சர்வதோஷ நிவர்ஜிதனுமாக இருந்து தீர்க்காலோசனை செய்து சொன்னது இந்த மந்திரம். உலக கர்த்தாவாக இருக்கும் இறைவன் புண்ணியபாப பயன்களை உண்மையாகச் சொல்வானேயன்றி அபத்தமாகச் சொல்ல மாட்டான். இதில் துவேஷ அபிமானிகளாய் ஈஸ்வரனிடத்தில் பக்தியின்றி இருப்பவர்கள் பலவாறு பொய் சொல்லுவார்கள் என்று இவையெல்லாம் புனிதராகிய சிவபெருமான் திருவாய் மலர்ந்தருள நாம் உணர்ந்தேன்.
இவையனைத்தும் பிரமாணம் இதில் சிறிதும் சந்தேகமில்லை பெரியவர்கள் சொன்ன விஷயங்களை ஈஸ்வர வாக்கியமாக நம்பி நடக்க வேண்டும் சிரத்தையில்லாமல் அசிரத்தையாயும் பிரமாணமாகக் கொள்ளாமல் சந்தேகிப்பவன் அதோகதியடைவான். தர்மமான ஞானோபதேசம் செய்யும் புராணிகனை சர்வேஸ்வரனாகிய சாம்பவமூர்த்தியைப் போலவே பூஜிப்பவன். தர்மத்தையும் ஞானத்தையும் அடைந்து இறுதியில் மோக்ஷத்தை அடைவான். உலகத்தில் பிரபுவாக இருப்பவன் இதஞ் செய்யவேண்டும் என்ற கருத்துடன் சுபகரமான தர்மங்களைப் பரோபகாரமாகச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு தானே தர்மதத்பரனாக இருக்கும்பட்சத்தில் அவன் கட்டளையில் அடங்கிய உலகினர் நமது இறைவனைப்போல நாமும் தக்க சிந்தனையை உடையவராக இருக்கவேண்டும். என்றாவது நமது தலைவன் கட்டளையை மீறி நடந்தால் நாம் தண்டனையடைவோம் என்ற அச்சத்தாலாவது தமக்குக் கட்டளையிடப் பட்டுள்ள நல்ல தருமங்களைச் செய்து வருவார்கள். ஆகையால் பிரபுவாக இருப்பவன் எப்போதும் தர்மத்தை முன்னிட்டே மக்களைப்பரிபாலித்தால் பிரஜைகளும் அவ்விறைவனது சுபகரமான கீர்த்தியைப் புகழ்ந்து தர்ம, அர்த்த காமங்களில் தாம் தாம் மனம் விரும்பியவற்றை அடைவார்கள் மக்கள் தர்மவான்களாயினும், அதர்மவான்களாயினுஞ்சரி அவர்களின் புண்ணிய பாவங்களில் அரசன் அரைக்கால் பங்கு புண்ணியத்தை அடைவதற்காக, யாவரையும் புண்ணியமானமார்க்கத்திலேயே நடக்கச் செய்யவல்ல அரசர்கள் கிருதயுகம் முதலிய நான்கு யுகங்களிலும் இருந்து மகாசமர்த்தராய் காமார்த்த சித்தமுடையவர்களாக இருப்பவர்களை தர்மார்த்தர்களாக்க வேண்டும். அரசன் இவ்வாறு தர்மவழியை விருத்தி செய்யாமல் பிரஜைகளுக்குப் பீடையுண்டு பண்ணும்படி நடப்பானாயின் அப்பிரஜா பீடையினால் உண்டாகிய அக்கினி அவ்வரசனது பிராணனையும் ஐஸ்வரியத்தையும் குலத்தையும் இராஜ்ஜியத்தையும் தகிக்காமல் விடாது. அரசன் தர்மவானாக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தாலேயே சிவபெருமான் மந்திரவுஷதி முதலிய ஷடங்கரூபமாக வேதங்களை நிர்மித்திருக்கிறான். பிரகிருதி சாஸ்திர வாதத்தினால் காமமார்க்கத்தை மட்டுமே கைக்கொண்டு நடக்கும் மன்னனை யோகத்தால் தர்மமார்க்கத்தில் திருப்பவல்லவனாகிய சர்வேஸ்வரனே சிவபெருமான் அவனே மன்னருக்கும் மன்னவன், அவனே ஜகத்குரு ஒருவன் அத்தகைய ஜகத்குருவாகிய சிவபெருமானைத் தத்துவசொரூபத்தால் சர்வ பிரயத்தனத்தோடும் தெரிந்து கொண்டு சம்சாரமாகிய சேற்றில் மூழ்கியும் அஞ்ஞானமாகிய தீயினாற் சுடப்பட்டும் இருப்பவர்கள் ஞானமாகிய அமிர்தத்தால் நனைத்து சம்சாரபாதையை ஒழிப்பானாயின், அவனுக்கு ஈன்றெடுத்த தந்தையும் ஒப்பாகான்.
இத்தகைய சர்வேஸ்வரன், தேகசிரமம், யாகம், தானம் பெருஞ்செல்வம், அரசு முதலியவற்றால் அறியத்தக்கவன் அல்ல என்று வேதங்கள் முழங்குகின்றன; சாந்தசீலராகிய முனிவர்களால் சொர்க்கமோட்சங்கள் சிந்திக்கத்தக்க சோபனமான வஸ்து ஒன்று இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அர்த்தவாதத்தில்; ராக; த்வேஷ; க்ரோத அபத்தங்களோடுச் சேர்ந்துகொண்டு அவித்யாராக ஸ்வரூபமாகவும் மகாமிருதுவாகவும் பார்ப்பதற்குப் பலர் அனுஷ்டித்ததாகவும் சம்சாரத்தை உண்டு செய்வதற்குக் காரணமாகவும் விளங்கும் வாக்கியங்கள் சிலவும் இருக்கின்றன. அவை அதோகதியை உண்டு பண்ணத் தக்கவை எந்த வாக்கியத்தைக் கேட்ட மந்திரத்தில் காமக்குரோதாதிகள் ஒழிந்து ஜகதீஸ்வரனாகிய சிவபெருமானிடத்தில் அஹேதுகமாகிய பக்தி ஞானங்கள் உண்டாகுமோ, அவ்வாக்கியங்கள் காதுகளுக்கு இனிமையாக இல்லாவிட்டாலும் அவையே மங்களமானவை. பதினென் புராணங்களும் இதிகாசங்களும் தேவதங்களும் சாஸ்திரங்களும் அறநெறியை முன்னிட்டு முனிவர்களால் கர்ண பரம்பரையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன அவற்றும் ஆன்மாக்காளுக்குப் புத்திர, தார, சம்சாரபந்தம், சத்தியோகர்ப்பம் முதலியவற்றிற்குக் காரணமும் சொல்லபட்டிருக்கின்றன. இவை போன்றவை மோட்ச மார்க்கத்துக்குத் துணை செய்யமாட்டா உலகில் மக்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் வாழும் ஆயுள் இருந்தாலும் நூல்கள் யாவற்றையுமே ஆராய்ச்சி செய்ய முடியாது. நமக்கு இருக்கும் ஆயுளோ சொற்பகாலம் பண்டிதனும் சமர்த்தனுமாக இருப்பவன் சாஸ்திர சமூகங்களை யெல்லாம் ஒழித்து இகபரலோகங்களுக்குச் சுபகரமான அக்ஷர தம்மாத்திரையுள்ளதை உணர்ந்து கொள்ளும் பக்ஷத்தில் அவனே சாஸ்திரங்கள் யாவற்றையும் அறிந்தவனாவான். எல்லா நூல்களையும் கற்றறிவேன் என்று காலத்தைக்கழிப்பவனும் எல்லாவற்றையும் கற்றுவிட்டேன் என்பவனும் முழு மூடன். அவன் சக்தியடைந்திருப்பவனும் அசக்தனே! சம்சாரச் சேற்றிலிருந்து அவன் வெளியே வருவதற்கு ஒரு காலத்திலும் சமர்த்தனாகான் சிவஞானத்தைப் பக்தி சிரத்தையுடன் விசாரித்து அறிபவனே பண்டிதன். அவனே எல்லாச்சக்திகளையுடையவன். அவனே மஹாதபஸ்வி அவனே ஜிதேந்திரீயன் அவனே உலகம் முழுவதையும் மேருமலையுடன் கூட்டித்தானஞ் செய்தவன். அவன் அநியாயமாகச் சொன்னாலும் சர்வேஸ்வரன் அதை நியாயமானதாக அனுக்கிரகிப்பான், ஆகையால் நான் நியாயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். சிவஞானத்தை உணர்ந்தவனே சிவசாயுஜ்ஜியத்தை அடைவான்.
முனிவர்களே இத்தகைய சிவஞானத்தை அடைவதற்கு முக்கிய சாதனமாக இருப்பது சிவலிங்கார்ச்சனையாகும், அந்தச் சிவலிங்க பூஜையோ நித்தியம், நைமித்திகம், காமியம் என்று மூவகைப்படும், அதைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள். பஞ்சாமிர்தத்தாலும் ஸ்நானம் பாத்தியம் முதலியவற்றாலும் அச்சர்வேஸ்வரனை நித்யமாக ஆராதித்தால் அவர்கள் விரைவில் அனுக்கிரகிக்கப்படுவர் தேவாசுரர்களால் திருப்பாற்கடல் கடையப்பட்டக் காலத்தில் சகலலோகத்திற்கும் மாதுருபூதமாக நந்தை, பத்திரை, சுசிலை, சுரபி, சுமனை என்ற ஐவகைப் பசுக்கள் தோன்றின. அவ்வைந்தில் சுரபி என்பது தேவர் மானுடர் முனிவர் முதலிய யாவருக்கும் உதவி செய்யவேண்டும் என்ற கொள்கையோடு பூவுலகத்தை அடைந்து சர்வேஸ்வரனாகிய சிவபெருமானின் திருமஞ்சனத்திற்குப் பயன்படக் கருதிப் பூமியிலேயே தங்கிவிட்டது அப்பசுவின் கோமயமும் கோரோசனமும் கோசலமும் க்ஷீரமும் ததியும் நெய்யும் உலகத்தில் யாவற்றையும் பவித்திரமாகச் செய்யும் ஷடங்கங்கள் இந்த ஆறில் ஒன்றாகிய கோமயம் ஒன்றினாலேயே சிவப்ரீதியாகவுள்ள வில்வ மரமும் பத்மத்தின் விதைகளும் உதித்தன. இவற்றில் வில்வ மரத்தை லக்ஷ்மி முதலியவர்கள் ஸ்ரீவிருக்ஷம் என்று கூறினார்கள். பசுமையான கோரோசனம் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு உரிய சாமான்களில் சிறந்த ஒன்றாகும் கோசலத்திலிருந்தே சாம்பிராணியாகிய தூபத்திரவியம் தேவப்பிரீதியாகத் தோன்றியது. பிராணிகள் யாவற்றுக்கும் வீரியவிருத்தியை உண்டு செய்யும் தயிர் அப்பசுவின் பாலிலிருந்து உண்டாகிறது. அந்தத் ததியிலிருந்து நெய் உண்டாயிற்று. அந்த நெய்யிலிருந்து தேவர்களுக்குப் ப்ரீதியாகவுள்ள அமிர்த்தம் தோன்றியது. ஆகையால் நெய், பால் தயிர் முதலியவற்றால், இலிங்கரூபமாகவுள்ள சிவபெருமானைப் பக்தியோடு அபிஷேகம் செய்து பிறகு திவ்யமலர் மணம் பொருந்திய ஜலத்தினாலும் சிறிது உஷ்ணமாயுள்ள ஜலத்தினாலும் மங்களவாத்திய யுக்தமாக ஸ்நானம் செய்வித்து, சந்தனம் பச்சைக்கற்பூரம், முதலியவை கூட்டிய சீதோதகத்தால், அபிஷேகித்து கமலம், குற்றமற்ற மிருதுவான வில்வபத்திரம் முதலியவற்றால் பூஜித்து நெய் கலந்த பரிமளத் திரவியங்களால் தூபங் கொடுத்து க்ஷீரான்னமும் சமைத்த பலவித பக்ஷியங்களும் மஹாநிவேதனமாகச் சமர்ப்பித்து பலமுறை பிரதக்ஷினம் செய்து ஓம் ஹர ஹர நமசிவாய சர்வேஸ்வர சங்கர மஹாதேவா! என்று சாஷ்டாங்க தண்டம் செய்து பலவித பாபங்களைச் செய்க. பாபியாதலின் என்னை மன்னிக்க வேண்டும் என்று க்ஷமாபணம் செய்து இத்தகைய விதியால் சிவபெருமானை இலிங்கமூர்த்தத்தில் பூஜித்தால் அத்தகைய பக்தனின் விஷயத்தில் கிருபைகொண்டு பிரசன்னராய் இகலோக பரலோகங்களிலும் அடைதற்குரிய கோரிக்கைகளைக் கைகூடும்படி அனுக்கிரகிப்பான். இவ்வண்ணமே நாள்தோறும் பூஜிக்க வேண்டும் இவ்விதம் நித்தமும் பூஜிப்பவனும் சதுர்த்தசி அஷ்டமிகளில் பூஜிப்பவனும் விசேஷ சிவ பக்தியுடையவனாய் நரகத்தில் விழுந்து கிடக்கும் இருபத்தொரு தலைமுறை வரையிலும் அநாயசமாய் சொர்க்கத்தில் செலுத்த வல்லவனாய், இறுதியில் அவன் சிவபதவியை அடைவான் சிவார்ச்சனை செய்பவனிடத்தில் அவனுக்குப் பூஜா உபகரணங்களைச் சேகரம் செய்து கொடுத்த உறவின் முறையாகும் ஊழியக்காரரும் பக்தியோடு, பகவத் கைங்கரியஞ் செய்த பக்ஷத்தில் அவர்களும் இறுதியில் கைலாயத்தை அடைவார்கள்.
ஒருவன் பூர்வத்தில் சிவபெருமானுக்கு நானாவித மலர்களால் தொடுத்த மாலைகளைச் சிவசன்னிதியில் கொடுத்துக் கொண்டு, பக்தி செய்ததால், சிவகடாக்ஷமடைந்து, அவரது அனுக்கிரகத்தால் உலகத்தில் ஏகசக்கராதிபதியாய் அரசு செலுத்தி, ஆயுள் முடிவில் சிவசாயுஜ்யத்தை அடைந்தான். ஆகையால் உலகத்தில் மனிதப்பிறவியடைந்தோர் யாவரும் பக்தி பூர்வமாகச் சிவபரீதியாக இலிங்கார்ச்சனையை விதிப்படி செய்ய வேண்டும். ஷடக்ஷரங்களையுடைய மந்திரச் சிறப்புடைய பஞ்சாக்ஷர மந்திரத்தினால் சர்வேஸ்வரனாகிய சிவபெருமானை ஏகாக்கிர சிந்தையோடு தியானஞ்செய்பவன் மஹாசிவ பக்தியுடையவனாய்த் தன் பிதுர்க்களை மோக்ஷத்தில் சேர்த்துத் தானும் சிவபதவியை அடைவான் அத்தகைய சிவாராதனைக்கு அனுகூலமாக இருப்பவனும் ஆயுள்வரையில் இவ்வுலக இன்பத்தை அனுபவித்து தான் அனுகூலம் செய்த பக்தனுடன் சிவசான்னித்தியத்தை அடைவான் சிவ நாமத்தை ஸ்பரித்துக்கொண்டு இருப்பவர்களும் சிவஸ்தோத்திரங்களை பண்ணோசையுடன் பாடுவோரும் விதிப்படி சிவபூஜை செய்யும் பயன்களை அடைவார்கள் இவ்வகையாக விதிப்படிப் பூஜிக்கப்படும் சிவலிங்கமூர்த்தியைப் பார்த்துக் கொண்டிருப்பவன் சமஸ்தமான யாக பயன்களையும் சந்தேகமின்றி அடைந்தவனாவான் சிவசரித்திரங்களைச் சொல்லவும் வசிக்கவும் செவிகொடுத்துப் பக்தியோடு கேட்டுக் கொண்டிருப்பவன் அந்த யாக பயனை அடைவான் என்பது சிவபெருமானின் திருவாக்கு, சிவபெருமானைப் பக்தி செய்து கொண்டும் அபிஷேகித்துக் கொண்டும் பூஜித்துக் கொண்டும் இருக்கும்போது சிவபெருமானையும் அவ்வாறு செய்பவனையும் கண்டு ஆனந்திப்பவன், மேற்கூறிய சிவாராதனை செய்வோன் அடையும் பயனை போன்ற பயனையடைவான். மனத்தில் பக்தியோடு சிவஸ்மரணை செய்பவனும் அத்தன்மையான பயனை சர்வேஸ்வரனுடைய கிருபையால் அடைகிறான் சிவ! ருத்ர ஹர என்னும் சிவநாமங்களாகவுள்ள இரண்டு எழுத்துப் பெயர்களில் ஒன்றை ஒரு காலத்தில் உச்சரித்தவனும் ருத்ரலோகத்தை அடைவான். முனிவர்களே! பலவிதமான சிவதர்மங்களும் மஹாசூக்ஷ்மமாக இருப்பினும் பெரும் பயன்களைக் கொடுக்கும் என்று அந்தச் சிவபெருமானே திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். நீங்கள் நித்ய பூஜை செய்பவர்களாதலால் சுருக்கமாக அவற்றைச் சொன்னேன்.