பதிவு செய்த நாள்
01
டிச
2020
18:28
திருவண்ணாமலை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கார்த்திகை தீபத்திருவிழா முடிந்து, கிரிவலம் வரவேண்டிய, உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் பிரஹாரத்தை வலம் வந்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரியும் மகா தீபத்தை, 40 கி.மீ., துாரம் வரை, பக்தர்கள் கண்டு வழிபடுவர். இந்நிலையில், நேற்று மாலை, கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், சந்திரசேகரர் தெப்பம் உற்சவம் நடந்தது. தீப விழாவில், மகா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள் என, ஆண்டுக்கு இரு முறை மட்டுமே, அருணாசலேசுவரர் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் கிரிவலம் ரத்து செய்யப்பட்டதால், உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் மற்றும் பராசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில், ஐந்தாம் பிரஹாரத்தை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வெளியே நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும், ரத்து செய்யப்பட்டதால், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.