Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதை(பகுதி-3) சிவமகா புராணம் ஸநத்குமார ஸம்ஹிதை (பகுதி-1) சிவமகா புராணம் ஸநத்குமார ஸம்ஹிதை ...
முதல் பக்கம் » சிவமகா புராணம்
சிவமகா புராணம் கைலாய ஸம்ஹிதை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மே
2012
03:05

3. கைலாய ஸம்ஹிதை: காப்பு: நமஸ் ஸிவாய ஸாம்பாய ஸகணாயஸ ஸூநவே, ப்ரதாந புருஷே ஸாய ஸர்கஸ்தித் யந்தஹேதவே! (பார்வதிதேவியாரோடும் கணபதி, கந்தப்பெருமான் முதலான மைந்தர்களோடும் முதன்மை கணங்களோடும் பிரகிருதி புருஷர்களுக்குத் தலைவராகவும் ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களுக்குக் காரணபூதராகவும் விளங்கும் பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம்)

1. சத்திர யாகமும் வியாஸரிடம் கேள்வியும்

முன்பொரு சமயம் இமயமலையில் தவஞ்செய்திருந்த முனிவர்களெல்லாம் சிவதரிசனம் செய்யக் கருதிக் காசியம் பதியை அடைந்தார்கள். அங்குள்ள கங்கை நதியில் நீராடி மணிகர்ணிகைத் துறையை அடைந்து நீராடி தேவர், முனிவர், பிதுரர் முதலானோருக்குத் தர்ப்பணஞ்செய்து விஸ்வநாதரைத் தரிசித்துப் பூஜை செய்தார்கள். சதருத்திரம் என்னும் வேத வாக்கியங்களால் ஸ்துதி செய்து ஒவ்வொருக்கும் கிருத கிருத்தியர்களானோம் என்று மகிழ்ந்து காலங்கழித்து வந்தார்கள். அப்போது பஞ்சக்குரோதம் என்ற ÷க்ஷத்திரத்தைத் தரிசிப்பதற்காகச் சூத புராணிகர் அங்கு வந்தார். ஒரு நாள் முனிவர்கள் அவரைக்கண்டு அவருடன் மற்றவர்களும் கூட்டமாகக் கூடி ஸ்வாமி சன்னிதானத்திற்குச் சென்று, விசவநாதரைத் தரிசித்து முக்தி மண்டபத்தை அடைந்தார்கள். அங்குள்ள திவ்யாசனத்தில் உட்கார்ந்த புராணிக சிரேஷ்டரான சூதமுனிவரை அர்க்கிய பாத்தியங்களால் பூஜித்து ஆனந்தமாக விளங்கினார்கள். அப்போது சூத புராணிகர் அவர்களை நோக்கி, நலமா? என்று கேட்டார். சிவபெருமானின் திருவருளாலும் பெரியோரின் நல்லாசியாலும் சுகமாகவே இருக்கிறோம்! என்று முனிவர்கள் கூறிவிட்டு சூத புராணிகர் உற்சாகமாக இருப்பதையறிந்து பிரணவப் பொருளையறிய விரும்பினார்கள்.

வியாசபகவானின் சீடரே! மகா புராணிகரே! வேத வியாஸபகவானால் புராணங்கள் அனைத்தையும் எங்களைப்போன்றவர்களுக்கு உபதேசிக்கும் வகையில் புராணிக உத்தமர் என்று போற்றப்படும் பெரியோரே! புராணங்கள் வேதத்தின் சொரூபத்தையும் அதன் அங்கங்களையும் உணராதாரும் அறியும்படி அனைவருக்கும் பயன்படும்படியாகச் சொல்லப்பட்டவை, வேதமோ பிரணவத்தின் பொருளைக் குறிக்கும், பிரணவமோ மஹேஸ்வர ஸ்வரூபம், மஹோவரனோ தங்கள் இதய கமலத்தில் எழுந்தருளியிருப்பவர், நாங்கள் திருவாய் மலர்ந்தருளும் சிவசரிதமாகிய அமுதத்தை அடியார்களாகிய நாங்கள் அருந்தி எங்கள் தீவினையை ஒழித்துப் பரமானந்தத்தை அடையச் செய்ய வேண்டும். தங்களைத் தவிர எங்களுக்கு அத்தகைய அரும்பெரும் பொருள்களை உபதேசிக்க வல்லவர் யார் தான் உண்டு! என்று மெய்சிலிர்க்க கூறினார்கள். சூத புராணிகர் அதற்கிணங்கி விநாயகர் சுப்பிரமணியர் பார்வதி பரமேஸ்வரன் நந்திதேவர், ஸனத்குமார முனிவர் வியாஸர் ஆகியவர்களைத் துதி செய்து விட்டு சொல்லத் துவங்கினார். புண்ணிய சீலர்களே! மிகவும் நுட்பமான கேள்வியைக் கேட்டீர்கள் இதை என் ஆசிரியரான வியாஸ முனிவர் முன்பு நைமி சாரணிய வாசிகளுக்குச் சொல்லியிருக்கிறார். அதை அவ்வாறே சொல்கிறேன். புலன்களைப் புறஞ் சொல்லாதவாறு அடக்கிப் பக்தியோடு கேட்பீர்களாக.

முன் ஸ்வாரோசிஷ மனுவந்தரத்தில், மிகவும் புண்ணிய பூமியாகிய நைமிசாரணியத்தில், முனிவர்கள் அனைவருங்கூடி தீர்க்கசத்திர யாகஞ் செய்து பரமேஸ்வரனை மகிழச்செய்து ஈஸ்வரரூபம் இத்தகையது என்று அறிந்து கொள்ள வேண்டும். என்று விருப்பம் கொண்டவர்களாய், வியாஸ பகவானின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஷ்ணுவின் அம்சமாகவும் ஜகத்குருவாகவும் பராசர முனிவரின் தவப்பயனாகவும் பகவானாயுமுள்ள வியாஸமுனிவரின் வருகையைக் கண்டு யாவரும் எழுந்து, அவரை எதிர்கொண்டழைத்து மலர்ந்த முகத்துடன் அர்க்கிய பாத்தியாதிகளால் பூஜித்தார்கள் அவரை யாகசாலையில் பொன்மயமான ஆசனத்தில் அசரச் செய்து மகாவிநயத்தோடும் கூப்பிய கரங்களோடும் நின்றார்கள். வியாஸமுனிவர் அம்முனிவர்களை நோக்கி, ரிஷிகளே நீங்கள் ஆரம்பித்த யாகம் இடையூரின்றி நடைபெற்றதா? இந்த யாகத்தில் பரமேஸ்வரனைப் பூஜித்ததற்குக் காரணம் என்ன? இவ்வாறு நீங்கள் அவரை அர்ச்சிப்பதற்குக் காரணம் ஈஸ்வரஸ்வரூபத்தை அறிய வேண்டும் என்னும் எண்ணம் உங்களுக்குத் தோன்றியிருப்பதேயாகும்! என்றார்.

முனிவர்கள் வியாஸரை வணங்கி நாராயணனுடைய அம்சமாகத் தோன்றியவரே! நீரே ஜகத்திற்குக் குருவாவீர் சிவபெருமான், திருமால், பிரமன் முதலானோரின் பிரசாத முழுவதையும் அடைந்திருக்கிறீர். பாவிகளால் அடைய முடியாத உம் திருவடித் தாமரைகளைத் தரிசித்தோம். ஆகையால் நாங்களே கிருதகிருத்தியர்கள் புனிதமான நைமிசாரணியத்தில் சத்திர யாகத்தை முடித்தும் பிரணவ ஸ்வரூபமான பரமசிவத்தையறிய வேண்டும் என்று கருதிய எங்கள் கருத்து நிறைவேறாததால் அதைத்தாங்களே! எங்களுக்குக் கூறியருளவேண்டும் எங்கள் சந்தேகங்களைப் போக்கத் தங்சுளையன்றி மூவுலகிலும் வேறு யார் இருக்கிறார்கள்? அபாரமான பவசாகரத்தில் மூழ்கிக் கிடக்கும், எங்களை சிவஞானமாகிய ஓடத்தினால் முக்தியாகியக் கரையை அடையச் செய்யவேண்டும்! என்றார்கள். வேத வியாஸர், பரமேஸ்வரரைத் தியானித்துச் சொல்லத் துவங்கினார்.

2. பார்வதி பரமேஸ்வரர் உரையாடல்

அந்தணோத்தமர்களே! சிவரூபத்தை விசாரித்தறியவேண்டும் என்னும் ஞானம் உலகத்தில் உண்டாவது துர்லபம் சிவப்பிரசாத முடையவர்களுக்கே பக்தியுண்டாகும் என்று வேதங்கள் கூறுகின்றன. தீர்க்க சத்திர யாகத்தினால் அம்பிகாபதியை அர்ச்சித்தபடியால் அந்தப் பரமபதியின் இலட்சணங்களை மகேஸ்வரர் உரையாடலான ஓர் இதிகாசத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். ஜகன் மாதாவாகிய ஈஸ்வரி, தக்ஷனுடைய தவப்புதல் வியாகத் தோன்றிச் சிவபெருமானை அடைந்த போது தன் தந்தையான தக்ஷன் சிவநிந்தை செய்ததால் அவனால் போஷித்து வளர்க்கப் பட்ட தன் உடலையும் அவன் குமாரி என்பதால் பெற்ற தாக்ஷõயணி என்ற பெயரையும் மாற்றக் கருதி சிவபெருமானின் திருவருளால் ஹிமாசல மன்னனுக்குப் புதல்வியாக உமை என்னும் பெயருடன் தோன்றினாள். பிறகு உமாதேவி தவஞ்செய்து சிவபெருமானை மணந்த பிறகு ஒருசமயம். சிவபெருமானை நோக்கி, பகவானே! படைப்பு முதலிய ஐந்தொழில்களையும் நடத்துபவரே! சர்வக்ஞரே, எனக்கு இந்த அவதாரத்தில் மந்திர தீøக்ஷ செய்து என்னைப் பரிசுத்தையாக்க வேண்டும்! என்று கேட்டாள்.

தேவீ! அத்தகைய யோசனை உனக்கு இருக்குமாயின் நீ கைலையங்கிரிக்கு வந்தால், அவ்வாறே செய்கிறேன்; என்று சிவபெருமான் கூறிவிட்டு தேவியோடு வள்ளிமலையை அடைந்து, விதிப்படி உமைக்குத் தீøக்ஷ செய்து, பிரணவ ஸ்வரூபத்தை உபதேசித்தார், பிறகு இருவரும் சுத்த தத்துவ சொரூபமான உத்தியான வனத்தை அடைந்தார்கள். சுமாலினி முதலிய தோழியர்கள் கொண்டு வந்த மலர்களைகொண்டு உமாதேவி தன்னை அலங்கரித்துக் கொண்டு சிவபெருமானின் மடியில் அமர்ந்திருந்தாள். அப்போது சிவபெருமான்; பார்வதிதேவியின் திருமுகத்தைகண்டு ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது தேவி, சிவபெருமானை நோக்கி நாதா! பிரணவ மந்திரத்தை உபதேசிக்கப் பெற்ற நான் அதன் பொருளை அறிய விரும்புகிறேன். அந்தப் பிரணவம் எப்படித் தோன்றியது? அதற்குப் பிரணவம் என்னும் பெயர் எப்படி வந்தது? அதிலிருந்து எத்தனை மந்திரங்கள் தோன்றின? வேத ஆதி என்று அதைச் சொல்லுவானேன்? அந்தப் பிரணவ மந்திரத்திற்குத் தேவர் யார்? அந்தப் பிரணவ தேவர்களை எவ்வாறு பாவிப்பது? அதை எப்படிப் பூஜிப்பது? பிரணவம் எப்படி பிரபஞ்சத்திற்கு ஆத்ம ஸ்வரூபம் என்பது? பிரணவ மந்திரத்தை ஜபிக்கத் தக்கவர்கள் யார்? அதனால் உண்டாகும் பயனையும் அதன் பூஜா ஸ்தானத்தையும் அதற்குரிய மண்டலப் பிரமாணத்தையும் அதற்கு உரிய ரிஷிகளையும் நியாசக் கிரமங்களையும் எனக்கும் தயை செய்து விவரமாகச் சொல்ல வேண்டும்! என்று கேட்டாள். சகல லோகநாயகரான சிவபெருமான் சொல்லத் துவங்கினார்.

3. பிரணவப் பொருள்

பார்வதீ நீ கேட்ட விஷயத்தைப்பற்றிச் சொல்கிறேன். அதைக்கேட்டவுடனேயே ஜீவர்கள் என் தன்மையை அடைவார்கள் பிரணவப் பொருளை உணர்வதே என் சொரூபத்தை உணர்வதாகும். அது எல்லா வித்தைகளுக்கும் விதையாக விளங்குவது; அது சூக்ஷ்மமானது விசேஷ அர்த்தம் கொண்டது சாமானியர்களால் அறிவதற்குச் சாத்தியமற்றது சர்வஜ்ஞத்வமும் குணத்திரயமும் சர்வ வியாபியுமாகிய நான் ஓம் என்ற அந்தப் பிரணவத்திலேயே பூர்ணமாக விளங்குவேன் உலகத்திலுள்ள ஸ்தாவரம் சங்கமம் முதலான எல்லா ரூபங்களிலும் காணப்படுவது பிரணவப் பொருளே! அதுவே பரப்பிரம்மம் அதுவே ஏகாக்ஷரம் என்றும் ஆதிமந்திரம் என்றும் சர்வசாதகமானது என்றும் சொல்லப்படுவது எல்லாவற்றிற்கும் ஆதியில் அப்பிரணவம் உச்சரிக்கப் படுகிறது. பிரணவமே நான்! நானே பிரணவம்! எனக்கும் பிரணவத்திற்கும் சிறிதும் பேதமேயில்லை. ஆகையால் முனிவர்கள் எல்லோரும் என்னை ஏகாக்ஷரரூபி என்று அறிகிறார்கள். பிரணவமே வாச்சியம். யானே அதன் வாசகம் மோக்ஷத்தையடைய விரும்பும் முமூக்ஷúக்கள் அதையே அறிய வேண்டும். பிருமா முதல் தாவரம் ஈறாகவுள்ள எல்லாவற்றிற்கும் பிராண ஸ்வரூபமாக இருப்பதால் அது பிரணவம் என்னும் பெயரைப் பெற்றது. அது பஞ்ச வர்ணாத்மகமானது. அகார உகார மகாரங்களாகிய மூன்றும் சேர்ந்து மூன்று மாத்திரையுடையதாக உச்சரிக்கப் பிரணவமாகும். மேலும் அதனோடு அரை மாத்திரை கூட்டி உச்சரித்து ஈசான மந்திரத்தை ஜபித்தால் நாதபிந்துக்களின் மூலமாக என்னை அறியலாம். அப் பிரணவ ஸ்வரூபியான என்னிடமிருந்தே வேதங்கள் தோன்றின. வேத முதல்வன் நான். பிரணவமே  என் வாசகம். அகாரமானது ரஜோகுணத்துடன் நான்கு முகங்களையுடைய பிரமனாய்ச் சிருஷ்டியைச் செய்யும் உகாரமானது. ஸத்வ குணத்துடன் பிரகிருதி என்னும் யோனியாகிய விஷ்ணு உருவமாய் உலகத்தைக் காக்கும் மகாரமானது தமோ குணத்துடன் உருத்திரனாகிய புருஷனாய் உலகத்தை சங்கரிக்கும் பிந்துவானது மகேஸ்வர சொரூபமாய்த் திரோபாவத்தைச் செய்யும் நாதமானது சதா சிவரூபமாய் எல்லாவற்றையும் அநுக்கிரகிக்கும், சதாசிவமூர்த்தியை நாதாந்தத்தில் சர்வ கர்த்தாவாகவும், சர்வக்ஞனாகவும் அகார உகார மகார பிந்து நாதங்களாகிய பஞ்சவர்ணங்களில் முறையே ஒன்றிற்கொன்று மேம்பட்டன. ஸத்யோஜாதம் அகாரமும் வாமதேவம் உகாரமும் அகோரம் மகாரமும் தற்புருஷம் பிந்துவும் ஈசானம் நாதமுமாகும். அகார ரூபியான வாமதேவ மூர்த்தியினின்று பதின்மூன்று கலைகளும், மகாரூபியான அகோர மூர்த்தியினின்று எட்டுக் கலைகளும், பிந்து ரூபியான தற்புருஷ மூர்த்தியினின்று நான்கு கலைகளும் நாதரூபியான ஈசான மூர்த்தியினின்று ஐந்து கலைகளும் தோன்றும் மந்திரம், யந்திரம், தேவதை, பிரபஞ்சம் குரு, சீடன் என்று ஆறுவகைச் சாதனங்களால் என்னை அறிந்து ஐக்கிய அநுசந்தானஞ் செய்து கொள்ள வேண்டும். சமஷ்டி ஸ்வரூபமான மந்திரத்தைச் சொன்னேன். அந்த மந்திரமே யந்திரமாவதையும் அதன் மண்டலக்கிரமத்தையும் உனக்குச் சொல்லுகிறேன். ஆறு ஆதாரங்களுக்கும் அப்பாற் பட்டிருக்கும் என்னைத் தியானிக்க வேண்டும்.

வைராக்கியமுடைய புருஷனே என்னை அவ்வாறு பாவிக்க வேண்டும் என்னை அவ்வாறு உணர்வதற்கு விரதம், சாந்தம், தவம், இந்திரிய நிக்கிரகம் (புலனடக்கம்) சவுரவர், ஆசாரம், வேத வேதாங்க ஞானம் பிராமணத்துவம் விஷய விரக்தி முதலிய குணங்களையுடையவன் சகல சாஸ்திர ஞானத்தையும் யோக நிலையையும் உத்தமாசரியனாகிய பதியை வணங்கி, மகிழச் செய்து சிவமாகவே பாவித்து, தன் மனநிலைமையை அறிந்து கொள்ள வேண்டும். அவரதற்கிணங்கி அனுமதி தருவாராயின் பன்னிரண்டு நாட்கள் பாலையே ஆகாரமாகக் கொண்டு, கடற்கரை நதி, மலை சிவாலயம் முதலிய இடங்களில் சுக்கிலபக்ஷத்துப் பஞ்சமி அல்லது ஏகாதசிகளில் காலையில் நீராடி அன்றாடக் கர்மங்களை முடித்து தூய உள்ளத்தோடு குரு முன்னிலையில் சென்று வணங்க வேண்டும். நாந்தி முகத்தால் பிதுரரை அர்ச்சித்து கண்டத்திற்கு மேல் சவுஸஞ் செய்து கொண்டு நகங்களைந்து நீராடி இருபத்தைந்து நாழிகைக்குமேல் பொர்மாவை உண்டு மாலைக் கடன்களை முடித்து அவுபாசனஞ் செய்து குரு காணிக்கை கொடுத்து குருவைப் பூஜிக்க வேண்டும். பிறகு ஓமப்பொருட்களை கொண்டு தங்கள் சூத்திரத்தில் கூறியுள்ளபடி பிரஜாபத்தியம் என்னும் இஷ்டியை வேத மந்திரத்தினால் செய்து வேதியருக்குத் தக்ஷிணை கொடுத்து தான் அதுவரையில் செய்துவந்த ஹோமாக்கினியை ஆத்மரோபணஞ் செய்யும் மந்திரத்தைச் சொல்லி அன்னத்தையும் ஹோமம் செய்து புருஷஸுக்த மந்திரத்தினால் ஓமாந்தஞ் செய்ய வேண்டும். அந்த அக்கினியில் வடதிசையில் தர்ப்பாசனத்தில் மரவுரி மான் தோல் முதலியன அணிந்து உட்கார்ந்து மவுனமாகக் காயத்திரியை மனோதிடத்துடன் விடிய ஐந்து நாழிகை வரையில் அப்பியாசம் செய்ய வேண்டும். பிராம முகூர்த்தத்தில் அவ்விடத்தை நீங்க நீராடலை முடித்து சருவைப்பசனஞ் செய்து விரஜா ஹோமத்தை வாமதேவமதத்தினாலாவது அல்லது சவுனகாதி மதத்தினாலாவது செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவன் கர்ப்பவாச கஷ்டத்திலிருந்து விடுபடுவான். ஓமத்தை முடித்து காலைக்கடன் கழித்து நித்தியாக்னியை வளர்த்து. அதை ஆத்மாரோபணஞ் செய்து சூரிய உதயம் ஆகும் வரையில் காயத்திரியை ஜபித்து, உலக இன்பத்தை விடுத்து பிரணவத்தை உச்சரித்து சிகை, உபவீதம், கடிசூத்திரம் ஆகியவற்றை விலக்கி கிழக்கு முகமாகவாவது வடக்கு முகமாகவாவது சிறிது தூரம் செல்லவேண்டும். விரக்தி முற்றுப் பெறாவிட்டால் தண்டம், கமண்டலம் கடி சூத்திரத்தை அணிந்து கொள்ளலாம். பிறகு ஆசிரியரை அடைந்து சாஷ்டாங்கமாக வணங்கி அவரது திருவடியில் பக்தியோடு நிற்கவேண்டும். அப்போது குரு விரஜா ஹோமஞ் செய்துள்ள பஸ்மத்தை எடுத்து அக்கினிரிதி! முதலான மந்திரத்துடன் உடல் முழுவதும் பூசி, நெற்றியில் திரிபுண்டரம் அணிந்து தேவியே! இவன் தன் இதயத்தில் உன்னையும் என்னையும் தியானிக்கும் யோக்கியதையுடையவனாகக் கடவன்! என்று கூறி அவரது வலது கையைச் சீடனுடைய சிரசின்மேல் வைத்து, சீடனது வலது காதில் பஞ்சவர்ணத்மகமான பிரணவ மந்திரத்தை அதற்குரிய ரிஷி சகிதமாக உபதேசிக்க வேண்டும். மந்திரம் யந்திரம் முதலான ஆறுவித சாதனங்களால் அதை அறிந்து கொண்டு, குருவை சாஷ்டாங்கமாக வணங்கித் தினந்தோறும் அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும்.

உமையே! அதன் பிறகு அவன் என்னை ஒருபொழுதும் மறவாமல் குருவினிடம் ஞானாப்பியாசம் செய்ய வேண்டும். சமதமாதி குணங்களும் வேத சாஸ்திர ஞானமும் இராகத்து வேஷம் முதலானவற்றின் நீக்கமும் உடையவனுக்கு யதி என்னும் பெயரும் என்னை உபாசிக்கும் யோக்கியதையையும் உண்டாக்கும். இதயகமலத்தில் ஆதாரசக்தி முதல்திரிதத்துவம் வரையில் அந்தராகாசத்தில் ஓம் என்னும் ஏகாக்ஷர சொரூபமாகிய பிரமத்தையே தியானிப்பவன் என் உலகத்தை அடைந்து சிவஞானத்தைச் சம்பாதித்துச் சாயுஜ்யத்தை அடைகிறான். மேலும் அவன் அனுஷ்டிக்க வேண்டிய நியமங்களாவன; காலையில் எழுந்து சுத்தஸ்படிக ஒளி போன்றவராயும் பரசிவமாயும் உள்ளவராக மனதில் குருவைத் தியானித்து சோடசோப சாரங்களோடும் கூப்பிய கரங்களோடும் குருவின் முன்னிலையில் சென்று சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்து நான் உதயம் முதல் மாலைவரையில் செய்யும் செயல்களை யெல்லாம் சன்னிதானத்துப் பூஜையாகப் பாவித்து, எனக்கு அனுக்கிரஹிக்க வேண்டும் என்று பிரார்த்தித்து அவர் அனுக்கிரகத்தை பெற வேண்டும். பிறகு ஜிதேந்திரியமடைய தூய்மையான ஓர் இடத்தில் திவ்ய ஆசனத்தில் அமர்ந்து மூலாதி பிரமாந்திரம் வரை பிரணவத்தை உச்சரித்து சிரசோடுகூடிய பிராணாயாமத்தால் தேகத்தைச் சுத்தஞ்செய்து திருணத்தைப் பூமியிலிட்டு மலஜலங்கழித்து, ஜல சமீபம் சென்று சற்று விலகியிருந்து சவுசஞ் செய்ய வேண்டும். கைகால்களைச் சுத்தம் செய்த பிறகு ஆசமனஞ் செய்து பிரணவத்தியானம் உள்ளவனாய் மவுனத்தோடு வடக்கு முகமாய்ப் பழுத்தமாவிலை முதலியவற்றால் தந்த தாவனஞ் செய்து இருமுறை ஆசமனீயம் செய்து, நெல்லிக் காயளவு மண்ணைக் கொண்டு, கைகால் விளக்கி அருணோதய காலத்தில் தேகம் முழுவதும் மண்ணைப் பூசி முதலில் ஸ்நானம் செய்து பிறகு என்னையும் குருவையும் தியானித்து நீராட வேண்டும்.

தேவீ! அதன் பிறகு நீரில் இறங்கி, சங்க முத்திரையை எழுதி பிரணவத்தால் பன்னிரண்டு முறைகள் ஸ்நானஞ் செய்து, கரையேறிக் கோவணத்தை சுத்தப்படுத்தி ஆசமனீயம் செய்து பிரணவத்தால் தேகந்துடைக்கும் வஸ்திரத்தைப் புரோக்ஷித்து முதலில் முகத்தைத் துடைத்து, சிரம் முதல் பாதம்வரை நன்றாகத் துடைக்க வேண்டும். பிறகு குரு சன்னிதானத்தில் வந்து மவுனமாய்ச் சுத்தமாக இருந்து புது அரைஞாண் பூண்டு கவுபீனம் தரித்து இருமுறை ஆசமனீயம் செய்து ஜலக்கரை சென்று விபூதியை சத்தியோஜாத மந்திரத்தால் எடுத்து அக்கினிரிதி என்னும் மந்திரத்தால் உத்தூளனஞ் செய்ய வேண்டும். ஆபோவா என்னும் மந்திரத்தால் மானசீகமாய் ஜலம் புரோக்ஷித்து, ஓமாபு என்னும்   மந்திரங்களால் திரிபுண்டரந்தரித்து பிரணவத்தால் உடல் முழுவதும் தூளனஞ் செய்து கையை அலம்பி இரண்டாவது முறை பஸ்மத்தை எடுத்து மேலே சொன்ன மந்திரங்களாலேயே குழைத்து, திரியாயுஷம் திரியம்பகம் என்னும் மந்திரத்தைப் பிரணவத்துடன் ஜெபித்து சிரம், நெற்றி, மார்பு, தோள், நாபி, கை, சந்தி முதலான இடங்களிலும் யதாக்கிரமமாய்த் தரித்துக் கையை அலம்பி பஞ்சாக்ஷரத்தை ஜெபித்து, குருவைத் தியானிக்க வேண்டும். (இவற்றில் முதலில் சொல்லியது தூளனம்; பின்னர் சொல்லியது திரிபுண்டரமும் ஆகும்.) ருஷி சந்தஸுகளோடு கூடிய யதோக்தமான ஆறுபிரணாயாமங்களைச் செய்து, பிராண வாயுவை அடக்கி இந்திரியத் துவாரங்களில் பிரணவத்தால் மும்முறை தொட்டு ஆசமனீயம் செய்து ஓங்கார சொரூபியான பரமேஸ்வரனைத் தியானிக்க வேண்டும் சூரியமண்டல மத்தியில் சர்வதேஜோமயமாகியும் பரமாகியும் எட்டுக்கரங்கள் நான்குமுகங்களுடன் அர்த்த நாரீஸ்வர சொரூபமாயும் சர்வாலங்கார சர்வாச்சார்யங்களுக்கு இருப்பிடமாயும் இருப்பவருக்கு மூன்று முறை அர்க்கியம் தொடுத்து, நூற்றெட்டு முறை ஜெபம் செய்து பன்னிரண்டு முறை தர்ப்பணஞ் செய்து மறுபடியும் ஆசமனீயம் செய்து, ருஷியாதி கிரமங்களுடன் மும்முறை பிராணாயாமத்தைச் செய்து மவுனமாய்ப் பூஜை செய்யுமிடம் சென்று அங்கு கால் அலம்பி, இருமுறை ஆசமனஞ்செய்து பூஜைத் தலத்தில் வலது காலை முதலில் எடுத்துவைத்துப் பிறகு சென்று விதிப்படி மண்டலத்தைச் செய்ய வேண்டும்.

4. பஞ்சவரண பூஜா மண்டலம்

தூய நன்னீரை நறுமண மலர்களால் பூஜித்து, அலங்காரமான பந்தல் ஒன்றை அமைத்து அதன் கீழ் இரண்டு முழ அகல நீளத்திற்கு கோமயங்கொண்டு, மெழுகி ஓலையினால் பதின் மூன்று பாகமாகக் கிழித்து மண்டலத்தின் கீழ்ப்பக்கத்திலிருந்து மேல் முகம் நோக்கி, முன்பு செய்த பதின்மூன்று கீறலையும் ஒவ்வொன்றைப் பதின்மூன்று கூறாக நூற்று அறுபத்தொன்பது கூறுகளாக்க வேண்டும். மத்திய கூறைத் தாமரைமொட்டுப் போலாக்கி அதைச் சுற்றிலும் இதழ் உள்ளது போல எட்டுப் பாகஞ் செய்து அதன் நுனி நீலவர்ணமாகவும் அடி வெண்ணிறமாகவும் மொட்டு மஞ்சள் நிறமாகவும் இருக்கச் செய்ய வேண்டும். மேற் கண்ட எட்டுப் பாகத்தின் தெற்குபாகத்திலுள்ள இதழை ஆதியாகக் கொண்டு வலம் சுற்றும் கிரமத்தில் ஒன்று கறுப்பும் மற்றொன்று பொன்னிறமாகவும் மாறிவர நிறங்கள் அமைக்க வேண்டும். அன்றியும் மொட்டின் நடுவில் பிரணவாக்ஷரம் எழுதியிருக்க வேண்டும் இத்தகைய பீடத்தின் மேல் பரமேஸ்வரனை அமைக்க வேண்டும். அவர் மேல் அமரேசரையும் மகாகாளரையும் எழுத வேண்டும். இவ்விரு உருவங்களின் சிரசில் தண்டம் ஒன்று வரைய வேண்டும். மேற்கண்ட பீடத்தை நீலவர்ணமாகவும் பரமேசரைப் பொன்னிறமாகவும் அமரேசரையும் மஹாகாளரையும் முறையே இரத்த நிறமாகவும் கருநிறமாகவும், தண்டத்தைப் புகை நிறமாகவும் அத்தண்டத்தின் மேல் சிவபெருமானை ஸ்படிக நிறமாகவும் வரைந்து சத்தியோஜாத மந்திரத்தினால் இரத்தமயமான வட்டஞ் செய்ய வேண்டும் அதற்கு அஷ்ட(எட்டு) கோணங்கள் உண்டாக்கி நான்கு மூலைகளிலும் நான்கு துவாரஞ்செய்து. அக்கினித்திக்கில் மஞ்சள் நிறமாக எட்டி தழுள்ள தாமரை ஒன்றை எழுதவேண்டும். அந்த மலர்க்கிடையே பொன்னிற பொகுட்டொன்றை அமைக்க வேண்டும். இத்தகைய பொகுடின் நடுவில் ஹகாரம் எழுதியிருக்க வேண்டும். ஸ என்னும் எழுத்து எழுதவேண்டும் அடுத்த பொகுட்டில் உகர ஊகாரங்களும் அதற்கடுத்த தளத்தின் பொகுட்டில் அவுரமும் ஈசானதிக்கில் முன்போல மலரும் பொகுட்டும் எழுதி அதன் மத்தியில் ஸக என்னும் எழுத்து எழுதி அதற்கு உகாரம் சேர்த்து மத்தியில் விந்துவை எழுதி அதன் வெளிப் புறத்தில் ஐந்து கோணங்கள் செய்து அதன் மத்தியிலுள்ள பொகுட்டை இரத்த மயமாகவும் பொன்மயமாகவும் செய்ய வேண்டும். இதழ்களைச் செந்நிறமாகவும் அதைச் சுற்றிலும் கரு நிறமாகவுமாக்கி அதைச் சுற்றிலும் மீண்டும் வெண்ணிற முண்டாக்கி இதன் கிழக்குப் பக்கத்தில் ஆறு கோணங்களுடன் இரத்த நிறத்திலும் உத்தரபாகத்தில் திரிகோணத்துடன் வெண்ணிறத்திலும், மேல்பாகத்தில் பொன்நிறமாகவும் உண்டாக்கி, நான்கு மூலைகளிலும் உகாரமும் மேல்புறத்தில் மகாரமும் பூர்வபக்கத்தில் அகாரமும் அமைக்க வேண்டும். இவ்வாறே அக்கினி திக்குமுதல் மற்ற திக்குகளுக்கெல்லாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.(இதை விளக்கமாககுரு மூர்த்தத்தால் அறிக) இவ்விதமாக மண்டலம் எழுதிச் சூரியனைப்பூஜை செய்பவன் பிரமத்தை அறிவதற்கு தகுதியுடையவனாகிறான்.

5. பஞ்சாவரண பூஜாவிதியும் அங்கநியாஸ கரநியாஸமும்

மேற்சொன்ன அத்தியாயத்தில் விரித்த மண்டலத்தின் தென் திக்கில் வடக்கு முகமாகப் புலித்தோலில் நன்னீர் தெளித்து அதன் மேல் உட்கார்ந்து சத்திகமலாய என்னும் மந்திரத்தை நம என்பதோடு கூட்டிப் பன்முறை தன்னால் இயன்ற அளவு செபிக்க வேண்டும். அதன்பிறகு பிரணவபூர்வமாய் பிராணாயாமத்தை விதிப்படிச் செய்து. அக்கினிரிதி என்னும் மந்திரத்தினால் விபூதியை உடம்பு முழுவதும் பூசிக்கொண்டு குருவை நமஸ்கரித்து மண்டலஞ் செய்ய வேண்டும். அதைச் செய்யும் முறையாவது நான்கு புறம் சதுரமாகவும் மத்தியில் முக்கோணமாகவும் அதற்கு விருத்தமாகவுஞ் செய்து, ஓம் என்னும் மந்திரத்தினால் பீடஞ் செய்து சங்கு வைத்து அதில் நீர் பரப்பி பரிமள புஷ்பங்களால் பிரணவத்தோடு அருச்சனை செய்து, பிரணவத்தை மீண்டும் ஜபித்து ஏழு முறை ஜலம் தெளித்து தேனுமுத்திரை காட்ட வேண்டும். மீண்டும் பிரணவத்தால் புரோக்ஷித்து சங்க முத்திரை காட்டி அஸ்திர மந்திரத்தால் தன்னையும் கந்த புஷ்பாதி பூஜாத்திரவியங்களையும் புரோக்ஷிக்க வேண்டும், மேலும் பிராணாயாமத்தை விதிப்படி மூன்றுமுறை செய்து ருஷியாதிக்கிரமங்களைச் செய்ய வேண்டும். அதன் விபரத்தையும் எடுத்துக் கூறுகிறேன். மந்திரத்தின் பெயர் ஸவுரவம், ருஷி தேவபாகர் என்பர், காயத்திரி என்னும் சந்தஸ் எழுத்தின் கணக்கு தேவதை சூரிய மகேஸ்வரர் ஹ்ரா முதலிய ஆறு அக்ஷரங்களை ஜபித்த அங்கநியாச கரநியாஸங்களைச் செய்ய வேண்டும்; முன்பு எழுதிய சக்கரத்தில் அக்கினி மூலையிலுள்ள தாமரையில் அக்கினி மந்திரத்தினால் ஜலம் தெளித்து, பிரபூதம், விமலம், காரம் என்னும் தேவதைகளை ஆவாஹனஞ் செய்து காலாக்கினி ருத்திரரையும் ஆதார சக்தியையும் அநந்தரையும் பிருத்வியையும் இரத்தின தீபத்தையும் அதற்மேல் ஆவாஹனஞ் செய்து. மானசீகமாக நவரத்தின கசிதமான கிரகமும் அதனருகே விருட்சங்களும் உத்தியான வனமும் இருப்பதாகப்பாவித்து தருமம் ஞானம், வைராக்கியம், ஐஸ்வரியம் என்னும் நான்கு வகையுங் கொண்டு அருச்சிக்க வேண்டும்.

பிறகு அதர்மம் அஞ்ஞானம் அவைராக்கியம், அநைசுவரியம் என்னும் நான்கால் அருச்சிக்க வேண்டும், அந்த மண்டலத்திலேயே மாயையைக் கீழ்ப்பீடமாக்கி விதானத்தை ஞானத்தால் மூடி அதனால் ராஜஸதாமஸ ஸாத்விக குணங்களை ஆவாஹனஞ் செய்வதுடன் பூர்வதிக்கு முதல் தீப்தை, சூக்ஷ்மி, ஜயை, பத்ரை, விபூதி, விமலை அமோகை வைத்யுன முதலிய ஆவணசக்திகளைச் சுற்றிலும் ஆவாஹனஞ் செய்ய வேண்டும். பிரமவிஷ்ணு. ருத்திரர்களையும் அந்தராத்மாவையும் ஞானரூபமான பரமாத்மாவையும் ஆவாகனஞ் செய்து, யோக பீடத்தை வேதவிதிவழி அருச்சனை செய்து அதன்மேல் மூலமந்திரத்தினால் ஆதார சக்தியை ஸ்தாபித்து பிராணாயாமஞ் செய்து இடகலையால் சுவாசத்தை உட்கொண்டு செந்தூரம் போன்ற மேனியுடைய அர்த்தநாரீசுவரை உருத்திராக்க மாலிகை பாசம் கட்வாங்கம், கபாலம், அங்குசம், பங்கயம், சங்கு, சக்கரம், முதலிய ஆயுதங்களும் சதுர் முகங்களும் பன்னிரு கண்களும் உடையவராய் மானசீகமாய் இதயகமலத்தில் ஆவாகனஞ்செய்ய வேண்டும். ஹ்ராம். ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரங்களால் அருச்சனை செய்ய வேண்டும். அதன்மேல் பிரகாச சக்தியுடன் சூரியனை ஆவாகனஞ் செய்து தேனு முதலிய முத்திரைகளைக்காட்டி ஹ்ராம், ஹ்ரீம் என்னும் மந்திரத்தால் பஞ்சோபசாரம் செய்து மூல மந்திரத்தால் பூஜிக்க வேண்டும். முன் கண்ட கமலதளத்தின் இதழ்களில் அக்னி, ஈசானன். நிருதி. வாயு ஆகிய இவர்களை முதல் ஆவணத்தில் ஆவாகனம் செய்து பூஜித்து இரண்டாவது ஆவாணத்தில் பூர்வாதி திக்குமுதல் ஆதித்தன், பாஸ்ரன் பானு, ரவி என்னும் சூரியர்களை நாமபேதங்களால் ஆவாகனஞ் செய்து பூஜிக்க வேண்டும் மூன்றாவது ஆவாணத்தில் ஈஸான திக்குமுதல் அர்க்கன், பிரமன், உருத்திரன். விஷ்ணு ஆகிய நால்வரை பூஜிக்க வேண்டும் சந்திரன். அங்காரகன், புதன் பிரகஸ்பதி சுக்கிரன், சனி, ராகு, கேது முதலியவர்களைப் பூர்வ திக்கு முதல் சுற்றும் ஆவாஹனஞ் செய்து பூஜிக்க வேண்டும். அன்றி இன்னொரு வகையையும் கூறுகிறேன்.

முதலில் கூறியவாறே பிரதமத்தில் செய்து அதற்குப் பிறகு இரண்டாவது ஆவாணத்தில் துவாதச ஆதித்தர்களையும் மூன்றாவது ஆவாணத்தில் சூரியன் நீங்க எட்டுக் கிரகங்களையும் செய்தும் கடைசியில் கங்கையாதி புண்ணிய தீர்த்தங்களையும் ருஷீஸ்வரர்களையும் தேவர் கந்தருவர்களையும் ஆவாகனஞ் செய்து பூஜிக்க வேண்டும். இத்தகைய மூன்று ஆவாகணங்களுக்குள் வேதமயமான குதிரைகளையுடைய சூரியனைப் பூஜித்து அதனருகில் சதுரமான மண்டலம் ஒன்றை எழுதி குருணி நீர் கொள்ளக் கூடிய குடத்தில் நறுமண நீர் நிரப்பி சந்தனத்தால் அர்ச்சனை செய்து, முழந்தாளிட்டு நமஸ்கரித்து, சிந்துரவர்ணாய நம; கமண்டலாய நம; சுவச் சராபரணாய நம என்று தோத்திரஞ் செய்து புஷ்பம் அக்ஷதைகுங்குமம் வாசனைத் திரவியங்கள் கலந்த நீரைப் பொற்பாத்திரத்தில் எடுத்து மேற்கூறிய மந்திரங்களாலேயே துதித்து அர்க்கியத்தை அங்கீகரித்து எனக்கு அனுக்கிரகிக்க வேண்டும். என்று பிரார்த்திக்க வேண்டும். கையைச் சுத்தஞ் செய்து முன் சொன்ன மந்திரங்களை உச்சரித்து விபூதி பூசி மூலமந்திரத்தினால் கரநியாஸஞ் செய்து பஞ்சோபசாரத்தால் அர்ச்சித்து ஓம்குருவே நம என்று அருச்சனை செய்யவேண்டும் பஞ்சாத்மகவான பிரணவத்தைப் பஞ்சமஸ்வரத்துடன் கூட்டியும் இருபுறங்களிலும் அவுகாரங் கூட்டியும்( க்ஷவு) உச்சரித்து இருகரம், புறம், இருதொடை, முதலியன படியும் படி, குரு, கணபதி துர்க்கை, ÷க்ஷத்திபாலகன், முதலியவர்களை நமஸ்கரித்து பிரணவபூர்வமாய் ஹ்ருதயநியாசஞ் செய்து, அதற்கு மேல் உபஸ்தானஞ் செய்து அபஸ்ர்ப்பந்து என்னும் மந்திரத்தினால் பிரணவபூர்வமாய் அஸ்திரமந்திரத்துடன் அருகேயுள்ள விக்நகரானவர்களையும் ஆகாயத்திலுள்ளவர்களான யக்ஷராக்ஷசர்களையும் விலக்கி, திவ்வியாசனத்தில் உட்கார்ந்து பிராணவாயுவை அடக்கி பிரம நாடியினால் அம்சமந்திரத்தினால் ஜீவசைதன்னிய சொரூபியான பரமேஸ்வரனை இதயத்தில் சித்துருவமாய்த் தியானிக்க வேண்டும் ரேசகக் கிரமத்தினால் பிராணாயாமம் செய்து நூற்றுப் பன்னிரண்டு பீஜாட்சரங்களால், வாயு அக்கினி வருணன் முதலானோர் மந்திரத்தாலும் தத்தமதுவேத மந்திரத்தினாலும் பிராணப் பிரதிஷ்டை செய்து; மாதுருகாக்ஷரத்தை பிரணவத்துடன் ஆவாஹனஞ் செய்து பூஜிக்க வேண்டும் மீண்டும் பிராணாயாமம் செய்து ருஷிக்கிரமமாய் ருஷிகளைத் தியானிக்க வேண்டும்.

தேவீ! இதற்கு ருஷி பிரமன், சந்தஸ் தேவி காயத்திரம், தேவதை நான் பீஜம்-அகாரம் சக்தி-உகாரம் கீலகம்-மகாரம் என்று உணர்ந்து ஜபித்து மோக்ஷõர்த்தத்தில் விநியோகிக்க வேண்டும் இருகரங்களின் தர்ஜனிகளால் அங்குஷ்டங்களைத் தொட்டு ஓங்கார பூர்வமாகவும் பிரமோக்தமாகவும் அகாரய வென்று(ஓம் அகராய அங்குஷ்டாப்யாம் நம என்றும்) அங்குஷ்டங்களால் தர்ஜனியைத் தொட்டு ஓம் உகராயதர்ஜனீப் யாம் நம என்றும் மத்தியமங்களைத்தொட்டு ஓம் மகாராயமத்தியமாப்பியாம் நம என்றும் அநாமிகைகளைத் தொட்டு ஓம் பிந்தவே அநாபிகாப்பியாம் நம என்றும் அகார உகார மகார நாத பிந்துக்களைச் சேர்த்து, இருகரங்களையும் மேலும் கீழுந்தடவி கரதலகரப்ருஷ்டாப்யாம் நம என்று ஜபித் கரநியாஸம் முடித்து அம்பிரம்ஹாத்மணே ஹ்ருதயாய நம என்றும் அம்விஷ்ணுவாத்மானே சிரஸேஸ்வாஹா என்றும் மம்ருத்ராத்மனே சிகாயவஷட் என்றும் அம் ப்ரஹ்மாத்மனே சுவகாய ஹும் என்று இருதோள்களையும் தொட்டும் உம் விஷ்ணு வாத்மனே நேத்திரத்திரயாய வவுஷட் என்றும் மம் ருத்திராத்மனே அஸ்திராயபட் என்றும் வியாஹ்ருதிகளைப் பிரணவாந்தமாக (திக்பந்த) என்று திக்பந்தனாஞ் செய்ய வேண்டும். பிறகு முகம் முதலிய அவயவங்களில் ஈசானாதிகளை விநியாஸஞ் செய்ய வேண்டும். அதாவது சிரம் முகம் இதயம் பாதம் என்னும் இடங்களில் ஐந்து ஈசான கலைகளை நியாயஞ்செய்து நான்கு திசைகளிலும் தற்புருஷாதி நான்கு முகங்களையும் ஆவாகனஞ் செய்து இதயம் கண்டம் தோள் நாபி வயிறு புஷ்டம் மார்பு என்னுமிடங்களில் அகோர கலைகள் எட்டையும் நியாஸஞ் செய்து குதம், ஆண்குறி, தொடை, முழங்காலின் கீழ்ப்பிரதேசம் புஷ்டம் இடைபக்கம் என்னும் இடங்களில் வாமதேவ கலைகள் பதின்மூன்றையும் நியாஸஞ் செய்து பாதம் கை பிராணன், சிரம் தோள் என்னுமிடங்களில் ஸத்யோஜாதகலைகள் எட்டையும் நியாஸஞ் செய்து இவ்வகையாக சிவகலைகளில் முப்பத்தெட்டினையும் நியாஸஞ் செய்து முடித்தபிறகு இதில் விடுபட்ட அவயவங்களிலும் பிரணவ மந்திரத்தினால் நியாஸம் முடித்து தேவியினுடைய ஹம்ச மந்திரத்தினாலும் நியாஸஞ் செய்ய வேண்டும்.

6. பூஜா மந்திரமும் சதா சிவரூபமும்

சிவபெருமான் உமாதேவியை நோக்கிக் கூறுகிறார். தேவீ! நான் அமர்ந்திருக்கும் பீடத்தின் இடது பாகத்தில் சதுரமாக ஒரு மண்டலஞ் செய்து அதில் ஓரிடத்தில் ஆசனம் அமைத்து, அஸ்திர மந்திரத்தால் சங்கத்தை ஸ்தாபித்துப் பிரணவத்தால் அதை அர்ச்சித்து தூயநன்னீரை அதில் நிரப்பி நறுமண மலர்களால் பிரணவ மந்திரத்தைக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் ஏழுமுறை பிரணவத்தை ஜபித்து தேனு முத்திரையைக் காட்டிப் பிறகு சங்க முத்திரையைக் காட்டி அம்மண்டலத்தினிடையே அர்த்த சந்திரா காரமாயும் அதன் மத்தியில் முக்கோணமாயும் அதன் மத்தியில் அறுகோணமாயும் எழுதி அதில் பீடத்தின் மீது அர்க்கிய பாத்திரத்தை வைத்து அதில் தர்ப்பை எள், நெல், யவை, அக்ஷதை கந்தம் புஷ்பம் வெண்கடுகு விபூதி என்பனவற்றைப் போட்டு ஸத்யோ மந்திரத்தால் அபிமந்திரித்து முன்சொன்னபடி அங்கு நியாஸஞ் செய்து கவச மந்திரத்தால் அவகுண்டம் (மூடுவது) செய்து தேனுமுத்திரைகாட்டி அதற்குப்பிறகு அந்த சங்கு தீர்த்தத்தை எடுத்து, அஸ்திர மந்திரத்தால் பிரணவபூர்வமாகப் பூஜைத் திரவியங்களையும் தன்னையும் மண்டலத்தையும் புரோக்ஷணம் செய்ய வேண்டும் பிறகு முன்பு எழுதியுள்ள பத்மத்தின் ஈசான பாகத்தில் ஓம் குர்வாஸநாய நம என்று குருவுக்கு ஆசனங் கற்பித்து குங்குருப்யோ நம என்று குருவை வரதாபய அஸ்தங்களும் இருகண்களும் சிவவடிவமும் தென்முகமும் படிகம் போன்ற நிர்மல சரீரமும் பிரசன்ன முகமுங் கொண்டு எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து, சிரமப்படி நறுமண மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். பத்மத்தின் நிருதிபாகத்தில் விநாயகரை கணாநாந்த வா என்ற மந்திரத்தால் சிவந்த தேகமும் சர்வாபரணமும் பெரிய சரீரமும் பாசம் அங்குசம், தந்தம், மோதகம், இவற்றை ஏந்திய கரங்களும் யானைமுகமும் கொண்டவராய், விக்கினங்களையெல்லாம் விலக்கும் கணபதியே  என்று ஏகமனதாய்த் தியானஞ் செய்து நறுமண மலர்களால் யதாவிதியாக அர்ச்சிக்க வேண்டும்.வாழை முதலிய பழங்கள், தேங்காய், மோதகம் முதலியன நிவேதித்து நமஸ்கரிக்க வேண்டும், பிறகு அந்தப் பதுமத்தின் வாயு திசையில் ஆசனம் ஒன்று கற்பித்து, ஸ்கந்த மூர்த்தியை ஸ்கந்த காயத்திரியைப் பிரணவத்தோடு கூட்டி, ஆவாகனஞ் செய்து, உதய சூரியன் போன்ற காந்தியும் மயில்வாகனமும் சதுர்புஜமும் திவ்விய தேகமும் மகுட ஹாரங்களும் வரத அபயஹஸ்தமும் உயர்த்தியசேவற் கொடியும் தரித்த இருகரங்களையுடையவராய்ப் பாவித்து, கந்த புஷ்பாதிகளால் கிரமமாகப் பூஜித்து நமஸ்கரிக்க வேண்டும். அநதப் பதுமத்தின் கிழக்குவாசலில் தென்திசையில் ஆசனங்கற்பித்து அந்தப்புறத் தலைமையையும் தங்கமலை போன்ற பொன்னிறமேனியும் அணிமணிகளின் அலங்காரமும், சந்திரசூடமும், முக்கண்களும் நான்கு கைகளில் சூலம் மான்மழு பொற்பிரம்புகளைத்தரித்து கோலமும் சிங்கம் போன்ற உக்கிரமுகமும் கொண்ட நந்திதேவரை ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும் அந்தப் புதுமத்தின் கிழக்கு வாசலில் வடதிசையில் மருத்தின் குமாரியும் நந்தி தேவரான கணவரைப் பரதசேவை செய்து கொண்டிருப்பவளுமாகிய சுபசையை விதிப்படிப் பூஜிக்க வேண்டும் அதன் பிறகு அந்தப் பதுமத்தைச் சங்கு தீர்த்தத்தால் புரோக்ஷித்து ஆதார சக்தியைச் சாமரவர்ணமாகப் பாவித்துத் தியானிக்க வேண்டும். அந்த ஆதார சக்தியின் பேரில்குண்டலா கிருதியாகவும் வெண்ணிறமாகவும் பரந்த படமும் அந்தப் படத்தால் ஆகாயத்தை அளாவும் ஆதிசேஷனை ஸ்தாபித்து அவ்வனந்தன் பேரில் ஓர் சிங்காதனம் நிர்மாணித்து தர்மம் ஞானம் வைராக்கிரம் ஐஸ்வரியம் என்னும் நான்கும் கால்களாகவும் ஆக்கினேயாதி மூலைகளில் அதர்மம் அஞ்ஞானம், அவை ராக்கியம் அநைசுவரியம் என்னும் நான்கும் மூலைகளாகப் பாவித்து அச்சிங்காதனம் இரத்தினமயமான விதானம் கட்டப்பட்டதாகச் செய்து, அந்தச் சிங்காதனத்தின் மீது தாமரைக் கொடி படர்ந்து இலைகள் முட்கள் பொருந்திய ஓர் மலர் பல இதழ்களோடும் அதன் இடயே மொட்டும் இருப்பதாகப் பாவித்து, இதழ்களில் சித்திகளையும் கேசரங்களில் சக்திகளையும் அஷ்டப்பிரதான தளங்களில் வாமதேவாதி உருத்திரர்களையும் கர்ணிகையில் வைராக்கியத்தையும் விதையில் நவசக்திகளையும் கிழக்கில் சிவாத்மகமான தர்மத்தையும் நாளத்தில் சிவஞானத்தையும் கர்ணிகையின் பேரில், அக்கினி, சந்திரன், சூரியன் என்னும் மூன்று மண்டலங்களையும், அதற்கப் புறம் சிவ தத்துவத்தை எல்லா ஆசனங்களுக்கும் உச்சியில் பல வித புஷ்பங்களாலும் ஆகாயமயமான சரீரத்தோடும் விளங்குவதாகத் தகரவித்தையால் ஆவாஹனஞ் செய்ய வேண்டும் ஆதார சக்தி முதல் சுத்த வித்தியா தத்துவம் வரையிலுள்ள அவருடைய சொரூபத்தைப்பிரணவ பூர்வமும் நமோந்தமுமாக உச்சரித்துப் பூஜிக்க வேண்டும். பூஜாக்கிரமம் இவ்வகையது.

பார்வதீ! இன்னும் கேள் தேகம், முகம், தலை இவற்றில் பேதங்களைச் சொல்லுகிறேன். என்னைப் பூஜிக்கும் விஷயத்தில் முத்திரைகளைத் தெரிந்து கொண்டு புஷ்பாஞ்சலிகளால் ஸத்தியோஜாத மந்திரத்தொடங்கி சதாசிவோஹம் வரையில் உச்சரித்து அப்பொழுது மூலாதாரத்தினின்று பன்னிரு சக்கரங்களைப் பிளந்து கொண்டு, பிரமாந்திரம் வரையில் உண்டாகும் நாதத்தை ஓங்கார கோசரமாகி யானாகத் தியானிக்க வேண்டும், சுத்த ஸ்படிகம் போல நிர்மலராகவும் ஆனந்த வடிவினராகவும் நித்தியமானவராகவும் அக்ஷரரூபியாகவும் சர்வலோக காரண ரூபியாகவும் சர்வலோக மயமாகவும் பராத்பரராகவும் உள்ளும் வெளியும் விளங்குபவராகவும் அணுவுக்கணுவாயும் மகத்துக்கு மகத்தாயும் பக்தர்களுக்கு எளியவராகவும் ஈஸ்வரராகவும், நாசரஹிதராகவும் பிரம, இந்திர, விஷ்ணு ருத்திராதியருக்கு அரியராகவும் வேதவேதாந்த காரமாகவும் வித்வான்களின் வாக்குக்கு எட்டாதவராகவும் அப்பிரமேயமாகவும் ஆதிமத்யாந்த ரகிதராகவும் சம்சாரரோகிகளுக்கு மருந்தாகவும் உள்ள என்னை பாவனாமாத்ரையாய ஆவாஹனம், ஸ்தாபனம் ஸந்நிரோதம் நிரீக்ஷணம் நமஸ்காரம் முதலானவற்றை மானசீகமாகச் செய்ய வேண்டும். சதாசிவராயும் நிஷ்களராயும் சுத்த ஸ்படிகமேனியராயும் குளிர்ந்த பார்வையும் மின்னற்கொடி போல படர்ந்த ஜடா அடவியும் புலியதஜம் புன்னகையும் பத்மதனமும் செந்தாமரை போன்ற கை கால் இதழ்களும் ஐந்து முகமும் பத்துக் கரங்களும் சந்திர சூடமும் உள்ள மூர்த்தியைத் தியானிக்க வேண்டும், அந்தச் சதாசிவ மூர்த்தியின் கிழக்கு முகமானது தாமரை போன்றதும் முக்கணங்களும் சந்திரனைத் தரித்த முடியையும் உடையது. தென்புறத்திலுள்ள முகத்தை நீர்கொண்ட மேகம்போன்ற கருநிறமுடையதும் சிவந்த திரிகேந்திரங்களும் கோரைப் பற்களும் கோரபார்வையும் கொண்ட துடிக்கும் உதடுடனும் பாவிக்க வேண்டும். வடபுறத்துள்ளது பவழம் போன்ற நிறமும் நெற்றியின் கறுத்த முன் தொங்கல் மயிரும் முக்கணங்களும் பிறையணிந்த முடியும் உடையதாகப் பாவிக்க வேண்டும். மேல் நோக்கியதாக உள்ளதை சந்திரகாந்தியும் புன்னகையும்  முக்கண்களும் சந்திர பூஷணமும் உடையதாகப் பாவிக்க வேண்டும் ஸ்படிக்காந்தியும் பிறைநிலா சூடிய ஜடாமுடியும் மலர்ந்த முக்கண்களும் உடையதாக ஐந்தாவது முகத்தைப் பாவிக்க வேண்டும். இவரை வடபுறத்தில் சூலம், பரசு, வஜ்ஜிரம், கட்கமும், இடது புறத்தில் பிநாகம், நாராநகம், மணிபாசம், அங்குசமுமுடையவராய்ப் பாவிக்க வேண்டும். முழந்தாள் முதல் கண்டம் வரையில் வித்யா கலை பொருந்தியதாயும் அது முதல் நெற்றி வரையில் சாந்திகலையோடும் அதற்கு மேல் காத்தியாதீத கலையுடனும் ஈசான மகுடமும் தற்புருஷமுகமும், அகோர இதயமும், வாமதேவ குஹ்யமும், சத்யோஜாத பாதமும், முப்பத்தெட்டு கலைகளுடன் கூடியவராயும் ஈசானாதி பஞ்ச பூதஸ்வரூபமாயும், ஓங்கார மயமாயும் அம்சமயமாயும் பஞ்சாட்சர ஷடாட்சரரூபமாயும் ஷடங்கரூபியாயும் ஷாட்குண்ய பரிபூரணமாயும் உள்ளவராகத் தியானிக்க வேண்டும்.

தேவீ! மனோன்மணியான உன்னை என் இடதுபுறத்தில் பிரணவ பூர்வமாய் கவுரீமிமாய என்னும் மந்திரத்தால் ஆவாஹனஞ் செய்து ஏகாக்கிர சித்தனாய் தியானிக்க வேண்டும். நீலோற்பலம் போன்ற திருமேனியும் பரந்த விழியும் முழு நிலாவைப் போன்ற முகமும் நீல நிறத்தோடு சிறு கூந்தர்சுருள் தொங்கும் நெற்றியும் சந்திர அணியும் பூரித்த தனபாரங்களும் நுண்ணிய இடையும் பீதாம்பர ஆடையும் சர்வாபரண அலங்காரமும் திலகமணிந்த நெற்றியும் மணம்வீசும் பல மலர்களணிந்த கூந்தலும், எனக்குச் சமானமான குணங்களும் சிறிது நாணத்தால் குனிந்த நோக்கும் வலதுகையில் பொற்றாமரையுங் கொண்டு, திவ்வியாசனத்தில் வீற்றிருப்பதாக உன்னையும் என்னையும் புனிதமான மனதுடன் பாவித்து சங்கு நீரால் பிரணவ மந்திரத்தைக் கொண்டு புரோக்ஷித்து அபிஷேகம் செய்ய வேண்டும். பவாய நம என்று பாத்தியமும் வாமதேவாய நம என்று ஆசமனீயமும் ஜேஷ்டாய நம என்று யக்ஞஉபவீதமும் ருத்திராய நம. என்று புனராசமனீயமும் காலாய நம என்று கந்தமும் கலவி கரணய நம என்று அக்ஷதையும் பலவிகரணய நம என்று புஷ்பமும் பலாய நம என்று தூபமும் பலப்பிரமதகாய நம என்று தீபமும் பஞ்சப் பிரமந்தரத்தால் கரந்நியாசமும் செய்து பிரணவத்தால் உனக்கும் எனக்கும் முத்திரைகளைக் காட்டி முதலில் என்னை அர்ச்சிக்க வேண்டும். இரண்டாவதாக உன்னை அர்ச்சிக்கும் போது மேற் கூறியமந்திரங்களை ஸ்திரீலிங்கமாகக் கூறிப் பஞ்சாவரண பூஜையைச் செய்ய வேண்டும். கணபதி ஸ்கந்தர்களை முதலில் பூஜித்த படியே மீண்டும் கந்தபுஷ்பாதிகளால் பூஜிக்க வேண்டும். அதன் பிறகு மண்டலத்தை நான்கு புறத்திலும் அங்கந்நியாஸ கரந்தியாஸங்களுடன் பூஜிக்கவேண்டும் அத்தாமரையின் எட்டுப் பாகத்தில் பூர்வதிக்கிலுள்ள இதழில் அனந்தனையும் தக்ஷணபாகத்து இதழில் குக்ஷ்மனையும் மேற்புறத்து இதழில் சிலோத்தமனையும் உத்தர பாகத்திலுள்ளதில் ஏகநேத்திரனையும் ஈசானதிக்கிலுள்ளத்தில் ஏக ருத்திரனையும் அக்கினி திக்கில் சிகண்டீசனையும் இரண்டாம் ஆவாணத்தில் பூஜிக்க வேண்டும் மூன்றாவது ஆவாணத்தில் கிழக்குத் திக்கில் விரஷேசானனையும் இதற்கு வடபுறத்தில் நந்தியையும் இடது புறத்தில் மஹாகாளனையும் க்ஷிணபாகத்தில் பிரூங்கீசனையும் இருபுறத்திலும் விநாயகரையும் மேற்புறத்தில் விருஷபனையும் வடபுறத்தில் பவன், சருவன், ஈசானன், உருத்திரன், பசுபதி உக்கிரன், பீமன் மஹாதேவன் என்னும் இவர்களை யோவேதாதௌ, என்னும் மந்திரத்தால் பூஜிக்க வேண்டும் தாமரைப் பொருட்டின் பூர்வபாகத்தில் ஈஸ்வரனையும் இதன் பாகத்தில் விஸ்வேசனையும் வடபாகத்தில் பரமேசனையும் மேற்குப் பக்கத்தில் சர்வேஸ்வரனையும் பூஜிக்க வேண்டும் இக்கர்ணிகைக்கு தென்பாகத்தில் உருத்திரனை ஆவோராஜா! என்னும் மந்திரத்தால் பூஜிக்க வேண்டும்.

அக்கர்ணிகையின் தளத்தில் உள்ளத்தில் பூர்வ திக்கில் சிவபெருமானையும் தென் திக்கில் ஹரனையும் வடதிக்கில் மிருடனையும் மேற்கில் பவனையும் யதோக்தமாகப் பூஜித்தும் அந்தக் கர்ணிகையின் வடபக்கத்தில் விஷ்ணுவை பிரததவிஷ்ணு என்னும்மந்திரத்தால் பூஜித்தும் பூர்வத்திக்கிலுள்ள பூர்வதளத்தில் வாசுதேவனையும் தென் தளத்தில் அனிருத்தனையும் வடக்கில் சங்கர்ஷணனையும் மேற்கில் பிரத்யும்னனையும் பூஜித்து ஆவாஹனம் செய்ய வேண்டும். அப்பதுமத்தின் மேற்குப் பாகத்தில் பிரமதேவரை ஹிரண்ய கர்ப்பா என்னும் மந்திரத்தால் ஹிரண்ய கர்ப்பனையும் தென் பாகத்தில் விராஜனையும் வடதிக்கில் புருஷனையும் மேற்புறத்தில் காலனையும் பூஜிக்க வேண்டும். அப்பதுமத்தின் பூர்வதிக்கு முதல் எட்டுத் திக்குகளிலும் முறையே திக்குபாலர்களை அவர்களது பீஜாஷரமாகிய மந்திரங்களைகூட்டி பூஜிக்க வேண்டும். எவ்வாறெனில் இந்திரனுக்கு ஓம் அம்லாம் இந்திராயா என்றும், நிருதிக்கு ஓம் அம்க்ஷõம் நிர்தியோ என்றும் வருணனுக்கு ஓம் அம் அம்வாம் வருணயா என்றும் வாயுவுக்கு ஓம் அம்யாம் வாயவே என்றும் குபேரனுக்கு ஓம் அம்சாம் குபேராய என்றும் பூஜிக்க வேண்டும். நிருதி திக்கின் வடக்கில் பிரமனையும் ஈசான திக்கின் வடக்கில் விஷ்ணுவையும் பூஜிக்க வேண்டும் வெளியிலுள்ள ரேகையின் ஈசான திக்கில் சூலத்தையும் கிழக்கில் வஜ்ரத்தையும் அக்கினி திக்கில் பரசுவையும் தென் திசையில் பாணங்களையும் நிருதி திக்கில் கட்கத்தையும் மேற்குத் திசையில் பாசத்தையும் வாயுதிக்கில் அங்குசத்தையும் வடபுறத்தில் பிருகத்தையும் மேற்குமுகமாக ÷க்ஷத்திர பாலனையும் ஆவாஹனஞ் செய்த தேவர்களையெல்லாம் எல்லா ஆவரணங்களிலும் இருப்பதாகப்பாவித்துப் புஷ்பாஞ்சலி எடுத்துப் பிரதக்ஷிணஞ் செய்து பிரணவ பூர்வமாகச் சிவ நாமத்தால் அர்ச்சித்து காந்தாதிகளான ÷ஷாட சோபசாரங்களாலும் பூஜை செய்ய வேண்டும் சுத்தமாய் நிவேதனத்தைச் சித்தஞ் செய்து பதார்த்த வகைபலகாரம் பழவகைகளுடன் நிவேதித்து, ஆசமனீயம் கொடுத்து தீர்த்தத்தை உட்கொள்ளும்படி பிரார்த்தித்து, தாம்பூலம் சமர்ப்பித்து கர்ப்பூர நீராஞ்சனம் செய்வதோடு எஞ்சிய பூஜைகளை முடித்து சத்திர சாமரைகளால் உபசரித்து, தேவி தேவர்களாகிய இருவரையும் தியானிக்க வேண்டும் பரமசிவத்துக்குரியஐந்தொழுத்தை (பஞ்சாட்சரத்தை) நூற்றெட்டு தியானிப்பதுடன் தேவி மந்திரத்தையும் ஜெபித்து எழுந்து நின்று புஷ்பத்தைக் கையில் கொண்டு யோதேவாதா என்ற மந்திரத்தாலும் யோவேதாதோ என்னும் மந்திரத்தாலும் மும்முறை வலம் வந்து அந்தப் புஷ்பத்தை மந்திரபுஷ்பமாகச் சமர்ப்பித்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து அடிக்கடி பிரதிக்ஷிணஞ் செய்து திவ்யாசனத்திலிருந்து சிவ அஷ்டோத்தரங்களால் அர்ச்சித்து மஹாதேவரே அடியேன் செய்த பூஜை மந்திரத்தாலும் தந்திரத்தாலும் நியமனத்தாலும் யந்திரம், ஆவாஹனம் திரவியம் சக்தி காலம் முதலியவற்றால் குறைவுற்றிருந்தாலும் அவற்றை அங்கீகரித்து என்னை ஆட்கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும் சங்க தீர்த்தத்தாலும் தேவி தேவர்கள் இருவரையும் புரோக்ஷித்து தேவியஷ்டோத்தர சத நாமங்களை ஜெபிக்க வேண்டும். ஆதியந்த குனியரையும் எப்போதும் பரிசுத்தமான ஆத்மாவோடு இருப்பதால் சிவம் என்றும் சிவதத்துவத்தை அறிந்த பெரியோர்கள் யாவரும் உச்சரிக்கிறார்கள்.

மஹதாதி தத்துவங்களை விடச் சிரேஷ்டமானது பிரகிருதி எனப்படும். அந்தப் பிரகிருதிக்கும் பரமாயும் புருஷராயும் இருக்கிறார்கள் என்பார்கள். வேதாதிகளில் பரமேஸ்வரனை சுவர ரூபமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆகையால் வேதாதிகளால் அறியத்தக்க சொரூபர் வேதாந்தத்தில் அமையப் பெற்றவர். அந்தப் பரமேஸ்வரனே பிரகிருதியில் மறைந்தும் அதையே அனுபவித்தும் வருகிறார். அப்படி மறைந்திருக்கும் புருஷனிலும் சிரேஷ்டமானவர் மஹேஸ்வரர் எனப்படுவர் யாவும் அவருக்கே அதீதமாக இருக்கிறது. அந்தப் பிரகிருதி புருஷனிடமிருந்தே யாவும் தோன்றுகின்றன. மேலும் சாத்துவீகம் ராஜஸம் தாமஸம் என்னும் குணங்களான மாயையே பிரகிருதி யென்றும் அந்தமாயையை அடக்கவல்லவர் தாமே என்றும் அந்த வகையால் மஹேஸ்வரன் என்றும் மேலும் அந்த மாயையை அழிக்க வல்லவராகையாலும் மஹேஸ்வரர் என்றும் கூறப்படுகிறது. உருத்திரன் என்பதில் ருத் என்றால் துக்கம் என்றும் அந்தத் துக்கத்தை நசிக்கச் செய்வதால் த்ராவைதி என்றும் பொரும்படும் அன்றியும் ருத் என்பதற்குச் சப்தம் என்றும் அந்தச் சப்தத்தால் அஞ்ஞானத்தை ஒழித்து நாதப் பிரமத்தைத் தெரிவிப்பதால் ருத்திரன் என்றும் சங்காரகாலத்தில் பிரஜைகளை போதனஞ் செய்து சங்கரிப்பதால் ருத்திரன் என்னும் பெயரோடும் விளங்குவர். சிவதத்துவம் முதல் பிருதிவி தத்துவம் வரை வியாபித்திருப்பதால் விஷ்ணுவென்றும் ஜகத்துக்கு எல்லாம் பிதுர் பூதராய் இருப்பதால் பிதாமகனார் என்றும் சமுசார வைத்தியரென்றும் பெயருடையவராவார். வைத்யன் எவ்வாறு பிணியைப் போக்கடிக்கிறானோ அது போலவே ஆன்மாக்களின் பிணியை போக்கடிக்கிறார். அன்றியும் போக மோக்ஷங்களைத் தரவல்லவராகையாலும் அந்தப் பெயரைப் பெறுகிறார் ஸ்தூலசூக்ஷ்மங்களாயும் அணுவிற்கு அணுவாயும் மகத்துக்கு மகத்தாயும் இந்திரியங்கள் இருந்தாலும் விஷயங்களாற் கிரகிக்கப்படாதவராகவும் முயற்சியில்லாமல் அனைத்தையும் அறிய சக்தியுள்ளவராதலின் சர்வக்ஞர் எனப்படுகிறார். உன்னதமான குணங்களாலும் அறியச் சாத்தியமில்லாதவராதலாலும் இவரினும் மேவானஆத்மாயாருக்கும் இல்லாததாலும் பரமாத்மா என்ற பெயரும் கொண்டவர் இத்தகையவரைப் பிரணவ சொரூபியாய்த் தியானித்துப் பூஜித்து தன் மனோரதம் நிறைவேற வேண்டும் என்று அர்க்கியம் கொடுத்து பிரணவத்தால் அர்ச்சனை செய்து புஷ்பாஞ்சலி கொண்டு வலம் வந்து மேற்கண்ட மந்திரத்தால் மந்திர புஷ்பங்கொண்டு, பிரம்ம நாடிவரை பஞ்சாக்ஷர சொரூபியாகவும் நாதப் பிரமமாயும் வியாபித்திருக்கும் தேவியை இடது நாசிகையால் வெளியே விடவேண்டும் வலது நாசிகைத் துவாரமாய்ச் சிவானந்தத்தை உட்கொண்டு அனுபவித்து வெளியே விட வேண்டும். பூர்வத்தில் பூஜித்தபடியே சர்வாபரண தேவதைகளையும் முறைப்படி உத்வாசனம் செய்து வித்யாபூஜை செய்து குருபூஜை செய்து சங்கத்தையும் அர்க்கிய பாத்திரத்தையும் எடுத்து அதில் எஞ்சிய ஜலத்தை சிரத்தில் புரோக்ஷணஞ் செய்து(தெளித்து) அந்தப் பாத்திரங்களை கண்களில் ஒற்றிக் கொண்டு தூயபொருட்களைச் சண்டேசுவரர்க்குச் சமர்ப்பித்து, பிராணாயாமம் செய்து, ருஷிசந்தசுகள் பூர்வமாய்ஷடங்கங்களைச் செய்து, சதா சிவமூர்த்தியைத் தியானிக்க வேண்டும்.

தேவீ! மேலே சொன்ன மண்டலத்தைக் கைலாச பிரஸ்தரம் என்பார்கள். இது சிவ தத்துவம் உணர்ந்தவர்களுக்கு உபதேசிக்கத் தக்கது இது வேதாந்தங்களின் சாரமானபாகம் முனிவர் மனதிற்கும் அகோசரமானது இது இரகசியமண்டலம் என்று அறிவாயாக இந்த மண்டலத்தை நிர்மாணஞ் செய்து மேற்கூறியபடியே பிரதி தினமும் அர்ச்சிக்க வேண்டும். அப்படிச் செய்யச் சக்தியில்லா விட்டால் பட்சத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டும். அல்லது மாதம் ஒரு முறையாகிலும் சாதுர்மாசிய பவுர்ணமியிலாகிலும் வருடத்திற்கு ஒருமுறையாகிலும் செய்ய வேண்டும். இந்தப் பூஜை விஷயத்திலேயே இன்னுமோர் சிறப்பைச் சொல்லுகிறேன் குருவினிடத்தில் எந்தத் தினம் உபதேசம் செய்து கொள்ளுகிறானோ. அன்றே அவர் சன்னிதானத்தில் மேற்கண்ட தினங்களில் எதை அனுஷ்டிக்கச் சக்தியுண்டோ அதைச் செய்வதாக பிரமாணம் செய்து கொள்ள வேண்டும். அந்த நாட்களில் பூர்வோக்த விதிப்படித் தவறாது பூஜித்து வரவேண்டும். ஈசானிய பாகத்தில் சண்டேசுவரருக்கு நிர்மாலியத்தை நிவேதித்து லிங்கத்தை வஸ்திரத்தினால் சுற்றிப் பரிசுத்தமான தானத்தில் நிறுத்திப் பிரணவத்தால்  புஷ்பத்தை அதன் சிரத்தில் வைத்து ஆதாரசக்தி முதல் சுத்தவித்தியா வரை மனதால் பாவித்து பரமேசனை பஞ்ச கவ்வியத்தால் அபிஷேகிக்க வேண்டும். அன்றியும் பஞ்சாமிருதத்தாலும் பரிமளமுள்ள புண்ணிய தீர்த்தத்தாலும் பாவமானம், ருத்திரம், நமகம், சமகம், லிங்க சூக்தம் அதர்வண சூக்தம் ரிக்வேத மந்திரங்களாலும் சாமவேதத்திலுள்ள சாமகானத்தாலும் பஞ்சப்பிரம மந்திரத்தாலும் பஞ்சாக்ஷரத்தாலும் சிவ நாமங்களாலும் ஜபித்து, அபிஷேகம் செய்து லிங்கத்தைத் தூய்மையான ஆடையால் துடைத்து, அரோபணஞ் செய்து பீடத்தில் வைக்க வேண்டும். பிறகு சூரிய பூஜைசெய்து ஆதாரசக்தியையும் அனந்தனையும் அந்தப்பீடத்தின் கீழ் ஆவாஹனம் செய்து பூஜித்து, அதன்மேல் சிங்காசனம் அமைத்து மேல் ஆவரணம் உண்டாக்கி இலங்கத்தில் உன்னையும் என்னையும் ஆவாகனஞ் செய்து பூஜிக்க வேண்டும். சுந்தரீ! இந்தச் சிவ பூஜாகிரமமானது மிகவும் இரகசியமாகும். இதை உனக்கு விளக்கஞ்செய்தேன் இது மிகவும் பாதுகாக்கத் தக்கது. பக்தியில்லாதவர்களுக்கு உபதேசிக்கத் தகாதது. என் பக்தராயும் சன்னியாசியாயும் ஆசையை ஒழித்தவராயும் குரு பக்தியுள்ளவராயும் சமாதி குணமுள்ளவராயும் ஜிதேந்திரியராயும் உள்ளவருக்கே உபதேசிக்கத் தக்கது. இதைப் பக்தியில்லாத மூடருக்கு உபதேசிக்கிறவன் சிவத் துரோகத்தால் நரகத்திற்கு ஆளாவான் என் பக்தர்களுக்கு எத்தகைய தானத்தைக் கொடுத்தாலும் பூஜித்தாலும் உண்பித்தாலும் அழியாத பதவியைக் கொடுப்பேன் இதனால் நானும் திருப்தியடைவேன்.

இவ்வாறு சிவபெருமான் பார்வதிக்குக் கூறியதாக சூதமுனிவர் எடுத்துரைத்து விட்டு நைமிசாரணிய வாசிகளை நோக்கி முனிவர்களே! சிவபூஜாக்கிரமத்தையும் சிவமண்டலபரிமாணத்தையும் யந்திரக்கிரமத்தையும் ஆவாஹன முறையையும் உமையவள் கேட்டு பரமசிவனைத் தொழுது பக்தர்களின் மனோ பீஷ்டத்தை வணங்கியவுடனே நிறைவேற்றவல்ல அவரது திருவடிகளை வணங்கி, தன் எல்லையற்ற மகிழ்ச்சியை அறிவித்தாள். இது மிகவும் இரகசியமானது. இதைச் சிவஞானம் உள்ளவர்களே அறிய வேண்டும். இதனால் மனோவியாதியும் நீங்கும் சிவஞானமும் உண்டாகும். இவ்விதமாகப் பரமசாதுவும் மகாதபஸ்வியுமாகிய வியாச முனிவர்களுக்கு உபதேசித்து அவர்களுடைய உபசாரங்களைப் பெற்றுத் திருக்கையிலைக்குச் சென்றார். அந்த முனிவர்களும் சிவானுபவத்தை அனுபவித்தனர். இந்த இரகசியமான சிவ பூஜாக்கிரமத்தை பரமேஸ்வரன் பார்வதிக்கும், பார்வதியார் சுப்பிரமணியருக்கும், அவர் நந்தியம் பெருமானுக்கும் அவர் சநத்குமார முனிவருக்கும், அவர் என் குருவாகிய வியாஸ முனிவருக்கும் உபதேசித்தார் அவரிடமிருந்து நான் இதை உபதேசிக்கப் பெற்றேன். நான் அறிந்த வண்ணம் உங்களுக்கும் உபதேசித்தேன். நீங்கள் உங்களிடம் பக்தியுள்ளவர்களுக்கு உபதேசிக்கக் கடவீர்கள். இந்த சிவ பூஜாக்கிரமத்தையும் மண்டலக்கிரமத்தையும் பக்தியுடன் கேட்பவர்களும் படிப்பவர்களும் எழுதுபவர்களும் பிறப்பற்று மோட்சானந்தத்தில் சதா வாழும்படி ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் திருவருள் செய்வார். இவ்விதமாக சூதபுராணிகர் காசியம்பதியில் சிவபூஜாக்கிரமத்தை முனிவர்களுக்கு உபதேசித்து பஞ்சக்குரோச யாத்திரையை முடிக்கச் சென்றார். முனிவர்கள் எல்லோரும் சிலகாலம் இருந்து இந்தச் சிவபூஜையைச் செய்து பரம யோகிகள் அடையக்கூடிய கைலாய பதவியை அடைந்தார்கள்.

7. வாமதேவர் முருகப்பெருமானை அடைதல்

முனிவர்களில் பலர் இவ்விதமாக வியாஸ முனிவரிடம் உபதேசம் பெற்ற வாமதேவ பூஜாக்கிரமத்தை மறந்து அதை மறுபடியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற சூதமுனிவரின் வருகையை எதிர்பார்த்திருந்தனர். அந்த ஆண்டின் இறுதியில் சூதமுனிவர் சூரியனைப்போல் வந்தார். முனிவர்கள் அவரை வரவேற்று உபசரித்து, வழிபட்டுக் களித்தனர். சூதரும் அவர்களது நலன்களை விசாரித்து அவர்களுடன் கங்கையில் நீராடி பிதுர்தேவதைகளுக்கும், ஸ்ருதிகளுக்கும் ஜலதர்ப்பணம் செய்து, கரையை அடைந்து தூய ஆடை அணிந்து இரண்டு முறை ஆசமனியம் செய்து, விபூதியைச் சத்யோஜாத மந்திரத்தால் அபிமந்தரித்து தூய்மையாய்த் தாரணஞ் செய்து உருத்திராக்ஷ மாலையை அணிந்து, நித்திய கர்மங்களை முறைப்படி செய்து முடித்தார்கள். உமைப்பாகனான விஸ்வேஸ்வரனைச் சகணங்களுடன் அர்ச்சித்து அத்யந்த பக்தியுடன் நமஸ்கரித்து, காலபைரவரையும் முறைப்படி அர்ச்சித்து பலமுறை பிரதக்ஷிணம் செய்து சாஷ்டாங்கமாகப் பணிந்து, பஞ்சாக்ஷரமந்திரத்தை ஆயிரத்தெட்டுமுறை ஜெபித்து பரமேஸ்வரனை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சண்டே சரை அர்ச்சித்து முனிவர் கூட்டம் சூழ, முக்தி மண்டபத்தை அடைந்து முனிவர்கள் நிர்மாணித்திருந்த ஆசனத்தில் அமர்ந்து தன்னிடம் விசுவாசமும் சிவ பக்தியும் கொண்ட முனிவர்களை நோக்கி அவர்களுக்குச் சித்தம் சுத்தமாகும்படி சூதமுனிவர் கூறலானார்.

முனிவர்களே! நான் காசித் திருத்தலத்திலிருந்து தென்திசை சென்று கன்னியாகுமரியைக் கண்டேன் அங்கே கடலில் நீராடி பராசக்தி ஸ்வரூபியான கன்னியாகுமரியைத் தரிசித்தேன். பிறகு மறுபடியும் பொன்முகலி தீரத்தையடைந்து அங்கு தூய நீராடி பிதுர் தர்ப்பணம் செய்து, காளத்தி ÷க்ஷத்திரத்தை அடைந்து மேற்திசை நோக்கி ஸ்படிக நிறமாய் ஐந்து சிரங்களுடன் கூடித் தெரிசித்தவுடன்  எல்லாப்பாவங்களையும் ஒழிக்க வல்ல காளத்தீசரையும் ஞானப் பூங்கோதையாரையும் அர்ச்சித்து வணங்கி அங்கேயே நான்கு மாதங்கள் வசித்திருந்தேன். அப்போது ஒரு நாள் ஞானப் பூங்கோதையின் சன்னிதானத்தில் தர்ப்பாசனத்தில் உட்கார்ந்து இந்திரியங்களை அடக்கி மவுனவிரதத்தோடு பிராணாயாமக்கிரத்தினால் மூச்சையடக்கி பரமசமாதியில் யோகத்தில் இருந்தேன். கருணாநிதியும் நீர் கொண்ட மேகம் போன்ற மேனியும் மின்னல் போன்ற ஜடையும் கமண்டலம் தண்டம் திரிபுண்டரந் துலங்கும் நெற்றியும், உருத்திராக்ஷமாலை பூண்ட அவயவங்களும் மலர்ந்த செந்தாமரை போன்ற நேத்திரங்களும் கொண்ட எனது குருவாகிய வியாச பகவான் என் இதயத்தில் ஆவிர்ப்பவித்திருக்ககண்டேன். உடனே சமாதி கலைந்து கண் விழித்துப் பார்த்து ஒருவரையும் காணாமையால் சப்தமிட்டு அழுதேன். இப்படி நான் துக்கித்தபோது அசரீரியாக பூர்வத்தில் உன்னிடத்தில் சிவபூஜாக்கிரமத்தைக்கேட்டு அறிந்த முனிவர்கள் உன் வருகையை எதிர்பார்த்து இருப்பதால் நீ அங்கு செல்வாயாக! என்று சொல்லக்கேட்டு எழுந்து ஸ்ரீ காளத்தி நாதரையும் ஞானப் பூங்கோதையாரையும் பணிந்து, பன்னிரண்டு முறைகள் வலம் வந்து சிவாக்ஞையைச் சிரமேற்தாங்கி நாற்பது நாட்கள் விடாமல் நடந்து இங்கு வந்தடைந்தேன். ஆகையால் என்னிடமிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை ஏதாயினும் இருந்தால் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

சூத முனிவரே! நீங்கள் பூர்வத்தில் வாமதேவரால் சொல்லப்பட்ட விராஜ ஹோமத்தை சுருக்கமாகச் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதை நாங்கள் நன்றாக உணருமாறு விரிவாகத் தாங்கள் சொல்லவேண்டும் என்றார்கள். சூதமுனிவர் அவர்களை நோக்கி பரம ரகசியமாகவும் அதியற்புதமாகவும் உள்ள விரஜா ஹோமமான்மியத்தை என் குரு மூலமாகக் கேட்டிருக்கிறேன். அந்த இரகசியத்தை வெளிப்படுத்தக் கூடாது என்றே இதுவரையில் ஒருவருக்குஞ் சொல்ல வில்லை. நீங்கள் சிவ பக்தியிலும் அதைச் சார்ந்த கதைகளிலும் பற்றுள்ளவர்கள். ஆகையால் அதை உங்களுக்கு உபதேசிக்கிறேன். சாந்த சித்தத்துடன் கேட்பீர்களாக. பூர்வத்தில் கர்ப்பவாச மொழிந்தவராயும் சிவஞானங்களை உபதேசிக்க வல்லவராயும் உபநிஷத அர்த்தங்களையும் நன்றாக அறிந்தவராயும் தேவ அசுர மானுடர்களுடைய கர்மத்தின் கரையைக் கண்டவராயும் உள்ள வாமதேவ முனிவர் உடல் முழுவதும் விபூதிப் பூச்சும் உருத்திராக்ஷ மாலையும் பூண்டு ஜடா மகுடத்துடன் ஆசையை ஒழித்து அகங்காரத்தை நீக்கி, அஞ்ஞானாதி பயங்களைப் போக்கித் திகம்பரராய் சர்வ லோகங்களிலும் சஞ்சரித்து வந்தார். அவர் தமக்கு இணையான சீடர்களோடு பூலோகத்தில் பாதம் படிவதால் பரிசுத்தஞ் செய்து சர்வ தீர்த்தங்களிலும் நீராடி பரமாத்விடம் வைத்த சிவ சிந்தனையோடு எங்கும் சஞ்சரிக்கும் காலத்தில் ஒருநாள். உலகை உய்விக்கும் பொருட்டு மகாமேருவின் உச்சியில் தென் பாகத்தில் குமார சிகரத்தை அடைந்தார். அங்கு சிவபெருமானின் குமாரரும் மயில்வாகனத்தினரும் ஞான சக்தியையுடையவரும் அகாரமாகிய காட்டை அழித்தவரும் சர்வதேவர்களால் பூஜிக்கத்தக்கவரும் தெய்வானை வள்ளி சமேதராக உள்ளவருமான சுப்ரமண்யரை நமஸ்கரிக்க வேண்டும் என்று வாமதேவர் விரும்பினார். அங்கு விசாலமாயும் அதிக குளிர்ச்சியாயும் அமுதம் போன்று பருகவல்லதாயும் அதிக பரிசுத்தமாயும் அளவு காண முடியாத ஆழமுடையதுமான சரவணப் பொய்கையில் தன் சீடர்களுடன் நீராடிக் குளித்து தேவருஷி பிதுரர்களுக்குத் தர்ப்பணம் முதலானவற்றை செய்து திருநீறு பூசிக் கொண்டார். அந்தக் குமார கிரியில் நாரதாதி முனிவர் கூட்டங்கள் புடைசூழ ஸநத்குமாரர் முதலான யோகியர்கள் நெருங்கியிருக்கக் கோடி இளஞ் சூரியன் உதித்தாற் போல மயில் வாகனத்தில் நான்கு கைகளோடும் கம்பீர தேகத்தோடும் மகுடம், கேயூரம் முதலானவற்றால் அலங்கரிக்கப்பட்ட சர்வ அவயவங்களோடும் ஞானசக்தி கிரியா உக்திகளால் உபாசிக்கப்பட்டவராயும் சேவற் கொடி, வரத அபய அஸ்தங்களோடும் விளங்கும் சாக்ஷõத்குமர குருபரனைக் கண்டு வாமதேவர் ஆனந்தங்கொண்டு புளகாங்கிதமாய் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, தன்னை மறந்தவராய் தோத்திரஞ் செய்யலானார்.

பிரணவார்த்தாய பிரணவார்த்த வியாபனே! பிரணவாதாரபீடாய பிரணவாய! வேதாந்தார்த்த சொரூபாய வேதாந்தார்த்த விதாயனே! வேத வேத்யாய குகாய, குசாசு நிகாதாய குஹ்யாய குஹ்ய ரூபாய குஹ்யாகம விதே! அணவே அணீயசே மகதே மகீயசே, பராவாக்கியாய, பரமாத்ம சொரூபிணே! ஸ்கந்தாய ஸ்கந்த ரூபாய! சிந்தூராருண தேஜசே! மந்தார மோத்தியன் மகுடாதி பிருதே! சிவசிஷ்யாய சிவ புத்திராயா சிவதாயினே! சிவப்ரியாய சிவாநந்த நிதையே, காங்கேயாய, கார்த்திகேயாய நிவதே! மாதுருபுத்திராய்! மகதே! சரகான காயினே! ஷடாக்ஷர சரீராய! ஷட்விதார்த்த விதாயினே! ஷட்தூவர்த்தீரூபாய, ஷண்முகாய துவாதசயத நேத்திராய! துவர்தசாயவ பாகவே; துவாதசாயுத தாராய துவாதசாத்மனே! சதுர்புஜாய, சாந்தாய சத்திருக்கிட தாரிணே! வரதாபயஹஸ்தாய, அசுரவிதாரிணே! கஜாவல்லி குசாலிப்தருமங்கு மாங்கித வக்ஷரே! கஜானனாநந்தாய கரிம்ணே நந்திதரத்மனே பிரமாதி தேவமுனி கந்தர்வ கின்னராதியோர் பரவப் பெற்ற கீர்த்தி, பத்துத்திக்கிலும் பரவப் பெற்றவனே! இரத்தினங்கள் இழைத்துப் புஷ்பாரம் பூண்ட முடிகளையுடைய தேவர்கள் பணிவதால், அவர்களது முடிகளிலுள்ள இரத்தினங்கள் உதிர்ந்தும் மகரந்தம் ஒழுகியும் செந்தாமரை போன்ற திருவடிகளையுடையவனே! உன்னைப் பணிகிறேன் என்று வாமதேவர் இதுபோலப் பல முறைகள் தோத்திரஞ் செய்து மும்முறை வலம்வந்து சாஷ்டாங்கமாகப் பணிந்து வணங்கி, ஸுப்ரமண்யோகம் என்னும் சாமதேவ கரத்துடன் அஞ்சலி செய்தவராய் புளகாங்கித முடையவராய் ஆனந்த பாஷ்பம் சொரிந்து கொண்டு, விநயத்துடன் நின்றார். அதைக்கண்ட தேவ சேனாபதியாக சுப்பிரமண்யர் பூரண கடாட்சத்துடன் அவரை நோக்கிக் கூறலானார்.

வாமதேவ முனிவனே! உன்னுடைய தோத்திரத்தாலும் பக்தி பூஜையினாலும் அத்யந்த ஆனந்தமடைந்தேன் உனக்கு மங்களம் உண்டாகட்டும் நீ யோகியரில் உயர்ந்தேன். நித்யசுத்தனையும் பரிபூரணனையும் ஆசையை ஒழித்தவனாயும் உள்ள உன்னைப் போன்றார் எதையும் அடையவேண்டிய கோரிக்கையற்றவர்களாக இருந்த போதிலும் உலகக் காப்பு நிமித்தம் சாது சொரூபிகளாய் சஞ்சரிப்பார்கள் ஆகையால் நான் உனக்குச் செய்யவேண்டிய காரியம் என்ன? எந்த விஷயத்தை என்னிடம் கேட்க விரும்புகிறாய்? கேள் என்றார். பகவானே! ஞானவள்ளலே உம்முடைய சன்னிதானத்தில் ஜீவர்களான என் போன்ற ஆன்மாக்கள் எந்தச் சந்தேகத்தையும் கேட்டறிய வல்லவர்களாவோம்! மேருவைச் சார்ந்தகாகமும் பொன்னிறமாவதுபோல உம் சன்னிதானத்தில் இருக்கப் பெற்ற நான் அறியாமையால் தவறாகக் கேட்பினும் மன்னித்துப் பரம ரகசியப் பொருளை உபதேசிக்க வேண்டுகிறேன். பிரணவ சொரூபமே பரமேஸ்வர வாசகமாயும் ஜீவான்மாக்களின் பாசங்களை விடுவிப்பதால் பசுபதியாயும் உலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. பிரபஞ்சம் அனைத்தும் வேத வேதாகங்கள் யாவும் பிரணவத்திலிருந்தே தோன்றுகின்றதென்று அநாதியாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பிரணவமே பிரமம் என்றும் அந்தப் பிரமமே சர்வ ஜகத்ரூபம் என்றும் வேதாந்தாங்களும் கூறுகின்றன. ஆகையால், தேவ சேனாபதியே! தேவர்பதயே! பதீனாம்பதயே! பரிபூரணாய! அநேககோடி வந்தனம், சிவத்தை விடப் பிரணவம் அந்நியமென்று ஏற்படவில்லை சிவத்திற்கு அன்னியமானது ஒன்றுமில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தச் சிவமயமான பிரணவப் பொருளை ஆதாரக் கிரமத்துடன் உபதேசக்கிரமமாக உபதேசித்து என்னைக் கிருதார்த்தனனாக்கும்படி வேண்டுகிறேன். சகல ஜகத்துக்குக் காரணகர்த்தராயும் பிராணிகளின் ஜன்ம கருமங்களை ஒழித்து மோக்ஷ லக்ஷ்மியின் சாம்ராஜ்ய பட்டாபிஷேகத்தைச் செய்யவல்லவராயுமுள்ள உம்மைக்காட்டிலும் பரம ஆசாரியர்கள் யாரிருக்கிறார்கள்? என்று வாமதேவர் கூறிப் பணிந்தார். சுப்பிரமணியர், ஆனந்தமடைந்து, சதா சிவசொரூபியாய் பிரணவசரியாய, முப்பத்தெட்டுக் கலைகளுடன் உமா சகாயராய் நந்தி தேவராதியர் நமஸ்கரிக்கும் பாதாம்புயராயும் உள்ள பரமேஸ்வரனைச் சாஷ்டாங்கமாய் வணங்கி வேதங்களுக்கும் அதிகப்பட்ட ரகசிய அர்த்தத்தை உலகிற்கும் அருள்வதாக வாமதேவ முனிவருக்கு உபதேசிக்கத் துவங்கினார்.

8. சந்நியாஸக்கிரமம்

வாமதேவரை நோக்கிச் சுப்பிரமணியர் கூறலானார். வாமதேவரே! நீர் சிவபெருமானிடத்தில் அத்தியந்த பக்தியுள்ளவர் சிவஞானிகளில் அதி சிரேஷ்டர் மூன்று உலகங்களிலும் நீர் அறியாதது ஒன்றில்லை. நீர் யாவும் தெரிந்தவர் ஆயினும் உலகிற்கு அருள்வதை முன்னிட்டு நீர் கேட்டதைக் கூறுகிறேன். இவ்வுலகத்தில் ஜீவர்கள் தத்துவத்தில் உழன்று பலவித சாஸ்திரங்களிலும் அவாவுடையவராய் மாயையால் பசுக்களைப் போல அகப்பட்டு பரசிவத்தையடைவதை, அந்த மாயையாலேயே வஞ்சிக்கப் பெற்று தன்னையறியாமலே ஒழிகிறார்கள். இதை என் வலக்கரத்தை உயர்த்தி உண்மையாகக் கூறுகிறேன். எல்லா உபநிஷதங்களிலும் பரமசிவமே பிரணவ அர்த்தமென்று முறையிடுகின்றன. அந்தப் பிரணவார்த்த சொரூபியான பரமசிவன் மனோவாக்குகளுக்கு எட்டாதவரும் ஆனந்த ரூபியும் ஞான ரூபியும் நிர்ப்பயரூமாவார். அவரிடமிருந்தே சராசரத்மகமான உலகமும் விஷ்ணுபிர்ம ருத்திரேந்திராதுவரும் உதிக்கிறார்கள். அவரிடமிருந்து எல்லாம் தோன்றினாலும் தான் எதனின்றும் யாராலும் பிறப்பிக்கப்பட்ட தில்லை. அவரது தேக தேஜசின் முன்பு மின்னலும் சூரியனும் சந்திரனும் அக்கினியும் ஒளி மழுங்கும் அந்தத் தேஜசினாலேயே யாவும் பிரகாசிக்கும் அவர் சர்வ ஐஸ்வரியங்களோடும் கூடியிருப்பார் ஆதலில் சர்வேசுவரன் எனப்படுகிறார் தகர ஆகாச மத்தியில் உள்ளவராகையால் முழுக்ஷúக்களால் தியானிக்கத்தக்கவர். அவரது பராசக்தி மனோஹரியாயும் நிர்க்குணியாயும் நிஷ்களையாயும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள். அந்தச் சக்தியினிடமிருந்தே இந்தப் பிரபஞ்சம் விருத்தியாகிறது. அவருக்கு மூன்றுவித உருவங்கள் உள்ளன. அவை ஸ்தூல சூக்ஷ்ம பரம் எனப்படும். எல்லாத்தேவர்களுக்கும் அதிதேவராயும் நிஷ்களராயும் அநாதியாயும் ஞானக்கிரியா சொரூபராயும் உள்ளவரே பரமேசுவரர் எனப்படுகிறார். அவரது மூர்த்தமே சதாசிவம் எனப்படும். அவரே சத்யோஜாதாதி பஞ்சப் பிரம ரூபியாய் கலா பஞ்ச விக்கிரக சுத்த ஸ்படிக நிறமாக இருப்பவர் சந்திரனைப் போன்ற குளிர்ந்த பார்வையும் ஐந்து முகமும் துர்புருஷ முகமும் அகோர இதயமும் வாமதேவகுஹ்யமும் சத்யோஜாத பாதமும் சர்வக்ஞத் வாதிஷ்ட சக்திகளோடு கூடிய தேகமும் உடையவராய்த் தன்னை உபாசிக்கின்றவர்கள் இதயத்தில் பிரகாசிக்கிறார். அவரது சத்தியாகிய மனோன்மணியால் பகிர்ந்துள்ள வாதபாகமுடையவரைச் சமஷ்டியாயும் வியஷ்டியாயும் பாகுபடுத்திக் கூறுகிறேன். இதை உபதேசக்கிரமமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாமதேவரே! இவ்வுலகில் அந்தணர் முதல் நான்கு வருணத்தவர் இருக்கிறார்கள். அவர்களில் முதல் மூன்று வர்ணத்தவரே வேதாத்தியயனஞ் செய்ய உரியர் நான்காவது வருணத்தினர் அதைக் கேட்க யோக்கியதை உடையவரேயன்றி வாசிக்க அருகரல்லர் முதல் மூவர்ணத்தவர்களும் வேதத்திலுள்ள தர்மங்களையே அனுஷ்டிக்க வேண்டும். அதுவே முக்கியம் சுருதி, ஸ்மிருதிகளில் கூறிய வருணாசிரம தர்மங்களைத் தவறாமல் அனுஷ்டித்து, பரமேசனைப் பூஜித்து, பற்பல முனிவர்கள் சாயுஜ்ஜிய பதவியை அடைந்திருக்கிறார்கள். பிரமசரியத்தினால் ரிஷிகளின் யக்ஞத்தால் தேவர் கடனையும், சிரார்த்தத்தினால் பிதுர் கடனையும் முடிக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இவ்வகையான மூன்று கடன்களையும் விலக்குவதால் கிரகஸ்தாசிரமத்தையடைந்து மனைவியோடு வனத்தையடைந்து இந்திரிய நிக்கிரகம்(புலனடக்கம்) செய்து சீதோஷ்ணங்களைச் சகித்து ஆகாரத்தை மட்டுங்படுத்தித் தவத்திலிருந்து சமதமாதி குணங்களடையப் பெற்று இயமாதி யோகங்களை அப்பியசிக்க வேண்டும். இவ்வாறு பயின்றால் புத்திசலியாமல் ஓடுங்கும். இவ்வகையாய் சுத்த ஆத்மாவாகிச் சர்வ கர்மங்களையும் ஒழித்து ஞான பூஜையைச் செய்ய வேண்டும். இதனால் சிவஞானத்தை அடைந்தால் ஜீவன்முக்தர்களாய்ப் பிரமானந்தத்தை அனுபவிப்பார்கள் அத்தகைய ஜீவன் முக்தியடையச் சிவஞானம் உண்டாக வேண்டும். அதனையடைய உத்தம ஆசிரியனைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் சர்வசாஸ்திரங்களையும் உணர்ந்து வேதாந்தத்தின் கரையை உணர்ந்தவராகவும் புத்திமானாகவும் உத்தம குலத்தில் உதித்தவராகவும் யதியாகவும் இருக்க வேண்டும். அத்தகையவருக்குத் தண்டாகாரமாய்ப் பணிந்து தோத்திரங்களால் சந்தோஷத்தை உண்டாக்க வேண்டும். சிவபெருமானே குருவாவர். குருவே சிவபெருமானாவர் அவரை அதீபதமாகப் பாவித்துத் தான் அப்யசிக்க வேண்டிய பிரணவார்த்தத்தை உணர்த்த வேண்டும் என்று கேட்டு அவரது திருவருளைப் பெற்று பன்னிரண்டு நாட்கள் பாலைப் பருகிச் சுக்கிலபட்ச சதுர்த்தி தினத்திலாகிலும் தசமி திதியிலாகிலும் உதயத்தில் எழுந்து நியமத்துடன் நீராடி தூய ஆடை அணிந்து நித்திய கர்மங்களை முடித்து, ஒரே மனதாய்க் குருவை வணங்கி அழைத்து நாந்தி சிரார்த்தம் செய்ய வேண்டும். அப்பூஜையில் சத்தியவசு என்ற விசுவேதேவர்களைப் பூஜிக்க வேண்டும். அப்பூஜையில் சத்தியவசு என்ற விசுவேதேவர்களைப் பூஜிக்க வேண்டும். தேவ சிரார்த்தத்தில் பிரம விஷ்ணு மஹேஸ்வரர்களையும் ருஷி சிரார்த்தத்தில் தேவமானுடரையும் திவ்யசிரார்த்தத்தில் வசுருத்திர ஆதித்தர்களையும் மானுட சிரார்த்தத்தில் ஜனகர் முதலான முனிவர்களையும் பூத சிரார்த்தத்தில் பஞ்ச மகா பூதங்களையும் பிதுர் சிரார்த்தத்தில் பிதாவையும் அவரது பிதாவையும் அவரது பிதாவையும் மாதுர் சிரார்த்தத்தில் மாதாவையும் பிதாவின் மாதாவையும் அவர் மாதாவையும் ஆன்ம சிரார்த்தத்தில் தனக்குத் தானும் முற்கூறிய பிதாவின் பிதாவையும் அவர் பிதாவையும் அவர்களது பத்தினிகளுடன் பூஜிக்க வேண்டும், தாயைப் பெற்ற பாட்டன் சிரார்த்தத்தில் அவரையும் அவர் பிதாவையும் அவர் பிதாவையும் பூஜிக்க வேண்டும் இச்சிரார்த்தங்களில் எல்லாவற்றிலும் விசுவேதேவர்களைப் பூஜிக்க வேண்டும்.

சிரார்த்தத்தில் அந்தணர் இருவருக்குக் குறையாமல் வருவித்து சுத்த ஜலத்தினால் அவர்களது பாதத்தை அலம்பி எல்லாச் சம்பத்துகளை அடைவதற்குக் காரணமாயும் ஆபத்துக்களுக்கு தூமகேதுவாயும் உள்ள அவர்களது பாத தூளிகள் என்னை ரக்ஷிக்குமாக என்று பிரார்த்தித்து அந்த நன்னீரைச் சிறிது சிரசில் புரோக்ஷணம் செய்து தெளித்துக் கொண்டு அந்த வேதியரை வணங்க வேண்டும். மனதில் பரமசிவனைத் தியானித்து கிழக்கு முகமாக நல்ல ஆசனத்தில் உட்கார்ந்து ஆசமனீயம் செய்து தூய்மையான யக்ஞோபவீதம் (பூணூல்) அணிந்து பவித்திரம் தரித்து ரேசகக் கிரமத்தினால் மூன்று பிராணாயாமங்களைச் செய்து வருஷ மாத திதிகளைச் சொல்லி நான் வைசுவதேவாதி பலிகளையும் அஷ்டவித சிரார்த்தங்களையும் அக்கினி மூலமாகச் செய்து முடித்து சன்னியாஸம் பெறப் போகிறேன். நீங்கள் அனுமதியளிக்க வேண்டும் என்று அவர் விருப்பத்தை அறிந்து விசுவே தேவார்த்தமாய் பிரமாணர்களை நியமித்து விசுவே தேவர்களையும் பிதுர்மாதுரு மாதா மகவர்க்கங்களையும் அப்பிராமணர்களிடத்தில் ஆவாஹனஞ் செய்து சிரமப்படி ஓமம் செய்ய வேண்டும் புனிதமான வாழையிலையில் அறுசுவையோடு கூடிய பதார்த்தம் அன்னம் பலகாரம் முதலியவற்றைப் படைத்துத் தத்தம் ஆசார முறைப்படி தங்கள் சூத்திரத்திற்கேற்ப நாம கோத்திரங்களைச் சொல்லிப் பிதுர்க்களின் பொருட்டுத் தத்தஞ் செய்கிறேன். என்று தேவர்களுக்கு அக்ஷதையும் பிதுர்க்களுக்குத் திலமும், ஜலத்துடன் கூட்டியும் தேவர்களுக்கு ஸ்வாஹா என்றும் பிதுர்களுக்கு ஸ்வதா என்றும் தத்தஞ் செய்து யத்பாதபத்ம ஸ்மரணாத் யச்சரீ நாம் ஜபாதபி நியூநங்கர்ம பவேத் பூர்ணம் தம்வந்தே ஸாம்ப மீஸ்வரம் எந்தப் பரமசிவனுடைய திருவடித் தாமரையை ஸ்மரித்த மாத்திரமும் அவருடைய திருநாமத்தை ஜபித்த மாத்திரமும் செய் கருமங்கள் பூர்த்தியாகுமோ அந்தச் சாம்பசிவனை இக்கருமம் சம்பூர்ண பயனையடையும் பொருட்டு நமஸ்கரிக்கிறேன். என்று பணிந்து யான் செய்யும் நாந்தி சிரார்த்தத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறிப் போஜனம் செய்விக்க வேண்டும்.

அவ்வாறு போஜனம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர்களைக் கொண்டு உருத்திரம், நமகம், சமகம், புருஷசூக்தம் பஞ்சப்பிரம மந்திராதிகளால் போஜனாந்தம் வரையில் பாராயணம் செய்வித்து மீண்டும் அந்தணர்கள் கையில் உத்திரபோஜனம் கொடுத்து அவர்களை எழுந்திருக்க பிரார்த்தித்துக் கைகால் பரிசுத்தம் செய்வித்து தானும் பரிசுத்தம் செய்து கொள்ள வேண்டும். யாவரும் ஆசமனீயம் செய்து ஓமஸ்தானத்தின் கிழக்கே திவ்யாசனத்தில் உட்கார வேண்டும். பிராணாயாமத்துள்ள மூவித பிராணாயாமங்களைச் செய்து சங்கற்பம் செய்து நான் செய்தநாந்தி சிரார்த்த அங்கமாகப் பிண்டப் பிரதானம் கொடுக்கின்ற படியால் அதை உட்கொள்ள வேண்டும்! என்று பிதுர்க்களை பிரார்த்தித்து தங்கள் சூத்திரம் படி பிதுரர்களை ஆவாஹனம் செய்து, ஒவ்வொருவருக்குங் கிரமமாய் பிண்ட தானஞ் செய்து, பரமாத்மாவான பரமசிவனை இதய கமலத்தில் தியானித்து முன்பு சொன்ன யத்பாத-வாம் மந்திரத்தை படனஞ் செய்து தன் சக்திக்குத் தக்கபடி அந்தணர்களுக்குத் தக்ஷிணை கொடுத்து பிரதக்ஷிணை நமஸ்காரம் செய்து, நான் கூட்டியும் குறைத்தும் முடித்த குற்றங்களை மன்னித்துக் கிருதார்த்தனாக்க வேண்டும் என்று பிரார்த்தித்து எழுந்திருக்கச் செய்யவேண்டும். பிண்டப் பிரசாதத்தைப் பசுக்களுக்காகிலும் நீரிலாகிலும் விட்டுவிட வேண்டும். புண்ணியாசனம் செய்து இஷ்ட பந்துக்களுடன் எஞ்சிய அன்னத்தை உண்ணவேண்டும். அன்றைய பொழுதைச் சிவத்தியானத்தில் கழித்து, மறுநாள் காலையில் நித்திய கருமங்களை முடித்து கால் தவிர மற்றைத் தானங்களில் சவுசஞ் செய்து கொண்டு புண்ணிய தீர்த்தமாடித் தூய ஆடை அணிந்து இருமுறை ஆசமனியஞ் செய்து மவுனவிரதம் பூண்டு திருநீறு பூசி அந்தணர்களுடன் புண்ணியாவாசனம் செய்து தீர்த்தத்தினால் புரோக்ஷணம் செய்து மிகுந்த ஓமத் திரவியங்களைத் தக்ஷிணையுடன் சிவரூபியான குருவிற்கு ஆடையோடு கொடுத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்திருக்க வேண்டும் புதிதான கடி சூத்திரம் கவுபீனம் வஸ்திரம் தண்டம் கமண்டலம் சமித்து முதலியவற்றை எடுத்துக் கொண்டு சமுத்திரக்கரை நதிக்கரை மலையடிவாரம் சிவாலயம் ரிஷிகள் வசிக்கும் ஆசிரமம் பசுக்கள் கட்டுமிடம், பரிசுத்தத்தலம் ஆகிய இவற்றில் ஒன்றில் சென்று ஆசமனியஞ் செய்து மானஸீகமாய்த் தேவி மந்திரத்தையும் பஞ்சப் பிரமமந்திரத்தையும் ஓங்காரத்துடன் மும்முறை ஜெபித்து அக்னி மீடேபுரோகிதம் ஜிஷேத்வோ ஜேத்வா அக்நாயாயாகி விதையே பின்னோதே வீரபிஷ்டையே என்னும் மந்திரங்களாகிய நான்கு வேதங்களின் ஆதியையும் பீஜாக்ஷரங்களுடன் சேர்த்து ஜபித்து அவ்வேதங்களுக்கு அங்கங்களான சிøக்ஷ, வியாகரணம் சந்தசுநிருத்தம் ஜோதிஷம், கல்பம் ஆகியவற்றின் அடிகளான விருத்திராதை ஆதியாகவுள்ளனவற்றை ஜெபித்து பிறகு அதாதொதர் மஜிக்ஞாஸா என்ற தர்ம சாஸ்திரத்தின் அடியையும் அதாதொ பிரமஜிக்ஞாஸா என்று வேதாந்த சூத்திரத்தின் அடியையும் ஜெபித்து பிரமன் இந்திரன் சூரியன் சந்திரன் பிரஜாபதி ஆத்மா அந்தராத்மா ஞானாத்மா பரமாத்மா முதலியோரை பிரணவபூர்வமாக நமவந்த சதுர்த்தியங்களுடன் உச்சரித்து வணங்கி பொரிமாவில் ஒரு பிடியை எடுத்துப் பிரணவத்தால் அதை உட்கொண்டு இருமுறை ஆசமனீயம் செய்து முதற்கூறிய ஆத்மா முதலிய நாமங்களால் நாபி முதலிய ஸ்தானங்களை ஸ்பரிசித்தும் அவர்களுடைய நாமங்களையே மீண்டும் ஸ்வாஹாந்தமாகக் கூறியும் பால், தயிர், நெய் இவைகளால் மும்முறை பிராசனஞ் செய்தும் இருமுறை ஆசமனீயஞ் செய்து கிழக்கு முகமாய் மூன்று பிராணாயாமங்களைச் செய்ய வேண்டும்.

9. சந்நியாசம்

இவ்வாறு முருகப்பெருமான் கூறியவற்றை வாமதேவர் மிகவுங கவனமாகக் கேட்டு வந்தார். முருகப்பெருமான் மீண்டும் கூறலானார்.  வாமதேவரே முன்பு கூறியபடியே கர்மங்களையெல்லாம் காலையில் முடித்துப்பகற்காலத்தில் புண்ணியதீர்த்தமாடி தூய ஆடை அணிந்து, ஒரே மனதுடையவனாய் வனஞ்சென்று நறுமணமுடைய புஷ்பங்களையும் சந்தனாதிகளையுஞ் சேகரித்து, பூஜாதானத்தில் நிருதி திக்கில் தேவதேவரையும் கண நாசகனாயும் விளங்கும் விக்னேஸ்வரனை கணநாயந்த்தா என்ற மந்திரத்தால் முறைப்படிச் செந்நிறம், பருத்தவுடன் சகல ஆபரணங்களால் அலங்கரித்த அவயவங்கள், நான்கு கரங்களிலும் பாசம் அங்குசம் உருத்திராக்ஷம் அபயம் ஏந்தியிருக்கும்படி ஆவாஹனஞ் செய்து சோட சோபசாரங்களுடன் தூபதீபங்களால் அருச்சித்து பாயசம் மோதகம் தேங்காய் பழவகைகள் முதலிய நிவேதனத்தால் மகிழ்வித்து மும்முறை வலம் வந்து தோப்புக்காரணம் போட்டு என் காரியம் இடையூறின்றி நடைபெற வேண்டும் என்று பிரார்த்தித்து உபாசனாக்கினியில் தங்கள் சூத்திரப்படிப் பிரதஷ்டை செய்து பரமனை நிர்மாணித்து வியாஹ்ருதிகளால் ஓமஞ்செய்து பூர்ணாகுதி முடித்து, காயத்திரியைக் கிரமமாக அபரான்ன பரியநதம் செபித்து மாலைப் பொழுதில் சந்தியா வந்தனம் சுடித்து அக்னி பூஜை செய்து மவுனமாகக் குருவின் கட்டளைப்படி உபாசனாக்னியில் அன்னத்தைப் பசனஞ் செய்து அவ்வக்னியிலேயே ருத்திர சூகத்ததினாலும் சத்யோஜாதாதி பஞ்சப் பிரம மந்திரங்களாலும் கவுரீமி மாயாய என்னும் மந்திரத்தினாலும் உமையும் பரமேசனனும் இருப்பதாகப் பாவித்து ஓமஞ்செய்து ஸ்விஷ்டகிருத ஓமம் ஒருமுறை அக்கினிக்காகச் செய்து மற்றும் ஓமசேஷத்தை முடித்து உத்தரபாகத்தில் திவ்யாசனத்தில் இருந்து மவுனமாய் அருணோத்யம் வரை சித்த சுத்தியுடன் காயத்திரியை ஜபிக்க வேண்டும். காலையில் ஜபித்தலிருந்து நீங்கி, புண்ணிய தீர்த்தமாடி விபூதி துளனஞ் செய்து முன்னுள்ள உபாசனாக்கினியில் அன்னத்தைப் பசனம் செய்து வடபுறத்திலிருந்து நெய்யால் பரிசுத்தஞ்செய்து வியாஹ்ருதிகளையும் உருத்திர சூக்தத்தையும் பஞ்சப் பரம மந்திரத்தையும் ஜபித்து தகராகாசத்தில் சிவ பாதாம்புயத்தைத் தியானித்து பிரஜாபதி, இந்திரன், விசுவேதேவர், பிரமன் முதலியவர்களுக்குப் பிரணவ பூர்வமாய் சுகாந்தமான ஓமம்செய்து, பிறகு புண்யாவாசனஞ் செய்து அக்கினி திருப்திக்காக அக்கினியே ஸ்வாஹா! என்று ஓமம்செய்து பஞ்சப்பிரணர்களுக்குப் பஞ்சப்பிராண மந்திரத்தால் ஹோமம் செய்து உருத்திர ஸுக்த பஞ்சப்பிரம ஸுக்தாதிகளைச் செய்து முறைப்படி சேஷத்தையும் முடித்து, அவ்வத்தேவர்களையும் நினைத்துத்தான் செய்த கருமங்களைத் தியாகஞ் செய்து முடிக்க வேண்டும். இதுவரை நான் கூறியது அக்கினியில் செய்யவேண்டிய காரியங்கள் என்று அறிவீராக!

வாமதேவரே! இனி இந்த ஓமத்தை ஆத்மாவிற் செய்ய வேண்டியதை விளம்புகிறேன். இந்தத் தேகம் இருபத்தாறு தத்துவங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இத்தத்துவங்களின் உள்ளிருக்கும் ஆன்மா பரிசுத்தமாகும்படி ஸ்மரித்து, அந்தத்தத்துவங்களில் ஒன்றான ஆன்ம தத்துவ சுத்திக்காகத் தைத்ரியசாகையில் அருண பாடத்திற்படிக்கப்பட்ட பிருத்வியாதி புருஷாந்தமாக உள்ள மந்திரக் கிரமத்தால் நெய், அன்னம், முதலிய சமித்துக்களோடு சிவ பாதாம்புயங்களைத் தியானித்து மவுனவிரதத்துடன் பிருத்வியாதி பஞ்சபூதங்களையும் பஞ்சேந்திரியங்களையும் ஸப்த தாதுக்களையும் பிராணவாயுக்கள் ஐந்தையும் அன்னதி பஞ்ச கோசங்களையும் சங்கற்பானு குணங்களையும் பிரகிருதி புருஷர்களையும் குறித்து மேலே சொன்னமுறைப்படி தத்துவம் எனவும் பிரமவாக்கியங்களால் கூறுவர். பிருதிவி முதல்  சிவ தத்துவம் வரையில் இருக்கும் தத்துவங்களை ஞானத்தால் அறிந்து பரிசுத்தஞ் செய்ய வேண்டும். பிறகு பதினோரு மந்திரங்களால் பாஸ்மீ பதபூருவ மாயும் சதுர்த்தியாந்தமாயும் ஓங்காரத்துடன் நம சப்தத்தை இறுதியில் கூட்டி ஆகுதி செய்யவேண்டும். அந்தப் பதினோரு பெயர்களாவன ஓம் சிவஜோதிஷ நம; ஓம் பரமாத்மநே; விவடீகாய; க÷ஷாத்காயவியா பகாய விசுவதிதாய, கசனோத்சுகாய, லோகத்திரயாயலோக வியாபிநே தேவாய, விவித்யாய, பரப்பிரமனே ஆகியவற்றை யதாக்கிரமமாகவும் விசுவரூபமாய பரமபுருஷாய சிவாய என்பனவற்றோடு கூட்டி ஓமம் செய்து தங்கள் ஸுத்திரத்திற் கூறிய படி ஓமத்திற்குரிய பூர்வாங்கங்களையும் உத்திராங்களையும் முடித்து ஆஜ்யத்துடன் ஓமம் செய்து, மிகுந்த அன்னத்தை பிரசாதமாக உட்கொண்டு ஆசாரியருக்குத் தக்ஷிணை கொடுத்து, முன்பு செய்த ஓமத்துக்குச் சாக்ஷி பூதராக இருந்த பிரமனை உத்வாசனஞ் செய்து, அன்றிரவைக் கழித்து விடியற்காலையில் எழுந்து காலைக் கடனை முடித்து, அக்கினிக்கடனைச் செய்து சமஞ்சந்து மநுதைதி என்னும் மந்திரங்களை ஜபித்து யாதே யக்நே என்னும் மந்திரத்தைக் கூறி அவ்வக்கினியால் தன் வலக்கரத்தைச் சூடேற்றி, அதையே மீண்டும் தன் ஆன்மாவில் ஆரோபணஞ்செய்து, சூரியனுக்குச் செய்யவேண்டிய கடனை முடித்து நதிக்கரையை அடைந்து நாபியளவு ஜலத்தில் இறங்கி, பிரஜாபத்கியேஷ்டியை முடித்து கிரகஸ்தாசிரமத்தை விட்டு சன்னியாசிரமத்துக்குப் போக வேண்டியதற்காக வேதங்களில் கூறியுள்ளபடி, காயத்ரி முதலிய திவ்யமந்திரங்களை ஓங்காரத்தில் ஐக்கியஞ்செய்து. அப்பிரணவத்தை உபதேசித்துக் கொள்ள வேண்டும். அக்காயத்ரியை வியாஹ்ருதிகளுடன் பாதம் பாதமாய் உச்சரித்து, அவளது சொரூபமான பரமேஸ்வரியும் சங்கரரின் பாதி உடலைப் பெற்றவளும் ஐந்து முகங்களையுடையவளும் பதினைந்து கண்களும், நவரத்தினங்களாலும் சந்திர கலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுடியும் சுத்தஸ்படிக சமானமானகாந்தியும் வரதம், அபயம், அங்குசம், குறடு, கபாலம், பாசம், சங்கு, சக்கரம், கெதை, தாமரை முதலியன ஏந்திய பத்துக்கரங்களும் கங்கையின் வெள்ளம் போன்ற வெண்முத்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட கண்டமும், இரத்தின கங்கணங்களால் அலங்கரித்தமணிக்கட்டுகளும் மேகலைணிந்த இடையும் தண்டை சிலம்பு முதலியவற்றால் அலங்கரித்த  பாதங்களும் வெண்பட்டணிந்த மேனியும் பெற்று முனிவர், கந்தர்வர், யக்ஷர், தானவர், மானிடர் முதலியோரால் சேவிக்கப்பட்டவளும் சர்வாத்ம சொரூபிணியும் மூவுலக வியாபிணியும் சிவசொரூபிம் சதாசிவபத்தினியும் அழகிய அவயங்களையுடையவளுமாகத் தியானிக்க வேண்டும்.

எவன் அந்தச் சிவ சொரூபிணியாகிய காயத்திரியைக் கிரமமாக உபாசிக்கவில்லையோ அவன் பிரமகற்ப பரியந்தம் ரவுரவாதி கிரஹத்தை அனுபவிப்பான். அக்காயத்ரி வியாஹ்ருதியினின்றுந் தோன்றி அதிலேயே லயமடைவான். அவ்வியாஹ்ருதி பிரணவத்தில் தோன்றி அதிலேயே லயமடையும் அந்தப் பிரணவம் எல்லாவேதங்களுக்கும், ஆதியானது அதுவே சிவ வாசக சப்தம் அச்சிவமே பிரணவம் அப்பிரணவமே சிவம் வாச்சிய வாசக சப்தங்களுள் சிறிதேனும் பேதமில்லை. ஆகையால் அப்பர சிவமே ஏகாக்ஷரமாகிய பிரமம் அதுவே பரம்பரமான பொருள். அதுவே யாவற்றுக்கும் காரணம். அதுவே அகண்டாகாரமாயும் நிர்மலமாயும் சர்வதேஜோ மயமாயும் நிஷ்கள நிரஞ்சன நிராமய, சச்சிதானந்தமாயும் விளங்கும். அதையே துறவிகள் எல்லோரும் மனமாகிய தாமரையின் மத்தியில் வெகு காலம் தியானித்து ஆனந்தம் அடைந்து பிறவியை ஒழிக்கிறார்கள். இத்தகைய வடித்தெடுத்த காயத்ரியாகிய பிரணவத்தை அனுசந்தானம் செய்ய வேண்டும். அகம் ரக்ஷஸ்ய, எத்சந்தஸாம் ரிஷபம், கோபாயந்தம் என்னும் மூன்றும் அதுவாக மந்திரங்களால் ஈக்ஷணத்திரியங்களாகிய மண், பெண், பொன்னளவில் உள்ள ஆசையை ஒழித்து, பிரணவத்தை வியாஹ்ருதியுடன் ஜபித்து, ஓம் புவ ஸந்நிய ஸ்தம்மயா! ஓம் சுவஸந்நியஸ்தம் என்று சர்வ மந்திரங்களையும் விட்டு, பிரணவத்தை மீண்டும் கூறி, வியாஹ்ருமயாதித்திரியங்களைச் சமஷ்டியாக உச்சரித்து சன்னியஸ்தம் என்று சொல்ல வேண்டும். சதாசிவமூர்த்தத்தை இதயத்தில் தியானித்து பிரேஷமந்திரத்தை ஜபித்துசர்வதான மனதுடன் எல்லாப் பிராணிகளுக்கும் என்னிடத்தில் அபயம் உண்டாக்ககடவது சுவ அந்தத்தினால் ஜலத்தை எடுத்துக் கீழே விடவும். பிறகு காயத்திரியை ஜபித்து, தன்கையால் நான் பூண்டிருக்கும் பூணூலையும் சிகையையும் எடுத்து வியாஹ்ருதிகளுடன் பிரணவத்தை உச்சரித்து வன்னிஜாயாம் என்னும் மந்திரத்தை ஜபித்து சமுத்திரகச்சசுவா என்று ஜலத்துடன் விட வேண்டும் ஜலத்தை பிரஷ மந்திரத்தால் அபிமந்திரித்து மும்முறை ஆசமனீயம் செய்து அரையில் உடுத்திய ஆடை முதலானவற்றைக் கீழே போட்டு விட வேண்டும். இவை முடிந்த பிறகு வடக்கு முகமாகவேனும் கிழக்கு முகமாகவேனும் ஏழடி நடக்க வேண்டும், அப்படி நடக்கும்போது, ஆசாரியர் அணுகி, நடவாதே நடவாதே! என்று கூறித்தடுத்து வியவகார நிமித்தமாகக் கோவணத்தையும் தண்டத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டியது எனக்கூறுவதற்கு இணங்கி, அவற்றை பெற்றுக் கொண்டு சூத்திரத்துடன் காவியாடையைத் தரிக்க வேண்டும் ஆசாரியர் சீடனைப் பார்த்து இந்திரஸ்ய வஜ்ரோஸி என்னும் மந்திரத்தால் கொடுத்த தண்டத்தைப் பிரார்த்தனையுடன் வாங்கி அதனைத் தனக்குச்சிநேகிதனாக இருக்க வேண்டிக் கொள்ள வேண்டும். ஆசாரியரது அண்மையில் சென்று சிவபாதாம் புயத்தைத் தியானித்து, அவரை மும்முறை சாஷ்டாங்கமாக பணித்து அஞ்சலி செய்தவனாக அவரது பாதத்தருகே நிற்க வேண்டும்.  முன் செய்த விரஜா ஹோமத்தின் பஸ்மத்தை ஆசாரியர் சீடனது தேகம் முழுவதும் அக்னி நித்யாதி மந்திரத்தாலும் ஈசானாதி மந்திரங்களாலும் தூளனஞ்செய்து திரிபுண்டரத்தை திரியாயுஷ்திரியம்பகம் மந்திரங்களால் தரிக்க வேண்டும். அவ்வாசாரியரே இதயகமலத்தில் பார்வதி சகிதராய்ச் சதாசிவத்தைத்தியானித்து சீடனது சிரசில் தனது கையை வைத்துச் சந்தோஷமனதுடன் ருஷி சஹிதமாய்ப்பிரணவத்தை அவனது வலது காதில் உபதேசிக்க வேண்டும். அப்பிரணவத்தை மூன்று பிரகாரமாய் அதனர்த்தத்தை உபதேசிக்க வேண்டும். அதுவும் ஷட்விதார்த்தபரிஜ் ஞானத்துடன் சொல்ல வேண்டும். இவை முடிந்த பிறகு சீடன் ஆசாரியரைப் பன்னிரண்டு முறைகள் சாஷ்டாங்கமாகப் பணிந்து அவரது சுவாதீனமாகி எந்தக் காலத்திலும் பக்தியில்

தவறாமல் பணிவிடை செய்து வேதாந்தார்த்தங்களையும் பிரணவ சொரூபத்தையும் சிவஞானத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்யக் கடவன் விடியற் காலத்தில் நீராடி குருவை வணங்கி அன்றன்று செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை அவரால் அறிந்து முறைப்படி முடித்து மூல மந்திரத்தை ஒவ்வொருவேளை பன்னீராயிரத்திற்கு குறையாமல் ஜபம் செய்ய வேண்டும். இத்தகைய ஜபத்தை முடித்து முற்கூறிய கைலாய பிரஸ்தரம் என்னும் மண்டலத்தைக் கிரமப்படி நியமித்துப் பூஜிக்கத் துவங்க வேண்டும். நாள்தோறும் தவறாமல் இந்தப் பூஜையைச் செய்து வரவேண்டும். ஸ்படிகமயமான இலிங்கத்தையும் பூசனை செய்து வரவேண்டும். அப்படி பூஜை செய்ய யத்தனிக்கும்போது குரு சன்னிதானத்தில் என் பிராணன் ஒழிந்தாலும் சிரச்சேதம் அடையநேரிட்டாலும் முக்கண் பெருமானைப் பூஜிக்காமல் ஆகாராதிகளை செய்வதில்லை? என்று சத்தியஞ் செய்து, மஹாதேவரிடத்திலே புனிதமனதுடனும் அத்யந்தபக்தியுடனும் பஞ்சாவரணக் கிரமத்துடன் பூஜிப்பானாக!

10. ஷட்விதார்த்தம்

வாமதேவர் முருகப் பெருமானை நோக்கி பகவானே! விசேஷ ஞான அமிர்தவாரியே! உம் அகண்டமான சிவசம்பத்தை அடைவதற்கு ஷட்விதார்த்த பரிஞ்ஞானம் முக்கியமானது என்று திருவாய் மலர்ந்தருளினீர்கள். அதை விளக்கி அந்த அர்த்தத்தின் வழியையும் ஞானத்தின் வழியையும் அவ்வர்த்தத்தால் அறியக்கூடிய பொருள் இன்னது என்பதையும் அதை அடைவதால் கூடும் பயன் முதலியவற்றையும் சொல்ல வேண்டும். இதை அறியாமல் பல சாஸ்திரங்களால் மோகிக்கப்பட்டு உழல்கிறேன். இதை விட்டுச் சிவ பாதமாகிய தாமரையிலிருந்து பெருகும் அமுதத்தை உண்டு இந்த அஞ்ஞானத்திலிருந்து நீங்கி, சிவானந்தத்தை அனுபவிக்கத் தாங்கள் கிருபையைக் கருதிச் சரணடைந்தேன்! என்றார் அதற்கு கையிலே ஞானசக்தியை ஏந்திய முருகப் பெருமான் கூறுகிறார். வாமதேவ முனிவனே! பரமேசனுடைய பிரணவார்த்த சொரூபத்தையும் ஷட்விதார்த்த பரிஞ்ஞானத்தையும் கேட்ட உனக்கு அவற்றை விவரித்துக் கூறுகிறேன். முதலாவது மந்திரம், இரண்டாவது யந்திரம், மூன்றாவதும் தேவதை பொருள், நான்காவது பிரபஞ்சம், ஐந்தாவது குரு, ஆறாவது சீடன் ஆகியவற்றைத்தான் ஷட்விதார்த்தம் என வகுத்துள்ளனர். இந்த ஆறில் முதலாவதாகிய மந்திர சொரூபத்தைச் சொல்லுகிறேன். ஆதியக்ஷரமாகிய அகாரமும் ஐந்தாவதாகிய உகாரமும் பவர்த்தத்துக்கு ஐந்தாவதாகிய மகாரமும் ஆகிய இந்த மூன்று அக்ஷரங்களை விந்து நாதங்களுடன் சேர்த்தால் பிரணவமாகும். இதுவே வேதத்திற்கு ஆதி என்றும் சமஷ்டி என்றும் வேதாந்தங்கள் கூறும் இதில் நாதம் என்பது சர்வ சமஷ்டி சொரூபமாகும் இதுவே சிவசொரூபமாகும். இரண்டாவதான யந்திர கிரமத்தை சொல்லுகிறேன். இப்போது சொல்லப் போகும் யந்திரத்தையே சிவலிங்கமாகப் பாவிக்க வேண்டும். அந்த யந்திரத்துக்கு கீழ் ஆதாரச் சக்தியை ஸ்தாபித்து அதன்மேல் பிரணவமயமான பீடத்தை நிர்மாணஞ் செய்து அதற்குமேல் பிரதம சுவரமாகிய அகாரத்தையும் பஞ்சமவர்ணமான உகாரத்தையும் அதன் சிரசில் மகாரத்தையும் அதன் சிரசில் விந்துவையும் அதன் சிரசில் நாதத்தையும் எழுதிச் சுற்றிலும் பிரணவத்தால் மதில்கள் உண்டாக்கி அதற்கு நாதத்தினால் வாயில் உண்டாக்க வேண்டும். மூன்றாவதாகிய பரமசிவனாலேயே சொல்லப்பட்ட தேவதார்த்தத்தைச் சொல்லுகிறேன்.

சத்யோஜாதம் பிரபத்யாமி என்று ஆரம்பித்து சதாசிவோம் என்னும் பஞ்சப் பிரம்ம மந்திரபரியந்தம் பஞ்சப் பிரம சொரூபமாயும் பிரணவ பிரமரூபிணிகளாயும் தேவதாசொரூபிகளாயும் வேதங்களின் சிவமூர்த்த பேதங்களைப் பஞ்சப் பிரமங்கள் என்றும் முன்பு கூறியுள்ளபடி ஈசானாதி மகுடக்கிரமமாகவுள்ள சிவ விக்கிரகத்தைப் பாவிக்க வேண்டும். அவ்வைந்து முகங்களும் சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களுக்குக் காரணமாக இருக்கிறேன். இவ்விதமான சதாசிவம் எழுந்தருளியிருக்கும் பீடமானது பரமபதம் என்றும் யோகிகளாலும் யதிகளாலும் அடையத்தக்கதென்றும் அவரை உபாசிக்கின்றவர்களுக்கும் பிரணவத்தில் பிரீதியுள்ளவர்களுக்கும் சிவ சாம்ராஜ்யத்தை இச்சித்தவர்களும் உரியதாகவுள்ள ஸ்தானமாகும். அந்த ஸ்தானத்தை அடைந்து இச்சித்த போகங்களை அனுபவித்துப் பிரளயம் முடியும்வரை பிரமானந்தத்துடன் விளையாடி மஹாபிரளய காலத்தில் சிவ சொரூபத்தை அடைகிறார்கள். தேப்பிரமலோகயிதி என்னும் வேதத்தின் பொருளின்படி சதா சிவத்தின் ஐசுவரியத்தையும் அடைகிறார்கள். அவர்களே சர்வைசுவரிய சம்பன்னர்கள் என்று அதர்வசிகோடபநிஷதங்கள் கூறுகின்றன. அந்த ஸ்தானத்தை அடைந்தவன் மீண்டும் பிறப்பதில்லை என்று சாந்தோக்யோபநிஷதம் கூறும். அவ்விதமே தைத்திரீய சாகையில் சமகமந்திரத்தில் பஞ்சப்பிரமஸ்தானத்தைவிட அடையத்தக்க ஸ்தானம் வேறில்லை என்று கூறப்பட்டுள்ளது. அந்தப் பஞ்சப் பிரம்மத்தினிடமிருந்தே நிவர்த்தியாதி கலைகள் சூஷ்ம ரூபிகளாகத் தோன்றின. அது ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவ்வைந்துள் ஒன்று புருஷன், சுரோத்திரம் வாணி சப்தம் ஆகாயம் ஆகிய இவ்வைந்தாய் விரிந்து ஈசானப் பிரமத்தினால் வியாபரிக்கப்பட்டு உள்ளது. இன்னொன்று பிரகிருதி தொக்கு, பாணி, பரிசம் வாயு தற்புகுடப் பிரமத்தினால் வியாபரிக்கப் பெற்றுள்ளது. மற்றொன்று அகங்காரம், நேத்திரம், பாதம், ரூபம், அக்கினி அகோரப் பிரமத்தினால் வியாபரிக்கப் பெற்றுள்ளது. நான்காவது புத்தி நாக்கு பாயு ரசம் ஜலம் வாமதேவ பிரமத்தினால் வியாபரிக்கப் பெற்றுள்ளது. ஐந்தாவது மனம் முக்கு குறி பரிமளம் பூமி சத்யோஜாத பிரமத்தினால் வியாபரிக்கப்பட்டுள்ளது. இவ்வகையால் பிரபஞ்சம் பஞ்சப் பிரமங்களாலேயே வியாபிக்கப் பெற்றுள்ளது. இயந்திர ரூபத்தினாலேயே சிவவாசகமான பிரணவத்தை உபதேசித்தேன் அச்சிவபெருமானாலேயே உபதேசிக்கப்பட்டதாக இதைக் கருத வேண்டும்.

வாமதேவ முனிவனே! சதாசிவப் பிரமம் சமஷ்டி ரூபமாயும் ஆகாசாதிபதியாயும் பிரபுவாயும் ஆதியந்த சூனியராயும் உள்ள சதாசிவத்தின் யஷ்டி ரூபத்தைச் சொல்லுகிறேன். மகேஸ்வரனும் உருத்திரனும் விஷ்ணுவும் பிரமனும் அச்சதாசிவத்தில் அம்சமாகத் தோன்றுகிறார்கள். அந்த மகேசனே! இடது பாகத்தில் மாயசக்தியை ஏந்தி அருவுருவாய் விளங்குகிறார் அந்த மகேச ரூபம் நான்கு வகையன. அவை, ஈஸன் விசுவேசன் பரமேஸன் சர்வேஸன் எனப்படும் அதில் உருத்திர மூர்த்திபேதம் ஒன்றும் ஜீவஸ்வரூபம் என்றுமுள்ளன. இதுவே திரோபவசக்கரம் எனப்படும் ஜீவஸ்வரூபங்கள் போகங்களைக் கருமத்திற்கு ஈடாக அனுபவித்து புண்ணிய பாவ அந்தத்தில் பரமேசானுக் கிரகத்தால் ஜனனமடைகிறார்கள். இதுவரை சர்வேசுவராதி பேதங்களைக் கூறி வந்தேன். இதே திரோபாவசக்கரமாயும் சாந்திகளாமயமாயும் மகேசுவரர் எழுந்தருளியிருக்கப் பட்டதாயும் உத்தமோத்தமமாயும் உள்ளது. இந்த ஸ்தானத்தை அநேகர் விரும்புகிறார்கள் மேற்கூறியபடியே அம்மகேசுவரருடைய ஆயிரத்தில் ஓரம் சத்தில் உருத்திரமூர்த்தி அகோர முகமாயும் தேஜஸ்தத்துவங்களுக்கு அதிபராயும் வாமபாகத்தில் கவுரீ சத்தியுடனும் சர்வசம்மாரகாரகராயும் உதிப்பார் அவ்வுருத்திரமூர்த்தியின் வியஷ்டி ரூபம் நான்கு வகைப் பேதங்களையுடையது. அது சிவன். அரன், மிருடன், பவன் என்பன. இதனைச் சம்சார சக்கரம் என்பர். இந்தச் சம்சார சக்கரம் மூன்றுவகை அவை நித்தியம் நைமித்திகம், மஹாப்பிரளயம் என்பனவாம் நித்தியம் என்பது ஜீவ ஒடுக்கமும் தைமித்திகம் பிரமன் ஓடுக்கமும் ஆகும் மகாப்பிரளயம் பிரமம் பரப்பிரம்மத்தில் ஒடுங்கும் காலம் ஆகும். இவ்வாறு வேதங்கள் கூறுகின்றன. இத்தகைய ஜன்ம துக்கத்தில் ஜீவராசிகள் உழன்று ஆயாசமடைந்து ஆன்ம சொரூபமறியாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் வருத்தத்தைப் போக்குவதற்காக அவரவர் வினைப்பயனை அனுசரித்து உருத்திரமூர்த்தியினால் அழிக்கப்படுகிறார்கள். அந்த அழித்தல் (சம்ஹாரம்) மூவகைப்படும். அந்தச் சங்கார காலத்திலும் ஆக்கல் முதலான ஐந்தொழில்கள் (சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்கள்) இல்லாமற்போவதில்லை. எவ்வாறெனில் பவாதி தேவர்கள் அக்காலத்திலும் இருப்பதால் நுண்ணுருவாக (சூஷ்மரூபமாக) சிருஷ்டிபஞ்சகம் நடைபெறும். இது வித்யா ரூபமாகவும்களாமயமாயும் நிராமயமாயும் உருத்திரன் எழுந்தருளியிருப்பதாகவும் உள்ளது. இதை அறிய விரும்புவோர் அவரை ஆராதித்து. உருத்திர சாலோக்கிரமமாகச் சாயுஜ்யப் பதவியைப் பெறுவார்கள். அந்த ருத்திரமூர்த்தியின் ஆயிரத்தில் ஓரம்சமாக விஷ்ணுமூர்த்தி உதிப்பார். அவர் வாமதேவ சக்கரத்திலிருந்து தோன்றி, ஜலதத்துவத்திற்கு நாயகனாகி இடது பாகத்தில் இரமாசக்தியை ஏந்தி எல்லாவற்றையும் காக்கவல்லவராகவும் மகாத்மாவாகவும் விளங்குவார். அவருடைய வியஷ்டிரூபத்தைக் கிரமமாகச் சொல்லுகிறேன்.

வாசுதேவன், அனிருத்தன், சங்கர்ஷணன், பிரத்யும்னன் என்ற நான்கு பெயர்களுடன் அந்த மாலவன் கூடியிருப்பர். இதனை ஸ்திதிச் சக்கரம் என்பார்கள் எல்லா உலகங்களுக்கும் நான்முகப் பிரமன் முதலான சிருஷ்டிகர்த்தர்களுக்கும் இரக்ஷகர்கள் சரீரம் எடுத்தவர்கள் செய்துள்ள புண்ணியபாவங்களுக்குத் தக்க பயன்களை கொடுப்பவர் இந்த விஷ்ணுவேயாவர். இத்தகைய காத்தல் முறை இவருடையதாகும். இந்தப் பரிபாலனத்திலும் பஞ்சக்கிருத்தியங்கள் நுட்பமாகவே நடைபெறும். இதற்கே ஸ்திதிசக்கரமென்றும் பிரம பிரதிஷ்டா ஸ்தானம் என்றும் பரமபதம் என்றும் ஜனார்த்தனர் வசிக்குமிடமாயும் விஷ்ணு பக்தியுடையவர்கள் அடையும் ஸ்தானமாகவும் விஷ்ணு பக்தர்கள் சாலோக்கியக்கிரமத்தினால் முக்தியடையத் தக்கதாகவுள்ளது. இவரது ஆயிரத்தில் ஓரம்சமாய் சத்யோஜாத முகாத்மகராய்ப் பிருத்வியாதி தத்துவங்களுக்கு நாயகராகவும் ஜகத்திற்குப் பிரபுவாகவும் சிருஷ்டி கர்த்தாவான பிதாமகன் கலைமகளோடு தோன்றுவார். அவருக்கு ஹிரண்யகர்ப்பன் விராட், புருஷன், காலன் என்று நால்வகைப் பெயர்கள் உண்டு. இதற்கும் சிருஷ்டிசக்கரம் என்ற ஒரு பெயருண்டு. இந்தப் பிரமனிடத்திலிருந்தே ஸ்வாயம்பு முதலானமநுக்களும் ஜனகர் முதலான முனிவர்களும் தோன்றுவார்கள். பிரகிருதியில் அடங்கியிருக்கும் ஜீவராசிகளை கர்மங்களுடன் பணிந்து புத்திர மித்திரர் முதலானவர்களோடு சுகதுக்கங்களை அனுபவிக்கச் செய்வதே சிருஷ்டியாகும். இந்தச் சிருஷ்டிக்காலத்திலும்  பஞ்சக் கிருத்தியங்கள் உண்டு. இதுவே சிருஷ்டி சக்கரம் நிவிர்த்தி களாமயம், பிதாமகர் எழுந்தருளியிருப்பதும் பிரமனை அனுசந்திப்போர் அடையத்தக்கதும் சாலோக்கியக்கிரமத்தால் முக்தியைப் பயக்கத்தக்கதாகவும் உள்ளது.

இவ்விதமான நான்கு சக்கரங்களுக்கும் பிரணவமே காரணமாகவுள்ளது. இதையே ஜகத்சக்கரமென்றும் சிருஷ்டி முதலான பஞ்ச வட்டங்களோடு கூடியதென்றும் வேதம் கூறுகிறது. இந்தச்சக்ரம் சம்புவின் சக்தியால் சுழற்றப் பெற்றதாய்சிருஷ்டி முதலான பஞ்சகிருத்தியங்களோடு கூடியிருப்பதால் பஞ்சாரம் என்றும் குயவனின் சக்கரம் நிற்காமல் சுழல்வது போல சிருஷ்டி ஸ்திதி ஓய்வின்றி நடப்பதால் காலச்சக்கரம் என்றும் வழங்கப்பெறுகிறது. சம்புவின் தேஜசினாலும் சக்திகாரியத்தினாலும் இச்சக்கரம் சுழன்றும் ஹிரண்ய ஜோதிஸ் என்ற பெயருடன் விளங்குகிறது. அச்சோதியானது ஜலத்தினாலும் அது அக்கினியினாலும் அது காற்றினாலும் அது ஆகாயத்தினாலும் அவ்வாகாயம் அகங்காரதிகளாலும் அவ்வகங்காரம் மகத்தாலும் ஆகிய ஆவரணங்களால் வியாபிக்கப்பட்டுள்ளன மேற்சொன்ன சக்கரத்திலும் ஜலம் பதின்மடங்கு அதிகமாம் இம்முறையே ஏழு ஆவரணங்களும் பப்பத்து அதிகப்பட்டதாக இருக்கும் இவ்வார்த்தத்தை ஹிரண்யஜோதி ஹிரலிஸையமத்ய என்று வேதம் கூறும் சர்வ வியாபியான பரமேஸ்வரனை ஜலநடுவில் இருப்பதாக எவ்வாறு கொள்ளலாம் என்றால் ஸத்யோஜாத மூர்த்தியின் அநேகாம்சத்தில் ஓர் அம்சம் ஹிரண்ய கர்ப்பனாக இருத்தலின் அவ்வாறு இருக்கக் கூடும். இவ்வாறு அருளல் (அனுக்கிரஹம்) மறைத்தல் (திரோபவம்) அழித்தல்(சங்காரம்) காத்தல்( ஸ்திதி) படைத்தல்(சிருஷ்டி) ஆகிய ஐந்தொழில்களை (பஞ்சக்கிருத்தியங்கள்) தம் சக்தியுடன் கூடி லீலையாகச் சிவபெருமான் இடைவிடாமல் செய்கிறார் வாமதேவனே! அதிகமாகக் கூறுவதில் என்ன பயன்? சாரத்தை மட்டுமே சொல்லுகிறேன். பஞ்சப் பிரமஸ்வரூபியென்றும் சர்வ சக்தியுடன் கூடியவர் என்று அறிவாயாக.

நைமிசாரணிய வாசிகளே! ஆதிகுருவான ஸ்ரீ சுப்பிரமணியரால் உபதேசிக்கப்பட்ட வேத உட்பொருளை அறிந்து பரமேஸரின் வாக்கியங்களுள் தமக்குத் தெரியாதவற்றை வாமதேவ முனிவர் கேட்கிறார். ஞான சக்தியைத் தரித்த பரமானுக்கிரகரான சுப்பிரமணியரே! தாங்கள் கூறியவற்றால் என் சந்தேகம் ஒழிந்தது. சதாசிவப் பிரமம் முதல் கிருமிவரையிலுமுள்ள ஜீவராசிகளின் நிலையை நான் அறிந்து கொண்டேன். எல்லா ஆண் பெண் உருவமாகக் காணப்படுகிற ஜகத்திற்கும் ஆதிகாரணம் பெண் உருவமா? அல்லது ஆண் உருவமா? அல்லது அலியா(நபும்சகமா)? இம்மூவகையில் எது உத்தமமானது? இந்த மூவகை உருவன்றி வேறு ஏதேனும் உண்டா? இந்த விஷயத்தைப் பற்றி அதிகமாக யோசனை செய்தும் ஒன்றும் தோன்றவில்லை. பண்டிதர்கள் சாஸ்திரங்களால் மோகிக்கப்பட்டுச் சிருஷ்டிகளைப் பலவிதமாகச் சொல்லுகிறேன். அவ்வித ஜகத்துக்கும் ஸ்திரீ புருஷரூபமான சதாசிவமும் ஒரே சொரூபம் தான் என்பதன் உண்மை எனக்கு விளங்கவில்லை. ஆகையால் இவற்றின் சித்தாந்தத்தை விரித்துச் சொல்ல வேண்டும்! என்று வாமதேவ முனிவர் கேட்டுக் கொண்டார். அவரை நோக்கி சுப்பிரமணியர் மலர்ந்த முகாரத்தாமரை இந்த இரகசியார்த்தத்தை விவரிக்கலானார். நீர் இப்போது என்னிடம் கேட்ட விஷயத்தை நான் முன்பு என் அன்னையாரிடம் அமுதம் உண்ணும்போது கேட்டிருக்கிறேன். அதையே இப்போது நான் உமக்குச் சொல்லுகிறேன். இந்த ஜகத்திற்குக் காரணப் பொருளை அநேகர் அநேகவிதமாகக் கூறி வாதாடுகிறார்கள். உன்னால் உபதேசமடைந்த சீடரில் உமக்குச் சமானமானவர் இல்லை. கபிலர் உண்டு பண்ணிய சாஸ்திரங்களில் இன்னமும் பலர் உழல்கின்றனர். இன்னுஞ் சிலர் நந்தி, ததீசி, கவுதமர் முதலியோரில் சாபங்களால் சிவநிந்தை புரிந்து, அஞ்ஞானத்தில் அகப்பட்டு அவலமுறுகிறார்கள். அவருள் அநேகர் நிரீசுவரவாதிகள் அவர்களின் வார்த்தையை ஒருவரும் கேட்கலாகாது. கேவல அநுமானப் பிரமாணங்களுடன் கூடிய பரமேஸ்வரனை இல்லை என்று வாதாடுவார்கள் பிரத்யக்ஷப் பிரபஞ்சத்தைப் பொய்யென்று சொல்லி அப்பிரத்யட்சமான பரமேஸன் எப்படி இருக்கக்கூடும் என்பார்கள். அத்தகையவர்கள் நாஸ்திகரும் பரலோகத்தை நம்பாதவரும் சிவபக்தி அடியார்பக்தி குரு விசுவாசம் இல்லாதவரும் ஆவார்கள். அவர்களுடன் கூடுதலும் கொடியதாகும் உரையாடுவதும் அணுகுவதும் அதனினும் கொடியது.

ஆகையால் பரமேஸனாகவும் பரமாத்மாவாகவும் நிர்க்குணநிராமய, நிரஞ்சன, நிராதாரமாயும் உள்ள எங்கும் நிறைந்து எக்காலத்திலும் அழிவற்ற சின்மயானந்த, பிரமமான சதா சிவப்பிரமமே அறியத்தக்கது. அதுவே உண்மை என்று பல முறைகள் என்வலது கரத்தை உயர்த்திக் கூறுவேன். வாமதேவ முனிவனே! எல்லாப் பிரபஞ்சமும் ஆண் பெண் உருவமாகவே காணப்படுகின்றன. அப்பிரபஞ்சத்தில் ஷட்கோசமயமான பிண்டங்களே உண்டாகின்றன. ஆண் பெண் உறவின்றி ஷட்கோசமயமான தேகம் ஒரு போதும் உண்டாகாது. அப்பிண்டம் தாய் தந்தையரின் சங்கமங்களால் தோன்றுகின்றன. இவ்விதமாகவே, உடல்கள் அனைத்தும் தந்தையின் அம்சத்தால் தோல், மாமிசம், உதிரம் முதலியனவும் தாயின் அம்சத்தால் எலும்பு, நரம்பு, கொழுப்பு ஆக ஷட்கோசங்கள் கூடிய தேகம் ஆகும், ஆகையால் எப்போதும் அழிவற்ற பரமாத்மாவாய் சர்வாத்ம சொரூபியாக இருக்கும் பரமேஸ்வரனிடம் ஸ்திரீபுருஷ பாவம் இருப்பதாகப் பண்டிதர்கள் கூறுவார்கள். உபநிஷதங்கள் அந்தப் பொருள் சச்சிதானந்த சொரூபம் என்றும் நிர்க்குணப் பிரமம் என்றும் நாமரூபமற்றது என்றும் சொல்லுகின்றன. அவ்விதமான பிரமத்தில் ஸ்திரீ புருஷரூபம் எப்படிக் கற்பிக்கலாம் என்றால் அதையும் விவரிக்கிறேன். அசத்தை நிவர்த்திப்பதால் சத்து உண்டாகும். அஞ்ஞானத்தைப் போக்குவதால் ஞானம் உண்டாகும். இதுவே சித்து எனப்படும். அந்தச் சித்துச் சத்தமானது மூன்று இலிங்கத்திலும் விரவியிருப்பதால் அதை ஆண் உரு(புருஷரூபம்) என்றும் சித்தென்பது பிரகாசமுண்டாவதற்குக் காரணமாயிருத்தலால் பெண்ணுரு(ஸ்திரீ ரூபம்) என்றும் கூறப்படும். அந்தப் பிரகாச மயமானசித்தும் அழிவற்ற ஆனந்தமயமான சத்தும் ஒன்று சேர்வதால், உலகத்தோற்றத்திற்கு காரணம் ஆகின்றன. சத்து சுத்தமான பிரமத்தையே புருஷன் என்றும் விவகரிப்பார்கள். சித்துச் சத்தத்தையே ஸ்திரீ என்பார்கள். எப்போதும் பிரகாசமாக இருந்தாலும் விளக்கிற்கு நெய், திரி முதலியவற்றின் தோஷத்தால் பங்கம் நேர்வதுபோல சத்து பதார்த்தத்தோடு சித்துப் பதார்த்தம் கூடுவதால் ஜகம் தோன்றும். அக்கினி எல்லாவற்றையும் பரிசுத்தம் செய்வதாக இருப்பினும் அது சுடுகாட்டில் இருக்கும்போது தனித்து ஓர் கருநிறமும் மற்றவர் அணுகக் கூடாததாகவும் இருப்பது போலப் பிரமம் எப்போதும் சுயம்பிரகாசமாக இருந்தாலும் சித்து சேர்வதால் அழியுங் பிரபஞ்சமாகும். இவ்வித சக்தி ஜீவாத்மாவை அடைந்து எல்லா ஜகத்தையும் பிரகாசப்படுத்தும், எல்லாக் காலத்திலும் சக்தி சம்பந்தமின்றி ஒன்றும் அசையாது, சக்தி சம்பந்தத்தினாலேயே உலகத்திற்பலவான் என்றும் சத்தியவான் என்றும் சொல்லுகிறார்கள்.

வாமதேவரே! பரமாத்மாவிடத்தில் சிவ தத்துவம், சக்தி தத்துவம் ஆகிய இரண்டும் இருக்கின்றன. இந்தச் சிவ சக்திகளுடைய கலப்பால் உண்டாவதே ஆனந்தம் என்று சொல்லப்படுகிறது. அதையே சச்சிதானந்தம் என்பதும் உண்டு. அதைப் பற்றி முனிவர்கள் எல்லோரும் பாவத்தைப் போக்கி அழிவற்று இருக்கும் பரப்பிரமத்தினிடத்தில் அடக்கக்கூடாத மனதைச் சமாதியிலிருத்தி அநாமயமாயும் ஆதியந்த சூணியமாயும் அகண்டமாயும் எண்ணற்றதாயும் இருக்கும் ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். சிவ சக்திகளையே சர்வாத்மா என்றும் சத்தியம் என்றும் ஞானம் என்றும் நித்தியசுத்த சொரூபம் என்றும் உபநிஷதங்கள் கூறும். அகண்டமாய் ஒன்றிலும் அடங்குதல் இன்றி எல்லாவற்றிருக்கும் பெரிதாயுள்ளதால் பிரமம், என்னும் பெயரோடு பிரமணத்துவம் பிரகத்துவம் இரண்டும் சத்துப் பதார்த்தத்திலேயே அடங்கியிருக்கின்றன. நித்திய சுத்தராக இருப்பதால் பிரகத் என்றும் சர்வ வியாபியாக இருப்பதால் பஞ்சப் பிரம சொரூபி என்றும் அப்பஞ்சப் பிரமத்தினிடத்தே இந்தப் பிரபஞ்சமானது தோன்றுவது என்றும் அதனாலேயே பிரமம் என்றும் விவகரிக்கிறார்கள். ஸகாரம் சிவாத்மகமாகவும் ஹகாரம் சத்தியாத்மகமாகவும் இருப்பதால், இதுவே மஹா மந்திரமாகவும் யோகியர் உச்சரிக்கும் மூலமந்திரமாகவும் இருக்கிறது. குருவின் உபதேச காலத்தில் சத்தியாத்மகமான மந்திரத்தை உச்சரிக்கிறார்கள். இதையே பசுவான ஜீவன் உச்சரித்துப் பிறவிப் பெருங்கடலைத் தாண்ட வேண்டும் சத்தியாத்மகமான சிவஞானம் வந்தால் அவனே சிவசாரூபத்தை அடைகிறான். பிரம வாக்கியத்தில் சாஸ்திர ஞானமே பிரமம் என்று சுருதி கூறும் சாஸ்திர ஞானமே சைதன்னியம் அந்தச் சைதன் அனைத்திலும் இருக்குஞ் சைதன்னியம் எங்கும் ஞானாசிரியாத்மகமாகவும் சுதந்திரமாகவும் இருக்கும் சுபாவமே ஆன்மா என்று சிவசூத்திரம் சொல்லும் இவ்விதமாகப் பிரமாத்மக சொரூபத்தை இதுவரை விவரித்தேன். இனி ஜீவ சொரூபத்தை விளக்குகிறேன்.

சிவ சூத்திரத்தில் ஞானம் என்பது ஒன்று உண்டு. அந்த ஞானம் ஜீவர்களுக்குக் கொஞ்சமாகக் கிடைத்திருக்கும் அறிவாற்றல் (ஞானசக்தி) என்றும் செயலாற்றல் (கிரியாசக்தி) என்றும் பிரமத்தினிடம் இரண்டு உண்டு அச்சக்திகள் சிருஷ்டிக்குக் காரணமாக இருக்கும் அந்தச் சக்திகளையே சுவேதாசுவதர உபநிஷதம் பராசக்தி என்று கூறும் பரமேஸ்வரனுக்கு ஞானம் கிரியை, இச்சை, (அறிவு, செயல், விழைவு) என்று மூன்று கண்களுண்டு அக்கண்களை இந்திரியத் துவார கோசரமாகச் சீவன் மனத்தில் தியானித்துச் சத்தாய் அறிகிறான். ஆகையால் ஆன் மாவிடத்திருந்தே இச்சொரூபம் காணப்படும். வாமதேவரே பிரபஞ்ச சொரூபமான பிரணாவர்த்தத்தைக் கூறுகிறேன். ஓம் இதி என்ற வாக்கியமே பிரமம் என்று தைத்ரீய உபநிஷதம் கூறும் பிரணவத்திலிருந்தே பிரபஞ்சம் தோன்றியதென்று அவ்வுப நிஷதம் மேலுங்கூறும். அவ்வுபநிஷதத்தின் தாத்பரியத்தைக் கூறின் சிவ சக்தியின் சம்யோகமே பரமாத்மாவென்று நிச்சயமாகும். அந்தப் பரமாத்மாவிடமிருந்து ஆகாயமும் அதிலிருந்து அக்கினியும் அதினின்று ஜலமும் அதினின்று பிருதிவியும் தோன்றும் மாயையே பிரகிருதியும் அப்பிரகிருதியுடன் கூடியவரே மகேசுவரர் என்று எல்லா சாஸ்திரங்களும் கூறும். அந்தப் பரப்பிரமத்தை யதிஷ்டித்த சக்தியே பராசக்தி என்று விவரிக்கிறார்கள். அப்பராசக்தியினின்று சிவசக்தி யுதித்தாள் அவளிடமிருந்து, ஆனந்தசக்தியும் அவளிடமிருந்து இச்சா சக்தியும் (விழைவாற்றலும்) அவளிடமிருந்து ஞானசக்தியும் (அறிவாற்றலும்) அவளிடமிருந்து கிரியாசக்தியும் (செயலாற்றலும்)ஆக ஐந்து வித சக்திகள் உதிப்பார்கள். இவரிடமிருந்து நிவர்த்தி முதலான கலைகள் உதிக்கும் சித்து ஆனந்தம் என்பவற்றிடமிருந்து நாத விந்துக்கள் தோன்றும் இச்சா சக்தியினின்றும் மகாரமும் ஞானசக்தியினின்று உகாரமும் கிரியா சக்தியினின்று மகாரமும் ஞானசித்தியினின்று உகாரமும் கிரியா சக்தியினின்று ஹகாரமும் உண்டாயின. சிவபிரானிடமிருந்து ஈசானரும் (இயக்கமும்) அவரிடமிருந்து தற்புருடரும்(ஆட்சியும்) அவரிடமிருந்து அகோரரும் (நடுக்கமும்) அவரிடமிருந்து வாமதேவரும் (விளக்கமும்) அவரிடமிருந்து சத்தியோஜாதரும் (தோன்றுவித்தலும்) தோன்றினர் பஞ்ச பிரம்மர்களிடமிருந்தே அகாராதி மாத்ரு கணங்களும் அவற்றினிடமிருந்து முப்பத்தெட்டுக் கலைகளும் தோன்றும் ஈசானரிடமிருந்து சாந்தியும் தற்புருஷரிடமிருந்து சாந்தி கலையும் அகோரரிடமிருந்து வித்யாகலையுங் யாதிதகலையும் வாமதேவரிடமிருந்து பிரதிஷ்டா கலையும் சத்யோஜா தரிடமிருந்து நிவர்த்திக் கலையும் தோன்றும் ஈசானமும் சித்சக்தியும் சேர்வதால் அருளல் முதலான ஐந்தொழில்களும் அவரிடமிருந்தே கலாவருண சொரூபமான பூதங்களும் உதிக்கும் அந்த ஐம்பூதங்களை ஈசசிற்சக்தி சொரூபம் என்று கூறுவார்கள். அவற்றின் குணங்களாவன ஆகாயமானது சத்தத்தையே குணமாகவும் வாயு(காற்றானது) சப்த ஸ்பரிசங்களையே குணமாகவும் அக்கினி (நெருப்பானது) சப்த ஸ்பரிச ரூபங்களையே குணமாகவும் ஜலம்(நீரானது) சப்த ஸ்பரிச ரூப ரசங்களையே குணமாகவும் பிருதிவி( நிலமானது) சப்த ஸ்பரிச ரூப ரச கந்தங்களையே குணமாகவுடையன இவ்விதமாகவே பிரபஞ்சம் காணப்படும் சர்வ சமஷ்டியாய் எங்கும் வியாபித்திருக்கும் விராட்டே பிரமாண்டம் என்று கூறப்படும்.

பிருத்வி தத்துவம் முதல் சிவ தத்துவம் வரையிலும் பரமேஸ்வரனிடத்தில் ஒடுங்கும் ஜீவரூபத்தில் விராட் ஒடுங்கும் மீண்டும் சக்தியுடன் சிருஷ்டிக்கு ஆரம்பித்தலால் சக்தி மூலமாக மேற்சொன்ன தத்துவங்களும் ஸ்தூலசூக்ஷ்மரூபமான பிரபஞ்சங்களும் தோன்றும். பிரளயம் வரை ஜீவித்திருக்கும் மகேசன்தன் இச்சையால் ஜகத்தைச் சிருஷ்டிக்க வேண்டும் என்று எண்ணங்கொண்டால் அதையே சிவ தத்துவம் எனவும் இச்சா சக்தி தத்துவம் என்றும் கொள்ளப்படும், ஞானசக்தியும் கிரியா சக்தியுங் கூடினால் அதில் ஞானம் அதிகமிருந்தால் சதாசிவ தத்துவம் என்றும் ஞானத்தை விடக் கிரியை அதிகரித்திருந்தால் மகேஸ்வரத் தத்துவம் என்றும் அறிவாயாக. ஞானக்கிரியா சக்திக்குச் சமானமாகவும் சுத்தவித்யாத்துமகமாகவும் தன் அங்கரூபங்களின் அவயவங்களினின்றும் தோன்றிய பூதங்களுக்குத் தன் சுத்த சொரூபத்தை மாயா தத்துவத்தால் மறைத்து அம்மாயையினால் ஜகத் உண்டாவதை மற்றையோருக்குத் தெரிவிக்காது. உண்மையாகிய தனது பரம ஐஸ்வரியரூபத்தையும் அந்த மாயையினாலேயே மறைத்தும் விளங்குபவரையே புருஷன் என்றும் வேதங்கூறும் சமுசாரர்களாக இருக்கும் ஜீவர்கள், ஈஸ்வரனைச் சமுசாரியென்று அவரது மாயையினாலேயே மோகித்து, அவரினும் ஜதத் வேறு என்றும் தாங்கள் வேறு என்றும் ஆன்மா வேறு என்றும் பிரமையடைகிறார்கள் அவரது மாயையை அறிந்து சிவத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் பேதமில்லை என்று அறிந்த பிறகு ஒருபோதும் அறியாமை (அஞ்ஞானம்) அணுகுவதில்லை. இந்திரஜாலத்தைக் காண்பவர் பிரமையடைந்தும் காட்டுவோர் பிரமையடையாதும் இருப்பார்கள். அதுபோலவே யோகியர் பிரமையடையார் இவ்விதமாய்க் குருவாற் சிவசொரூபத்தை அறிந்தவன் குருவைஞான சொரூபியாகப் பாவித்துத்தான் சிவசொரூபியாகின்றான். அந்தச் சிவத்திற்கு சர்வகர்த்துரு சொரூபிணி, சர்வகஞ்ஞத்வ சொரூபிணி பூரணத்துவ சொரூபிணி, நித்தியத்துவ சொரூபிணி வியாப சொரூபிணி என ஐந்து சக்திகள் இருக்கிறார்கள். அவர்களது சக்தியினாலேயே சூரியர்கள் பிரகாசிக்கிறார்கள். கலை வித்தை, இராகம், காலம், நியதி, என்னும் தத்துவப் பஞ்சகரூபங்கள் கலை என்று சொல்லப்படும். அதில் கலை என்பது சிறிது தத்துவமறியச் சாத்தியமாகவுள்ளது. வித்தை முன்னையதைவிடக் கொஞ்சமதிகம் அறியச் சாதகமாகவுள்ளது.  இராகம் என்பது விஷயங்களில் ஆசையை உண்டு செய்யத் தக்கது காலம் என்பது பாவா பாவங்களையும் கணிதங்களையும் காண்பிக்கும். நியதி என்பது இதைச் செய்யலாம் இதைச் செய்யக்கூடாது என்ற தீர்மானத்தை விளைப்பது இவ்வைந்துமே பரமேசனது சொரூபத்தை வெளிப்படுத்தாமல் மறைப்பதால் பஞ்சகஞ்கம் (சட்டை) எனப்பெயர் பெற்றன. இவ்வாறு கூறிவந்த சுப்பிரமணியரை நோக்கி வாம தேவர் நியதிக்குக் கீழ் பிரகிருதி என்றும் அதற்குமேல் புருஷன் என்று தங்களால் முன்பு கூறியது என் நினைவில் இருக்கிறது. இப்போது மாயையால் அது மறைக்கப்படுகிறது என்றும் அம்மாயைக்குக் கீழே இருக்கிறது என்றும் திருவாய் மலர்ந்து கூறினீர்கள். இதை விளக்கியருள வேண்டும் என்று கேட்டார் முருகப்பெருமான் கூறலானார்.

வாமதேவா! அதை நான் மீண்டும் சொல்கிறேன். சர்வ கர்த்தாவான பரமேஸ்வரனே தன்னுடைய மாயையினால் தன் உருவத்தை மறைக்கிறவர் போலக் காணப்படுகிறார் அவர் கலாபஞ்சகங்களால் பிரகிருதியின் பேரிலிருந்து புருஷனாகி அதன் குணங்களை அனுபவிக்கிறார். அவரது சமஷ்டிரூபம் சத்வாதி குண வயப்பட்டது. அதற்குப் பிரகிருதி தத்துவம் என்றும் பெயருண்டு. அதனிடமிருந்தே சத்துவம் ராஜஸம், தாமசம் என்னும் குணங்கள் உண்டாகின்றன. அக்குணங்களிடமாக வஸ்து நிச்சயம் செய்யும் புத்தி உண்டாகும். அப்புத்தியினிடமிருந்து அகங்காரம் தோன்றும். அவ்வகங்காரம் மூன்று வகைப்படும். அவை ஜீவன சாதகம் வேகம், கர்வம் அக்குணங்களால் உண்டான சத்துவம் முதலானவை மீண்டும் மூவகையாகப் பிரிந்து தேஜஸினின்று தோன்றிய அகங்காரத்தினிடமாக மனம் புத்தி இந்திரியங்கள் முதலானவை தோன்றும் மனம் சங்கற்பம் விகற்பம் என்பதற்கு உள்ளாவது புத்தியால் அறியத்தக்க இந்திரியம் பத்து வகையாகும். அவை செவி (சுரோத்திரம்) மெய்(தொக்கு) கண்(சட்சு) வாய்(சிங்குவை) மூக்கு(ஆக்கிராணம்) ஓசை(சப்தம்) ஊரு(ஸ்பரிசம்) ஒளி(ரூபம்) சுவை(ரசம்) நாற்றம்(கந்தம்) ஆகியன புத்திக்குக் கோசரம், விகாரத்தினால் உண்டான கர்மேந்திரியங்கள் வாய், கால், கை, மலவாய், கருவாய், (வாக்கு) பாதம், பாணி, பாயு, (உபஸ்தம்) ஆகும். இவை சூக்ஷ்ம ரூபத்தால் விளங்கும் மேற்கூறிய இந்திரியங்களிலிருந்தே ஆகாயம், வாயு, அக்கினி, ஜலம், பூமி கோசாரமாகும்! என்று முருகப்பெருமான் கூறினார். அவரை நோக்கி வாமதேவர் கேட்கலானார். ஷண்முகா! இதுவரை பூதசிருஷ்டி வகையைத் தங்களிடமிருந்து கேட்டு அறிந்தேன். முன்பு பூதசிருஷ்டியைப் பற்றிக் கூறியதற்கும் இப்போது கலைகளினின்றும் சிருஷ்டியாகிறது என்று கூறியதற்கும் முரணடைகின்றதே. இப்போது இதை இவ்வாறு ஏன் கூறவேண்டும்? அதை விளக்கியருள வேண்டும். ஆன்மதத்துவம் மகாரத்தினின்றும் வித்தியா தத்துவம் உகாரத்தினின்றும் சிவ தத்துவம் அகாரத்தினின்றும் விந்துநாதங்கள் சர்வ தத்துவங்களினின்றும் தோன்றும் மேற்கூறிய ஐந்தெழுத்துக்களிலிருந்தே பிரம, விஷ்ணு, உருத்திர, மகேசுவர், சதாசிவர் தோன்றுகிறார்கள். என்றும் அவர்கள் அம்சங்களில் ஒவ்வொரு பாகத்திலிருந்து மற்றையோர் தோன்றுகிறார்கள் என்றும் தாங்கள் கூறியது சந்தேகமாக இருப்பதால் அதையும் விளக்கியருள வேண்டுகிறேன்! என்று வாமதேவர் வினவவே அதற்கு திருமுருகன் விளக்கத் துவங்கினார்.

வாமதேவ முனிவனே! பஞ்சபூதாத்மகமான பிரபஞ்சம் கலைகளினிடமாக உண்டாவது என்று சொல்வது. பிரபஞ்சம் பருஉடல் நுண்ணுடல்களால் (ஸ்தூல சூக்ஷ்மங்களால்) இருவகையாகும். அந்த ஐம்பூதங்கள் பசுபதியின் சரீரமாகும். சிவ தத்துவம் முதல் பிருதிவி தத்துவம்வரை சிவசக்தி சம்யோகத்தால் தத்துவந்தோன்றும்போது, அவற்றிலிருந்தே பிரபஞ்சம் தோன்றும். தத்துவங்களின் பாகுபாடே கலைகள் எனப்படும் அக்கலைகளின் பகுதியும் பஞ்ச பூதங்களும் ஐக்யமாவதால் ஸ்தூலசூக்ஷ்ம பேதமாவதைப் பிரமஞானிகள் அறிகிறார்கள். ஸ்தூலசூக்ஷ்மாத்மகமான பிரபஞ்சத்தில் சந்திரன் சூரியன் முதலான நவக்கிரகங்களும் அசுவினி முதலான நட்சத்திரங்களும் பிரம விஷ்ணு மகேசாதிதேவர்களும் இந்திரன் முதலான அஷ்டதிக்குப் பாலகர்களும் மற்றைய தேவகணங்களும் பிதுர்த் தேவதைகளும் அசுரர்களும் இராக்ஷசமானுடர்களும் பசு, பக்ஷி புழு, பாம்பு முதலிய பேதங்களுள்ள சங்கமப் பிராணிகளும் மரம், செடி, கொடி, புதிர் மலை ஓஷதிகள், அஷ்ட குலாசலங்கள், கங்கை முதலான மஹாநதிகள் ஏழு கடல்கள் மற்றும் புலப்படும் எல்லாப் பொருள்களும் உற்பத்தியாகின்றன. ஆண் பெண் வடிவான சிவ சக்திகளின் சம்யோகத்தினால் ஏற்பட்டு விளங்கும் ஞானியருள் உயர்ந்தவனான உன்னைப் போன்ற ஞானியர்கள் பிரபஞ்சமேபிரமமும் பிரமமே பிரபஞ்சமாக இருப்பதால் அவ்வாறே உபாசிப்பார்களாக வாமதேவனே! ஸர்வோவை ருத்திர என்னும் தைத்ரீய உபநிஷதம் இவ்வாறு கூறும். இதனால் பிரபஞ்சாத்மகமாகவே சதாசிவர் விளங்குகிறார். முப்பத்தெட்டுக் கலைகளின் கிரமங்களைச் சந்தேகமறத்தெரிந்து கொண்டவனே! ஸதாசிவோஹம் என்னும் ஞானத்துடன் பிரபஞ்ச தேவ தயாந்திர மந்திராத்மா! என்னும் ஞானமும் உடையவனாவான். அவனே குரு அத்தகைய குருவின் தயையால் எல்லாப் பந்தங்களும் அறுபடும். அந்தக் குருவின் திருவடித் தாமரையில் மிகுந்த அவாவோடு பணிவிடைசெய்து அவரையே சிவமாகப் பாவித்துக் குருகுல வாசஞ் செய்தால், தானும் சிவசொரூபம் உடையவனாகிறான். குணபேதங்களால் அறியக்கூடாத எல்லா வஸ்துக்களும் பிரணவஸ்வரூபமாகும்.

வாமதேவரே! இராகத் துவேஷாதிகளை ஒழிக்கவல்லதாயும் வேதங்களுக்குள்ளே சாரமானதாயும் உபநிஷதப் பொருளாயும் இரகசியங்கள் எல்லாவற்றிற்கும் இரகசியமாயும் எல்லாப் பிரபஞ்ச சொரூபியாயுமுள்ள பஞ்சப் பிரமத்தால் சொல்லியவாறே உனக்குச் சொன்னேன், இந்த ஷட்விதார்த்த ஞானப் பொருளில் நம்பிக்கை வைக்காமல் மதகர்வங்கொண்டு இராகத் துவேஷ யுத்தனாய் தேவ ராக்ஷச, மானுவ, யக்ஷ, கந்தருவ கின்னராதியரில் யாராவது பிசகு என்று சந்தேகிப்பாரானால் அத்துராத்மாவின் சிரங்களை, சத்துருக்களை அழிக்கும் காலாக்னி போன்ற எனது வேலாயுதத்தால் துணித்துவிடுவேன் சிவாத்துவித வித்துக்களில் சிறப்புடையவனாகிய உனக்கு இவ்வர்த்தத்தை உபதேசித்தேன். இதையறிந்த உனதுகடைக்கண் பார்வையால் எத்தகைய அற்பனான பசுவும் பசுபதியாவான் உன்னை வணங்கி வழிபடுவோர்களுக்கு அருள் புரிய உலகவருனை முன்னிட்டே இத்தகைய அரிய பொருளை உபதேசித்தேன். நீ அழியாத சிவபதவியை அடைவாயாக! என்று திருமுருகன் அருள்பாலித்தார். அதைக்கேட்ட வாமதேவ முனிவர் சிவ சுப்பிரமணியரின் திருவடித் தாமரையில் வண்டுகள் எப்படிப் படிந்துசிக்குமோ, அவ்வாறு பணிந்து ஆனந்தத்தை அனுபவித்துக் களித்திருந்தார்.

11. ஆசார்ய அபிஷேகம்

வாமதேவ முனிவர், முருகப்பெருமானை நோக்கி அறுகுணச் செல்வனே! அமுதவாரிதியே மேற்கூறிய சந்நியாசிகளுக்குக் குருத்துவம் எவ்வாறு கிடைக்கும் எத்தகையகுருவை அடைந்த ஜீவராசிகளுக்குப் போக மோக்ஷங்கள் விரைவில் கிட்டும்? குருத்துவம் வாழையடி வாழையாகப் பரம்பரையாக வந்தால் தான் உபதேசஞ் செய்ய யோக்கியதை உண்டென்று இருப்பதால் அதனையும் சந்நியாசிகள் சவுனஞ் செய்து கொள்ள வேண்டியவிதி, அவர்கள் நீராடவேண்டிய முறைகள் முதலியவற்றையும் விளக்கிக் கூற வேண்டும் என்று கேட்டார் அதற்கு சுப்பிரமணியர் சொல்வராயினர்.

வாமதேவரே! ஆசார்ய தன்மை சித்திப்பதற்குச் சாதனமாகவுள்ள யோக பட்டாபிஷேகத்தைப் பற்றி முதலில் சொல்லுகிறேன். வைகாசி, ஆவணி மாசி ஆசுவைஜம் கார்த்திகை மார்க்கசீரிஷம் இம்மாதங்கள் ஒன்றில் சுபதினத்தில் பஞ்சமை பூரணை ஆகிய இவ்விருதிகளில் ஒன்றில் உதயத்தில் எழுந்து காலைக்கடன்களை முடித்து குருவின் அனுமதிபெற்று ஒரே மனதாக நந்நீராடவேண்டும். தன் ஆடைகளை நனைத்து வைத்து இரண்டு புரியாக பூணூல் பூண்டு தூயகோவணம் அணிந்து இருமுறை ஆசமனீயஞ் செய்து ஸத்தியோஜாதாதி மந்திரத்தால் உத்தூளன அவகுண்டன திரிபுண்டரங்களாக விபூதியை அணிந்து கொள்ள வேண்டும் பிறகு குருவின் கையைப் பற்றிக் கிழக்குமுகமாக அலங்காரமான மண்டபத்தில் குருவால் கொடுக்கப்பட்ட தூய்மையான ஆசனத்தில் அமர்ந்து ஆசாரியரால் சங்க தீர்த்தம் புரோக்ஷிக்கப் பெற்று முன்பு கூறியுள்ளபடி மண்டலத்தையும் யந்திரத்தையும் ஆவர்ண தேவர்களையும் பிரணவத்தால் ஆவாகனஞ்செய்து நன்மலர்களால் அர்ச்சித்து அஸ்திரமந்திரத்தால் மூடி, கவசமந்திரத்தால் ஆவாணஞ்செய்து, தேனுசங்கம் முதலிய முத்திரைகளைக் காட்டி தூபதீபங் கொடுத்து, ஐந்துவித மலர்கள், பத்திரங்களால் பூஜிக்க வேண்டும். மணமுள்ள மலர்களால் அலங்கரித்து நல்ல பழவகைகளால் நிவேதித்து நீலம் மாணிக்கம் பவளம் தங்கம் கோமேதகம் ஆகியவற்றைச் சமர்ப்பித்து ஆதாரசக்தி முதல் முன்பு சொன்னவாறு மூல மந்திரங்களால் முறைப்படி அருச்சிக்க வேண்டும் மண்டபத்தின் ஈசான திக்கில் சதுரமாக மண்டலம் ஒன்று இயற்றி அதன்மேல் திவ்யாசனம் கற்பித்து அங்கு தானிருந்து முன்னே கும்பத்தில் ஆவாஹனஞ் செய்துள்ள ஜலத்தை மந்திரபூர்வமாகக் கொண்டுவந்து பிரதக்ஷிணமாக (வலமாக) அபிஷேகஞ் செய்யவேண்டும். இதனிடையே ஏழு ஆவர்த்தி பிரணடமந்திரத்தையும் பஞ்சப்பிரம மந்திரத்தையும் ஜெபித்து சங்க ஜலத்தில் அபிஷேம் செய்து, தூபதீபங் கொண்டு தூய்மையான துணியால் துடைத்து, தோய்த்துள்ள சூத்திரம் கோவணம் ஆடை அணிந்து கைகால்களை அலம்பி ஆசாரியர் விபூதியைக்கையில் எடுத்து, சீடனின் கைகளைப் பிடித்துக்கொண்டு மண்டப மத்தியிலுள்ள ஆசனத்தில் கிழக்கு முகமாக உட்காருவித்து, தான் வடக்கு முகமாக உட்கார்ந்து தத்துவஞானத்தில் அவாவுள்ள சீடனே நிருமலனாகுக என்று அருள் கூற வேண்டும், ஆசாரியர் தான் பரிபூரணனாகவும் சிலோக மடைந்தவனாகவும் இரண்டு நாழிகை கண்மூடியிருந்து பிறகு கண்விழித்து சாவதானமான மனதோடும் பூரண சுபிட்சத்தோடும் சீடனை நோக்கி தனது விபூதி பூசிய கையை அவனது சிரத்தில் இருத்தி வலது காதில் ஹம்ஸஸோஹம் என்னும் அக்ஷரங்களை உபதேசிக்க வேண்டும் அவற்றுள் முதல் அக்ஷரமான ஹகாரம் சத்யாத்மகமும் ஸகாரம் சிவாத்மகமுமாம் சர்வாத்மகராயும் சம்புவாயும் ஹம்ஸபதவாச்சியராயும் பஞ்சப்பிரம சொரூபியாயும் இருப்பவன் நானே எனப்பாவிக்கக் கடவாய் பிரஜ்ஞானம்பிரமா.. சர்வம் கல்லதம் பிரமா, ஸோஹமஸ்மி-பிரஹ்மா ஹமஸ்மி- பிராமணோ ஹமஸ்மி ஹிரண்யபாஹவே ஸப்பிரமஸிவ போன்ற வாக்யங்களை உபதேசித்து தன்னையே சிவமாகப் பாவிக்கத்தக்க மந்திரங்களை அவன் மனதில் நிறுத்தி விபூதி பூசியுள்ள கையினால் சங்குநீரை எடுத்து அஸ்திர மந்திரத்தினால் ஓர் இடத்தைச் சுத்தம்செய்து அங்கு சங்கை வைத்துப் பிரணவ சந்திரம் கூறி நறுமணமலர் முதலானவற்றால் அலங்கரித்து பரிசுத்தம் செய்து பிரணவத்தி னால் சங்கில் நீரை நிரப்பிப்பிரணவத்தை ஏழு வியாஹ்ருதிகளுடன் ஜபிக்க வேண்டும்.

பிறகு அந்த சங்க தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு காணப்படும் உலகத்தை ஒழித்து நித்தியப் பொருளாகிய சிவபெருமானையடையும் ஞானம் கைகூடுமாக என்று ஆசிர்வதித்து, அவன்மீது தெளிக்க வேண்டும். சிஷ்யனையே சிவசொரூபமாகப்பாவித்து, சிஷ்யபீடத்தை யதோக்தமாக அர்ச்சித்து அப்பீடத்தில் சிவாதனத்தை நியமித்து அவனுடைய பாதம்முதல் சிரம் வரையில் ஈசானாதிப் பஞ்சப் பிரமகிரமமாய் ஆவாஹனஞ் செய்து பிரணவத்தினின்றும் உண்டான முப்பத்தெட்டு கலைகளையும் அங்கங்களில் நியாசஞ் செய்து அவனுடைய சிரசில் சிவபெருமானை ஆவாஹனஞ் செய்து தேகத்தில் சங்குதேனு முதலிய முத்திரைகளைக் காட்டி ÷ஷாடச உபசாரங்களோடு அர்ச்சிக்க வேண்டும், பாயாசான்னத்தைப் பிரணவ மந்திரத்தால் நிவேதித்து கைகால்களைச் சுத்தஞ் செய்வித்து ஆசமனீயம் செய்யச் செய்து தூபதீபங்காட்டி பவாதி நாமங்களால் அர்ச்சிக்க வேண்டும். வேதாங்கசம்பன்னர்களை அவ்விடம் வரவழைத்து அவர்களுடன் குரு ப்ரஹ்மவிதாப்னோபரம் ம்ரஹுர்வைவாருணிஹியோலேவானாம் முதலாக தஸ்யப் ப்ரஹ்ருதிபீனஸ்யய பரஸ்ஸம்ஹேஸ்வர வரை தம் ஜெபித்து செங்கழுநீர் மலர்களால் புனைந்த மாலையைக் கழுத்து முதல் பாதம் வரையில் தொங்கும்படிச் சீடனுக்குச் சூட்டி சூலக்குறியை அவன் நெற்றியில் தரிக்க வேண்டும். குடைபாதுகை சிவமந்திரங்களை அறியச் சத்தி, தான் இச்சீடனுக்கு எவ்வாறு குருவானாரோ அவ்வாறே இச்சீடன் பிறருக்குக் குருவாக இருக்கத் தகுந்த யோக்கியதை முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். அதற்கு மேல் சிவரூபியான சீடனைப் பார்த்து, சீடனே! இந்த வினாடி முதல் எப்போதும் சமாதியில் தவறாமல் இருக்கக்கடவாய்! என்று தானும் அச்சிவரூபியான சீடனுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்விடத்தில் உள்ளவர்கள் சந்நியாசமடைந்தால் குருவான சீடனை முறைப்படி நமஸ்காரஞ் செய்யவேண்டும். இவை முடிந்த பிறகு, சீடன் ஆசனத்திலிருந்து எழுந்து தன் குருவையும் அவரது குருவையும் குருவின் சீடர்களையும் முறைப்படி நமஸ்கரிக்க வேண்டும். இவ்வாறு செய்யுஞ் சீடனைக் குரு பிரணவத்தால் அருள் பாலித்து இது முதல் உலகிற்கு அருள்வதன் பொருட்டு ஓர் இரவிற்கு அதிகமாக ஓரிடத்திலும் தங்காமல் உலகங்கள் அனைத்திலும் சஞ்சரிக்கக் கடவாய். யாராகிலும் உன்னிடம் சிவஞானம் போதித்துக் கொள்ள வந்தால் அவர்களை ஒரு வருடகாலம் சோதனை செய்து அதன் பிறகே உபதேசிப்பாயாக! இராகாதி துவேஷங்களை ஒழித்துக் கோபத்தை நீக்கி ஞானகர்மேந்திரியங்களை அடக்கி சத்புருஷர்களான சிவஞானிகளின் கூட்டுறவோடு எப்போதும் சிவஞானத்தில் பதிந்திருப்பாயாக சிவ பக்தியில்லாதவர்களுடன் ஒருபோதும் கூடவேண்டாம் உன் பிரணனுக்கு அவஸ்தை வந்தபோதிலும் குரு பக்தியில் தவற வேண்டாம். எப்போதும் சிவானந்தத்திலேயே ஆழ்ந்திருப்பாயாக என்று உபதேசிக்க வேண்டும் வாமதேவரே! இதுவரை யோகபட்டாபிஷேக முறைமையைச் சொல்லி வந்தேன். இனியதிகளுக்கு தூய்மை செய்யத்தக்க மயிர்களைதல் முறையையும் (சவுனக்கிரமத்தையும்)நீராடும் முறைமையையும் சொல்லுகிறேன்.

சீடன் முதலில் குருவை நமஸ்கரித்து விடைபெற்று, தலை நீராடி ஆசமனீயம் செய்து, ஆடை அணிந்து மயிர்களைதலுக்கு (சவுனத்திற்கு) உட்கார்ந்து, தூய நன்னீரால் மண்ணைக் கொண்டு க்ஷவரகன் தன் கைகளையும் கத்தியையும் பரிசுத்தம் செய்வித்து சிவம் சிவம் என்று தான் உச்சரித்து, தன் இரு கண்களையும் இரண்டு கட்டை விரலால் அஸ்தமந்திரத்தால் மூடி பிரணவத்தை ஜெபிக்க வேண்டும். அந்த மந்திரத்தாலேயே கண்ணைத்திறந்து பன்னிரு முறை அம்மந்திரத்தினால் கத்தியில் தண்ணீரைத் தெளித்து (புரோக்ஷணம் செய்து) பிரணவத்தை உச்சஸ்வரமாக உச்சரித்து தன் சிரத்தின் வலப்பக்கத்து மயிரைக்களைவித்து பூமியில் இலையைவிட்டு அதன்மேல் அம்மயிரை வைக்க வேண்டும். பிறகு, வலக்கிரமமாகத் தலையின் மயிரைக் களைந்து முகத்திலுள்ளதற்கும் அவ்வாறே செய்வித்து கால், கை, நகங்களைக் களைவிக்க வேண்டும். பிறகு எழுந்து, வில்வம், அரசு, துளசி இவற்றில் ஒன்றின் அடியில் மண்ணெடுத்துக் கொண்டு மகா நதிக்கு சென்று கொப்பூழுக்குமுள்ள நீரில் இருந்து பன்னிருமுறை நீராடி, தூய்மையான இடத்தில் இருந்து தான் கொணர்ந்த மண்ணை முன்றாகப்பிரித்து அதை மேலும் மும்மூன்றாகப் பிரித்து அஸ்திரமந்திரத்தால் நீர் தெளித்து (புரோக்ஷணம் செய்து) அப்பிரிவின் ஒருபாகத்தை எடுத்துக் கைகளைப் பன்னிருமுறை சுத்தஞ் செய்யவேண்டும். மற்றொரு பாகத்தை எடுத்துப் பாதங்களிலும் மற்றைப் பாகத்தை சிரம் முதலிய அவயவங்களிலும் கிரமப்படி பூசி தண்ணீரில் இறங்கிப் பன்னிருமுறை சிரசைத் தடவிப் பன்னிருமுறை மூழ்க வேண்டும்,  ஒவ்வொரு ஸ்நானத்திற்கும் கரையேறி பதினாறு முறை வாய் கொப்புளித்து, பதினாறுமுறை பிரணவ மந்திரத்தால் ஆசமனீயஞ்செய்து முறைப் படி பிராணாயாமத்தை எட்டு முறைகள் செய்து, வேறு மண்ணை எடுத்து முன்சொன்ன கிரமப்படிப் பிரித்து ஒரு பாகத்தால் குறிகளையும் பாதங்களையும் மற்றப் பாகங்களால் வேறு இடங்களையும் பரிசுத்தஞ் செய்து, இருமுறை ஆசமனீயம் செய்து பதினாறு பிரணவ சப்தத்தால் பிராணாயாமம் செய்து, ஸ்நானஞ் செய்து, சந்நியாசி ஆசிரமத்திற்காகச் சொல்லியுள்ள முறைப்படி மண்ணைப் பூசி ஸ்நானஞ் செய்து தண்டத்தை யதாவிதியாக பரிசுத்தம் செய்து, பூமியில் வைக்க வேண்டும் ஆசாரியரையும் சிவபெருமானையும் ஸ்மரித்து சூரியனைப் பார்த்து மூன்று முறைகள் பணிந்து, ஐந்து அங்கங்களால் வந்தனஞ் செய்து தண்ணீரில் இறங்கி நடுவிலிருந்து தான் முன்பு பிரித்துள்ள மண்ணின் மிகுந்தவற்றைப் பூசி மூன்று முறை பிரணவத்தால் நீராடி கரையேறி வேறு மண்ணால் கைகால் அலம்பி, இருமுறை ஆசமனீயம் செய்து, மறுபடியும் ஆசமனீயம் செய்து, விரஜாபஸ்மத்தை எடுத்துத் தேகம் முழுவதும் உத்தூளனக் கிரமமாய்த் திரிபுண்டரம் தரித்து, மத்தியான்னக்கிரியை முடித்துக் குருவையும் புண்ணிய தீர்த்தத்தையும் நமஸ்கரித்து, முன்பு சொன்ன பஞ்சாவரணக்கிரமமானக்கைலாஸப் பிரஸ்தரம் என்னும் மண்டலத்தில் பரமேஸ்வரனை முறைப்படி அர்ச்சித்துக் குருவை ஸ்மரித்து சுத்தமான வீட்டுக்குச் சென்று பிச்சை எடுத்துக் கிடைத்ததை உண்பானாக!

12. தகன கனன விதி

வாமதேவரே! க்ஷவர ஸ்நான விதிகளை முறைப்படி கூறினேன் இன்னும் கேட்க வேண்டியது இருப்பின் கேட்டறிந்து கொள்வாயாக! என்று சுப்பிரமணியர் கேட்டார். உடனே வாமதேவர், முக்தர்களாகிய சந்நியாசிகளைத் தகனஞ் செய்ய வேண்டும் என்றும் அவர்களைச் சமாதிவைக்க வேண்டும் என்றும் அவர்களிலும் முக்தர்களாய்ப் பிரமத்தை உபாசித்து சர்வாத்மக சொரூபனான பரமேசனை சிவோஹம் பாவனை செய்யும் ஞானிகளாகி, உபாசனாக்கிரமத்தால் தேகமாகிய கூட்டை விட்டு, முக்தியடைவோர்களது தேகத்தைக் கனனம் செய்யுங் கிரமத்தையும் அவரவருடையும் புண்யலோகப் பிராப்தி விசேஷங்களையும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்று கேட்டார். முருகப் பெருமானும் அவ்வாறே விளக்கத் துவங்கினார்.

வாமதேவரே! சிவ ரகசியங்களில் மிகவும் முக்கியமான இந்த இரகசியத்தை முன்பு ஜகத் குருவாகவும் என் பிதாவாகவும் பிநாகபாணியாகவும் உள்ளவர் சிவ யோகிகளில் சிறந்தவரான ரிபயோகிக்கு உபதேசித்தார். அவ்வாறே (உனக்குச் சொல்லுகிறேன். இது மற்றவருக்குக் கூறலாகாது சந்நியாஸக் கிரமத்தை அடைந்த புருஷன், இடைவிடாமல் சமாதியில் இருந்து சிவோகம் பாவனையால் தேகத்தைத் திரித்திருப்பின் பரிபூரணனாவான் அவனே தீரன். அவனே சிவசொரூபியாவரன், சந்நியாஸ ஆசிரமத்தை அடைந்தும் சித்த ஸ்வாதீனம் இன்றிச் சமதமாதி குணங்களற்றவனாய், சமாதி கைகூடாதும் இருந்தால் ஞாதுரு, ஞானஞேய விலக்ஷணமாகிய மூன்று பதார்த்தங்களையும் சமாதியையும் குருமுகமாகத் தெரிந்து. யோகாப்பியாசம் செய்து, எப்போதும் பிரணவத்தை ஜெபித்து அத்விதானந்தத்தை அனுபவிக்க வேண்டும். என்றும் அவாவுடனே தேகத்தைத் தியாகஞ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் சதாசிவத்தின் திருவருளால் நந்தியெம்பெருமான் மூலமாக அதிவாஹ்யர் என்னும் அக்கினிக்கு அதிபன் பகற்காலத்திற்கு அதிபன் சுக்கில பக்ஷத்திற்கு அதிபன் உத்தராயணத்திற்கு அதிபன் தேஜஸிற்கு அதிபன் ஆகியஐவர் உத்திராயண காலத்தில் பிராணன் விடுஞ்சமயத்தில் தோன்றி ஜோதிர் மார்க்கமாய்ப் புண்ணியலோகங்களைச் சேர்ப்பார்கள் மேலும் தக்ஷிணாயணத்தில் பிராணன் விடுவோர்களை இருளுக்கு அதிபன் இரவுக்கு அதிபன் கிருஷ்ண பக்ஷத்திற்கு அதிபன் புகைக்கு அதிபன் ஆகிய ஐவர் தூமாதி மார்க்கமாய்ப் புண்ணிய லோகத்தில் சேர்த்து, புண்ணிய முடிவில் மானிடதேகம் எடுக்க அனுப்புவார்கள். முன்னே சொன்ன உத்திராயண அபிமான தேவர்கள் பூலோகத்திலிருந்து ஜீவர்களைத் திவ்வியதேகத்துடன் ஜோதிர்மார்க்கமாய் பரத்திற்பரமாயும் அஞ்ஞானித்திற்கு அதீதமாயும் இருளுக்கு ஒளியாயும் வாசாம கோசரமாயும் உள்ள சதாசிவ பதத்தில் சேர்த்து தாங்கள் அச்சதாசிவத்தைவணங்கி ஒருபுறத்தில் நிற்பார்கள். அங்கு பாதாரவிந்தத்தை அடைந்த ஜீவர்களைச் சர்வலோகேஸ்வரரான சதாசிவர் தம் பூரண கடாட்சத்தால் அனுக்கிரகித்து விரக்தனாக இருந்தால் மகா மந்திரதாத்பரியத்தை உபதேசித்து முக்கண், நான்கு தோள், சந்திரகலை கங்கை முதலியவும் தம் தேஜஸும் கொடுத்து சிவகணத்தில் ஒருவனாக இருக்க அபிஷேகம் செய்வார்.

எங்கும் தடையின்றிச் செல்லத்தக்க விமானமும் கொடுத்து சாரூபபதவியை அடையச் செய்கிறார். இவ்வாறு தன்னிடம் கொணர்ந்தவர்கள் போகத்தில் இச்சையுள்ளவர்களாக இருந்தால். அதை அனுபவிக்க உருத்திர கணிகையர்கள் ஆடல் பாடல் மிருதங்க இசைகள் முழங்கச் சந்தனம் ஆடை ஆபரணம் அமுதகுடங்கள், மனரம்மிய ஆசனம் பொருந்தியகோடி சூரியப் பிரகாசமாய்ச் சந்திரகலையுடன் மற்றும் பலவித லக்ஷணங்கள் பொருந்திய விமானத்தைக் கொடுத்து, விரக்தி வரும்வரையில் போகத்தை அனுபவிக்கச் செய்வார். போக முடிவில் அவர்களுடைய அஞ்ஞானம் ஒழியும்படி சமுசாரமாகிய காட்டை ஒழிக்க, அக்கினி போன்றதான சக்தி மந்திரத்தை உபதேசித்து தம் திருவருளால் சூரியனைப் போலப் பிரகாசிக்கும் தன்மையையும் அஷ்ட மகாசித்திகளையும் முப்பத்தெட்டுக் கலைகளையும் தொண்ணூற்று ஆறு தத்துவங்களையும் பிரமபிரளயத்திலும் அழியாத முக்தியையும் கொடுக்கிறார். இந்தப் பதமே யாவராலும் அடையத்தக்கது எல்லாச்சம்பத்தையும் அளிக்கத்தக்கது (இது முக்திகண்டாபதம் என்னும் பெயருடன் இருப்பதாக வேதாந்திகளால் நிச்சயிக்கப் பெற்றுள்ளது) பிராணனைவிட இச்சையுள்ள சந்நியாஸிகளின் அந்தத்தில் சந்நியாசக் கிரமங்களைச் சந்தேகமின்றி அறிந்த மற்றையச் சந்நியாசிகளும் வேதவேதாங்க சம்பன்னர்களான அந்தணர்களும் சுற்றிலும் இருந்து, பிரணவத்தை ஜெபித்து, உபநிஷத வாக்கியங்களை உபதேசித்து விளங்கச் செய்து பிராணவாயு பிரியும் வரையில் செய்ய வேண்டிய நியமன மேயன்றி, அதற்குப் பிறகு அவர்களுக்குத் தேகத்தைப் பற்றிய சம்பந்தம் ஒன்றுமில்லை. அப்படி அவர்களுக்குத் தங்கள் தேகங்களைத் தகன கனனங்கள் முறைப்படி செய்யாமையால் துர்க்கதி ஒன்றும் அணுசூவதில்லை. ஏனெனில் எல்லாக் கர்மங்களையும் ஒழித்துப் பஞ்சபூதாத்மகமான சரீரத்தை மறந்து இவ்விடத்திலேயே முக்தர்களான சந்நியாசிகள், சரீரம் பிராணவாயுக்களுடன் கூடியிருக்கும் காலத்திலும் அதற்கு உண்டாகும் கஷ்ட சுகங்களையும் வெய்யில் மழைகளையும் சகித்தவர்கள். ஆதலால் பிராணவாயுக்கள் விலகிய பிறகு துர்க்கதி யொன்றும் அடைய மாட்டார்கள்.

அப்படியே அவர்களுக்கு சம்ஸ்காராதிகளைச் செய்யாததால் ஆங்குள்ள அரசர் முதலானோர்க்கு ÷க்ஷமக்குறைவு உண்டாகும். அந்தத்தோஷ நிவாரணத்தின் பொருட்டு ந இரண்யாய என்று தொடங்கி ந ஆமிலித்கேதபிய என்பது வரையிலுள்ள உருத்திரவாக்கியங்களைப் பிரணவத்துடன் கூட்டி ஜெபம்செய்து கொண்டே, தூய்மையான நதிக்கரை முதலியஸ் தானங்களில் பள்ளம் வெட்டி புத்திரர் இருந்தால் அவர்களால் கிரமமாக சம்ஸ்காரத்தை முடிப்பிக்க வேண்டும். அவர்கள் இல்லாவிட்டால் சந்நியாசியின் குலத்தார் யாராயினும் சீடராயினும் அதைமுடிக்கலாம் சந்நியாஸி தங்கிய இடத்திலே அவரைச்சுத்த ஜலத்தில் அபிஷேகித்து திவ்விய புஷ்பங்களைக் கொண்டு உருத்திர மந்திரங்களால் அருசித்து எதிரில் மண்டலம் ஒன்று இயற்றிச்சங்கும் ஸ்தாபித்து பிரணவ உச்சரிப்புடன் அதில் நீர் நிரப்பி கிரமப்படி அதைப் பூஜித்து அத்தீர்த்தத்தால் அபிஷேகித்து மலர்களால் சிரசைபரினோருத்ரஸ்யா என்று சுத்தம் செய்து கவுபீன சூத்திரங்களைக் களைந்து புதிதாகச் சார்த்தி, விபூதியால் விதிப்படி சர்வாங்கத்திலும் உத்தூளனக்கிரமமாகத் திரிபுண்டரந்தரித்து மாலிகைகளால் அலங்கரித்துப் பஞ்சப் பிரமமயமான விமானம் இயற்றி அதை அம்மந்திரத்தால் பூஜித்து மலர்களால் அலங்கரித்துத் தேகத்தை அதில் உட்காரவைத்து வாத்தியகோஷம்வேத பாராயணம் உபநிஷதப் படனத்துடன் கிராமவலம் வந்து முன்பு கூறிய பள்ளத்திற்கு கொண்டு கோப வேண்டும். அந்தப் பள்ளம் கிராமத்திற்கு வடபுறம் கீழ்ப்புறங்களிலாகிலும் நதிதீரம், நாட்டபட்ட மரத்தடி தேவாலயத்துக்கு அருகாமையிலும் இருக்கலாம்.

அக்குழியைப்பிரணவஸாபா ஹிருதிகளால் பரிசுத்தம் செய்து வன்னிபத்திரங்களையும் தருப்பைகளையும் வடக்கு நுனியாகப் போட்டு சரீரத்தைக் குழியிலிட்டு அந்தக்குழியைப் பிரணவத்தால் அபிமந்திரித்து பஞ்ச கவுவியங்கொண்டு, பஞ்சப்பிரம மந்திரம் உருத்திர ஸுக்தம் ஜெபித்து சங்கு நீரால் அபிஷேகித்து புஷ்பத்தைச் சிரசிலிட்டு வேத பாராயணத்துடன் யோகத்திலிருப்பது போல உருவங்கற்பித்து தூபதீபங் கொடுத்து, விஷ்ணு ஹவ்யமிதி என்று கூறி வலது கையில் தண்டத்தையும் இடதுகையால் கமண்டலத்தையும் பிரஜாபதேந என்னும் மந்திரபூர்வமாகக் கொடுக்க வேண்டும். அவரது சிரசில் வலது கரத்தை வைத்து பிரசைஞ்ஞானம் என்னும் மந்திரத்தைப்படனம் செய்து கொண்டே தடவி உருத்திர ஸூக்தத்தால் நெற்றியைத் தடவி மீண்டும் அந்தக்கரத்தை சிரசில் இருத்திமானோ மகாந்தம் என்னும் நால்வகை மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே தேங்காயைச் சிரசில் அடித்துக் கபாலந்திறந்த பிறகு குழியை மூடி பஞ்சப் பிரமமந்திரத்தால் அவ்விடத்தைப் பரிசுத்தம் செய்து யோதேவானாம் என்பது முதல் ஸமஹேஸ்வர வரையில் ஜெபித்து சம்சாரரோஹ நிவாரணகாரணராயும் பரப்பிரமமாயும் ஆதியந்த சூனியராயும் மகாதேவராயும் சர்வஞ்ஞராயும் அபராதீனராயும் சர்வாநுக்கிரஹகாரராயும் உள்ள சதாசிவ மூர்த்தத்தை ஜாணளவு பீடத்தில் ஸ்தாபித்து நறுமணமலர், வில்வம், துளசி முதலியவற்றால் அர்ச்சனை செய்து தூபதீபங் கொடுத்து பால் பரிசுத்த அன்னம் நிவேதித்து பக்தியுடன் ஐந்து பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து பிரணவத்தைப் பன்னிரு முறை உச்சரித்துப் பத்துத்திக்குகளும் பிரணவத்தால் அர்க்கியங் கொடுத்து பூஜித்து வேண்டும்.

இவ்வாறே பத்துநாட்கள் செய்வது அவசியம் பதினோராவது நாளில் ஓர் வேதிகை நிர்மாணஞ்செய்து புண்ணிய தீர்த்தத்தைப் புரோக்ஷித்து வடக்கு முகமாக இருந்து கிழக்கு மேற்காகச் சதுரமாக மண்டலம் இயற்றி அதனுள் முக்கோண அறுகோணங்களைக் கிரமமாக ஏற்படுத்தி சங்க பூஜாக்கிரமப்படி பூஜை செய்து. பிராணாயாமஞ் செய்து முன்பு கூறிய ஐந்து தேவதைகளைப் பூஜிக்கப் போவதாகச் சங்கற்பம் செய்து கையில் இருக்கும் தர்ப்பையை வடபுறத்திலிட்டு நல்ல தீர்த்தத்தில் கையை அலம்பி மேற்புறம் துவக்கி ஆறுகோணங்களிலும் புஷ்பங்களை ஓம்ஹ்ரீம் அக்கினிரூபா, அதிவாதிகாம் தேவதாம் ஆவாஹாயாமி என்று விதியாகவே ஐவர்களையும் ஆவாஹனம் செய்யவேண்டும் முத்திரைகளைக் காட்டிப் பூரணாங்கங்களையும் பாவிக்க வேண்டும். அவை பாசம் அங்குசம் அபயம் வரதம் ஏந்தியும் சந்திரகாந்தத்திற்குச் சமமான இரத்தினம், பதுமராகச் சமானமான நககாந்திகளுடன் கூடிய கைகள் கோவைப் போன்ற சிவந்த அதரம், மாலைக்காலம் போலச் சிவந்த வஸ்திரம் செந்தாமரையைப் போன்ற உள்ளங்கை கால் ÷ஷாடசகலைகளுடன் கூடிய சந்திரனைப் போன்ற முக மண்டலம் கருணைக்கடலான மூன்று கண்கள் சந்திரகலை கங்கை தரித்த ஜடை மாணிக்கமகுடம் வஜ்ரகுண்டலம் கண்ணாடி போன்ற தாடை உன்னதமான ஸ்தன மண்டலம் ஹாரகேயூர கடக ஓட்டியாணங்களால் அலங்கரித்த அவயவங்கள் சிறுத்த இடை மாணிக்கத் தண்டையால் அலங்கரித்த பாதம், மகேசனைப் போல யாவற்றையும் அனுக்கிரகிக்கும் வல்லமை சிவமூர்த்த சொரூபம் சத்தியாத்மக  சொரூபம் சாபாநுக்கிரக சக்தி முதலியன பொருந்தியனவாக இருக்க வேண்டும் இவ்வைந்து தேவர்களுக்கும் சங்கதீர்த்தத்தால் பாதத்தில் பாத்திய ஜலத்தையும் கையில் ஆசமனீய தீர்த்தத்தையும் சிரசில் அர்க்கிய ஜலத்தையும் கொடுத்து, அத்தீர்த்தத்தினாலேயே அபிஷேகித்து, சிகப்புமயமான ஆடைகளாலும் பொன் மயமான மகுடங்களாலும் விலையுயர்ந்த ஆபரணங்களாலும் அலங்கரித்து வாசனையுள்ள செந்நிறச் சந்தன அக்ஷதைகளாலும் பரிமளமுள்ள மலர்களாலும் மூலமந்திர பாராயணத்துடன் அர்ச்சனை செய்ய வேண்டும். பரிமளதூபமும் நெய்த்தீபமும் காண்பித்துத்தேன் கூட்டிய பாயசம் நெய் சர்க்கரையாலாக்கிய பலகார வகைகள் வாழை பலா முதலிய பழங்கள் தனித்தனி நிவேதித்து வேண்டிக் கொள்ள வேண்டும். இவையெல்லாவற்றிற்கும் பிரணவாதி மூலமந்திரத்தையே யுச்சரிக்க வேண்டும் பிறகு தீர்த்தம் ஆசமனீயம் கொடுத்துக் கைகால் அலம்பச் செய்து அர்க்கியம் கொடுத்து தாம்பூலம் தூப தீபங்களால் மகிழவைத்து பிரதக்ஷிணை நமஸ்காராதிகளைச் செய்து கைகூப்பியவனாக லோக மாதாக்களே! என் பூஜையை ஏற்றுச் சிவபதமடைய இச்சை கொண்டிருந்த இந்த சந்நியாஸி அவ்வாறே அதையடைய நீங்கள் சிவ சன்னிதானத்தில் விஞ்ஞாபனம் செய்ய வேண்டும்! என்று பிரார்த்தித்து, அவரவர் தானத்தை அடைய விசர்ஜனம் செய்ய வேண்டும். முன்பு கூறிய வட்டித்துள்ள பலகார பழ அன்னவகைகளைக் கன்னிகைகளுக்காவது பசுக்களுக்காவது ஜலத்திலாவது இடவேண்டும் அவ்விடத்திலேயாவது தான் இருக்கும் கிரகத்திலாவது அடைந்த சந்நியாஸியைக் குறித்து, பார்வண சிரார்த்தம் செய்வது அவசியம் ஒருபோதும் சந்நியாஸிகளாயடைந்தவர்களுக்குச் சிரார்த்தாதிகள் ஒருவருக்கு அதிகமாகச் செய்யக் கூடாது.

வாமதேவரே! இனி பார்வண சிரார்த்த முறையைச் சொல்கிறேன், கேட்பாயாக, கர்த்தாவானவன் முறைப்படி ஸ்நானம்செய்து, பிராணாயாமம் முடித்து ஒரே மனமுடையவனாய்ப் பவுத்திரம் அணிந்த கையுடன் தர்ப்பையை எடுத்து பரலோகம் அடைந்தயதிக்காக பார்வணசிரார்த்தம் செய்யப் போகிறேன் என்று சங்கற்பித்து கையிலுள்ள தர்ப்பையை வடபுறத்தில் எறிந்து, கையலம்பி சிவ பக்தர்களாகவும் வேத வேதாங்க சம்பன்னர்களாகவும் உள்ள நான்கு பிராமணர்களை அழைத்து அப்யங்க ஸ்நானம் பண்ணுவித்து, தான் செய்யும் சிரார்த்தத்திற்குச் சிரார்த்த தேவர்களாக இருந்து அனுக்கிரகம் புரிய வேண்டும் என்று விசுவதேவருக்காக ஒருவரையும் ஆன்ம சொரூபிக்காக ஒருவரையும் அந்தராத்மகருக்காக ஒரு வரையும் பரமாத்மாவிற்காக மற்றவரையும் நியமித்து பாதப் பிரக்ஷõளனஞ் செய்து, நறுமணமலர்களால், அர்ச்சித்து தூப தீபங்கொடுத்துச் சிவசொரூபிகளாகப் பாவித்து திவ்விய போஜனங்களால் திருப்தி செய்வித்து, அவர்கள் சந்நிதானத்தில் கிழக்கு முகமாகத் தருப்பையை இட்டு பிராணாயாமஞ் செய்து சிவரூபியான பதிக்குப் பிண்டதானஞ் செய்கிறேன் என்று சங்கற்பம் பூண்டு கிழே இட்ட தருப்பையை மூன்று மண்டலஞ் செய்து அந்தப் பிராமணர்களுக்குச் சதுர்த்தியாந்தமாகப் பிரணவ பூர்வமாகத் தீர்த்தத்துடன் பிண்டத்தைத் தருப்பாசனத்தில் இட்டு எழுந்து அவர்களையும் எழுப்பி கை கால் அலம்பி ஆசமனீயம் செய்து பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து, தக்ஷிணை கொடுப்பதால் திருப்திப்படுத்தி முறைப்படி விசர்ஜனஞ்செய்து வீட்டிற்கு அனுப்பி, அதே தானத்தில் சந்நியாஸிகளைக் குறித்து உருத்திர பலியைச் செய்யவேண்டும். பன்னிரண்டாம் நாளன்று, விடியற்காலையில் எழுந்து காலைக் கடனை முடித்து, முறைப்படி நீராடி சந்தியா வந்தனம் முதலானவற்றை முடித்துச் சிவ பக்தர்களாகவும் ஜிதேந்திரியர்களாயும் வேதவேதாங்க சம்பன்னர்களாகவும் உள்ள பிராமணர்களைப் பிரார்த்தித்து வரவழைத்து பகற்காலத்தில் எண்ணெயிட்டு ஸ்நானம் செய்வித்து சிவ சன்னிதானத்தில் முன்புரைத்த பஞ்சாவர்ணக் கிரமப்படி பூஜை செய்து மும்முறைப் பிராணாயாமஞ் செய்து,  சிற் சொரூபியான என் குருவிற்குப் பூஜை செய்யப் போகிறேன் என்று சங்கற்பம் செய்து கொண்டு பவுத்திர விரலுடன் பிராமணர்களுக்குப் பாதபூஜை செய்து திரிபுண்டரம் அணிவித்துத் தானும் அவ்வாறே புரிந்துகொண்டு மவுனமாகக் கிழக்கு முகமாக இருத்திச் சதா சிவக்கிரமமாக எட்டு பிராமணர்களை வகித்து மிகுந்த நால்வரைக் குருவாகவும் பரமகுருவாகவும் பராத்பர குருவாகவும் பரமேஷ்டி குருவாகவும் தியானித்து ஸ்தூலமாக இவர்களைச் சாம்பசிவனாகவே பேதம் இல்லாமல் பாவித்துப் பிரணவத்தால் ஒவ்வொரு நாமங்களையும் த்விதீயாந்தமாக ஆவாஹனஞ்செய்து, ஆசன ஆசமனீய, பாத்திய அர்க்கிய வஸ்திர கந்த அக்ஷத புஷ்பங்களால் பிரணவபூர்வமாக நாமங்களைச் சொல்லிச் சதுர்த்தியாந்தமாகப் பூஜிக்க வேண்டும். பிறகு தூபதீபங் கொடுத்து வாழையிலையில் நானாவிதமான பழவகைகளுடன் அறுசுவையுடன் கூடிய அன்னத்தை வட்டித்து விஷ்ணு! இந்த ஹவ்யத்தை இரட்சிக்கக் கடவன் என்று பிரார்த்தனை செய்து, ஆபோசனம் கொடுத்து சதாசிவாதி பன்னிரண்டு தேவர்களையும் தனித் தனியாகக் கூப்பிட்டு ஏ தேவா என்னும் மந்திரத்தை ஜெபித்து அக்ஷதையுடன் கூடியஜலத்தை அப்பன்னிருவர் மத்தியில் தத்தஞ்செய்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, இவர்களுக்கு நான் கொடுத்த தீர்த்தம் அமிர்தமாகட்டும்! என்று கூறிப் போஜனம் செய்யும் போது கணநா நதிவா என்னும் ருக்கை ஆரம்பித்து வேதாதி ருத்திர சமகப் பஞ்சப் பிரமமந்திரங்களை ஜபம் செய்யவேண்டும். அவர்கள் உண்டபிறகு உத்தாரபோஜனம் கொடுத்து கைகால் பரிசுத்தம் செய்வித்து ஆசமனீயம் செய்த பிறகு ஆசனத்தில் அவர்களைத் திருப்திகேட்டு, கர்ப்பூராதிவாசனையோடு கூடிய தாம்பூலத்தைத் தக்ஷிணையுடன் கொடுத்து, பாதுகை, குடை விசிறி, மனை, தண்டங்களைக் கொடுத்து பிரதக்ஷிணை நமஸ்காரங்களைச் செய்து, மகிழச்செய்து அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெறவேண்டும் குரு சொரூபிகளாகவும் சதாசிவ சொரூபிகளாயுமுள்ள பிராமணோத்தமர்களே! எனக்கு எக்காலத்திலும் குருபக்தி தவறாதிருக்க அருள்புரிவீர்கள் என்று வேண்டி ஆசனத்திலிருந்து உபசாரத்துடன் எழுப்பி, வாசற்படி வரையில் பின் தொடர்ந்து சென்று உபசாரஞ் செய்து அனுப்பி அவர்கள் தன்னைத் திரும்பிப் போவாயாக என்று சொன்ன பிறகு, தான் திரும்பித் தன் உறவினர் வாக்கங்களோடும் பிராமணர்களோடும் மீதமான அன்னத்தை உண்டு தன்னோடு உண்ணும் பிராமணர்களின் ஆசியையும் பெற்றுக் கொள்வானாக இந்த முறைப்படி குருவாரதனையைப் பக்தியுடன் செய்பவன் இவ்வுலகத்தில் சர்வ போகங்களையும் அனுபவித்து வாழ்நாள் முடிவில் யோகியர்களுக்கும் துர்லபமான சிவலோகத்தை அடைகிறான் என்று சுப்பிரமணியப் பெருமான் வாமதேவ முனிவருக்குச் சொன்னார்.

பிறகு அவர் வாமதேவனே! இதை நீ சநத்குமார முனிவனுக்கும் வியாசனுக்கும் சொல்லுக! என்று அருள்பாலித்தார், அவ்வாறே வாமதேவர் சநத்குமார முனிவருக்குச் சொல்ல சநத்குமாரர், சுகருக்குச் சொன்னார் வைசம்பாயனர் பைலர் ஜைமினி சமந்து என்ற நால்வர் வியாச முனிவரின் சீடர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், புலகர் கிருது என்ற நால்வர், வாமதேவரின் சீடர்கள், ஸநகர் ஸனந்தனர், ஸநத்சுஜாதர் என்ற நால்வர் ஸநத்குமாரரின் சீடர்கள் இந்த நால்வர்களும், குரு பரமகுரு பரமார்த்த குரு பரமேஷ்டி குருவென்று சர்வலோகப் பிரசித்தராக விளங்குவர், பிரணவார்த்த பிரகாசிகமாயும் அறம் பொருள் இன்பம் வீடு என்றும் நான்கு புருஷார்த்தங்களில் நான்காவதாகிய மோக்ஷ சாம்ராஜ்யத்தைக் கொடுப்பதாயும் கைலாசப் பிரஸ்தரமென்னும் மண்டலமாயும் சிவ பூஜா விதியாயும் சந்நியாஸ ஆசிரமக்கிரமமாயும், சதாசிவப் பிரமத்தை சந்நியாசத்தாலடையும் கிரமமாயும் விளங்கும் விஷயங்களை உனக்குச் சொன்னேன். சர்வய தீந்தரர்களாலும் பூஜிக்கத் தக்கதாயும் வேதவேதாந்தங்களின் சாரமாயும் எல்லோருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கத்தக்கதாயும் உலகிற்கு கீர்த்தியுண்டாகச் செய்வதாயும் மங்களகரமாயும் தகரவித்யா ரகசியமாயும் வேதாந்தங்களின் சித்தாந்தமாகவும் உலக குருவாகிய என் பிதா சிவபெருமானால் சொல்லப்பட்டதாயும் உள்ள இந்த இரகசியத்தை நான் என் தந்தையிடம் கேட்ட படியே உனக்குச் சொன்னேன். இனி இது வாமதேவ மதம் என வழங்குக. இந்த வாமதேவ மதப்படிச் சிவபூஜை செய்பவர்கள் சிவஞானத்தினால் பிறவிகள் தோறும் ஞானிகளாய்ப் பிரம விஷ்ணு ருத்திராதிக் கிரமமாய் மோக்ஷத்தை அடைவார்கள் என்று வாமதேவ முனிவருக்கு உபதேசித்து, முருகப் கடவுள் ஸ்கந்தகிரியிலிருந்து கைலாயச் சிகரத்தை அடைந்தார். அந்தக் காரணத்தால் இந்த நூலின் இப்பகுதி கைலாய ஸம்ஹிதை என்ற பெயரைப் பெற்றது.

13. சூதமுனிவர் விடை பெறுதல்

நைமிசாரணிய வாசிகளே! இவ்வாறு உபதேசம் பெற்ற வாமதேவர், பக்தி முதிர்ச்சியுடன் கைலாயத்தை அடைந்து. பரம பதியைத் தரிசித்து, நமஸ்கரித்து, பலவேத வாக்கியங்களால் துதித்து சிவானுக்கிரகம் அடைந்து வாழ்ந்திருந்தார். ஆகையால் இந்தப் பிரணவ பொருளை நீங்களும் அறிந்து கொண்டு இந்தக் காசி ÷க்ஷத்திரத்தில் வாழ்ந்து விஸ்வநாதரின் திருவடியில் பக்தி செய்து, சிவசாயுஜ்யத்தை அடைவீர்களாக. நானும் என் குருவான வியாஸபகவானிடம் சேவை செய்யப் பதரிகாசிரமம் செல்கிறேன் உங்களைப் போன்ற சாதுக்களுடைய தரிசனம் எப்போதும் எனக்கு உண்டாகும்படி அருள் செய்வீர்களாக. இதுவரை நீங்களும் கேட்ட விஷயங்களைச் சொன்னேன். இது சிவமஹா புராணத்தில் உருத்திரஸஹஸ்ரம் என்றும் சொல்லப்படும் இது மங்களங்களுக்கு எல்லாம் மங்களமாகவும் சதாசிவப் பிரமத்தை அறியத் தக்கதாகவும் பாவங்களையும் ரோகங்களையும் ஒழிக்கத்தக்கதாகவும் இவ்வுலகில் போகத்தையும் பரலோகத்தில் மோட்சத்தையும் கொடுக்கத் தக்கதாகவும் உள்ளது என்று சூதமா முனிவர் கூறினார் இந்த ஸம்ஹிதையைக் கேட்ட முனிவர்கள் மகிழ்ந்து மெய்சிலிர்க்க, சூதமா முனிவரை நோக்கி சுவாமி! அடியவர்களான எங்கள் அஞ்ஞானம் அறவே ஒழிந்தது! என்று கை கூப்பி நின்றார்கள். அப்போது சூதமுனிவர் அவர்களை நோக்கி முனிவர்களே! இதை ஞானமற்றவர்களுக்கும் நாஸ்திகர்களுக்கும் பக்தியற்றவர்களுக்கும் சொல்லக் கூடாது. வேதாந்தத்தின் உச்சியில் விளங்கும் பொருள் சிவபெருமானை என்று உணர்ந்த பெரியோர்களுக்கே இதைச் சொல்லவேண்டும் எனது குருவான வியாஸ முனிவர், அநேக வேதாந்தங்களையும் வேதசாரங்களையும் பதினெண் புராணங்களையும் அநேகமுறை யோசித்து சிந்தித்து இறுதியில் இதுவே சாரமானது என்று எனக்கு உபதேசித்தருளினார். முனிவர்களே! சிவபக்தியற்றவன் இதனைக் கேட்டாலும் பக்தியுடையவனாவான் ஒருமுறைக் குருமுகமாகக் கேட்டவனின் பாவங்கள் ஒழியும் இருமுறை கேட்டவன் சிவபக்தி முதிரப் பெறுவான். நான்கு முறை கேட்டவன் சிவஞானம் அடைவான். ஆகையால் போக மோக்ஷங்களைப் பெற விரும்பியவன் இதை அடிக்கடி கேட்க வேண்டும். ஐந்து முறை கேட்க வேண்டும் என்றே எனது குரு எனக்கு உபதேசித்தார். எந்தப் பலனை நாடி இதனைப் படித்துக் கேட்கிறானோ அதை அவன் அடைவான் என்றார். இவ்விதம் கூறிய சூதமுனிவரை நைமிசாரணிய வாசிகள் ஆடை ஆபரணம் சந்தனம் புஷ்பம் அக்ஷதை முதலியவற்றால் அருச்சித்து பலமுறைகள் நமஸ்கரித்து அன்புள்ள சொற்களால் துதித்து வேத வாக்கியங்களாலும் எப்போதும் இவ்வாறே சிவசரிதங்களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று விடை கொடுத்து அனுப்பினார்கள். இந்தக் கைலாய ஸம்ஹிதையைப் பக்தியுடன் படித்துக் கேட்பவர்கள் அறம், பொருள், இன்பங்களை அனுபவித்து, சிவஞானத்தால் சிவ சாம்ராஜ்யத்தை அடைவார்கள் அவர்கள் பிறவிகள் எடுக்க வேண்டிவந்தாலும் அப்பிறவிகள் தோறும் சிவஞானச் சிவத்தியானமுடையவர்களாகவே இருந்து முடிவில் அழியாப் பதவியை அடைவார்கள்.

கல்யாண சம்ஹிதை முடிந்தது.

 
மேலும் சிவமகா புராணம் »
temple news
காப்பு: ஜகதஹ் பிதாம் சம்பும், ஜகதோ மாதரம் சிவம், தத்புத்ரம்ச கணாதீஸம்,  நக்வைத த்வர்ண யாம் யஹம் -  ... மேலும்
 
temple news
41. அந்தகாசுரன் போராட்டமும் அந்தகேஸ்வர மகிமையும் நைமிசாரண்ய முனிவர்கள் சூத புராணிகரை வணங்கி சிவஞான ... மேலும்
 
temple news
2. தர்ம ஸம்ஹிதை காப்பு: நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ ரோத்தமம், தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத் ... மேலும்
 
temple news
16. சிவலிங்க பூஜையின் பயன் சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நமஸ்கரித்து ஸ்வாமி! சிவபெருமானுடைய ... மேலும்
 
temple news
31. நரகலோக வர்ணனை வியாசரே! பாதாள லோகத்திற்கு மேலே இருக்கும் நரக லோகத்தையும் அதில் பாவிகள்கிடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar