Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவமகா புராணம் ஸநத்குமார ஸம்ஹிதை ... சிவமகா புராணம்  வாயுஸம்ஹிதை-பூர்வ பாகம்(பகுதி-1) சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை-பூர்வ ...
முதல் பக்கம் » சிவமகா புராணம்
சிவமகா புராணம் ஸநத்குமார ஸம்ஹிதை (பகுதி-2)
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மே
2012
04:05

28. பிறை நிலா சூடுதலும் நஞ்சுண்ட கதையும்: பார்வதி தேவி புன்சிரிப்போடு சிவ பெருமானை நோக்கி நாதா! தாங்கள் அடியாளைப் பாதி யுடம்பில் அணிவது போல் பாதி நிலாவை தாங்கள் விரிசடையில் அணிந்திருப்பதும் விஷபானம் செய்ததுமான இவற்றின் காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்! என்று கேட்கவே சிவபெருமான் சொல்லத் துவங்கினார். தேவி ! முன்னம் தக்கன் வேள்விக்கு பிறகு, நீ உடல் நீங்கிய காலத்தில், நான் மகா விரக்தனாய் அனேக வனங்களில் திரிந்து, உன்னையே நினைத்துக் கொண்டு சஞ்சரித்தேன். அப்போது ரமணீயமான வனங்களிலும் நதி தீரங்களிலும் மரங்களின் அடியிலும், தடாகங்களிலும் மலரோடைகளிலும் அவ்விடங்கள் எல்லாம் அக்கினி மயமாகிப் புகைந்து ஜொலித்து எரிந்து போயின. சந்திர சூரியரும் ஒளி மழுங்கினார்கள். யமனும் மழுங்கினான். மூவுலகிலுள்ளவர்களும் என் தேஜஸைத் தாங்க முடியாதவர்களாக இருப்பதை உணர்ந்து தேவர்கள், பிரம்ம தேவனோடு மந்திர மலையருகில் கூடினார்கள். அப்பொழுது இந்திரன் பிரமனை நோக்கி, எங்களுடைய தேகத்தைக் கொளுத்துகிற அக்கினி எங்கிருந்து தோன்றியது? அது எப்படித் தணியும்? இதை யோசித்துச் சொல்லவேண்டும்! என்று கேட்டான். பிரமன் கம்பீரமாக சிவப்பிரபாவத்தை அறிய ஒருவருக்கும் சாத்தியமில்லை. அவரது தேஜஸினாலேயே மூவுலகங்களும் கொளுத்தப்படுகிறது. அந்தத் தேஜஸை அடக்க என்னால் இயலாது. ஆயினும் உலக நன்மையை முன்னிட்டு யோசித்துச் சொல்கிறேன். அதாவது அமிர்தமயமான கிரணங்களையுடைய குளுமையான சந்திரனை சிவபெருமானின் சிரசில் எப்பொழுதும் வசிக்கும்படிச் செய்தால் அவருடைய தேஜஸ் நம்மைக் கொளுத்தாது! என்றார். அதைக் கேட்டதும் இந்திரன் முதலான தேவர்களும் மாமுனிவர்களும் சந்திரனை நோக்கி, உலகிற்கு இதம் உண்டாகும்படிச் சிவபெருமானின் சிரசில் நீ வசிக்க வேண்டும்? என்று கூறிச் சந்திரனை அழைத்துக் கொண்டும், அவனுக்கு முன்னதாகவே பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தையும் கொண்டு சென்று என்னை அடைந்து அமுத கும்பங்களால் என்னை அபிஷேகித்து சந்திரனைத் தரித்துக் கொள்ளும்படி வேண்டினார்கள். நான் சந்திரனின் ஒரு கலையை வாங்கி என் சிரசில் சூடினேன். பிறகு இந்த ஆலகால விஷத்தையும் புசிக்க வேண்டும் என்று தேவர்கள் வேண்டவே அந்த நஞ்சையும் நான் பருகி கண்டத்தில் நிறுத்தினேன். இவற்றால் சந்திரசேகரன் என்றும் நீலகண்டன் என்றும் எனக்குப் பெயர்கள் உண்டாயின. அது முதல் நாள் மனத்திருப்தியடைந்தேன். இந்த சரிதத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் எல்லாப் பாவங்களையும் ஒழித்து காணாபத்தியத்தை அடைவார்கள் என்று சிவபெருமான் கூறியருளினார்.

29. பர்ணாதன் தவமும் திருநீற்றின் பெருமையும்

பார்வதிதேவி, சிவபெருமானை நோக்கி, அனைத்துலக அண்ணலே! நீங்கள் எல்லாப் பாக்கியங்களும் உடையவர். நவநிதிகளுக்கு அதிபனான குபேரன் உம் நண்பர். அப்படியிருந்தும் சந்தனம் முதலான நறுமணப் பொருட்களையும் நவரத்தின பொன்மணிகளையும் விட்டுவிட்டு, திருநீற்றை (விபூதியை) பூசிக் கொண்டு பூதங்களுடன் கூடி, மயானத்தில் கூத்தாடிக் கொண்டும், என்னுடைய தழுவலைவிட விபூதி தாரணத்தில் அதிக விருப்பத்தோடும் இருக்கிறீர்களே! அதன் காரணம் என்ன? அதை எனக்குச் சொல்ல வேண்டும்! என்று கேட்கவே சிவபெருமான் கூறத் துவங்கினார்.

உமையே முன்பு பிருகு வமிசத்தில் பிறந்த ஒருவேதியர் இருந்தார். அவர் தீவிரமான நியமம் கடைப்பிடித்து கிரீஷ்ம காலத்தில் பஞ்சாக்கினி மத்தியிலும் ஹேமந்த காலத்தில் தண்ணீரிலும் வர்ஷா காலத்தில் வானத்தை நோக்கியும் நின்று தவம் புரிவார். பசியெடுத்தால் மட்டும் மாலைப் பொழுதில் சிறிதளவே உட்கொண்டு, மிருகங்கள் பறவைகள் போலத் தம் தேகத்தை மறந்து சஞ்சரிப்பார். அவருடைய தவத்திற்கு இரங்கிய பறவைகள் பரிவோடு சிறப்பான பழவர்க்கங்களையும் உணவுகளையும் அவருக்குக் கொண்டு வந்து கொடுத்து வந்தன. புலி, சிங்கம் முதலிய துஷ்ட மிருகங்களும் அவரிடம் பகையின்றிச் சஞ்சரித்தன. உப்பும் காரமும் சேர்க்காமலேயே அவர் உணவருந்தி வந்தார். சாகபக்ஷணமே சிறப்பாகச் சாப்பிட்டு வந்ததால், பர்ணாதன் என்ற பெயர் பெற்று அவ்வாறு நெடுங்காலம் தவம் இருந்தார். பிறகு சாகபக்ஷணமும் உதிரமாக மதிக்கும் எல்லைவரையில் தவத்தைக் கைக் கொண்டிருப்பேன் என்று நியமித்து இருந்தார். அப்போது ஒருநாள் அவர் தருப்பைக் புற்களைக் கொய்ய, அது அவர் கையில் பட்டு இரத்தம் ஒழுகி ஓடியதால் அவருக்கு ஒருவிதமான திருப்தியுண்டாகித் தன்னை மறந்து கூத்தாடிக் கொண்டிருந்தார். அவருடன் கூடி வாழ்ந்த மிருகங்களும் பறவைகளும் இது என்ன? என்று மயங்கிப் பயந்தன. அப்போது நான், ஒரு பிராமணனைப்போல வடிவமெடுத்து சென்று, நீ ஏன் இப்படிக் குதிக்கிறாய்! விசேஷமாகத் தவஞ் செய்துவிட்டோம் என்ற இறுமாப்பினால் குதிக்கிறாயா? நான்முகப் பிரமன் முதலான தேவர்களும் தவத்தினாலேயே சிறந்திருக்கிறார்கள்! என்று இதுப்போல பலவாறு கூறியும். அவ்வந்தணன் என் சொல்லுக்குச் சிறிதும் செவி கொடுக்க வில்லை. அதற்குமேல், நான் அவன் கையைப் பற்றி, அறுபட்டுத் தொங்கும் அவனது விரலை அகற்ற, அதிலிருந்து பால் ஒழுகிற்று! சிறிதுநேரம் கழித்து அதிலிருந்து திருநீறு (விபூதி) ஒழுகியது! அந்த அற்புதத்தைக் கண்ட வேதியன், என்னைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து, நீ யார் என்று எனக்கு உணர்த்த வேண்டும் என்று வேண்டினான்.

உடனே நான் என் சுய வடிவத்தோடு அவனுக்குக் காட்சியளித்து, அவனுக்குப் பல வரங்கள் கொடுத்து உன் தவத்திற்கு நான் மகிழ்ந்தேன். உன் கையிலிருந்து ஒழுகும் இரத்தம் நீங்க, விபூதியை உண்டாக்கினேன். நீ இனிமேல் மேருவில் வசித்துக் கணாதிபத்தியத்தை அடைவாயாக! என்று வரங்கொடுத்து வந்தேன். பார்வதி! விபூதியிலே எனக்கு விருப்பம் அதிகம். விபூதியே எனக்குச் சந்தனம் போன்றது. அத்தகைய விபூதியை உடலில் அணிந்து கொள்பவன், பிரயாகை, புஷ்கரம், உருத்திரவாசம், துவாரகை, ஹரித்வாரம் பிரபாசம் முதலிய இடங்களில் தீர்த்தஸ்நானம் செய்வதைவிடச் சிறப்பான பலனை அடைவான். பிரமன், விபூதி தாரணத்தினாலேயே படைப்புத் (சிருஷ்டித்) தொழிலைச் செய்கிறான். திருமாலும் எப்போதும் விபூதியைத் தரித்துக் கொண்டுதான் என்னை ஸ்மரிக்கிறார். இந்திரன், அக்கினி, வருணன், யமன், பன்னிரு ஆதித்தர் முதலானவர்கள் விபூதி தாரணத்தாலேயே பலர், தம் பாவங்களை ஒருத்துச் சித்திகளை அடைந்திருக்கிறார்கள். திருநீறு அணிவதினாலேயே உத்தமமான பிறவியை அடைந்து மோக்ஷத்தை அடைந்திருக்கிறார்கள். திருநீறு அணிந்தவர்கள், பிசாசுகள், இராக்ஷசர்கள், யக்ஷர்கள், கிரகங்கள் முதலானோரால் பயப்பட மாட்டார்கள். அதை அணிவோர், நெற்றிக் கண்ணும் மரன் மழுவும் பெற்று என்னைப் போலக் கைலாயத்தில் வசிப்பார்கள். முன்பு பிரமன் விபூதி திராசின் ஒரு தட்டிலும் சுவர்க்கம் முதலான உலகங்களையெல்லாம் இன்னொரு தட்டிலும் வைத்து நிறுத்துப் பார்த்து, விபூதியே சிறந்தது என்று மதித்தான். வாயவியும், வாருணம், ஆதபம், ஆக்னேயம். அவகாஹம் என்ற ஐவகை ஸ்நானங்களில் இது ஆக்னேய ஸ்நானமாகும். கங்கைக்குச் சமமான தீர்த்தமும் வேதத்திற்கு ஒத்த பிரமாணமும், மிருத்யுவுக்கொத்த தண்டகனும் இல்லாதது போலவே விபூதி ஸ்நானத்திற்குச் சமமான தவமில்லை. அசுத்தமாக இருந்தாலும், நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தாலும் வெறி பிடித்திருந்தாலும் விபூதியின் ஸ்பரிசத்தாலேயே புனிதமாவான்; பர்ணாதனை உத்தேசித்து இந்த விபூதியை உண்டாக்கினேன். அதனாலேயே இது எனக்கு அதிக விருப்பமுடையதாக ஆயிற்று. எனக்கு உன்னிடமும் சூரியன் சந்திரன் அக்கினியான என் மூன்று விழிகளிடமுள்ள விருப்பத்தை விட, விபூதியிடமே அதிக விருப்பம் உண்டு! என்றார் சிவபெருமான்.

30. சுடலையில் கூத்தாடும் காரணம்

பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி, சுவாமி! உலகங்கள் அனைத்தும் உருவாக்கும் அகிலாண்டேஸ்வரரான தாங்களே ஆனந்தமாக மாளிகைகளிலும் நந்தவனங்களிலும் வாசம் செய்யாமல் அகோரமான மயானத்தில் வசிப்பது ஏன்? அனேக ஆயிரம் பிணங்களைச் சுடுவதாகவும், எலும்பு, கொழுப்பு, இரத்தம், மாமிசம் முதலியவற்றினின்று துர்நாற்றம் வீசுவதாகவும் பூதம், பிரேதம், பைசாசங்கள் குடியிருப்பதும், காகம், கழுகு, பருந்து முதலிய பறவைகளும் செந்நாய் முதலிய மிருகங்களும் வாசம் செய்வதும் பிரேத மந்திரங்களை உச்சரிக்கும் இடமாயும் உள்ள மயானத்தில், நீர் யானைத் தோலையும் புலித்தோலையும் உடுத்தி பிரம கபாலத்தையே மாலையாகப் பூண்டு எப்போதும் அட்டகாசஞ்செய்து மூவுலகங்களும் நடுங்கச் சிரித்துக் கூத்தாடிக்கொண்டு பித்தம் பிடித்தவரைப் போல வசிப்பது ஏன்? வேதங்களுக்கும் எட்டாத வடிவினரான உமக்கு அந்தச் சுடுகாட்டில் பிரியம் ஏற்படக் காரணம் என்ன? உம்முடைய மயான வாசத்தைக் கருதி, என்மனம் சுழல்கிறது. சர்வ தேவமயமாகவும், சர்வ தேவர்களாலும் பூஜிக்கத் தக்கவராயும் மகா தேவராயும் விளங்கும் உமக்கு இது யுத்தம் இல்லவென்று நினைக்கிறேன். இது எனக்கு ஆச்சரியமும் துக்கமும் ஊட்டுகிறது. அவ்விஷயம் சொல்லக் கூடாத விஷயமாக பரம ரகசியமாக இருந்தாலும் உம் பக்தையும் பிரியையுமான எனக்குத் தாங்கள் உணர்த்தியருள வேண்டும்! என்று கேட்கவே சிவபெருமான் மலர்ந்த முகத்துடன் உலகமாதாவான பார்வதி தேவியை நோக்கிச் சொல்லித் துவங்கினார்.

உமாதேவியே! உலகில் உள்ள உயிரினங்களுக்கெல்லாம் பிரளயமானது நான்கு வகைப்பட்டு நிகழ்கிறது. அவை நித்தியம் நைமித்திகம், பிராகிருதம் ஆத்தியந்தம் என்பனவாம். நித்தியம் என்பது தமக்கு அளவிட்ட காலங்கழிய இருத்தலாகும். நைமித்திகம் சிற்சில காரணங்களால் பலர் குழுமி இருத்தலாகும். பிராகிருதம் பிரமகற்பத்தில் ஒழிதலாகும். ஆத்தியந்தம் என்பது இவ்வாறு அழிந்தழிந்துத் தோன்றும் தேகிகள் யாவும் முக்தியடையும்படிச் சர்வ சங்கார காலத்தில் அண்டாண்ட பிரமாண்டங்களையும் பிரமாதி தேவர்களையும் தானவ யக்ஷ கருடாதிகணங்களையும் எல்லாவற்றையும் அழிக்கத்தக்கதாய் பஞ்சபூதங்களில் ஒன்றால் சங்கரித்து, யாவும் அழியும்படி ஒருவனாக நின்று சங்காரகிருத்தியஞ் செய்வேன். அப்போது நீ ஒருத்தியேயாக என் அருகில் இருப்பதால் அச்சமயத்தில் நான் நடனஞ் செய்யவும், நீ என் நடனத்திற்கு ஏற்ப கைத்தாளம் போடவுமாக இருப்போம். அவ்வாறு அந்தப் பெருந்தேவர்களது உடல்கள் விழுந்துகிடக்கும் மயானம் முழுவதும் சுற்றி நடனம் செய்வதால் எனக்குச் சுடலையாடி என்றதொரு பெயர் வழங்கும். அதுவுமின்றி ஒரு காலத்தில் நான் மயானத்தில் ஆனந்தமான நடனஞ் செய்து கொண்டிருக்கையில் பற்பல பூத வேதாளங்களெல்லாம் தாளம் போட்டுக் கொண்டும் பாடிக் கொண்டுமிருந்தன. அந்தச் சமயத்தில் விஷ்ணு பல தேவர்களுடன் கூடி, அங்கு வந்து என்னைக் கண்டு மகிழ்ந்து, ஐயனே! இவ்வண்ணம் இங்கு நடனஞ்செய்வதும், பூதப் பிரதேசப் பைசாசடாகினி சாகினிகள் பாடவும் தாளம் போடவும் கொக்கரிக்கவும் கூத்தாடவும் இருப்பது மிகச்சிறந்ததுதான். அவ்வாறு செய்யாவிட்டால் இக்கணங்கள் பூவுலகமெங்கும் பரவி பலரையும் துன்புறுத்தும். அவை துன்புறுத்தாதவாறு உமக்குத் தொண்டு செய்வனவாக இருப்பதே உத்தமமான செயலாகும் என்று பலவாறு புகழ்ந்து கூறினார்கள்.

அவர்களில் விஷ்ணு என்னை நோக்கி, சிவமூர்த்தியே! சகல பாவங்களையும் ஓடும்படிச் செய்வதாலும் எல்லோரையும் பயப்படுத்துகிற பூதப் பிரேத பைசாசாதிகளையும் அழச்செய்வதாலும் உருத்திரன் என்றும் சங்கரன் என்றும் ஹரன் என்றும், கால ரூபியாக இருந்து உலக காரியங்களை யெல்லாம் நடத்துவதால் காலன் என்றும், பிரளய காலத்தில் சகல லோகங்களையும் வயிற்றினுள் அடக்கும் வல்லமையால் ஸர்வன் என்றும், உற்பத்தி காலத்தில் காமபிஜத்தைக் கொண்டே முக்குணங்களையும் லோகங்களையும் படைத்ததால் பவன் என்றும், உக்கிரமான யாகங்களாலும் திருப்தியடைவதால் உக்கிரன் என்றும் பூமி முழுவதற்கும் உற்பத்திக் கர்த்தாவும் சர்வதேவ பூஜ்யனாயும் மகத்திற்கு மகத்தாயும் விளங்குவதால் மஹாதேவன் என்றும் விளங்குகிற விமலரே! ஆக்கல், காத்தல், அழித்தல் என்பனவற்றை இயற்றுவிக்கும் ஆற்றலுடைய மகாதேவரே! நீர் இவ்வண்ணம் மயானத்திலேயே எப்பொழுதும் கூத்தாடிக் கொண்டிருக்க வேண்டும். என்று பலவாறு பிரார்த்தித்தார். அவ்விஷ்ணுவும் அவருடன் வந்து தேவர்களும் செய்த வேண்டுகோளுக்கு இணங்கி, மயானத்தையே எனக்கு வசிக்கும் இடமாகக் கொண்டேன்.

மேலே சொன்ன பெயர்களில் எனக்கு விருப்பம் அதிகமாக உண்டு. அப்பெயர்களைக் கொண்டு, என்னைப் பூஜித்தவர்கள் தேவர்களால் பூஜிக்கப்பட்டு உயர்பதவியை அடைவார்கள். இப் பெயர்களை மனப்பாடம் செய்தவர்கள் உயர் பதவியை அடைவார்கள். நானே காலரூபி. நீயே காளராத்திரி என் ரூபத்தை நீயே அறிவாய். உன் சொரூபத்தை நான் அறிவேன். நீயே நாராயணனாகவும் விளங்குகிறாய். ஆகையால் நீயும் நாராயணனும் சமமானவர்கள். நீயும் நானும் சமமானவர்கள். யாவும் நானேயாக விளங்குகிறேன். அநேக புண்ணிய ஸ்தலங்களைவிட எனக்கு மயானத்தில் விருப்பம் அதிகம். புண்ணியஸ்தல, புண்ணிய தீர்த்த பயன்களையெல்லாம் மேற்கூறிய நாமங்களை ஸ்மரித்தவர்களுக்கு நான் தருவேன். இந்தச் சரிதத்தைப் பக்தியோடு வாசித்தவர்கள், சகல பாவங்களும் நீங்கி இஷ்ட போகங்களை அனுபவிப்பார்கள் என்று சிவபெருமான் கூறினார், என்று வியாஸமுனிவருக்கு ஸநத்குமாரமுனிவர் எடுத்துரைத்தார்.

31. அறுபத்தெட்டு திருத்தலங்கள்

வியாஸமுனிவர், ஸநத்குமார முனிவரை நோக்கி மகாத்மாவே! சிவபெருமான் அறுபத்தெட்டு தலங்களில் கோயில் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகையால், அவ்விஷயத்தை விளக்கிக் கூறவேண்டும் என்று கேட்டார். ஸநத்குமார முனிவர் கூறத்தொடங்கினார். முன்னொரு சமயம் சிவபெருமான் கைலைமலையில் திருவோலக்கம் கொண்டு எழுந்தருளியிருக்கும்போது பிரம்ம தேவர் அவரைப் பணிந்து சுவாமி! எவ்வெவ்விடங்களில் எவ்வெவ்பெயர்களுடன் வாழ்கிறீர் என்பதைத் தெரிவிக்க வேண்டும்! என்று கேட்கவே சிவபெருமான் பின்வருமாறு சொன்னார்.

வாரணாசியில் (காசிமா நகரில்) மஹாதேவனும், பிரயாகையில் மகேஸ்வரனும் நைமிசவனத்தில் தேவதேவனும் கயையில் பிதா மகனும், குரு÷க்ஷத்திரத்தில் காலேசனும் பிரபாசத்தில் சசி பூஷணேசனும், புஷ்கரத்தில் கந்தேசனும் விமலேஸ்வரத்தில் விசுவேசனும், அட்டகாசத்தில் மஹா நாதேசனும், மருகோடத்தில் மகோற்கடேசனும், சங்குகர்ணத்தில் மகாதேஜசனும், கோகர்ணத்தில் மஹாபலேசனும், உருத்திர கோடியில் மஹாயோகிசனும், ஸ்தலேசத்தில் மகாலிங்கேசனும் அவந்தியில் மஹாகாளேசனும், மத்திய தேசத்தில் ஸர்வேசனும், கேதாரத்தில் ஈசரனேசனும், இமாசலத்தில் உருத்திரேசனும். சுவர்ணாக்ஷத்தில் காக்ஷராஷசனும் விருக்ஷத்தில் இடபத்துவஜேசனும், பைரவத்தில் பைரவேசனும், பத்திரபதத்தில் பத்திரேசனும், கனகலையில் உக்கிரேசனும் பத்திரகர்ணத்தில் இருதபேசனும் தேவதாருவனத்தில் பின்னேசனும் கபிஜங்கலத்தில் கண்டேசனும், சுரண்டத்தில் ஊர்த்வகேதுவும் மங்களாண்டத்தில் கபர்த்தீசனும் கிருத்திவாசத்தில் வரதேசனும், ஆமிராடிகத்தில் சூக்குமேசனும், காளஞ்சுரத்தில் நீல கண்டேசனும், மண்டலேசுரத்தில் ஸ்ரீகண்டேசனும், சித்தேசத்தில் தியானசித்தேசனும், உத்தரேசத்தில் காயத்திரியேசனும், காஷ்மீரத்தில் விஜயேசனும், சமருகேசத்தில் ஜயேசனும், யமசசியாங்கத்தில் தாணேசனும் கரவீரகத்தில் சூபிலேசனும், காயாவதாரத்தில் விலகுடீசனும், தேவிகாவில் உமாபதியும் ஹரிச்சந்தீரத்தில் ஈஸ்வரனும், புரகந்திரத்தில் சங்கரனும், காலேசுவரத்தில் ஜடேசனும், குக்குடேசத்தில் சவுமியேஎனும் சந்தியா÷க்ஷத்திரத்தில் தாமிரேசனும், எவதிரியில் திரிலோசனேசனும், ஜலேசத்தில் திரிசூலியும் ஸ்ரீசைலத்தில் திரிபுராந்தகேசனும், லேபனத்தில் பசுபதியும் அங்கேசத்தில் தீப்தேசனும், கங்காசாகர சங்கமத்தில் அமருகேசனும், அமரகண்டகத்தில் ஓங்காரேசனும், சப்தகோதாவரியில் பீமேசனும் பாதாளத்தில் ஆடகேசனும், கர்ணிகாரத்தில் கணாத்தியக்ஷனும், கைலாசத்தில் திரிபுராந்தகேசனும் ஏமகூடத்தில் விரூபாக்ஷனும், கந்தமாதனத்தில் பூர்புவஸ்ஸுவஸ்கேசனும், தீடிசத்தில் அனலேசனும் த்லேசத்தில் ஜ்வலலிங்கேசனும், பூதேசத்தில் கணத்தியக்ஷனும் கிராதத்தில் கைரோதேனும் விந்தகிரியில் அசுரநாசஞ் செய்ய வராகேசனும், கங்காஹ்ருதத்தில் ஹிமஸ்தானேசனும் வடவாமுகத்தில் மானவேசனும், தீர்த்தத்தில் சிதுரஷ்டி கோடீசனும் இஷ்டகா பதத்தில் விசிஷ்டேசனும், குசுமபுரத்தில் பிரகாகேசனும், இலங்கையில் அலகேசனும் என அறுபத்தெட்டு திருநாமங்களுடன் விளங்குகிறேன். இந்தத் திருநாமங்கள் அறுபத்தெட்டையும் பக்தியுடன் ஒரே மனதாகப் பாராயணம் செய்தவர்கள் பத்து அஸ்வமேதயாகம் செய்த பயனை அடைவார்கள் என்று சிவபெருமான் கூறியுள்ளார். இதை உமக்கு உரைத்தேன். அன்றியும் அவ்விறைவருடைய மகிமையை முன்பு சிவபெருமானே, மந்திரகிரியில் நந்திதேவருக்குக் கூறிய விதமாகச் சொல்லுகிறேன், கேளும்.

சிவபெருமான், உலகனைத்திலும் அக்கினி போலப் பிரகாசித்தும் காற்று போலச் சஞ்சரித்தும் உயர்ந்த மலைகளில் வசிக்கிறார். அத்தகைய மலைகள் வலம் வந்தவர்கள் (பிரதட்சணம் செய்தவர்கள்) நூறு கோதானம் செய்த பயனை அடைவார்கள். பசுக்களிடமும் சந்திரனிடமும் சந்தோஷமும் வருணனிடம் சீதளத்தன்மையும், பூமியில் பரிமளமும் மத்தியான்னத்தில் கரகமும், மிருத்யுவுக்கு காலமும் நவக்கிரகங்களையுஞ் சுழற்றத் துருவனும் வேதங்களில் சந்தஸ்ஸும் கண் முதலான இந்திரியங்களில் கிரகிக்கும் சக்தியும் உலகங்களுக்கு விருத்தியும் யுத்தத்தில் வெற்றியுமாக அவர் விளங்குவார். அவரே சிருஷ்டி ஸ்திதி. ஸம்ஹாரங்களுக்குக் கர்த்தர். அவரே தர்மங்களை நிலை நிறுத்துகிறவர். தாரகன் முதலான தைத்தியர்களை நாசஞ்செய்தவர். எல்லாப் பூதங்களுக்கும் பிறப்பிடம். ஆத்மஸ்வரூபி இதிகாச புராணங்களின் உட்பொருள் வடிவம் மலர்மரங்களில் வாசனையாகவும் மங்கையரிடம் உருவ இளமையாகவும் இரத்தினங்களில் காந்தியுமாக விளங்குபவர். சிவபிரான் இல்லாத இடமே இல்லை. அவ்வாறு அறிந்தவன், எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடி, உபவாசம் இருந்த பலனை அடைந்து, காமக்குரோதாதிகளை ஒழிப்பான். இந்த மகிமையை வாசித்தவர்கள். பிரமசாரியம் அனுஷ்டித்த பலனை அடைவார்கள். சிவபெருமானைத் தியான யோகத்தினால் அறிய வேண்டும். அஸ்வமேதாதி யாகங்கள் பற்பல செய்வதைவிட தியானயோகம் செய்வதே சிறந்தது. தியானயோகி ஒருவனுக்கு அன்னங்கொடுத்தால் பலகோடி வேதியருக்கு அன்னம் அளித்த பலன் விளையும். ஆயிரம் கிரகஸ்தர்கள் ஆயிரம் வானப்பிரஸ்தர்கள், நூறுபிரமச்சாரிகள் இவர்களைவிட கொடுத்த அன்னம் யாகத்திலிட்ட அவிசுக்கு ஒப்பாகும். தியான யோகியைக் கோபிக்கச் செய்கிறவன் நாசமாவான் யோகியை மகிழ்வித்தவனின் குலம்பெருகி வளரும்! என்று ஸனத்குமாரமுனிவர் கூறினார்.

32. பிரணவ உச்சாரண பலன்

ஸனத்குமார முனிவர், வியாச முனிவரை நோக்கி தொடர்ந்து கூறலானார் : வியாசரே! நான் நந்திதேவரிடம் கேள்விப்பட்ட விதமாகச் சொல்லுகிறேன். உருத்திரமூர்த்தியின் வலதுபுறத்தில் பிரமதேவரும் இடப்புறத்தில் விஷ்ணுமூர்த்தியும் விளங்குவர். இவர்கள் மூவரும் ஒரே சுரூபம் உள்ளவர்கள், பரமசிவத்தை காலை வேளையில் பிரமனாகவும் பகலில் விஷ்ணுவாகவும் மாலையில் உருத்திரனாகவும் தியானிக்க வேண்டும். ஒரு மூர்த்தியே முத்தொழில் காரணமாக மும்மூர்த்திகளாக நின்று நடத்துவர். அகாரம் விஷ்ணுவும், உகாரம் பிரமனும், மகாரம் உருத்திரனும் ஆவார் என்று தியான யோகிகள் அறிய வேண்டும். அகாரத்தை இதயத்தில் இருத்தி உகாரத்துடன் கூட்டி, மிருதுவாக மகாரத்தையும் சேர்த்து, பிந்துநாதங்களைப் பொருத்த பிரணவமாகின்றது. ஏகாக்ஷரம் பிஹ்மா என்று சுருதிகள் கூறும். அதை உணர்ந்தவனுக்கு பிறவிகள் இல்லாமல் ஒழியும், ஓங்கார ஸ்வரூபத்தை அறிந்தவன் மும்மூர்த்திகளை அறிந்தவன், மாயையின் சிரசிலிருந்து உண்டான ஓங்காரத்தையே அப்யசிக்க வேண்டும். அப்படி அப்யசித்தவனுக்கு மனோதிடம் உண்டாகும். அங்குஷ்ட மாத்திரையாகவுள்ள சிவபெருமானை இதயத்தில் தியானித்து புருவமத்தியில் சாங்கியயோக முறைப்படி சந்திரசமான காந்தியும் அழிவின்மையும் அவ்வயயமும் சூஷ்மமும் அநாதியுமாக விளங்கும் தேஜஸைத் தரிசிக்க வேண்டும். ஓம் என பிரணவத்தை உச்சரிக்காமல் மனதினாலேயே தியானிக்க வேண்டும். அரை மாத்திரை. ஒரு மாத்திரை, இரு மாத்திரை, மும்மாத்திரை காலங்களாக விருத்தி செய்து, அதை தியானிக்க வேண்டும். திரிமாத்திரா காலமாகத் தியானிக்க உணர்ந்தவன் தத்துவத்தை அறிந்தவனாவான்.

அதை உச்சரிக்கும்போது, மனம் விஷய வாதனைகளில் செல்லாதபடி அடங்கிப் பிராணாயாமத்தினின்று மானசீகமாக உச்சரிக்க வேண்டும். அவ்வாறு ஒரு நிமிஷமேனும் செய்வதே யோகமாகும். அவ்வாறு யோகஞ் செய்பவன், ஐந்து அவயவங்களடக்கிய ஆமையைப் போலும் காற்றில்லாத இடத்தில் எரியும் தீபத்தைப் போலும் மகிழ்ச்சியாக விளங்குவான். தைலதாரை யொழுகும்போது, பின்னம் இல்லாது ஒழுகுவது போலவும், நித்திரை செய்யும்போது, சுவாசம் விடுவதும் தெரியாதது போலவும்; இடைவிடாது யோகத்திலேயே லயமுற்று இருக்க வேண்டும். அசைவற்று இருந்து பிராணாயாமஞ் செய்பவனுக்கு மனம் நிலைத்து நிற்கும். மனம் நிலைப்படுவதால் வஸ்து பிரதிபலிக்கும். அதுவே அக்ஷர ஸ்வரூபி. அதுவே பிரமவிஷ்ணு ருத்திராதிக்யம் என்று அறிக என்று நந்திதேவர் எனக்குக் கூற; அவரை நான் தழுவிப் பலமுறை பிரதட்சிணை நமஸ்காரங்களைச் செய்து ஆனந்தமயமாக விளங்கினேன் என்று ஸனத்குமார முனிவர் சொன்னார்.

33. பிராணாயாம விதிமுறை

நற்குணச் செல்வரே! தியான யோக கருமத்தை விவரமாகக் கேட்க விரும்புகிறேன் என்று வியாசர் வேண்டினார். ஸனத்குமார முனிவர் சொல்லத் துவங்கினார். வியாசரே! முன்னாளில் நந்திதேவருக்குச் சிவபெருமான் கூறிய வண்ணம் நான் உமக்கு சொல்கிறேன். பிராணாயாமம் தியானம், பிரத்தியாகாரம், தாரணை, யோகம் என ஐந்து விதமாகச் சொல்லப்படுகின்றன. பிராணாயாமம் என்பது, பிராணவாயுக்களை இழுத்து ஓரிடத்தில் நிறுத்துவதாகும். அது உத்தமம், மத்திமம், அதமம் என்று மூன்று வகையாகும். அம்மூன்றினுள்ளும் மந்தா மத்திம உத்தமம் என மும்மூவகையாகும். அவற்றுள் பிராணாதி வாயுக்களைப் பன்னிரண்டு மாத்திராகாலம் நிரோதம் செய்கிறதென்றும் அதற்கு உத்காதம் என்றும் அதுவே மந்தம் என்றும் யோக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மத்திமம் இருபத்து நான்கு மாத்திராகாலம், பிராணன் முதலிய வாயுகளை ஓரிடத்தில் நிறுத்தவேண்டும். முப்பத்தாறு மாத்திராகாலம் பிராணன் முதலிய வாயுக்களை நிறுத்துதல் திருருக்காதம் என்றும், உத்தமப் பிராணாயாமம் என்றும் கூறப்படும். இவ்விதமான பிராணாயாமங்களை அநேக முறை செய்வது யோகங்களின் பேதமாகச் சொல்லப்படும். இதைச் சிறிது காலம் பயின்று பழகிக் கொண்டு வரவேண்டும். இந்த விஷயத்தில் எவனுக்கு அதிகமான பழக்கம் இருக்கிறதோ அவனுக்குச் சிங்கங்கள், யானைகள், புலிகள், மான்கள், பறவைகள், முதலைகள் முதலிய ஜந்துக்கள் அடங்கி வசியமாகும்! இவ்வாறு சகல ஜந்துக்களையும் சுவாதினப்படுத்திக் கொள்வதே வசித்துவம் என்று சொல்லுவார்கள். இவ்விதமான பிராணாயாமத்தை ஒருமுறை செய்தாலும் பிறவியெடுத்தது முதல் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும். அக்கினிஷ்டோமம் முதலிய யாகங்களினாலும் கங்காதி புண்ணிய தீர்த்த ஸ்நானங்களாலும் ஏகாதசி விரதங்களாலும், தபோ நியமங்களாலும், ஸர்வ தானங்களாலுங்கூட இந்தப் பிராணாயாமங்களை அனுஷ்டித்தவர்கள் அடையும் பலனை அடையமுடியாது. பிராணாயாமத்தினால் பாவங்களை ஒழித்து தாரணையினால் மனதை நிறுத்தி பிரத்தியாகாரத்தினால் இந்திரியங்களை அடக்கி; தியானத்தினால் எப்போதும் அழிவில்லாததாய். நாசமற்றதாய் பரிபூரணமாய், தேஜோமயமாய் விளங்கும் பரப்பிரம்மத்தை தைலதாரையைப் போல அவச்சின்னமாகத் தியானிப்பது யோகம் என்று, சொல்லுவார்கள். இவ்விதமாய் யோகம் செய்வதற்குப் பலவகை ஆசனங்கள் இருக்கின்றன.

அவற்றுள் ஸ்வஸ்திகம், பத்மாசனம், பத்திராசனம், வீராசனம் முதலியனவாகும். இரண்டு முழங்கால்களையும் சமமாகச் செய்து, இரண்டு பாதங்களையும் தொடைக்குக் கீழாகச் செய்து, நேராக உட்கார்ந்து மனது விஷயங்களில் நுழையாமல் நிறுத்தித் தியானிப்பவன் பாவங்களை ஒழிப்பான். பத்திராசனமிட்டு யோகத்தை அப்யசிப்பவன் விஷரோகத்தை ஒழிப்பான். இவ்விதமான ஆசனபேதங்களை முறைப்படி அறிந்து இந்திரியங்களை விஷயங்களில் செல்லவொட்டாமல் நிறுத்திக் கவலைப்போல அசையாமல், நின்று தமோ குணத்தை ரஜோகுணத்தால் மறைத்து ரஜோகுணத்தைச் சத்வ குணத்தால் மறைத்து நாவைக் கூட அசைக்காமல் நிர்ச்சலமாய் முன்கூறிய பிராணாயாமங்களைச் செய்வதாகிய செயலே, நான்காவதான மோக்ஷ புருஷார்த்தத்திற்குச் சாதகமாகும். இந்திரியங்களை விஷயங்களில் பிரவேசிக்காமல் தடுத்தல் பிரத்தியாகாரமாம். பன்னிரண்டு பிராணாயாமங்கள் கூடிய காலம் தாரணை அந்தத் தாரணையையே சிறிது சிறிதாக உயர்த்திப் பழகியவன் வேதவித்தாகிப் பரமாத்மாவைத் தரிசித்து பிறவியை ஒழிப்பான். இவ்விதமாகத் தாரணையைச் சிறப்பாகப் பழகிய பிறகு அதை மெல்ல விடுதலே பிரத்தியாகாரமாம். பிராண வாயுவைத் தரித்தலினால் பிராணாயாமம் என்றும் அந்த வாயுவை ஓர் இடத்தில் தரித்தலால் தாரணையென்றும், விஷயங்களை நிக்கிரகித்தல் பிரத்தியாகாரம் என்று சொல்லப்படும். இம்மூன்றும் சேர்ந்தவிடத்தில், யோக சித்தியுண்டாகும். அந்த யோகசித்தியால், ஆத்மாவைச் சகலத்தில் சந்திரனைப் போலப் பார்ப்பான் அப்படிப் பார்த்தால் மோக்ஷம் உண்டாகும். இந்தத் தத்துவ லக்ஷணங்களை உத்தமனுக்கே உபதேசிக்க வேண்டும்.

34. தாரணை

முன்பு ஒரு காலத்தில் திருக்கைலைமலையில் சுயம்புவான சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் போது, சிவபக்தர்களில் முதல்வராகக் கருததக்க துர்வாச முனிவர் அவர் முன்பு நின்று கைகூப்பி, பகவானே! உலகத்தில் பாவஞ்செய்த நான்கு வருணத்தவர்கள், இறைச்சியுண்பவர்கள், மிலேச்சர்கள், சண்டாளர்கள், பசுபட்சிகளை இம்சிக்கிறவர்கள், செய் நன்றி மறந்தவர்கள் காம விருப்பம் மறவாதவர்கள், வேத நிந்தை செய்தவர்கள் கன்னியரைக் கெடுத்தவர்கள், நபும்சர்கள், தாய் தந்தையரை நிந்தித்தவர்கள், அறநெறி அரசனைக் கொன்றவர்கள், பிறர் பொருளை அபகரித்தவர்கள், க்ஷத்திரியனாகப் பிறந்து முதுகுகாட்டி ஓடியவர்கள் முதலிய பாவிகள், அப்பாவங்களிலிருந்தும் எவ்வாறு விடுபடுவார்கள் என்பதைப் பற்றி அடியேனுக்கு நன்கு விளங்குமாறு திருவாய் மலர்ந்தருள வேண்டும் என்று கேட்டு கைகட்டி நின்றார். சிவ பெருமான் சொல்லத் துவங்கினார்.

துர்வாச முனிவனே! எத்தகைய மகா பாவியானாலும் என்னைப் பக்தியோடு தியானஞ் செய்தால், பாம்பானது தோலையுரித்து விளங்குவது போல, அந்தப் பாவங்களிலிருந்து விடுபடுவான். என்னை உள்ளத்துள் பொருந்தத் தரித்தலே, தாரணை என்ற யோகமாம். அதனாலேயே சந்நியாசத்துவம் சித்திக்கும். தியானமில்லாத சந்நியாசத்துவம் பயனில்லை. ஆகையால் என்னைத் தரிசிப்பதிலும் என்னைத் தியானிப்பதிலுமே மனவாக்குக் காயங்களைச் செலுத்தியவன், மோட்சத்தை அடைவான் அல்லது இந்திரன், சந்திரன், குபேரன், விஷ்ணு, பிரமன் முதலிய தேவர் உலகங்களை அடைந்து கிரமமாக மோட்சத்தையடைவான்.

35. பாஹ்யாந்தர யோகங்கள்

துர்வாஸ முனிவர், சிவபெருமானை நோக்கி, சிவபெருமானே! தியானஞ்செய்யும் கிரமம் எப்படி என்பதை விளங்கக் கூற வேண்டும்! என்று கேட்கவே சிவபெருமான் சொல்லலானார். துர்வாச முனிவரே! என்னைத் தியானிக்க விருப்பமுடையவன், நல்ல குருவைத்தேடி, அவரைப் பணிந்து அவரிடம் மந்திர உபதேசம் பெற்று, அந்த ஓங்கார மந்திரத்தைத் தியானம் செய்ய வேண்டும். அவ்வோங்காரத்தை மண்டலக் கிரமமாக என்னை அர்ச்சித்துத் தன் இதயத்தாமரையில் ஆவாகனஞ் செய்து, பிராணாதிவாயுக்களை அடக்கித் தியானிக்க வேண்டும். அவ்வாறு செய்தவனை யோகவித்தாவான்: யோகாப்பியாசஞ் செய்வதில் கோமண்டலம், பத்மமண்டலம், சுவஸ்திகமண்டலம், ருத்திரபீடம், வஜ்ஜிரகண்டம், வஜ்ரோன்பதம் என்று பலவகை யோகநூல்கள் கூறுகின்றன. அம்முறைகளில் ஒன்றைத் தெரிந்து கொண்டு அதைப் பழகவேண்டும். அப்படி யோகஞ்செய்தவன் ஆகாரத்தை ஒழித்தும், கோபத்தை அடக்கியும் ஏகாந்தமான இடத்தில் சாத்திரப்படித் தியானஞ் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரே மனதாக தியானித்தால், உலக உற்பத்தி நாசங்களையும் சீதோஷ்ண துக்கங்களையும் இத்தகையது என்று உணர்ந்து யாவும் ஈஸ்வரனிடத்திலிருந்தே தோன்றுகின்றன என்கிற ஞானத்தை அடைவான். இந்த உடல் அநித்யம் என்றும் ஏழுவகை தாதுகள், நாடிகள், நவத்துவாரங்கள், மலமூத்திரங்கள், துர்க்கந்தஜலங்கள், வியாதிகள், சோகம், அகங்காரம் முதலியவற்றுடன் கூடியதென்று உணர்ந்து யாவும் நான் என்று உணர்ந்தவன் யோகியாவான். இந்த யோக மார்க்கம், பாஹ்யம், ஆப்பியந்தம் என்று இருவகைப்படும். இதில் இதுவரை கூறியவை ஆப்பியந்திரயோகமாகும். அபிமுக்தமாகிய காசித்தலம் ஈஸ்வர வாசம் என்றும் அங்குள்ளவர்கள் உருத்திரகணங்கள் என்றும் தெரிந்து, அங்கு சென்று வாழ்ந்து உயிர் நீத்தல் பாஹ்யயோகம் எனப்படும். தோத்திரம் தொக்கு, லட்சு, சிங்குவை ஆக்கிராணம், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இவற்றின் தன்மைகளை அறிந்து, மனதைச் சுவாதீனப்படுத்தி யோகாப்பியாசஞ் செய்வதே உத்தமம். அது பல பிறவிகளில் சாத்தியப்படுமாகையால், பாஹ்ய யோகத்தைச் செய்து: அப்யாசித்து; உயிர்நீத்தால் அந்தர்யோகம் விரைவில் சித்தியாகும் என்று சிவபெருமான் துர்வாச முனிவருக்குச் சொன்னார்.

36. இதய சோம மண்டலம் 

சிவபெருமானை நோக்கித் துர்வாசமுனிவர் சுவாமி! சர்வதேவநாயகரே! சோம மண்டலமத்தியில் ஈஸ்வரனைத் தியானிக்க வேண்டும் என்று தாங்கள் கூறியதை விவரமாக விளக்கியருள வேண்டும் என்று கேட்கவே சிவபெருமான் சொல்லத் துவங்கினார்.

பிராணன்; அபானன்; சமானன்; உதானன்; வியானன்; நாகன்; கர்மன்; கிருகரன்; தேவதத்தன் தனஞ்சயன் என்று பத்து வாயுக்கள் உள்ளன. அவற்றில், இதயத்தில் பிராணனும், உச்சர்க ஸ்தலத்தில் அபானனும் கந்தரசக்குமிச்சந்தில் சமானனும் நாபியில் உதானனும்; உடல் முழுவதிலும் வியானனும் வாக்குத் துவாரத்தில் நாகனும்; உரோமம் புளகித்து இமைப்பதில் கர்மனும் தும்மல் சினம்; வெம்மைகளில் கிருகரனும்; ஓட்டம்; இளைப்பு, வியர்ப்புகளில் தேவதத்தனும், உயிர் நீங்கினும் போகாமல் உடலை வீங்கச்செய்து தலையைக் கிழித்துச் செல்வது தனஞ்சயனுமாகும். உடலை முழுவதும் வியாபித்திருக்கிற பத்துவாயுக்களை அவ்வாறு சஞ்சரிக்கவொட்டாமல்; யோக சாதகத்தில் நிறுத்தும்வரையில் தன்னுள்ளேயுள்ள சந்திரமண்டலம் விளங்கமாட்டாது. நாபியின் மத்தியில் அனேக ஜ்வாலாமாலிகைகளோடும் கோடி சூரியப் பிரகாசமாகவும் அதிக அழகாகவும் விளங்கும். சந்திரமண்டல மத்தியில் எலும்பு; நரம்பு மாமிசம் துக்கம் முதலியன இல்லாமல்; சூரியதேஜசுக்குச் சமமான தேஜசோடும் விளங்கும் அவரே ஈஸ்வரன்; பவன்; பரமாத்மர்; சுத்த ஸ்படிக நிறமுடையவன். கண்ணால் காணமுடியாதவன்; உலகனைத்தும் அவரிடத்திலேயே வியாபித்திருக்கிறது. விளையாட்டாகப் பிரபஞ்ச சிருஷ்டியைச் செய்பவர் அவரே! உலகமெங்கும் அவரே வியாபித்திருக்கிறார். ஒவ்வொரு பொருளையும் பயிற்சினாலேயே அறிய வேண்டியிருப்பதால்; தன் உள்ளே உள்ள பொருளைக் காண்பதற்கு நெடுநாள் முயற்சி செய்ய வேண்டும். யோக சாதனத்தினாலேயே வஸ்துவை உணர முடியும். பிராணாதி வாயுக்களுக்கு ஆதாரமாக எழுபத்தீராயிரம் நாடிகள்; தேகம் எங்கும் பொருந்தியுள்ளன. இந்த நாடிக்கிரமத்தை அறிந்து, நாபி மத்தியில் சோமமண்டலத்தில் குற்றமற்ற ஸ்படிகமயமாயும் சாஸ்வதமாயும் நிரஞ்சனமாயும் நிர்க்குணமாயும் அக்ஷயமாயும் விளங்கும் பரமாத்மாவைப் பார்க்க வேண்டும். இத்தகைய தானயோகத்தைச் செய்து பரமாத்மாவைத் தரிசிக்கச் சக்தியற்றவனாயினும் என்னை தீர்த்த ஸ்வரூபி நீயே! தாதா நீயே விதாதா நீயே! பிரசித்தமானவன் நீயே! ஞாதுரு ஞான ஞேயங்களும் நீயே! சிருஷ்டிகர்த்தா நீயே!  காப்பவன் நீயே! சங்கரிப்பவன் நீயே! தர்மம் அக்கினி, ஆதித்தன் முதலியன யாவும் நீயே! என்று இதுபோலத் தியானஞ்செய்து கொண்டிருந்தாலும் ஞானமடைந்து, என்னைச் சோமமண்டல மத்தியில் தரிசிக்க அருகனாவான்.

37. ஷடங்க விதி

துர்வாச முனிவர், சிவபெருமானை நோக்கி, பிறைசூடிய பெம்மானே! ஷடங்கவிதியையும் எனக்கு உபதேசஞ் செய்ய வேண்டும்! என்று கேட்கவே சிவபெருமான் பின்வருமாறு சொன்னார்.

அஹிம்சை, சத்தியவசனம், சோரத்தனமின்மை, எண்ணமின்மை, பிரமசரியம், இந்திரிய நிக்கிரகம் கோபமின்மை, குரு பணிவிடை, சவுசம் சந்தோஷம் முதலியன யோகத்திற்குச் சாதனங்களாகும். இவ்வகையான நியமங்களுடன், ஓங்கார ஸ்வரூபியாக என்னைத் தியானிப்பவன் எல்லாவற்றையும் பார்க்க வல்லவனாகிறான். பரம்பொருள் என்பது ஞானத்தால் அறியத்தக்கதும் நிரஞ்சனமானதுமாகும். அதுவே சாந்தம், புருஷம், சூஷ்மம். சாஸ்வதம் பார்க்கத்தக்கது அதை அறிந்தவனே சிவஸ்வரூபி, புத்தி, மனம், அகங்காரமும், அவ்யக்தம் முக்குணாத்துமகமாகிய சிவமும் தேகத்திலேயே விளங்குமெனினும் ரஜஸ், தமஸ், முதலியவற்றால் மறைக்கப்பட்ட பொழுது சிறிது பிரகாசமில்லாதிருக்கும். ஸத்துவகுணம் உண்டாகும் போது விளங்கும். அப்போது தான் நான்காவது புருஷார்த்தமாகிய மோட்சத்திற்கு உரியவனாகிறான். அந்த வஸ்துவையறிய உற்பத்திலயங்களையும் மானவமானங்களையும் சீதஉஷ்ண சுகதுக்கங்களையும் அறியவேண்டும். அவனே, அவ்வயனாயும் ஈஸானனாயுமுள்ள பராத்பர வஸ்துவை அறியவல்லவனாவான். அது இயலவில்லையெனில் ÷க்ஷத்திர மான காசியில் ஓங்காரேஸ்வர ஆலயத்திற்குச் சென்று தவஞ் செய்தால், அவ்விறைவனுடைய திருவருளால் சித்த சுத்தி ஏற்பட்டு, தத்துவங்களின் இலக்கணங்களையறிந்து எதைப் பார்த்தால் துக்கப்படமாட்டார்களோ, எதை அடைந்தால் பிறவி இல்லையோ எது அறியாததோ, நிரஞ்சனமானதோ, நரைதிரை மூப்புகள் அற்றதோ, எதையதிகள் எல்லோரும் சிந்திக்கிறார்களோ அந்தப் பரம்பொருள் அறிய வல்லவர்களாகிறார்கள். அந்தத் தேவனே மத்ஸோதரி என்னும் தடத்தருகில் வாழ்கிறார். ஓங்காரேசனாகவுள்ள அந்தப் பகவானுடைய பிரசாதத்தினால் நிஷ்கல்மஷத்தை அடைந்து மோட்ச சாம்ராஜ்யத்தை அடைவான். சரீரமே பிரமமயம் என எப்பொழுது ஒருவன் அறிகிறானோ அவன் எப்பொழுதும் எல்லாக் கர்மங்களிலிருந்தும் பிறவித் துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறான். ஆகையால் ஓங்காரமே பரப்பிரம்மம். அந்த ஓங்காரத்தை அகார உகார மகார நாதபிந்துக்களாகிய பஞ்ச மாத்திராத்துமாகச் சொல்லப்படும் அதில் அகாரம் வைத்யுதா, உகாரம் அக்ஷரகாமினி மகாரம் நிமிஷம், நாதம் பிபீடிதை பிந்து பிரமம் என்ற யோக நூல்கள் கூறுகின்றன. இவற்றை அறிந்தவன் சரீரதுக்கங்களை நீங்குவான். அகார உகார மகாரங்களோடு நாதபிந்துக்களைச் சேர்த்து வாயால் உச்சரிக்காமல், மானசீகமாகத் தியானித்தால் விஞ்ஞானம் என்பது உண்டாகி, நதிபோலப் பெருகும். அவ்வாறு அவிச்சின்னமாக தியானிக்க வேண்டும். அப்பொழுது மனதை விஷயங்களிற் செல்ல விடாமல், அம்பைத் தீயூட்டுகிறவன் நெருப்பைப் பாராமல், குறியைப் பார்ப்பது போல வஸ்துவினிடத்திலேயே செலுத்த வேண்டும். அப்படி மனதை ஒரே வழியாகச் செலுத்தியவன் அந்த வஸ்துவை அடைவான்.

38. தேகம் - தெய்வ மயம்

துர்வாச முனிவனே! தேகமானது சர்வதேவ மயமானது. ஒவ்வோர் உறுப்புகளிலும் பல தேவர்கள் வசிக்கிறார்கள். அதை உனக்குச் சொல்லுகிறேன். பாதத்தில் விஷ்ணுவும் முழங்காலின் கீழ் ஸப்த மருத்துக்களும், முழங்காலில் அசுவினி தேவர்களும், குய்யத்தில் மித்ராவருணமும் குறியில் பிரஜாபதியும் இடையில் குபேரனும் வயிற்றில் பல நதிகளும் சமுத்திரங்களும் இதயத்தில் சாவித்திரியும், மார்பில் சந்திரனும் கைகளில் இந்திரனும், தோளில் மின்னல்களும், நகத்தில் கொடிகளும், கேசத்தில் மரங்களும், ரோக கூபத்தில் தர்மங்களும், சிரசில் ஆதித்தனும், சந்திகளில் சப்த ரிஷிகளும் கண்களில் சூரியனும், காதுகளில் திக்குகளும், புருவத்தில் மலைகளும், நெற்றியில் அஷ்டவசுக்களும், கீழ் உதட்டில் யமனும், மேல் உதட்டில் பிரமனும், முதுகில் இரவும், பக்கங்களில் தேவர்களும், கண்டத்தில் பிராணாதி வாயுக்களும் பத்தியில் அங்காரமும், உருத்திரனுமாக இவ்விதமாக சர்வதேவ மயமாகும். இதை இவ்வகையாக அறிந்தவன் உத்தமமான கதியை அடைவான் என்று சிவபெருமான் கூறினார். துர்வாசர் சுவாமி! பிராண ஆகுதி செய்வதால் எந்தத் தேவர்கள் எவ்வெவ்வகையில் திருப்தி அடைகிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டும்! என்று கேட்கவே சிவபெருமான் பின்வருமாறு சொன்னார்.

துர்வாச முனிவனே! பிராணன், அபானன், சமானன் உதானன், வியானன் என்ற ஐந்து வாயுக்கள் உடலில் விளங்கும். இவ்வாயுக்களில் பிராணனை உத்தேசித்து அன்னத்தினால் ஆத்மாவில் ஆகுதி செய்தால் சாவித்திரியும் நான்கு வேதங்களும் ஷடங்கங்களும் பதக்கிரமங்களும் ஓஷதிகளும் மரங்களும், சந்திரனும், சூரியனும், ஸப்த மருத்துக்களும் திருப்தி அடைகிறார்கள். இரண்டாவதாகிய ஆபானனை உத்தேசித்து, அன்னத்தினால் ஆகுதி செய்தால் நாகங்கள், சமுத்திரங்கள், புண்ணிய நதிகள், ரிஷிகள், பிதுர்க்கள், தேவர்கள், இந்திரன் முதலானோர் திருப்தி அடைகிறார்கள். சமானனை உத்தேசித்து, அன்னத்தினால் ஆகுதி செய்தால், அச்வினிதேவர்கள்; மருத்துக்கள் விஷ்ணு; வருணன்; யமன்; பிரஜாபதி; குபேரன்; சர்வயக்ஷகணங்கள்; சித்தவித்தியாதரர்கள் திருப்தியடைகிறார்கள். உதானனை உத்தேசித்து: அன்னத்தைக் கொண்டு ஆத்மாவில் ஆகுதி செய்தால்; பவனும் நந்தியும் கணேசவரரும் உமையும் பிரமனும்; மனமும் பிராணன்களும் திருப்தியடைவார்கள். வியானனை உத்தேசித்து; அன்னத்தினால் ஆத்மாவில் ஆகுதி செய்தால் நட்சத்திரங்கள் ரிஷிகள்; சப்த தீபங்கள்; பூமி ஏழு உலகங்கள்; பிரம்மாண்டங்கள் உகர்; இராக்ஷசர்; பிராணிகள் முதலியன திருப்தி அடைகின்றன. இவ்விதமாக ஆகுதிக்கிரமத்தை அறிந்து பூஜித்தவன் தீயவனின் அன்னத்தைப் புசித்தாலும் அப்பாவத்தினின்றும் விடுபடுகிறான். பிரம்ம; க்ஷத்திரிய; வைசியர்கள் வேதாஹமேதம் புருஷம மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ! பரஸ்நாத் என்று சுருதிப் பொருளை உணரவேண்டும். ஆத்மாவில் ஹோமஞ் செய்பவன், அப்புருஷனை அறிவான். அப்புருஷனை அறிய வேறு வழியே கிடையாது. நம்முடைய உடலிலேயே உண்மைப் பொருள் விளங்கும் என்பதை உணர்ந்தவன், ஆலாகலநஞ்சை அருந்தினாலும் மரணமடைய மாட்டான். இதை எந்த வருணத்தவராயினும் வாசித்துக் கேட்பாராயின் மோக்ஷத்துக்கு அருகராவார்கள்! என்று சிவபெருமான், துர்வாச முனிவருக்குச் சொன்னார் என்று ஸனத்குமார முனிவர் கூறினார்.

39. பிரம நாடி

ஸநத்குமார முனிவரை வியாஸர் வணங்கி, மகாத்மாவே! சாங்கிய யோகத்தில் வல்லவரே! தாங்கள் யோக நாடி என்று கூறிய விஷயத்தைப் பற்றி அடியேனுக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டும். அது மனித உடலில் எங்கு இருக்கிறது? எவ்வகையாக இருக்கிறது? அதைத் தெரிந்து கொண்டு தியானிப்பது எப்படி? என்று கேட்டார். அதற்கு ஸனத்குமார முனிவர் சிவ சக்தியரைத் தியானித்துச் சொல்லத் துவங்கினார்.
வியாசரே! இந்த விஷயம் ஹரி, ஹர, ஹிரண்ய கர்ப்பர்களால் சொல்லத் தக்கதேயல்லாமல் என்னால் சொல்ல முடியாதது. அந்த யோக நாடியை அறிந்தவர்களே தூய்மையான ஞானியராவார்கள். விஸ்வமூர்த்தியான சிவபெருமான் தேகத்தைச் சார்ந்து பாலில் நெய் இருப்பதுபோல கண்ணிற்குப் புலப்படாமல் விளையாடுகிறார். அவருடைய கிரணங்கள் எவ்வளவு என்று கணக்கிட முடியாதவை அவை சூரிய கிரணங்களைப் போல் ஜகத்தையும் தேகத்தையும் சார்ந்து வியாபித்துள்ளன. இதயத்திலேயே எல்லா நாடிகளும் இருப்பவை. அதில் பூர்வபாகத்தில் உள்ள நாடிகள் வெண்மையாகவும் தட்சிணபாகத்திலுள்ளவை கறுப்பும் பிங்கலமுமாகவும் கீழ்ப்பாகத்து நாடிகள், மஞ்சளும் - கறுப்பும் பிங்கலமும் கலந்துள்ளவையாகவும், மேலுள்ள நாடிகள் கறுப்பாகவும் இருக்கின்றன. பத்து வாயுக்களும் இதயத்தை சார்ந்திருக்கின்றன. இதயமே அவற்றின் பிறப்பிடம் சிலசாங்கிய யோகிகள், நூற்றியோரு நாடிகள் உள்ளன என்றும் அவற்றை ஆஸ்ரயிக்க வேண்டும் என்றும் சொல்லுவார்கள். அவற்றை விடுத்து பிரம நாடியையே ஆஸ்ரயிக்க வேண்டும்.

சூரியன் மேலே இருந்தபடி உலகத்தைப் பிரகாசிக்கச் செய்வது போலவே பரமான்மா பிரம நாடியிலிருந்து யாவற்றையும் ஜீவனுக்கு அறிவிக்கிறார். நாபி நாடியினாலேயே உடலானவன் அஞ்ஞான சங்கல்ப வகையினை விடுத்து சுத்தப்பரம் பொருளிடம் ஆனந்தத்தை அனுபவிக்கிறான். சிலர் தொண்ணூற்று ஆறாயிரம் நாடிகள் இதயத்தில் உள்ளனவென்று சொல்லுவார்கள். அவற்றின் வித்தியாசங்களை அறிவது துர்லபம் பிராணாப பத்து நாடிகளே அறியக்தக்கவையாகும். அந்தப் பத்து நாடிகளை அடக்குவதாலேயே பிரம நாடியை அறியலாம். பிரம நாடியை கண்ட பிறகு பத்து நாடிகள் சிரசைப் பிளந்து கொண்டு வெளிப்படுகிற தன்மையும் கேசர சஞ்சார வல்லமையும் உண்டாகும். இந்த நாட்களில் பத்து, சுக்கிலம், சிறுநீர், மலம் ஆகியவற்றை தனித்தனியே பிரித்து விடும். இவற்றை விடுத்து, பிரமநாடியை அடையவேண்டும். எலும்புகளும் மலமும் சிறுநீர்களும் நிரம்பிய உடலில் பரமாத்மாவின் இருப்பிடத்தை அறிந்தவனே நிர்மலனாவான். பரமாத்மா, சந்திர, சூரிய, அக்கினிகளுக்கு இணையான தேஜஸோடு இதயகமலத்தில் எழுந்தருளியிருக்கிறார். அணுவிற்கு அணுவாகவும் அனைத்து ஒளியாகவும் விளங்குவார். அதை யுணர்த்தும் நாடி, சிரசு முதல் உள்ளங்கால் வரையில் வியாபித்திருக்கும் இந்த வகையை அறிந்து தான் தேவர்கள் பலர் தேவதத்துவத்தை அடைந்திருக்கிறார்கள். இந்த யோக முறையையே பிரமதேவர், முனிவர்களுக்குச் சொல்லியிருக்கிறார். உத்தராயனத்தில் பிராண வாயுவை விட்டவன் பிறவியை ஒழிப்பான். கெட்ட நாடிகளை ஒழித்து, பிரமநாடியை ஆஸ்ரயிப்பவன் சகல துன்பங்களையும் ஒழித்து, கடல் நீரில் அலைபவன் ஓடத்தை அடைந்தாற்போல் நற்கதியை அடைவான். நாவின் மத்தியிலிருந்து கிரம ஈறாக வியாபித்துள்ள யோக நாடியை உணர்ந்தவன், காற்றைப் போலச் சஞ்சரித்து, சூரியனைப் போலப் பிரகாசித்து யாவற்றையும் பார்த்துவிட்டு, மோட்சத்தை அடைவான்.

40. அவிமுக்த மான்யம்

வியாஸர், ஸநத்குமார - முனிவரைப் பணிந்து, சுவாமி! யாவும் அறிந்த பிரமபுத்திரரே! அவிமுக்தத்தின் மான்மியத்தையும் ஓங்காரேஸ்வரரின் பிரபாவத்தையும் சொல்ல வேண்டும் என்று கேட்க, ஸநத்குமார முனிவர் கூறலானார். வியாஸரே! தேவர்களுக்குத் துர்லபமாயும் பரம ரகசியமுமான அவிமுக்த மான்மியத்தை உமக்குச் சொல்லுகிறேன் கவனமாகத் கேளும். ஆதியில் தேவதேவனான பரமேஸ்வரனைப் பார்த்து பார்வதி தேவியார், நாதா! மிகத் தூய்மையானதும் தங்களுக்குப் பெருமகிழ்ச்சியை உண்டாக்குவதுமான தலம் எது? என்று கேட்டாள். அதற்குச் சிவபெருமான், தேவி! நான் சர்வ பூதங்களிலும் அந்தராத்மாவாக விளங்கினாலும் காசி மாநகரே (வாரணாசி ÷க்ஷத்திரமே) எனக்கு மகிழ்ச்சியளிப்பதாகும். நான் ஸர்வபூத தயாபரனாக இருந்தாலும் உன்னிடம் சிறப்பான அன்புடன் இருப்பது போல, நான் உலகமெங்கும் விளங்கினாலும் அந்த காசித் திருத்தலத்தில் விருப்பம் அதிகம் கொண்டுள்ளேன். நாற்கால் பிராணிகளில் காமதேனுவைப் போன்றும், நாற்குலங்களில் அந்தணர்களைப் போலவும் நான்கு வேதங்களில் சாமவேதத்தைப் போலவும் அவயவங்களில் விழிகளைப் போலவும், பதினான்கு உலகங்களிலும் அதுவே சாரமான தலம், அந்த தலத்தை அடைந்தாலே ஆன்ம ஞானம் அடைந்து மோட்சத்தை அடையலாம். அங்கு நான் நிலையாக வசிக்கிறேன். பஞ்சாயதன ஸ்தானமாகிய காசியை அடைந்து தன் மனதில் என்னைத் தியானித்திருப்பவன். அகார உகார மகார ஸ்வரூபியாய், மூவுலகங்களையும் வென்றவன் ஆவான். அநேகம் யதிகளும் சாங்கிய யோகிகளும் பாசுபத விரதத்தை அனுஷ்டித்தவர்களும் அவிமுக்த ÷க்ஷத்திரத்தையடைந்து என் சூட்சும வடிவைத் தியானித்து, முக்தியடைகிறார்கள். ஐம்பூதத் தொடர்புடைய தேகம் எடுத்தவர்களில், பஞ்சாயதன ஸ்தலத்தை அடைந்து என்னை ஸத்தியோஜாதாதி பஞ்சப் பிரமாத்மகம் என்பதாகத் தியானித்தவர்கள் என் சொரூபமாவார்கள். யதிகளும் புண்ணியசாலிகளும் யோகப் பயிற்சி செய்வதை அசாத்தியம் என்று பஞ்சாயதன ஸ்தானத்தை அடைந்து, விதிப்படி சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து முக்திக்குத் தகுதி பெறுகிறார்கள். இல்லறத்தோர், தீர்த்தவாசிகள், வானப்பிரஸ்தர்கள், சந்நியாசிகள், சைவர்கள், பாசுபத விரதிகள் தவமுனிவர்கள் முதலியோர் மவுனவிரதத்தால் என்னை அந்தத் தலத்தில் உபாசனை செய்கிறார்கள்.

அவர்களுடைய தியானத்திற்குத் தக்கவாறு நான் அவர்களது தியானமூர்த்தியாக இருந்து, இஷ்டபயன்களை வழங்கிக் கொண்டிருக்கிறேன். யக்ஷ, கின்னரர், கிம்புருஷ, வித்தியாதரர்களால் துதிக்கப் பெற்றவனாக நான் எப்போதும் அங்கு நடனம் செய்து கொண்டிருக்கிறேன். அங்கு வசித்து உயிர் நீங்குவோருக்கும் தாரக மந்திரம் உபதேசம் செய்கிறேன். சம்சார துக்கத்திற்குப் பயந்தவர்கள், அத்தலத்தை அடைந்து கர்மவாசத்தை ஒழித்து சுயப்பிரகாசச் சொரூபத்தை அடைவதால், அதுவே எனக்கு பிரியமான இடம் நான் எப்பொழுதும் அந்த இடத்தை நீங்காமல் வசிப்பதால் அதற்கு அவிமுக்தம் என்ற பெயர் உண்டாயிற்று. அதற்கு விஸ்வேஸ்வர ÷க்ஷத்திரம் என்றும் தப÷க்ஷத்திரம் என்றும் வாரணாசி என்றும் சித்த÷க்ஷத்திரம் என்றும் ஓங்காரஸ்தானம் என்றும் பஞ்சாயதனம் என்றும் காசி என்றும் பெயர்கள் விளங்கும். அங்கு ஞானவாசி என்ற தீர்த்தம், தன்னைத் தரிசித்தாலும் ஸ்பரிசித்தாலும் ஆசமனீயம் செய்தாலும் பாவங்களையெல்லாம் ஒழித்து அரிதான மோட்சத்தைத் தரவல்லது. அந்த ஞானநீரில் ஸ்நானமும் தீர்த்தபானமும் கலியுகத்தில் எளிதாகக் கிடைக்காது. சயகீய சவ்வியர் என்ற முனிவர் அங்கு அந்த ஞானவாவியில் மூன்று காலங்களிலும் ஸ்நான அனுஷ்டானங்களைச் செய்து மிருத்யுவை (மரணத்தை) வென்று, மோட்ச சாம்ராஜ்யத்தை அடைந்திருக்கிறார். ஒரு முறையாவது, அந்தத் தீர்த்தத்தில் சந்தியா வந்தனம் செய்தால் பத்து அஸ்வமேத வேள்விகளைச் செய்த பயன் உண்டாகும். காசியை ஸ்மரித்தவுடனேயே கங்காஸ்நான பயனைக் கொடுக்கவல்லதாக இருப்பதால் யார் தான் அங்கு வசிக்க விரும்புவார்கள்! என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார் என்று ஸநத்குமார முனிவர் கூறினார்.

41. ஹரிகேசன் சரிதை

வியாஸரே! பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். அவன் பிறந்தது முதல் தர்மசிந்தையும் அந்தண விசுவாசமும், சிவ பக்தியுங்கொண்டு சிவநாமப் பாராயணம் செய்த வண்ணம் சிவ சிந்தனையோடு இருந்தான். பூர்ணபத்திரன், ஒருநாள் தன் புதல்வனை நோக்கி, மகனே! உன்னை என் புத்திரனாக மதிப்பதற்கில்லை. நீ எனக்கு அந்நியமாக பிறந்திருக்க வேண்டும். என் குலத்தினருக்குரிய இயல்புகள் உன்னிடம் காணவில்லை. யக்ஷகுலத்தில் பிறந்தவர்களுக்கு உன் நடத்தைகள் இருக்காது. அவர்கள் இயல்பாகவே குரூர புத்தி வாய்ந்தவர்கள். நியோ கெட்டவன். இது உன் குலத்திற்கு இயற்கையல்ல. உன் குலதர்மத்திற்கும் ஆசிரம தர்மத்தையும் விட்டு விலகியவனுக்குப் பாவஞ்சித்திக்கும் என்று பிரமதேவர் ஆக்ஞை அதைத் தவறியவன் நரகத்திற்கு ஆளாவான் மேலும் கீழ்ப் பிறவியை அடைய நேரிடும். நீ செய்யும் தொழில்கள் நம் குலப்பண்பிற்கு ஏற்றவையல்ல. நீ என் புதல்வனே என்றாலும் தீயசெயல் செய்யும் உன்னைச் சோதிக்கவே விரும்புகிறேன். ஒரு குலமானது ஒரு புத்திரனால் கெடுவதினால், அந்தப்புத்திரனை கொன்றாலும் பாவமில்லை என்று அறநூல் கூறுகிறது. இதையறிந்து விரைவில் இந்த இடத்தைவிட்டு எங்காவது ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கொள்! என்று சொன்னான்.

தன் தந்தையின் சொல்லைக் கேட்ட ஹரிகேசன், உடனே தன் வீட்டை விட்டு விலகி காசிமாநகருக்குச் சென்று, மகத்தான தவத்தைச் செய்ய முயன்று தன் குலத்தின் இயற்கையை மறந்து தூணைப்போலவும் கல்லைப்போலவும் அசைவற்று இருந்து விஷ்ய வாதனைகளில் மனத்தைச் செலுத்தாமல் சிவபெருமானைக் குறித்து, கோகர்னேசத்தில் தியானித்து பக்தியோடு ஆயிரம் தேவ வருஷங்களை அரை நாழிகைப் பொழுதைப் போலக் கழித்தான். நெடுங்காலமாகியதால் அவன் உடல் முழுவதும் புற்று மூடி, உக்கிரமான தேள், பாம்பு, முதலிய கொடிய ஜந்துக்கள் அந்தப் புற்றில் வசிக்கலாயின மாமிசத்தையும் உதிரத்தையும் பெருகச் செய்யும் அன்னத்தை மறந்து, சிவபெருமானை அநுசந்தானம் செய்வதே ஆதாரமாகக் கொண்டிருக்கும் போது, பார்வதி தேவி பரமேஸ்வரனை நோக்கி, உலக நாயகரே! உத்தியான வனத்தை நான் பார்க்க விரும்புகிறேன். அதிலுள்ள வினோதங்களை நீங்கள் எனக்குக் காண்பிக்கவேண்டும் என்று வேண்ட, சிவபெருமான் உமையாளுடன் உத்தியான வனத்தை அடைந்து அங்குள்ளவற்றை விவரிக்கலானார்.

பெண்ணே! இந்த உத்தியான வனத்தில் மலர்ந்துள்ள மரங்களின் தோற்றம். எல்லா அணிமணிகளாலும் அலங்கரிக்கப் பெற்றுள்ள உன்னைப் போலத் தோன்றுகிறது. பச்சிலைமரத்தை புதர்கள் மூடியிருப்பதும், அதிலிருந்தும் வண்டுகள் வெளியே வந்து பண்பாடுவதும் அஞ்ஞானமாகிய உலகமாயையிலிருந்து வெளிப்பட்டு நாதப் பிரமத்தையடைந்த தன்மையை உணர்த்துகிறது. அசோக மரம் பூத்திருப்பதைப் பார். அது ஒரு தோழியானவள் கைகளை அலங்கரித்துக் கொண்டு, உனக்குத் தொண்டு செய்யக் காத்து நிற்பது போலிருக்கிறது. உயர்ந்த மரங்கள் மலர்களின் சுமையைத் தாங்கமாட்டாமல் வளைந்து நிற்கும் தோற்றம் நம் இருவருடைய வருகையை நோக்கி, அவை நமக்கு புஷ்பாஞ்சலி செய்யத் தலை குனிந்து நிற்பன போலத் தோன்றுகிறது. அம்மலர்களில் வண்டுகள் மொய்ந்து ரீங்காரம் செய்வதோ, யோகிகள் மனதை அடக்கி என்னிடத்தில் சேர்த்து, அமிர்தபானம் செய்வதைக் காட்டுவன மலர்களின் மகரந்தத்தூள் காற்றிலே எங்கும் பரவுவது, நான் விபூதியை உத்தூளனஞ் செய்திருந்தும் என்னை இந்தவனம் விபூதியால் பூஜிப்பதுபோல் இருக்கிறது. அன்னங்கள் சஞ்சரிப்பது. ஹம்சமந்தரத்திற்குப் பொருளாக இருக்கும் சிவபெருமான் இங்கு வருவதால், நாமும் அவருடனே இருக்கவேண்டும் என்று இங்கு வந்தன போலத்தோன்றும். அவை நீரில் விளையாடும் தோற்றம். முனிவர்களின் மனதில் யான் விளையாடுவதும் இப்படித்தான் என்று பரிகசிப்பது போலிருக்கிறது. ஒருபுறம், வண்டுகள் தேனைப் பருகி ஓங்காரந்தம் செய்வதும், குயில்கள் மகிழ்ச்சியுடன் கூவுவதும், மயில்கள் தோகையை விரித்து நடந்துத் தொனி செய்வதும் இன்னும் பல்வேறு பறவைகளின் சப்தமும் ஒன்று கூடி இசைப்பது ஏழு நரம்புகளையுடைய வீணையின் ஓசையை போல் நம்மைக் கான வித்தையால் மகிழ்விப்பது போலுள்ளது. மயில்கள் நடனஞ்செய்யும் கோலம், என்னைப் போல நீலகண்டம் தனக்கும் வாய்ந்துள்ளனவென்றும் தயையாகிய மழையைப் பொழியும் மேகமாகிய உன் வருகையைக் கண்டு ஆனந்தித்து, நிருத்தம் செய்வதுபோலவும் விளங்குகின்றன.

மரங்களில் படர்கொடிகள் சுற்றியிருப்பது, என்னைத் தழுவிக்கொள்ளும் உன் செயலை உணர்த்துகிறது. யானைகள் தருக்குடன் நடக்கும் தோற்றம், அவை தம் தோலை நான் ஆடையாக அணிந்துள்ளதையும் நீ பிடியானைப்போல நடக்கும் நடையையும், அர்த்த நாரீசுவரமாயினும் நாம் இரண்டு உருவாக வந்து காட்சியளித்தது கருதியும் களித்து, நம்மைப்போலவே ஆணும் பெண்ணுமாக நடக்கின்றன போலும்! கிளிகள், தாம் கேட்ட சொற்களை அப்படியே திருப்பிச்சொல்லும் இயல்புடையவை யாகையால், அவை உன் குரல் ஓசையைக் கற்க விரும்பி முயன்று அதனைத் தேறாது பழகிக் கொள்ள வேண்டும் என்னும் ஆசையால் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மல்லிகைக் கொடிகள் மலர்ந்துள்ள தோற்றம், தோழியாகிய அந்தக் கொடி தலைவியான உன் வருகையைக் கண்டு மகிழ்ச்சியுடன் சிரிப்பது போல் இருக்கிறது. நாக மரங்கள் பழுத்துள்ள தோற்றம், நம்கனிபோலச் சிவன் நீலகண்டராய் புகழ் பெற்றதுபோல நாமும் புகழ் பெற வேண்டும் என்ற கருத்தால் பழுத்துள்ளன போலும்! இந்த வனத்தில் மலர்கள் விழுந்து கிடக்கும் தோற்றம். நம் வருகையை அறிந்த வனதேவதை, நம் கால்கள் வருந்தாமல் வழிமுழுவதும் மலர்களைப் பரப்பி வைத்தாற்போல விளங்கும். வாழைகள் குலைவிட்டுப் பூக்களை வீழ்த்தி தலை சாய்த்து நிற்பதானது உன்னை நோக்கி, தாயே! நீ எங்களை உருவத்தால் வென்று விட்டாய்! எல்லோரும் உன்னைப் பணிந்து பற்பல பயன்களை அனுபவித்து பற்பல பிரசவங்களைச் செய்திருப்பது போல, நாங்களும் பல பிரசவங்களை அடையும்படிக் கிருபை செய்ய வேண்டும் என்று புஷ்பாஞ்சலி செய்வன போலும்! நீர் நிலைகளில் பூத்த தாமரை மலர்களில் வசிக்கும் அன்னம் முதலிய பறவைகள் நீரில் சிறகடித்து பாசி முதலிய அழுக்குகளை அகற்றித் தூய்மையான நீரில் விளையாடும் தோற்றம், நம்முடைய திருவடிகளை நினைத்து, பாசபந்தங்களை உதறி இருவினைகளைக் கழித்தவர். மோக்ஷõனந்தத்தை அடைவதை உணர்த்துவன.

பசும்புல் தரையில் மான் படுத்து உறங்குவது உன் மடியிலே தலைவைத்துறங்கும் என்னைப் போலுள்ளது. மயில்கள் நீலகண்டத்தைப் பெற்றது போதாது என்று என்னைப் போல நடனத்தையும் கற்க விரும்பி நடிப்பது போலும் தாமரை மலர்கள் உன் பாதங்களைப் போன்றிருப்பது போதாதென்று உன் முகத்திற்கும் ஒப்பாகவேண்டும் என்று தவஞ்செய்வன போல சூரியன் முன்பு தவஞ்செய்வன போலும்! பல பறவைகளும் ஓசையிடுவது வேதியர்கள் நம் வருகைக்காக வேதபாராயணஞ் செய்வது போலுள்ளது. தாழைப் புஷ்பித்து மணம் வீசுவது எல்லா மலர்களையும் விரும்பும் நான் தாழை மலரை விலக்கியதை கொண்டு, வேசையானவள் அலங்கரித்துக் கொண்டு ஓர் ஆடவனை மயக்கச் செய்வது போலத் தன் மலர்களால் மணமூட்டி நம்மை மயக்குவன போலும்! இங்கு திரியும் புலிகள் தங்கள் தோலை எனக்கு ஆடையாகக் கொடுத்தும், கோபகுணம் அடங்கும் வகையில் ஆதனமாகப் பெரியோர்களுக்குத் தங்கள் தோலைக் கொடுத்தும், தங்களைக் கொடிய பிராணிகள் என்று பலர் சொல்லுவதை நீக்கியருள வேண்டும் என்று விண்ணப்பஞ் செய்யவருவன போலும், எருதுகள் முக்காரம் செய்வது, தம்குலத்துத் தலைவனான நந்தியை வாகனமாகக் கொண்ட நாம் வருவதால் நம்மவர்கள் யாவரும் அவரைச் சேவித்துக் கொள்ள வாரும் என்று அழைப்பது போலுள்ளது. செம்மை, வெண்மை, கருமை வாய்ந்த மலர்கள் வீழ்ந்து கிடப்பது ஸத்வ, ரஜ, தமோகுணங்கள் தம் இயற்கைப்படியே அகல வேண்டும் என்று உலகிற்கு உரைப்பன போலும்! காற்று மலர்த்தாதுக்களை நம்மீது படியச் செய்து வீசுவது, யோகிகள் பிராணாதி வாயுக்களைக் கட்டி துன்புறுத்துவதால், அதைத் தன்னால் சகிக்க மாட்டாமல் பரிமளப் பொருளுடன் நம்மைச் சரணடைய வந்தனபோலும்! என்று இவ்வாறு சிவபெருமான் அந்த வனத்தின் அலங்காரங்களை வர்ணித்து பார்வதிக்குக் காட்டிக் கொண்டு வந்தார். அப்போது பார்வதி தேவி பரமேஸ்வரனை நோக்கி, நாதா! இந்த வனத்தின் சிறப்பைச் சொல்லவேண்டும்! என்று கேட்க சிவபெருமான் சொல்லலானார்.

தேவி! இந்தக்காசித்தலமே எல்லோருக்கும் மோட்சத்திற்கு காரணமானது. சித்தர்களெல்லாம் என்னைக் கருதி விரதமிருந்து இந்தத் தலத்திலேயே சித்திகளை அடைந்தார்கள். ஏனைய ஸ்தலங்ளில் அடைய முடியாக யோக சாதனம், ஓங்கார ஸ்தலத்தால் எளிதில் கைகூடும். இந்த வனத்தில் இருப்பவர் யாவரும் மனதை என்னிடத்திலேயே நிறுத்தி தம் செயல்களை எனக்கு அர்ப்பணஞ் செய்து என்னிடத்திலேயே விருப்பம் அதிகம். பிரமரிஷி தேவர்களும் இந்தத் தலத்தின் சிறப்பை அறியார்கள். அவிமுக்தமான இத்தலத்திலே எத்தகைய பாவி இறந்தாலும் அவனுக்கு முக்தி கைகூடும். நைமிசம், குல÷க்ஷத்திரம் கங்காத்துவாரம், புஷ்கரம் இவ்விடங்களில் வசித்து, ஸ்நான தர்ப்பணாதிகளைச் செய்து தவமிருந்தாலும் கிடைக்காத பயன்கள், இக்காசியில் வசிப்பவருக்கு எளிதில் கைகூடும். பிரயாகையைவிட இதுவே சிறந்தது. குபேரன் இங்கு தவஞ்செய்து எனக்குத் தோழனாகி, உலக பாலத்வமடைந்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். சம்வர்த்தர் இங்கு தவம்புரிந்து, சிவஞானமடைந்து, சிவாகமங்களைக் கூறும் சர்வலோகப் புகழ்பெற்றார். பராசரபுத்திரனான வியாஸமுனிவன் இங்குப் பலகாலம் தவஞ்செய்து வேதயுணர்வும் புராணங்களை இயற்றும் ஆற்றலும் பல மாணவர்களும் உலகின் போற்றுதலும் பெற்று இன்னும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரமதேவர் பலகாலம் தவஞ்செய்து படைத் தொழிற்கர்த்தாவாகி நாள்தோறும் வந்து; என்னைத் தரிசித்துத் துதித்து, பிரம்மலோகத்தில் உள்ளவர்களுக்கு இந்தத் தலத்தின் பிரபாவத்தைக் கூறுகிறார்.

இவ்விடத்தில் தவத்தால், சூரியன் உயர்ந்த பதவியை அடைந்தான். இந்திரன் மூவுலக ஆதிபத்தியத்தை அடைந்தான். உலகனைத்தையும் காப்பவரான விஷ்ணுவும் அவிமுக்தத்தில் தவஞ்செய்து சர்வதேவ பூஜியராகவும் உலகரக்ஷணாதி பத்தியத்தையும் பெற்றார். பாவி, கொடியவன், லோபி செய்நன்றி மறந்தோன் இவர்களில் எத்தகையோனும் இந்த திருத்தலத்தில் இறந்தால் அவனுக்குப் பிறவியே கிடையாது. பாவிகளும் முக்தியடைகிறார்கள் என்னும்போது புண்ணியர் அடைவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? பற்பல பிறவிகளில் மானிடப் பிறவி ஒன்று உண்டாவது துர்லபம். ஆயிரம் மானிடப்பிறவி எடுத்தால் ஒரு பிறவியில் யோகஞ் செய்யவேண்டும் என்று ஒரு கருத்துண்டாகும். ஆயிரம் பிறவிகளில் பழகினால் ஒரு பிறவியில் முக்தியை அடையலாம். அத்தகைய அருமையான முக்தியும் இந்தக் காசித்தலத்தில் உயிர் நீங்குவதால் எளிதில் உண்டாகும். பார்வதி! இந்தக் காசித்தலமே மூவுலகங்களுக்கும் சாரபூதமாக இருப்பதும், அதியழகுடையதும் என்னால் உன்னைப்போல் விரும்பத்தக்கது, இந்தத் தல மகிமையை நான் உனக்குக் காண்பிக்கிறேன். இதோ என்னுடைய பக்தன் ஒருவன் நெடுநாளாகத் தவஞ்செய்து கொண்டிருந்ததால், அவனைப் புற்றுமூடி அவன்மீது மரங்களும் முளைத்துவிட்டன. அதை நீ நேரில் காணப்போகிறாய், என்னுடன் வா! என்று சிவபெருமான் கூறிவிட்டு ஹரிகேசன் என்ற இயக்கன் தவஞ் செய்யும் இடத்தை அடைந்து அவன்மீது மறைத்துக் கொண்டிருந்த புற்றைத் தம் கையால் ஸ்பரிசித்து, ஹரிகேஸ, உனக்குத் தயைபுரிய வந்திருக்கிறேன். தவத்தை நிறுத்துவாயாக! என்று கூறினார். நெடுங்காலமாக தவஞ் செய்து கொண்டிருந்த ஹரிகேசன் தவம் நீங்கி எழுந்து, காளை வாகனத்தில் பார்வதி சமேதராய் விளங்கும் சிவபெருமானைச் சேவித்து அவரைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து எழுந்து நின்று, கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிய, இறைவனின் திவ்விய தேஜஸைக் காணமுடியாமல் வருந்தினான்.

அவனுக்கு சிவபெருமான் ஞானப்பார்வையைக் கொடுத்து புத்திரனே! மூவுலகங்களிலும் துர்லபமான வரம் ஒன்றைத் தருகிறேன் கேள்! என்றார். ஞானப்பார்வையில் இறைவனின் திவ்விய திருவுருவத்தை கண்கள் குளிரக்கண்ட ஹரிகேசன், சிவபெருமானை மீண்டும் பணிந்தெழுந்து நின்று கைகட்டி, பெருமானே, எனக்கு அழியாத உடலும் தங்கள் திருவடியிலிருந்து என்றும் பிரியாத திடபக்தியும், யாவருக்கும் அன்ன தானஞ்செய்யும் வல்லமையும் நீங்காத கணபத்தியமும் இந்த அவிமுக்த ஸ்தானத்தில் நீங்கள் வசிப்பதுபோல யான் வசித்திருக்கவும் தங்களைத் தரிசிப்பவர்கள் என்னையுந் தரிசிக்கவும் வரந்தர வேண்டும் என்று கேட்டான். அதற்குச் சிவபெருமான், யக்ஷனே! நீ பிறப்பிறப்புகளை ஒழித்து காணாபத்தியமும் வரங்கொடுக்கும் வல்லமையும் தேவர்கள் பூஜிக்கும் பதமும் வெல்லமுடியாத பராக்கிரமமும் யோகேசத்துவமும் உலகங்களுக்கு அன்னம் அளிக்கும் ஆற்றலும் இந்த ÷க்ஷத்திரத்திற்குப் பாலகத்துவமும் பெற்று எனக்குப் பிரியனாய் முக்கண்களோடு தண்டபாணியாக விளங்கக் கடவாயாக! என்னைத் தரிசிப்பவர்களுக்கு உன்னைத் தரிசித்தாலன்றி அந்தப் பயன் ஏற்படமாட்டாது. காசியில் கங்காஸ்நானம் செய்யும் போது உன்னைத் தியானித்தே நீராடுவார்களாக, உத்பிரமன், சம்பிரமன் என்ற இருவரை உனக்குத் தொண்டர்களாகத் தருகிறேன். இவர்கள் உன் கட்டளையினால் குணங்களாக்கி, உலகில் உள்ளவர்களை அடைந்து விளங்குவார்கள்? என்று வரங்கொடுத்து ஹரிகேசனைத் தண்டபாணியாக்கி விட்டுப் பார்வதியும் பரமேஸ்வரர் இருவரும் உருத்திரவாசமாகிய காசியை அடைந்தார்கள். இந்த அத்தியாயத்தை வாசித்தவர்களும், கேட்டவர்களும், தண்டபாணியின் அருள் பெறுவார்கள்! என்று ஸனத்குமார முனிவர் கூறினார்.

42. பிரதாப மகுடன் சரிதம்

வியாஸரே! பூர்வம் இரதந்தர கல்பத்தில் காசித்தலத்தில் நடைபெற்றதோர் அதிசயத்தைச் சொல்கிறேன். கேளும்! காசித்தலத்தில் சிவாலயத்தில் அபிஷேக ஜலதீர்த்தத் தொட்டிலில் ஒரு தவளை, பல நாட்கள் வசித்து, அந்த நீரை பருகி வாழ்ந்திருந்து, சிவ நிர்மால்யங்களையே புசித்துக் கொண்டிருந்த புண்ணியத்தின் பயனாக அநேக காலம் சுவர்க்க போகத்தை அனுபவித்து, மீண்டும் பூலோகத்தில் சுமனசு என்னும் மன்னனுக்கும் புத்திரனாகத் தோன்றி வாலிப கவுமார பருவங்களை அழித்து யவ்வனப் பருவமடைந்தது. அந்தக் காலத்தில் சுமனசுக்கு முற்பிறவியின் ஞாபகமுண்டாகி வாரணாசியான காசித்தலத்திலே மன விருப்பங்கொண்டு, அங்கு சென்று தவஞ்செய்து மோக்ஷத்தை அடைந்தான்.

வியாஸரே! அகார உகார மகார நாதபிந்து மயமான சர்வேசன், அங்கு வசிப்பதால், அதற்குப் பஞ்சாயதனம் என்ற பெயர் உண்டாயிற்று. அந்தத்தலத்தின் மான்மியம் பற்றிய இன்னொரு கதையையும் சொல்லுகிறேன். ஒரு கிருதயுகத்தில் பிரதாப மகுடன் என்ற அரசன் தர்மசீலனாகவும் ஜிதேந்திரியனாகவும் அந்தணர் விசுவாசியாகவும் சிவபக்தனாகவும் இருந்தான். அந்த மன்னனுக்கு பல காலம் மகப்பேறில்லாமல் சிவபெருமானின் திருவருளால் ஒரு மகன் பிறந்தான். அவன் இளம் பருவத்திலேயே வேத சாஸ்திரங்களையுணர்ந்து ஞானவானாகி விரக்தனானான். இத்தகைய வைராகியான புதல்வனைத் நோக்கித் தந்தை, மகனே! நெடுங்காலந் தவம் செய்ததால் பிள்ளையாகப் பிறந்த நீ வைராக்கியவானாகவா இருக்க வேண்டும். நான் உன்னால் சுகமடையத் தக்க செயலை ஏன் நீ செய்யக்கூடாது? பிதுர்க்களுக்கு நற்கதியை உண்டாகச் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினான். அதற்கு மைந்தன் தந்தையே! நீங்கள் சொன்ன இந்த விஷயத்தை நான் ஏற்பதற்கில்லை! என்றான். தந்தையோ மகனே உலகில் பிரத்யக்ஷமான தேவர்கள் தாய் தந்தையர்களே! ஆகையால் என் சொல்லைக்கேள் நீ திருமணஞ்செய்து கொள்ளா விட்டால் நம் குலம் நரகத்தில் ஆழ்ந்து அவதியுறும். அவ்வாறு செய்ய வேண்டாம் என்றான். மகன் சிரித்துக் கொண்டு, யாவும் அறிந்த என் தந்தையே! நான் சொல்வதைக் கேளுங்கள். நான் ஜராமரண வியாதிகளுடன் கூடிய எண்ணற்ற பிறவிகளை எடுத்திருக்கிறேன். உம்மைப்போன்ற ஆயிரம் தந்தையரைக் கண்டிக்கிறேன். ஜன்மாந்தரங்களில் உம்மைப் போலவே அந்தப் பிதாக்கள் கோரியபடி பலப்பல கலியாணங்களைச் செய்து கொண்டுள்ளேன். எனக்கும் பிறந்த பலப்பல பிள்ளைகளுக்கும் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்று உம்மைப் போலவே நானும் அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்.

நான் மணந்த மனைவியரில் எத்தனையோ மங்கையர் இறந்து அவர்களுடைய மரண துக்கங்களை நான் அனுபவித்திருக்கிறேன். நான் செய்த கர்மங்களுக்கு ஏற்ப, திருமணங்களாகவும் செடிகொடி மரங்களாகவும் மலைப் பாம்பாகவும் பறவைகளாகவும் நாற்கால் ஜீவன்களாகவும் பிறந்திருக்கிறேன். அதிகம் சொல்லி என்ன பயன்? அண்டஜம், சுரூவதஜம் கூத்பீஜம் சராயுஜம் என்ற நான்குவகை யோனிகளிலும் அநேகம் பிறவிகளை எடுத்து ஒழித்தேன். யக்ஷனாகவும் கின்னரனாகவும் இருந்தேன். அரசனாகவும் சில காலம் இருந்தேன். ஆகையால் மனைவிக்காக மணஞ்செய்து கொள்வது பயனற்றது. ஆகவே பிறவிக்கும் காரணமானது இராஜ்யத்திலும் மனைவி மக்களிடமும் இச்சை கொண்டவனுக்குச் சித்தி உண்டாக மாட்டாது. உடலைத் தன்னுடையது அல்ல என்று மறந்து விடுபவனுக்கே சித்தி உண்டாகும். திருமணஞ் செய்து கொள்வதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை. உடலெடுத்த பொழுதே அவன். தனக்கு நிச்சயமாக மரணம் உண்டென்பதை ஒவ்வொருவனும் உணர்ந்தே இருக்கிறான். மனித உடம்பு மரண பயமில்லாமல் நித்தியமாக இருப்பதானால் திருமணஞ் செய்து கொள்ளலாம் தந்தையே! தங்கள் விருப்பத்தின்படி எனக்கு மனைவினை முடித்து, இராஜ்ய பாக்கியத்தைக் கொடுத்தாலும் என்ன பயன்? யான் எனது என்னும் தன் உணர்வு உள்ளவனுக்கே அவன் பயன்படுமே யல்லாமல் என் போன்றவனுக்கு அவற்றால் பயனில்லை. வனத்தில் தவஞ் செய்து கொண்டிருப்பவன், பொருளாசை கொண்டவனாயின், அவனுக்கு அத்தவத்தால் பயன் உண்டாகுமோ? அதுவுமில்லை புலன் பொறிகளை விஷயவாதனையில் செலுத்துவோன் அவற்றால் படுகுழியில் தள்ளிய யானையைப் போல நரகக் குழியில் தள்ளப்படுவான். ஆகையால் புலனடக்கம் செய்தலே அவசியமானதாகும். காமாத் மாவைக் காமிகள் புகழ்வார்களே யல்லாமல் ஞானிகள் புகழமாட்டார்கள். வேதங்களும் தீர்த்த ஸ்நானம் செய்த, யாகஞ் செய்க, தவஞ்செய்க என்றும் அவ்வாறு செய்தவற்றைச் சிவார்ப் பணம் செய்கவென்றும் சொல்கின்றன. ஆகவே புண்ணிய பூமியாகிய பஞ்சாயதன ஸ்தானத்தை அடைந்து, ஐம்புலன்களை அடக்கித் தவஞ் செய்யப்போகிறேன். நான் மோட்சத்தையே நாடுகிறேன். இன்றையத்தினமே அந்தப் பரம ஆனந்த அரண்யத்திற்குப் பயணப்படுகிறேன். உலகிலுள்ள எண்ணற்ற திருத்தலங்களை விடுத்து, பஞ்சாயதன ஸ்தானமாகிய காசித் தலத்தில் எனக்கு விருப்பம் உண்டாயிருக்கும் காரணத்தையும் உங்களுக்கு விபரமாகச் சொல்லுகிறேன். கேளுங்கள்.

தந்தையே! இதற்கு முந்திய என்னுடைய மூன்றாவது பிறவியில் நான் ஒரு வைசியன். பெருந்தனவந்தன், தர்மவான், நான் தீர்த்த யாத்திரை செய்து கொண்டு வரும்போது, ஒருநாள் வாரணாசியான காசித்தலத்தை அடைந்து, ஓங்காரேசுவரரைத் தரிசித்து, பூஜித்து அங்கேயே சிலகாலம் வசித்து வந்தேன். மற்றொரு நாள் இரவு நித்திரையில் சிவநாமஸ்மரணை செய்து கொண்டிருந்தேன். அப்போது தேவ, யக்ஷ, கந்தர்வர்கள், சிவதரிசனம் செய்ய அங்குவந்தார்கள். அவர்களைக் கண்டேன் அந்த புண்ணியத்தாலேயே இதற்கு முந்திய பிறவியிலும் ஓர் அரசனாகப் பிறந்து அந்தப் பிறவியிலும் காசியைச் சேவித்தேன். இந்த இரண்டு புண்ணிய செயல்களாலும் தான் உமக்கு புதல்வனாகப் பிறந்து தேவர்களுக்கும் அரிதான முற்பிறவி உணர்வோடு விளங்கினேன். ஆகையால் உமக்கும் நீங்கள் சொல்லிய திருமண விஷயத்திற்கும் ஒரு கும்பிடு! தயவு செய்து எனக்கு விடைகொடுங்கள். சம்சாரத்தினிருக்கும் வரையில் சுகமில்லை என்பதை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். இனி முக்தியைதரவல்ல நிரஞ்ஜன் நிஷ்கள பராபரவஸ்துவை அடையவே நான் விரும்புகிறேன். ஓங்காரேஸ்வரரைத் தரிசிக்கச் செல்கிறேன் என்று தன் தந்தையிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான். அப்போது அவன் தந்தை மைந்தனை நோக்கி, அறிவுள்ள மகனே! நீ செல்லும் இடத்திற்கு நானும் வருகிறேன். சம்சாரத்திலிருந்து எனக்கு வைராக்கியம் உண்டாகவில்லை. சந்ததி விருத்தி செய்யவேண்டும் என்ற ஆசைதான் அதிகமாகிறது. மான அபிமானம், சீதோஷ்ணம், சுகதுக்கம் ஆகியவற்றைச் சகித்து, யான் என்ற அகந்தையை ஒழித்து எல்லா கர்மங்களையும் பகவத் அர்ப்பிதஞ் செய்யவேண்டும் என்ற சாஸ்திரத்தைத் நானும் படித்திருக்கிறேன். ஆயினும் எனக்குச் சம்சாரத்திலிருக்கும் ஆசையானது விட்டு விலகவில்லை. நல்ல மகனாகிய உன்னை அடைந்ததால் எனக்குஞ் சிறிது விரக்தி உண்டாகியிருக்கிறது. அதுவும் நிலையாக இல்லை. வைராக்கியம் நிலைபெறாதார் காசியை அடைந்தவுடனேயே அதைபெற்று இந்திரிய நிக்கிரகம் ஆகிய நன்மைகளை அடைவார்களென பெரியோர்கள் சொல்ல நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்! என்று கூறி ஓங்காரேசத்தை மனதில் தியானித்து, தன் இளையகுமாரனை அழைத்து அவனுக்கு மகுடாபிஷேகம் செய்வித்து அங்கிருந்து தன் மூத்தமகனை அழைத்துக் கொண்டு, காசித்தலத்தை நோக்கி இருவரும் சென்றனர். அவ்வாறு போகும்போது அந்த தகப்பன் தன் மூத்த மகனுடைய தொடர்பால் தான் முற்பிறவியில் காசித்தலத்தின் சிவாலயத்தில் ஒரு புறாவாக வாழ்ந்திருந்ததை அறிந்தான். இருவரும் காசியை அடைந்து ஓங்காரேஸ்வரரைத் துதித்து அங்கேயே பலகாலம் தவஞ்செய்து முக்தியடைந்தார்கள். இந்த அத்தியாயத்தை படித்தவர்களும் எழுதியவர்களும் படிக்கக் கேட்டவர்களும் பிறருக்குச் சொன்னவர்களும் இஷ்டகாமியங்களை அடைந்து, சிவபெருமானின் திருவடிகளில் கலப்பார்கள் என்று ஸனத்குமார முனிவர் கூறினார்.

43. கைலநாதனின் காசி வாசம்

வியாஸமுனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி, சுவாமி! ஓங்காரேசுர மகாத்மியத்தை மேலும் கேட்க விரும்புகிறேன் என்றார். ஸனத்குமாரர் தொடர்ந்தார்.

வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கதையைச் சொல்லுகிறேன். முன்பொரு சமயம் பார்வதி தேவி காளி என்ற பெயருடன், சிவபெருமானிடம் அன்பும் பக்தியும் நற்குணமும் கொண்டவளாய் கூடி மகிழ்ந்து கொண்டு பலகாலம் அந்தப் பஞ்சாயதன ஸ்தானத்தில் இருந்து வந்தாள். சந்தியா காலங்களில் கந்தர்வ, வித்தியாதரர்கள் அங்கு தங்கள் சந்தியவந்தனங்களைச் செய்யவருவார்கள். சிவபெருமான் அவர்களுக்கு நடனஞ்செய்து, அந்தத் திருக்கோலத்திலேயே தரிசனம் கொடுப்பார். அப்பொழுது ஒருநாள் அவர் நடனஞ் செய்யும்போது, அவரது திருமேனியில் வியர்வை உண்டாகி, அந்த வியர்வையிலிருந்து அநேக கணங்கள் தோன்றின. அக்கணங்களும் நடேசரது நடனத்தைக் கண்டு மகிழ்ந்து ஆனந்த நடனஞ் செய்யலாயினர். அப்போது பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி, பகவானே! விரூபாக்ஷியே! மந்தரம், காளஞ்சரம், பாருண்டம், கைலாயம் முதலிய இடங்கள் பலவற்றில் உம்மோடு நானும் வசித்திருக்கிறேன். ஆயினும் அவ்விடங்களிலெல்லாம் செய்திராத இத்தகைய அற்புத நடனத்தை இந்த தலத்தில் மட்டுமே தாங்கள் செய்வதற்குக் காரணம் என்ன? என்று கேட்டாள். அதற்குச் சிவபெருமான் புன்னகை செய்தவண்ணம் பார்வதியை நோக்கி, பர்வதராஜ குமாரியே! நாதப் பிரம்ம ஸ்வரூபமாக நான் இந்தப் பஞ்சாயதன ஸ்தானத்தில் வசிக்கிறேன். அகார, உகார, மகார நாத பிந்துக்களாகிய ஐந்தும் ஆன சொரூபங்களுடன் நான் இங்கு வசித்துக் கொண்டு இருக்கிறேன். பிரம்மாண்டத்திலுள்ள பற்பல திருத்தலங்களில் நான் வசித்திருப்பினும் உன் முக மண்டலத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவதைப் போலவே இங்கு வசிப்பதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு என்னை நோக்கி தவம் செய்து கொண்டு வந்தவன் திவ்விய ஞானத்தை அடைவான். இங்கேயே அனேக தேவ கந்தர்வாதியர் என்னை முக்கண்ணனாகவும் சூலபாணியாகவும் தியானித்தவாறே காட்சியளித்து அருள் செய்கிறேன். என்னை இந்தத் தலத்தில் நிர்க்குணமாக உபாசித்து, பலர் சாயுஜ்ய பதவியை அடைந்திருக்கிறார்கள். இந்தப் பூவுலகத்திலுள்ள எல்லாத் தீர்த்தங்களும் புண்ணிய ஸ்தலங்களும் அவ்வவற்றின் கலைகளுடன் இந்தப் பஞ்சாயதன ஸ்தானத்தில் வைகாசி மாதத்து சதுர்த்தசியில் வந்து சேருகின்றன. அந்தக் காலத்தில் பதினெண்கணங்களும் எல்லாத் தேவர்களும் என்னைச் சேவிக்க இங்கு வருவார்கள். இந்த மத்ஸோதரி தீர்த்தக் கரையிலிருந்து, பிரமனும் விஷ்ணுவும் என் ஓங்கார ஸ்வரூபத்தைத் தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். கோடி ருத்திரர்கள் என்னை உபாசனை செய்து, என் வலது பாகத்தில் இருக்கிறார்கள். வாமதேவர், மேருசாவர்ணி, அகோரர், கபிலர் முதலிய முனிவர்கள் வடக்குத் திசையிலிருந்து உபாசித்துச் சித்தியடைந்திருக்கிறார்கள். ஸப்தகோடி மகாமந்திரங்களும் நான்கு வேதங்களும் இருபத்தெட்டு ஆகமங்களும் தொண்ணூற்று ஆறு தத்துவங்களும் அறுபத்து நான்கு கலைகளும் இங்கு இரக்ஷித்துக் கொண்டிருப்பவை. அதிகம் சொல்வானேன்! என்னை இங்கு தரிசித்த எல்லா பிராணிகளும் முக்தியடையும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

44. புஷ்ப வாகனன் சரிதம்

வியாஸ முனிவரே! அங்கே நிகழ்ந்த மற்றொரு விந்தையான சரிதம் ஒன்றுண்டு அதையும் சொல்லுகிறேன் கேட்பீராக. முன்பு இரதந்தரகல்பத்தில், புஷ்பவாஹனன் என்ற அரசன். தர்மசீலனாகவும் ஜிதேந்திரியனாகவும் விளங்கி வந்தான். அவன் ஓங்காரேஸ்வரத்தை அடைந்து, உணவுண்ணாமல் காற்றையே அருந்தி, பலகாலம் தவஞ்செய்து ஓங்காரேஸ்வரரைப் பிரத்தியட்சமாகத் தரிசித்துப் பலவாறு துதிக்க, அவர் மகிழ்ச்சியடைந்து, ஓர் பொற்றாமரை மலரை அந்த அரசனிடம் கொடுத்து அருளினார். அந்த மலரின் மேல் ஏறி அமர்ந்தவுடன் அது அவன் நினைத்த இடத்திற்குக் கொண்டு போகத்தக்கதாக இருந்தது. இந்தக் காரணத்தாலேயே அவனுக்குப் புஷ்ப வாஹனன் என்ற பெயர் உண்டாயிற்று. அவன் அந்தப் பொன்மலரில் ஏறித் தேவலோகம், நரகலோகம் முதலிய லோகங்களுக்குச் சென்றும் சஞ்சரித்துக் கொண்டும் இருந்தான். அவ்வாறு பல இடங்களிலும் அவன் சஞ்சாரம் செய்து வரும்போது பிரம்மதேவர் அவன் முன்பு தோன்றி, அவனைப் புஷ்கரதீபத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று சொல்லி, அவனை அந்த தீபத்துக்கு அரசனாக்கினார். புஷ்ப வாஹனனுக்கு மிகவும் அழகியான லாவண்யவதி என்று மனைவி ஒருத்தி இருந்தாள். அவள் மூலம் அவனுக்கு பதினாயிரம் சுத்தவீரர்களான பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகளின் கல்வி போதனைக்காக, பிரசேதனமுனிவர் என்பவர் வந்தார். அவரைப் புஷ்பவாஹனன், அர்க்கிய பாத்தியாதிகளால் உபசரித்து ஆசனத்தில் அமர்த்தி உபசாரம் செய்து அவருடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது புஷ்பவாஹனன் அந்த முனிவரை நோக்கி, எனக்கு இத்தனைச் செல்வமும், பல பராக்கிரமம் பொருந்திய புதல்வர்களும், ஆசாரம், நன்னடத்தை முதலிய சிறப்புக் குணங்களுடன் கூடிய மனைவியும், இத்தகைய இராஜ்ஜியபோகமும் புஷ்ப வாஹனமும் ஆகிய இவையாவும் எவ்வாறு உண்டாயின? தாங்களோ, மூன்று காலங்களையும் அறிந்துரைக்கவல்ல ஞானியாகையால் நான் முற்பிறவியில் செய்த புண்ணியங்கள் இன்னவை என்று தெரிவிக்க வேண்டும் என்று கேட்டான். அதைக்கேட்ட பிரசேதன முனிவர், அரசனை நோக்கி அரசே! உன் முற்பிறப்பைச் சொல்லுகிறேன். நீ முன்பு பயங்கர வடிவம், விகாரமான நகங்கள், சிவப்புநிறச் செம்பட்டைமுடியும் கொண்ட அகோர ரூபமுடையவனாக இருந்தாய். அப்போது நீ ஒரு வேடன், தவம், வேள்வி முதலிய நற்கர்மங்கள் செய்வோருக்குத் தீங்கிழைத்து வந்தாய். உனக்கு மனைவி ஒருத்தி இருந்தாள்.

வேறு உறவினர், நண்பர் முதலிய எவருமே அப்போது உனக்கு இருக்கவில்லை. இந்நிலையில், செடி, கொடியாவும் அழிந்து ஆகாரங் கிடைக்காததால், பசியால் வருந்திய நீ காடு மேடுகளெல்லாம் அலைந்து திரிந்து கொண்டிருந்தாய், அப்போது அங்கிருந்த ஒரு தடாகத்தில் சிறிது தண்ணீரும் அதில் ஏராளமாக மலர்ந்த தாமரை மலர்களும், அந்த மலரைச்சுற்றி விசாலமான நிலப்பரப்பு முழுதும் சேறாக இருக்கக் கண்டாய். அதைக்கண்டதும் நீயும் உன் மனைவியும் அந்த சேற்றில் இறங்கி, நீரை அடைந்து அதிலிருந்த தாமரை மலர்களைப் பறித்துக் கொண்டு அவிமுக்த தலமான காசி மாநகரை அடைந்து அம்மலர்களை விற்றுப் பொருள் தேடிவாழலாம் என்று விரும்பி தெருக்களெல்லாம் சுற்றினீர்கள். அம்மலர்களை ஒருவரும் விலைகொடுத்து வாங்கவில்லை. எனவே நீங்கள் இருவரும் அம்மலர்களை விலைகூவி விற்றுக்கொண்டே ஓங்காரேசத்திற்கு அருகே வரும்போது தேவர்கள் முதலியவர்கள் ஸ்தோத்திரஞ் செய்யும் ஓசை உங்கள் செவியில்பட, அங்குள்ளவர்களில் யாராவது நீங்கள் வைத்திருந்த மலர்களை விலைகொடுத்து வாங்கக்கூடும் என்று நினைத்து, நீங்களும் அந்த ஓங்காரேஸ்வரத்தை அடைந்தீர்கள். அங்குள்ளவர்கள் வேதபாராயணமும் ஓங்காரமனனமும் நடனகீதமும், சிவபூஜையும் நிஷ்டையும் செய்பவர்களாக ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு வகையாகத் துதிப்பதைக் கண்டு நெடுநேரம் அவற்றை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்து ஓங்காரேசத்தைத் தரிசித்த பயனாக உனக்கும் உன் மனைவிக்கும் சிவபெருமானிடத்தில் பக்தியுண்டாகி இனி இம்மலர்களை விற்கக்கூடாது, என்று நினைத்து, ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தாலும், இவற்றை விற்கமாட்டோம், என்று சொல்லி அம்மலர்களையெல்லாம் அந்த ஓங்காரேஸ்வர லிங்கத்தின் மேல் கொட்டிவிட்டு, அங்கிருந்து பிரிந்து செல்ல மனமில்லாமல் அன்று இரவு முழுவதும் சிவபெருமானைத் தரிசித்துக் கொண்டே கண்விழித்துக் கொண்டிருந்தீர்கள். அன்று விடியற்காலையில் சிவபெருமான் உங்களுக்குக் காட்சி கொடுத்து மறைந்தார். அதனால் வியப்படைந்த நீயும் உன் மனைவியும் அங்கேயே தங்கியிருந்து, ஆலயத்தை சுத்தஞ்செய்து கொண்டும் ஆலய பூமியிலிருந்த பூண்டுகளையும் முட்செடிகளையும் வெட்டியெறிந்து திருத்தொண்டு செய்து காலங்கழித்து வந்தீர்கள். சிறிது காலத்திற்கெல்லாம் நீ உயிர்துறந்தாய். உன் மனைவியும் கற்புக்கரசியாக இருந்ததால் அவ்வக்கினியிலேயே பாய்ந்து உயிரிழந்தாள். இதுவே உன்னுடைய முற்பிறவியின் வரலாறு. நீ ஓங்காரேஸ்வரருக்குப் புஷ்பங்களைச் சமர்ப்பித்ததாலேயே, பொற்றாமரை வாஹனத்தையும் புஷ்பவாஹனன் என்ற பெயரையும் பெற்றாய். உன் மனைவியும் உன்னைப் பிரியாமல் சிவத்திருத்தொண்டு செய்து வந்தாளாகையால் அவளே உனக்கு மனைவியானாள். ஓங்காரேசத்திலேயே உனக்கு இத்தகைய சிறப்புகள் யாவும் உண்டாயின. நீ இந்தப் புஷ்கரத்வீபத்தை அரசு செய்து கொண்டிருந்து, வாரணாசியை அடைந்து, ஓங்காரேசனுக்குத் திருத்தொண்டும் பக்தியும் செய்து வருவாயாக என்றார்.

அம்முனிவர், இவ்வாறு கூறியதைக்கேட்டு மனம் மிகவும் மகிழ்ந்த புஷ்பவாஹனன், அவரை வணங்கி, தாங்களே அந்தணரில் உயர்ந்தவர் திரிகாலஞானியென்று தங்களையேசொல்லத்தகும். அநேகம் பிறவிகளில் செய்த புண்ணியத்தால், தங்கள் தரிசனம் எனக்கு கிடைத்தது. உன்மத்தனான எனக்கு தங்களுடைய திவ்வியதரிசனம் கிடைத்ததும் அந்த ஓங்காரேசுவரரின் மகிமையேயாகும் என்று பலவகையாக துதித்து அவருக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு, தன் மனைவியோடு வாரணாசியை அடைந்து, மத்ஸோதரியில், வடக்கும் ஓங்காரேசத்திற்கு எதிரிலுமாக விளங்கும் தேவஹ்ருதம் என்ற தீர்த்தத்தில் தன் மனைவியுடன் நீராடி கர்மானுஷ்டானங்களை முடித்தான். (இந்தத் தீர்த்தம் கலிகாலத்தில் ஒருவர் கண்ணுக்கும் புலப்படாது, ஆயினும் சிவானுக்கிரக முடையவருக்கே பார்வையாக புலப்படும்) பிறகு ஓங்கார ஸ்தானத்தை அடைந்து, ஈஸ்வரனை அர்ச்சனை செய்து வேத கீதங்களால் துதித்து, முக்தியை அடைந்தார்கள். இவ்வகையாக மானுடப் பிறவி எடுத்தவர்களுக்கு அடைதற்கரிய ஸ்தானமாக இருப்பது காசி நகரமேயாகும். அந்தச் சிவதலத்தில் சிவபூஜை செய்தவர்கள் அனைவரும் உருத்திர கணங்களாவார்கள். இதுவே சர்வசித்திகளை அடைவதற்கும் யோக சாதனைக்கும் மூலஸ்தானமாக விளங்குகிறது. இதுவே சோபானமாகவுள்ளது. அதிகம் சொல்லி என்ன பயன்? உலகிலுள்ள சகல ஸ்தலங்களையும் தரிசித்து எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடி முடித்த பயனையெல்லாம், காசித் திருத்தலத்தில் ஒருநாள் வசித்தவர்கூட அடைந்து விடுவார்கள். அங்குள்ள ஓர் உத்தியான வனம், தேவலோகத்திலுள்ள வனத்தைவிடச் சிறப்புடையது.

வியாசமுனிவரே! சிவபெருமான் அந்த வனத்தைப் பார்வதியாருக்குக் காண்பிக்க வேண்டி, தேவியையும் தம்மோடு அழைத்துக் கொண்டு அந்த வனத்திற்குச் சென்றார். அந்த வனத்தில் வில்வம், சண்பகம், கடம்பு, ஆல், அத்தி, தென்னை, வாழை, சுரபுன்னை, பாரிஜாதம், மந்தாரம், மா, இலுப்பை முதலிய மரங்களும் மல்லிகை முல்லை மனோரஞ்சிதம் முதலிய கொடிகளும் மலர்ந்து விளங்கின. வண்டுகள் ரீங்காரஞ் செய்து, மதுவுண்டு பண்பாடின. சக்கரவாகம் சகோரம் முதலான பறவைகள் அங்கு அதிகமாகக் காணப்பட்டன. யானை, புலி, கரடி முதலிய மிருகங்களும் மயில்களும் விளங்கின. அப்போது சிவபெருமான், உமாதேவியாரை நோக்கி, பெண்ணே! குயில்களும் கிளிகளும் பேசும் பேச்சைக் கேட்டாயா? தேவலோகம், வைகுண்டம் முதலிய உலகங்களில் இருக்கும் பாரிஜாதம் போன்ற சிறப்புடைய மரங்கள், இந்த வனத்தில் மிகுதியாக வளர்ந்திருப்பதைக் கண்டாயா? கையிலே வைகுண்டம், சத்தியலோகம் முதலிய உலகங்களிலுள்ள மரங்களும் மலர்களும் கனிகளும் இங்குள்ளவைகளைப்போல என்னைத் திருப்தி செய்வதில்லை. பர்வதராஜ குமாரீ! இந்த உத்தியானவனமானது என் சிவலோகத்தில் இருக்கும் வனத்தை விடச் சிறப்புடையது. இங்கு விஷ்ணுமூர்த்தி என்னைப் பூஜித்து, ஓங்கார ஸ்தானத்தையடைகிறார். பிரம்மதேவனும் தவஞ்செய்து என்னைத் தியானம் செய்கிறான். பிரமரிஷிகளும் யக்ஷ கின்னரர்களும் மாலைப் பொழுதில் இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி, என்னுடைய ஓங்கார ஸ்தானத்தைத் தரிசித்து செல்கிறார்கள். இதோ தெரிகிறதே இதுதான் கபிலாஹ்ருதம் என்ற தீர்த்தம். இங்கு, முன்பு பிரம்மதேவன் சத்தியலோகத்திலிருந்து தினந்தோறும் பால் கொண்டு வந்து என்னை அபிஷேகம் செய்து பூஜிப்பது வழக்கம். ஒருநாள், அவனது உலகில் அவனுடைய பசுக்கள் பிரமனுக்குப் பால் கொடுக்காததால், அவன் மிகவும் மனம் வருந்தி என்னைப் பிரார்த்தித்தான். நான் அவனது பசுக்களை அண்ணாந்து பார்த்தேன். அதனால் அப்பசுக்கள் கபிலை வர்ணமாகப் பாலைப் பொழிந்தன. அந்தப் பால் விழுந்த இடமெல்லாம் கபிலாஹ்ருதம், என்ற இடமாயிற்று. இதன் கரையிலே கோக்ஷீரேசன் என நான் விளங்குகிறேன்.

இந்த கபிலாஹ்ருதத்தில், நீராடி கோக்ஷீரேசனைத் தரிசனம் செய்தவர்கள். சிவலோகத்தில் வாழ்வார்கள். பிரமனால் பிரதிஷ்டை செய்யப்பெற்று ஹிரண்ய கர்ப்பேசனாகவும் விஷ்ணுவினால் பூஜிக்கப்பெற்றுச் சுநீலிஸ்வரனாகவும் நான் விளங்குகிறேன். அவற்றைத் தரிசனம் செய்தவர்கள் பெரும் போகங்களை அனுபவிப்பார்கள். இங்கே முன்பு சில அசுரர்கள் புலியுருவாகப் பலரையும் துன்புறுத்தி வந்தார்கள். அதனால் என்னைத் தேவர்கள் சிவலிங்கத்தில் பூஜித்தார்கள். அதனால் நான் புலியுருவத்தோடு அவ்வசுரர்களைச் சங்காரஞ்செய்தேன். அந்தக் காரணத்தால் நான் வியாக்கிரேசனானேன். இந்த வியாக்கிரேசனைத் தரிசித்தவர்கள் நற்கதியடைவார்கள். பார்வதி! நீயும் ஒரு காலத்தில் உற்பலன், விமலன் என்னும் அசுரர்களுக்கு ஆடவர்களால் இறவாமையும் சிறந்த வரங்களையும் தர, அவர்கள் பலரையும் துன்புறுத்தி வந்தார்கள். தேவர்களின் வேண்டுகோளின்படி நீயே அவர்களை அழித்து அப்பொழுது ஓர் கங்கப்பிரதிஷ்டை செய்தாய். உன்னால் இறந்த அசுரர்கள் என்னிடம் தனக்கு முக்தியளிக்கும்படி வேண்டியதால், நான் அவர்களுக்கு முக்தியளித்தேன். அதுவே நிர்வானேசம் எனப்படும். (நிர்வாணம்; மோஷம்) நிர்வாண ஸ்தானத்தைக் கண்டவுடனேயே பசுபாசங்கள் விலகிவிடும். நான் பலகணங்களுடன் இவ்விடத்தில் முதலில் தங்கினேன். அதனால் இந்த இடம் ஜேஷ்டேசம் என்றும் அமலேசம் என்றும் பெயர் பெற்றது. இதைத் தரிசித்தவர்கள் ஒருபொழுதும் துக்கமடையமாட்டார்கள். பார்வதி! இப்படிப் பல கோடி லிங்கங்கள் இந்த ÷க்ஷத்திரத்தில் உள்ளன. இவற்றைக் கண்ணால் கண்டவுடனேயே அகங்காரம் ஒழிந்து முக்திப் பேற்றிற்கு வழிபிறக்கும். பூர்வத்தில் தேவர்களும் அசுரர்களும் என்னைத் துதித்துத் தவஞ்செய்து பூஜித்தார்கள். அப்போது நான் அவர்களுக்குப் பூமியிலிருந்தே தோன்றி காட்சியளித்தேன். அதுமுதல் அவர்களால் மஹாதேவஸ்தானம் என்று அந்த இடம் பெயர் பெற்றது. அந்த லிங்கத்தைத் தரிசித்தவர்கள் முக்தி யடையும்படி வரம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் அனைவரும் என்னை வேண்டியவாறே, நான் அந்த அவிமுக்தேச லிங்கத்திலிருக்கிறேன். அங்கே இறப்பவர்களுக்கு முக்தியை வழங்கிக் கொண்டிருக்கிறேன். பார்வதி! உன் தந்தையான பர்வதராஜன் பிரதிஷ்டை செய்த கைலேச லிங்கத்திலிருந்து என்னைத் தரிசித்தவர்களுக்கு நான் சிவலோகப் பிராப்தியை வழங்குகிறேன். வரணை அசி என்ற இரண்டு நதிகளின் சங்கமஸ்தானத்தில் இருக்கும் சங்கமேசத்தைத் தரிசித்தவர்கள், பிறவிகளை ஒழித்தவராவர். அந்த இரண்டு நதிகளும் கூடும் காரணத்தாலேயே காசித்தலத்திற்கு வாரணாசி என்ற பெயர் உண்டாயிற்று. இந்தத் திருத்தலத்தின் நடுவில் மத்திய தேசமானது, யோகங்களையெல்லாம் கொடுக்கவல்லது. இன்னும் சித்தேசம், போகேசம் சுக்கிரேசம், சம்புகேசம், கம்பீரேசம், இயமேசம் கேதாரேசம், ஈசானேசம் முதலிய இடங்களிலும் பல புண்ணிய மூர்த்தங்களாக விளங்கி வருகிறேன் என்று சொன்ன சிவபெருமான், அவ்விடத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த நந்திதேவருக்குத் திருக்கைலாயமலைக்குக் காவல் புரியும் அதிகாரத்தையும் தம் கணங்களுக்கெல்லாம் தலைமையுங் கொடுத்தார் என்று ஸனத்குமார முனிவர் வியாஸ முனிவருக்குச் சொன்னார்.

45. சிலாத முனிவர் செய்த தவம்

வியாஸமுனிவர், வணங்கி, ஸ்வாமி, நந்திதேவர் என்பவர் யார்? அவர் யாருடைய புத்திரர்? அவர் சிவபெருமானை எவ்வாறு பூஜித்து அத்தகைய உயர் பதவியை அடைந்தார்? இவ் விவரங்களைத் தாங்கள் எனக்கு விரிவாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டார். ஸனத்குமாரர் சொல்லத் துவங்கினார்.

முன்பு ஜிதேந்திரியனாகவும் தர்மசீலனாகவும் சிவபக்தனாகவும் ஒரு முனிவர் இருந்தார். அவர் பெயர் சிலாதர். அவர் சிவலோகத்தை நாடிச் செல்லும்போது, தனது பிதுர்க்கள் சிலர் நரகத்திலிருந்து துன்பமடைவதைக் கண்டார். அவர் அப்பிதுர்க்களை நோக்கி நீங்கள் யார்? என்று கேட்க, அதற்கு அவர்கள் நாங்கள் சிலாதனுடைய பிதுர்க்கள். அவன் தவஞ்செய்து சுவர்க்கத்திற்கு வந்தான். ஆனால் அவன் புத்திரர்களைப் பெற்றிலன்! என்று சொன்னார்கள். அதற்கு அவர் நான் தான் சிலாதன். எனக்குப் புதல்வர்கள் உண்டாகவில்லையே! என்றார். அதற்கு பிதுர்க்கள், நீ மஹாதேவனை ஆராதித்து ஒரு புதல்வனைப் பெறுவாயாக! என்றார்கள். அதைக் கேட்டதும் சிலாத முனிவர் பூவுலகிற்குத் திரும்பி சிவபெருமானைக் குறித்து ஆயிரம் தேவ வருஷங்கள் அவர் முன்பு காட்சியளித்து, சிலாதா! உனக்கு வேண்டும் வரம் யாது? என்று கேட்கச் சிலாதமுனிவர் அவரைப்பணிந்து எழுந்து, பரமதேவனே! மகேசா! படைப்பு முதலான ஐந்தொழில்களுக்கும் கர்த்தனே! பிராமணபதியே! மன்மதனை எரித்தவரே! யோகிகளால் தியானிக்கப்பட்டவரே! பர்வத வாசியே, ஞாதுரு ஞானஜேயஸ்வரூபியே! தேவ தேவா! வரதா! சர்வவியாபியே! லோக நாயகரே! இஷ்டகாமியங்களைக் கொடுக்கவல்ல பஸ்ம ருத்ராக்ஷதாரியே! தேஜஸ்பதியே! கங்காதரா! சந்திரசேகரரே! கரணாகத்வத்ஸவரே! அடியேனுக்கு சற்புத்திரனாக ஒருவனைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்து மீண்டும் பணிந்து, சுவாமி! அத்தகைய மைந்தனைத் தாங்கள் எனக்குக் கொடுப்பீர்களாயின், அவன் அயோநிஜனும் மரணமற்றவனும் சர்வசக்திமானும் தங்களுக்கு சமானனும் தங்களைத் தரிசிப்பவர்களால் தரிசிக்கத் தக்கவனுமாக இருக்கும்படித் தயை புரியவேண்டும்! என்று கேட்டார். முக்கண்ணரான சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து, சிலாதா, நீ விரும்பிய வரம் தந்தேன். நீ செய்த இந்த தோத்திரத்தைத் துதி செய்தவர்கள் துர்மரணமடையமாட்டார்கள். பூதபிரேதபைசாச யக்ஷராக்ஷச துன்பங்களையும் அடையமாட்டார்கள்! என்று திருவாய் மலர்ந்தருளி, மறைந்தார்.

அதற்குப் பிறகு சிலாத முனிவர், மகிழ்ச்சியுடன் தம் ஆசிரமத்திற்குச் சென்று நடந்தவற்றை அங்கிருந்தவர்களிடம் சொல்லி, சிலகாலஞ்சென்ற பிறகு, ஒரு வேள்வி இயற்ற நினைத்துப் பூமியை உழுவித்தபோது, அந்த கலப்பையின் படைச்சாலில் கோடி மன்மதனுக்கு இணையான அழகும் அக்கினியைப் போன்ற காந்தியும் கொண்டு ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். அப்போது அங்கிருந்த சில முனிவர்கள் இது அரக்கர்களின் மாயையாக இருக்குமென்று அங்கிருந்து போய்விட முயன்றனர். அப்பொழுது, அந்தக் குழந்தை அப்பா! அப்பா! என்று வாய்விட்டுக்கூப்பிட்டுக் கொண்டே மெல்ல நடந்து சிலாத முனிவரை அணுகியது. சிலாதர், அந்தக் குழந்தையின் குரலைக் கேட்டும், அதை நம்பாமல், அரக்க மாயை என்றே அவரும் நினைத்து அங்கிருந்து போக முயன்றார். அப்போது ஒரு வானொலி முழங்கியது. சிலாதனே! இவன் உன் புதல்வன்! சிவபெருமான் முன்பு உன் தவத்திற்கு இரங்கி மைந்தனைத் தந்திருக்கிறார். நீ இந்தக் குழந்தையை எடுத்து வளர்ப்பாயாக! இதனால் உனக்கும் உன் பிதுர்க்களுக்கும் மகிழ்ச்சி உண்டாகியதால் இவனுக்கு நந்தி எனப் பெயருண்டாகும் என்ற அந்த வானொலி முழங்கியது. அதைக் கேட்ட சிலாதமுனிவர் அந்தக் குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு, தம் ஆசிரமத்தை அடைந்தார். ஜாதகர்மம், சவுனம், உபநயனம் முதலிய கிரியைகளை அந்தந்த காலத்தில் செய்தான். ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் சிஷை, வியாகர்ண, சந்தசி, நிருத்தியம், ஜோதிடம், கற்பங்கள், வேதத்திற்குரிய சொற்பதக்கிரமங்கள், புராணங்கள், தர்ம சாஸ்திரங்கள், ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வ வேதம், சிற்பம், சகுனம், சர்ப்பவித்தை, பரகாயப் பிரவேசம், அஷ்ட வியாகரணம், உப புராணங்கள், இதிகாசங்கள், தேவயாகம், பிதுர்யாகம், மானுடயாகம், பூதயாகம், பிரமயாகம் என ஐந்து நல்ல முறைகளையும் மந்திரங்கள் மாத்ரு தத்வம், யோகம் முதலியவற்றையும் அந்த நந்திபகவான் ஐந்தே தினங்களில், தம் தந்தையிடம் அறிந்து, யாவற்றிலும் சாமர்த்தியமும் கம்பீரமும் பிரியவசனமும், அசூயையின்மையும் கொண்டு மனதிற்கும் விழிக்கும் ஆனந்தம் ஏற்படச் செய்பவராக வளர்ந்து, ஏழு வயதடைந்தார்.

அப்போது மித்ராவருணன் என்ற தேவர்கள், தவமுனிவர் வடிவில், சிலாதரின் ஆசிரமத்தை அடைந்தனர். சிலாதர் அவர்களை வரவேற்று உபசரித்து, உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தினார். அப்போது அத்தேவர்கள் சிலாத முனிவரை நோக்கி, நீங்கள் நலமா? இவ்வாசிரமத்தில் யாவரும் சுகமா? உன் புதல்வன் சரியாக வேதாத்தியயனஞ் செய்கிறானா? நியமந்தவறாமல் அனுஷ்டானங்களைச் செய்கிறானா! உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்படி நடந்து கொள்கிறானா! என்று கேட்டனர். அதற்குச் சிலாத முனிவர், நலம்! அவனே என் வமிசத்தை விருத்தி செய்யத் தக்கவன்! என்று சொல்லி, அவனை வரவழைத்து அவர்களை நமஸ்கரிக்கச் செய்தார். அப்போது தேவர்கள், நந்தியை நோக்கி, நீ குரு பணிவிடை செய்து அழியாத பதவியை அடைவாயாக! என்று வாழ்த்தினார்கள். அதைக்கேட்ட சிலாத முனிவர், சிறிது பயந்து, தன்மைந்தனை அனுப்பிவிட்டு, அவர்களை நோக்கி, முனிவர்களே! நீங்கள் மஹாதவசிகள், சர்வக்ஞர்கள், திரிகால ஞானிகள். இப்படியிருக்க என் மகனைத் தீர்க்கமான ஆயுளுடையவனாக இருப்பாயாக என்று அவனை நீங்கள் வாழ்த்தவில்லையே! பெரியோர்களாக இருப்பவர்கள் தம்மைச் சேவித்த இளைஞர்களை தீர்க்க ஆயுளுடன் வாழ்வாயாக என்று வாழ்த்துவதே முறையாக இருக்க நீங்கள் என் புதல்வனை அவ்வாறு வாழ்த்தாமல் இருந்ததைக் குறித்து நான் சந்தேகிக்கிறேன். அதற்குக் காரணம் என்ன என்பதைத் தங்களிடமிருந்தே அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்று கேட்டார். அதற்கு முனிவர் வடிவில் வந்த மித்திரா வருணர்கள் அவரை நோக்கி, சிலாதனே! உன் மகனுக்கு ஆயுட்காலம் எட்டே வயது தான், ஆகவே நாங்கள் அவ்வாறு வாழ்த்தவில்லை என்றார்கள். அதைக் கேட்ட சிலாத முனிவர் மிகவும் துக்கங்கொண்டு மயங்கித் தரையில் சாய்ந்தார். அப்போது அம்முனிவர்கள் சிலாதரைத் தேற்றி, வினைக்கு என்ன செய்வது? என்று சமாதானம் சொல்லிவிட்டு அங்கிருந்து அவரிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.

வியாஸ முனிவரே! மித்திரா வருணர்கள் இவ்வாறு சொல்லிச் சென்றதும் சிலாத முனிவர் அவர்கள் கூறிய சமாதானப் பேச்சுக்களால் மனம் தேறாமல் கூக்குரலிட்டு அழுதார். அதைக்கண்ட நந்திதேவர், விரைந்து வந்து தந்தையைப் பணிந்து, நீங்கள் துக்கப்படுவதற்குக் காரணம் என்ன? அதை எனக்குச் சொல்ல வேண்டும்! என்று கேட்க சிலாதர் மகனே! நமது ஆசிரமத்துக்கு வந்திருந்த மித்திரா வருணர்கள் சொன்ன சொல் ஒரு போதும் தவறாது. அவர்கள் நீ இன்னும் ஓராண்டுக்குள் இறந்து விடுவாய் என்று என்னிடம் சொல்லிப் போய்விட்டார்கள். அதனால் என் மனம் தாளாது நான் வருந்துகிறேன் என்றார். இவ்வாறு தன் தந்தை விசனப்படுவதைக் கண்ட நந்திதேவர் தந்தையே! தேவதானவ யக்ஷராக்ஷசர்களுடன் அந்த யமனே வந்தாலும் என் உயிரை அவர்களில் ஒருவருமே கொண்டு செல்லமுடியாது. இதற்காக நீங்கள் வருந்த வேண்டாம் என்றார். சிலாத முனிவர் நந்தியை நோக்கி, மைந்தனே! நீ என்ன தவஞ் செய்திருக்கிறாய்! உன்னைப் பெறுவதற்குத் தான் எத்தனையோ ஆண்டுகள் தவமிருந்து உன்னை என் மகனாக அடைந்தேன். இதுவரை நீ யாரை உபாசனை செய்திருக்கிறாய்? உனக்கு வரவிருக்கும் ஆபத்தை எப்படி உன்னால் தடுத்து நிறுத்தமுடியும்? யாராலுமே தடுக்கமுடியாத மிருத்யுவை (மரணத்தை) உன்னால் எப்படித் தடுக்கமுடியும்? நீ எப்படித் தடுப்பாய்? என்று கேட்டார். அதற்கு நந்திதேவர், தந்தையே! நான் அந்த யமனை தவம் தானம் முதலியவற்றால் வென்றுவிடலாம் என்பதை நானே நம்பவில்லை. பிநாகபாணியான மஹாதேவரைவிடச் சிறந்தவர்களில்லை அவரே மிருத்யுஞ்ஜயர். அவர் பெயர்கூடத் தங்களுக்கு மறந்து விட்டதோ? அவரே யமனை வெல்வார்! என்றார். அதைக் கேட்ட சிலாத முனிவர், அந்தோ மகனே! நான் ஆயிரம் தேவ வருஷங்கள் வரை அந்தச் சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவஞ்செய்து தானே உன்னை என் மகனாகப் பெற்றேன். நீ இன்னும் உனக்கு இருக்கும் ஒரே ஆண்டு மானுட ஆயுட்காலத்திற்குள் பரம பதியை எவ்வாறு தரிசித்து விடமுடியும்? அடைதற்கரிய அரனாரை நான் தரிசித்து மிருத்யுவை வென்று விடுவேன் என்று எந்தத் தைரியத்தால் நீ சொல்லுகிறாய், மகனே! என்றார். அதற்கு நந்திதேவர், தந்தையே! சிவபெருமான்: தானம், தவம், வித்தை முதலியவற்றைக் கண்டு சந்தோஷிப்பவர் அல்லர். நிர்மலமான பக்திக்கே திருவுளங்களிப்பவர்.

அத்தகைய சிவபெருமானைப் பக்தியுடன் துதித்து, மிகவும் எளிதாக எந்தவிதத் தடையுமின்றி அவரைத் தரிசிப்பேன். தைரியமாக! உங்கள் மனம் விரைவில் மகிழ்ச்சியடையும்படி, நான் பக்தி செய்து மீள்வேன். நான் நின்றும் திரிந்தும் ஓடியும் காட்டில் இருந்தும் எந்த நிலையில் இருந்தாலும் என்னை நீங்கள் அஞ்சும் மிருத்யுவானவன் பார்க்கக்கூட முடியாமல் தவிப்பான். நீங்கள் இந்த விஷயத்தில் மிகவும் தைரியமாக இருக்கலாம். மிருத்யுக்கள் ஆயிரவரும் யமதருமர் கோடியரும் தண்டசூல பாசபாணிகளாய் மகாகோபத்துடன் ஒன்று கூடிவந்தாலும் என் உடலிலுள்ள ஒரு ரோமத்தைகூட அசைக்கமாட்டார்கள். அவர்களால் எனக்கு எந்தவிதமான பயமும் இல்லை. வீணாக நீங்களே என்னைப் பயமுறுத்த வேண்டாம். நான் இங்கிருந்து சென்றவுடன் நீங்கள் செய்யவேண்டிய சிலவற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள். நீங்கள் நீரில் இறங்கி பாவசக்தியுடன் சதருத்திரீயத்தை, ஜெபித்து, மஹாதேவனைத் தியானித்துக் கொண்டு இருங்கள். நானும் அவ்வாறே செய்வேன். அப்படி நான் செய்யும்பொழுது மிருத்யுகால யமாதிகள் என்னை வெல்ல வல்லவர்களல்லர். மிருத்யுவை வெல்ல பசுபதியையன்றிப் பிறருக்கு அரிது. நீங்கள் என்னை விரைவில் அனுப்புங்கள் என்றார். சிலாதமுனிவர் நந்திதேவர் கூறிய வார்த்தைகளை நம்பி, சிறிது மனதிடத்துடன் மிருத்யுவை வென்று வருக! என்று வாழ்த்திவிட்டு, மகனே! நீ இடையூறுமின்றி தவஞ்செய்வாயாக! என்று சொன்னார். நந்திதேவர் தம் தந்தையை வணங்கி வலம் வந்து அவரது கால்களைப் பற்றிக் கொண்டு, நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்! என்று வேண்டி, அவரிடம் விடைபெற்றுக் கொண்டார். பிறகு ஏழு வயதேயுடைய நந்திதேவர் சிவத்தியானத்துடன் மிருத்யுவை வென்று வரும்படித் திடங்கொண்டு, கம்பீரமாக நடந்து, தவஞ்செய்யும் விருப்பத்துடன் சென்றார்.

46. நந்திதேவர் வரம் பெறுதல்

சிலாத முனிவரிடம் விடைபெற்றுச் சென்ற நந்திதேவர் நதிகளில் சிறந்த புவனை நதியில் மூழ்கி நின்று சித்தத்தைச் சிவன் பால் வைத்து ருத்திர மந்திரம் ஜபித்து, மிருத்யுவை (மரணத்தை) வெல்ல வேண்டும் என்ற கருத்தோடு, வெட்பதட்பங்களைக் கருதாமல் உலகத்தை மறந்து, பரசிவத்தில் ஐக்கியமானவரைப் போல விளங்கினார். உருத்திர மந்திர ஜபத்தை ஒருகோடி வரை ஜபித்து முடிக்கும்போது, பரமசிவன் அவருடைய தியானத்திற்கு மகிழ்ந்து காட்சியளித்து, நந்தி! உன் ஜபத்திற்கு நான் மகிழ்ந்தேன். நீ விரும்பிய வரத்தைக் கேள் என்றார். நந்திதேவர் தமது தியானத்தை நிறுத்திச் சிவபெருமானை வணங்கி, மிருத்யுஞ்சய மூர்த்தியே! நான் மீண்டும் ஒருகோடி தரம் உருத்திர ஜெபம் செய்து முடிக்கும்படி அருள்பாலிக்க வேண்டும் என்றார். அவ்வாறே ஆகுக என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். நந்திதேவர் மீண்டும் நீரிலிருந்து ஒருகோடி ருத்திர ஜெபஞ் செய்து முடித்தார். அப்பொழுது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, நந்தி! உனக்கு என்ன வரம் வேண்டும்! என்று கேட்க நந்திதேவர், இறைவா நான் மீண்டும் இன்னும் ஒரு கோடி முறை ஜெபம் ஜெபிக்கும்படி அருள் செய்ய வேண்டும் என்றார், அவ்வாறே ஆகுக! என்று வரமளித்து சிவபெருமான் அந்தர்த்தானமானார். இதுபோலவே ஆறுமுறைகள் சிவபெருமானிடம் வரம்பெற்று ஏழுகோடிதரம் ஜெபம் முடித்துப் பிரளய காலாக்கினியைப் போன்ற தேஜஸோடு நந்திதேவர் ஜொலித்தார். அவரது தேஜஸை காணமுடியாத தேவர்களும், யமதர்மன் முதலிய அஷ்டதிக்குப் பாலகர்களும் பயந்து நடுங்கினார்கள். சிவபெருமான் நந்தியின் திட சித்தத்தைக் கண்டு, திருவுளம் மகிழ்ந்திருக்கையிலேயே நந்திதேவர் எட்டாவது கோடியையும் முடிக்கக் கருதி, உறுதியுடன் ஜெபித்துக் கொண்டிருந்தார். நந்தியின் ஜபம் முடியும் தருணத்தில் சிவபெருமான் காளகண்ட சதுர்ப்புஜ நாகபூஷண வியாக்கிர சர்மாம் ப்ரதாரியாக வேதங்கள் நான்கும் புடைசூழ்ந்து முழக்கஞ்செய்யவும் பிரமனும் விஷ்ணுவும் இருபுறமும் நிற்கவும், கணபதி கந்தர்கள் தம்முடன் இருக்கவும் பார்வதி தேவியாருடன் நந்திதேவரின் முன்பு காட்சியளித்துத் தம் திருக்கரத்தால், அவரது கையைப் பற்றி, புவனை நதிக்கரைக்குக் கொண்டு சென்று அவர் உடலை ஆசையுடன் தடவிக் கொடுத்து, சிலாதபுத்திரனே! உன்னுடைய திட வைராக்கிய ஜெபத்தைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன். நீ நல்ல தவத்தைச் செய்தாய், உன் மனத்தில் யாதுள்ளதோ அதைச் சொல். சிறிதும் அஞ்சற்க! என்றார்.

நந்திதேவர் சிவபெருமானைப் பணிந்து, மகாதேவரே, அடியேன் இனி மேலும் ஒரு கோடி ஜெபஞ் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்! என்றார். அதற்குச் சிவபெருமான், நந்தீ! இதுவரையில் நீ செய்த ஏழுகோடி ஜெபத்திற்கே உனக்கு எல்லாப் பதவிகளையும் கொடுத்திருக்க வேண்டும். இனி நீ ஜெபம் செய்யவேண்டாம், மீண்டும் ஜெபம் செய்து யாது வரம் பெறுவாய்? பிரமத்வம், விஷ்ணுத்துவம், இந்திரத்வம், சூரியத்வம், உருத்திரத்வம், மோக்ஷம் அல்லது எனக்குச் சமான தவம் இவற்றில் எதை விரும்பினாலும் கொடுப்பேன் என்றார். நந்திதேவர், ஜெபம் செய்வதை நிறுத்தி சிவபெருமானின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி அவர் எதிரே நின்று ஓம் தேவாதி தேவாய நம: மஹாதேவாய நம: காமாங்க நாசாய நம: திரிலோகம்ஸஹராய நம: நீலகண்டாய நம: ஸஹஸ்கர ரஸே நம: ஸஹஸ்ரகாணாய நம: ஸர்வத பாணிபாதாய நம: சர்வதோக்ஷிமுகாய நம: ஸர்வத : ஸ்ருதயே நம: சுதீந்த்ராய நம: சந்த்ரசூர்யாக்னிநேத்ராய நம: சூல முத்கரபாணியே நம: பரசிவதேராய நம: த்ரிசூல ஹஸ்தாய நம: ஸஹஸ்ர பாஹவே நம: ஸஹஸ்ரநேத்ராய நம: ஆதித்யா நாம்பதியே நம: யோகாதிகம்பாய நம: காளகண்டாய நம: யக்ஞாய நம: அம்ருதாய நம: ஸர்வதேவஸ்துதாய நம: உமாருத்ரேந்த்ரரூபாய நம: நாராயணாய நம: த்ரிபுரக்நாய நம: லலாடாங்கித நேத்ராய நம: மஹிஷாந்தக ஹர்த்ரே நம: தக்ஷிணாமூர்த்தியே நம: குமாரகுரவே நம: குமாரவரதாய நம: மஹா ஹாஸாய நம: ம்ருத்யுபாஸோகர ஹஸ்தாய நம: ஹிமவத்விந்த்ய மேருபர்வத வாஹநே நம: கைலாய வாஸிநே நம:  தநேய்வரஸகாய நம: விஷ்ணு தேஹார்த்த ஸம்ஸ்தாய நம: விஷ்ணுவரதாய நம: அந்தர் பூதாதி வாஸாய நம: ஸூக்ஷ்மாய நம: ஷேத்திரக்ஞாய நம: விஷ்ணுவே நம: லோக கர்த்ரே நம: ஸப்தருஷயே நம: துர்வாஸஸே நம: சிவபிநே நம: வசிஷ்டாய நம: அவத்யாய நம: அஜராய நம: அமராய நம: அக்ஷயாய நம: புண்யரூபனே நம: ஓம் மஹாத்மனே நம: என்று பலவாறு துதித்து சுவாமி! எனக்கு இந்திரத்வம் பிரமத்வம், லோக பாலகத்வம், சூரியத்வம் முதலிய எதுவும் வேண்டியதில்லை. அடிக்கடி பிறப்பது, இறப்பதுமான ஜனன மரண துக்கங்களை அனுபவியாதிருக்க வேண்டுகிறேன். மேலும் தாங்கள் தேவி மைந்தர்களுடன் எழுந்தருளியிருக்கும் அந்தப்புரத்தில் நானும் உடன் இருக்க வேண்டும். பஹிர்முகத்தில் தங்களைத் தரிசிப்பதைப் போலவே அந்தர்முகத்திலும் தங்களைத் தரிசித்துக் கொண்டே இருக்கவேண்டும். தாங்களே எனக்குக் கதி! எனக்கு குருநாதன் நீரே! தங்கள் திருவருளையடையாதவர்கள் அழிவார்கள். ஆகையால் மரணத்தை ஒழிக்கும் வல்லமையில்லாத கடவுளை நான் ஆஸ்ரயிக்கவே மாட்டேன். அத்யந்தமான சுகத்தைத் தரவல்ல பரம்பொருளை நான் பார்த்து விட்டேன். அடியேன் உம்மிடம் நீங்காத அன்பும் பக்தியும் பெற்று தங்களையே ஆஸ்ரயித்தவனாகி ஜனன மரணதுக்கங்களை ஒழிக்கும் ஆற்றலும் என்னால் நற்கதியை அடைய விரும்பி, என்னையுண்டு செய்த எனது பிதுர்வர்க்கத்துக்கு அழியாத சிவபதவியும், என்னால் ஸ்துதி செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தை வாசித்தவர்களுக்கு கைலாயவாசமும் சதுர்த்தசி திதியில் இந்த நாமங்களால் அர்ச்சித்து சதம்ருத்திரீயம் ஜெபித்தவர்களுக்கு காணாபத்தியமும் தந்தருள வேண்டும் என்று விண்ணப்பஞ் செய்தார்.

தன்னைப் பணிந்து நின்று, இத்தகைய வரங்களைக் கேட்டுக் கண்களில் பெருகிய ஆனந்தக் கண்ணிரால் தம் திருவடிகளை அபிசேகித்து இரு கரங்களாலும் பற்றி நின்றார் நந்திதேவர். அவரைச் சிவபெருமான் தம் திருக்கரத்தால் எடுத்து விபூதியால் உத்தூளனஞ் செய்து அலங்கரிக்கப்பட்ட தேகத்துடன் அணைத்து தழுவி தாமரை மலர்போன்ற தம் திருக்கரங்களால் அவர் உடலை ஸ்பரிசித்து, இவன் எம்மை ஆனந்த பாஷ்பத்தால் ஓரபிஷேகம் செய்தானாகையால் இவனுக்கு இரண்டு அபிஷேகங்களை செய்ய வேண்டும் என்ற கடைக்கண் பார்வையாலும் வாக்காகிய அமுதத்தாலும் அபிஷேகம் செய்தார். திருக்கண்சாத்தி, (திருவாய் மலர்ந்தருளினார் என்ப) பிறகு நந்தியை நோக்கி மகனே! என்னைத் தரிசித்தவர்கள் ஒரு போதும் மிருத்யு (மரண) பயம் அடைவதில்லை. என்னிடம் உனக்கு நிலையான பக்தியிருப்பதை நான் அறிவேன். நீ கேட்டவாறு மூப்பு, சாக்காடு, தாபத்திரயங்கள் இவற்றை ஒழித்து உன்னுடைய பிதுர்களுடன் என்னுடைய பாதாரவிந்தத்தில் வாழக்கடவாய். உன்னைத் தரிசித்தவர்களும் என்னைத் தியானித்தவர்களும் என் சிவலோகத்தில் வாழ்வார்கள். நீ எனக்கு இஷ்டனாகவும், என் கணங்களுக்கு அதிபனாகவும் எனக்கு இணையான பராக்கிரமமும் யோக வலிமையும் பெற்று என் அருகிலேயே வாழ்வாயாக. எல்லா வளங்களும் நிறைந்துள்ள க்ஷீரசாகர மத்தியில் விளங்கும் தீபத்தினையும் எப்பொழுதும் கிழியாமல் பரிமளத்துடன் விளங்கும் வெண்பட்டு ஆடையும் ஆயிரந்தாமரை மலர்களான மாலையையும் உனக்குத் தருகிறேன்! என்று அவ்வாடையை உடுத்தி, அந்த மாலையை கழுத்தில் அணிவித்தார். அதனால் நந்திதேவர் முக்கண்ணரைப் போல விளங்கினார். அப்போது சிவபெருமான் நந்தியைக் கையில் கொண்டு நந்தீ! உன்னால் பூஜிக்கப்பெற்ற இந்த ÷க்ஷத்திரம் ஜாப்யேஸ்வரம் (ஜெபம் செய்யப்பட்ட இடம்) என்ற பெயரால் வழங்கப்பெறும். இங்கு நாற்புறமும் ஓர் யோசனை விஸ்தீரணம் வரையில் சித்த÷க்ஷத்திரம் என்று பிரசித்தம் ஆகும். ஆகையால் இங்கு பலர் தவஞ் செய்யப்போகிறார்கள். மனோவாக்குக் காயங்களால் சொற்ப புண்ணியத்தையாவது இங்கு செய்வார்களானால் அவை ஆலமரத்து விதை பெரிய மரமாவதைப்போல, சிறப்பான பயனைக் கொடுக்கும். இந்த ÷க்ஷத்திரத்தில் நீ செய்த ஜபத்தை ஓர் ஆண்டுக்காலம் ஸ்மரித்தால், உருத்திர சாரூப்பியத்தை அடைவார்கள் என்று கூறினார். அப்பொழுது நந்திதேவர் ஆனந்தமடைந்து ஆற்று நீரைக் கையில் எடுத்துச் சிவபெருமானை நோக்கி, சுவாமி! இந்த நதி இன்று முதல் நந்தீபுவனை என்ற பெயரைப் பெற்று விளங்கவேண்டும் என்று கேட்கச் சிவபெருமான் அவ்வாறே அருளினார். உடனே தாமரை முதலிய மலர்கள் நிரம்பிய அந்த நதியிலிருந்து, அந்த நதி நங்கையானவள் செந்தாமரை மலர் போன்ற விழிகளும் பொன்மேனியும் மேகம்போலும் கூந்தலும் பர்வதங்களுக்குச் சமமான தனங்களும் உடையவளாய்ச் சர்வ பூஷணங்களால் அலங்கரிக்கப்பட்ட உருவத்தோடு தோன்றிச் சிவபெருமானை வலம்வந்து வணங்கி கைகட்டி நின்றாள்.

அப்பொழுது சிவபெருமான், பெண்ணே, இந்த நந்தி என்னைக் குறித்து உன்னிடத்திலிருந்து ஆத்மயக்ஞஞ் செய்ததால் உனக்கு யக்ஞோதகம் என்ற பெயர் உண்டாகும் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதற்கு அந்த நதிநங்கை, சுவாமி! இந்நந்தி என்னிடமிருந்து தவஞ் செய்த படியால் அவர் எனக்குப் புதல்வன் என்றும் நான் அவருக்குத் தாய் என்றும் புலப்படும்படி, நந்தி மாதா என்ற பெயரில் நான் வழங்கப்படவேண்டும் என்று கேட்டாள். இறைவன், அவ்வண்ணமே ஆகுக! என்று சொல்லி, நந்தியை நோக்கி, நந்தி! நீ இவளை பணிவாயாக என்றார். உடனே நந்திதேவர், புவனையைச் சாஷ்டசாங்கமாகப் பணிந்து, அவளுடைய இரு பாதங்களையும் இறுகப் பிடித்துக் கொண்டார், அதனால் ஆனந்தம் அடைந்து அவளது தனத்திலிருந்து பால் பெருகி மூன்று வழியாகச் சென்றது. அதைக் கண்டு மகிழ்ந்த நந்திதேவர் ஒரு நாதஞ் செய்ய அதினின்றும் ஒரு நதி பிரவகித்து நந்திநாதோத்பவம் என்ற பெயருடன் விளங்கலாயிற்று. சிவபெருமான் பொன்னால் செய்த நவரத்தின கசிதமான மகுடத்தை நந்திதேவருக்கு அணிவிக்க நந்திதேவர் சூரியனைவிடச் சிறந்த தேஜஸோடு விளங்கினார். அதைக் கண்ட தேவர்கள் அனைவரும் இவர் தேவர்களுக்கெல்லாம் தலைவராக இருக்க வேண்டும் என்று அபிஷேகஞ் செய்தார்கள். அந்த அபிஷேக ஜலம் ஒரு நதியின் உருவங்கொண்டு சுவர்ணோதகம் என்றும் ஜாம்பூநதநதியென்றும் பெயர் பெற்று விளங்கியது.

வியாஸரே! ஜாப்பியேஸத்துக்கு அருகில் அந்த ஜாம்பூநத நதியுள்ளது. அந்த நதியில் நீராடிச் சிவபெருமானைச் சேவித்து மூன்று நாட்கள் சிவபூஜை செய்து, பிராமண சந்தர்ப்பணை செய்து முடித்து, விரத பூர்த்தி செய்தவன் திருக்கைலாயத்தை அடைவான். ஜாப்பியேசத்தில் தேகத்தை விடுத்தவன், நந்திதேவருக்குச் சமீபமான பதவியை அடைந்து நெடுங்காலம் வாழ்ந்திருப்பான்! என்று திருவாய் மலர்ந்தருளி தம் இடபாகத்திலிருக்கும் உமாதேவியாரை நோக்கி உமையவளே! நந்தியை, நமது கணங்களுக்குத் தலைவனாக மகுடாபிஷேகஞ் செய்வித்தேன். அவனைப் பூஜித்தவர்கள், என்னைப் பூஜித்தவர்களாவார்கள். அவனிடம் பக்தி செய்பவர்கள் என் பக்தர்களாவார்கள் என்று சொல்லி, நந்திதேவரைப் பார்த்து, நந்தீ! ஜாப்பேஸ்வரம், பஞ்சநதம் என்ற திருத்தலங்களில் தங்கள் உடலை நீப்பவர்கள் உனக்குக் கீழ்ப்பட்ட கணநாதர்களாகவும் உனக்கு இணையான தேகமும் உன்னோடு வாசமும் இடைவிடாமல் என்னைத் தரிசிக்கும் பாக்கியத்தையும் அடைவார்கள்! என்று கூறியருளினார்.

47. கணங்களின் வருகை

வியாஸரே! நந்தீசனின் தவச் செயல்களையெல்லாம் நான் சொன்னேனல்லவா? அதற்குப் பிறகு சாம்பசிவன் உமா தேவியாரை நோக்கி, மங்களமுடையவளே! இந்த நந்திக்குக் காணாபத்தியம் கொடுப்பதைப் பற்றிய உன் கருத்து என்ன? உன் கருத்தை வெளியிடுக! என்று கேட்டார்.

மஹாதேவரான தங்களுக்குப் புதல்வனான நந்திக்கு எல்லாக் கணங்களுக்கும் இறைமையேயன்றிச் சகல உலகங்களுக்கும் இறைவனாகும் தன்மையையும் கொடுக்கலாம் என்பது என் கருத்து! என்று பார்வதி கூறவே, பகவானான மகாதேவன் தேவசித்த கணங்களால் சேவிக்கப்பட்டுக் கிழக்கு முகமாக வீற்றிருந்து அவ்வத் திசைகளிலேயுள்ள உருத்திர கணங்கள் அனைவரும் வரவேண்டும் என்று திருவுள்ளத்தில் நினைத்தார். உடனே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேல், கீழ் ஆகிய திசைகளிலுள்ள உருத்திர கணங்கள் அனைவரும் சூலம், அம்பறாத்தூணி முதலியவற்றை ஏந்தி நீலகண்டமும் ஒளிவீசும் அக்கினி கண்களும் கொண்ட எண்ணிறந்தோர் அங்கு வந்து குழுமினர். அவர்களைத் தவிர, கபாலீசன், விசோகன், சதநேத்திரன், சதாநிலன், அநத்தருத்திரன், நூறு பாதமுடையோர், நூறுமுகமுடையோர் முதலான சர்வலோக அதிபதிகளாகிய பலர் வந்து சேர்ந்தார்கள். அஞ்சத்தக்க முகமும் பயமுறுத்தும் புருவங்களும் இருபது யோசனை அகலமும் உயரமுங்கொண்ட கராளவதளனும் நான்கு முகங்கள். அங்கம் போன்ற வெண்மையான மேனியும், ஐந்து நாக்குகளும் மேல்நோக்கிய காதுகளும் பாசஹஸ்தமும் மனோ வேகமுடைய பாரபூதி என்பவனும் தம்மைப் போன்ற பராக்கிரமமுடைய நூறுகோடி சைன்னியங்களுடன் வந்து சேர்ந்தார்கள். கட்கவேகம் போன்ற வேகத்தையுடைய தியான யோகமே சிறந்தது என்று கருதும், தனக்குச் சமானமான அநேக கோடி கணங்களுடன் சோமவர்ஷன் என்பவனும் வந்து சிவபெருமான் முன்னே நின்றான். மனைவியுடன் கூடியவனாய், மங்களகரனாய், மகாபலவானும் பிரளய காலாக்கினி போன்ற தேஜஸ் உள்ள மகாகாயனும் வந்தான். சந்திர சூடமும் நான்கு தோள்களும் நெருப்பு விழியும் பெற்ற மகா காயனைச் சூழ்ந்தாற்போல, ஒரு பாதமும் பூரித்த தேகமும் மூன்று கண்களுங்கொண்டு, கரத்தில் சூலந்தாங்கிய நூறு கோடி உருத்திரர்கள் தோன்றினார்கள். இத்தகைய சிவபக்தனல்லவோ சர்வ தேவர்களாலும் பூஜிக்கத்தக்கவன். பத்மாசனம் குறுங்கால்கள், புனிதம், ஆயிரங்கைகள், ஆயிரம் விழிகள், பயங்கரமான முகங்கள், கோரமான சர்ப்பாபரணங்கள், சந்திர தாரணம், அநேக விசித்திர மாலைகள், அணிந்த சடைமுடிகள் முதலியவற்றுடன் பணிந்து அவர் முன்பு நின்றனர். நான்கு வாய்களும் தேஜோ ரூபமும் இருபத்து நான்கு லக்ஷணங்களும் ஆயிரம் தோள்களும் திறந்த வாய்களும் கரான வதனமும் சங்கு கர்ணமும் மகாப்பராக்கிரமமும் கத்தியேந்திய கரமும் அகண்ட தேஜஸும் நூறு கால்களும் சிறிய வயிறும் பின்னல் போன்ற செங்குடுமியும் பெரிய முகமுங்கொண்டு, சிவசந்நதியையடைய விருப்பங் கொண்டவனும், ஒரு காலத்தில் சிவபெருமானுக்கு வாகனமாக வந்தவனுமாகிய அஜைகபாதன், தன்னைப் போன்ற நூறு கோடி சேனைகளுடன் பொன்மயமான மலர்களைக் கரங்களில் ஏந்தி சிவசன்னதியை அடைந்தான்.

நிகும்பன், சங்கரன், சூரியாப்பியானன், ஸர்வமானி சந்திராயுதன், மகாதேஜன், கடாகடகன் என்ற கணவீரர்கள் ஆறுகோடி உருத்திர சைன்யத்துடன் வந்து சேர்ந்தார்கள். சங்கு கர்ணன், எட்டுக் கோடி சேனையுடன் வந்தான். அறுபத்து நான்கு கோடி சைன்னியமுடைய விநாயகனும் ஆறு கோடி சேனையை உடையவனும் பொன்மயமான தேகங்களையுடையவனும் ஆகிய உஷ்ணமாண்டனும் ஏகபாதனும் பன்னிரண்டு கோடிசேனைகளையுடைய தாமிரகேசனும் பத்து கோடி சேனைகளையுடைய பாதகியும் பதினெட்டுக்கோடி சேனையுடைய சதமுக்தனும் ஆறுகோடி உருத்திர கணங்களையுடைய வீரனும் எட்டுக் கோடிக் கணங்களையுடைய நாதேசனியும், மனனும், சந்திரவதனனும், மஹீதரனும், பிரவாதித்ய மூர்த்தியும், சந்தோஷகனும் குருதனும் கும்பனும், ஏகபாதனும், ஸப்தகிரோகனனும், பத்துக் கோடியையுடைய மகாபலனும் அபஸ்மாரனும் நீலோத்பலனும் தேவேசனும் கணவபத்ரனும் விகுர்த்தியுமாகிய உருத்திர கணநாதர்கள் தங்கள் சைன்யங்களோடு சிவசன்னிதானத்தை அடைந்தார்கள். பல்லாயிரங்கோடி உருத்திர கணங்களால் புடை சூழப்பட்டும், மகாயோக பலமுடைய அநேக ஆயிரங்கோடி பூதங்களால் சூழப்பட்டும் விளங்கிய வீரபத்திரனும், அறுபத்து நான்கு கோடியுடைய தூஷகனும் ஒன்பதுகோடி கணங்களையுடைய மேகசவுதாமினியும், இருபது கோடி கணங்களையுடைய மஹாபலனும் மாருத்யுவும் இயமனும் காலனும், விஷதரனும் சுதாமாயனும் மஹாமயனும் பர்வதாபரணனும் ஏகசிருங்கனும் பிருங்கியும் ரிட்டனும் மேலும் பலரும் தங்கள் பரிவார கணங்களோடு சிவபெருமானிடம் வந்து சேர்ந்தார்கள். இவர்களும் தவிர கணக்கற்றவர்கள் பலவிதமான வாத்தியங்களை முழக்கிக் கொண்டு வந்தனர். சிவ கணாதிபதிகள் ரதங்களில் சிலர் யானைகளிலும், சிலர் குதிரைகள் மீதும் சிலர் வானர, வியாக்கிர, சிம்ஹவிமான, சர்ப்ப பக்ஷீ, சுனக முதலியவற்றில் ஆரோகணித்து வந்து சேர்ந்தார்கள். மயில்கள், சிங்கங்கள் பூட்டப்பட்ட இரதங்களில் அநேகர் வந்து சேர்ந்தார்கள். பல பிரமத கணங்கள் பேரிகைகளை முழங்கியும் பலர் சங்குகளை ஒலித்தும், பலர் மிருகங்களை முழக்கியும் பலர் பறைகளை முழக்கஞ் செய்தும் பலர் நாதசுரங்களை ஊதிக் கொண்டும் வந்தனர். வீணை, வேணு, கரதல வாத்தியம் ஆகிய இசைக்கருவிகளை முழக்கிய வண்ணம் பலர் வந்தனர். பிரமதேவர் அன்ன வாகனத்தில் வந்தார். அவரைச் சுற்றிலும் சித்த கணங்கள் வந்தார்கள். தென்புறம் கமண்ட ரூபத்தில் ரிக் வேதம் வந்தது.

பின்புறத்தில் பற்பல ரூபத்தில் சாமவேதம் வந்தது. வடபுறத்தில் அக்கினியைப் போன்ற பிரகாசத்துடன் அதர்வணவேதம் வந்தது. கீழ்ப்புறத்தில் மின்னலைப்போல யஜுர்வேதம் வந்தது இதிகாச புராணாதீகள் பல ரூபங்களுடன் அவர் முன்பு சென்றன. யாவரும் சங்கரர் சன்னதியை அடைந்தனர். திருமால், கருட வாகனத்தில் வந்தார். திவ்விய கான சபை நடுவில், வீற்றிருந்த தேவசிரேஷ்டனும் யக்ஞரூபியும் மங்களரூபியுமான சாம்பவமூர்த்தி விஷ்ணுவை நோக்கிக் கம்பீரமாக, விஷ்ணுவே, நந்தி சகல தேவர்களில் பூஜிதனாகும்படி, இப்போதே, அவனுக்குக் கணபத்தியம் கொடுக்க உத்தேசித்து அபிஷேகஞ் செய்ய இருக்கிறேன். இது உனக்கு ஒப்புதல்தானே! உனக்குச் சம்மதமானால் அவனுக்கு அபிஷேகம் செய்கிறேன் என்று சொன்னார். அதற்கு விஷ்ணு பரமாத்மா நகைத்து, தேவதேவா! எல்லாத் தேவர்களுக்கும் தேவர் என்றும் நானும் இங்குள்ளவர்களும் தங்களையே அங்கீகரித்திருக்க, தாங்கள் உத்தரவு செய்தவண்ணம் நான் நடக்கிறேன் என்றார். அப்போது இந்திரன் ஐராவதத்தில் ஏறி வாயு, வசுக்கள் முதலியோர் தம் தம் வாகனங்களில் அமர்ந்து வந்தும் ஆகாயம் மறைக்கச் சிவசன்னதியை வந்தடைந்தார்கள். பிரணவப் பொருளானவரும் நாசரகிதருமான சிவபெருமானை கணத் தலைவர்களும் கணங்களும் தேவர்களும் துதித்து மகிழ்ந்திருந்தார்கள்.

48. நந்திதேவர் பட்டாபிஷேகம்

வியாஸரே! பலசாலிகளான உருத்திர கணங்கள் யாவரும் சர்வேஸ்வரனான சிவபெருமானை வணங்கி, பகவானே! யாவரும் வணங்கும் உலகநாயகனே! எங்களை இங்கு அழைத்த காரணம் யாதோ? உத்தரவிட்டால் கடல்களை வற்றச் செய்கிறோம்! மலைகளைப் பொடித்து விடுகிறோம். இயமனையும் கொன்று விடுகிறோம். எத்தகையவனையும் சுகதுக்கங்களை அடையச் செய்வோம். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் நாவசைத்தால் நாங்கள் அனைவரும் பணியாற்றச் சித்தமாக இருக்கிறோம் என்றார்கள். சிவபெருமான் புன்னகை செய்து அவர்களை நோக்கி, பிரமத கணாதியர்களே! உலகத்திற்கு இதஞ்செய்யும் நீங்கள் என் உத்தரவை எதிர்பார்த்து அவ்வண்ணம் செய்யக் கடவீர்கள். அதாவது இந்த நந்திதேவனை கணாதியர்கள் அனைவருக்கும் நாயகனாகச் செய்ய எல்லோரும் இசைந்துள்ளனர். யானும் சம்மதித்திருக்கிறேன். நீங்களும் அதற்கு இணங்கி, உங்களுக்கு எல்லாம் அவனைச் சேனாதிபதியாக்கிக் கொள்ளவேண்டும். இன்று முதல் அவனே உங்களுக்கெல்லாம் தலைவன்! என்றார். அப்போது பார்வதி தேவியின் தோழியர்கள் ஆஹா! இது மிகவும் நற்செயல்! என்று சம்மதித்துச் சமையற் பண்டங்களைச் சேகரித்தார்கள். சாம்பூந்தப் பொன்னால் அமைந்த மணிமண்டபத்தில் முத்துச் சரங்களைத் தொங்கவிட்டு, இரத்தினங்களால் அலங்கரித்து வைடூரிய ஸ்தம்பங்களும், பொற்சதங்கைகளும் தொங்க விட்டனர். அந்த மேருவைப் போன்ற மண்டபத்தில் உயர்ந்த ஆசனம் ஒன்றை அமைத்து துருவம் (நிலைத்திருத்தல்) என்று அனைவரும் ஆசிகூற, நந்திதேவரை அந்தப் பீடத்தில் இருத்தி, யாவரும் அபிஷேகித்து மங்களார்த்தமாக திவ்வியமான ஆடைகளையும் திவ்விய கந்தத்தையும் வஜ்ர குண்டலங்களையும் வாகு வளையங்களையும், கிரீடத்தையும், நவரத்தின ஹாரத்தையும், சூலம் வஜ்ஜிரம் முதலிய ஆயுதங்களையும் கொடுத்து, குடைபிடித்து ஆலவட்டம் வீசினர். பிரமன் முதலிய தேவர்களும் மாமுனிவர்களும் மகிழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்து.

நம; கூஷ்மாண்டரூபாய வஜ்ரோஜ்ஜ தகராயச
ஸாலங்காயந புத்ராய ஹலமார்கோத்திதாயச
சிலாதஸ்ய சபுத்ராய ருத்திர ஜாப்யபராயச
ருத்ர பக்தாய தேவாய நமஸ்தே ஜலஸாயிநே
நமோகணாதிபதயே மஹாயோகீஸ்வராயச
தண்ட கண்டாய ஏகாதஸஸதாயச
அக்ஷயாயாம் ருதாயைவ அஜயாயாவ்யாயச
பஸூநாம்பதயே சைவ ருத்ரரூப தராயச
நம; ப்ரபவகேசாய ஸர்வக்ஞாயா திதாயச
அநேகஸிரஸே சைவ அநேகவதநாயச
கிரீடிகே குண்டலிகே, மஹாபரிக பாஹவே
பாஹிஸர்வகணாம்ஸ் சைவ பாஹிதேவ நமோஸ்துதே.

என்று தோத்திரஞ் செய்து, கைகூப்பி வணங்கி ஜயஜயவென்று கூறினார்கள் தேவர்கள். அரக்கர்கள் தனித்தனிக் குழுவினராக ஜெயஜெய என்று முழங்கினார்கள். யக்ஷர், அசுரர், பன்னகர்கள் டிண்டிமம், தேனுகை, மிருதங்கம், சங்கு, பேரிகை குழல், வீணை, தாளம், பூரி, கொம்பு முதலிய வாத்தியங்கள் முழக்கி பிரளயகால மேக கர்ஜனைப்போல ஒலிக்கச் செய்தார்கள். இவ்வாறு நந்தீசனைத் தேவர்கள் துதித்து தோத்திரத்தைப் பாராயணம் செய்பவர்கள் சிவகதியை அடைவார்கள். நமோ நந்தீஸ்வராய என்று துதித்து அவரை வணங்குவோன், பூதப் பிரேத பைசாசாதிகளால் ஒருபோதும் துன்பமடையமாட்டான். பயபக்தியோடு தினந்தோறும் உதயகாலத்தில் இந்தத் துதியைத் துதிப்பவர்கள். நந்தியின் அருளைப் பெறுவார்கள். இந்த ஸ்தோத்திரத்தால் நந்திதேவரைப் பூஜித்தவர்களுக்கு ஒரு குறையும் வராது. நந்தியை ஏகமனதோடு தினமும் பூஜிப்போர் சிவபெருமானைப் பூஜித்த பயனையும் அடைவார்கள்.

49. நந்திதேவர் திருமணம்

வியாஸரே! அதன் பிறகு, தேவநாதரான சிவபெருமான், நந்திக்கு மகுடாபிஷேகம் செய்யும்படி வரவழைத்த இந்திராதி தேவர்களைப் பார்த்து அமரர்களே! நீங்கள் பெரும் பாக்கியசாலிகள், பலசாலிகள் தேஜஸ் மிக்கவர்கள் என்று கூறி அவர்களை மகிழ்வித்து இனி நந்திதேவனுக்கு ஒரு தேவ கன்னிகையை மணம் செய்விக்க வேண்டும் என்று கருதுகிறேன். நீங்கள் ஒரு கன்னிகையைத் தேர்ந்து கூற வேண்டும் அவள் பாக்கியவதியாகவும் ரூபவதியாகவும் புனிதையாகவும் பதிவிரதையாகவும் இருக்கவேண்டும் என்றார். தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வணங்கி, உலகநாதரே! இந்த நந்திதேவரைத் தங்களுக்குப் பிரியமாகவும் எல்லாவுலகங்களுக்கும் பிரபுவாகவும் தாங்களே நியமித்தீர்கள். தேவர்கள் அனைவரிலும் உத்தமர் தாங்கள். தங்களை விடச் சிறந்தவர்கள் யாருண்டு? ஞான உபதேசம் செய்யவல்ல பரமார்த்த குருவாக இருப்பவரும் தாங்களே! காசிபர், புலகர், மரீசி ஆகியோரின் தந்தை பிரமன். அந்தப் பிரமதேவருக்கும் தாங்களே இறைவன்! அந்தப் பிரமனே எங்களுக்கு பிதாமகன். ஆகையால் யோசித்துப் பார்த்தால் சராசரமாகிய இந்தப் பிரபஞ்சத்திற்கு, தெய்வம், குரு, பிரபு, சுதந்தரம் முதலியயாவும் நீங்களாகவே இருப்பதால் நீங்களே, எங்களை நோக்கி ஒரு கன்னிகையை நாங்கள் நியமித்தால், நந்திதேவருக்கு மணவினைப் முடிப்பதாகச் சொல்வது விநோதமாக இருக்கிறது. தாங்கள் கட்டளையிட்டவாறே நாங்கள் செய்வோம் என்றார்கள்.

சிவபெருமான் அவர்கள் கூறியதைக் கேட்டு நான் கன்னிகையைத் தேடமுடியாது. உங்களைக் கொண்டு நடத்துவிக்கவும் முயன்றேன் அல்லேன். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டுவோர் ஒரு கன்னிகை வேண்டும் என்று கேட்டு, அவர்களிடமிருந்து பெற்று, மணஞ் செய்விப்பது என்பது பிரபலமான உலக வழக்கம் என்றார். அதைக் கேட்டதும் தேவர்கள் சிவத்தியானஞ் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது மருத்தின் மகளாகிய சுயசை என்ற பெண்ணை, மணமகளாக நியமித்து, சர்வாடம்பரமாக விவாகச் சடங்குகளைத் திருச்சபையார் அனைவரும் ஒருமித்து சிறப்பாகச் செய்தார்கள்.

இவ்வண்ணம் திருமணம் நடத்தும்படி உலகங்கட்குப் பிதாமகனான பிரமதேவனைப் புரோகிதனாகவும், கந்தர்வர்களை வாத்தியங்களை இசைப்போராகவும் நாரதர், பர்வதர், சித்திரவாசனன் ஸபஷிதன், ஸர்வாசிபவன், சுருசி, ஆஹா ஊஹூக்கள் பிற கணங்கள் மதுரத்துவனியுடன், வீணை, வேணு, மிருதங்கம், தாளம் முதலிய இசைக்கருவிகளை முழக்கினார்கள். ஊர்வசி, ரம்பை, கிருதாசி, திலோத்தமை முதலிய அப்சர மங்கையர்கள் மிகவும் அழகாகப் பரதநாட்டியஞ் செய்தார்கள். இவ்வாறு உலகத்தில் இதுவரை எங்கும் நடக்காத வகையில் மணவினைகள் நிகழ்ந்தன. அதன் பிறகு, நந்திதேவர் தம் மனைவியுடன் சிவபெருமானையும் உமா தேவியாரையும் வணங்கினார். அப்போது சிவபெருமான் நந்தியை நோக்கி, நந்தீ! நீயும் உன் மனைவியும் உங்களுக்கு வேண்டும் வரங்களைக் கேளுங்கள்! என்றார். நந்திதேவர் சிவபெருமானை வணங்கி, சுவாமி தாங்கள் மகிழ்ச்சி யுடனிருப்பது உண்மையாயின் அடியேனுக்கு நீங்காத திடமான பக்தியும், என் தந்தை சிலாத முனிவருக்குத் திருவருளும் செய்தருள வேண்டும் என்றார். சிவபெருமான், அவ்வாறே ஆகுக! நீயே அனைவருக்கும் சிறந்தவன். யோகி, வில்லாளிகளில் மேன்மை யுடையவன். பிறரால் வெற்றி பெற முடியாதவன். பூஜிக்கத் தக்கவர்களில் முதல்வன், இப்படியாகவே நீ என்னுடன் வசிப்பாயாக. உன் தந்தையான சிலாதன், உன்னைப் போலவே ஐச்வரியவானாகிக் கணநாதரில் ஒருவனாவான். உன் பிதுர்க்கள் அனைவரும் என்னை அடைவார்கள். நினைத்த இடத்திற்குச் செல்லத் தக்கதும் பல மலர்களுடன் கூடிய சோலைகளை யுடையதும் விரும்பியவற்றையெல்லாம் கொடுக்க வல்லதுமாகிய இந்தப் பர்வதத்தை நான் உனக்குக் கொடுத்தேன் என்று கூறி ஒரு மலையையும் கொடுத்தருளினார். மகாபாக்கியவதியான பார்வதிதேவி, நந்தியை நோக்கி, என்னிடம் ஏதாவது வரங்களைப் பெறவேண்டும் என்று நீ விரும்பியிருந்தால் அவற்றையும் கேட்கலாம் என்றாள். அதற்கு நந்திதேவர், தாயே! நீங்காது விளங்கும் பக்தியைத் தாங்கள் அருள் செய்ய வேண்டும் என்று சொல்ல, தேவியும் அவ்வாறே வரங்கொடுத்து, மருத்தின் மகளாகிய சுயசையை நோக்கி, உனக்கு நல்ல வரங்கொடுக்கிறேன். நீ என்னுடனேயே வாழ்ந்து, முக்கண்களுடன் விளங்குவாயாக! ஞானமுடையவளாய் என்னிடத்தும் உன் கணவனிடத்தும் பக்தி செய்து வாழ்வாயாக! என்றாள்.

வியாஸரே! சிவபெருமான் அப்போது தம் அருகேயிருந்த பிரமாவையும் விஷ்ணுவையும் நோக்கி, உங்களைப்போல இந்த நந்தியும் என் புத்திரனே! இவனுக்குக் கணாதிபத்தியம் கொடுத்திருக்கிறேன். ஆகையால் நீங்கள் இனிமேல், இவன் கட்டளையை ஏற்று நடப்பீர்களாக. இவன் இனிமேல் என் துவாரபாலகனும் ஆவான் என்று கூறினார். எல்லா தேவர்களும் உருத்திரகணங்களும் அதையுணர்ந்து அவ்வாறே அங்கீகரித்தார்கள். அப்போது நந்திதேவர், உருத்திர கணங்களை நோக்கி உங்களிடத்தில் எனக்கு விருப்பமும் என்னிடத்தில் உங்களுக்கு விருப்பமும் இருக்குமாக! என்றார். உருத்திர கணங்கள் யாவரும் நந்திதேவரை வணங்கி, சுவாமி! எங்களுக்கும் இதர தேவர்களுக்கும் தாங்களே தலைவராவீர். ஜகதீசனுடைய சன்னதியில் விளங்குவோரில் உத்தமோத்தமர் தாங்களே! தாங்கள் மகாபலவானாகவும் யோகவானாகவும் எப்போதும் விளங்குவீராக. எங்களுக்குத் தலைவராக இருப்பவர்க்கும் நீங்களே தலைவராக இருப்பீராக. நீங்கள் தேவர்களால் பூஜிக்கப்பட்ட லக்ஷ்மி நாராயணனைப் போலவும், வள்ளிநாயகி சமேத குமாரஸ்வாமியைப் போலவும் வாழ்ந்திருப்பீர்களாக! எல்லா குணங்களுக்கும் இறைவர்களாகிய எங்களுக்கெல்லாம் இறைவராகிய தாங்கள், சிவபெருமானுக்குச் சிறந்தவிடம் என்று கூறுமிடமே யாவராலும் போற்றப்பட்ட முக்கியத் திருத்தலமும் அந்தத் திருத்தலத்திலுள்ள மூர்த்தியே இஷ்டசித்திகளையெல்லாம் கொடுப்பவராகவும் விளங்குவீராக! எல்லாச் சம்பத்துக்களையும் கொடுக்கவல்லரும் நீங்களேயாகும். எல்லோருக்கும் குருவாக இருப்பவர் நீங்கள். தேவர்களுக்கெல்லாம் பிரபுவாக இருப்பவர் நீங்கள்தான்! என்று உருத்திரகணங்கள் யாவரும் துதித்தார்கள்.

வியாஸ முனிவரே! அதன் பிறகு உருத்திர கணங்கள் அனைவரும் நந்தீசன் குழந்தைப் பருவமுடையவன். அந்தர்கரணப் புறக்கரணங்களையடக்கும் வன்மையுடையவனும் ஆவான் என்று சிவபெருமான் தங்களைப்பற்றிச் சொன்னதால் சிவசன்னதியால் அவ்வண்ணமே அங்கீகரித்துத் தங்களுக்கு மகுடாபிஷேகமும் செய்தோம். ஆகையால், எங்களுக்கு எப்போதும் சுகத்தை உண்டாக்கவேண்டும் என்று கூறித் தங்கள் தலைகளின் மேல் கைகளைத் தூக்கிக் குவித்துப் பலவாறு தோத்திரஞ் செய்தார்கள். நந்திதேவர், அவர்களுடைய பிரார்த்தனைகளுக்கு மனங்களித்து, சிவகடாட்சத்தினாலும் உங்கள் அனைவரின் கோரிக்கைகளாலும் நான் சுகமாக இருக்க வேண்டும். உங்களால் எனக்கு எத்தகைய குறைபாடும் அஜேயமுமில்லாமல் விளங்கி, உங்களைக் காப்பேன்! என்றார்.

(இந்த நந்தி உருத்திரகண சம்பாஷணையை வாசித்தவர்கள் அஸ்வமேத யாகத்தை முடித்து, அவமிருத ஸ்நானஞ் செய்த பயனை அடைந்து எல்லாப் பாவங்களையும் ஒழிப்பார்கள். சந்தியா நேரங்களில் இதை வாசித்தவர்கள் அந்தந்தப் பிறவியில் பாவம் முழுவதையும் ஒழிப்பார்கள்.)

இவ்வாறு நந்திதேவர் பணிந்து விடைகொண்டு, சிவபெருமானையும் உமாதேவியாரையும் வணங்கிக் கட்டளை பெற்று திவ்விய போஜனஞ் செய்து, சந்தோஷ சித்தர்களாய், தத்தம் இருப்பிடங்களை அடைந்தார்கள். சர்வேசனாகிய சிவபெருமானும் உலக அன்னையான உமாதேவியும் கைலாயகிரியை அடைந்தார்கள். நந்திதேவரும், சிவபெருமானின் திருக்கோயிலின் வாசலில் சிவசன்னதிக்கும் அந்த மலைக்கு அதிகாரியாகப் பொற்பிரம்பும் கத்தியும் கரங்களில் ஏந்தி விளங்கும் பாக்கியத்தில் அமர்ந்தான். இந்த நந்திதேவருடைய பிறப்பும் தவஞ்செய்த வகையும் பேறுபெற்றதும் மகுடாபிஷேகம் செய்து கொண்டதையும் விவாகம் செய்ததையும் வாசித்தவர்கள் நந்தீச சாரூப்பியமும் பிறர் சொல்லக் கேட்டவர்கள் நந்தீச சமனமும் அடைவார்கள் என்று ஸனத்குமார முனிவர் வியாஸருக்குக் கூறினார்.

50. நீலகண்ட வரலாறு

வியாஸமுனிவர். ஸனத்குமார முனிவரை நோக்கி, சுவாமி சர்வ லோகநாயகரான சிவபெருமானுக்குக் கண்டம் நீலமானது எப்படியென்பதை விளக்கமாகக் கூறவேண்டும் என்று கேட்டார். அதற்கு ஸனத்குமார முனிவர் கூறலானார்.

அந்தணோத்தமரே! திரிசூலபாணியான சிவபெருமானுக்கு நீலகண்டம் முதலியன உண்டானதற்குரிய காரணமான விஷயங்களைப் பற்றி உலகத்தினருக்குப் பிராணபூதரான வாயுபகவான் நூறு ஆண்டுக்காலம் இடைவிடாமல் கூறியிருக்கிறார். அவற்றைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்க வேண்டும்.

வடதிசையில் கைலாயமலை என்ற பெயர் கொண்ட வெள்ளி மலையொன்றுண்டு. அந்தப் பெரிய மலைக்கு அநேகம் கொடிமுடிகளுண்டு. அவற்றில் உத்தியான வனங்களும், புண்ணிய தீர்த்தங்களும் தேவர்களின் இருப்பிடங்களும் பூந்தோட்டங்களும் விநோதமாக உள்ளன. அங்கு சிவபிரானிடத்தில் நீங்காத திட பக்தியையே நியமமாகக் கொண்ட முனிவர்கள் யாவரும் மிகவும் பக்தியுடன் ஒரு திவ்வியமான உச்சிகாலத்தில் ஏகமனதாக சிவபெருமானைத் தோத்திரஞ் செய்தார்கள். அப்போது வாயுபகவான் ஓம் நீலகண்டாய நம: என்று கூறினார். அதைக் கேட்ட முனிவர்களில் ஊர்த்துவ தேஜஸ்களும் வாயுவையும் ஜலத்தையும் பக்ஷணம் செய்பவர்களாகிய எண்பத்தெண்ணாயிரம் முனிவர்களாகிய வாலகில்லியர்கள் காற்றுத் தேவனை நோக்கி, புண்ணியர்களில் புண்ணியரே, சிவ ஸ்தோத்திரஞ் செய்யும் போது தாங்கள் நீலகண்டா! என்று கூறியதற்குக் கருத்து என்ன? அதையறிய நாங்கள் விரும்புகிறோம். சிவபெருமானுக்கு கண்டத்தில் நீலநிறம் வந்த சரிதத்தை கேட்க நாங்கள் விரும்புகிறோம். இந்த விஷயத்தை நாங்கள் சூஷ்மமாக இதுவரை கேட்டிருக்கிறோம். ஆயினும் தங்கள் திருவாக்கால் அதைப்பற்றி விவரமாக அறிந்து கொள்ள விரும்புகிறோம். பிராணவாயுவைப் பிராணியின் முயற்சியினால் எழுப்ப அதனின்று எழுந்த அணுதிரள், மார்பு, கண்டம், உச்சி, நாசி ஆகிய இடங்களில் பொருந்தி, இதழ், நாக்கு, பல்வரிசை, மேல்வாய் இவற்றின் தொழில்களால் வெவ்வேறு வகையாக்கப்பட்ட எழுத்துக்களாய் பிறத்தல் முறை என்பார்கள். ஆகையால் அந்தப் பிராணவாயு சொரூபியாகிய தாங்களே அந்தச் சப்தத்தின் உட்பொருள் என்பது பிறர் ஒருவருக்கும் தெரிய மாட்டாது. நீங்களே சர்வ வியாபியாக இருப்பவர். வேதங்களின் எல்லை கண்டறியாத பரம்பொருள் பிறரொருவருக்குத் தெரியமாட்டாது. அந்தப் பரம் பொருளிடத்தும் கலந்திருப்பவர் நீங்கள். உலகத்திற்கு கண்கூடாக விளங்குபவர் நீங்கள். ஆகையால் மங்களகரமானதும் சகல பாவங்களையும் ஒழிக்க வல்லதுமான நீலகண்டாய! என்ற சப்தத்தின் பொருளை நீங்களே விளக்கிச் சொல்ல வேண்டும் என்று கேட்க, வாயுதேவர் சொன்னார்.

வேத வேதாங்கங்களை உணர்ந்த மாமுனிவர்களே! நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். கிருத்திகா புத்திரரும் மயில் வாகனரும் கிரௌஞ்சகிரியைச் சங்கரித்தவரும், பார்வதியின் மனக்கிளர்ச்சிக்குக் காரணமானவரும் அசுர மாதர்களின் கண்களிலுள்ள அஞ்சனமையைத் துடைக்கச் செய்தவரும், தேவசேனாபதியும் மேகம்போன்ற கம்பீரமான தொனியை உடையவருமாகிய பாலரூபமுடையவரும் குமரக் கடவுளாவார். அவரிடம் முன்பு பிரமதேவரின் மானச புத்திரரும், தர்ம ஸ்வரூபியுமாகிய வசிஷ்ட முனிவர் வணங்கி, மகாத்மாவே! எண்ணற்ற மங்கலங்களை ஏற்படுத்தும் புண்ணியகரமான ஒரு வரலாற்றை பக்தனாகிய அடியேன் விஷயத்தில் மனமிரங்கி உலகத்திற்கு இதஞ்செய்யும் கருத்துடன் கூறவேண்டும் என்று கேட்டார். அதற்குக் குமரக்கடவுள் வசிஷ்டரை நோக்கி, வசிஷ்டரே! நான் குழந்தைப் பருவத்தில் என் தாயார் பார்வதிதேவியாரது தொடைமீது உட்கார்ந்திருக்கும் போது தேவ தேவராகிய என் பிதாவுக்கும் சர்வலோக மாதாவாகிய என் தாய்க்கும் நடந்த சம்பாஷணையை உலக நன்மையைக் கருதி நான் உமக்குச் சொல்லுகிறேன். அதை நீர் யாவருக்கும் அறிவிக்க வேண்டும். கைலைமலை பற்பல நிறங்கள் அமைந்த கற்களால் பாலசூரியன் போலப் பிரகாசித்து, ஸ்புடமிட்ட பொன்னால் அலங்கரிக்கப்பட்டு, வைரத்தால் செய்த சோபானங்களைப் பெற்று, சித்திரங்களமைந்த பளிங்குக் கற்களால் அழகோடு திகழும், பலவகைத் தாவரங்களும் வளரப்பெற்று, ருதுக்கள் ஆறிலும் மலர்களையும் கனிகளையும் கொடுக்கத்தக்க இடமாகவும், அன்னம் முதலிய பறவைகள் வசிப்பதாய் கின்னரர்களால் விடப்பட்ட குகைகளைக் கொண்டதாய், தேவர்கள் உல்லாசமாக உலவும் இடமாய் அக்கைலை மலை விளங்கும். அதன் உச்சியில் விசித்திரமான நானாவித ரத்தினங்களை இழைத்த சிறந்ததொரு பொற்சிங்காதனத்தில் மிக கொடிய மிருகங்களாலும் அகோர விகார இலட்சணங்களுடைய பூதகணங்களாலும் சேவிக்கப் பெற்றதாய், கனகநாதர்களும், பூத கணங்களும் பணிசெய்ய எழுந்தருளியிருக்கும்.

சர்வலோக நாயக, சகலதேவ பூஜிதரான சிவபெருமான் வீற்றிருக்கும்போது என் தாய் பார்வதி தேவியார் என் தந்தையை நோக்கி, ஷட்குண ஐஸ்வரிய சம்பன்னரும் தேவர்களுக்கு எல்லாம் அதிபருமான தங்கள் கண்டம் கார்கால மேகம் போல விளங்கி, கைலைமலை போலக் கறுத்து மங்களகரமாக இருப்பதற்குக் காரணம் யாது? இது எப்போது உண்டாயிற்று? இதன் விவரத்தை அறிந்து கொள்ள விரும்பும் எனக்கு இதுபற்றி விளக்கமாகச் சொல்ல வேண்டும்! என்று கேட்டாள். அதற்கு சிவபெருமான் பார்வதி! முன்பு பாற்கடலானது தேவர் தானவர்களால் கடையப்பட்டபோது முதலில் பிரளய காலாக்னிக்குச் சமமான தீக்ஷண்யமுடைய ஆலாஹலம் என்னும் விஷம் தோன்றி அமரர்களையும் அசுரர்களையும் அழிக்க முயன்றது. அதைக்கண்ட தேவர்களும் அசுரர்களும் நாணமுற்ற முகத்துடன், அதன் உபத்திரவத்தைத் தமக்கிருந்த ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் அடக்க முடியாமல் பயந்து அதன் துயரத்திலிருந்து நீங்க விரும்பி, நான்முகப் பிரமனிடம் சென்று, அவரைப் பணிந்து நின்றார்கள். பிரமன் அவர்களை நோக்கி, தேவர்களே! நீங்கள் மனக்கலக்கத்தோடும் பயத்தோடும் இருப்பதற்குக் காரணம் என்ன? உங்களுக்கு எண்வகை ஐஸ்வரியங்களும் இருக்கும்போது என்ன குறைதான் உங்களுக்கு உண்டாக முடியும்? நீங்கள் யாருக்குமே அஞ்சாமல் அல்லவோ இருக்க வேண்டும்? நீங்கள் அனைவரும் விமானங்களில் அமர்ந்து, நினைத்தவுடனே நினைத்த இடத்திற்குச் செல்லும் ஆற்றலுடையவர்கள் அல்லவா? உயிரினங்கள் செய்யும் நல்வினை தீவினைக்குத் தக்க சுகதுக்கங்களை தருகின்ற வல்லமைதான் உங்களுக்கு இருக்கிறதே! அத்தகைய நீங்கள், சிங்கத்தைக் கண்ட புள்ளி மான்களைப் போல் எதற்குப் பயந்து என்னிடம் வந்தீர்கள்? விரைவில் சொல்லுங்கள்? என்றார்.

தானவர்களும் முனிவர்களும் தேவர்கள் பிரமனைப் பணிந்து, பிரமதேவரே! நாங்கள் அனைவரும் பாற்கடலில் மந்திரகிரியை மத்தாக நட்டு, வாசுகியைப் பாம்பாகப் பூட்டி, அவன் வாய்ப்புறத்தில் அசுரரும், வாற்புறத்தில் தேவருமாக நின்று கடைந்தோம். அந்த வாசுகி என்னும் சர்ப்பம், நாங்கள் இழுக்கும் வேகத்தைத் தாங்காமல் தன் வாயிலிருந்து விஷத்தைக் கக்கியது. அந்த விஷம் மேகம் போலக் கறுத்து, கரியமலை போலப் பருத்து பிரளய காலாக்கினி போலக் கோரமாகி, காலகூடம் என்ற பெயரைப் பெற்று, அதிவேகமும், பற்பலவற்றையும் பஸ்பம் செய்யத்தக்கதாகத் தோன்றிவர, நாங்கள் அதைக் கண்டு பயந்து, அந்தோ! நல்ல பொருட்கள் உண்டாகும் என்று கருதி, பாற்கடலை மதிக்கையில், இத்தகைய கொடிய விஷம் பிறந்ததே என்று பயந்து சரணாகதியென்று தங்களிடம் வந்தோம் என்றார்கள். தேவர்களும் அசுரர்களும் ஒருமித்து தன்னிடம் வந்து இவ்வாறு பிரமன் கூறியதைக் கேட்டு, அசுரர்களையெல்லாம் ஒருசேர அழைத்துக்கொண்டு என் சன்னதியை அடைந்து,

நமஸ்துப்யம் விரூபாக்ஷ நமஸ்தே திவ்ய சக்ஷúஷே
நமாபிநாக ஹஸ்தாய வஜ்ர ஹஸ்தாயவை நம:
ஸாங்க்யாய சைவயோகாய பூதக்ராமாயவை நம:
நமஸ்த்ரை லோக்ய நாதாய பூதாநாம்பதயே நம:
நமஸ்ஸுராரி ஹந்த்ரேச ஸோமாஸூர்யாக்நி சக்ஷúஷே
ப்ரஹ்மணே சைவருத்ராய விஷ்ணவே சைவதே நம:
மதநாங்க விநாஸாய காலகாலாயவை நம:
ருத்ராய வஸுரேதாய தேவதேவாய ரம்ஹஸே
கபத்தி நேகரானாய சங்கராய ஹராயச
கபாலிநே விரூபாய சிவாய வரதே நம:
த்ரபுரக்தே மகத்நாய மந்த்ராணாம் பதயே நம:
புத்தாய சைவஸுத்தாய முக்தாய கேவலாயச நம:
கமலஹஸ்தாய திக்வாஸாய ஸிகண்டிநே
அக்ராய சைவ சோக்ராய விப்ராயாநேக சக்ஷúஸே
ரஜஸே சைவ ஸத்வாய நமஸ்தேவ் யக்தயோநயே
அநித்யாயச நித்யாய நித்யா நித்யாயவை நம:
அசிந்த்யாயச சிந்த்யாய சிந்த்யா சிந்த்யாயவை நம:
பக்தா, ரமரர்த்தி நாஸாய நாராயணப்ரியாயச
உமாப்ரியாய ஸர்வாய நந்திவக்த்ராநலாயச
பக்ஷமாஸார்த்த மாஸாய ருதுஸம்வத்ஸராயச
பஹுரூபாய முண்டாய தண்டிநேஸ சவல்கிநே
வல்கி நேதந்விதே சைவ ஜடிநே ப்ரஹ்மசாரிணே
ருக்யஜுஸ் ஸாம ரூபாய புருஷாயேஸ் வராயச
லோகாஷநி பாதாய இந்த்ராய வருணாயச

என்று இதுபோல நான்முகப் பிரமதேவன், தோத்திரம் செய்து, பகவானே! தங்களைத் துதித்துத் தங்களது திருவருளைப் பெற்றவனே, சகல பாக்கியங்களையும் அடைவான். தங்களைத் துதித்துத் தோத்திரஞ் செய்யாதவனுக்குப் பக்தியும் ஞானமும் சித்திக்கவே மாட்டாது. தங்கள் சன்னதியைச் சரணமாக அடைந்த எனக்கு ஞானம் உணடாகத் தயை புரியவேண்டும். அதி நுட்பமாக இருந்து தேவாசுரர்களால் கண்டறியப்படாமல் இருப்பவர் தாங்களே! என்றும் கூறினான். அதைக் கேட்டு நான் மகிழ்ந்து பிரமனே, உனக்கு என்னிடத்தில் பெருவியப்பு உண்டாயிற்று. அதனால் நீ என்னைப் போற்றிவிட்டாய்!  இனி உனக்கு வேண்டுவது என்ன? என்று கேட்க, பிரமன் என் தலைவனே! தேவாதி தேவனே! தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது, மேகம் போலக் கருத்து மிகவும் கோரமான பிரளய கால அக்கினியைப் போன்ற தகிக்கத்தக்க பெருந்தீமை விளைவிக்கவல்ல ஹாலாஹலமானது பிரளயகால சூரிய தேஜஸோடு தோன்றி அங்கிருந்தவர்களையெல்லாம் பஸ்மமாக்க விரைந்தது. அப்போது அதைக்கண்டு பயந்த அவர்கள் யாவரும் பயந்து என்னிடம் வந்து முறையிட்டார்கள். நான் அவர்கள் குறைகேட்டு, அவர்களைப் போலவே நானும் பயந்து அவர்களுடன் கூடித் தங்களைச் சரணமாக அடைந்து இந்த ஆபத்தை விலக்கிக் கொள்வதற்காகவே தங்களுடைய திருச்சன்னதிக்கு வந்தேன். தங்களைவிடச் சிறந்த தேவரும், எங்களுக்கெல்லாம் வாக்கினை தந்தருள்பவரும் ஒருவருமில்லை. ஜனார்த்தனராகிய விஷ்ணுமூர்த்தி, அந்த விஷம் தோன்றிய வேகத்தாலேயே கருநிறம் அடைந்தார். ஆகையால் மூவுலங்களிலும் அதன் வேகத்தைத் தணிக்க வல்லவர்கள் ஒருவருமில்லை. அதை உலக நலன் கருதி தாங்களே அருந்த வேண்டும் என்றான். பார்வதீ! நான் அப்போது நான்முகனை நோக்கி, பிரமனே! நீ அஞ்சவேண்டாம். அந்தகனை ஒத்த அந்த விஷத்தை நானே பானஞ்செய்கிறேன்! என்று சொல்லி, மிகக் கோரமானதும் தேவாசுரர்களையழிக்கச் சித்தமாகவுள்ளதும் கருங்குவளை இதழைப்போலக் கருத்ததும் பிரளய காலாக்கினியைப் போலத் தீக்ஷண்யமுள்ளதும் உலகங்கள் அனைத்தையும் விழுங்கவல்ல சர்ப்பராஜனாகிய தக்ஷகனைப் போன்றதான அந்த விஷத்தை அருந்தினேன். அந்த விஷம் என் கண்டத்தில் சேரும்போது, பிரமன் கண்டு சுவாமி அவ்விஷம் தங்கள் கண்டத்திலே இருப்பது அழகாக இருக்கிறது! என்று கூறியதால் நான் அவ்வண்ணமே செய்தேன். அங்கு வந்திருந்த தேவ ராக்ஷச பைசாச கணங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு தங்கள் சிரத்தின் மீது கரங்களைக் குவித்து சர்வேசா! தங்கள் வல்லமையும் வீரியமும் பராக்கிரமும் மகிமையும் இணையற்றவை, தாங்களே விஷ்ணுவும் பிரமனும் மிருத்யுவும் குபேரனும் அக்கினியும் பரமும் சூஷ்மமும் அதிசூஷ்மமும் யோகத்தால் அடையும் பரஸ்தானமும் சராசரங்களுக்குப் பிரபுவும் பிராண கோடிகளைப் படைத்து, காத்து அழிப்பவரும் பிரளய காலத்தில் எஞ்சி நிற்பவருமாவீர்கள் என்று துதித்து, உத்திரவு பெற்று மீண்டும் பாற்கடலைக் கடைந்து சுவர்க்கம் முதலிய உலகங்களில் இந்தச் சரிதத்தைப் பிரபலப்படுத்தினார்கள்.

பார்வதி! நீலகண்டன் என்று மூன்று உலகங்களிலும் புகழான பெயரை நான் பெறச் செய்த இந்த விஷயம் மிகச் சிறந்தது. எல்லோருடைய பாவங்களையும் ஒழிக்கவல்ல பிரமனால் செய்யப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தையும் இந்தச் சரிதத்தையும் உலகத்தில் தியானஞ் செய்தவன் இகபரலோகங்களில் நற்கதியை அடையும்படியாக நானே அருள் செய்வேன். அவனுடைய தேகத்தை தாவர ஜங்கமங்களால் உண்டாகிய விஷங்கள் பாதிக்க முடியாது. துர்ச் சொப்பனங்கள், அசுபங்கள் முதலியன ஒழியும், கன்னியர்கள் இதைத் தியானம் செய்தால் தங்கள் கணவருடன் தீர்க்க சுமங்கலியராகச் சகல சவுபாக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள். கவிஞர்கள் சபைகளினின்று இதைத் துதிப்பார்களானால் வெற்றிபெறுவர். மன்னர் சபையில் துதித்தவன் வழக்கிலே வெற்றி பெறுவான். போர்க்களத்தில் துதித்தவன் சூரத்வம் அடைவான். யாத்திரையில் துதித்தவன் உடற்பீடையொழிவான். இந்த நீலகண்ட நாமப் பிரபாவத்தையே எப்போதும் தியானஞ் செய்வோன் நீலகண்டம், சந்திரசேகரம், நந்திக்கு ஈடான பராக்கிரமம் சம்பத்து, முக்கண் சூலம் உன்னதவாகனம் யோகசித்தி முதலியவைகளைப் பெற்று ஏழு உலகங்களிலும் என் கட்டளையால் தடையில்லாமல் சஞ்சாரம் செய்வான். பிரளயகாலம் வரையில் வாயுவானது சஞ்சரிப்பதுபோல அவன் சுகமாக வாழ்வான். என்னிடம் பக்தி வைத்து, இந்தச் சரிதத்தைக் கேட்பவர்கள். நூறு கோதானம் விசேஷ தட்சிணை வைத்து உத்தமப் பிராமணர்களுக்கு தானங்கொடுத்து நற்பயனை அடைவார்கள். பிரமன் செய்த இந்த ஸ்தோத்திரத்தில் ஒரு சுலோகத்தையோ, அதில் ஒரு பாதியையோ, ஒருபதத்தையோ, அல்லது அந்தப் பதத்தில் ஒரு பாதியையோ, தினந்தோறும் துதித்தவன், உருத்திர லோகத்தை அடைவான். பார்வதி! உன்னிடம் எனக்குள்ள அன்பினால் இந்த இதிகாசத்தை உனக்குச் சொன்னேன் என்று கூறிப் பார்வதிதேவியாரை உடன்கொண்டு, கைலாயகிரியின் ஒரு குகையில் இருந்தார். இந்த விஷயத்தை நான் என் தாயின் மடியில் உட்கார்ந்து கேட்டவாறே உனக்குச் சொன்னேன் என்று குமரப்பெருமான் கூறியதாக வசிஷ்ட முனிவர் எனக்குச் சொன்னார் என்று வாமதேவர் கூறினார். அதைக்கேட்ட வாலகில்லிய மாமுனிவர்கள் அனைவரும் மகிழ்ந்து சிவத்தியானம் செய்த வண்ணம் தத்தம் இருக்கைகளை அடைந்தார்கள் என்று ஸனத்குமார முனிவர் சொன்னார்.

51. முப்புரங்களின் தோற்றம்

வியாஸர், ஸனத்குமார முனிவரை நோக்கி, ஸ்வாமி! பக்தர்களுக்கு திருவருள்புரியும் பிநாக பாணியானவர், முன்பு முப்புரங்களை ஹதஞ் செய்த சரிதத்தை அடியேன் தங்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதை விவரமாகச் சொல்லவேண்டும் என்றார். அதற்கு ஸனத்குமார முனிவர் கூறலானார்.

மைந்தனே! தைத்தியரில் உயர்ந்தவனான ஹிரண்யாக்ஷதன் மரணமடைந்த பிறகு அவனுடைய பரிவாரங்களாக இருந்தவர்கள் துக்கமடைந்து மயனிடம் சென்று வருந்த, மயனும் இரதியைப் பிரிந்த மதனனைப் போல வருந்தி, தாரகாக்ஷனையும் விஷ்ணுவுக்குச் சமானமான வலிமையுடைய வித்யுத்பிரமனையும் உடன் கொண்டு தவஞ்செய்யக் கருதி, மழைக்காலத்தில் இமயமலையின் உச்சியிலும் வேனிற்காலத்தில் பஞ்சாக்கினியின் மத்தியிலும் ஆகாயத்திலும் பனிக்காலத்தில் கழுத்தளவு நீரிலும் இருந்து இருபதினாயிரம் ஆண்டுகள் உக்கிரமான தவத்தைச் செய்து, எலும்பும் தோலுமாக இளைத்து சுகாசுகங்களை மறுத்து ஒரே மனதாக இருக்கும்போது பிரமதேவன் பிரசன்னமாகி நீங்கள் பெருந்தவஞ்செய்தீர்கள்! என்று கூறினார். அவர்கள் மூவரும் நமஸ்கரித்தார்கள். அப்போது மயன், பிதாமகரே! எங்களுக்கு இறவாமையும் சமானமில்லாத வலிமையும் பிறரால் அடைய முடியாததும் எங்களுக்குப் பெருசுகம் செய்வதுமான இடமும் பிறரால் மரணமின்மையும் அருளவேண்டும்! என்றார். அதற்கு பிரமதேவன் அசுரர்களே! பிறரால் அடையமுடியாத இடம் வேண்டுமாயின் கொடுப்பேன். இறவாதிருக்க வரங்கொடுக்க மாட்டேனாதலின், எவ்வகையிலாவது இறக்கத் தக்கதையே கேளுங்கள் என்றார். உடனே மயன், எங்கள் மூவருக்கும் பொன், வெள்ளி, இரும்பு முதலியவற்றால் ஆகிய முப்புரங்கள் வேண்டும். அவற்றில் ஒவ்வொன்றில் நாங்கள் வசித்து, அந்த நகரத்துடன் நினைத்த இடங்களுக்குச் செல்லவும், அவை ஆயிரம் வருஷங்களுக்கு ஒருமுறை ஒன்று சேரவும். அந்த க்ஷண நேரத்தில் அந்த முப்புரங்களையும் ஒரே கணையால் அழிக்கவல்ல மஹாவீரனிருந்தால் அவன் கையால் முப்புரங்கள் அழியும்படியான வரத்தைத் தரவேண்டும் என்று கேட்டான். அதற்கு பிரமன், அவ்வாறே வரம் தந்து மறைந்தார்.

அதன்பிறகு சந்திரமண்டலம் அளாவிய மேடைகளும், மலர்களும் கனிகளும் நிறைந்த மரங்களும், வாவி, கூப, தடாகங்களும், பறவைகளும் அதிரூப சவுந்தரிய மங்கையரும் பாருந்திய பொன், வெள்ளி, இரும்பினாலாகிய முப்புரங்களையும் அமைத்து, அதில் வசித்து அவர்கள் பகைவர்களை வென்று மூன்று லோகங்களையும் அனுபவித்து வந்தார்கள். சில காலத்திற்கெல்லாம் கர்வத்தாலும் அஞ்ஞானத்தாலும் தேவர்களை அவமதித்து அவர்களுடைய நந்தவனங்கள் முதலியவற்றை அழித்து, அவர்களுக்கு மிகவும் தொல்லைகள் கொடுத்து, அவர்களை அழிக்கக் கருதியிருந்தார்கள். இந்திராதி தேவர்கள், அவர்களால் மிகவும் துன்பமடைந்து பிரமனிடம் சென்று முறையிட்டார்கள். பிரமன், தேவர்களை நோக்கி, அமரர்களே! அசுரர்கள் பலசாலிகள். அவர்களை வெற்றி பெற நம்மால் இயலாது. ஆகையால் நாமும் விஷ்ணுமூர்த்தியும் ஜகத்காரண காரியனாகிய சிவபெருமானிடஞ் சென்று இந்த நிலையை அவரிடம் சொல்லி முறையிடுவோம் என்று சொல்லி, தேவர்களையும் திருமாலையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, சிவபெருமானிடம் சென்றார். பரமேஸ்வரனைக் கண்டதும், அவரை வணங்கி மூவுலங்களிலும் பூஜிக்கத்தக்க மகாதேவா! சந்திரசேகரா! பிநாகபாணி, பரசுபாணீ! திரிசூலபாணீ! ஜகந்நாதா! விசுவேசா! திகம்பரா! நீலக்கண்டரே! என்று பற்பலவாறு துதித்தார்கள் சிவபெருமான், அவர்கள் துதிப்பதைக்கண்டு மகிழ்ந்து, தேவர்களே! உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேளுங்கள். நான் உலகுக்கு நன்மை செய்பவனாகையால் உங்கள் கருத்தை வெளியிடுவீர்களாக! என்று கேட்டார். தேவர்கள் முப்புரங்களில் வாழும் மூன்று அசுரர்களும் தங்களுக்குச் செய்யும் துன்பங்களைச் சொல்லி, அவ்வசுரர்களை அவரே அழித்து தங்களை ரட்சிக்க வேண்டும் என்று வேண்டி, மீண்டும் துதி செய்தார்கள்.

52. முப்புரங்களை அழித்தல்

வியாஸரே தேவர்களின் தோத்திரங்களைக் கேட்டு சிவபெருமான், மனமகிழ்ந்து, முப்புரத்து அசுரர்களை வெல்வதற்கு நம் சார்பில் போர்க் கருவிகளைத் தயாரிப்பீர்களாக! என்று கட்டளையிட்டார். தேவர்கள் பூமியை இரதமாக்கி மேருமலையை வில்லாகவும் வாசுகியை நாணாகவும் பிறதேவர்களை பிற போர்க் கருவிகளாகவும் நியமித்து வேதங்கள் நான்கையும் குதிரைகளாக பூட்டி பிரமனைச் சாரதியாக்கி, பிரணவத்தை குதிரைகளைத் தூண்டச் செய்யும் தூண்டுகோலாகக் கொண்டு சர்வாடம் பரபூர்வமாகச் சித்தப்படுத்திவிட்டு, அந்தச் செய்தியை சிவபெருமானிடம் அறிவித்தார்கள். அப்பொழுது சிவபெருமான் தேவியாருடன் எழுந்து அந்த இரதத்தில் ஏறியமர்ந்தார். பிரமன் குதிரைகளைத் தூண்டி தேரை ஓட்டினான். இந்திரன் முதலிய தேவர்களும் பிரமவிஷ்ணுக்களும் கணபதி ஸ்கந்தர்களும் பூதகணங்களும் புடைசூழ்ந்து சென்றனர். இவ்வாறு அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தப்புரத்தை அடையும்போது, வழக்கப்படி புரங்கள் மூன்றும் ஒன்று சேரும் காலமாக இருந்ததால், அவை மூன்றும் ஒன்று கூடின. அது சரத் காலமும் சந்திர புஷ்பயோகமும் அபிஜித் முகூர்த்தமுமாக இருந்ததால் சிவபெருமான் அந்த முப்புரங்களை எய்ய முயன்றார். அப்போது தேவர்கள், அண்ணலே! இந்த சமயத்தில் தாங்கள் அம்பு தொடுக்க வேண்டும். இதை விட்டு விட்டால் பின்பு இது போன்றதொரு சமயம் வாய்க்காது! என்று கூறினார்கள். சிவபெருமான் உமாதேவியாரைப் பார்த்துப் பிறகு முப்புரங்களையும் பார்த்துப் புன்னகை செய்ய அவை நெருப்புற்று எரிந்தன. அதன் பிறகு தன் கரத்திலேந்திய பாணத்தைச் செலுத்த, அந்த பாணம் முப்புரங்களை அழித்தது. அமரர்கள் ஜெய ஜெய! என்று முழங்கினார்கள். சிவபெருமானைப் புகழ்ந்து, அவரிடம் விடைபெற்று தத்தம் நகரங்களை அடைந்தார்கள். சிவபெருமானும் பார்வதி தேவியாரும் கணபதி ஸ்கந்தரும் திருக்கையிலையை அடைந்தார்கள்.

53. பாவருசியின் சரிதம்

வியாஸர், ஸனத்குமார முனிவரை நோக்கி, மாதவரே! சிவபெருமான் உமாதேவியாருடன் கையிலாய மலையை அடைந்து என்ன செய்தார் என்று கேட்டார். அதற்கு ஸனத்குமார முனிவர் கூறலானார். வியாஸரே! சிவபெருமான் கைலாயகிரியை அடைந்ததும், உமாதேவியார் சிவபெருமானைப் பணிந்து, ஜகதீசா! தாங்கள் யாசகம் எடுத்துப் புசித்து, நைமிசாரண்யத்தில் வசித்து, சவுசம், தவம், பக்தி, சாந்தி முதலியவற்றுடன் கூடிய ஹிரண்யன் என்ற வேதியனின் வீட்டை அடைந்து அவனது பூஜையைப் பெற்றீர்கள் அல்லவா? தேவர்களைவிட அந்தணர்களே சிறந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன். அத்தகைய வேதியர்களுடைய சிறப்பைக் கேட்க, நான் விரும்புகிறேன். அதை தயைசெய்து கூறவேண்டும் என்று கேட்க சர்வேசனாகிய சிவபெருமான் கூறினார்.

பார்வதி! அக்கினியைப் போன்ற தேஜஸ் உள்ள அந்தணர்கள் எந்த இடத்திலும் வாழ்வார்கள். அவர்கள் இல்லாத இடமே இல்லை. சாத்வீக குணத்தை விருத்தி செய்வதும் அஞ்ஞானத்தை ஒழிப்பதுமாகிய ஆர்ஜவம் (நியாயவழிப்படி) நடத்தல் என்ற இரு பண்புகளும் அந்தணர்களிடம் உள்ளன. ஆர்ஜவமானது தனமும் வித்தையும் என்ற இரண்டையும் விடச் சிறந்தது. மமதையானது மோகத்தால் உண்டான பலவித அசாத்தியமான பாதகங்களையும் பாவங்களையும் நாசஞ் செய்ய வல்லது. அந்த இரண்டு குணங்களும் வேதியர்களின் அனுஷ்டானங்களில் இருப்பதால் அவர்களுக்கு இத்தகைய சிறப்புண்டாயிற்று.

பூர்வம், கங்கைக்கரையிலுள்ள ஓர் அக்கிரஹாரத்தில் வசித்து வந்த ஒரு பிராமணன் சகல தர்ம சாஸ்திரங்களையும் வேத வேதாங்கங்களையும் அறிந்து உணர்ந்து சர்வ பூதங்களுக்கும் பிரியமானவனாகி, தன் மனைவியுடன் கூடி அக்னி கார்யம் நடத்தி வயல்களில் சிந்திய தானியங்களைக் கொண்டு, வாழ்ந்து வந்தான். பாவருசி என்ற அவ்வந்தணன் மூன்று நாட்களுக்கு ஒருமுறை உண்ணும் நியமமுடையவனாய் அதிதி பூஜையை நியமமாக முடித்து அதன் பிறகு உண்டு, அநேக காலம் கழித்து தன் தவம், தியானம், யோகம் முதலியவற்றால் சூரிய தேஜசுக்கும் விசேஷமான தேஜஸைப் பெற்று விளங்கினான். அவருடைய நியம நித்தியாக்கினி ஹோத்திரத்துக்கு அக்கினியும் மகிழ்ந்து, அவனிடம் மகிழ்ச்சி கொண்டு அவன் விரும்பியவற்றையெல்லாம் கொடுத்து வருவானாயினன். இந்நிலையில் ஒருநாள் அவ்வந்தணன் உணவருந்தச் செல்லும்போது மழையும் காற்றும் அதிகரித்து இருந்ததால், ஒரு அதிதியும் வரவில்லை. எனவே அவன் அன்று முழுதும் காத்திருந்தும் ஒருவரும் கிட்டாமையால் அதிதிபூஜை செய்யாமல் சாப்பிடக்கூடாது என்று நியமத்துடன் உபவாசமிருந்து வாசுதேவனைத் தியானித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியும் கணவன் மீது விசேஷமான பக்தியுடையவளாக இருந்ததால் தானும் உண்ணாமல் இருந்தாள். அப்போது அக்கினித்தேவன் அவனுடைய மனோதிடத்திற்கு மகிழ்ந்து, ஒரு நீசனாகவும் அசிங்கமான தேகத்தோடு ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தான். அந்தணனோ, பசியைச் சகிக்க முடியாமல் அதிதிகளை நாமாவது தேடிவருவோம் என்று குளிரையும் பாராட்டாமல் வெளியே புறப்பட்டு வந்தான். மரத்தின் அடியில் கிழவன் ரூபத்தில் குளிரால் வருந்தி உடல் முழுதும் இரணமாகி அந்த இரணத்தில் புழுக்கள் சொரியும் அதன் வேதனையை தாங்காமல் அழுதுகொண்டும் இருந்த சண்டாளனை அந்தணன் பார்த்து அவனை அணுகி, உபசார வார்த்தைகளைச் சொல்லி, நெருப்பை மூட்டி அவனைக் குளிர் காயவைத்து அன்னமிடுகிறேன் தாங்கள் வரலாம்! என்று அன்பும் பரிவுங் கனிவுங்கொண்டு அழைத்தான்.

சண்டாளனோ, சுவாமி! அடியேன் சண்டாளன்! அந்தணர்கள் தேவாராதனை செய்த அன்னத்தை அடியேன் புசிப்பதற்கு தகுதியற்றவன், ஆயினும் ஆபத்காலமாக இருப்பதால், பசு, பக்ஷி, மிருகங்களுக்கு இடுவது போன்ற ஏதேனும் சிறிதளவு வீதியிலே கொண்டு வந்து கொடுத்தால் புசிப்பேன் என்றான். அப்போது அவ்வந்தணன் தன் ஞானத்தால், வந்தவன் அக்கினித்தேவனே என்றும் சண்டாளன் அல்லன் என்று உணர்ந்து நான் அர்க்கிய, பாத்திய ஆசனாதிகளால் உன்னுடைய குலத்தைப் பூஜிப்பதில்லை. எல்லாப் பிராண சரீரங்களிலுள்ள சிறப்பான சர்வவியாபியும் பரமாத்மாவுமாகிய பரமசிவனை பூஜிக்கிறேன். ஆயினும் ஜாதி விஷயமாக உலகத்தார் அனுசரிக்கும் நிந்தையும் உன் விஷயத்தில் நான் கருதவில்லை. தவசீலர்கள் யாவரையும் தேவராகவே பாவித்து கிருமிகிரீட பிராமணனது யெல்லாரிடத்திலும் சமானபுத்தியுடன் அன்பு செலுத்துவார்கள். அதுபோன்ற கொள்கையுடைய எனக்கு உனது தேகாதிஷ்டமான பரமாத்மா ஸ்வரூபத்தில் நிந்தை, இனமான நிந்தை, அநித்தை என்ற பேதங்களே எனக்கு கிடையாது. ஆகையால் தடையின்றி உன்னைப் பூஜிப்பேன். என் வீட்டுக்கு வந்து சமஸ்கரிக்கப்பட்டுள்ள அன்னத்தை சாப்பிட்டு எங்களை அனுகிரகிக்க வேண்டும் என்றான். அதைக் கேட்டதும் நீச வேடத்திலிருந்த அக்கினித்தேவன். அவர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அவர்கள் வீட்டை அடைந்தான். அப்போது அந்தணன் புனிதமான மனத்துடன் விதிப்படி அதிதி பூஜை செய்ய, அக்கினிதேவன் அந்த பூஜையை ஏற்றுச் சாப்பிட்டு மனங்களித்து, அந்த வேதியனுக்கு உத்தமமான யோக ஐச்வரியத்தை அருள் செய்தான். சிலகாலஞ் சென்றது. பிறகு அந்த வேதியன் தன் மனைவியுடன் கபிலன் என்ற முனிவர் முக்தியடைந்தாற்போல முக்தியடைந்தான். இவ்வாறு நற்குண சம்பன்னனான வேதியன், தான் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ற சுகாசுகங்களை அனுபவிக்காமலேயே முக்தியை அடைந்தான். பார்வதி! நான் சொன்ன இந்த உத்தம பிராமண மான்மியத்தை நாள்தோறும் படித்த புனிதமான மனமுடையவன் தான் விரும்பிய பயனையும் தேஜஸையும் பெறுவான் என்று சிவபெருமான் கூறினார் என்று ஸனத்குமார் முனிவர் சொன்னார்.

54. சிவயோக விபூதி மகிமை

வியாச முனிவர், ஸனத்குமார முனிவரை நோக்கி, சுவாமி! முன்பு பிரமன் முதலிய தேவர்கள் அனைவரும் பாசுபத யோகத்தை அனுசரித்துச் சிவபெருமானின் அருளைப் பெற்றுப் பெரும் பதவியில் இருப்பதாகச் சொன்னீர்கள். ஆகையால், அந்தப் பாசுபதயோகத்தையும் அதனால் அடையும் ஞானத்தையும் தயை செய்து, விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றார்.

ஸனத்குமாரர் கூறலானார்: வியாச முனிவரே! பிரமன் முதலிய அனைவரும் தக்ஷனின் யாகத்தில் வீரபத்திர மூர்த்தியால் அழிந்தார்கள். பிறகு, உமாதேவி, சிவபெருமானை நோக்கி, என் பொருட்டு இவர்களை எழுப்பியருளவேண்டும்! என்று வேண்டவே தேவநாயகன் அவர்களை எழுப்பியருளினார். உயிர் பெற்ற அனைவரும் உலக நாயகனைச் சரணடைந்து, திருநீறு பூசிக்கொண்டு, சிவபக்தர்களாகச் சிவத்தியானம் செய்து கொண்டிருந்தார்கள். அதைக் கண்டு மகிழ்ந்த மகாதேவன், அவர்களுக்குப் பாசுபத யோகத்தை உபதேசித்தார். அந்த யோகமானது, அநேக ஆயிரம் பிறவிகளில் செய்த புண்ணியப் பயன்களை எல்லாம் சிவார்ப்பிதம் செய்த பிரம புருஷர்களுக்கன்றி உபதேசிக்கப் பிராப்தமாகாது. பாசுபத தீøக்ஷயைப் பெற்று சர்வஞானமடைந்து, தபோதனர்களும் துதி செய்யும் சிவபெருமானை அடையத்தகும். அதர்மத்தாலன்றிப் பாவமும், தர்மத்தாலன்றிப் புண்ணியமுமாகிய பயன்கள் சித்தியாக மாட்டாது. இவை இரண்டும் ஒன்றைவிட மற்றொன்று பெரியதாகவும் அநாதியாகவும் உலகத்தில் இருக்கின்றன. புண்ணிய பாவ பயன்களில் விருப்பும் வெறுப்பும் இல்லாமல் பாசுபதயோகத்தைப் பயின்றவர்கள் அளவிட்டுச் சொல்ல முடியாத அகண்ட ஐசுவரியத்தை அடைந்தவர்களாவார்கள்.

வியாசரே! திருநீற்றைத் தொட்டவுடனேயே அறியாமைத்தளைகள் அறுந்தொழியும். அந்தப் பஸ்ம தாரணத்தாலேயே ஜீவன் முக்தனாகிறான். சோமாக்கினியால் செய்யப்பட்ட விபூதியைத் தரித்த பிரமா முதலான தேவர்கள், அந்த விபூதியின் பிரபாவத்தால் விரியவான்களாய்ப் பரமாத்ம ஸ்வரூபியாகிய சங்கரனை ஸ்மரித்து, எல்லாப் பாவங்களையும் ஒழித்துப் பாசுபத யோகஞ்செய்து முக்தரானார்கள். தேவர்கள் அனைவரும் சோமத்தால் உண்டானவர்களும், அக்கினிலுண்டானவர்களுமாகையால், உலகம் முழுவதும் அக்கினி ஸோமாத்மகமாக இருக்கிறது. சாம்பசிவனே, அக்கினியும் சோமமுமாக விளங்குகிறான். அக்கினி சொரூபமும் சோம சொரூபமாகிய சிவபெருமானுடைய தேஜஸே விபூதியாகும். அத்தகைய விபூதியை அணிந்தவர்கள் எல்லாப் பாவங்களையும் ஒழித்து, முக்தர்களாவார்கள். வைதீக ஆசாரமும் சாங்கிய ஆசாரமும் ஞானமும் தவமும் சிறந்த தர்மங்களும் ஆகியவற்றை யெல்லாம் விட்டு விட்டாலும், அதர்மனாக இருந்தாலும் பற்பல தர்மங்களில் அவாவுடையவனாயினும் விபூதி பூசியவுடனேயே பிறைசூடிய சிவபெருமானின் திருவடித்தாமரையில் அடைவான். பஸ்ம தாரணை செய்தவுடனே, அதற்கு முன்பு சிவபக்தி என்பதே சிறிதும் இல்லாதவனாயினும் அதிவிரைவில் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டுச் சிவபக்தியை இடைவிடாமல் அடையத்தக்க நல்ல மனமடைவான். இப்படித்தான் முன்பு திடச் சித்தமுள்ள பலர், பாசுபத விரதத்தைக் கடைப்பிடித்து நற்கதியை அடைந்தார்கள். ஆகையால், சிவசம்பந்தமான இந்த விஷயம் பரம இரகசியமும் அத்தியாவசியமுமாகும். இதை யாவரும் அப்யசிக்க வேண்டும். ஞாதுரு, ஞானம், ஞயம் ஆகிய மூன்றும் உடலில் பரமாத்மா ஸ்வரூபமாய் நாடிகளில் வியாபித்துள்ளன. பாலில் கலந்துள்ள நெய்யைப் போலப் பூதங்களிலெல்லாம் பரமாத்மா, நுண்ணுருவாக வியாபித்திருக்கிறான். ஆகையால் தன்னிடமுள்ள பரமாத்மா, ஸ்வரூபத்தை உணர்வதினாலேயே முக்தி கைகூடும். அந்தப் பரமாத்மாவை ஞானத்தினாலேயே அடைய வேண்டும். ஞானத்தால் அல்லாமல், உருவம், ஓசை முதலியன ஒன்றுமில்லாத ஜகதீசனைப் பிறிதொரு வகையாலும் காண முடியாது.

வியாச முனிவரே! சொரூபாதீதனாகிய பகவானுடைய குணானுபவங்களை. அவ்விறைவனுடைய திருவருளால் அறியத்தக்க ஓர் உபாயத்தைச் சொல்லுகிறேன். இந்த உலகம் ஒரு காலத்தில் சூனியமாக இருந்ததன்றோ? அப்பொழுது, தேவர்கள், அசுரர்கள், நதிகள், சூரிய சந்திரர்கள் முதலிய ஒன்றும் காணப்படவில்லை அல்லவா? அப்பொழுது சுத்தபுத்த சச்சுதானந்த பரப்பிரம ஸ்வரூபம் ஒன்றே மீதமாக இருந்தது. அந்தப் பரம்பொருள் அழிவற்றதும் மாத்திராதீதமும் நிர்விகாரமும், நிரஞ்சனமும், உள்ளும் புறமும் விளங்குவதும் சுயம்பிரகாசமும் விகாரரகிதமும், பரமும் நித்தியமும் ஞான சொரூபமுமானது. அந்தப் பரமான பொருளிலிருந்து ஓம் என்பது பிறந்தது. அந்த ஓங்காரமும் மூன்று மாத்திரைகளின் அளவுள்ளதும் மூன்று எழுத்துக்களின் வடிவானதுமாம். அதுவே பரப்பிரம்மம். அந்த ஓங்காரத்திலுள்ள அகார உகார மகாரங்கள் மும்மூர்த்திகளும் மாத்திரைப் பிரகிருதியுமாம். சர்வேசனாகிய சிவபெருமான் அந்தப் பிரகிருதியைப் பாரியையாகப் கொண்டிருக்கிறான். அகார உகார ஸ்வரூபிகளான பிரம விஷ்ணுக்கள் ஈஸ்வர சப்தமுடையவர்களாகவே விளங்குவார்கள். மாயோபாதியையுடைய அந்தப் பிரம விஷ்ணுக்களையும் மாயையாகிய பிரகிருதியை அடையும் மாயாரஹிதமாகிய சுத்தசிவம் தன்னிடத்தில் ஒடுக்கியும் மீண்டும் படைத்தும் அவர்களால் உலக காரியங்களை நடத்திவருவதே இயற்கை.

வியாசரே! இது பரம இரகசியம். அழிவில்லாதது. உம் விஷயத்தில் கிருபையுடையவனாகையால் இதை உமக்குக் கூறினேன். இத்தகைய ஓங்கார ஸ்வரூபமான பரம மந்திரத்தை எவன் ஒருவன் தியானஞ் செய்தாலும் கிருதார்த்தனாய் முக்தனாவான். பிறமதங்களில் புகுந்தவர்கள் முக்தியடையார்கள். பாசுபத யோகத்தில் புகுந்துள்ள புண்ணியர்களைப் பாலில் உள்ள நெய்யைப் போலக் கலந்துள்ளதும், பிரகிருதியைவிடப் பரமானதும் தத்துவ சொரூபத்திலுள்ளதும் ஓங்கார ஸ்வரூபமாக விளங்குவதுமாகிய நமது சொரூபமே பரப்பிரமம் என்று உணர்ந்தவர்களாய் சம்சாரபந்தங்களை ஒழித்துச் சிவானுக்கிரகத்தால் முக்தியை அடைவார்கள். பிரகிருதியோ ஈசுவரன் அன்று குணபேதங்களைப் பொருந்தியுள்ளது. பல ரூபங்களையுடையது, வியாபகமாகவுள்ளது. யான் என்னும் அபிமானத்தால் சிருஷ்டி எனும் பெயரையுடையது. அத்தகைய மாயைக்கு நாயகனாகவுள்ளவன் மஹேசன். அந்தப் பிரகிருதியானவள் எட்டுப் புயங்கள், மூன்று கால்கள், ஐந்து முகங்கள், மூன்று விழிகள், ஐந்து தொழில்கள், இந்திரியாதி ஏழுபுரவிகள் பூட்டிய தேர் முதலியவற்றுடன் உலகத்திற்கு தாய் போல் நின்று சத்துவம் முதலான முக்குணங்களால் பிறந்து, வித்தை, அவித்தை  ஆகிய இரு வடிவாகி விளங்குவாள். அந்த மாயையினாலே பிரபஞ்சம் முழுவதும் உண்டாயிற்று. நிர்குணமான பரமசிவத்தினின்று ஓங்காரம் தோன்றியது. அப்பரமசிவமும் ஓங்காரத்திலேயே விளங்கும். மகாயோகிகளான கபிலமுனிவர் முதலானவர்கள் பாசுபதத்தை அனுசரித்து நிற்விகற்பசமாதியில் இருக்கிறார்கள். நிர்க்குணமான பரப்பிரமமே யாவற்றிற்கும் காரணமாக விளங்கும். பிரம விஷ்ணு முதலியவர்கள் பிரகிருதி சம்பந்தமும் மாயா விசிஷ்டமுற்று ஓங்காரத்திலேயே தோன்றி குணாத்மகர்களாய்த் தேவயக்ஞநாமங்களைப் பெற்று, தர்மா தர்மபந்தமற்று, மோக விசிஷ்டர்களாயினும் ஞானவான்களாய் தேவர்களாக விளங்குகிறார்கள். ஈஸ்வரமகாத்மியத்தால் பிரகிருதி, அவரிடத்திலேயே லயமாகிறது. அந்தப் பிரகிருதிக்கு ஈஸ்வரனைக் கட்டுவிக்கும் சக்தி கிடையாது என்ற விவரங்களைத் தியானலோகம் உணர்ந்தவனே அறிந்து, சம்சார சாகரத்தை நீந்தி, மோட்சக் கரையைக் காண்பான்.

55. நாடிச் சிறப்புகள்

வியாச முனிவரே! ஆன்மாவானது மிகவும் நுட்பமானது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன குணங்களாகும். ஞானேந்திரியங்கள் ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஐந்தும், பிராணன் முதலிய ஐந்து வாயுக்களும் சாக்கிர, சொப்பனாதி அவஸ்தைகள் யாவும் தேகத்தில் உள்ளன. அதில் சொப்பன அவஸ்தையில் ஜ்வாலினி, ஸ்திமிதை, உஸ்ரை, வித்யை, அவித்யை, விசாலினி, மாலினி, சங்கரி, சுமித்திரை, போதினி என்ற பத்து நாடிகளும் சேர்ந்துள்ள எல்லாப் பிராணிகளின் இதய கமலத்திலும் பிறகுணங்கள் ஒன்றும் இல்லாமல், ஆன்மா மட்டும் நுட்பவடிவோடு இருக்கும் என்று சிவயோகிகள் தீர்மானித்திருக்கிறார்கள். இந்த நாடிகளும் ஜீவாத்மாவோடு எப்பொழுதுமே இருப்பவையாகும். சொப்பன அவஸ்தையில் சப்தாதிவிடுத்த ஜீவன் சர்வ சக்தனாகி, சாட்சியாகித் தானே காண்கிறான். அகங்காரம், மனம், புத்தி, சித்தம் என்பவை குணங்களாகையால், அவை உடலை ஒருபோதும் விட்டுப் பிரியமாட்டா, அகங்காரம் முதலான நான்கினோடும் ஐந்தாவதாக தேகத்தில் வசிக்கும் சிவன், இதய கர்ணிகையில் பூரித்து நாடிப்பிரவேசம் செய்து, மனதில் அதிசூட்சும சொரூபமாய் பிரவேசித்து விளங்குவான். அந்தச் சிவகுணம் பலவகைப்படும். ஈடு இணையற்ற அப்புருஷன் பிரமனைப் படைத்துச் சூரியமண்டல சஞ்சாரஞ் செய்யும் அகங்கார குணமுண்மையின் பிரமனும் ஞானமும் தர்மமும் ஆசையும் ஓஷதியுமாகப் பிரபஞ்ச காரணமாக விளங்குவான். விஷ்ணு புத்தி ஸ்வரூபமாய் உலக காரணனாகிறான். புத்தியினால் ஞான வைராக்கியங்களும், ஆகாயமும் விஸ்தரித்தன. ஜீவன் மத்தியில் புகையில்லாத அக்கினி ஜ்வாலை ஒன்று விளங்கும். அதுவே, எல்லா ஆன்மாக்களுக்கும் அடையத்தக்க பரமமுக்தி ஸ்தானமாகும். அந்த அக்கினியின் மத்தியில் பரமாத்மா புலப்படாது. அந்தர்க்கதமாய் விளங்கும். அந்த இடத்தில் ஸரஸை, லோஹிதை, முக்யை, புரோதை ரஸவதி, விதரமா, அமிர்தா, நந்தினி, பப்ரு விஸ்தரா என்ற நாடிகள் அதிநுட்பமாக எல்லாக் காலத்திலும் திரிந்து கொண்டிருக்கும். இது சோம ஸ்வரூபம். இந்த நாடிகளால், பரமாத்மா திருப்தியடைந்து, ஜீவ மத்தியிலுள்ள மங்களகரமான அக்கினி சிகையைச் சப்திக்கச் செய்கிறான்.

அதன் அசைவே அமிர்தம் எனப்படும். அதுவே, அந்தப் பரமாத்ம சாக்ஷõத்காரத்தைக் கொடுப்பது என்று சொல்லப்படும். சாக்கிர அவஸ்தையில் பிராக்ஞன் எனப்படும். எல்லாத் தேகத்திலும் பரமாத்மா சம்பந்தமான நாடி சுழிமுனை எனப்படும். யோகத்தில் பிரவேசிக்கும்பொழுது சுப்தன் என்பார்கள். முனிவனாக இருப்பவன் ஜாக்கிர சொப்பனங்களை விளக்கி தியான யோகத்தைச் சிந்திக்க வேண்டும். கமனாதி பாவனைகளையும் மனதிற்குரிய அசூயையாதிகளையும் ஒழித்து வைராக்கியத்தைத் தேடிக்கொண்ட யோகபுருஷர்கள் மனதைத் தொந்த விகற்பஞ் செய்யாது, அகங்காரத்தால் செய்யும் கிரியைகளை விலக்கித் தியானயோகத்தைச் செய்யவேண்டும். கர்மங்களின் பயனை விரும்பும் வரையில் நலம் உண்டாகாது. கர்மங்களைச் செய்து புனிதமான மனதையடைந்து, கர்மபயனைப் பரித்தியாகஞ் செய்பவனே முக்தன். அவஸ்தைகளின் முடிவில் உண்டான சோமத்தால் உண்டான விஷயங்களை அக்கினியே அனுபவிப்பவன். பரமயோகியானவன், இவ்விகற்பங்களை அறிந்து விலக்க வேண்டும். இந்த அவஸ்தையில், தர்மா தர்மங்களானுண்டான புண்ணிய பாவங்களும் உலகத்திலுள்ள இச்சாவிசேஷமும் அவனைப் பாதிக்காது. போகஞானமுடையவன் சங்கரவிரதத்தை ஆசரித்துத் தேகம் நீங்கி, மாயையை வென்று முக்தனாவான். சூட்சுமமான வேறொரு வகையுமுண்டு. பாசுபத தீøக்ஷ வகிப்பவர்கள் அனைவருக்கும் முக்தியுண்டாக்கும். ஞானமானது எல்லோருக்கும் சாதாரணமாக உண்டாக்க மாட்டாது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இந்திரிய சமூகங்கள் யாவும் ஆத்மாவைச் சம்பந்தப்படா. ஆயினும் ஆன்மாவிற்கு விகாரத்தை உண்டாக்கும் குணங்களாகும். ஆன்மா, எல்லாப் பிராணிகளிடத்தும் விளங்கினும் காணப்படாதது. சூட்சுமமானது, சிந்திக்க அகோசரமானது. அந்த ஞான யோகத்தால் அறிந்தவர்களே சிறந்த முனிவர்களாவார்கள். பரமாத்மாவின் சாயையே கண்மணியின் பாவையாக விளங்கும். அந்தச் சாயை ஏகாக்ஷரம் என்ற பெயருடன் இதய கர்ணிகையில் விளங்கும். அந்தச் சிவரூபத்தில் அநேகங்கோடி நாடிகள் சேர்ந்திருக்கும். காந்தாரி, விஜயை என்ற நாடிகளை வகித்தது பிராணவாயு. நாபியிலுள்ள தாலகந்தாதி நாடிகளையும் யோகன் முதல் ஊஷ்மன் என்பது இறுதியாகவுள்ள பத்து நாடிகளையும் வகித்தது நாகன்.

அந்த நாகஸ்வரூபமானவாயு, அக்கினி ஸ்வரூபனாய் உள்ளும் புறமும் சிவனுக்குத் திருப்தி செய்து சிவனுக்கு வாயு ஸ்வரூபத்தினால் வலிமையை ஏற்படுத்தும். சோமவன்னிகளிலுள்ள சுழுமுனை நாடியானது வயோதிக இளமை உடல்களில் வலிமையை வழங்கிக் கொண்டு, துர்வாயுவை ஒழித்து, நல்லவாயுவை உண்டாக்கும். சமானமான தேகத்திலிருந்து இரத்த புஷ்டியையும் உண்டாக்கும். கூர்மன் என்பது நாபியில் தங்கி, உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையில் வாயுவை ஏறவும் இறங்கவும் செய்யும். தொழில்களைத் தூண்டுவது தேவதத்தன் என்னும் வாயுவாகும். அந்தத் தேவதத்தன் அக்கினிரூபமும் சோம ரூபமுமுற்று. அக்கினியை ஜ்வலிக்கச் செய்தும் சோமனைத் திருப்தி செய்தும் விளங்கும். தேவதத்த - நாக - குருகர கூர்ம, தனஞ்சய வாயுக்கள் பிராணமயமாய் சுக்கிரயோகத்தைக் காத்திருக்கும். கண்ணில் புலப்படும் தேஜோரூபமும் ஈஸ்வர ஸ்வரூபம். அதுவே சூஷ்மமான தத்துவ ஸ்வரூபம். அதுவே ஞானத்தாலேயே அடையக்கூடியது என்றும் அதைவிட ஞானத்தையும் யோகத்தையும் கொடுக்ககூடியது. வேறொன்றில்லை என்று தெரிந்து கொண்டு சாஸ்திர முறைப்படி யாகஞ்செய்வதால் சோமம் உண்டாகமாட்டாது என்று அறிந்து கொண்டு முக்குணவசத்தால் உண்டான மோக அஞ்ஞானாதிகளை விட்டுப் பரம்பொருளை நிரஞ்சனமும், நிர்விகல்பமுமாக அறிந்தவர்களே, சர்வலோக நாயகனாகிய சிவபெருமானை அடைவார்கள். நான் இதுவரை சொல்லி வந்ததே நாதரூப ரகிதமான பரிபூரண பிரமஸ்வரூபம் என்று ஸனத்குமார முனிவர் சொன்னார்.

56. நாடிச் சக்கரமும் பிராண உத்க்ரமணமும்

ஸனத்குமார முனிவரை நோக்கி வியாசர், சுவாமி, யாவராலும் வணங்கப்படும் தாங்கள் அஞ்ஞானத்தை ஒழிக்கவல்ல ஞானவழியை அடியேனுக்கு உபதேசித்தீர்கள். ஆகையால், இப்பொழுதே நான் மகாதேவனே பரம்பொருள் என்பதில் சந்தேகமொழிந்தவனானேன். சங்கரபகவானால் பிரம விஷ்ணு ருத்ராத்மகமான பிரகிருதி உதித்தது என்றும், இவற்றிற்கெல்லாம் பிரபுவாகவுள்ளவர் சிவபெருமானே என்றும் உணர்ந்தவன் யோகமார்க்கத்தையும் சம்சார சம்பந்தத்தையும் விடுத்து, நிஷ்கள ஸ்வரூபமாகவே யாவற்றையும் நினைத்து, பந்தங்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, சுயம்பிரகாசமாகப் பிரகாசிக்கிறான் என்பதையும் எனக்கு உணர்ந்தினீர்கள். நான், தங்கள் அருளால் அமைதி அடைந்தவனானேன். இனி நான் கேட்கத்தக்கது ஒன்றுமில்லையாயினும் விஞ்ஞான சம்பந்தமான பரமயோகியானவன், யோகபலத்தால் கஷ்டமில்லாமல் தேகத்தை விடுத்து, நிஷ்களமான உத்தமப் பரம்பொருளை எவ்வாறு அடைகிறான்? அதற்குத்தக்க உபாயம் யாது என்பவற்றை மட்டும் எனக்குக் கூறியருளவேண்டும்! என்று கேட்க, மகாத்மாவான வியாஸ முனிவரை நோக்கி, ஸநத்குமாரர் கூறலானார்.

சிவ சித்தாந்த இரகசியமான ஞானச்சிறப்பைச் சொல்லுகிறேன். அந்த ஞானத்தை இதுவரை மகாயோகிகள் பலர் பயின்று அதிலேயே விருப்பமுடையவர்களாய் சுயேச்சையாக முக்தர்களானார்கள். அது எவ்வாறு என்றால், ஞானோபதேசஞ் செய்யும் சற்குருவைச் சிவபெருமானாகவே பாவித்து, அவர் உபதேசித்ததையே எப்பொழுதும் பயின்று, தன் தேகத்தை விடுத்து, நியமத்தையடைந்து சரீரத்தில் வாயுவால் கட்டப்பட்டு சஞ்சரிக்கும் நாடிகளில் கர்ணிகையில் அந்த நாடிகளுக்குள்ளே சூட்சுமமாக வியாபித்திருப்பவன் பரமாத்மா என்றும் அந்த நாடிகள் ஒவ்வொன்றும் ஸ்தூலசூஷ்ம பேதங்களாக விளங்குகின்றன என்றும் அந்தப் பிராண நாடிகளில் அதிசூஷ்மமாகப் பரமாத்மா அதிஷ்டித்துள்ளான் என்றும் உணர்ந்து, யாவும் சிவசொரூபமே என்றும் உணர்கிறான். அந்தத் தேஜோரூபமான பரமாத்மா ஸ்வரூபமே, எல்லா தேகங்களிலும் வெவ்வேறு நாடி ரூபமாக நின்று காணப்படும். இந்த நாடிகள் அனைத்தும் மனத்துடன் கூடுவதால், மனமானது சங்கற்பவிகற்பங்களை அடைகிறது. பரப்பிரமம் நேத்திரத்திலும் நாடிகளிலும் விளங்கும் என்று மனதை ஒருவழிப்படுத்தி அந்த மனதைப் பரம்பொருளினிடத்தே செலுத்த வேண்டும். இதயத்தில் வருணஜயன் என்ற வாயு எப்பொழுதும் இருப்பதாகத் தோன்றினும். அதற்குச் சிரம், நாபி, இதயம் என்று மூன்றும் இடங்களாகும். முன்பு கூறிய கூர்மன் முதலிய வாயுக்கள் தனஞ்சயனுக்குச் சுவாதீனமானவை. அவற்றிற்குத் தனஞ்சயனை நீங்கிப் புறஞ்செல்லச் சக்தியில்லை. இந்த வகையாக நாபிபந்தனமாகிய நரம்புகளை அனுசரித்தே நாடிசக்கரம் இருக்கிறது. இதய கர்ணிகை புருவமத்தியம், கபாலம் என்னும் மூன்றினுள், ஓரிடத்திலிருந்து, பிராண உத்க்ரமணஞ் சொல்லப்படுகிறது. இவற்றுள் இதயகர்ணிகையினின்றுஞ் செல்வதற்குத் த்விதீயம் என்றும் புருவ மத்தியிலிருந்து செல்வதற்குச் சூலம் என்றும் கபாலத்திலிருந்து செல்வதற்குத் திருதீயம் என்றும் சொல்வார்கள். இந்த மூன்று இடத்திலிருக்கும் நாடிகளையும் இதயகர்ணிகையில் பிரயோகிக்க வேண்டும். சித்தத்தை ஆத்ம சொரூபத்தில் சம்பந்தப்படுத்த வேண்டும். இவ்வாறு யோகப்பயிற்சி செய்த முனிவர்கள் அப்பொழுதே ஸ்தூலதேகத்தை விடுத்து முக்தர்களாவார்கள். ஆனால் அவ்வாறு முக்தியடைபவர்கள் ஜன்மாந்தர புண்ணிய பாவங்களால் பந்திக்கப்பட மாட்டார்கள். வியாஸ முனிவரே! பாஹ்யம் என்றும் சரீரஜம் என்றும் மிருத்யு (மரணம்) இரு வகைப்படும். விஷம், சாஸ்திரங்கள், துஷ்ட மிருகங்கள். அக்கினி, ஜலம், முதலியவற்றால் உண்டாகும் மிருத்யுவே (மரணமே) பாஹ்யம் எனப்படும். ரோகஜம், காலஜம் என அந்தச் சரீரஜம் இருவகைப்படும். அவற்றுள் வியாதியாலுண்டான மிருத்யுவை ரோகஜம் என்றும் வயதால் உண்டான மிருத்யுவைக் காலஜம் என்றும் சொல்லப்படும். இவையன்றி, யோக புருஷன் சுயேச்சையாகத்தான் உடலை விட்டு விடுவது ஓர்வகை, அதுவும் காலஜமேயாகும்.

ஆயினும் யோக புருஷர்களுடையது பதவி பேதமுடையது யோகப்பியாசத்தால் உண்டாகிச் சுரோத்திர பந்தத்தாலழியத்தக்க சப்தமானது, கர்ம வாயுவிற் கலந்து, அங்குள்ள அக்கினியின் தேஜஸை நசிக்கச் செய்யும் தேஜஸ் நீங்கிய அக்கினியானது யோகத்தில் லயமடைகிறது. தேவதத்தன், கிருகரன், நாகன், உதானன் என்ற வாயுக்கள் கர்ணிகையில் பிரவேசிக்கும். இந்திரியங்கள் மனத்தில் அடங்கும். மனம் பிராணனில் ஒடுங்கும். இவையாவும் லீனமான பிறகு, பிராணவாயு ஆன்ம ஸ்வரூபத்தில் லயமடையும் அந்தச் சமயத்தில் வாயுக்கள் யாவும் பிராணனை விட்டு விடுகின்றன. இவ்வளவும் ஒரு சமயத்தில் நடந்தேறுகிறது. இந்த யோகமார்க்கத்தை அறிந்து சர்வேசனையடைய ஒருவருக்கும் சாத்தியப்படாது. அத்தகைய யோகி, இருக்கையிலும் சயனிக்கும் போதும், தத்துவ ஞானியாகையால், சுயேச்சையாகத் தேகத்தை விடுத்து, முக்தியை அடைந்து, சூரிகை, சூலம், மழு முதலியவற்றை ஏந்தி சிவ சாரூபத்தை (சிவனுருவை) அடைகிறான். இந்திரிய சம்பந்தமான விகாரங்கள் யாவும் அவனைவிட்டு விலகுகின்றன. மனமானது தேகத்திற்கு ரோகத்தை உண்டாக்கவல்லது. அத்தகைய மனோரோகி, ஞானத்தை ஒருபொழுதும் அடையமாட்டான். ஆகவே, அறிவுடையோர் மனோரோகத்தை அடையாது. யோக மார்க்கத்தைக் கடைப்பிடித்துப் பரமேஸ்வரனை அடைய வேண்டும். நல்ல மனமும் விபூதித் தீøக்ஷயும் யோகசாதனமும் கொண்டவன். ஸத்யோஜாதாதிபஞ்சப்பிரமஸமானத்துவமடைவான். சர்வேசுவரனிடத்திலேயே மனதைச் செலுத்திய யோகி எப்பொழுதும் யோகத்தைப் பயில்கிறான். அநேக யாகங்களைச் செய்த போதிலும் சங்கர சம்பந்தமான இந்த யோகமார்க்கத்தாலன்றிப் பரமுக்தி கைகூடாது, எல்லாம் அறிந்தவர்களாயினும் பாசுபத விரத அனுஷ்டானத்தாலன்றிச் சம்சார பந்தங்களை ஒழியார்கள். மஹாதேவனே, பரதத்துவ சொரூபன் என்னும் பரதத்துவ ஞானத்தை அடையவேண்டும். சிலர் பிறதேவர்களைப் பரதத்துவம் என்று நினைப்பார்கள். அவர்களும், சிவப்பிரசாதம் அடையாமல் முக்தர்களாக மாட்டார்கள். இதுதான் மோட்சவிதி இனி எல்லாவுலகங்களுக்கும் மேம்பட்டதான சிவபுரத்தின் சிறப்புக்களைச் சொல்லுகிறேன். பக்தியுடையவர்கள் அடையத்தக்க அந்தச் சிவபுர மகிமையைப் பக்தியுடன் கேளும்.

57. சிவபுரத்தின் சிறப்புகள்

வியாசரே, ஸத்யலோகம், மகர்லோகம் முதலிய உலகங்களைவிட மேலே, பிரத்தியக்ஷ பிராமணனான சாக்ஷõத் சங்கரபகவான் வசிக்கும் உலகங்கள் விளங்குவன. அவையாவும் சிவலோகத்தைச் சுற்றிலும் அமைந்திருக்கும் பிரமாண்டம் முழுவதும் அந்தச் சிவலோகத்திலேயே இருக்கும். அது எப்பொழுதும் நிலைத்திருப்பது ஒருபொழுதும் அழியாதது. அங்கு ஜனகர் முதலானவர்கள் பிரமன், பிதாமகன், வாலகில்லி யாதிகள், யோகசித்தியுடைய கபிலர் முதலிய முனிவர்களெல்லாம் சிவயோகத்தைச் சிறப்பாகச் செய்து, முக்குணங்களை ஒழித்து, ஓர் ஆசையும் இல்லாமல், சிவபெருமானிடத்திலேயே மனதைச் செலுத்தி, வாழ்கிறார்கள். பரமாத்ம ஸ்வரூபியும், யோகிகளுக்கெல்லாம் மோக்ஷம் கொடுப்பவனுமாகிய சர்வேசன். விசேஷமான மகிமாதிசயங்களுடன் கூடிய சரீரீயாக, அங்கு தரிசனம் தந்து கொண்டிருப்பார். அந்தச் சர்வேசனிடம், பொறுமை, சத்தியம், தைரியம், தவம், வைராக்கியம், வியாபகத்துவம், ஜகத்சிருஷ்டித்வம், பாலகத்வம், சங்காரத்துவம் முதலியன நித்தியமாக இருக்கும். இதனால் சிவபெருமான் பரனும், பரமானுஸ்வரூபியும் பிரகிருதி சம்பந்தமான மனத்துக்கு ஒளி செய்பவனாக இருப்பான். இந்தப் பெருமான் சர்வவியாபியும் சர்வப் பிரபுவும் ஆயினும் விவகார விஷயமாகத் தம் அன்பர்களுக்குத் தரத்தக்க ஓர் மண்டலமுண்டு. அந்த மண்டலத்திற்கு விக்கிரரூபியாக இருக்கும் பெருமானே நாதன் அவரிடத்தினின்று வைஷ்ணவி என்னும் பெயரையுடைய பிரகிருதி தோன்றியது. பிரமஸ்வரூபமான அந்தப் பகவானுக்கு பிரகிருதியால் ஒரு நகரமுண்டாயிற்று. அதற்குப் பிரமலோகம் என்று பெயர். அதற்கு எதிரில் தேஜோரூபமான விக்ரஹேஸ்வரருக்கு இருப்பிடமாகும். அங்கு சித்த முனிவர்கள் சேவிக்கத்தக்க சிவமண்டலம் ஒன்றுண்டு. அது கோடி யோசனை அகல நீளமுடையதும் அக்கினியைவிடத் தேஜஸையுடையதும் பொற் கோபுரங்கள் அமையப்பெற்றதும் அநேக நவரத்னமய கோபுர வாயில்கள் வாய்ந்ததும் ஜனன மரணம், துக்கம், வியாதி, மோகம், கோபம், பயம் முதலியன இல்லாததும் எல்லாச் சம்பத்துக்களும் வாய்க்கப்பெற்றதும் அமராவதியைப்போன்ற பூமியையுடையதும், ஸ்பரிசித்தவுடனேயே சுகமளிக்கவல்லதும் களங்கமற்ற சந்திரன் போன்ற வெண்மையானதும், பாலசூரியன் போலச் செம்மையானதும் திவ்வியமான சரசுகளில் தோன்றிய இந்திர நீல மணிகள் போன்றதும் பரிமளயுக்தமானதும் வெண்டாமரை, செந்தாமரை, நீலோற்பலம் முதலிய மலர்களையுடையதும் அமிர்தம் போன்ற ஜலத்தையுடையதும் பற்பல நிறமுடைய மலர்கள் வாய்ந்த வரதா, வரேண்யை, வரேசை, வரவர்ணினி, வரார்ஹை, வாரியத்ரை, வரை முதலிய பெயர்களையுடைய நதிகளுடன் கூடியதாய், சிவபெருமானுக்கு உறைவிடமான இராஜதானி நகரம் ஸர்வமங்களகரமாக விளங்கும்.

தேவர்கள், முனிவர்கள், அசுரர்கள், மானுடர்கள், முதலியோர் ஒருவரும் அந்நகரத்தைக் கண்டறிய மாட்டார்கள். நல்ல மனமும் இடைவிடாத பக்தியும் கொண்டு சிவயோகத்தையே எக்காலமுஞ்செய்தவர்கள் மட்டுமே அங்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சூரிய அக்கினி சமானமாக விளங்கும். அந்த நகரத்தின் மய்யத்தில் மேருகிரியின் சிகரம் போல் உயர்ந்ததும் சிறிதும் நாச உற்பத்திகள் இல்லாததும் பகலிரவு முதலிய கால பேதங்கள் இல்லாததும், எல்லாக் கோரிக்கைகளையும் கொடுக்கவல்லதும், பொன்னிறமானதும் பக்தியற்றவர்களுக்குக் காணவும், கேட்கவும், சொல்லவும், சாத்தியப்படாததும், வெண்மையும், கருமையும் வாய்ந்த ரத்தினங்கள், பவளங்கள், இந்திர நீலமணிகள் முதலியவற்றால் செய்த ஸ்தம்பங்களும், சூரியகாந்தியுடைய துவஜங்கள் கட்டப்பெற்றதுமான இளந்தென்றல் வீசும் சாளரவாயில்களும் எல்லா ருதுக்களிலும் உண்டாகும். புஷ்ப பழங்களை இடைவிடாமல் கொடுக்கும் கற்பக விருட்சங்கள் அமைந்த உத்தியானவனங்களும் பொருந்திய அனேக சிருங்கார மண்டபங்களில், மலைகள் யாவற்றையும் விடச்சிறந்த மேருபர்வதம் போல அந்த மஹாமண்டபம் விளங்கும். அந்த மகா மண்டபத்தில், பூதங்களும் தத்துவங்களும் பரிசாரஞ் செய்யச் சர்வேசனாகிய சிவபெருமான் தன் மனைவியுடன் கூடி அங்கே வசித்துக் கொண்டிருக்கிறார். திருமகள், மேதா, த்ருதி, ஸ்ரீ, கீர்த்தி, சரஸ்வதி முதலியவர்கள் சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியாருக்குப் பணிவிடை செய்து மகிழ்ந்திருக்கிறார்கள். தேவர்களும் குப்ஜ, வாமன, காம ரூபங்களுடன் கணாதிபர்களும் பிரதம கணசிரேஷ்டர்களும், பணிவிடை செய்து கொண்டிருப்பார்கள். மகாகாளேசன், நந்தீசன், கணேசன், குமரேசன், சண்டேசன் முதலியவர்கள் எப்போதும் அந்தச் சன்னிதானத்திலேயே வாழ்வார்கள். பெரிய முகப்பும் முக்காரத்தொனியும் வெண்மேகம் போன்ற நிறமும் பொருந்திய பொற்பிரம்பும் சுரிகையும் கைக்கொண்டு, அதிகார நந்திதேவர் தம் தந்தையான சிவபெருமானின் பக்கத்தில் விளங்குவார். ஜயை, விஜயைகள் ஆயுத பாணிகளாகப் பார்வதி தேவியாரின் பக்கத்தில் இருப்பார்கள். சாகன், விசாகன், நைசுமி முதலிய குமாரர்கள் உலக பரிபாலனத்தை முன்னிட்டு அங்கு அமர்ந்திருக்கிறார்கள். அத்தகைய திவ்வியமான சிவபுரத்திலே, அநேக கோடி சூரியர்களுடைய காந்திக்குச் சமானமாகப் பிரகாசிப்பதும் பொன்மயமான சார்த்தூலசிங்கங்கள் கட்டப்பட்டதும் நவரத்தினங்கள் இழைத்த அநேகம் பொற்றம்பங்களுடையதும் அநேக கோடிருத்திர கணங்களால் புடைசூழப் பெற்றதும் மகா விசாலமானதும் இரத்தினமயமாகிய நிலங்களுடையதுமான திவ்விய இரதமானது சர்வலோகேசனாகிய அந்த விக்ரகேசனுக்குப் ப்ரீதிகரமாக அமைந்துள்ளது.

வியாச முனிவரே! இந்தத் திவ்விய சரித்திரம், எக்காலத்திலும் சிவபெருமானையே விரும்பி மனவாக்கு காயங்களை அந்த இறைவனுக்கே அர்ப்பணம் செய்தவர்கள் எத்தகைய தாழ்வான இடத்தில் இருப்பார்களாயினும் எத்தகைய தீய கர்மங்களைச் செய்வார்களாயினும் மேலே சொன்ன மிக்க மேன்மையான சர்வ நகர நாயகமாகிய சிவபுரத்திலே சேரத்தக்கது பிரசித்தி பெற்ற சிவபக்தர்களைச் சொல்லுகிறேன் கேளுங்கள். யாவும் ஸநந்தனனும் ஸனகனும் ஸநாதனனும் இப்பொழுதுள்ள பிரமனும் முன்பிருந்த பிரமர்களும் நரநாராயணர்களும், யோக சித்தரான கபிலரும் கபிலமாணவரான பஞ்சசிகன், உதயவதனன் யாக்ஞவல்கியன் பிரமசரிய விரதத்தை அனுஷ்டித்த தவசிரேஷ்டர்களான முனிவர்களும் முக்குணங்களையும் விட்டு ஈஸ்வர தத்துவ சொரூபத்தை தரிசித்துக்கொண்டு மகாப் பிரளயகாலத்தில் அந்தச் சிவபுரத்திலேயே சர்வேஸ்வரனுடைய சன்னிதானத்திலேயே சுகமாக வாழ்கிறோம். இன்னும் பூமியில் பல இடங்களில் நானாவகைத் திருக்கோலங்களுற்று, பல திருநாமங்களுடன் எழுந்தருளியிருந்து தம் அடியவர்களுக்கு இஷ்ட சித்திகளைத் தந்தருள்கிறார். அத்தகைய ÷க்ஷத்திரங்களில் சிவபெருமானை நோக்கி தவத்தானம் பணிவிடை முதலியன செய்தவர்களுக்கு , இந்தச் சிவபுரம் சித்திக்கும். வியாசரே இதுவரையில் கூறிய வகையில் பாசுபத விரதத்தைக் கடைப்பிடித்து, பக்தியுக்தர்களாகவுள்ள புருஷ சிரேஷ்டர்கள், தேகத்தைவிட்ட பிறகு அந்தச் சிவபுரத்தை அடைந்து மகாபல பராக்கிரமசாலிகளாய், நந்தீசனுடைய சைன்னியங்களாய் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

வியாசரே! நான் சிவ தத்துவங்களை இதுவரை உமக்குச் சிறப்பாகச் சொன்னேனல்லவா? நீர் அவற்றையெல்லாம் மனத்திற்கொண்டு தர்ம பிரவர்த்தகனாக உலகில் பலருக்கும் இதை உணர்த்திக் கீர்த்தியும் ஞானமும் அடைவீராக. நீர் கூறியவற்றை உலகத்திலுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களாக. நீர் உலகுக்குக் குருவாக இருப்பீராக. நீர் சிவ விரதங்களை அனுஷ்டித்து, பாப விமோசனமடைந்து இறுதியில் சர்வேஸ்வரனிடத்தில் ஐக்கியமடைவீராக என்று ஆசீர்வதித்தார். அப்போதே மகாஞானியாகிய வியாசமுனிவர், திருவெண்ணீறு பூசி, ஸனத்குமார முனிவரைப் பணிந்து, அவரது உபதேசப்படி பாசுபத விரதம் அனுஷ்டித்துச் சித்திகளைப் பெற்று ஸனத்குமாரரிடம் விடைபெற்று, பூவுலகத்தை அடைந்து சர்வேஸ்வரனுடைய மகிமையையும் மனுவந்தரக் கிரமத்தையும் சிவயோக தாரணையையும் பிறவற்றையும் எனக்கு உபதேசித்தருளினார். ஆகையால் அவ்வகையே நானும் உங்களுக்கு அவற்றைச் சொன்னேன். நீங்களும் அவற்றை அனுஷ்டித்து கடைத்தேறுவீர்களாக. இது மிக முக்கியமான புராணம். இதனால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்குவித புருஷார்த்தங்களையும் அடையலாம். தேவர்கள் எல்லோரிலும் சிவபெருமானும் விரதங்கள் யாவற்றிலும் சிவ விரதமும் சிறந்தது போல, இந்தப் புராணத்தை வாசித்தவர்கள் மரணத்தருவாயில் துன்பமடையார்கள். இதைக் கேட்டவர்கள் சாயுச்சிய பதவி அடைவார்கள். தியானித்தவர்கள் முக்தியடைவார்கள். தேவர்கள், முனிவர்கள் முதலியோர் யாவரும் இந்தப் புராணத்தை வாசித்தும் கேட்டும் பிறருக்குச் சொல்லியும் எல்லாப் பாவங்களையும் ஒழித்துச் சிறந்த பதவியை அடைந்திருக்கிறார்கள். பக்தி சிரத்தையுடன் இந்தப் புராணத்தை வாசித்தவர்கள். இம்மையில் இஷ்டசித்தியையும் மறுமையில் முக்தியையும் அடைவார்கள். சிரார்த்த காலத்தில் இதை வாசித்தால், பிதுரர்கள் திருப்தியடைவார்கள். சயனகாலத்தில் இந்தப் புராணத்தின் ஓர் அத்தியாயத்தையாவது ஒரு சுலோகத்தையாவது, ஒரு பாதமாவது, ஒரு பதமாவது தியானித்தவர்கள், சகல பீடைகளையும் துர்ச்சொப்பனம் முதலியவற்றையும் ஒழித்து, சிவபெருமானின் திருவருளால் மங்களகரமாக வாழ்வார்கள்.

சனத்குமார சம்ஹிதை முடிந்தது.

 
மேலும் சிவமகா புராணம் »
temple news
காப்பு: ஜகதஹ் பிதாம் சம்பும், ஜகதோ மாதரம் சிவம், தத்புத்ரம்ச கணாதீஸம்,  நக்வைத த்வர்ண யாம் யஹம் -  ... மேலும்
 
temple news
41. அந்தகாசுரன் போராட்டமும் அந்தகேஸ்வர மகிமையும் நைமிசாரண்ய முனிவர்கள் சூத புராணிகரை வணங்கி சிவஞான ... மேலும்
 
temple news
2. தர்ம ஸம்ஹிதை காப்பு: நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ ரோத்தமம், தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத் ... மேலும்
 
temple news
16. சிவலிங்க பூஜையின் பயன் சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நமஸ்கரித்து ஸ்வாமி! சிவபெருமானுடைய ... மேலும்
 
temple news
31. நரகலோக வர்ணனை வியாசரே! பாதாள லோகத்திற்கு மேலே இருக்கும் நரக லோகத்தையும் அதில் பாவிகள்கிடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar