ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் ஆண்டவர் என யாரும் உலகில் இல்லை என்றும், தன்னாலும் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்ற முடியும் என்றும் அறிவித்தார். தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றப் போகிறார் என அனைவரும் காத்திருந்தனர். ஜாடியில் தண்ணீர் எடுத்து சில ரசாயனங்களை இட்டுக் கலக்கினார் விஞ்ஞானி. அது சிவப்பு நிறத்தில் திராட்சை ரசம் போல மாறியது. அதை காட்டியபடி, “என்னைப் போலவே இயேசுவும் கானாவூர் திருமண வீட்டில் தண்ணீருக்குள் ரசாயனப் பொருட்களை சேர்த்ததால் திராட்சை ரசம் வந்தது’’ என்றார். அப்போது ஒருவர், ‘‘ஐயா! நீங்கள் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினீர்கள். முதலில் நீங்கள் குடியுங்கள். எங்களுக்கும் கொடுங்கள்!’’என்றார். விஞ்ஞானி தயங்கியபடி, ‘‘நான் உண்டாக்கிய திராட்சை ரசம் நிறம், மணம், ருசியில் உண்மையானது போலிருக்கும். ஆனால் யாரும் பருகக் கூடாது. ஏனெனில் விஷத்தன்மை கொண்டது’’ என்றார். விஞ்ஞானியை மேலும் பேச விடாமல், ‘‘ஐயா! நீங்கள் உண்டாக்கியதை உங்களாலேயே பருக முடியவில்லை. விஷம் இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் இயேசு உண்டாக்கிய ரசத்தை அனைவரும் பருகி விட்டு, ருசியாக இருந்தது என தெரிவித்தனர். தண்ணீரில் எதையும் அவர் சேர்க்கவில்லை. ஜாடியின் அருகே வந்தார். தண்ணீருக்கு ஒரே மகிழ்ச்சி. அதுவாகவே திராட்சை ரசமாக மாறியது’’ என்றார். விஞ்ஞானியால் பதிலளிக்க முடியவில்லை.