பதிவு செய்த நாள்
29
மே
2012
12:05
காப்பு: ஆத்யந்த மங்கள மஜாதச மாநபாவ, மாத்யந்த விஸ்வமஜராமர மாத்மதேவம்
பஞ்சாந நம்ப்ரபலபஞ்ச விநோத ஸீலம், ஸம்பாவயேமநஸி ஸவ்கரமம் பிகேஸம்
(கருத்து படைப்பின் துவக்கத்திலும் முடிவிலும் அனைவருக்கும் மங்களத்தைச் செய்பவரும், சமானாதிகரஹிதரும், உலகத்திற்கு ஆதியிலும் அந்தத்திலும் காரணரூபரும் சூவதேவரும் ஈசானம் முதலிய ஐந்து திருமுகங்களையுடையவரும், பிரபலமான சிருஷ்டி முதலிய பஞ்சகிருத்தியங்களைச் செய்பவரும் யாவருக்கும் சுகத்தைச் செய்பவரும் உமாதேவியின் நாயகருமாகிய சிவபெருமானை மனதில் தியானிக்கிறேன்).
1. முனிவர்கள் பிரமதேவரிடம் அடைதல்
ஸத்திய விரதத்தில் விருப்பமும் மிக்க காந்தியும், தபோபாக்கியமும் விரதத்தில் திடசித்தமும் பெற்று விளங்கும் சவுனகர் முதலிய மாமுனிவர்கள் ஒருகாலத்தில் பிரயாகையில் ஒரு மாபெரும் யாகம் செய்தார்கள். வியாஸ முனிவரின் சீடரும் எல்லாப் புராணங்களையும் உணர்ந்தவராகிய சூதமாமுனிவர், அதைக் கேள்விப்பட்டு, அம்முனிவர்களைக் கண்டு களிக்கும்படி அங்கு வந்தார். முனிவர்கள், அவர் வருகையை அறிந்து மகிழ்ச்சியுடன் அவர் எதிர் சென்றழைத்து வந்து, முறைப்படி பூஜித்து, ஆசனத்தில் அமர்த்தி, முனிபுங்கவரே! வேதசாரமான ஈஸ்வர ஸ்வரூபத்தை விளக்கும் புராணத்தை எங்களுக்குத் திருவாய் மலர்ந்தருள வேண்டும்! என்று கேட்டார்கள்.
அதற்கு சூதமுனிவர், முனிவர்களே, நீங்கள் கேட்ட புராணங்களில் ஒன்றைச் சொல்லுகிறேன். முன்னே பிரளயத்துக்குப் பின், வெகுகாலஞ் சென்ற பிறகு இந்த கல்பத்தில் சிருஷ்டி காரியத்தை மீண்டும் தொடங்கியபோது, திருவேணி நதிக்கரையில் சில முனிவர்கள் கூடி சிவதத்துவம் சிறந்ததென்றும் சிவதத்துவம் சிறந்தது அல்ல என்றும் விவாதித்தனர் சிருஷ்டிகர்த்தாவும் நாசமற்றவருமான பிரமதேவரை முனிவர்கள் அடைந்து வணங்கி, சுவாமி, சிருஷ்டிகர்த்தாவும் காரணபூதரும் தாங்களே! எந்தப் புருஷன் தத்துவங்களுக்கெல்லாம் அதீதப்பட்ட ஆதிபுருஷன் என்பதை எங்களுக்கு உணர்த்த வேண்டும்! என்று கேட்கவே, பிரமதேவர் கூறினார்.
முனிவர்களே! மனம் வாக்கு காயங்களுக்கு அப்பாற்பட்டவரும் பிரம விஷ்ணு ருத்திராதியருக்கும் சகல லோகங்களுக்கும் ஐம்பூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் பிரபுவாக இருந்து படைத்தளித்தழிக்கும் பிரபுவும் சகலமும் அறிந்தவரும் மஹாதேவருமாகிய சாம்பவமூர்த்தி இதோ இருக்கிறார். இந்தப் பெருமானையே பக்தியுடன் தரிசனம் செய்யவேண்டும். பக்தியின்றிச் சேவை செய்யலாகாது நானும் விஷ்ணுவும் ருத்திரனும் சகல தேவர்களும் பக்தியுடன் சிவதரிசனம் செய்வதில் ஆசையுடையவர்கள் பல சொற்கள் சொல்வானேன்? சிவ பக்தியே அவசியம். பக்தியாலேயே அநுக்கிரகம் அநுகிரகத்தாலேயே பக்தியும் உண்டாகும். நீங்கள் பூவுலகை அடைந்து ஆயிரம் ஆண்டுகள் உக்கிரமான தவம் செய்வீர்களாயின், யாகாதிபனாகிய சிவபெருமானின் அநுக்கிரகத்தால் சாத்திய சாதனமான வேதாசாரம் முழுவதையும் அறிவீர்கள்! என்று பிரமதேவர் கட்டளையிட்டார்.
முனிவர்கள் பிரமதேவரை நோக்கி, சாதிக்கத் தக்கது எது? சாதனம் எது? சாதகம் எப்படிப்பட்டது? இவற்றை எங்களுக்குக் கூறவேண்டும்! என்று கேட்டனர்.
சிவ பதத்தையடைவதே சாதிக்கத் தக்கது. அவரைத் தரிசிப்பதே சாதனம். நித்திய நைமித்திக காமியங்களின் பயனில் இச்சை வைக்காத அந்தச் சிவமூர்த்தியின் திருவருளே சாதகம் வேதத்தில் கூறப்படும் யாகாதிகளைச் செய்து அவற்றின் பயனைச் சிவார்ப்பணம் செய்ய வேண்டும். அவரவர்களுடைய பக்திக்கேற்ற சிறந்த பயன்களை அந்த சிவபெருமானே கொடுத்து அருள்வார். அந்தச் சிவசேவை, அர்ச்னை முதலியவை எண்ணிறந்தவையாக அவ்விறைவனாலேயே சொல்லப்பட்டுள்ளன. அந்த விஷயத்தை மிகவும் சுருக்கமாகச் சொல்கிறேன். காதால் கேட்பதும், வாயால் துதிப்பதும் மனதால் தியானிப்பதுமே சாதனங்கள் ஆகும் என்று வேதங் கூறுகிறது. எல்லாப் பாக்கியங்களையும் இறுதியில் முக்தியையும் கொடுக்க வல்லவரான சாம்பவமூர்த்தியை மனதால் தியானஞ் செய்து அடையக் கடவீர்கள். பிரத்தியட்சமில்லாத அந்தச் சிவதத்துவத்தைச் செவியால் கேட்டால், பிறகு அதைப் பிரத்தியட்சமாகக் கண்களால் பார்த்து மோட்சத்தை அடையலாம். ஆகையால், குருமூலமாகச் செவியில் ஏற்று, மனதால் தியானித்து வாயால் துதித்து கிரமமாகச் சிவ சம்பத்தை அடைய வேண்டும். அவ்வாறு செய்வதால் சரீர ஜாட்டியங்கள் ஒழிந்து, சகல சுகங்களும் உண்டாகி சர்வ மங்களங்களும் விருத்தியாகும் என்று பிரமதேவர் கூறினார்.
2. சனத்குமாரர் வியாசருக்கு உபதேசம் செய்தல்
முனிவர்கள் பிரமதேவரை நோக்கி, சுவாமி, மனதால் தியானிப்பதும் செவியால் சிரவணஞ் செய்வதும் வாயால் துதிப்பதும் எப்படி? என்று கேட்டார்கள். பூஜை, ஜெபம், ஈஸ்வர குணம், ரூபம், விலாசம் முதலியவற்றைப் பக்தியுடன் மனதால் தியானஞ் செய்வது மனனம் எனப்படும். மனனமே சகல சாதனங்களிலும் சிறந்தது. கீதத்தாலாவது வேதத்தாலாவது, சிவமூர்த்தியின் பராக்கிரமங்களைத் துதிப்பதையும் சாமவேதத்தால் கானஞ் செய்வதையும் கீர்த்தனம் என்பார்கள். எவ்வகையிலாவது சிவபரமான சப்த சமூகங்கேட்கப் படுகிறதோ, எந்த வஸ்துவை ஸ்திரீகேளியைப் போல மிகவும் திடமாய் வைக்கப்படுகிறதோ அதையே பெரியோர்கள் சிரவணம் என்பார்கள். அந்தச் சிரவணம் சாதுக்களின் சம்பந்தத்தால் உண்டாகத்தக்கது. சிரவணத்தாலேயே சிவபக்தி உண்டாகும். சிவத்தியானத்தால் சிவ கடாட்சமும் சிவ கடாட்சத்தால் சகல பாக்கியமும் உண்டாகும்! என்று பிரமதேவர் கூறினார்.
சூதமுனிவர் சொல்லுகிறார்; முனிவர்களே! இந்தச் சாதன மகாத்மியத்தில் நான் முன்பு நடந்ததை உங்களுக்குச் சொல்கிறேன். நிதானமாகக் கேளுங்கள். பராசர முனிவரின் புதல்வரும் என் ஆசிரியருமான வியாசபகவான் முன்பொரு காலத்தில் சிவப்பிரமத்தை அடையவேண்டும் என்று கருதியவராய், சரஸ்வதி நதி தீர்த்தத்தில் அருந்தவஞ் செய்தார். அப்போது சூரிய காந்தியைப் போலப் பிரகாசிக்கும் விமானத்தில், தன் விருப்பம் போலச் சஞ்சரிக்கும் ஷட்குண ஐஸ்வரிய சம்பன்னராகிய ஸனத்குமார முனிவர் அவரைக் கண்டார். வியாஸ முனிவரும் ஸனத்குமாரரைக் கண்டதும் தியானத்தை விட்டு விழித்துக் கொண்டு ஆசாரியார் வந்துவிட்டார் என்று மிகவும் பயபக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் நமஸ்காரஞ்செய்து, அர்க்கிய பாத்தியாதிகளையும் உயர்ந்த ஆசனத்தையும் கொடுத்து நேரே கைகட்டி நின்றார். பிரமதேவரின் புத்திரராகிய ஸனத்குமார முனிவர் கம்பீரமாக, முனிவனே! சிவபெருமான் பிரசன்னமாகத் தக்க அரிய சிவ தத்துவச் சொரூபமான தியான யோகத்தை இதர ஆசக்தியில்லாமல் யாது கருதிச் செய்கிறாய்? என்று கேட்டார். அதற்கு வியாஸ முனிவர், சுவாமி! அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் வேதத்தில் கூறியவாறே தங்களுடைய கிருபையால் யாவருக்கும் உரைத்தேன். அப்படிக் கூறியதால் உலகங்கள் எல்லாவற்றிற்கும், அவற்றுக்குக் குருவான எனக்கும் மேன்மையான முக்தியை உண்டு செய்யத்தக்க ஞானம் உண்டாகவில்லை. ஆகையால், நான் மோக்ஷம் அடைய விரும்பித் தவஞ்செய்கிறேன். மோக்ஷ உபாயமான ஞானம் இன்னும் எனக்கு உண்டாகவில்லை என்றார். அதற்கு சனத்குமார முனிவர், வியாசா! சிவநாமங்களைச் சிரவணஞ்செய்வதும் நாவால் துதிப்பதும் மனதால் தியானிப்பதும் ஆகிய இவையே வேதத்திற்குச் சம்மதமான சாதனம் என்று சொல்லப்படும். இவ்விஷயம் பூர்வத்தில் நான் சாதனத்தால் பிராந்தியுடன் மந்திரபர்வதத்தில் உக்கிரமான தவஞ்செய்யும் போது பகவானான சிவபெருமானுடைய ஆக்ஞையால் கணேசுவரரும், சர்வ சாக்ஷியும் இரண்டாவது சம்புவுமான நந்திதேவர் என்னிடம் வந்து, செவியால் கேட்பதும் வாயால் துதிப்பதும் மனதால் தியானிப்பதுமே வேத சம்பந்தமான மோக்ஷசாதனம் என்று சர்வலோக நாயகனான சிவபெருமான் உபதேசித்தார் என்றார். ஆகையால் வியாஸ முனிவனே! சிரவணாதி மூன்றினையும் இடைவிடாமல் செய்வாயாக! என்று கட்டளையிட்டு விமானமேறி உடன் வந்தவர்களுடன் தன்னிச்சையின் வழிசென்றார் என்று கூறிய சூதமாமுனிவரை நோக்கி, மகரிஷிகள் கேட்கலானார்கள். சுவாமி, சிரவணம் முதலிய மூன்றுமே மோக்ஷத்திற்குரிய முக்கிய சாதனம் என்று கூறினீர்கள். ஆகையால் செவியினால் கேட்கவும் வாயால் துதிக்கவும் அசக்தராக இருப்பார்கள். யாது செய்யலாம்? அதையும் தாங்கள் சொல்லவேண்டும் என்று கேட்கவே சூதமுனிவர் சொல்லத் துவங்கினார்.
3. இலிங்க விக்கிரகங்களின் வரலாறு
முனிவர்களே, செவியாற் கேட்பது முதலியவற்றைச் செய்ய இயலாத அசக்தன், சிவலிங்கத்தையாவது சிவரூபத்தையாவது பிரதிஷ்டை செய்து நாள்தோறும், பூஜித்து சம்சாரமாகிய கடலைத் தாண்ட வேண்டும். அவனுக்குத் திரவியமிருந்தால் அதைச் சிவப்ரீதி செய்யவேண்டும். தன் சக்திக்குத் தக்கவாறு சிவார்ச்சனை செய்யவேண்டும். அவன் சிவபக்தியுடன் மண்டபம், கோபுரம், குளம், மடம், உற்சவம், வஸ்திரம் வாசனைத் திரவியங்கள், மாலை, தூபம், தீபம், பக்ஷியங்கள், சித்திரான்னங்கள், குடை, சாமரம், கொடி, அழகிய வாகனங்கள் முதலியவற்றைச் சமர்ப்பித்து அரசனை உபசரிப்பது போலச் சிவலிங்க சிவ விக்கிரகம் இவற்றையும் உபசரிக்க வேண்டும். சக்திக்கு ஏற்பப் பிரதக்ஷிணம் நமஸ்காரங்கள் முதலியவற்றைச் செய்ய வேண்டும். இவ்வகையாகத் தன் உயிருள்ளவரையில் பக்தியோடு சக்திக்கேற்பச் செய்து சிவார்ச்சனை செய்வதைக் கடைப்பிடித்தால் சிவபெருமானுக்குக் கிருபையுண்டாகி சிரவணம் முதலிய மூன்று சாதனங்கள் இல்லாமலேயே சித்தியடைவான். பெரியோர்களிலே முன்னே சிவலிங்க பூஜையால் பலரும் சிவ விக்கிரக பூஜையால் பலருமாக முக்தியடைந்திருக்கிறார்கள்! என்று கூறினார்.
சூதமுனிவரே! எவ்விடத்தும் எல்லாத் தேவர்களும் விக்கிரக ரூபத்திலேயே பூஜிக்கப்படும் போது சிவபெருமான் மட்டும் ஏன் லிங்க ரூபத்திலும் விக்கிரக ரூபத்திலும் பூஜிக்கப்படுகிறார்? இதன் விவரத்தை சொல்லவேண்டும் என்று கேட்கவே சூதமாமுனிவர் கூறலானார். முனிவர்களே! மிகவும் புண்ணியசீலமான இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டீர்கள். இதற்குச் சமாதானம் அந்தச் சிவபெருமானேயல்லாமல் வேறு ஒருவரும் சொல்லமாட்டார்கள். ஆயினும் என் குருவான வியாஸ பகவான் கூறியபடியே உங்களுக்குச் சொல்கிறேன், சிவபெருமானே பரப்பிரமஸ்வரூபம்; அவரே சகல ரூபியாதலால் குணஸ்வரூபியாயும் நிர்க்குண ஸ்வரூபியாகவும் இருக்கிறார். நிர்க்குண ஸ்வரூபியாகையால் அச்சிவபெருமானுக்கு உருவமில்லாமலிருக்கும் லிங்க வடிவம் உண்டாயிற்று. குணஸ்வரூபியாகையால் உருவத்துடன் கூடிய விக்கிரகஸ்வரூபம் உண்டாயிற்று. குண நிர்க்குண ரூபியாகையால், பரமான பரப்பிரமம் என்று பெயர். சிவபெருமானை மட்டுமே லிங்கத்திலும் விக்கிரகத்திலும் அர்ச்சிக்கத்தகும். பிற தேவர்களுக்குப் பிரமஸ்வரூபம் இல்லாமையாலும் ஜீவனுடைமையாலும், சாமானியர்களுக்குப் பிரபுவாக இருப்பதாலும் நிஷ்களமான லிங்கத்தில் பூஜை செய்யப்படவில்லை. அவர்கள் சகனமாதலின் விக்கிரகத்தில் மட்டுமே பூஜிக்கப்படுகிறார்கள். சிவபெருமானுக்கே பரப்பிரமத்துவம் உண்டு. பிற தேவர்களுக்கு ஜீவத்துவமே இருக்கிறது. இதுவே ஓங்காரத்தின் அர்த்தத்தாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படுகிறது. நீங்கள் கேட்பது போலவே, பூர்வம் மகா புத்திசாலியும் பிரம புத்திரருமான ஸனத்குமார முனிவர், மந்திரகிரியில் நந்திகேஸ்வரரை நோக்கி, சிவபெருமானை நீங்கிய பிறதேவர்களைப் பக்தி செய்பவர்கள் விக்கிரகத்தில் மட்டுமே பூஜை செய்யும்போது சிவபெருமானைப் பக்தி செய்பவர்கள் மட்டும் லிங்கத்திலும் விக்கிரகத்திலும் பூஜை செய்கிறார்களே! இதன் விவரத்தை விளக்கமாகச் சொல்லவேண்டும் என்று கேட்க, நந்திதேவர் சொன்னார்.
ஸனத்குமாரரே! பரப்பிரம லக்ஷணமாயும் சிவபெருமானால் சொல்லப்பட்டு சிரேஷ்டமாயும் இரகசியமாகவும் உள்ள இந்த விவரத்தை மிகவும் பக்தியுடன் கேட்ட உனக்குச் சொல்லுகிறேன். அந்தச் சிவபெருமான் பிரமஸ்வரூபியும் நிஷ்களருமாக இருப்பதால் அவரை லிங்க ரூபமாகப் பூஜிப்பதும் அவரை சகலராக இருப்பதால் அவரை விக்கிரக ரூபமாகப் பூஜிப்பதும் சகல தேவ சம்மதமாகும். பிற தேவர்களுக்கு ஜீவத்துவம் மாத்திர மாதலின் விக்கிரக ரூபம் மட்டுமே பூஜிக்கப்பட வேண்டும் என்பது சகல ஸ்ருதி சம்மதமாயிற்று. சிவபெருமான் குண ஸ்வரூபியும் நிர்க்குண ஸ்வரூபியுமாகையால் அவரை லிங்கம் விக்கிரகம் ஆகிய இரண்டிலும் பிரத்தியட்சமாகப் பூஜை செய்கிறார்கள் என்று கூறினார். அதைக் கேட்ட ஸனத்குமாரர் மகிழ்ச்சி அடைந்து, தாங்கள் கூறியதிலிருந்து என் சந்தேகம் நீங்கியது. யோகீஸ்வரரே! அந்த லிங்க வடிவம் விக்கிரக வடிவம் இவற்றின் உற்பத்தியையும் சிவ ஸ்வரூப லக்ஷணத்தையும் கேட்டு அறிய நான் மிகவும் ஆவலுடையவனாக இருக்கிறேன் என்று கூறினார். பூர்வம், பிரளயகாலம் முடிந்தவுடன், பெருந்தேவர்களான பிரமதேவரும் விஷ்ணுமூர்த்தியும் ஒருவரையொருவர் எதிர்த்து, நான் பெரியவன், நான் பெரியவன் என்று இறுமாப்புடன் போர் புரிந்தபோது, அவர்களுடைய மமதையை ஒழிக்க, அவர்கள் இருவருக்குமிடையே பரமேஸ்வரர் தம்முடைய ஸ்வரூபத்தை ஸ்தம்பமாகக் காட்டினார். அது முதல் சகல லோகத்திலும் சிவலிங்கத்தையும் அவருடைய உருவத்தையும் பூஜிக்கிறார்கள். பிற தேவர்களை விக்கிரகத்தில் பூஜித்து, இஷ்ட சுத்திகளை அடைவதைக் காட்டிலும் மேலான பயன்களை சிவபெருமானை இலிங்கத்திலாவது விக்கிரகத்திலாவது பூஜிப்பதால் அடையலாம் என்று நந்திதேவர் கூறினார்.
4. பிரம விஷ்ணுக்கள் போர் செய்தது
நந்திதேவர் ஸனத்குமார முனிவரை நோக்கி, மேலும் தொடர்ந்தார். முன்பு ஒரு காலத்தில் விஷ்ணுமூர்த்தி திருப்பாற் கடலில் சேஷ சயனத்தில் யோக நித்திரையில் இருந்தார். அப்போது பிரமதேவன் இச்சை வழியாக அங்கு சென்று, திருமால் கண் துயிலும் இடத்தையடைந்து, அவரைக் கண்டு நீ யாவன்? மதிப்பே இல்லாமல் என் முன்னேயும் பரம புருஷனைப்போல இறுமாந்து படுத்திருக்கிறாயே? நான் உன் ரக்ஷகன், குருவையும் பெரியோரையும் பார்த்தவுடன் எழுந்து மரியாதை செய்யாதவனுக்கும் பிராயச்சித்தம் விதித்திருக்கிறது என்று கூறினார். அதற்கு விஷ்ணு பிரமனை நோக்கி, மகனே! எங்கு வந்தாய்? என்று கேட்கப் பிரமன், நீயே என் மகன். நானே உலகங்களைப் படைத்தேன் என்றார். அதனால் இருவருக்கும் விவாதம் உண்டாகி, ஒருவரையொருவர் கொல்லுவதென்று கருதிப் போர் செய்யத் துவங்கினார்கள். விஷ்ணு பிரமன் மார்பிலும், பிரமன் விஷ்ணுவின் மார்பிலுமாக அநேகம் பாணங்களை எய்தார்கள். எண்ணிறந்த அஸ்திர சஸ்திரங்களால் பிரமவிஷ்ணுக்கள் மிகக் கோரமான யுத்தஞ் செய்யும்போது, சகல தேவர்களும் மதிமயங்கி, அரசர்களிடையே போர் உண்டாயின் அதனை விலக்கும்படி யோசனை செய்யும் வேதியரை போல, சிருஷ்டி ஸ்திதி, சங்காரங்களைச் செய்து, எப்போதும் இறவாது மங்கள ரூபியாகவுள்ளவன் எவனோ எவனுடைய அனுமதியில்லாமல் புல்லையும் கிள்ளமுடியாதோ, அத்தகைய பரப்பிரம ஸ்வரூபியாகத் திரிசூலங்களைத் திருக்கரத்தேந்திய சிவபெருமானுக்கு நமஸ்காரம் என்று சொல்லி நமஸ்கரித்து, மிகவும் உத்தமமான கயிலை மலையை அடைந்து வணங்கி, மேலேறி, சன்னதிக்குச் சென்று, இரத்தின சிங்காதனத்தில் பார்வதிதேவியுடன் எழுந்தருளியிருக்கும் தேவ நாயகனாகிய சிவபெருமானை வணங்கிப் பணிந்தனர். இடது துடையின் மேல் பார்வதிதேவியை அமர்த்தி அவளது தோள்மீது இடது கரத்தை வைத்து உருத்திர கணங்கள் முதலியன பணி செய்ய எழுந்தருளியிருக்கும் அந்தப் பரம புருஷனுடைய சன்னதியில் கண்ணீர் துளிர்த்துக்கொண்டு, சிறிது தூரத்தில் இருந்தார்கள். சிவபெருமான் அவர்களைத் தம் மதுரமான மொழியால் அருகே அழைத்து, மங்களகரமும் கம்பீரமுமான குரலில் சொல்லத் துவங்கினார்.
5. அடிமுடி தேடிய படலம்
தேவர்களே! என் கடாக்ஷத்தால் உங்களுக்கு மங்களம் உண்டாகுக. உலகம் முழுவதும் தத்தம் தொழில் முறையில் உள்ளதா? பிரமனும் விஷ்ணுவும் போர் செய்யு மிடத்தை அடைந்து வாத்திய கோஷம், சைன்னிய கோஷம் முதலியவற்றை நிறுத்தி, கண்களுக்குப் புலப்படாது மறைத்துவிட்டு, ஆகாயத்திலிருந்தார். பிரமா, விஷ்ணுவைப் பாசுபதாஸ்திரத்தாலும் விஷ்ணு பிரமாவை மஹேவராஸ்திரத்தினாலும் அடிக்க வேண்டுமென்ற ஆசக்தியுடையவர்களாக இருந்தனர். அதைக் கண்ட சிவபிரான், இனிமேலும் இவர்களுடைய போரை நிறுத்தாவிட்டால் உலகம் அழியும் என்று திருவுளங் கொண்டு, அவர்களுக்கு இடையே நிஷ்களராய் அக்கினி ஸ்தம்பமாக நின்றார். அவர்கள் எய்த ஆயுதங்கள் அந்த ஜோதி ஸ்தம்பத்தில் வீழ்ந்து மடிந்தன. அதைக்கண்ட தேவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். பிரம விஷ்ணுக்களும் இதென்ன விந்தை என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு கண்ணாற் பார்ப்பதற்கு இது விஷயமில்லாமலும் அக்கினி ரூபமாகவும் இருக்கிறது. இதன் ஆதியும் அந்தமும் காணப்படவில்லையே? என்று இருவரும் ஆலோசித்து இதன் ஆதியும் அந்தமும் பார்க்க வேண்டும் என்று சொல்ல, பிரமனும் அதற்கு இணங்க விஷ்ணு பன்றியுருவம் எடுத்து அதன் அடியைத் தேடச் சென்றார். விஷ்ணு பூமியைப் பிளந்து கொண்டு பாதலத்தையும் அண்டகடாகத்தையும் பிளந்து சென்றும், இலிங்கத்தின் அடிதெரியாமல் மிகவும் இளைத்துத் தான் போர் செய்த இடத்தைப் பன்றி வடிவோடு சேர்ந்தார். பிரமன் அன்ன வடிவுடன் ஆகாயத்தில் சென்று மேல் ஏழு உலகங்களையும் தாண்டி அனைவரையும், விஷ்ணு தேடி இளைத்துத் திரும்பியதையும் பார்த்து சிவபெருமான் புன்னகை செய்ய, சிவபெருமானின் ஜடை முடியிலிருந்து விழுந்து, நெடுநாளாகப் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் அதிவாசனையுடைய தாழம்பூவைப் பிரமதேவன் கண்டு, நீ யார்? யார் முடியிலிருந்து வருகிறாய்? என்று கேட்டார். அதற்கு அந்தத் தாழை மலர், நான் நெடுநாளாக இந்த ஜோதியின் முடியிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன்! என்று சொல்ல, நானும் இந்த ஜோதியின் முடியைத் தேடவே வந்தேன். நண்பனான நீ எனக்குத் துணை செய்ய வேண்டும். நான் விஷ்ணுவுடன் சபதம் செய்து இதன் முடியை அறிவேன் என்று வந்திருக்கிறேன்.
ஆகையால் நான் விஷ்ணுவிடம் இதன் முடியைக் கண்டேன் என்று கூறும்போது, நீயும் இந்தப் பிரமன் இதன் அந்தத்தைப் பார்த்தான். அதற்கு நான் சாக்ஷி என்று சொல்ல வேண்டும். ஒருவனுக்கு ஆபத்துக் காலத்தில் உதவி செய்தால் பொய் பேசிய பாவம் வந்து சேரமாட்டாது என்று ஸ்மிருதி இருக்கிறது என்று சொல்லி, அதைத் திட்டப்படுத்திக் கொண்டு, பூமிக்கு வந்தார். அங்கு வருந்தி நிற்கும் விஷ்ணுவை அவர் கண்டு மகிழ்ச்சியுடன் கூத்தாடிக் கூறினார். விஷ்ணுவே! இந்த ஜோதிஸ்தம்பத்தின் முடியை நான் கண்டு வந்தேன். இதற்கு இந்தத் தாழம்பூவே சாட்சி! என்றார். தாழம்பூவும் பிரமன் கூறியது உண்மைதான் என்றது. விஷ்ணுமூர்த்தி அவ்வார்த்தையை உண்மையென்று கருதி, அந்தப் பிரம தேவனைப் பணிந்து, ÷ஷாடச உபசாரங்கள் செய்து கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான் பிரமன் மீது கடுங்கோபம் கொண்டு, தேஜோலிங்க ரூபத்தினாலேயே அவரை கொல்ல வருகையில் விஷ்ணு தெரிந்துகொண்டு சாஷ்டாங்கமாகப் பணிந்து எதிரே நின்று ஆதியந்தமில்லா உம்மிடத்தில் மோக புத்தியால் ஆதியந்தங்களைக் காணலாம் என்று ஆசைப்பட்டு அலைந்தோம். தங்கள் திருவிளையாடலாலே மோகம் நாசமாயிற்று. நான் செய்த பிழையைப் பொறுத்தருளவேண்டும்! என்று விண்ணப்பித்தார். சிவபெருமான் விஷ்ணுவின் மீது கிருபை கொண்டு இளமையுள்ளவனே! தயை உடையவனானேன். என் அடியைத் தேடவேண்டும் என்று விருப்பங்கொண்டாலும், சத்தியத்தைச் சொன்னவன்; ஆகையால் உன்னை தேவர், முனிவர், மானுடர் முதலியோர் பூஜிப்பார்களாக. உன்னைப் புண்ணிய ÷க்ஷத்திரங்களில் எல்லாம் விக்கிரக ரூபமாகப் பிரதிஷ்டை செய்து பூஜை, உற்சவம் முதலியவற்றைச் செய்யட்டும் என்று திருவாய் மலர்ந்தருளி, தேவர்கள் எல்லோரும் மகிழ, உனக்கு என்னைப் போலவே பூஜிதை உண்டாகும் என்றார்.
6. பிரமச் சிரச்சேதமும் தாழைமலர்ச் சாபமும்
இவ்விதமாக விஷ்ணுமூர்த்திக்கு வரங்களைக் கொடுத்த சிவபெருமான், பொய் பேசிய பிரமன் விஷயத்தில் கடுங்கோபம் கொண்டு, அவரை அடக்க வேண்டும் என்று கருதி, தம் இரு புருவங்களுக்கு இடையே பைரவரைத் தோன்றச் செய்தார். அப்போது பைரவர் சிவபெருமானை வணங்கி ஸ்வாமி! அடியேன் செய்யத்தக்க பணிவிடையாது? என்று கேட்டார். அவரை சிவபெருமான் நோக்கி, பைரவா! இந்தப் பிரமன் என்னுடைய ஜோதி ரூபத்தின் முடியைக் கண்டேன் என்று பொய் பேசினான். ஆகையால் அவனுடைய சிரத்தை, உன் கையிலுள்ள கட்கத்தால் அறுத்து, எறிந்துவிட வேண்டும் என்று கூறினார். உடனே பைரவர் விஷ்ணு புத்திரராகிய பிரமதேவனின் தலைமயிரை ஒரு கையால் பற்றி, பொய்பேசிய அவரது ஐந்தாவது தலையை அறுத்து, மற்ற தலைகளையும் அறுக்க ஆரம்பித்தார். பிறகு பிரமன் அணிமணிகள் ஆடைகள் மாலைகள் முதலியவற்றை விட்டு, அவிழ்த்த தலைமயிரோடு, பெருங்காற்றால் அலைபுண்ட வாழைமரம் போல நடுநடுங்கி பைரவமூர்த்தியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். அதைக் கண்ட விஷ்ணுமூர்த்தி, தம் புத்திரனான பிரமன் விஷயத்தில் மனங்கசிந்து அவருக்குச் சிவபெருமானின் திருவருளை உண்டாக்கச் செய்ய விரும்பி, சிவபெருமானை வணங்கி, குழந்தை தன் தந்தையிடம் பேசுவதுபோல, சகல லோகங்களுக்கும் பதியான சங்கர பகவானே! இந்தப் பிரமனுக்கு அவன் செய்த பெருந்தவத்திற்கு இரங்கி முன்பு ஐந்து முகங்களை அடையாளமாகத் தந்தருளினீர். ஆகையால் அவனை மற்றச் சிரங்களை அறுக்காமல் மன்னித்தருளவேண்டும் என்று பணிவோடு விண்ணப்பஞ் செய்துகொண்டார். அதனால் பைரவரை அழைத்து அவருக்கு ஒருலகு கொடுத்து அனுப்பிவிட்டு, நான்கு சிரங்களுடன் இருக்கும் பிரமதேவனைப் பார்த்து நீ மந்த புத்தியால் என் ஸ்வரூபத்தை அறிய விரும்பினாய்! உன்னால் அது முடியாதபோது பொய் சொன்னாய். இக்குற்றங்களால் உனக்கு உலகத்திலே பூஜையும் உற்சவம் முதலியனவும் இல்லாமற் போகுக! என்றார். அவ்வார்த்தையை கேட்ட பிரமன், சிவபெருமானே! தயை செய்யவேண்டும். என் ஐந்தாவது சிரமே பொய் பேசியது, ஆகையால் அதை அறுத்தது எனக்குத் திருப்தியே! பரிசுத்தமானவரே! சகலருக்கும் பந்துவே! கைலாசபதியே நமஸ்காரம் என்று பணிந்தார்.
அவரை சிவபெருமான் நோக்கி, பிரமனே! உலகிற்கு அரசன் இல்லாவிட்டால் நாசம் உண்டாகும். ஆகையால் நீ உலகங்களிலுள்ள வேதியருக்கெல்லாம் அரசனாக இருக்க! அக்கினி ஹோத்ரம் முதலிய யாவற்றுக்கும் நீயே குரு, உன்னையல்லாது சாங்கோபாங்கமாக யாகம் முதலியவற்றைச் செய்தாலும் அதன் பயன் ஒருவனுக்கு உண்டாகமாட்டாது என்று கூறினார். பிறகு பொய் சாட்சி சொன்ன தாழை, மலரை அவர் கோபத்துடன் பார்த்து, ஜடபுத்தியும் துஷ்டத்தனமுடைய நீ இங்கிருந்து தொலைவிற் செல். எனக்கு உன்னிடத்தில் சிறிதும் விருப்பமே கிடையாது. இனி நீ என் பூஜைக்கு உதவமாட்டாய்! என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்கள், அன்று முதல் உலகத்தில் ஒரு நாளும் தாழை மலரைச் சிவ பூஜைக்குப் பயன் படுத்துவதில்லை. தாழம்பூ சிவபெருமானைப் பணிந்து, சுவாமி! என்னை உம் பூஜையில் உபயோகப்படுத்தா விட்டால், என் பிறவி பயனற்றுப் போகுமே! நான் செய்த பாவங்களை மன்னித்து என் பிறவியைப் பயனுடையதாகச் செய்ய வேண்டும். உம்மை மனத்தாலே தியானஞ் செய்தாலும் சகல பாவங்களும் ஒழிந்துவிடுமே! உம்மைத் தரிசித்து உம்மோடு நெடுங்காலம் இருந்த அடியேன் பொய் பேசிய பாவமும் மன்னிக்கப்படவேண்டும் என்று பலவாறு வேண்ட சிவபெருமான் சிறிது திருவுளம் இரங்கி, தாழை மலரே! என் பக்தர்கள் உன்னை அணிந்து கொள்க. அதனால் ஜென்ம சாபல்யம் அடைக! என்று தாழை மலருக்கு அருள்புரிந்து பிரமன் விஷ்ணு சகல தேவர்களாலும் துதி செய்யப்பெற்றுத் தேவர்களுக்கிடையே எழுந்தருளியிருந்தார்.
7. அருணாசல லிங்க மகிமை
திருநந்தி தேவர் கூறலானார். ஸனத்குமார முனிவரே! சபை மத்தியிலிருக்கும் சிவபெருமானை வலப்பக்கத்திலிருந்த பிரமதேவனும், இடது பக்கத்திலிருந்த விஷ்ணு மூர்த்தியும் வணங்கிக் கும்பிட்டவர்களாக இருக்க, சிவபெருமான் பார்வதி சமேதராக ஒரு சிங்காதனத்தில் எழுந்தருளியிருந்தார். அப்போது பிருமா விஷ்ணு இருவரும் முத்துமாலை, தோள்வளை, கிரீடம், மணிகள், குண்டலங்கள், யக்ஞோபவீதம், மாலை, உத்தரீயம், புஷ்பம், தாம்பூலம், கர்ப்பூரம், சந்தனம், தூபம், தீபம், த்வஜம், சாமரம் முதலிய பலவற்றையும் சிவபெருமானுக்குச் சமர்ப்பித்தார்கள். அவர்கள் செய்த பூஜைக்கு மகிழ்ந்த சிவபெருமான் புன்னகையோடு சொல்லத் துவங்கினார். குழந்தைகளே, நீங்கள் செய்த பூஜைக்கு நான் மிகவும் மகிழ்ந்தேன். இந்த நாள் மிகவும் புண்ணியசீலமான நாள். இந்தத் திதிக்குச் சிவராத்திரி என்று பெயர். இதுவே எனக்கு இஷ்டமான திதி. இந்தத் தினத்தில் எவன் என்னுடைய லிங்கத்தையாவது விக்கிரகத்தையாவது பூஜை செய்கிறானோ அவன் உலக காரியங்களாகிய ஸ்ருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்பவனாகிறான். சாஸ்திரப்படித் தன் சக்திக்கு ஏற்ப சிவபூஜை செய்யவேண்டும். சந்திரோதய காலத்தில் விருத்தியடையும் சமுத்திரத்தைப் போல இந்தச் சிவராத்திரி காலத்தில் எனக்குச் செய்யும் பூஜை, உற்சவம் முதலியவற்றால் என் மகிழ்ச்சி விருத்தியாகும். நான் உங்களுக்காக ஸ்தம்பாகாரமாக ஆவிர்ப்பவித்த காலம் மார்கழி மாதம் திருவாதிரை நக்ஷத்திரம். ஆகையால் அந்த மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திலே என் லிங்க ஸ்வரூபத்தையாவது விக்கிரக ரூபத்தையாவது தரிசனஞ் செய்பவனிடத்தில் ஸ்கந்தனிடத்து நான் கொண்டுள்ளளவு அன்பு வைப்பேன்.
மங்களகரமான இந்தச் சிவராத்திரி தினத்தில் என்னைப் பூஜித்தவன், சொல்லி முடியாத பெரும்பயனையடைவான், நான் லிங்கரூபியாக நின்ற இவ்விடம் லிங்கஸ்தானம் என்ற பெயரைப்பெறும். ஆதியந்தங்கள் கண்டறியாத இந்த ஸ்தம்பம் தரிசிப்பதற்கும் பிரதக்ஷிணம் செய்வதற்கு அனுகூலமாக சிறிதாகப் போகிறது. சகல ஜனங்களும் இஷ்ட சித்திகளையும் முக்தியையும் அடைவதற்கு இதுவே உபாயம். இதைத் தரிசித்தாலும் நமஸ்கரித்தாலும் தியானஞ் செய்தாலும் பிறவிச் சுழலை ஒழிக்கலாகும். இது அக்கினி மலை போல் உண்டான காரணத்தால் இந்த ஸ்தலம் அருணாசலம் என்று பிரசித்தி பெற்றுத் திகழும். இங்கே பிரசித்தியான பல புண்ணிய தீர்த்தங்கள் உண்டாகும். இங்கே வசித்தவர்களும், மரித்தவர்களும் மோக்ஷமடைவார்கள். இங்கே சிறந்த தேர்த்திருவிழா முதலிய உற்சவங்கள் உண்டாகும். இங்கு தானம், தவம், ஹோமம் முதலியன செய்தால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோடியாகப் பயன் அளிக்கும். இது என் ÷க்ஷத்திரங்களில் சிறந்ததொரு ÷க்ஷத்திரமாகும். இந்த ஸ்தலத்தை ஸ்மரித்தாலே முக்தி கைகூடும். ஆகையால், இது மேன்மையானதும் மங்களகரமானதும் அழகானதும் மோக்ஷமளிக்க வல்லதுமாகும். இந்த ஸ்தலத்தில் இலிங்கத்தையாவது ஒரு விக்கிரகத்தையாவது பூஜை செய்தவர்கள், சாலோக சாமீப சாரூப, சாயுஜ்யம் (இறைவனுலகு, இறைவன் அருகருப்பு, இறைவன் உரு, இறைவனோடு ஒன்றிப்பு) என்னும் பதவிகளை அடைவார்கள். ஆகையால் பிரம விஷ்ணுக்களாகிய நீங்களும் சகல தேவர்களோடும், இங்கு உற்சவம் முதலிய விபரங்களைச் செய்து, இஷ்ட சித்தியை அடைவீர்களாக! என்றார்.
இவ்வாறு சிவபகவான் திருவருள் செய்தபிறகு, முன்பு பிரம விஷ்ணுக்கள் போர் செய்ததில் இறந்தவர்களையெல்லாம் உயிர்பெற்று எழச்செய்து, அவ்விருவருடைய அறியாமையையும் துவேஷத்தையும் போக்குவதற்காகக் கூறலானார். என் ஸ்வரூபம் சகலமென்றும் நிஷ்களம் என்றும் இருவகைப்படும். வேறெவனும் சகல நிஷ்கள ரூபமுடையவனல்லன், வேறு எவனும் ஈஸ்வரனல்லன். முதலில் ஸ்தம்ப ரூபமாகவும் பிறகு விக்கிரக ரூபமாகவும் காணப்பட்டேன் அன்றோ? பிரமத்வத்தை நிஷ்களம் என்றும் ஈஸ்வரத்வத்தைச் சகளம் என்றும் சொல்லப்படும். அஞ்ஞானத்தால் நான் ஈஸ்வரன் நான் ஈஸ்வரன் என்று நீங்கள் ஒருவரோடொருவர் போர் செய்ததை உணர்ந்து அதை நிவர்த்தி செய்வதற்காக இந்த யுத்த பூமிக்கு வந்தேன். இனி நீங்கள் உங்கள் அகந்தையை விட்டு ஈஸ்வரனான என்னிடத்தில் பக்தி செய்யக்கடவீர்கள். எல்லா உலகங்களிலுமுள்ள எல்லாப் பொருட்களும் என்னுடைய அனுக்கிரகத்தினாலேயே பிரகாசிக்கின்றன. என்னுடைய பிரமத்துவத்தை உங்களிடம் எனக்குள்ள அன்பினாலே விளக்கினேன். நானே சர்வலோக ஈஸ்வரன். நானே பஞ்சக்கிருத்தியங்களையும் நடத்துவோன். நானே சர்வலோகங்களிலும் வியாபித்துள்ள பரப்பிரமம். நானே ஆன்மா! நானே ஈஸ்வரன், இவற்றை உங்களுக்கு அறிவிக்கவே இலிங்கரூபமாக வந்தேன். இந்த ஸ்தம்பாகாரம் எனது பிரமதத்துவத்தை விளக்குவது. இதுவே எனது லிங்கரூபம் இந்த லிங்கத்தை நீங்கள் தினந்தோறும் பூஜை செய்யக் கடவீர்கள். என்னுடைய லிங்கத்தையாவது விக்கிரகத்தையாவது பூஜிப்பது சமானமாகும். ஆயினும் லிங்க பூஜையே விக்கிரக பூஜையை விடச் சிறந்தது. இலிங்கத்தையும் விக்கிரகத்திற்குப் பேதம் என்று நினையாது பூஜிப்பீர்களாக. இலிங்கப் பிரதிஷ்டை மட்டுமே செய்து விக்கிரகப் பிரதிஷ்டை செய்யாவிட்டால் நான் அங்கு எழுந்தருளியிருப்பேன். விக்கிரகத்தை மட்டும் பிரதிஷ்டை செய்து, இலிங்கப் பிரதிஷ்டை செய்யாவிட்டால் நான் அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டவன் ஆக மாட்டேன். ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவன் என் சாயுஜ்யத்தை அடைவான். இலிங்கம் விக்கிரகம் என்னும் இரண்டிலும் இலிங்கமே முக்கியமாகப் பிரதிஷ்டை செய்யத்தக்கது. இலிங்கப் பிரதிஷ்டை இல்லாத இடம் ÷க்ஷத்திரம் ஆகமாட்டாது என்று சிவபெருமான் திருவாய் மொழிந்தருளினார்.
8. பிருமாவிற்கும், திருமாலுக்கும் உபதேசம்
பிருமாவும் திருமாலும் சிவபெருமானை நோக்கி, மகாதேவா படைத்தல் முதலான ஐந்தொழில்களின் லக்ஷணங்கள் இவையென்று எங்களுக்குக் கூறியருள வேண்டும் என்று கேட்க சிவபெருமான் கூறினார். பிரமனே, விஷ்ணுவே! ஒருவராலும் அறியக்கூடாத என் ஐந்தொழில்களின் (பஞ்ச கிருத்தியங்களின் தன்மைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன். சிருஷ்டி, ஸ்திதி, ஸங்காரம், திரோபவம், அநுக்கிரகம் என்ற என்னுடைய ஐந்து வகைக் கிருத்தியங்களினாலேதான் உலகம் நித்தியமாக இருக்கிறது) சிருஷ்டி (படைத்தல்) என்பது சம்சாரத்தை உண்டாக்குவது ஸ்திதி என்பது அந்தச் சம்சாரத்தை நிலையூன்றச் செய்வது. சங்காரம் (அழித்தல்) என்பது அந்தச் சம்சாரத்தைப் பீடிப்பது, மறைத்தல் (திரோபவம்) என்பது அந்தச் சம்சாரத்திலிருந்து நிவர்த்தி செய்வது அருள் (அநுக்கிரகம்) என்பது, அந்தச் சம்சாரத்திலிருந்து நிவர்த்தியாகி மோக்ஷத்திற்கு போவது. இவ்வைந்தும் என்னாலேயே நிகழ்த்தப்படுகின்றன. சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம், திரோபவம் என்ற இந்த நான்கு தொழில்களைப் பூமி, ஜலம், அக்கினி, வாயு இவர்கள் கோபுரந்தாங்கிகள் கோபுரத்தைத் தாங்குவதைப் போலச் செய்து வருகிறார்கள். சிருஷ்டி முதலிய சம்சார கிருத்தியங்கள் (தொழில்கள்) நான்கும் அநுக்கிரகம் என்ற மோக்ஷகிருத்தியமும் ஆக ஐந்து கிருத்தியங்களும் என்னிடத்திலேயே உள்ளன. இந்தப் பஞ்சக் கிருத்தியங்களைப் பஞ்ச பூதங்களால் நடத்துகிறேன். சிருஷ்டி பூமியிலும், ஸ்திதி ஜலத்திலும், சங்காரம் அக்கினியிலும், திரோபவம் வாயுவிலும், அநுக்கிரகம் ஆகாய ரூபமான என்னிடத்திலும் இருக்கின்றன. பூமியால் சகலமும் சிருஷ்டியாகும். ஜலத்தால் அவையாவும் விருத்தியடைகின்றன. அக்கினியால் யாவும் ஸம்ஹரிக்கப்படும். வாயுவால் சகலலோகமும் திரோபவிக்கப்படும் ஆகாச ரூபியான என்னால் சகல லோகங்களும் அநுக்கிரகிக்கப்படும் என்று புத்திமான்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பஞ்ச கிருத்தியங்களைச் செய்ய எனக்கு நாற்றிசைகளிலும் நான்கு முகங்களும் உச்சியில் ஒரு முகமாக ஐந்து முகங்கள் உள்ளன. பிரமனே! விஷ்ணுரூபி நீங்கள் முன்பு ஒரு காலத்தில் என்னை வேண்டிக் கொண்டபோது படைத்தல் நிலைப்பெறச் செய்தல் சிருஷ்டி ஸ்திதி என்னும் இரண்டையும் உங்களுக்குக் கொடுத்தேன். அப்படியே உருத்திரனும் மகேசனும் பெருந்தவஞ் செய்தபடியால் அவர்களுக்கு இரங்கிச் சங்காரம், திரோபவம் என்ற இரண்டையும் கொடுத்தேன். ஆனால் அனுக்கிரக கிருத்தியம் (அருள் பாலிக்கும் தொழில்) மட்டும் ஒருவராலும் அடையத்தக்க தல்ல? இவ்வாறு முன்பு நடந்த விருத்தாந்தங்களையெல்லாம் நீங்கள் இருவரும் மறந்து விட்டீர்கள். உருத்திரனும் மகேசனும் மறவாதிருக்கிறார்கள்.
ரூபம், காரியம், வாகனம், ஆசனம், ஆயுதம் முதலியவைகளில் அவர்கள் இருவருக்கும் எனக்கு சமானமாக இருத்தலைக் கொடுத்தேன். என்னை நீங்கள் தியானஞ் செய்ய மறந்ததால் இவ்விதம் துன்பமடைந்தீர்கள். ஆகையால் இனியேனும் உன் சுபாவத்தை அறிவதற்கு ஓம் என்பதாயும் அகங்காரங்களைப் போக்குவதாயும் விளங்கும் என் மந்திரத்தை ஜபம் செய்யுங்கள். அவ்வோங்காரம் என் முகத்திலிருந்து உதித்தது அதுவே வாசகம். நானே வாச்யன் இந்த ஓங்கார தியானத்தால் என்னைத் தியானஞ் செய்த பயன் உண்டாகும். அவ்வோங்காரத்திலுள்ள அகார உகார மகாரங்களில் அகாரம் எனது வடமுகத்திலிருந்தும் உகாரம் எனது மேன் முகத்தினின்றும் மகரம் தென் முகத்தினின்றும் அநுஸ்வரம் கீழ் முகத்திலிருந்தும் ஓம் என்னும் ஓசை என் ஐந்தாவது முகத்திலிருந்தும் தோன்றின. ஓங்காரம் இவ்விதம் ஐந்து விதங்களாகச் சேர்ந்து ஓர் எழுத்தாயிற்று. இந்த மந்திரத்தால் சகல லோகமும் வியாபிக்கப்பட்டது. இதுவே என் சக்திகளையறிந்து சொல்லவல்லது இதுவே சகல அறிவையும் உண்டாக்கும் நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மஹாமந்திரமாக விளங்கும் ஓம் என்பதில் (அஉம்) என்ற ஓமென்னும் ஓசையில் இவ்வைந்துமே முறையாக நம: சிவயவெனவாயின. இந்த நான்கு தலையையுடையதான நான்கு முகங்களிலிருந்து மூன்று பதத்தையுடைய காயத்திரி உண்டாயிற்று. காயத்திரியிலிருந்து சகல வேதங்களும் உண்டாயின. வேதத்தினின்று அநேக மந்திரங்கள் உண்டாயின. அந்தந்த மந்திரங்கள் தத்தமக்குரிய பயன்களைக் கொடுக்கும். காயத்திரியோ சகல பயன்களையும் கொடுக்கும். பிற மந்திரங்கள் சுகத்தை மட்டும் கொடுக்கும் பிரம விஷ்ணுக்களே! இந்தப் பஞ்சாக்ஷர மந்திரமோ சுகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்கும்! என்று கூறி, அங்கு ஒரு திரையிட்டு வடமுகமாக நின்ற பிரமனுக்கும் விஷ்ணுவுக்கும் குருவாக இருந்து அந்தச் சிறந்த மந்திரத்தை அவர்களிருவருக்கும், அவர்கள் சிரசிற் கையை வைத்துப் பார்வதி தேவியுடன் எழுந்தருளியிருந்து உபதேசஞ் செய்து, அதற்கு யந்திரம், தந்திரம் இவற்றையும் கொடுத்து, மந்திரத்தை மும்முறை கூறி அவர்களைக் கிரகிக்கச் செய்தார். அப்போது அவர்கள் இருவரும் சிவபெருமானுக்குத் தம்மையே குரு காணிக்கையாகக் கொடுத்துப் பின்வருமாறு ஸ்தோத்திரம் செய்தார்கள். நிஷ்களரூபியும் தேஜஸையுடையவரும் சகலலோக நாதரும் ஆன்மஸ்வரூபியும் பிரணவ வாச்யரும் பிரணவத்தை அடையாளமாகக் கொண்டவரும் ஐந்து முகங்களையுடையவரும் பஞ்சப் பிரமஸ்வரூபியும் பரப்பிரம ஸ்வரூபியும் பரமாத்ம ஸ்வரூபியும் நாசமில்லாதவரும் குண சக்திகளையெல்லாமுடையவரும், சகல ரூபியும் நிஷ்களரூபியும் சுகத்தைக் கொடுப்பவரும், சகல ஜனங்களுக்கும் குருவாகிய உமக்கு நமஸ்காரம்! நமஸ்காரம் ! என்று பலவாறு துதித்தனர்.
அதற்குச் சிவபெருமான் இணையோர்களான பிரம விஷ்ணுக்களே! உங்களுக்குச் சகல தத்துவங்களையும் விளக்கிச் சொன்னேன். ஓம் என்னும் பிரணவத்தை ஜபம் செய்யுங்கள், பிரணவ மந்திரத்தை திருவாதிரை நக்ஷத்திரத்திலும் சதுர்த்தசி திதியிலும் ஜபித்தாலும் ஞானமும் அழியாத செல்வமும் அழிவற்ற கீர்த்தியும் மோக்ஷமும் உண்டாகும். திருவாதிரையிலே சூரியப் பிரவேசமாக இருக்கும்போது ஜபஞ்செய்தால், அதைவிடப் கோடிப்பங்கு அதிக பயன் உண்டாகும். சாயங்காலத்திலும் விடியற்காலத்திலும் மத்தியான்ன காலத்திலும் ஹோம தர்ப்பண காலங்களிலும் ஜபஞ் செய்ய வேண்டும். அஸ்தமித்த பிறகு, ஒரு முகூர்த்த காலமிருக்கிற சதுர்த்தசி, அமாவாசை, விசேஷமானதென்றும் உணர்வீர்களாக. இலிங்கமும் விக்கிரகமும் எனக்குச் சம்மதமாயினும் மோக்ஷ அபேக்ஷமுடையவர்கள் இலிங்கத்தையே அதிகமாகவும் பூஜை செய்ய வேண்டும். இலிங்கத்தை ஓங்கார மந்திரத்தாலும் விக்ரகத்தை பஞ்சாக்ஷர மந்திரத்தாலும் பூஜிக்க வேண்டும். இலிங்கப் பிரதிஷ்டை விக்கிரகப் பிரதிஷ்டை ஆகிய இரண்டுமே செய்யத்தக்கதாயினும் இலிங்கப் பிரதிஷ்டையைப் பக்தி பூர்வமாகச் செய்து, உபசாரங்களுடன் பூஜித்தால், என் பதவியை அடையலாம் என்று கூறி விஷ்ணுவையும் பிரமனையும் ஆசீர்வதித்து அந்தர்த்தானமானார் என்று நந்திதேவர் ஸனத்குமார முனிவருக்குச் சொன்னார்.
9. சிவலிங்கப் பிரதிஷ்டையும் மந்திர ஜெபமும்
சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய வேண்டிய முறையையும் சிவலிங்க லக்ஷணத்தையும் சிவலிங்க பூஜா முறையையும் சொல்லுகிறேன் என்று நந்திதேவர் சொல்லத் துவங்கினார். ஸனத்குமாரரே! மங்களகரமான காலத்திலே புண்ணிய தீர்த்தத்திலேயும் நதிக்கரையிலேயும் பூஜை நடக்கும் இடத்திலேயும் இஷ்டமுள்ள இடத்திலேயும் சிவலிங்கப் பிரதிஷ்டையைச் செய்யலாம். இலிங்கத்தை முறைப்படி செய்வித்துப் பிரதிஷ்டை செய்து பூஜித்தால் விசேஷ பயனுண்டாகும். சகல லக்ஷணங்களோடும் முறைப்படி லிங்கப் பிரதிஷ்டை செய்தால் அந்தக் கணத்திலேயே இஷ்டசித்தியுண்டாகும். சர லிங்கமானால் சிறிதாகவும் ஸ்தாபித லிங்கமானால் பெரிதாகவும் செய்விக்கவேண்டும். இலிங்கத்தை லக்ஷணத்தோடும் பீடத்தோடும் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இலிங்கப் பீடம் வட்டமாக வாவது நாற்சதுரமாகவாவது முக்கோணமாகவாவது துவஜப் படம் போலாவது கண்டத்தில் சிறிதாகவும் இருந்தால் மகாபயனைக் கொடுக்கும். மண், கல், முதலியவற்றாலும் லிங்கத்தைச் செய்யலாம். இலிங்க வர்ணமே பீடத்துக்கும் இருக்கவேண்டும். ஸ்திரலிங்கமே விசேஷமான பயனையளிக்கும் பன்னிரண்டங்குல அளவுள்ள லிங்கம் உத்தமம் என்று சொல்லப்படும். பன்னிரண்டங்குல அளவுக்குங் குறைந்த லிங்கப் பிரதிஷ்டையால் சுலப பயனுண்டாகும். பன்னிரண்டங்குலத்திற்கு அதிகமானாலும் தோஷமில்லை. ஓரங்குலம் குறைந்தாலும் அப்படியே பிறகு தேவர்களுடன் கூடிய விமானத்தைச் சிற்பியைக் கொண்டு செய்விக்க வேண்டும். இலிங்கப் பிரதிஷ்டை செய்யும் ஆலயத்தில் சுத்தஸ்படிகம் போலப் பிரகாசிக்கும் இரத்தினங்களால் அலங்கரித்து, முக்கிய திக்குகளில் கோபுரங்களையுடையதாய் நீலம், வைடூரியம், மரகதம், வைரம், முத்து, பவளம், கோமேதகம் முதலிய சிறந்த நவரத்தினங்களையும் சொர்ணத்தையும் இலிங்கப் பிரதிஷ்டை செய்யும் பள்ளத்தில் வைத்து அவற்றின் மீது இலிங்கத்தை வைக்க வேண்டும்.
அவ்வாறு இலிங்கத்தை வைத்த பிறகு ஸத்தியோஜாதாதி பஞ்சப்பிரம மந்திரங்களால் கிழக்கு, மேற்கு, வடக்கு, மத்தியம் என்ற ஐந்து இடங்களிலும் முறைப்படி பூஜித்து அவிசால் அக்கினியில் ஓமம் செய்து குருவையும் ஆசாரியனையும் பூஜித்து உறவினர்களைத்தழைத்தாலும் அவரவருக்கு இஷ்டமான பொருள்களாலும் திருப்தியடையச் செய்து, அறிவிலி, அறிஞன் என்ற பேதமில்லாமல் பலருக்கும் பொதுவாகத் திருப்தி ஏற்படச் செய்து நவரத்தினங்களின் மேல் வைத்திருக்கும் இலிங்கத்தில் ஸத்யோஜாதாதி மந்திரங்களால் மங்களங்கள் யாவற்றையும் தரும் ஆதிதேவனைத் தியானஞ் செய்து, மஹாமந்திரமான பிரணவத்தை உச்ச ஸ்வரத்துடன் சொல்லிக்கொண்டு, பிரதிஷ்டை செய்து, பிறகு பீடத்தையும் சேர்க்க வேண்டும். பிறகு உறுதிப்படும்படியாகச் சுண்ணம் முதலியவற்றைப் பூசி அசையாமல் நிறுத்திவிட வேண்டும். இப்படியே அழகிய விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்ய வேண்டும். விக்கிரகங்கள் உலோகங்களால் செய்யப்பட்டவையாயின் உற்சவம் முதலியன செய்வதற்காக ஸ்தாபிதம் செய்யக்கூடாது. குருவிடத்திருந்ததும் பெரியோரிடத்ததுமான விக்கிரகங்களை வாங்கிப் பிரதிஷ்டை செய்து பூஜிக்கவேண்டும். மேலும் ஸ்தாவர ஜங்கமங்கள் என்னும் இருவகை லிங்கங்கள் உள்ளன. அவை மரம் முதலிய ஸ்தாவரங்களும், மத்ஸம் முதலிய ஜங்கமங்களும் லிங்கங்களாகும். அவற்றிற்கு நீர், ஆகாரம் முதலியவற்றால் திருப்தி செய்விப்பதும் லிங்க பூஜையாகும். ஆகையால் அவரவருக்கேற்ற லிங்க பூஜையை செய்ய வேண்டும். பீடம் பிரகிருதி ஸ்வரூபமும் லிங்கம் ஞானஸ்வரூபமும் ஆகும். சிவபெருமான் பார்வதியை மடியில் வைத்துக்கொண்டிருப்பது போலவே, லிங்கம் எப்பொழுதும் பீடத்தைத் தரித்துக் கொண்டிருக்கிறது. சக்திக்கேற்ப, பூஜாத்திரவியங்களைக் கொண்டு லிங்கபூஜை செய்ய வேண்டும். சிவபதவியைக் கொடுக்கத்தக்க லிங்கப் பிரதிஷ்டையை இந்த வகையாகச் செய்யவேண்டும். ஜங்கம லிங்கத்தைப் பூஜித்தாலும் சிவபதவியைக் கொடுக்கும். ஆவாஹனம், ஆசனம், அர்க்கியம், பாத்தியம், ஆசமனம், நைவேத்தியம், ஆரத்தி, தாம்பூலம், நமஸ்காரம், விஸர்ஜனம் என்ற ÷ஷாடச உபசாரங்களோடும் பூஜை செய்யவேண்டும். சக்தியில்லாவிட்டால் அர்க்கியம் முதல் நைவேத்தியம் ஈறானவற்றில் கூடியவற்றைச் செய்யலாம்.
அபிஷேகம், நமஸ்காரம், தர்ப்பணம் இவற்றைச் சக்திக்கு ஏற்பச் செய்து வந்தால் அவன் சிவபதம் அடைவான். தானே உண்டான ஸ்வயம்பு லிங்கங்களுக்கும் பூஜா உபகரணங்களைக் கொடுத்தால் சிறிது பயன் உண்டாகும். எப்பொழுதும் பிரதக்ஷண நமஸ்காரங்களை மட்டுமே செய்து வருவோர், சிவலோகத்தில் வாழ்வார்கள். சிவலிங்க தரிசனத்தை ஒருவன் செய்த மாத்திரமே சகல மங்கலங்களையும் அடைவான். மண், மா, அலரி, பசுவின் சாணம், வெல்லம், பஞ்சவர்ண புஷ்பம், பஸ்பம், அன்னம் இவற்றைச் சேர்த்து இலிங்கத்திற்குப் பூஜை செய்தால் சகல விருப்பங்களும் நிறைவேறும். இவ்விதமாக வாவது லிங்க பூஜை செய்ய வேண்டும். எளிதாகப் பூஜித்தாலும் பயனுண்டாம். இலிங்க பூஜையைச் செய்ய முடியாதவன் இலிங்க தானமாவது செய்ய வேண்டும். இலிங்கதானம் செய்ய முடியாதவன், இலிங்க விலையான பொருளையாவது சிவ பக்தனுக்குத் தானஞ் செய்யலாம். இவ்வாறு செய்பவனுக்கும் சிவபதவி சித்திக்கும் அல்லது நாள் ஒன்றுக்கு பதினாயிரம் முறை பிரணவ ஜபம் செய்தாலும் சிவஸ்தானம் கிட்டும். பிரணவத்தை ஜெபம் செய்வதால், அது மனதைச் சுத்தஞ் செய்யும். பஞ்சாக்ஷர மந்திரத்தை ஒருமுறை உச்சரித்தாலும் அது சிறப்பான பயனைக் கொடுக்கும். சந்தியா காலத்தில் ஆயிரம் முறை ஜெபித்தால் சிவஸ்தானம் வரும். பிராமணர்கள் பஞ்சாக்ஷர மந்திரத்தையே பிராமணனும் சத்தியவானும் புனிதனும் ஞானியுமான குருபதேசம் பெற்றே ஜபம் செய்யக் கடவார்கள். பிராமணர்கள் நம என்பதை முதலில் வைத்து சிவாய நம என்று சொல்ல வேண்டும். பிராமணரல்லாத பிற ஜாதியார்கள் நம என்பதை இறுதியில் வைத்து சிவாய நம என்று சொல்ல வேண்டும். மங்கையர்கள் இவற்றில் எந்த வகையாவது ஜபிக்கலாம். பிராமண ஸ்திரீகள் நம என்பதையே முதலாக ஜபிக்கவேண்டும். ஐந்து கோடி உரு ஜெபித்தவர்கள் சிவ சமானத்துவமடைவார்கள். ஒரு கோடி ஜபத்தால் பிரம பதமும், இரண்டு கோடி ஜபத்தால் விஷ்ணு பதமும், மூன்று கோடி ஜபத்தால் உருத்திர பதமும், நான்கு கோடி ஜபத்தால் மகேசபதமும் அடையலாம். அல்லது அக்ஷர லக்ஷமாக (ஐந்து லக்ஷம்) ஜபஞ் செய்தாலும் சிறப்பான பயனுண்டாகும். நாளுக்கு ஆயிரம் ஜெபித்து அந்தணருக்கு அன்னமளித்தாலும் இஷ்டசித்திகள் உண்டாகும். பிராமணன் நாள்தோறும் பஞ்சாக்ஷர ஜபம் செய்து வந்தால் சிவபதவி அடையலாம் என்று வேதங்கூறும். ஏகாக்ஷரமாகிய பிரணவத்தை ஆயிரம் முறை ஜெபம் செய்யும் நியதியுடன் ஆயுள் முடிவு வரையில் செய்து வருவோர் சிவானுக்கிரகத்தால் புஷ்பம், பழம், சந்தனம், பயிர் செல்வம் முதலிய சகல அபீஷ்டங்களையும் பெற்று, இறுதியில் சிவபதம் அடைவார்கள்.
ஞானவான்களும் ஞானவீனர்களும் இதனை ஜபிப்பதால் மோக்ஷம் அடைவார்கள். சிவலிங்கப் பிதிரஷ்டை செய்துள்ள இடத்தைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் நூறு முழங்கள் அளவு பூமியைப் புண்ணிய ÷க்ஷத்திரம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். தேவர்களால் பிரதிஷ்டை செய்த லிங்கத்தின் நான்கு புறத்திலும் ஆயிரம் சாணும் நூறு முழமான பூமியைப் புண்ணியபூமி என்பார்கள். புண்ணிய ÷க்ஷத்திரத்திலுள்ள கிணறு, தடாகம் இவற்றைச் சிவகங்கை என்பார்கள். புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவ÷க்ஷத்திரத்தில் வசித்து மரணமடைந்தவனுக்கு அந்த ÷க்ஷத்திரத்திலேயே தஹனமாவது தசாஹமாவது மாசிகமாவது ஸபிண்டீகரணமாவது ஆப்திகமாவது நடந்தாலும் அல்லது அந்த ÷க்ஷத்திரத்தில் பிண்டப் பிரதானஞ் செய்தாலும் அவன் அந்தக் கணத்திலேயே சகல பாவங்களையும் ஒழித்தவனாகிறான். இதற்கு இயலாதவன் சிவ÷க்ஷத்திரத்தில் ஏழு நாட்களாவது ஐந்து இரவாவது மூன்று இரவாவது ஓர் இரவாவது வசித்தாலும் கிரமமாகச் சிவலோகப் பிராப்தி உண்டாகும். உலகத்தில் மானுடர் தங்கள் குல ஆசாரங்களுக்கு ஏற்ப சிவஸ்தலத்தையடைந்தால், தத்தமது பக்திக்கு ஏற்ற பயனை அடைவார்கள். இஷ்டசித்திக்காக செய்யாமல் மோக்ஷத்தையே கருதிச் சகலத்தையும் செய்தால், சிவஸ்தானம் எப்போதும் வாச பூமியாகும். காலை, உச்சி, மாலை என்ற மூன்று காலங்களிலும் சிவாராதனையும் நல்ல செயல்களைச் செய்வதும் இஷ்ட சித்திகளை அடைவதற்கும் சிவபதம் பெறுவதற்கும் சாதனங்களாகும். இரவில் ஆராதிப்பதும் அவ்வாறே பயன் கொடுக்கும். அர்த்தராத்திரி சிவ ஆராதனைக்கு விசேஷகாலம் என்று சொல்லப்படும். இவற்றை அறிந்து, ஆராதனை செய்தால் தக்க பயன்களையடையலாம் கலியுகத்தில், இவ்வாறு செய்வோர், அதிகமான பயன்களை அடைவார்கள். எந்த வகையிலாவது சிவசிந்தனையும் தர்ம சிந்தனையும் அவசியம் இருக்கவேண்டும் என்று சூதமுனிவரை நோக்கி, சுவாமீ! உலகத்திலே ஸ்திரீகளும் புருஷர்களும் எந்த ÷க்ஷத்திரங்களை அடைந்து அங்கு வசித்துச் சிவபூஜை செய்தால் சிவலோகம் அடைவார்களோ, அத்திருத் தலங்களையும் அவற்றின் பிரபாவங்களையும் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். சூதமாமுனிவர் சொல்லத் துவங்கினார்.
10. தீர்த்த ÷க்ஷத்திர மகிமை
சிவபக்தியுடைய முனிவர்களே! மோக்ஷத்தைக் கொடுக்கத்தக்க சிவ÷க்ஷத்திரங்களையும் அவற்றின் சிறப்புகளையும் லோக ரக்ஷணார்த்தமாகச் சொல்லுகிறேன். அன்புடன் கேளுங்கள். இந்த பூமியானது சிவாக்ஞையினால் ஐம்பது கோடி யோஜனை பரப்பளவுடையதாய் மலை, காடு, நதி முதலியவற்றுடன் விளங்குகிறது. பிரபுவான சிவபகவான் சகல ஜனங்களும் மோக்ஷம் அடையவேண்டும் என்ற கருத்தால் அவ்விடங்களில் காசி முதலிய ஸ்தலங்களை நியமித்தருளினார். மகரிஷிகள் வசிப்பதாலும் தேவதைகள் இருப்பதாலும் உலகத்தைக் காக்க வேண்டியதாலும் சில பாகங்கள் புண்ணிய ÷க்ஷத்திரங்களாயின. புண்ணியகரமான தீர்த்தங்களில் நீராடுதலும் புண்ணிய ÷க்ஷத்திரங்களில் ஜபம் தவம் முதலியவற்றைச் செய்வதும் அவசியமாகும். அவ்வாறு செய்யாதவன் ரோகியும் தரித்திரனும் ஊமையுமாவான். பரதகண்டத்தில் இறந்த ஒருவன் அந்த ÷க்ஷத்திரத்தின் சிறப்பால் பிறவியை அடைய மாட்டான். முனிவர்களே! ÷க்ஷத்திரவாசத்தால் பாவம் உண்டாகமாட்டாது. ஆகையால் எந்தப் பிரயத்தனத்தாலாவது ÷க்ஷத்திரத்தில் வசிக்க வேண்டும். சமுத்திர தீரத்திலும் கங்கை முதலிய தீர்த்தங்களின் கரையிலும் பல புண்ணிய ÷க்ஷத்திரங்கள் உள்ளன. அறுவிதமாகப் பிரிந்துள்ள சரஸ்வதி நதியாகவும் புண்ணியசீலமானது அங்கு, வசித்தவன் சிவஸ்தானத்தையடைவான். ஹிமாசலத்திலிருந்து நூறு பிரிவுகளாக வரும் கங்காநதி மிகவும் புண்ணியகரமானது அதன் கரையிலே காசி முதலிய புண்ணிய ÷க்ஷத்திரங்கள் உள்ளன. அந்த கங்கை நதிக்கரையிலே பத்துப் பிரிவுகளையுடையதும் ஸர்வ அபீஷ்டங்களையுங் கொடுப்பதாகிய சோணபத்திரம் இருக்கிறது. அதில் தை மாதத்தில் மகாலக்கினத்தில் புதன்கிழமையில் ஸ்நான உபவாசாதிகளைச் செய்தால் விநாயகப் பதவி கிடைக்கும். இருபத்து நான்கு பிரிவுகளையுடைய நர்மதா நதியில் ஸ்நானமும் வாசமும் செய்தால் விஷ்ணு பதவி கிடைக்கும். தமஸாநதி பன்னிரண்டு பிரிவுகளையும் ரேவாநதி பத்துப் பிரிவுகளையும் உடையன. பதினோரு பிரிவுகளையுடைய கோதாவரி நதி பிரமஹத்தி கோஹத்தி முதலிய மஹாபாதகங்களையும் பாவங்களையும் ஒழித்து ருத்திர லோகத்தைக் கொடுக்கும். பதினெட்டுப் பிரிவுகளையுடைய கிருஷ்ணவேணி நதி எல்லாப் பாவங்களையும் ஒழித்து, விஷ்ணு பதத்தை அளிக்கும். பத்துப் பிரிவுகளையுடைய துங்கபத்ரை பிரமலோகத்தைக் கொடுக்கும் முகரிநதியும் துங்கபத்திரையை ஒத்தது. முகரிநதிக்கு அருகே பிரமலோகத்திலிருந்து வந்த சரஸ்வதி நதி பம்பாநதி கன்யாநதி இவை இருக்கின்றன. இந்த தீரங்களில் வசிப்பவன் இந்திர பதத்தை அடைவான். சைய பர்வதத்தில் உண்டாகி மிகப் புண்ணியமான காவிரிநதி இருபத்தேழு பிரிவுகளையுடையதும் அங்கு வசித்தவர்களுக்கு சுவர்க்கலோகமும் பிரமலோகமும் விஷ்ணு லோகமும் உண்டாக்குவதுமாகும். சிவசம்பந்தமான நதிகள், சிவலோகத்தைக் கொடுக்கும், சர்வாபீஷ்டங்களையும் கொடுக்கும்.
முனிவர்களே! நைமிசாரணியத்திலும் பதரிகாசிரமத்திலும் சித்திரை மாத மேஷ லக்கினத்தில் புதவாரத்தில் ஸ்நானஞ் செய்தால் சிவலோகவாசம் உண்டாகும். சிந்துநதியில் ஆடிமாதக் கடகலக்கினத்தில் ஸ்நானஞ் செய்து, தவம் பூஜை முதலியவற்றைச் செய்தால் பிரமலோகம் உண்டாகும். ஆவணி மாதத்தில் சிம்ம லக்கினத்தில் புதவாரத்தில் கண்டகி நதியில் ஸ்நானம் செய்க. கேதார நதியின் ஜலத்தைப் பானஞ் செய்தாலும் அதில் ஸ்நானம் செய்தாலும் ஞானம் உண்டாகும். புரட்டாசி மாதத்தில் குரு கன்னியர் லக்கினத்துடன் கூடியிருக்கும்போது, ஸ்நானஞ் செய்தவன் சிவலோகம் அடைவான். ஐப்பசி மாதத்தில் குரு, துலா லக்கினத்துடன் கூடியிருக்கும்போது, ஸ்நானஞ் செய்தால் தர்மலோகமான விநாயக லோகத்தில் வசிக்கலாம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். கார்த்திகை மாதத்தில் குரு விருச்சிக லக்கினத்தில் கூடியிருக்கும்போது காவிரியில் ஸ்நானஞ் செய்தால், விரும்பிய யாவுங் கைகூடும் என்று விஷ்ணு பகவான் சொல்லியிருக்கிறார். மார்கழி மாதத்தில் குரு தனுர் லக்கினத்தில் சேர்ந்திருக்கும் போது, நர்மதா நதியில் விதிப்படி ஸ்நானஞ் செய்தால் விஷ்ணு பதவி கிடைக்கும். அந்தக் காலத்தில் சுவர்ணமுகியில் ஸ்னாநஞ் செய்தாலும் அப்படியேயாகும். தை மாதத்தில் குரு மகர லக்கினத்துடன் கூடிய காலத்தில் ஜாநவி நதியில் ஸ்நானஞ் செய்தால், சிவலோகம் வரும் என்று பிரமதேவர் சொல்லியிருக்கிறார். பிரம விஷ்ணு பதவிகளையடைந்தவர்கள். ஞானரூபியான சிவபெருமானின் உலகத்தையும் பிறகு அடைவார்கள். மாசி மாதத்தில் சூரியன் கும்பராசியில் இருக்கும்போது கங்கையில் சிரார்த்தமாவது பிண்டமாவது பிதுர் வமிச, மாதிருவமிசாதியருக்கு கொடுத்தால் கோடி குலத்துக்குத் தர்ப்பணம் செய்து மோக்ஷத்திற்குச் சேர்த்ததற்கு சரியாகும். பங்குனி மாதத்தில் குருவுஞ் சூரியனும் மீன லக்கினத்திலிருக்கும் போது கிருஷ்ண வேணியிலே ஸ்நானம் செய்து சிரார்த்தாதிகளைச் செய்தால் புண்ணிய பயன்கள் உண்டாகும். அந்தந்த தீர்த்தங்களில் அந்தந்த மாதங்களில் காலமறிந்து நீராடவேண்டும். கங்காநதி தீரத்திலும் காவிரிநதி தீரத்திலும் வசிப்பது சிறந்தது.
தாமிரபரணி, வேகவதி என்னும் நதிகள் பிரம பதவியைக் கொடுக்கும். அவற்றின் கரையிலே அநேகம் ÷க்ஷத்திரங்கள் உள்ளன. இந்நதிகள் இரண்டிற்கும் இடையேயும் பல ÷க்ஷத்திரங்கள் உள்ளன. அவை யாவுமே முக்தியைக் கொடுக்கக் கூடியவை. தெரிந்தவன் அவற்றின் ஒன்றில் வசித்து சிவத்தியானஞ் செய்து இஷ்ட சித்தியையும் மோக்ஷத்தையும் அடையலாம், ÷க்ஷத்திரத்தில் செய்த புண்ணியம் விருத்தியாகும். ஆகையால், தீர்த்தயாத்திரை ÷க்ஷத்திர வாசஞ் செய்யுங்காலத்தில் சிறிதும் பாவஞ் செய்யாமல் புண்ணியங்களையே செய்யவேண்டும். பாவங்கள் தியானம் முதலியவற்றால் நீங்கும், பாவமும் புண்ணியத்தையே போல வாசிகம், காயிகம், மானசம் என்ற மூவகைப்படும். மானஸ பாவம் வஜ்ராயுதம் போலப் பிரளய காலத்திலும் விடாது வரக்கூடியது. அது தியானத்தினாலேயன்றிப் பிறிதொன்றினாலும் போகமாட்டாது. வாசிக பாவம் ஜபத்தாலேயே நாசம் அடையும். காயிகபாவம் உடலைச் சோஷிக்கச் செய்வதால் நாசம் அடையும். கெட்ட நடத்தையால் தேடிய பாவம் தானத்திலேயே தொலையும், சில சமயங்களில் பாவத்தால் புண்ணிய நலினமும் உண்டாவதும் உண்டு பாவமானது பீஜாம்ஸமென்னும் விருத்தியாம்ஸம் என்றும் பெயர்களைப் பெறும் பீஜாம்ஸம் ஞானத்தாலும், விருத்தியாம்ஸம் கீழே சொல்லப்படுவதாலும் நாசம் அடையும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள், போகாம்சம் என்னும் பாவம் போகத்தாலேயே ஒழியும். சுகத்தின் காரணமாக வந்த பாவம் சிவ பூஜையாலும் பிராமணருக்குச் செய்யுந் தானத்தாலும் போகக் கூடியதாகும். ஆகையால் சுகத்தை வேண்டுவோர், எப்போதும் பாவஞ்செய்யாமல் புண்ணிய சீலர்களாக இருக்கவேண்டும்.
11. சர்வாசாரம்
முனிவர்கள் சூத முனிவரை நோக்கி சுவாமி! உலகங்களை யெல்லாம் ஜெயிக்கத்தக்க நல்ல ஆசாரத்தையும் சுவர்க்க நரகங்களைக் கொடுக்கத்தக்க புண்ணிய பாவஸ்வரூபங்களையும் எங்களுக்குச் சொல்லியருள வேண்டும் என்று கேட்டார்கள். அதற்குச் சூத முனிவர் கூறலானார். பிராமணன் என்பவன் நல்ல ஆசாரத்துடன் வேதாசார உணர்ச்சியும் க்ஷத்திரியன் அற்பமான ஆசாரமும் அற்ப வேதாராய்ச்சியும், வைசியன் சிறிது ஆசாரமும் வியாபாரம் முதலியவற்றால் ஜீவனமும் உடையவர்களாக இருக்கவேண்டும். வியாபாரஞ் செய்யும் பிராமணனைச் சூத்திரப் பிராமணன் என்றே சொல்ல வேண்டும். பொறாமையும் பிறரை வஞ்சனை செய்வதுமான பிராமணன் சண்டாளப் பிராமணன் எனப்படுவான். பூமியை ஆள்பவன் அரசன், பிறர் சாதாரண க்ஷத்திரியர்களாவார்கள். மணி முதலியவற்றை விற்பவர்களும் சாதாரண வைசியர். பிரம க்ஷத்திரிய வைசியர்களுக்குப் பணிவிடை செய்பவன் சூத்திரன், பிறர் திருடர்கள் மேற்சொன்னவர்கள் எல்லாரும் அதிகாலையில் எழுந்து கிழக்கு முகமாக இருந்து ஈஸ்வரத்தியானம் செய்து தர்மத்தையும் பொருளையும் தேடுவதில் நியாயத்தையும் லாப நஷ்டத்தையும் சிந்திக்க வேண்டும். காலையில் எழுந்து கிழக்கு முகமாகப் பார்த்தால் ஆயுளும், அக்கினி மூலையைப் பார்த்தால் துவேஷமும், தெற்கு முகமாகப் பார்த்தால் மரணமும், தென்மேற்கு மூலையைப் பார்த்தால் பாவமும், மேற்கு முகமாகப் பார்த்தால் சம்பத்தும், வடமேற்கு மூலையைப் பார்த்தால் புஷ்டியும், வடகிழக்கு மூலையைப் பார்த்தால் சக்தியும் உண்டாகின்றன. இரவின் கடைசி ஜாமத்தைப் பிராதிர்காலம் என்று சொல்லுவார்கள். அந்த ஜாமத்தின் பாதியை ஸந்தியை என்பார்கள். பிராமணன் அந்தக் காலத்திலே எழுந்து வீட்டை விட்டுச் சிறிது தூரம் சென்று, தலையில் உத்தரீயத்தைச் சுற்றிக்கொண்டு, வடக்கு முகமாக உட்கார்ந்து ஜலம் அக்கினி பிராமணன் தேவர் இவர்களுக்கு எதிரில் இல்லாமல் குறியை இடகரத்தாலும் முகத்தை வலது கரத்தாலும் மூடிக்கொண்டு, மலஜல விஸர்ஜனம் செய்யவேண்டும். இரவு நேரத்தில் தெற்கு முகமாக விஸர்ஜனம் செய்யவேண்டும். மலங்கழித்த பிறகு அதைத் திரும்பிப் பார்க்கக்கூடாது. பிறகு ஜலத்தை எடுத்துக் கொண்டு ஜலம் எடுத்த இடத்திற்குத் தூரமான இடத்தில் சவுசம் செய்யவேண்டும். அது ஏழுமுறை, ஐந்து முறை மும்முறையாவது மண்ணால் ஸ்தானத்தை அலம்பிக் புன்னைக் காயளவு மண்ணால் குறியை அலம்பி எழுந்து, கை கால்களை எட்டு முறைகள் சவுசம் செய்து, நீர்நிலையை விட்டு வெளியேறி சாஸ்திர விதிப்படி தந்தகாஷ்டம் (பற்குச்சி) கொண்டு, தந்த தாவனஞ் செய்து ஜலத்தையும், தேவர்களையும் வணங்கி மந்திரப் பூர்வமாக ஸ்நானம் செய்யவேண்டும். அதற்கும் சக்தியில்லாதவன் இடுப்பு வரையிலாவது, அதற்குஞ் சக்தியில்லாதவன் முழங்கால் வரையிலாவது ஸ்நானம் செய்யலாம். அதற்குப் பிறகு தேவர்கள் முதலானவர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். வெண்ணிற ஆடையை உடுத்திக்கொண்டு ஜாபாலக முனிவர் கூறியபடி திரிபுண்டரமாக திருநீறு அணிந்து கொள்ளவேண்டும். ஜலத்தால் வீணே புண்டரந் தரித்தவன் நாசமடைவான், பாவம் போவதற்காக ஆபோஹிஷ்ட மயோபுவ: என்று சிரசிலும் யஸ்ய க்ஷயாய ஜின்வத என்ற மந்திரத்தால் பாதத்திலும் ஜலத்தைப் புரோக்ஷித்துக்கொள்ள வேண்டும். இது ஸந்திபுரோக்ஷணம் எனப்படும். ஆபோஹிஷ்டா மயோபுவ: என்று பாதத்திலும், ஸ்தான ஊர்ஜேததாதன என்று சிரசிலும், மஹேரணாய ரக்ஷஸே என்று இதயத்திலும், உஸதீரிவ மாதரா: என்று பாதத்திலும், தஸ்மா அரங்கமாமவ: என்று இதயத்திலும், ஆபோ ஜனயதாஸன: என்று ஜலத்தைச் சிரசிலும் புரோக்ஷித்துக் கொள்ள வேண்டும். இதுவே மந்திர ஸ்நானம் என்று சொல்லப்படுகிறது.
தூய்மையில்லாத பொருளைத் தொட்ட காலத்திலும், சக்தியில்லாத காலத்திலும், அரசனால் பயம் உண்டான வேளையிலும் வழி நடந்து செல்லும் போதும் மந்திர ஸ்நானம் செய்யலாம். பிராதக் காலத்தில் ஸூர்யஸ்ச மாமன்யுச்ச என்ற மந்திரத்தாலும் மாலைக் காலத்தில் அக்கினிச்ச மாமன்யுச்ச என்ற மந்திரத்தாலும் தீர்த்தம் அருந்த வேண்டும். காயத்திரி மந்திரத்தின் ஜப முடிவில் மும்முறை மேலேயும் மத்தியான்னத்தில் ஒரு முறையும் சாயங்காலத்தில் மேற்கே பார்த்துக்கொண்டு பூமியிலும், பிராதக் காலத்தில் கையால் ஜலத்தை எடுத்தும் அர்க்கியம் விட்டு, விரற்சந்தினால் சூரியனைப் பார்த்து, பிரதக்ஷிணம் செய்து சுத்தாசமனஞ் செய்யவேண்டும். ஒருநாள் சந்தியாவந்தனம் செய்யத் தவறினால் நூறு காயத்திரி ஜபமும் பத்து நாள் தவறினால் லக்ஷம் காயத்திரி ஜபமும் செய்ய வேண்டும். நித்தியகருமமான சந்தியாவந்தனத்தை ஒரு மாதஞ் செய்யத் தவறினால் மறுபடியும் உபநயனஞ் செய்து கொள்ளவேண்டும். ஒருவன் தன் செல்வ விருத்திக்காகச் சிவபெருமான், உமாதேவி, கணேசன், முருகன், விஷ்ணு, பிரமன், இந்திரன், யமன் இவர்களை ஜலத்தால் கற்பிக்க வேண்டும். பிறகு, பிரம்ம தேவனுக்குத் தர்ப்பணம் செய்துவிட்டு சுத்தாசமனம் செய்யவேண்டும். புண்ணிய தீர்த்தத்தின் தென்கரை, மங்களமான மடாலயம், மந்திராலயம் தேவாலயம், தன் இருக்கை, நிச்சலமான இடம் இவற்றுள் ஓரிடத்தில் சகல தேவர்களையும் வணங்கி ஸ்திரபுத்தியோடு ஆசனத்திலிருந்து ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை அப்பியாசம் செய்து காயத்திரியை ஜபம் செய்து பிரணவத்தை ஜீவனுடன் கூடிய பிரமத்திற்கு இணையாகக் கருதி ஜெபித்து, மூவுலகங்களுக்கும் சிருஷ்டிகர்த்தரான பிரமாவையும் இரக்ஷிப்பவராகிய விஷ்ணுமூர்த்தியையும் சங்கரிப்பவரும் தனக்குத்தானே சமானருமான உருத்திரபகவானையும் உபாசனை செய்கிறேன்.
ஞானம் செய்யத்தக்க செயல்கள் இந்திரியங்கள், மனோவியாபாரங்கள், புத்தி, சுகம், மோக்ஷம் இவற்றைக் கொடுக்கும் படி, ஞானமும் தர்மமும் உடைய மனதை கொடுப்பார்களாக! என்று தியானிப்பவன் பரப்பிரமத்தை அடைவது நிச்சயம், அர்த்த ஞானம் இல்லாவிட்டாலும் பிராமணத்துவம் சித்திப்பதற்காக நாள்தோறும் ஜபம் செய்யவேண்டும். உத்தமர்கள் ஆயிரம் ஜபம் விடியற்காலத்தில் செய்வார்கள். மற்றையோர் தங்கள் சக்திக்கேற்பச் செய்யலாம். மாலையில் இருபத்தெட்டு முறை ஜபிக்கவேண்டும். மூலாதாரம் முதல் பன்னிரெண்டாவதான பிரமாந்தரம் வரையிலுள்ள ஹயக்ரீவன் பிரமன் விஷ்ணு, ருத்திரன் முதலியவர்களைப் பரப்பிரமம் என்ற புத்தியுடன் கருதி ஹயக்ரீவன் முதலான தேவர்களோடு தன்னையும் ஒன்றாகக் கருதி, தானே அவனென்று நினைத்து ஜபஞ்செய்ய வேண்டும். பிரம்மருத்திராதியரையே பிரமாந்திரம் முதலியவற்றில் இருப்பவராகவும், அவர்கள் சரீரத்திற்கு வெளியே சஞ்சரிப்பவராகவும் நினைக்கவேண்டும். பரமேஸ்வரனுக்கு எண்ணற்ற தேகங்கள் இருப்பதால் ஒவ்வொரு ஜபத்தாலும் ஒவ்வொரு தேகத்தை அதிக்கிரமித்து மெள்ள மெள்ளப் பரப்பிரமத்திடம் சேர்வது தான் ஜபத்தின் தத்துவம். ஜப தத்துவத்திற்கு நூற்றெட்டு தேகங்கள் உண்டு. ஆயிரம் ஜபத்தால் பிரமஸ்தானமும் நூறு ஜபத்தால் இந்திர ஸ்தானமும் வரும். இருபத்திநான்கு முறை நாள்தோறும் ஜபம் செய்த சூத்திரன் பிராமண குலத்தில் பிறப்பான். ஆகையால் சூத்திரன் இப்படி உபஸ்தானம் செய்யக் கடவன், பன்னிரண்டு லக்ஷம் ஜபஞ் செய்தவன் பூரண பிராமணன் ஆகிறான். லக்ஷத்துக்குக் குறைவான காயத்ரி ஜபம் செய்தவனை வேத காரியங்களில் வைக்கக் கூடாது. அப்படி ஏழு வருஷம் நியமமாக ஜபித்து பிறகு சந்நியாச ஆஸ்ரமத்தை கைக்கொள்ளவேண்டும்.
முனிவர்களே! சந்நியாசியானவன் விடியற்காலையில் பன்னீராயிரம் முறைகள், பிரணவ மகா மந்திர ஜபம் செய்ய வேண்டும். ஒரு தினம் தவறினால் பன்னீராயிரமும் ஒரு மாதந் தவறினால் ஒன்றரை லக்ஷமும் அதிகமாக ஜபித்து, அந்தத் தோஷத்தை போக்கிக் கொள்ளவேண்டும். ஒரு மாதத்திற்கு அதிகமாக ஜபம் செய்வது தவறினால் மறுபடியும் சந்நியாசம் பெற்றுக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நரகம் சம்பவிக்கும். சாமியாக இருப்பவன், தர்மார்த்தங்களை சம்பாதிக்க வேண்டும். சந்நியாசி அவற்றை விலக்க வேண்டும். மோக்ஷ அபேøக்ஷயுடைய பிராமணன் ஞானப் பயிற்சி செய்யவேண்டும். தர்மம் செய்வதால் செல்வமும் செல்வத்தால் சுகமும் சுகத்தால் வைராக்கியமும் உண்டாகும். அதர்மத்தால் சம்பாதித்த பொருள் முதலியவற்றால் ஆசைதான் உண்டாகும். தருமமானது திரவியத்தால் சம்பாதித்தது என்றும் தேகத்தால் சம்பாதித்தது என்றும் தானம் யாகம் முதலியனவும் தேகத்தால் சம்பாதிப்பது இருவகைப்படும். திரவியத்தால் சம்பாதிப்பது புண்ணிய தீர்த்த ஸ்நானமும் புண்ணிய ÷க்ஷத்திரவாசமும் ஆகும். கிருதயுகம் முதலிய மூன்று யுகங்களில் தவஞ்செய்வதே சிறந்தது. கலியுகத்தில் தானஞ் செய்வதுதான் சிறந்தது. கிருதயுகத்தில் தியானத்தாலும் திரேதாயுகத்தில் தவத்தாலும் துவாபரயுகத்தில் யாகத்தாலும் கலியுகத்தில் விக்கிரக ஆராதனையாலும் ஞானம் உண்டாகும் என்று நூல்கள் கூறும். அவனவன் தான் செய்த புண்ணியத்திற்கு ஏற்ற பயனை அடைவான். அதர்மம் இம்சை ரூபமும் தர்மம் சுகரூபமும் ஆகும். ஆகையால் அதர்மத்தால் துக்கமும் தர்மத்தால் சுகமும் உண்டாகும். ஆகையால் சுகமும் மோக்ஷமும் சித்திப்பதற்காக எப்போதும் தர்மத்தையே சம்பாதிக்க வேண்டும். நால்வர் அடங்கிய குடும்பமுடைய பிராமணன் குடும்பத்திற்கு, நூற்றாண்டுகளுக்கு வேண்டிய ஜீவனத்திற்கு கொடுத்தவன் பிரமலோகம் அடைவான். ஆயிரஞ் சந்திராயணஞ் செய்தவனுக்குப் பிரமலோகம் வரும் என்று தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் க்ஷத்திரியன்.
ஆயிரம் குடும்பங்களை நிலைக்க வைத்தால் இந்திர லோகமடைவான். பதினான்காயிரம் குடும்பங்கட்கும் பிரதிஷ்டை செய்தால் பிரமலோகமடைவான். ஒரு மனிதன் எந்தத் தேவதையை முன்னிட்டுத் தானஞ் செய்கிறானோ அந்த லோகத்தை அடைகிறான் என்று வேதம் உணர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். திரவியம் இல்லாதவன் எப்போதும் தவஞ்செய்ய வேண்டும். தவத்தாலும் தீர்த்த யாத்திரையாலும் நாசமற்ற சுகம் உண்டாகும். பிராமணன் உபசாரத்தினாலும் ஒருவன் செய்த உபகாரத்தைக் கிரகிப்பதினாலும் யாகஞ்செய்வதனாலும் நல்ல ஆசாரத்தினாலும் கஷ்டப்படாமல் சம்பாதித்த தனத்தையும் க்ஷத்திரியன் தோள் வலிமையாலும் வைசியன், விவசாயம், வியாபாரம், கால்நடை இவற்றாலும் தேடிய பொருளையும் தானஞ் செய்வதால் சுத்தமாகிறான். யாவருக்கும் ஆசாரிய அநுக்கிரகத்தால் ஞானமும், ஞானத்தால் மோக்ஷமும் மோக்ஷத்தால் பரப்பிரம ஸ்வரூபமும் பரப்பிரமஸ்வரூபத்தால் பெருமகிழ்ச்சியும் உண்டாகும். இவை யாவும் சாது சங்கமத்தால் உண்டாகும். இல்லறத்தோன், தனதான்யங்களைத் தானஞ் செய்யவேண்டும். பழம், தானியம் வஸ்துக்கள் முதலியன உண்டாகும் காலத்தில் தன் இஷ்ட சித்திக்காக சத் பிராமணர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். தாகம், பசி, இவற்றைப் போக்கவேண்டும். ஒருவனுடைய அன்னதானத்தைப் புசித்தவன் பரப்பிரம ஸ்வரூபத்தை அறிந்த பயனில் பாதி பயனைத் தனக்குத் தானஞ் செய்வதாலும் தவஞ்செய்வதாலும் போக்கிக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நரகம் அடைவான். தன் திரவியத்தைத் தர்மம், விருத்தி ஆத்ம சுகம் இவற்றுக்காக மூன்றாகப் பிரிக்கவேண்டும். தர்மத்திற்கு வைத்த பொருளால் நித்திய நைமித்திக காமிய கர்மங்களைச் செய்யவேண்டும். விருத்தியின் பங்கால் பிறரை இம்சிக்காது பொருளை விருத்தி செய்யவேண்டும். வியாபாரத்தில் பாவமிருந்தால் அதன் லாபத்தில் பாதி ஒரு பங்கைத் தானஞ் செய்து விடவேண்டும்.
ஆன்ம சுகத்திற்கு வைத்ததைச் சிவாலயம் குருமடம் முதலியவற்றுக்கு விநியோகஞ் செய்யவேண்டும். புதையல் கண்டெடுத்த வேதியன் அதில் பாதியைத் தானஞ் செய்துவிட வேண்டும். கெட்டவனிடத்தில் வாங்கிய திரவியம் முழுவதையும் சமுத்திரத்தில் எறியவேண்டும். தன்னுடைய சுக நிமித்தமாக வலிய அழைத்துத் தானஞ் செய்யவேண்டும். ஒருவன் கேட்ட திரவியத்தை தானஞ் செய்யாதவன், கடன் பட்டவனாகிறான். ஒருவன் செய்த பாவத்தைப் பார்த்திருந்தாலும் கேட்டிருந்தாலும் புத்தியுடையவனாகிப் பிறரிடம் சொல்லக்கூடாது. ஐஸ்வரிய விருத்திக்காகச் சந்தியா காலங்களில் அக்கினி காரியஞ் செய்வது அவசியம், அசக்தனாயின் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யலாம். அது தான்யம், நெய், பழங்கள், கிழங்கு, அவிசு ஆகியவற்றுடன் செய்ய வேண்டும். அவிசு செய்ய இயலாவிட்டால் ஓமம் மாத்திரம் விதிப்படிச் செய்யலாம். அக்கினி சந்தானமாவது அதற்கும் இயலாவிட்டால் ஜபம் மட்டுமாவது சூரிய நமஸ்காரமாவது, நாள்தோறும் செய்ய வேண்டும். பரப்பிரமத்தை அறிய விரும்பியவன் மேலே சொன்னாவாறு செய்யவேண்டும். நித்தியமாகப் பிரமயக்ஞம் தேவதார்ச்சனை, அக்கினி பூஜை, குருபூஜை பிராமண திருப்தி இவற்றைச் செய்து வந்தவர்கள் சுவர்க்கத்தில் வாழ்வோர்களாவார்கள்.
12. பஞ்சயக்ஞமும் வார பூஜையும்
முனிவர்கள் சூதமுனிவரை நோக்கி சுவாமி! அக்கினி யக்ஞத்தையும், தேவ யக்ஞத்தையும் பிரம யக்ஞத்தையும் குரு பூஜையையும் பிராமண திருப்தியையும் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். சூதமுனிவர் சொல்லத் துவங்கினார். அக்கினி யக்ஞம் என்பது திரவியங்களை அக்கினியில் ஓமம் செய்வதாகும். பிரமயக்ஞம் என்பது பிரமச்சரிய ஆஸ்ரமத்திலிருப்பவர்களுக்குச் சமிதாதானம் செய்வது பிரமச்சாரி விரதம் முதல் விசேஷ யாகங்களைச் செய்வது பிரமச்சாரிகளுக்கு, அவுபாசனம் என்று பிராமணர்கள் சொல்லுகிறார்கள். வானப் பிரஸ்தர்களும், சந்நியாசிகளும் பரிசுத்தமான அன்னத்தை புசிப்பதே ஹோமம் என்று வேதவித்துக்கள் சொல்லுகிறார்கள். அவுபாசனம் அக்கினி ஸ்தானம் இவற்றைச் செய்ய ஆரம்பித்து நன்றாக ரக்ஷித்துக் கொள்ளவேண்டும். அக்கினி குண்டத்திலாவது பாத்திரத்திலாவது வைத்திருக்கும் அக்கினியை அஜஸ்ரம் என்று சொல்வார்கள். அரசன் உபத்திரத்தாலாவது தெய்வத்தால் தனக்கு நேர்ந்த ரோகத்தாலாவது அக்கினிக்கு விக்கினம் வராமல் தன்னிடத்திலாவது, விறகிலாவது வைத்துக்கொண்ட அக்கினி, ஸமாரோபிதம், எனப்படும். வேதியரில் உயர்ந்தவர்களே! சாயங்காலத்தில் அக்கினியில் ஓமம் செய்வது சம்பத்தையும் காலையில் சூரியனுக்கு ஆகுதி செய்வது தீர்க்காயுளையும் கொடுக்கும். பிராதக் காலத்திலே செய்யும் யக்ஞத்தைச் சூரிய யக்ஞம் என்று சொல்ல வேண்டியிருக்க அக்கினியக்ஞம் என்று ஏன் சொல்லப்படுகிறதென்றால், பகலில் அக்கினியின் காந்தியில்லாமல் சூரியனிடம் போய்விடுவதால், சூரியனுக்குச் செய்வதே அக்கினிக்குச் செய்வது போலாவதாலும் அக்கினியக்ஞம் என்று சொல்லப்படுகிறது. இந்திரன் முதலிய சகல தேவர்களையும் உத்தேசித்து அக்கினியில் சமித்து முதலியவற்றை ஹோமஞ் செய்வதும் ஸ்தாலீபாகம் முதலிய யக்ஞங்களும் தேவயக்ஞம் எனப்படும். கர்ப்பாதானம் முதலியவற்றையும் அவுபாசனம் போலவே கொள்ளவேண்டும். பிராமணன் தேவர்களுக்குத் திருப்தியுண்டாக்குவதற்காக அடிக்கடிப் பிரம்ம யக்ஞம் செய்யவேண்டும். வேத அத்தியயனமே பிரம்ம யக்ஞமாகும். நாள்தோறும் நித்தியகர்மம் முடிந்த பிறகு மாலை வரையில் பிரம யக்ஞம் செய்ய வேண்டும். அதற்கு மேம்பட்டுப் பிரமயக்ஞம் செய்ய விதியில்லை சகல உலகங்களுக்கும் பிரபுவும் எல்லாம் அறிந்தவரும் பரமதயாளருமாகிய மகாதேவன். சகல லோகங்களுக்கும் உபகாரமாக வாரங்களை உண்டு செய்தார்.
சம்சார ரோக வைத்தியராகிய அந்தப் பகவான் சம்சார ரோகத்திற்கு அவுஷதம் போன்ற தன் தினத்தையும், தனது சம்பத்தை உண்டு செய்யும் தினத்தையும் உலகங்களுக்கு இதஞ் செய்ய விரும்பி விஷ்ணுமூர்த்தியின் தினத்தையும் சம்பத்து, ஆயுள் முதலியன விருத்தியாகும்படி உலகங்களைப் படைத்த பிரமனுடைய தினத்தையும் மூன்று உலகங்களும் விருத்தி யாவதற்காகச் செய்த புண்ணிய அதிகாரிகளான இந்திரன், யமன் இவர்கள் சுகத்தைக் கொடுப்பதாயும் மிருத்யுவை நாசஞ் செய்வதாகவும் இருக்கிற தினத்தையும் உண்டாக்கி சுகம், துக்கம் இவற்றைச் பிரகாசிக்கச் செய்பவர்களாக இருக்கிற சூரியன் முதலானவர்களை அந்தந்த வாரங்களுக்கு அதிபதிகளாகச் செய்தார்கள். ஆகையால், அந்தந்த வாரங்களில் அந்தந்த அதிபர்களைப் பூஜித்து அந்தந்தப் பயவை அடைய வேண்டும். சுகம், சம்பத்து, வியாதி, நிவாரணம், புஷ்டி, ஆயுள், போகம், மிருத்யுவன்மை இத்தகைய பயன்களைக் கொடுக்கும். வரா பயன்களை அறிந்து பூஜிக்க வேண்டும். வெகு தேவர்களைப் பூஜித்தாலும் சிவபெருமானே அந்தப் பயனையெல்லாம் கொடுப்பார். தேவர்களுக்குத் திருப்தி உண்டாக்குவதற்காகப் பூஜையில் மந்திரம், ஜெபம், ஓமம், தானம் தவம் என்று ஐந்து வகைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அக்கினி ஹோத்திரம் முதலியவற்றைச் செய்த பூமியிலும் பிரதி பிம்பத்திலும் பிராமண சரீரத்துக்கு ÷ஷாடச உபசாரங்களைச் செய்ய வேண்டும். இந்த உபசாரங்களைவிட கண்வலி, தலைவலி, குஷ்டம் முதலிய ரோகங்கள் ஒழிவதற்காக முதலில் சூரிய பூஜை செய்து பிறகு பிராமண போஜனம் செய்விக்க வேண்டும். நாள்தோறும் மாலைப் பொழுதில் பிராமண போஜனம் ஒரு வருஷமாவது, மூன்று வருஷமாவது செய்விக்க வேண்டும். சமாராதனையைச் சிறப்பாகச் செய்து வந்தால், ரோகம் கிழத்தன்மை ஒழிந்துவிடும். இஷ்ட தேவதைகளுக்கு ஜபம் முதலியவற்றைச் செய்தால், கீழே சொல்லப்படும் வார பூஜையால் விசேஷமான பயன்கள் உண்டாகும்.
முனிவர்களே! ஞாயிற்றுக்கிழமையில் (ஆதிவாரத்தில்) விசேஷ பயனுடைய பொருளை சூரியனுக்கும் தேவர்களுக்கும் பிராமணர்களுக்கும் கொடுப்பதால் பாவம் ஒழியும். திங்கட்கிழமையில் (சோம வாரத்தில்) மஹாலக்ஷ்மியை பூஜித்தால் சம்பத்துண்டாகும். தம்பதிகளான அந்தணர்களுக்கு நெய்யோடு கூடிய அறுசுவை பொருந்திய அன்னத்தாலும் திருப்தி செய்ய வேண்டும். செவ்வாய்க் கிழமையில் (மங்கள வாரத்தில்) கால்யர் முதலானவர்களைப் பூஜித்தால் ரோகம் ஒழியும், பிராமணர்களை வடை, தோசை முதலியவற்றுடன் கூடிய சிறப்பான பக்ஷ்ய போஜ்யங்களால் உண்பித்துத் திருப்தியடையச் செய்யவேண்டும். புதன்கிழமையில் (புத வாரத்தில்) விஷ்ணுமூர்த்திக்கும் தயிர் சேர்த்த அன்னத்தை நிவேதனம் செய்தவனுக்கு புத்திரன், நண்பன், மனைவி முதலியவர்களோடு செல்வம் மிக்க வாழ்வு உண்டாகும். ஆயுளை விரும்பியவன், வியாழக்கிழமையில் (குரு வாரத்தில்) புஷ்டியுண்டாக, சகல தேவர்களுக்கும் உபவீதம் வஸ்திரம் இவற்றைத் தரிவித்துத் திருப்தி செய்து பால் நெய் முதலியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். சுகத்தை அபேக்ஷித்தவன் வெள்ளிக்கிழமையில் (சுக்கிர வாரத்தில்) மந்திர ஜபமும் தியானமும் செய்ய வேண்டும். பிராமணர்களுக்கு அன்னமளித்து பிராமணப் பெண்களுக்கு வஸ்திர தானம் முதலியவற்றைச் செய்யவேண்டும். அபமிருத்யுவை ஒழிக்கச் சனிக்கிழமையில் (சனி வாரத்தில்) உருத்திராதி தேவர்களைப் பூஜித்து, திலதானமும் திலான்னமும் பிராமணருக்குக் கொடுக்க வேண்டும். இவ்வாறு வார பூஜை செய்து, ஆரோக்கியம் முதலியவற்றையடையலாம். திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம் இவற்றில் எதிலாவது எந்தத் தேவரையாவாவது பூஜித்தாலும், அது சிவப்ரீதியே ஆகும் அது எவ்வாறு என்றால், சிவபெருமானே அந்தந்த தேவதா ஸ்வரூபமுடையவனாக இருந்து, அவற்றைப் பெற்று அவ்வவ்வபீஷ்டங்களைக் கொடுப்பார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கருமத்தைத் துவங்கிய ஒருவன் அதற்கு விக்கினம் வராதபடி ஆதித்தன் முதலான கிரகங்களைப் பூஜிக்க வேண்டும். ஆகையால் தேவ பூஜையே சர்வாபீஷ்டங்களையும் கொடுக்க வல்லது. விசேஷபயனை விரும்புவோர், ஏழு வாரங்களிலும் அவரவர் சக்திக்குத் தக்கவாறு பூஜிக்கவேண்டும். தரித்திரன் தேவர்களுக்குத் தவத்தாலும் செல்வந்தன் திரவியத்தாலும் பூஜிக்கலாம். தனவந்தன் சுகமடைவதற்காக, சிரத்தையுடன் அடிக்கடி தர்மஞ்செய்தால், பெரும்போகத்தை அனுபவிப்பான். மரங்களை வைத்து நிழலையும் தடாகங்களை வெட்டி நீரையும் உண்டு செய்து அப்பூஸ்தி விளைகள் கால்நடைகள் முதலியவற்றைச் சற்குண பிராமணருக்குத் தானஞ் செய்ய வேண்டும். காலத்தாலும் புண்ணியத்தாலுமே ஞானமுண்டாகும். இந்த அத்தியாயத்தைப் படித்தவனும், பிறருக்குச் சொன்னவனும், பிறர் படிக்கக்கேட்டவனும் பிறரைக் கேட்கச் செய்தவனும் சிவபெருமானின் திருவருளிற்குப் பாத்திரராவார்கள்.
13. தானதேச காலங்கள்
சூதமுனிவரே! தானம் செய்வதற்குத் தேசம் காலம் முதலியவற்றைக் கிரமமாகச் சொல்ல வேண்டும் என்று முனிவர்கள் கேட்கவே சூதமுனிவர் கூறலானார்.
தேவயாகம் முதலியவற்றைப் புனிதமான இடத்தில் செய்தால் நற்பயன்கள் உண்டாகும். பசுவின் தொழுவத்தில் செய்தால் அதைவிடப் பத்துப் பங்கும் ஜலக்கரையில் செய்தால் அதிலும் பத்து பங்கும், வில்வமரத்தடி துளசி மரத்துக்கு அருகில் அல்லது அரச மரவேர் இவற்றின் அருகே செய்தால் அதிலும் பத்துப் பங்கும் நதிக்கரையில் அதிலும் பத்துப் பங்கும் அதிகமாக ஒன்றிற்கொன்று ஏற்றமான பயனைக் கொடுக்கும். கங்கை, கோதாவரி, காவிரி, தாமிரபருணி, ஸிந்து சரயூ நர்மதை, யமுனை முதலிய நதிகளே சப்தகங்கை என்று சொல்லப்படும். இந்த சப்த கங்கையைவிட ஸமுத்திரக்கரை பத்துப்பங்கு பயனைக் கொடுக்கும், மனதிற்குப் பிரியமான இடமே யாகம், தானம் பூஜை ஆகியவற்றைச் செய்வதற்குத் தகுதியான இடமாகும். கிரேதாயுகத்தில் முழுப்பயனும் திரேதாயுகத்தில் முக்காற்பயனும் துவாபரயுகத்தில் அரைப்பயனும் கலியுகத்தில் காற்பயனும் கலியின் இடையில் அரைக்காற்பயனும் உண்டாகும். சுத்தமான மனமுடையவனுக்குச் சுத்தமான தினமாக இருந்தால் சரியான பயனுண்டாகும் சூரியக்கிரணம் அதில் பத்துப்பங்கும், துலாலக்கின, மேஷ லக்கின சங்கரமணம் அதில் பத்துப்பங்கும் கடக லக்கின சங்கரமணம் அதில் பத்துப்பங்கும் மகர லக்கின சங்கரமணம் அதில் பத்துப்பங்கும் சந்திரக்கிரகணம் அதில் பத்துப்பங்கும் அதிகமான பயனைக் கொடுக்கும் தினங்களாகும். சூரியக்கிரகணம் பூரணமான பயனைக் கொடுக்கும் தினமாகும். உலக ரூபமான சூரியனுக்குக் கிரகணம் உண்டாகும் போது உலகுக்கு ரோகம் உண்டாகும். ஆகையால் அந்த ரோகத்தைப் போக்குவதற்காக, ஸ்நானம், தானம், ஜபம் இவற்றைச் செய்யவேண்டும். ரோகத்தைப் போக்கும் காலமாகையால் அதனைப் புண்ணிய காலம் என்று சொல்லுவார்கள். தபோ நிஷ்டை, ஞான நிஷ்டை, ஞான நிஷ்டையுடைய யோகியர்களும் பூஜா யோகியர்களும் பாவங்களை ஒழிக்க வல்லவர்களாவார்கள். இருபத்து நான்கு லக்ஷம் காயத்திரி ஜபம் செய்த வேதியன், சம்பூரண பயனைக் கொடுக்கக்கூடிய தகுதியுடையவனாகிறான். பாத்திரம் என்பது நரகத்திலிருந்து காப்பாற்றுவது பொருள். கொடுப்பவனுடைய பாவத்திலிருந்து அவனை ரக்ஷிப்பதாலும் பாத்திரம் என்ற பெயர் வழங்கும் தன்னை ஸ்மரிப்பவனை நரகத்திலிருந்து காப்பாற்றுவதால் காயத்திரி அப்பெயரைப் பெற்றது. எவ்வாறு தரித்திரன் உலகத்தில் ஒருவனுக்கும் ஒருபொருளைக் கொடானோ எப்படித் தனவந்தன் பொருள் கொடுப்பானோ, அதுபோலவே பரிசுத்தனாகிய பிராமணன் இதரர்களை ரக்ஷிக்கும் யோக்கியமுடையவனாவான்.
ஆகையால், காயத்திரி ஜபத்தால் தூய்மையாக இருப்பவனே, தான பாத்திரனாகவுள்ளவன் என்று தெரிந்துகொள்ள வேண்டும். தானம், ஜபம், ஓமம், பூஜை முதலிய எல்லாக் காரியங்களிலும் பாவத்திலிருந்து ரக்ஷிப்பதிலும் காயத்திரி ஜபத்தால் பரிசுத்தமான பிராமணனே பாத்திரனாகிறான். பசியுடையவனே அன்னம் புசிக்கப் பாத்திரன் எப்போதும் தவநிஷ்டையுடைய சிறந்த அந்தணனை அழைத்துத் தன் அபீஷ்டங்கள் நிறைவேறவும் நல்ல விஷயங்கள் போதிக்கப் பெறவும் விரும்பித் தானஞ் செய்கிறானோ, அப்போது அந்தத் தானம் சம்பூரண பயனைக் கொடுக்கும் என்று சொல்கிறார்கள். ஒருவன் கேட்ட பொருளைத் தானம் செய்வதால் அரைப்பங்கு பயன் உண்டாகும். தன் ஊழிக்காரனுக்குக் கொடுப்பதால் காற்பங்கு பயன் உண்டாகும். பிறப்பால் வேதியனாகி ஏழையாக இருப்பவனுக்குத் தானஞ்செய்தவன் பூவுலகில் பத்தாண்டுகளும் வேதவித்தாக இருப்பவனுக்குத் தானஞ்செய்தவன் சுவர்க்கத்தில் பத்தாண்டுகளுக்கும் காயத்திரி ஜபம் செய்தவனுக்கு தானஞ்செய்தவன் சத்தியலோகத்தில் பத்தாண்டுகளும் விஷ்ணு பக்தனுக்குத் தானம் கொடுத்தவன் வைகுண்டத்திலும் சிவ பக்தனுக்குத் தானம் கொடுத்தவன் கைலாயத்திலும் சுகத்தை அனுபவித்து வாழ்வார்கள். ஆகையால் அந்தந்த உலக இன்பங்களையடைய வேண்டி, அந்தந்தத் தானங்களைச் செய்ய வேண்டும். சன்மானம், ஆஹ்வானம் அப்யங்கனம், பாதசேவை, வஸ்திரம் கந்தம் முதலியவற்றால் பூஜை நெய்யாற்செய்த பக்ஷ்யபோஜ்யங்கள் ஷட்ரஸோ பேதமான அன்னம் (அறுசுவை உணவு) சாகாதிகள் தக்ஷணையுடன் கூடிய தாம்பூலம், நமஸ்காரம், பின்சென்று வழி விடுதல், சுவர்ணதானம் இவை தசாங்கம் எனப்படும். இந்தத் தசாங்கத்துடன் கூடிய அன்னத்தை ஞாயிற்றுக்கிழமையில் கொடுத்தவன் மறு ஜனனத்தில் பத்து வருஷங்களும், பத்து வேதியர்களுக்குக் கொடுத்தவன் நூறாண்டுகளும் ஆரோக்கிய மடைவார்கள். வித்தையை விரும்புவோன் இளவயதுடைய பிராமணனைப் பிரமனாகப் பாவித்தும் புத்திர பாக்கியத்தை விரும்புவோன் யௌவன வயதுடைய பிராமணனை விஷ்ணுவாகப் பாவித்தும், ஞானத்தை விரும்புவோன் விருத்தாப்பிய பிராமணனை உருத்திரனாகப் பாவித்தும் தானஞ்செய்ய வேண்டும். புத்தியை விரும்புகிறவன் வேதிய கன்னிகையைச் சரஸ்வதியாகப் பாவித்தும் போகத்தை விரும்புகிறவன் யவ்வன மங்கையை லக்ஷ்மியாகப் பாவித்தும் ஆன்மஞானத்தை விரும்புவோன் விருத்த சுமங்கலியைப் பார்வதியாகப் பாவித்தும் தானஞ்செய்ய வேண்டும். தான் தேடிய பொருளும் யாசகம் செய்த பொருளும் குருதக்ஷிணை கொடுத்து மீதமாகிய பொருளும் பரிசுத்தமானவை. அவற்றைத் தானம் செய்வதால் பூரண பயனுண்டாகும். வேதியனிடத்தில் பெற்ற திரவியம் மத்திமமானது. சேவகம், வியாபாரம் ஆகிய வழிகளில் தேடிய திரவியம் அதமம் என்று பிராமணர்கள் அறிந்துகொள்ள வேண்டும். க்ஷத்திரியர் சவுரியத்தாலும் வைசியர் வர்த்தகத்தாலும் சூத்திரர்கள் கூலியினாலும், தர்மத்தை விரும்பிய ஸ்திரீகள் பிதுர் சம்பந்தம் கணவன் சம்பந்தமாக வந்த பொருள்கள் இவை உத்தமப் பொருள்களாகும்.
கோதானம், பூதானம், திலதானம், சுவர்ணதானம், நெய்தானம், வஸ்திரதானம், தானியதானம், வெல்லதானம், வெள்ளிதானம், உப்புத்தானம், பூசணிக்காய்தானம், கன்னிகாதானம் என்ற பன்னிரண்டு தானங்களும் சித்திரை முதலிய பன்னிரண்டு மாதங்களில் வெவ்வேறாக முறையாகவந்து புண்ணிய காலங்களில் ஒருமிக்கவாவதுத் தத்தமது விருப்பப்படித் தானஞ் செய்ய வேண்டும். கோதானத்தில் சாணம் முதலிய பஞ்சகவ்வியங்கள் இருப்பதால் தன தானியங்களுக்காகச் செய்த பாவங்கள் ஒழியும். கோமூத்திரத்தால் நீரில் செய்த பாவமும் நெய்யால் உண்டான பாவமும் ஒழியும், பால், தயிர், நெய் இவற்றைத் தானஞ் செய்தல் மனம், வாக்கு காயங்களாற் செய்த பாவங்கள் ஒழிந்து தேகபுஷ்டி உண்டாகும். பூதானத்தால் பூலோகத்திலும் பரலோகத்திலும் கீர்த்தியுண்டாகும். திலதானத்தால் பலமும் மரண நிவாரணமும், சுவர்ணத் தானத்தால் ஜடராக்னி வீரிய விருத்தியும், நெய்யால் புஷ்டியும் வஸ்திரதானத்தால் ஆயுள் விருத்தியும் தானியதானத்தால் அன்னசமுர்த்தியும் வெல்லதானத்தால் மதுரமான பதார்த்த போஜனமும் வெள்ளிதானத்தால் ரேதஸ் விருத்தியும் உப்புதானத்தால் அறுசுவை பேத உணவும், பூசுணை தானத்தால் சகல லோகங்களும் தேகபுஷ்டியும் இகலோகத்திலும் பரலோகத்திலும் இஷ்டசித்தியும் கன்னிகாதானத்தால் ஜன்மங்கடைத்தேறுதலும் சகல ஜன்மங்களிலும் செய்த பாவ நிவாரணமும் உண்டாகும். பலா, மா, விளா, வாழை இவற்றின் பழங்கள், கந்த மூலங்கள், உளுந்து முதலிய பருப்புகள், காய்கனிகள், கடுகு முதலிய உபகரணங்கள் இவற்றில் எந்தப் பருவத்தில் எது கிடைக்குமோ அந்த ருதுவில் அந்தப் பதார்த்தத்தைத் தானஞ்செய்ய வேண்டும். சுரோத்திராதி இந்திரியங்கள் திருப்தியடையும்படி கீதம், வாத்தியம் முதலியவற்றைக் கொண்டு செய்தவன். தன் இந்திரியங்கள் களிப்பெய்ய வாழ்வான். வேத சாஸ்திரங்களை ஆசாரியனால் உணர்ந்து கர்மங்களைச் செய்வதால் பயன் உண்டாகும் என்று எண்ணுவது ஆஸ்திக்யம் பந்துக்களுக்கும் அரசனுக்கும் பயந்து காரியங்களைச் செய்வது சிரத்தை. ஆஸ்திக்யத்தைவிட குறைந்தது. தரித்திரனாக இருப்பவன், வாக்கினாலும் செயலாலும் யாகஞ் செய்யவேண்டும். மந்திரம் ஸ்தோத்திரம், ஜபம், முதலியன வாசியாகமாகும். தீர்த்த யாத்திரை, விரதம் முதலியன காயிகயாகமாகும். எந்த உபாயத்தாலாவது சிறிதளவேனும் சிவப்பிரீதியாகச் செய்த காரியம் சுகத்தைக் கொடுக்கும் தவம், தானம் இரண்டுமே செய்யத்தக்கவையாகும். பொன் முதலியவற்றை ஈஸ்வரார்ப்பணமாக தானஞ்செய்தால் மோக்ஷம் உண்டாகி, மீண்டும் உயர்ந்த பதவியை அடையலாம். இந்த அத்தியாயத்தை வாசித்தவர்கள் தர்மபுத்தியும் ஞான சித்தியையும் அடைவார்கள்.
14. பார்த்திவ லிங்க பூஜை
முனிவர்களே! இதுவரை நீங்கள் கேட்டவையும் நான் சொன்னவையும் மிக நல்ல விஷயங்களாகும். இனி தாங்கள் கேட்க விரும்புவது என்ன? என்று சூதமுனிவர் கேட்க, முனிவர்கள், விருப்பங்கள் யாவற்றையும் கொடுக்கவல்ல பார்த்திவலிங்க பூஜாவிதானத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள். சூதமாமுனிவர் கூறலானார். முனிவர்களே! சகல பாக்கியங்களையும் கொடுக்கவல்லதும் கேட்டவுடனேயே அகால மிருத்யுவையும் காலமிருத்யுவையும் ஒழிப்பதும் தனகனகாதி வஸ்துக்களையும் உணவு வகைகளையும் வஸ்திராதிகளையும் கொடுக்கவல்லதுமாகிய பார்த்திவலிங்க பூஜையைப் பற்றி மனப்பூர்வமாகச் சொல்லுகிறேன் கேட்பீர்களாக.
பார்த்திவலிங்கப் பிரதிமாதிகளைப் பூஜிப்பது பூலோகத்தில் சகல பீஷ்டங்களையும் கொடுக்கும். அது ஆடவராலும் பெண்டிராலும் செய்யத்தக்கது. அது நதி, தடாகம், கூவம் முதலியவற்றிலுள்ள மண்ணை எடுத்து வந்து பரிசோதித்துக் கந்தம் முதலியவற்றைக் கூட்டிப் பிசைந்து பாலைக் கூட்டி, அங்கப்பிரத்யங்கங்களுடன் ஆயுத சகிதமாக விளங்கச் செய்து, பதுமாசனத்தில் நிறுத்தி, ஆசையோடு பூஜை செய்ய வேண்டியதாகும். அவையாவையெனில், விநாயகன், சூரியன், திருமால், உமாதேவி சிவபெருமான் இவர்களை இவ்வாறு பூஜிக்க வேண்டும். சிவபெருமானையாவது சிவலிங்கத்தையாவது இஷ்ட சித்திக்காக பக்தி பூர்வமாகப் பூஜிக்கவேண்டும். முதலில் நீரைப் புஷ்பத்தால் எடுத்து புரோக்ஷித்து, மந்திர பூர்வமாக அபிஷேகித்து சாலியன்னத்தால் நிவேதனம் செய்ய வேண்டும். இவையாவும் குடவமானத்தால், செய்யத்தக்கது. குடவமானமாவது, மனுஷ விஷயத்தில் ஒரு பிரஸ்தாபமும் தேவபூஜையில் மூன்று பிரஸ்தங்களும், ஈஸ்வர பூஜையில் ஐந்துப் பிரஸ்தமும் கொண்டு செய்தால் பூரண பயனுண்டாகும். ஆறு பிரஸ்தங்களைக் கொண்டு செய்தாலும் சிறப்பான பயனுண்டாகும். ஆயிரம் பிரஸ்தங்களால் அர்ச்சித்தால், சிவபெருமான் சத்தியமாகச் சத்தியலோகத்தைக் கொடுப்பார். ஜலம், தைலம், கந்தம் முதலியவற்றை மானுஷ ரிஷிசம்பந்தமும் சுவயம்புவுமாக உள்ள சிவலிங்க பூஜையில் அளவு கொண்டு செய்யும் பூஜை மஹாபூஜை எனப்படும். அபிஷேகத்தால் ஆன்மசுத்தியும் கந்தத்தால் புண்ணியமும் நிவேதனத்தால் ஆயுளும் திருப்தியும் தூபத்தால் திரவியமும், தீபத்தால் ஞானமும் தாம்பூலத்தால் போகமும் உண்டாகும். ஆகையால் இவை ஆறையும் மிகவும் முயற்சியுடன் செய்யவேண்டும். நமஸ்காரமும் ஜபமும் சகல அபீஷ்டங்களையும் கொடுக்கும். ஆகையால் பூஜை முடிந்த பிறகு போக மோக்ஷங்களை இச்சிப்பவர்கள் எப்போதும் செய்யவேண்டும். எப்போதுமே முதலாவதாக மனதால் பூஜித்து பிறகே பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு தேவ பூஜை செய்வதால் அந்தந்தத் தேவருலகங்களை அடையலாம்.
முனிவர்களே! ஆவணி புரட்டாசி மாதத்து சுக்கில பக்ஷத்துச் சதுர்த்தசியில் சுக்கிரவாரத்திலும், மார்கழி மாத சதபிஷநட்சத்திரத்திலும் கணேசரை விதிப்படிப் பூஜித்தால் பூவுலகில் சகல பாக்கியங்களையும் அடையலாம். தேவர்களிடமும் அக்கினியிடமும் எப்போதும் மானுடர் விருப்பத்தைக் கொடுத்து, எல்லாப் பாவங்களையும் ஒழித்து ஆன்மசக்தி உண்டு செய்யும் சிவபெருமான் முதலியோரின் பூஜையைச் சிரத்தையோடு செய்யவேண்டும். திதி, நட்சத்திர யோகங்கள் விரத காலத்தில் சம்பூரணமாக இருக்கவேண்டும் என்பது உசிதம். பூஜை என்றால் மோக்ஷ சுகத்தை உண்டாக்குவது என்று பொருள். அந்தப் பூஜை நித்தியம் நைமித்திகம் காமியம் என்று மூவகைப்படும். நித்தியம் பக்ஷம் மாசம், ஆண்டுகளாகச் செய்த பூஜையால் பாபக்ஷயமும், இஷ்டசித்தியும் உண்டாகும். கணபதி பூஜையைக் கிருஷ்ணபக்ஷத்துச் சதுர்த்தசியில் செய்தால், அந்தப் பக்ஷத்தில் செய்த பாவங்கள் நீங்கிப் பயன்கள் உண்டாகும். சித்திரை மாதச் சதுர்த்தியில் செய்த பூஜையால் ஒரு மாத பயனும் ஆவணி மாத சுக்கிலபக்ஷ சதுர்த்தியில் செய்த பூஜையால் ஓராண்டுப் பயனும் உண்டாகும். ஆவணி மாதத்துச் சப்தமி ஹஸ்தம், ஆதிவாரங்களிலும் சூரியனைப் பூஜிக்கவேண்டும். ஆனி மாதத்தில் புதவாரம் துவாதசி, திருவோணம் இவற்றில் இஷ்ட சம்பத்துக்களை விரும்பி விஷ்ணுமூர்த்தியைப் பூஜிக்கவேண்டும். அவ்வாறு செய்தால் கோதானம் முதலிய துவாதச தானஞ் செய்த பயனுண்டாகும். துவாதசி திதியில் விஷ்ணுவைக் குறித்து பன்னிரண்டு பிராமணர்களுக்குப் போஜனம் செய்வித்தால் சகல போகங்களும் உண்டாகும். இவ்வாறே எல்லாத் தேவர்களையும் பூஜித்தால் அந்தந்தத் தேவர்கள் பயனளிப்பார்கள். ஆடிமாத நவமி மிருகசீரிஷம் சோமவாரம் இவற்றிலும், ஐப்பசி மாத சுக்கிலபக்ஷ நவமியிலும், பார்வதிதேவியைப் பூஜித்தால் சகல போகங்களும் உண்டாகும். கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி ஆதிவாரங்களிலும் ஆருத்ரா நட்சத்திரத்திலும் சூரியன் ஆருத்திராவில் பிரவேசித்த போதும் செய்யும் சிவபூஜை சிறப்பான பயனைத்தரும். மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி (சிவராத்திரி) சகல அபீஷ்டங்களையும் கொடுத்து, அபமிருத்யுவை ஒழித்து, ஆயுளை விருத்திசெய்யும். ஆனி மாதத்தில் சூரியன் ஆருத்திராவில் பிரவேசித்தபொழுதும் சதுர்த்தசியிலும் மார்கழி மாத ஆருத்திராவிலும் ÷ஷாடச உபசாரங்களுடன் சிவபெருமானை விக்கிரகத்திலாவது லிங்கத்திலாவது பூஜை செய்தால் போக மோக்ஷங்கள் உண்டாகும். கார்த்திகை மாதம் வந்தவுடன் சகல தேவர்களையும் தானத்தாலும் தவத்தாலும் ஓமத்தாலும் ஜபத்தாலும் நியமத்தாலும் ÷ஷாடச உபசாரத்தாலும் பூஜித்து பிராமண சந்தர்ப்பணம் முடித்தால் காமக்குரோதாதிகளால் உண்டான பீடைகள் ஒழியும் கார்த்திகை மாத ஆதிவாரங்களில் சூரியனைப் பூஜித்து, தைலம், பருத்தி, ஆடை, பால் முதலியவற்றைத் தானஞ் செய்தால், குஷ்டரோகமும் க்ஷயரோகமும் ஒழியும். தீபமும் கடுகும் தானம் செய்தால் மூர்ச்சை ரோகம் ஒழியும். கார்த்திகை மாத சோம வாரங்களில் பூஜித்தால் தரித்திரம் ஒழிந்து சம்பத்து உண்டாகும்.
பிராமணர்களுக்கு வீடு, பூமி முதலியவற்றைத் தானம் செய்தாலும் கார்த்திகை மாதத்தில் மங்களவாரத்தில் குமாரஸ்வாமி ப்ரீதியாகப் பூஜை செய்து தீபம் மணி முதலியவற்றைத் தானம் செய்தால் வாக்கு சுத்தியாகும். கிருத்திகை நட்சத்திரத்துடன் கூடிய புதவாரத்தில் விஷ்ணுவைப் பூஜித்தாலும் தயிர் சாதம் தானஞ் செய்வதாலும் நல்ல பிள்ளைப்பேறு உண்டாகும். கிருத்திகையுடன் கூடிய குருவாரத்தில் பிரமஸ்வரூபமான பிராமணரைத் தனம் முதலியவற்றால் பூஜித்தாலும், தேன், பொன், நெய் இவற்றைத் தானஞ் செய்வதாலும் போகங்கள் விருத்தியாகும். கிருத்திகை நட்சத்திர சம்பந்தமுடைய சுக்கிர வாரத்தில் கணேச பூஜை செய்வதாலும் கந்தம், புஷ்பம், அன்னம் இவற்றைத் தானஞ் செய்வதாலும் சகல போகங்களும் உண்டாகும். இந்தப் பூஜையை மலடியே செய்தாலும் மகப்பேறு அடைவாள். கிருத்திகை சம்பந்தமுடைய சனி வாரத்தில் அஷ்டதிக் பாலர்களையும் அஷ்டதிக்கஜங்களையும் சிவபெருமானையும், விஷ்ணுவையும், பிரமதேவனையும் அசுவினி தேவர்களையும் தன்வந்திரியையும் பூஜிப்பதாலும் இலவணம், இரும்பு, எண்ணெய், உளுந்து, சுக்கு, திப்பிலி, மிளகு, பழங்கள், கந்தம், நீர் இவற்றைத் தானஞ் செய்வதாலும் ரோகம் அபமிருத்யு முதலியன விலகும். பால் முதலிய திரவப் பொருள்களை ஒரு பிரஸ்தாபமாகத் தானஞ் செய்யவேண்டும். தானியம் முதலிய திடபதார்த்தங்களை ஒரு மரக்காலாக அளந்து தானஞ் செய்யவேண்டும். தனுர்மாதத்தில் உஷத்காலத்தில் சிவபெருமான் முதலிய சகல தேவர்களையும் பூஜிப்பதால், சுவர்க்க பதவியும் சகல காரிய சித்தியும் உண்டாகும். புனிதமான சாலியன்னத் தை நிவேதனம் செய்தால் நல்ல புண்ணியம் உண்டு. சித்திரான்னம், திலான்னம் உளுந்து சேர்த்து அன்னம், சர்க்கரை சேர்த்த அன்னம் போன்ற பலவகை அன்னங்களை நிவேதிப்பது உசிதம். அவ்வாறு நிவேதித்து அந்தணர்க்கு அளித்தவன் இஷ்ட சித்தியையும் பராபக்ஷம், ஆரோக்கியம் தர்மம் முதலியவற்றையடைவான். மார்கழி மாதத்தில் அன்ன தானம் செய்தவனுக்கு ஞானம் உண்டாகும். சக்தியில்லாதவன், மார்கழி மாதத்தில் மூன்று நாட்களாவது விடியற்காலத்தில் தேவாராதனை செய்தால் சகல சம்பத்துக்களையும் அடைவான். தனுர் மாதத்தில் பூஜிக்காதவனுக்கு ஒரு பயனுமில்லை. தனுர் மாதத்தில் காலை ஆறு நாழிகைக்குள்ளாகப் பூஜை செய்யவேண்டும். தனுர் மாதத்தில் ஆகாரத்தை விலக்கி, ஜிதேந்திரியனாக மத்தியான்னம் இரண்டு ஜாமம் வரையிலும் வேதமாதாவாகிய காயத்திரியையும் இரவில் நித்திரை வரும் வரையில் பஞ்சாக்ஷர மந்திரத்தையும் ஜபஞ்செய்தவன், ஞானம் பெற்றுத் தேகாந்தத்தில் முக்தியை அடைவான். பிராமண ரல்லாத இதர ஆடவர் பெண்டிர்கள் மந்திர ஜபஞ் செய்தால் உத்தம ஞானத்தையடைவார்கள். தமக்கு இஷ்டமான மந்திரத்தை ஜபித்தாலும் பராபக்ஷம் உண்டாகும். தனுர் மாதத்தில் சிறப்பாகச் சிவபெருமானுக்கு மஹா நைவேத்தியஞ் செய்யவேண்டும்.
மஹா நைவேத்தியஞ் செய்வது எப்படியென்றால் சாலி நெல்லரிசி ஒருபாரம், மிளகு ஒரு மரக்கால், தேன் பன்னிரெண்டு குடவம், நெய் பன்னிரெண்டு குடவம், பச்சைப் பருப்பு பன்னிரெண்டு மரக்கால் இவைகளைச் சேர்த்துச் சமைத்த அன்னமும் நெய்யாற் சமைத்த அப்பம் (பலகார வகைகள்) அரிசிமாவிற் செய்த மோதகம், பன்னிரெண்டு மரக்கால் பாலும், தயிரும், தேங்காய் பன்னிரெண்டும், பாக்குகள் பன்னிரெண்டும், வெற்றிலை முப்பத்தாறும் கர்ப்பூரசூரணம், ஏலம், லவங்கம், ஜாதிக்காய், ஜாபத்திரி, குங்குமப்பூ இவை சேர்ந்த தாம்பூலமும் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய மஹா நைவேத்தியத்தை ஒருமுறை சமர்ப்பித்தவன் இராஜ்யாதிபதியாய் சுவர்க்க பதவியை அடைந்து வாழ்வான். இதுபோல ஆயிரம் மரக்கால் நிவேதனஞ் செய்தவன் பிரமலோகத்தில் பிரமன் ஆயுள்வரை சுகமாக வாழ்வான். முப்பதாயிரம் மரக்கால் செய்தவன் பிரமலோகத்தை விட மேலான உலகையடைந்து பிறவியின்றி வாழ்வான். முப்பத்தாறாயிரம் மரக்கால் நிவேதனஞ் செய்தவன் தான் பிறந்தது முதல் நாள்தோறும் நிவேதனம் செய்தவனாகிறான். அது ஜன்ம நைவேத்தியம் என்று சொல்லப்படும். அதுவே மஹாபூரணம் என்றும் கூறப்படும். அதைச் செய்தவன் மீண்டும் பிறவியடைய மாட்டான். அதற்குச் சங்கற்பஞ் செய்து கொள்பவன், கார்த்திகை மாதத்தில் செய்யத் தொடங்க வேண்டும். சங்கராந்தி வியதீபாதம், ஜன்மநக்ஷத்திரம் பூரணை முதலிய இத்தினங்களில் செய்து வரலாம். ஒரே நாளில் செய்தாலும் செய்யலாம். இந்த ஜன்ம நைவேத்தியத்தால் சிவபெருமான் உள்ளம் மகிழ்வார். இந்த ஜன்ம நைவேத்தியத்தைச் சிவபெருமானுக்கே செய்யவேண்டும். ஏனென்றால் ஜன்மத்தைக் கொடுக்கவும் ஒழிக்கவும் வல்லவர் அவரேயாதலால் என்று அறிய வேண்டும். பிறதேவர்களுக்குச் செய்வதில் பயனில்லை. தாவர ஜங்கம ஸ்வரூபமான இந்தப் பிரபஞ்சமானது விந்துநாதங்களின் ஸ்வரூபமாகும். விந்துவே சக்தியும் நாதமே சிவமும் ஆகும். ஆகையால் இந்தப் பிரபஞ்சம் சிவசக்தியாத்மகம் என்று சொல்லப்படும். விந்துநாதத்தையே ஆதாரமாகவுடையது. இவ்விரண்டுமே பிரபஞ்ச காரணமாகும். பிந்து நாதஸ்வரூபமான யாவும் சகளீகரணமாகும். சகளீகரணத்தால் ஜகத்து ஜனித்தது. பிந்து நாதஸ்வரூபமே ஜகத்துக்கு காரணம் பிந்து நாதஸ்வரூபமான சிவலிங்கத்தை ஜன்ம விருத்திக்காக பூஜை செய்யவேண்டும், பிந்துரூபமான பராசக்தியே தாயும் நாதரூபமான பரமசிவனே தந்தையுமாவர். தாய், தந்தையரைப் பூஜிப்பதால் பரமானந்தம் உண்டாகுமல்லவா? ஆனந்தம் காரணமாகவே சிவலிங்கத்தை பூஜிக்க வேண்டும். தாய் தந்தையர்கள், தம்மைப் பூஜிக்கும் புதல்வரின் மீது பெரு விருப்பமடைவார்கள் அல்லவா? அதுபோலவே தம்மைப் பூஜிப்பவருக்கு சிவபிரான் தமது ஐஸ்வரியத்தைக் கொடுக்கிறார். பர்க்கசப்த வாச்சியனான சிவபெருமானே புருஷன். புருஷனிடத்திலிருந்து பிரகிருதி உண்டாயிற்று. அவ்வியக்தமான வயிற்றில் அதிஷ்டானமான கர்ப்பமே புருஷன் என்று சொல்லப்படும் தோன்றும் வியக்தமான உதரத்தில் அதிஷ்டானமான கர்ப்பத்தை பிரகிருதி எனப்படும்.
முதலில் பிறந்த புருஷன் பிதாவாவான் அந்தப் புருஷன் பிரகிருதியுடன் கூடியிருப்பது முதல் ஜன்மமாகும். அப் பிரகிருதியிலிருந்து வெளிவருவது இரண்டாவது ஜன்மமாகும். ஜனனமரணங்கள் இரண்டு புருஷனாலேயே உண்டாகும். மாயையே ஜன்மம் உண்டாவதற்கும் விருத்தியடைவதற்கும் காரணமாகும். ஜீவன் என்பதற்குப் பிறப்பு விருத்தியடைதல், பாசபந்தமடைதல், நசித்தல், முதலியவற்றையுடையது என்று பொருள். ஜன்மபாச நிவர்த்திக்காக ஜன்மலிங்கத்தைப் பூஜிக்க வேண்டும். பிரகிருதி சம்பந்தமான சப்தாதி தன் மாத்திரைகளாலும் பிரகிருதி சம்பந்தமான இந்திரியங்களால் போகிப்பதாலும், விருத்தியடைவது என்னும் பொருளல்ல பசு: என்பதற்குப் பிரகிருதி என்று சொல்லப்படும். பிரகிருதி சம்பந்தமான வஸ்துக்கள் யாவும் போகம் எனப்படும். ஆகையால் பகம் என்பது பிரகிருதி. அந்தப் பிரகிருதியை உடையவன் சிவபெருமான். ஆகையால் பகவானான சிவபெருமானே போகதாதா சிவபெருமானைவிடப் போகங்களைக் கொடுக்கத்தக்கவர் பிறிதொருவரில்லை. அந்தச் சிவபெருமானைப் பகவான் பர்க்கன் என்ற சொற்களால் பெரியோர் அழைக்கிறார்கள். ஆகையால் இகபோகத்தையும் பரபோகத்தையும் அபேட்சிப்பவர்கள் சிவபெருமானை லிங்க மூர்த்தத்தில் அர்ச்சனை செய்யவேண்டும். உலகில் உள்ளவர்கள் ÷ஷாடச உபசாரத்துடன் சிவலிங்க பூஜையைச் செய்ய வேண்டும். மானசீகமாகவும் பூஜிக்கலாம். ஆதிவாரத்தில் பூஜித்தால் ஜன்ம நாசம் உண்டாகும். அது பிரணவ மந்திரத்திலேயே பஞ்சகவ்வியங்களாலும் தேன், கரும்பு, ரசம், பால் முதலியவற்றாலும் அபிஷேகித்து, நைவேத்தியமும் பிரணவத்தாலேயே செய்ய வேண்டும். அவ்வாறு பூஜிப்பவன் ஜீவன் முக்தனாவான். உருத்திராக்ஷதாரணத்தால் அரைப்பங்கு பக்தியும் சிவமந்திர ஜபத்தால் முக்காற்பங்கு பக்தியும் சிவ பூஜையால் பூரணபக்தியும் உண்டாகும். சிவலிங்கத்தையும் சிவ பக்தனையும் பூஜிப்பதால் மோக்ஷம் உண்மையாகக் கைகூடும். இந்த அத்தியாயத்தைப் பக்திச்சிரத்தையுடன் வாசிப்பவனுக்குச் சிவபக்தி உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.
15. பிரணவ மகாத்மியம்
பிரணவ மகாத்மியம் ஷட்லிங்கம் சிவபக்த பூஜை ஆகியவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று கேட்ட முனிவர்களுக்கு சூதமாமுனிவர் சொல்லத் துவங்கினார். முனிவர்களே! தபோதனர்களான நீங்கள் நல்ல கேள்வி கேட்டீர்கள். ப்ரணவம் என்பது, சம்சார சாகரத்திற்குத் தெப்பம் என்றும் உங்கட்குப் பிரபஞ்சம் இல்லை என்றும் அதிசயத்தால் மோக்ஷமடையச் செய்வது என்றும் தன்னை ஜெபித்தவருக்கு பாபக்ஷயஞ் செய்வது ஞானமுண்டாக்குவது என்றும் பொருள்படும். அந்தப் பிரணவம் சூஷ்மம் என்றும் ஸ்தூலம் என்றும் இருவகைப்படும். அவற்றில் சூஷ்மம் ஓர் எழுத்தையும் ஸ்தூலம் ஐந்தெழுத்தையும் கொண்டவை. சூஷ்மத்தில் காணக்கூடாத ஐந்து எழுத்துக்களும் ஸ்தூலத்தில் காணக்கூடிய ஐந்தெழுத்துக்களும் உள்ளன. ஜீவன் முக்தனானவன் சூஷ்ம பஞ்சாக்ஷரத்தைத் தன் உடல் ஒழியும் வரையில் அநுசாந்தானம் செய்தால், தன் தேகம் அழிந்தவுடன் சிவபெருமானிடத்தில் நிச்சயமாக லயமடைவான். பிரணவ மந்திரத்தை முப்பத்தாறு கோடி ஜபித்தவன் யோக சித்தியை அடைவான். அந்த சூஷ்ம பஞ்சாக்ஷரமும் ஹ்ரஸ்வதீர்க்கங்களால் இருவகைப்படும். அகார உகார மகாரபிந்து நாதங்களுடன் கூடிய சப்த காலகலாஸ்விதமாகவுள்ளது தீர்க்கப்பிரணவம். அது யோகிகளுடைய இதயாகாசத்தில் பிரகாசிக்கும். மகாரத்திலே விளங்கும் அகார உகார மகாரங்கள் மூன்றும் தமோகுணங்கள் என்றும் மூன்று தத்துவங்களாகும். இதுவே ஹ்ரஸ்வப்ரணவம் எனப்பெறும். அன்றியும் அகாரம் சிவன்; உகாரம் சக்தி, மகாரம் ஐக்கியம் சிவசக்திகளின் ஐக்கியமே பெரும் தத்துவமான மகாரத்தின் பொருளாகும். பாவமனைத்தும் ஒழிய விரும்புவோன் ஹ்ரஸ்வப் பிரணவ ஜபம் செய்யவேண்டும். இஷ்ட காமியங்களை அடைய பிரவிருத்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் மந்திரத்துடன் ஹ்ரஸ்வப் பிரணவத்தையும் நிஷ்காமிகளாக நிவிருத்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் தீர்க்கப் பிரணவத்தைத் தனியாகவும் உபாசிக்க வேண்டும்.
வேதம் ஓதத் துவங்கும்போது, காலை மாலைகளில் செய்யும் சந்தியாவந்தனம் முதலிலும் குருவந்தனை செய்யும்போது பிரணவ உச்சாரணம் செய்ய வேண்டும். தீர்க்கப் பிரணவத்தை ஒன்பது கோடி ஜபம் செய்தால் பரிசுத்தனாகிறான். மீண்டும் ஒன்பதுகோடி ஜபம் செய்தால் பிருத்வி தத்துவத்தையும் மீண்டும் ஒன்பது கோடி ஜெபித்தால் அப்பு தத்துவத்தையும் மேலும் ஒன்பது கோடி ஜெபித்தால் அக்கினி தத்துவத்தையும் மேலும் ஒன்பது கோடி ஜெபித்தால் வாயு தத்துவத்தையும் மேலும் ஒன்பது கோடி ஜபம் செய்தால் ஆகாயத் தத்துவத்தையும் ஜெபிப்பான், மீண்டும் ஒன்பது கோடி ஜெபித்தால் கந்தாதி தன்மாத்திரைகளும் மீண்டும் ஒன்பது கோடி ஜெபித்தால் அகங்காரமும் ஜெபிக்கப்படும். நாள்தோறும் ஆயிரம் ஜெபித்தால் தூய்மையடைவான். அதற்குப் பிறகே தத்துவங்களை ஜெபிக்கவேண்டி ஜபம் செய்யவேண்டும். இவ்வகையாக நூற்றெட்டுக்கோடி தீர்க்கப் பிரணவ ஜபம் செய்தவன் சுத்த யோகம் அடைகிறான். அவனே ஜீவன் முக்தன், பிரணவ ஸ்வரூபியான சிவபெருமானை எப்போதும் தியானித்தும் ஜபம் செய்து கொண்டும் இருப்பவன் சிவனே என்று கருதப்படுவான். ரிஷி, சந்தஸ், தேவதைகளை மனதில் தியானஞ் செய்த பிறகு ஜபத்தை ஜெபிக்கவேண்டும். பிரணவத்தை மாதுருகா யுக்தமாகத் தேகத்தில் நியாசஞ் செய்தால் ரிஷியாகலாம். தசமாதுருக ஷடத்வாதிகளையெல்லாம் செய்தால் நியாசபயன் உண்டாகும். பிரவிருத்தி, நிவிருத்தி லக்ஷணங்களுடன் கூடிய இவ்வர்ணங்களின் சமுதாயமே ஸ்தூலப் பிரணவம் என்று சொல்லப்படும்.
சிவயோகிகளைக் கிரியாயோகிகள், தபோயோகிகள், ஜபயோகிகள் என்று மூவகையாகக் கூறுவர். அவர்களில் தமக்கு உண்டான தனம் முதலிய விபவங்களுடன் கரம் முதலிய அவயவங்களால் சிவலிங்க பூஜை செய்பவன் கிரியாயோகி எனப்படுவான். சிவலிங்க பூஜையைச் செய்து கொண்டு மிதபோஜனம் உட்கொண்டு பாஹியேந்திரிய ஜயமடைந்து, பரத்துரோகஞ் செய்யாதவன் தபோயோகி எனப்படுவான். மேலே சொன்ன இருவகை லக்ஷணங்களையும் கொண்டு சர்வ காமனாபரித்யாகஞ்செய்து எப்போதும் ஜபத்தையே செய்துகொண்டு சாந்தனாக இருப்பவன் ஜபயோகி எனப்படுவான். ÷ஷாடச உபசாரங்களுடன் சிவயோகிகளைப் பூஜிப்பதால் சலோக்யம் முதலான கிரமமானப் பரிசுத்தனாக முக்தியடைவான். இனி ஜபயோகத்தைச் சொல்லுகிறேன். எந்த ஜபத்தைச் செய்தால் பாவங்கள் ஒழியுமோ அந்தச் சிவபஞ்சாக்ஷர ஜபத்தைச் செய்யவேண்டும். சிவ என்ற இரண்டு எழுத்துக்களுக்கும் முன்னே நம: என்பதைச் சேர்த்து, சதுர்த்தியந்தமாக்கி (நம: சிவாய என்று) ஜபிக்க, பஞ்ச தத்துவாத்மாகமான ஸ்தூலப் பிரணவம் ஆகும். அந்த ஸ்தூலப் பிரணவமே சிவ பஞ்சாக்ஷரம். அதை ஜெபிப்பதால் சகல காரிய சித்தியும் உண்டாகும். அந்தப் பஞ்சாக்ஷரத்தின் முதலிலே பிரணவத்தைச் சேர்த்தும் ஜபிக்கலாம். குரு உபதேசம் பெற்று சுப தினத்தில் புனிதமான இடத்தில் அமர்ந்து பூர்வபக்ஷத்திலே சங்கற்பஞ் செய்து கொண்டு கிருஷ்ண பக்ஷத்திலே சதுர்த்தசி வரையில் ஜபிக்கவேண்டும். மாசி புரட்டாசி மாதங்கள், எல்லாக் காலங்களையும்விட உத்தமம் தினம் ஒருமுறை மிதபோஜனம் செய்து, இந்திரியங்களை அடக்கி எஜமானனுக்கும் பெற்றோருக்கும் பணிவிடை செய்து முடித்து, பஞ்சாக்ஷர ஜபம் ஆயிரம் ஜெபித்தால் தூய்மை உண்டாகும். இவ்வாறு செய்தவன் தேவபிதுர்க்களின் குணத்திலிருந்து நீங்குவான். பத்மாசனத்தில் அமர்ந்து மங்களங்களைக் கொடுத்தும் கங்கையையும் சந்திரனையும் சிரமிசை அணிந்தும் வாமபாகத்தில் உமாதேவியை அமர்த்தியும், எப்போதும் பக்தர்களுக்கு அருள்செய்யும் பரமசிவனைத் தியானித்துக் கொண்டு, பஞ்சாக்ஷர மந்திரத்தை ஐந்து லக்ஷம் ஜெபஞ்செய்ய வேண்டும். மேலும் சிவமூர்த்தியைத் தன் மனதிலாவது சூரிய மண்டலத்திலாவது பூஜிக்கவேண்டும்.
இந்த ஜபம் கிழக்கு முகமாகச் செய்யத்தக்கது. கிருஷ்ண சதுர்த்தசியின் உதயத்தில் குளித்து, நித்திய கர்மங்களை முடித்துக் கொண்டு தூய்மையான இடத்தில் பன்னிரெண்டாயிரம் பஞ்சாக்ஷர ஜெபஞ்செய்து, இல்லறத்திலுள்ள அந்தணர்களை வரித்து, அவர்களில் சிறந்த ஒருவரைக் குருவாகவும் ஒவ்வொருவரை ஈஸான தத்புருஷ அகோர, வாமதேவ, சத்தியோஜாத மூர்த்திகளாகவும் கொண்டு பூஜைப் பொருட்களைச் சேகரித்துச் சிவபூஜை செய்யவேண்டும். பஞ்சாக்ஷர மந்திரத்தால் ஓமத்தை ஆயிரம் நூறு அல்லது பத்து முறையேனும் கபிலை பசுவின் நெய்யால் தானேயாகவாவது சிவபக்தரைக் கொண்டாவது நூற்றெட்டு முறையாவது செய்ய வேண்டும். ஓம முடிவில், குருவுக்கு இரண்டு பசுக்களைத் தக்ஷிணையாகக் கொடுக்கவேண்டும். பிறகு ஈசனாதி பஞ்ச மூர்த்திஸ்வரூபமான பிராமணர்களை வஸ்திர ஆபரணங்களால் பூஜித்து, பரமசிவனாகத் தியானஞ்செய்து அவர்களால் மார்ஜனம் செய்த நீரால் ஸ்நானம் செய்யவேண்டும். இவ்வாறு செய்தால் முப்பத்தாறு கோடி தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த பயன் உண்டாகும். ஓமத்திற்கு பத்தில் ஒரு பங்கு பிராமண போஜனம் செய்விக்க வேண்டும். குருவும் பஞ்சப் பிரமங்களுமாகக் கொண்டவர்களுடைய மனைவியரை பார்வதியாகப் பாவித்து விசேஷதக்ஷணையுடன் ஆடை ஆபரணாதிகளையும் அன்னபானாதிகளையும் கொடுத்து வணங்கவேண்டும். இவர்களுக்கெல்லாம் ருத்திராக்ஷம் முதலியவற்றையும் கொடுத்து பலிதானம் செய்து அங்குள்ள யாவருக்கும் போஜனம் செய்விக்கவேண்டும். பிறகு தேவனைப் பிரார்த்தித்து ஜபத்தை முடிக்கவேண்டும். இவ்வாறு செய்தவன் மந்திரசித்தியை அடைவான். மீண்டும் ஐந்து லக்ஷம் ஜபம் செய்தால் சர்வ பாப க்ஷயம் உண்டாகும். மீண்டும் ஐந்து லக்ஷம் ஜபம் செய்தால் அதலம் முதலான உலகங்களை ஜெபித்து ஆங்காங்குள்ள ஐஸ்வரியங்களை அடைவான். இவ்வாறு செய்யும் போது அவன் இறந்தால் மீண்டும் மனிதப்பிறவியைச் சிவ மந்திர ஜபம் செய்பவனாகவே தோன்றி அதை ஆஸ்ரயிப்பவனாவான். மேலும் ஐந்து லக்ஷத்தால் பிரம சாமப்யமும், மேலும் ஐந்து லக்ஷத்தால் சாரூப்ய ஐஸ்வரியமும் உண்டாகும். நூறுலக்ஷமானால் பிரமனுக்குச் சமமான நிலை ஏற்பட்டு, பிரமப் பிரளயம் வரை இஷ்டப்படி வாழ்ந்திருந்து மறுபிறவியில் பிரமனுக்கே புதல்வனாகி, தவபலத்தால் முக்தனாவான்.
பிருதிவி முதலிய உலகங்கள் பதினான்கும் பிரமதேவனால் நிருமிக்கப்பட்டன. சத்திலோகம் முதல் க்ஷமாலோகம் வரையில் விஷ்ணுலோகங்கள் பதினான்கு. க்ஷமாலோகத்தில் விஷ்ணு பகவான் வைகுண்ட நகரத்திலே லக்ஷ்மிதேவியுடன் மகாபோகங்களை அனுபவித்துக் கொண்டு உலக ரக்ஷகனாக இருக்கிறான். அதற்குமேல் சுசியாநுதியாக இருபத்தெட்டு சிவலோகங்கள் உள்ளன. அந்தச் சுசிலோகத்திலே கைலாயத்திலுள்ள உருத்திரன் சகலப் பிராணிகளின் இதயத்திலேயும் இருக்கிறான். அதற்கும் மேலே அஹிம்சா என்பதை இறுதியாகக் கொண்ட ஐம்பத்தாறு உலகங்கள் மகேச லோகங்களாகும். அவற்றில் ஞான கைலாச நகரத்திலே மகேசன் ஆன்மாக்களுக்கு திரோபவஞ் செய்துகொண்டிருப்பான். அதற்குமேல் காலசக்கரம் காலாதீதம் என்று இரு உலகங்கள் உண்டு. அவற்றில் காலாதீதத்திலே ஈஸ்வரன் என்ற பெயரையுடைய காலன், சிவபெருமானுடன் கூடி மகிஷ தர்மத்தை அடைந்து, சகல பிராணிகளையும் காலத்துடன் சேர்க்கிறான். அசத்தியம், அசுசி, ஹிம்சை, நிர்த்தயை என்பவற்றைப் பாதங்களாகக் கொண்டு சுயேச்சாரூபியாக இருப்பான். அங்கு நாஸ்தி ஜயலக்ஷ்மி, வேதபாஹ்யத்வனி, துஸ்ஸங்கம் முதலியனவும் திரோதானமும் இருக்கும். அதன் கீழே இருப்பவர்களுக்குக் கர்மயோகமும் கர்மமாயையும் திரோதானமும் பாசபந்தமும் இருக்கும். காமிய கர்மாநுஷ்டானம், விந்து பூஜை, சிவபெருமானையன்றி பிறதேவரைப் பூஜித்தல், ஜீவஸ்வபாவம், தேகேந்திரியாபிமானம், சம்சார அபிமானம், பிரகிருதி சம்பந்தமான திரவியங்களால் பூஜை, சக்தி லிங்க பூஜை, ஆவரணலிங்க பூஜை, கற்பித லிங்க பூஜை, பாஹ்யலிங்க பூஜை இவற்றையுடையவர்கள் வசிப்பார்கள். அந்தப் பிரதேசத்தில் நூற்றுப்பன்னிரெண்டு சக்திலோகங்கள் உண்டு. அவையாவும் பிந்துமயம். கர்மலோகம் அதன் மேலே ஞானபோக மயமாய் ஞானமயமாய் நித்ய போக மயமாய்த் திரோதான ரகிதமாய், பாச பந்தரஹிதமாய் நிஷ்காம கர்மஜனயோக்கியமாக இருக்கும். நிஷ்காமியமாக லிங்கபூஜை செய்தவர்கள் சிவபிரானையே சரணம் என்று நம்பியவர்கள், பரசிவ சொரூபமுடையவர்கள், ஜீவன் முக்தர்கள், புருஷமயமான திரவியத்தால் பூஜை செய்பவர்கள் சிவசொரூபமான ஆத்தியாத்மிக பூஜை செய்பவர்கள் ஆகியோர் வசிப்பார்கள். சிவலிங்க தேஜோமயமாயும் ஆவரண ரஹிதமாயும் கற்பிதம் அல்லாததாயும் அந்தரங்க ஸ்வரூபமாயும் நாதரூபமாயும் விளங்கும். அவ்விடத்திலேயே நமஸ்கார சப்தம் இருக்கும். மதம், அகங்காரம் முதலியன நசிக்கும். ஞானம் என்பதற்குத் திரோதன நாசம் என்பது பொருள். இவ்வாறு பிராகிருத வைதீக லோகங்கள் நியமிக்கப் பெற்றுள்ளன. சத்தியம் முதலிய தர்மங்களோடு சிவபூஜை செய்பவர்கள் அதர்மமே ரூபமான மகிஷத்தை அனுஷ்டித்த கால சக்கரத்தைக் கடப்பார்கள்.
அதற்கு மேலே காலஸ்வரூபமான ருஷபம், பிரமசரிய ரூபத்துடன் உள்ளது. அது சத்தியம் முதலிய நான்கு பாதங்களுடன் சிவலோகத்தின் முன்பு வசிக்கும். அதற்கு சாந்தமே கொம்புகள் சாந்தமே செவிகள் ஆஸ்திக்யமே கண்கள். வேதாக்ஷரமயமான உஸ்வாஸ நிஸ்வாஸங்கள் பொருந்திய நாசியையுடையதாய் வேதத்துவனியுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கிரியை முதலிய ரூபங்கள் காரணப்பிரமன் முதலியவர்கள் சன்னதியில் இருக்கும். மேலே சொன்ன லக்ஷணங்களுடன் கூடிய தர்மஸ்வரூபியான ருஷபத்தை காலாதீதனான சிவபெருமான் அதிஷ்டித்துள்ளான். பிரமன், விஷ்ணு, ருத்திரன், மகேசன் இவர்களுடைய ஆயுட்காலம் சிவபெருமானுக்கு ஒரு பகலாகும். அதற்குமேல் அவ்வளவு காலம் இரவாகும். அந்த இரவில் ஜனன மரணங்கள் ஒன்றும் கிடையாது. அதற்குப் பிறகு காரணப் பிரமன் சத்தியலோகம் வரையில் பதினான்கு உலகங்களையும் பூத தன் மாத்திரைகளால் படைப்பான். ஆகையால் பதினான்கு உலகங்களும் தன் மாத்திரைகளின் சொரூபம், அதே வகையாகக் காரண விஷ்ணு அந்தப் பதினான்கு உலகங்களையும் காரண ருத்திரன் இருபத்தெட்டு உலகங்களையும் காரணேஸ்வரன் ஐம்பத்தாறு உலகங்களையும் படைப்பார்கள். அதற்கு மேலே சிவ வாங்கீகரணமும் பஞ்சாவரணமும் பஞ்சமண்டலங்களும் பஞ்சப் பிரமமயமும் ஆதிசக்தியுடன் கூடியதும் ஆதி சிவ லிங்கத்துக்கு இருப்பிடமுமான சிவலோகம் அழிவற்று எப்போதும் விளங்கும். பரமாத்மாவான சிவபெருமானுடைய ஆலயத்தை உங்களுக்கு விளக்கினேன். அங்கு சிவபகவான் தன் சக்தியான உமாதேவியுடன் கூடியிருந்து ஐம்பெருந் தொழில்களை செய்துகொண்டு, தன்னைத் தியானிப்போருக்கு எப்போதும் அருள்புரிந்து தன்னில்தானே சந்தோஷித்து இருப்பான். கர்மதியானாதிகளால் தரிசிக்கத்தக்க சிவபெருமானை நித்தியக் கர்மானுஷ்டானஞ் செய்வதில் தவறாதவனுக்குப் பூஜை செய்பவனுக்கு புத்தி உண்டாகும். கிரியை முதலிய சிவகர்மங்களாலே சிவஞானம் உண்டாகும். சிவஞானிகளைத் தரிசித்தவர்கள் யாவரும் முக்தராவார்கள். ஆத்ம ஸ்வரூபத்தால் முக்தியும் தன்னில்தானே ஆனந்தமடைதலும் உண்டாகிக் கிரியை, ஜபம், தவம், தியானம், ஞானம், தர்மம் இவற்றில் நன்றாக நடந்தவனும் ஆவான். சூரியன் தன் கிரண ஸ்பரிசித்தால் அபரிசுத்தத்தை ஒழிப்பது போலவே , சிவதரிசனம் அடைந்தவன் பிறரையும் பரிசுத்தராக்கித் தானும் பிரமானந்தம் அடைகிறான். தயையோடு யாவரையும் பரிபாலிக்குஞ் சிவபெருமான் தன்னைத் தரிசித்தவர்களுடைய அஞ்ஞானத்தை ஒழிப்பான். அஞ்ஞானம் ஒழிந்தவுடனே சிவஞானம் உதிக்கும். சிவஞானத்தால் ஸ்வஸ்வரூபம் தெரியும் தன்னில் தானே ஆனந்திக்கும் வரையில் கிருதார்த்தனாக மாட்டான்.
முனிவர்களே! ஸ்தூலப் பிரணவமான பஞ்சாக்ஷரத்தை நூறு லக்ஷம் ஜெபித்தவன் பிரமபதமும், மீண்டும் நூறு லக்ஷம் ஜெபிப்பதால் விஷ்ணு பதமும், மீண்டும் நூறு லக்ஷத்தால் ருத்திரபதமும், மீண்டும் நூறு லக்ஷத்தால் மஹேச பதமும், மீண்டும் நூறு லக்ஷத்தால் சிவலோகத்திற்கு ஆதிபூதமான கால சக்கர பதமும் வரும். சிருஷ்டி மோகங்களைச் செய்யும் விஷ்ணு சக்கரமும், கோபமோகங்களைச் செய்யும் ருத்திர சக்கரமும் பிரமணத்தை செய்யும் ஈஸ்வர சக்கரமும் ஞானமோகங்களைச் செய்யும் சிவ சக்கரமும் ஆகிய இவற்றைத் தனித்தனி நூறு லக்ஷத்தால் தாண்டவேண்டும். மீண்டும் பத்துக் கோடியால் பிரமபத ஐஸ்வரியமும் இப்படிப் பப்பத்துக் கோடியால் விஷ்ணுவாதிகளின் லோகங்களை அடைந்து மீண்டும் பப்பத்துக் கோடியால் அவ்வப்பதத்தின் ஐஸ்வரியங்களை அடைவார்கள். மீண்டும் நூற்றெட்டுக் கோடியால் ஐந்து ஆவரணங்களைக் கொண்ட சிவலோகத்தின் புறத்தை அடையலாம். அங்கு ரஜோமயமான நந்திதேவர் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கத் தரிசனம் உண்டாகும். அதற்கும் மேலே சத்யோஜாத மூர்த்தி எழுந்தருளியிருக்கும் ஐந்தாவது ஆவரணமும் வாமதேவ மூர்த்தியின் நான்காவது ஆவரணமும் அகோரமூர்த்தியின் மூன்றாவது ஆவரணமும் தத்புருஷ மூர்த்தியின் இரண்டாவது ஆவரணமும் ஈஸானமூர்த்தியின் பிரதமாவரணமும் உள்ளன. முதலான வரணத்தில் தியான தர்மங்களுக்கு ஸ்தானமாய், பூரணமான அமிர்தத்தைக் கொடுக்கும் பலிநாத மண்டபம், சந்திரசேகர மண்டபம், சோமஸ்காந்த மண்டபம், நிர்த்த மண்டபம், மூலமாய் மண்டபம் என்ற ஐந்து மண்டபங்கள் உள்ளன. அவற்றைக் கடந்தால் லிங்கஸ்தானமான கர்ப்பக் கிரகம். அங்கு வெளியே பஞ்சாக்ஷர ஜெபத்துடன் நந்தீசனும் உள்ளே பரமசிவனும் எழுந்தருளி இருப்பார்கள். வியாஸ முனிவனே! இவையாவும் நந்தியெம்பெருமானால் எனக்குச் சொல்லப்பட்டனவென்று ஸனத்குமாரர் கூறினார். அதற்குப் பிறகு சிவதரிசன விபவத்தை அவரவரே அறிந்து கொள்ளலாம். அது சொல்லத் தக்கதன்று. பரமசிவ விபவத்தை வேறொரு வகையாலும் அறிய முடியாது. இவ்வாறு தான் ஜிதேந்திரியர்களான பிராமணர்கள் ஜீவன் முக்தர்களாவார்கள்.
இனி, யாவரும் சிவ உபாசனை செய்யும் வகையையுஞ் சொல்லுகிறேன் கேளுங்கள். பிராமணர் குரு கடாக்ஷத்தால் நம: என்பதை இறுதியாகவுடைய பஞ்சாக்ஷரத்தை உபதேசிக்கப்பெற்று ஐந்து லக்ஷம் ஜெபித்தால் ஆயுளை ஜெபிப்பான். மேலும் ஐந்து லக்ஷம் ஜபித்தால் ஸ்திரீ சம்பந்தமான தோஷங்கள் ஒழியும். இந்த மந்திரத்தாலேயே கிரமமாக முக்தனாவான். க்ஷத்திரியன் ஐந்து லக்ஷத்தால் தன் க்ஷத்திரத்துவம் ஒழிந்து பிராமணனாவான். வைசியன், ஐந்து லக்ஷ ஜபத்தால் க்ஷத்திரியனாகி, மீண்டும் ஐந்து லக்ஷத்தால் மந்திரப் பிராமணனாகிறான். சூத்திரன் இருபது லக்ஷத்தால் மந்திர விப்பிரனாகிறான். க்ஷத்திரியாதி குலத்தில் உதித்த ஸ்திரீ புருஷர்களில் யாராயினும் சற்குருவால் உபதேசம் பெற்று நம: பூர்வகமாகவாவது நம: அந்தமாகவாவது ஜபஞ் செய்தால் கிருத்தாத்தர்கள் ஆவார்கள். பெண்கள் முதலான தெரியாதவர்களுக்கு ஜபஞ் செய்யும் முறையைக் கிரமமாக உபதேசிக்க வேண்டும். சாதகன் ஐந்து லக்ஷம் முடிந்தவுடன் சிவப்ரீதியாக மகாபிஷேகம், மகா நைவேத்தியம் முதலியன செய்து சிவபக்தர்களுக்கு அன்னம் அளிக்கவேண்டும். சிவபக்த பூஜையால் சிவபெருமான் மகிழ்ச்சியடைவார். சிவபிரானுக்கும் சிவபக்தனுக்கும் பேதமில்லை. சிவபிரானே பக்தன்: பக்தனே சிவபெருமான். சிவஸ்வரூபமான பஞ்சாக்ஷர மந்திரம் ஜபிப்பவன் சிவனேயாவான். சிவபக்தசரீரத்தில் சிவபெருமான் விருப்பங் கொண்டு வசிப்பார். சிவனடியார்கள் செய்வன வெல்லாம் வேதத்தில் கூறியனவேயாகும். சிவமந்திரத்தைச் சிறப்பாக ஜபம் செய்யுந்தோறும் உயர்ந்த சிவசாந்நித்யம் கிடைக்கும்.
சிவனடியார் வீட்டுப் பெண்களும் தேவி மந்திரம் ஜபிக்க வேண்டும். சிவபெருமான், சப்த ஸ்வரூபன் ஆகையால் அவனை மந்திரங்களாலேயே மகிழச் செய்யவேண்டும். சிவ லிங்கத்தைச் சிவபெருமானாகவும் தன் சரீரத்தை கந்த ரூபமாகவும் சிவ லிங்கத்தை நாதரூபமாகவும் தன் சரீரத்தை விந்து ரூபமாகவும் கொண்டு, தன்னிடத்திலுள்ள சக்தியை சிவலிங்கத்தில் ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். சிவபூஜை செய்பவர்களைச் சிவபெருமானாகவே கருதி ÷ஷாடச உபசாரத்துடன் பூஜித்தால், இஷ்டசித்தி உண்டாகும். சிவனடியாரையும் அவர் மனைவியையும் தானும் தன் மனைவியுமாக கூடிப் பக்தி பூர்வமாகப் பூஜித்து, அன்னபானாதிகள் அளிக்க வேண்டும். அவ்வாறு பூஜை செய்தவர்கள் பிறவி ஒழிவார்கள். பக்தர்கள் தேகத்தில் நாபிக்குக் கீழே பிரம பாகமும் நாபிக்குமேல் கழுத்துவரை விஷ்ணு பாகமும் கழுத்துக்கு மேற்பட்டு சிவபாகமும் அமைந்திருப்பதாக நம்பப்பட்டு வருகிறது. பிதுர்க்களை உத்தேசித்துச் சிவபக்தர்களுக்குப் பூஜை செய்தால், பிதுர்க்கள் தடையற்று முக்தி அடைவார்கள். பக்த பூஜை செய்யும்போது முதலில் தேவி பூஜையைச் செய்யவேண்டும். தபோயோகி, கிரியாயோகிகள் பதின்மருக்கும் ஜபயோகி தபயோகி நூற்றுவருக்கும் சிவஞானி ஜபயோகியர் ஆயிரவருக்கும் தியானி சிவஞானி லக்ஷதத்தவருக்கும் சமாதியுடையவன். கோடி தியானிக்கும் சிறந்தவர்கள். பூஜா காலத்தில் இவர்கள் மேற்கூறிய வகையில் ஒருவரைவிட ஒருவர் மேம்பட்டவர்கள். இவர்கள் மகிமையைப் பெரியோர்களும் அறியமாட்டார்கள். யாவர்தான் அறியவல்லார்! சிவபூஜையும் சிவனடியார் பூஜையும் இவ்வகையாகச் செய்தவர்கள் சிவரூபம் பெற்றுச் சிவத்தில் கலப்பார்கள். வேதசமானமான இந்த அத்தியாயத்தை வாசித்தவர்களும் சிவபக்தர்களுக்குச் சொன்னவர்களும் சிவ சன்னதியில் வாழ்வார்கள்.
16. பந்தமோக்ஷ ஸ்வரூபாதிகள்
முனிவர்கள் சூதபுராணிகரை நோக்கி, சுவாமி! தாங்கள் வியாஸமுனிவரால் யாவும் உணர்ந்தவர் ஆகையால் சிவமயம் எல்லாம் சொன்னீர்கள். இனி பந்த மோக்ஷங்களின் ஸ்வரூபத்தைச் சொல்லவேண்டும்! என்று கேட்கவே சூதமாமுனிவர் சொல்லத் தொடங்கினார். முனிவர்களே! பிரகிருதி முதல் எண்வகைப் பந்தங்களையுடையவன் ஜீவன் எனவும் அந்தப் பந்தங்களிலிருந்து விலகியுள்ளவன் முக்தன் என்றும் சொல்லப்படுவார்கள். பிரகிருதி முதலிய எட்டையுஞ் சுவாதீனம் செய்து கொள்வதே மோக்ஷம். ஜீவன், பந்த ஜீவன் என்றும் முக்த ஜீவன் என்றும் இருவகைப்படும். பிரகிருதி முதலிய எட்டால் செய்யப்பட்டது தேகம், தேகத்தால் கர்மமும் கர்மத்தால் தேகமும் உண்டாகும். சரீரம் ஸ்தூலம் என்றும் சூஷ்மம் என்றும் காரணம் என்றும் மூன்றுவகை. அதில் நடக்கவும் இருக்கவும் உணவாதிகளைப் புசிக்கவும். ஸ்தூலதேகமும் இந்திரிய போகங்களுக்குச் சூஷ்ம தேகமும் ஆத்ம யோகத்திற்காக ஜீவகர்மாநுசரணமாக உள்ள காரணசரீரமாகும். சுகதுக்கம் முதலியன அவரவர் செய்த கர்மங்களுக்குப் பயனாக உண்டாகும். ஆகையால் கர்மமாகிய கயிற்றால் கட்டப்பட்டவன் ஜீவன் மூவகைச் சரீரத்தால் உண்டான கர்மங்களால் சம்சாரமாகிய சாகரத்தில் ஜீவன் சக்கரம் போலச் சுழல்கிறான். இந்தப் பாதை அகல்வதற்காகக் கர்த்தாவான சிவபகவானை ஸ்தோத்திரம் செய்யவேண்டும். உலகத்தையெல்லாம் இயக்கும் சிவபெருமானே சக்கிர கர்த்தாவாவான். சிவபகவானே பரிபூரணன், சர்வக்ஞன், மமகாரமற்றவன்; ஆயினும் இந்தப் பிரபஞ்சத்தைத் தன் சுவாதீனத்திலிருந்து யாவரையும் அனுபவிக்கச் செய்கிறான். பரமேசனுக்கு ஸர்வக்ஞத்வம் திருப்தி அநாதிபேதம், சுதந்தரம் குறையாவன்மை, அநந்தசக்தி என்ற ஆறும் மானசஷட்குணங்களாகும். இந்த ஷட்குண ஐச்வரியத்தை வேதங்கள் அறியும். சிவப்பிரசாதத்தாலேயே பந்தங்கள் ஒழியும். ஆகையால் சிவகடாட்சம் உண்டாவதற்காகச் சிவபூஜையைச் செய்யவேண்டும். சிவலிங்கத்தையாவது சிவ பக்தரையாவது சிவப்ரீதியாகத் திரிகரணங்களாலும் தனத்தாலும் பூஜித்தால் சிவபெருமான் சத்தியமாக அனுக்கிரகம் செய்வான் சிவாநுக்கிரகத்தால் கர்மம் சுவாதீனப்படும். அஷ்டபந்தமான கர்ம சுவாதீனத்தால் முக்தனாவான். பரமேஸ்வரன் திருவருளால் கர்மதேகம் சுவாதீனப்பட்ட காரணத்தால் சிவலோக வாசம் உண்டாகும். அதுவே சாலோக்கியமாகும். சப்தாதி பஞ்ச தன்மாத்திரைகள் சுவாதீனப்படுவதால் சிவ சாமீப்யம் உண்டாகும். சாமீப்யத்தில் கிரியைகள், சாதனைகள், திரிசூலம் முதலிய ஆயுதங்கள் கிடைத்துச் சிவசாரூப்யம் உண்டாகும். பிறகு சிவாநுக்கிரகத்தால் புத்தி, சிவ பெருமானிடத்திலேயே பொருந்தியிருத்தலால் சிவ சாயுஜ்ஜியம் உண்டாகும். சர்வக்ஞத்துவம் முதலிய சிவ ஐஸ்வரியங்கள் சித்திக்கும். இலிங்கம் முதலியவற்றில் சிவார்ச்சனை செய்வதால், கிரமமான முக்தி கிடைக்கும். ஆகையால் சிவாநுக்கிரகம் உண்டாகச் சிவபூசை செய்ய வேண்டும். சிவகிரியை, சிவ தவம், சிவமந்திர ஜெபம், சிவஞானம், சிவத்தியானம் இவ்வைந்தும் ஒவ்வொன்றாகச் செய்து முடித்து, மேல் ஒவ்வொன்றாகச் செய்யவேண்டும். நாள்தோறும் நித்திரை செய்யும் வரையில் மரணபரியந்தம் சிவ சிந்தனையுடன் காலங் கழித்துச் சிறந்த மலர்களால் சிவபூஜை செய்தால், சிவத்தை அடைவான்! என்றார் சூதமாமுனிவர்.
அப்போது நைமிசாரண்ய முனிவர்கள், சுவாமி! லிங்க பேதத்தையும் சிவலிங்க பூஜா விதியையும் சொல்லவேண்டும் என்று கேட்கவே சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார். முனிவர்களே! லிங்கத்தின் கிரமத்தைச் சொல்லுகிறேன். சர்வ காமங்களையும் கொடுப்பது பிரணவலிங்கம். அது ஸூஷ்மப் பிரணவ ஸ்வரூபமும் நிஷ்களமும் ஆகும். சகளமாகவுள்ளது ஸ்தூலலிங்கம், அதுவே பஞ்சாக்ஷரம் எனப்படும். இவற்றின் பூஜையும் தவமும் மோக்ஷத்தைக் கொடுக்கவல்லவை. புருஷர்களால் நிருமிக்கப்பட்ட பிரகிருதிரூபமான லிங்கங்கள் பலவுள்ளன. அவற்றையெல்லாம் சொல்ல சிவபெருமானே வல்லவன் யான் வல்லவனல்லன். ஆயினும் எனக்குத் தெரிந்த மஹாலிங்கங்களைச் சொல்லுகிறேன். தானே உண்டான சுவயம்புலிங்கம், முதலாவது இரண்டாவது பிந்து லிங்கம் மூன்றாவது பிரதிஷ்டிதலிங்கம். நான்காவது சரலிங்கம், ஐந்தாவது குருலிங்கம், அவற்றில் தேவர்கள் முனிவர்கள் முதலியவர்கள் தவத்துக்கிரங்கிப் பூமியினின்று நாதரூபத்துடன் முளைத்து வந்த லிங்கம் ஸ்வயம்பு லிங்கமாகும். அதைப் பூஜிப்பதால் ஞானம் விருத்தியாகும். பொன் வெள்ளி முதலியவற்றால் பூமியிலாவது பீடத்திலாவது தன் கையால் செய்து பிரணவ மந்திர ஜபத்துடன் அமர்த்திய லிங்கம் பிந்துலிங்கம். இலகு மஹா யந்திரம், குருமகாயந்திரம் ஆகிய இவற்றில் ஒன்றை எழுதி அதன் இலிங்கம் எழுதி, பிந்துநாத ஸ்வரூபமாகவும் தாவர ஜங்கமங்களில் ஒன்றாக பரமசிவன் அங்கிருக்கிறான் என்ற பாவனையுடன் பூஜை செய்தால் பயனுண்டாகும். தன் கையால் பர்வதம் முதலிய இடங்களில் இலிங்கம் எழுதி அதில் சிவபெருமானை உபசாரங்களோடு ஆவாஹனம் செய்து பூஜித்தால் ஐஸ்வரியமும் அப்பியசித்தால் சிவஞானமும் உண்டாகும். தேவர்களும் முனிவர்களும் காரியசித்திக்காக மந்திர பூர்வமாகத் தம் கையால் புனிதமான இடத்தில் பாவனையோடு ஸ்தாபித்த லிங்கம் பிரதிஷ்டித லிங்கம் என்றும் பவுருஷ லிங்கம் என்றும் பெயர் பெறும்.
அதைப் பூஜிப்பதால் புருஷர்கள் தக்க பயனை அடைவார்கள். பிராமணர் க்ஷத்திரியர் முதலியவர்கள் திரவியத்தைச் செலவிட்டு சிற்பிகளை வரவழைத்து லிங்கம் செய்வித்து ஸ்தாபித்ததும் பிரதிஷ்டித லிங்கமேயாகும். சிவபக்தர்கள் தன் வீட்டிலேயும் பெட்டகத்திலேயும் வைத்துச் செல்லும் இடந்தோறும் கொண்டு சென்று ஆன்மார்த்தமாகப் பூஜிப்பது சரலிங்கம், சரலிங்கங்களில் ரஸலிங்கம் சிறப்பானது. அதைப் பிராமணர் பூஜித்தால் எல்லாப் பலனும் உண்டாகும். பாணலிங்கத்தை க்ஷத்திரியர் பூஜித்தால் இராஜ்யம் முதலியன உண்டாகும். சுவர்ண லிங்கத்தை வைசியர் பூஜித்தால் திரவிய லாபம் உண்டாகும். சிவலிங்கங்களைச் சூத்திரர் பூஜித்தால் கோரிக்கைகள் கைகூடும். ஸ்படிகலிங்கம் பாணலிங்கம் முதலியவற்றை எல்லா வருணத்தாரும் பூசிக்கலாம். தங்கள் வர்ணத்திற்குரிய லிங்கம் கிடைக்காவிட்டால் அன்னியருக்கு விதித்த லிங்கத்தைப் பூஜித்தால் தோஷமில்லை. சுமங்கலிகள், பார்த்திவலிங்கத்தைப் பூஜிப்பது, விசேஷம் விதவைகள் ஸ்படிகலிங்கப் பூஜை செய்யலாம். அவளுக்கு கோரிக்கை இருந்தால் ரஸலிங்கத்தைப் பூஜிக்கலாம். பாலிய, யவுன, வயோதிக பருவங்களிலும் பெண்களுக்கு ஸ்படிக லிங்கமே சகல பாக்கியங்களையும் கொடுக்கும். காமியார்த்தமாகப் பூஜிப்பவர்கள் பெரியோர் உபதேசப்படி பீட பூஜையை விசேஷமாகச் செய்ய வேண்டும். பூஜை முடிந்த பிறகு சரலிங்கத்தைச் சம்புடத்திலாவது ஓர் அறையிலாவது வைத்து வைக்கவேண்டும். நிவர்த்தி மார்க்கத்திலிருந்து கர பூஜை செய்வோர் தாம் புசிப்பதை நிவேதனம் செய்யவேண்டும். அவர்களுக்குச் சூஷ்மலிங்கம் ஒன்றுண்டு அது விபூதியையே லிங்கமாகச் செய்து விபூதியையே நிவேதனஞ் செய்தலாகும். அவர்கள் பூஜை முடிந்தபிறகு லிங்கத்தைச் சிரசினால் தரிசிக்க வேண்டும்.
விபூதியானது லவுகிகம், வைதிகம், சிவாக்னி சம்பந்தம் என்று மூன்றுவகைப்படும். லவுகிகாக்கினியால் உண்டானது திரவிய சித்திக்காகும். மண், மரம், உலோகம், தானியம், திலம் முதலிய திரவியங்கள் வஸ்திரம், நேற்றைய பொருட்கள், நாய் முதலியவை ஸ்பரிசித்த பொருட்கள், இவற்றையெல்லாம் பஸ்மமே சுத்திசெய்யும் நீரில் கலந்தும் கலவாததுமான பஸ்மத்தை அவ்வப்பொருளுக்கேற்ற வகையில் உபயோகிக்கலாம். வேதாக்கினியில் உண்டான பஸ்மம் அனுஷ்டான சமயங்களில் உபயோகிக்கத்தக்கதாகும். பஸ்மமே கர்மங்களைத் தகனம் செய்யும் பஸ்மதாரணத்தால் நற்குணங்கள் உண்டாகும். வில்வமரத்து விறகையும் கபிலைப் பசுவின் கோமயவுருண்டையையும் சமி விறகு, அரசவிற்கு, பலாச விறகு, ஆலவிறகு இவற்றையும் அகோர மந்திரத்தால் பஸ்மஞ் செய்துகொண்டது சிவாக்கினி பஸ்மம். தர்ப்பையைச் சிவ மந்திரத்தால் பஸ்மஞ் செய்தாலும் சிவாக்கினி பஸ்மமாகும். இந்த பஸ்மத்தை நல்ல வஸ்திரத்தால் அரித்து, புதிய மட்கலயத்தில் வைக்கவேண்டும். இது சிவதேஜசு உண்டாகும் நிமித்தம் அணியத்தக்கது. அரசன் குடிகளிடத்தில் சாரமான தானியத்தைக் கொண்டு களிப்பது போலவும், பிரஜை பயிர் செய்து அதன் சாரத்தைப் பெற்று மகிழ்வது போலவும், ஜடராக்கினி ஆகாரத்தைத் தகித்து சாரத்தால் சரீரத்தைப் போஷிப்பது போலவும் பிரபஞ்ச கர்த்தாவான பரமேஸ்வரன் தன்னிடத்திலுள்ள பிரபஞ்சத்தின் பாவத்தைப் பஸ்மத்தால் நசிக்கச் செய்து சுகத்தைக் கொடுக்கிறான். சிவபெருமான் பஸ்ம உத்தூளன காரணத்தால் ஜகத்து என்ற சாரத்தைக் கிரகிக்கிறான். ஆகாச சாரத்தால் கேசமும், வாயு சாரத்தால் முகமும், அக்கினி சாரத்தால் இதயமும் ஜலசாரத்தால் கடிபாகமும் பிருத்வி சாரத்தால் முழங்காலுமாகச் சிவபெருமான் தேகங்கொண்டிருக்கிறான். பிரமவிஷ்ணு ருத்திரர்களுக்குச் சாரமானது திரிபுண்டரம். மகேசனும் விபூதியைத் திலகமாக நெற்றியில் அணிகிறான். (ப-தானே பிரகாசிப்பது சி-எல்லாவற்றிலும்) என்று பொருள்படுதலால், பஸ்மம் ஸர்வ சாரங்களுக்கும் மூலதனம் என்று சிவபெருமான் சுவாதீனம் செய்துகொண்டான்.
சிவபெருமானையன்றிப் பிறிதொருவன் பஸ்மஸ்வாதீனம் செய்து கொண்டவனல்ல, (சி-புருஷன், வ-சக்தி) சிவசக்திகளின் ஐக்கியமே சிவசப்தத்தின் பொருள். ஆகையால் ஒருவன் தன் சரீரத்தைச் சிவசொரூபமாக்கிக் கொண்டு முதலிலே பஸ்மோத்தூளனம் செய்து கொண்டு, பிறகு திரிபுண்டரம் அணியவேண்டும். ஸ்திரீபுருஷர்கள் பூஜா காலத்தில் நீரிற் கலந்தும் பிற சமயங்களில் தனியாகவும் பஸ்மமணிய வேண்டும். நீரிற் கலந்த திரிபுண்டரம் அணிந்து பூஜை செய்தவர்கள் சிவபூஜைப் பயனை யதோக்தமாகப் பெறுவார்கள். சிவ மந்திரத்தால் பஸ்மம் அணிந்தவர்கள் சிவாசிரமிகள் எனப்படுவார்கள். சிவவிரதமிருப்பவனுக்கு அபரி சுத்தம், சூதகம் முதலியன இல்லை நெற்றியில் பஸ்மதாரணஞ் செய்து கொண்டு தன் கையாலாவது குரு கையாலாவது மிருத்தி கையால் திலகம் அணியவேண்டும். (கு - அகங்காராதி குணங்களை ரு-நிக்ரஹிப்பவன்) விகாரங்களுடன் கூடிய ராஜஸ தாமஸ குணங்களை ஒழிப்பவனாகையால் குணதீதனான பரமசிவனே குரு ரூபமடைந்தனன் என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிரபஞ்சத்திலுள்ள தன் சிஷ்யர்கள் எல்லோரும் குணாத்திரயத்தாலுண்டான அஞ்ஞானத்தை ஒழித்து, சிவ ஸ்வரூபத்தை உணர்த்துதலாலேயே குருவென்று சொல்லப்படுகிறான். அத்தகைய குருவின் சரீரமே குருலிங்கம். குருவுக்குப் பணிவிடை செய்வதே குருலிங்க பூஜை குரு கூறியவை உசிதமாயினும் உசிதமற்றவையே ஆயினும் மனம் முதலியவற்றாலும் திரவியத்தாலும் அவற்றைச் செய்பவனே சீடன் எனப்படுவான். உடல் பொருள் ஆவியையும் குருவுக்குக் கொடுத்து தான் புசிக்கும் முன்பு அவருக்கு உணவு கொடுத்துப் பின்னேதான் புசிக்கக்கடவன். எப்போதும் பணிவிடை செய்வதால், சிஷ்யனே புத்திரன் எனப்படுவான். குரு பூஜை செய்வதால், சிவபூஜை செய்த பயன் உண்டாகும். குரு புசித்து மிகுந்தது சீடன் புசிக்க யோக்கியமானது. அவற்றைச் சிவப் பிரசாதமாகக் கொள்ளவேண்டும். குரு கட்டளையின்றிச் செய்பவை பலன் கொடுக்கமாட்டா. குருவும் விசேஷ புத்திமானாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சீடனுடைய அஞ்ஞானத்தை அகற்ற அவனுக்குச் சக்தி இராது.
ஒவ்வொரு காரியமும் நிறைவேற வேண்டி முதலிலே விக்னேஸ்வரனைப் பூஜிக்கவேண்டும். அதன் பின் சகல உபாதைகளும் ஒழியும்படிச் சகல தேவர்களையும் பூஜை செய்யவேண்டும். ஆதியாத்மிகமானவை ஜவராதி க்ரந்தி ரோகங்கள் பசாசம், நரி முதலியவை. புற்று வைத்தல், பல்லி முதலியன மேலே விழுதல், வீட்டில் ஆமை, பாம்பு துர்ச்சனர் முதலாக வருதல் தகாத காலத்தில் மரங்கள், ஸ்திரீகள், பசுக்கள், பிரகிருதியாதல் முதலியவரும். வருங்கஷ்டத்தை உணர்த்தும் குறிகளாம். இவை யாவும் ஆதிபவுதிகங்கள். வீட்டில் மலம் முதலியன விழுதல், இடிவிழுதல் மஹாமாரி ரோகம் மாரீஜ்வரம், விஷூவி, கோமாரி, கொப்புளங்காணல், ஜன்மராசியில் துஷ்ட கிரகங்கள் சேர்தல், துஷ்ட சொப்பனம் முதலியன ஆகதைவிகங்கள் சவம் சண்டாளன், பதிதன் முதலோரை ஸ்பரிசித்தல் முதலிய விபத்துக்கள் உண்டானபோது வருந்துன்பத்தை சாந்தியக்ஞஞ் செய்யவேண்டும். தேவாலயம் பசுக்கொட்டில், நந்தவனம், வாசஸ்தானம் முதலியவற்றில் ஓரிடத்தில் இரண்டு அஸ்த பரிமாணமான மண்டபஞ் செய்து, தானியத்தைப் பெய்து அதன்மீது கமலம் ஒன்று வரைந்து அதைச் சுற்றிலும் திக்குகள் எட்டிலும் எட்டுக் கமலங்கள் எழுதி, பெரிய கலசம் ஒன்றை நூல் சுற்றிச் சாம்பிராணி முதலிய தூபங்கொடுத்து மத்தியில் அமர்த்தி, இதுபோல எட்டுக் கும்பங்களைச் சுற்றும் எழுதிய கமலங்களில் வைத்து தர்ப்பைக் கூர்ச்சம் மாவிலை முதலியன வைத்து வாசனைத் திரவியம் சேர்த்த நீரைச் சொரிந்து, நவரத்தினங்களை ஒன்பது கலசங்களிலும் இட்டு சாந்நிவிதானமறிந்த வேதியனை ஆசாரியனாகக் கொண்டு, நடுவிலிருக்கும் மகாகும்பத்தில் சுவர்ண நிர்மிதமான விஷ்ணு பிரதிமையும் சுற்றிலும் உள்ள எட்டுக் கமலங்களில் இந்திராதி எட்டுப் பதுமைகளும் வைத்து மத்திய கலசத்தில் விஷ்ணுவையும் சுற்றுக் கலசங்களில் அஷ்டதிக்குப் பாலகர்களையும் ஆவாகனம் செய்து, பூஜிக்கவேண்டும். ஆவாகனம் முதலிய சகல காரியங்களையும் ஆசாரியனைக்கொண்டு செய்விக்கவேண்டும். ஆசாரியன் ருத்துவிக்குகள் முதலானவர்களுடன் யஜமானும் பிரதி மந்திரங்களையும் நூற்றியெட்டு ஜபம் செய்யவேண்டும். மண்டபத்தின் மேற்புறத்தில் ஜபம் முடிந்த பிறகு கோடி அல்லது லக்ஷம் அல்லது ஆயிரம் அல்லது நூற்றெட்டு ஓமம் செய்யவேண்டும். இதை ஒருநாள் முதல் ஒன்பது நாட்கள் வரையில் தேசக்கால அனுசாரமாகச் செய்யலாம்.
சாந்திக்காக ஓமம் செய்யும்போது சமிவிறகும், விருத்திக்காக செய்யும்போது பலாச விறகும், ஓமம் செய்யவேண்டும். சமித்து, நெய், அன்னம் முதலியவற்றை அவ்வத் தேவரின் பெயரைச் சொல்லி ஓமஞ் செய்யவேண்டும். ஓமத்திற்குக் கொண்டுவரும் பொருட்களை அவை முடியும் வரையில் இருக்கவேண்டும். கடைசி நாளில் புண்ணியா வாசனம் செய்து அந்த ஜலத்தைச் சிரசில் புரோக்ஷணம் செய்து கொள்ளவேண்டும். பிராமண போஜனம் ஓமக் கணக்குக்குத் தக்கவாறு செய்விக்கவேண்டும். ருத்துவிக்குகளுக்கு நவரத்தினங்களையே தக்ஷிணையாகக் கொடுத்து விசேஷமாகப் பூசிக்க வேண்டும். பாலர்கள் பிரமசாரிகள், வனவாசிகள், கன்னிகைகள், சுமங்கலிகள், விதவைகள் முதலியோருக்கெல்லாம் பூரிதானம் கொடுத்து, மண்டபத்தில் வைத்த பூஜா திரவியங்களை ஆசாரியனுக்குக் கொடுத்துவிடவேண்டும். மகாமாரி முதலிய ரோகங்களை உண்டாக்கும். யமனுக்கு ப்ரீதியாகக் கால புருஷதானஞ் செய்ய வேண்டும். அது, நூறுவராகன் எடை அல்லது பத்து வராகன் எடை பொன்னாற் பாசாங்குசம் ஏந்திய கோலமாகச் செய்த கால விக்கிரகம் செய்து அதைப் பூரிதக்ஷிணையுடன் தானங் கொடுக்கலாம். பூரண ஆயுள் வேண்டின் திலதானமும் நோய் நீக்கத்திற்கு செப்புப்பாத்திரத்தில் கிருத தானமும் சஹஸ்ர பிராமண போஜனமும் செய்விக்கவேண்டும். தரித்திரன் தன் சக்திக்கு ஏற்ப அன்னதானம் செய்யவேண்டும். பூதசாந்தி மஹாமாதக சாந்திக்காகப் பைரவ பூஜை செய்யவேண்டும். இவை முடிந்த பிறகு சிவபெருமானுக்கு மஹாபிஷேகமும் மஹா நைவேத்தியமும் செய்யவேண்டும். வியாதி வந்தவிடத்து சங்கற்பஞ் செய்து, இந்த வகையான சாந்தியுஞ் செய்யலாம். தரித்திரன் தேவாலய மடங்களின் தீபதானம் செய்க அதற்கும் சக்தியற்றவன் ஸ்நானம் செய்து சிறிது தானமும் சூரிய நமஸ்காரமும் செய்து, சூரிய மந்திரம் நூற்றெட்டு ஆயிரம், பதினாயிரம், லக்ஷம், கோடி ஜபம் செய்து நமஸ்காரமும் செய்ய வேண்டும். அதற்கு சக்தியில்லாவிட்டால் சிவலிங்கப் பிரதக்ஷிணம் செய்து, தான் புசிப்பதை சிவ நிவேதனம் செய்து தாம்பூலம் சமர்ப்பித்து நூற்றெட்டு, ஆயிரம், பதினாயிரம், லக்ஷம், பத்து லக்ஷம், கோடி பிரதக்ஷிணங்களையாவது செய்யவேண்டும். தானே செய்வதற்குச் சக்தியில்லை என்றால் பிறரைக் கொண்டாவது செய்விக்க வேண்டும். சிவ பிரதக்ஷணத்தால் சகலபாவமும் அப்போதே நாசமாகும். வியாதியால் துக்கமும் பாதகங்களால் வியாதியும் உண்டாகும். அவ்வகையான பாவங்களைத் தர்மத்தாலும் சிவப் பிரதக்ஷிணத்தாலும் போக்கிக் கொள்ளலாம்.
சிவதர்மங்களில் சிறந்தது - பிரதக்ஷிணம். அதுவே கிரியா பிரணவம். ஜனன மரணங்கள் இரண்டும் மாயாசக்கரம். மாயாசக்கரமே சிவபிரானின் பலிபீடம். பலிநீடம் முதல் பிரதக்ஷிண கிரமமாகச் சுற்றிப் பலிபீடத்தை அடைந்து நமஸ்கரிப்பதே பிரதக்ஷிணம் என்று சொல்லப்படும். பலிப்பீடத்திலிருந்து புறப்படுவது பிறப்பும், மீண்டும் பலிபீடத்தை அடைந்து நமஸ்கரித்து ஆன்மாவைச் சமர்ப்பிப்பதே மரணமுமாகும். மாயா கற்பிதமான ஜனன மரணங்கள் வேண்டாம் என்று பிரார்த்திப்பதே நமஸ்காரமாகும். காரியங்களைச் செய்யும் வரையில் பந்தமுடைய ஜீவன் என்றும், தேகத்திரவத்தை சுவாதீனம் செய்துகொண்டு மற்றவற்றையெல்லாம் விடுவது முக்தியுடைய ஜீவன் என்றும் சொல்லப்படும். ஜனன மரணங்களை உண்டு செய்பவனும் ஒழிப்பவனும் சிவபெருமானேயாகும். ஆகையால் ஜனன மரணங்களைச் சிவபெருமானுக்கே சமர்ப்பிக்கவேண்டும். சிவபிரானுக்குப் பிரதக்ஷிண நமஸ்கார அதிப்ரியமாகையால், பிரதக்ஷிண நமஸ்காரங்களில்லாமல் ÷ஷாடச உபசாரங்களுடன் செய்த விசேஷ பூஜையும் பயன்தர மாட்டாது. சிவ பூஜாபரனான மவுனி சத்தியம் முதலிய நற்குணங்களுடன், கிரியை, தவம், ஜபம், ஞானம், தியானம் முதலியவற்றில் ஒவ்வொன்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றால் ஐஸ்வரியம் திவ்விய தேகம் ஞானம், அஞ்ஞானம், நாசனம், சிவசாந்நித்யம் முதலியன முறையே உண்டாகும்.
சிவபக்தன், தேச காலங்களையும், தேகநிலையையும் தனத்தையும் யோசித்து, அவற்றிற்கு ஏற்பக் கிரியாயக்ஞம் முதலியவைகளைச் செய்யவேண்டும். ஜீவஹிம்ஸை முதலியன இல்லாத சிவ÷க்ஷத்திரத்தில் குடியிருந்து, பஞ்சாக்ஷர ஜபம் செய்து கொண்டு தனக்குக் கிடைத்தது முதல் புசித்துக் கொண்டு காலங் கழிக்க வேண்டும். தரித்திரனாயினும், பிக்ஷõன்னத்தால் உதர போஜனம் செய்தாலும் ஞானவிருத்தி உண்டாகும். சிவயோகிகள் பிக்ஷõன்னத்தால் ஜீவிப்பதைச் சம்பு சத்திரம் என்று சொல்வார்கள். எந்த வகையிலாவது புண்ணிய ÷க்ஷத்திரத்திலிருந்து புனிதமான அன்னத்தைப் புசித்துக் கொண்டு, சிவபக்தர்களுக்குச் சிவ மகாத்மியத்தைச் சொல்லவேண்டும். சிவமந்திர ரகசியத்தைச் சிவபிரானல்லாமல் ஒருவனும் அறியமாட்டான். சிவபக்தன் சிவலிங்கத்தை ஆஸ்ரயிப்பதால் சிவ சமானமாவான். சரலிங்க பூஜையால் நிச்சயமாக முக்தனாவான். சாத்திய சாதன லக்ஷணங்களை வியாஸ பகவானிடம் நான் கேட்டு அறிந்த வகையிலேயே உங்களுக்குச் சொன்னேன். இந்தப் புராணம் முழுவதையும் கேட்ட உங்களுக்கும் இதைச் சொல்லிய எனக்கும் சிவபக்தி உண்டாகுமாக. உங்களுக்கெல்லாம் மங்களம் உண்டாகுக. இந்த அத்தியாயத்தை கேட்டவர்களும் சொன்னவர்களும் சிவகடாக்ஷம் பெறுவார்கள் என்று சூதமாமுனிவர் கூறிவிட்டு விடைபெற்றுச் சொன்னார்.
வித்தியேஸ்வர ஸம்ஹிதை முடிந்தது.
சிவமகா புராணம் முற்றும்.