பிரசித்தி பெற்ற குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோயிலில், தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பலிபீட பூஜை மற்றும் கலச பூஜை நடந்தது. நேற்று அதிகாலையில் வேள்வி பூஜை நடந்தது. காலை 6:40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேதரராக, கல்யாண சுப்பிரமணியசாமி கிரிவலம் வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வருகிற 30ம் தேதி வரை, தினமும் காலை 11:00 மணிக்கு சுவாமி கிரிவலம் நடக்கிறது. வரும் 31ம் தேதி இரவு 8:00 மணிக்கு, அம்மனுக்கு சீர் கொண்டு வருதலும், அம்மன் அழைப்பும் நடக்கிறது. வரும் பிப். 1ம் தேதி காலை 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. மடாதிபதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். வரும் 2ம் தேதி காலை 10:00 மணிக்கு காவடி செலுத்தும் வைபவமும், அன்னதானமும், பஜனையும் நடைபெறுகிறது. இரவு 9:00 மணிக்கு பரிவேட்டை நடைபெறுகிறது.