Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லிங்க புராணம் பகுதி-2 லிங்க புராணம் பகுதி-2
முதல் பக்கம் » லிங்க புராணம்
லிங்க புராணம் பகுதி-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மே
2012
12:05

தோற்றுவாய்: சூதர், நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு லிங்க புராணத்தை விவரிக்கலானார். லிங்க வழிபாட்டின் மேன்மையைக் கூறும் இந்த லிங்க புராணம் வியாசர் எழுதிய பதினெட்டுப் புராணங்களில் பதினொன்றாவது புராணம் ஆகும். இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது. இதைப் பக்தியுடன் கேட்பவர் பன்னெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்து இருப்பர் என்றார்.

1. பஞ்ச பூதங்களின் தோற்றம்

பேரொளியாய் விளங்கும் ஜோதி சொரூபம் சிவம். அந்த ஜோதி லிங்கத்திலிருந்து அனைத்துலகுக்கும், ஆதாரமானதும், வேதங்கள் கொண்டாடுவதுமான லிங்கம் உண்டாயிற்று. தமக்கென வித்து ஏதுமின்றி, அனைத்து உயிருக்கும் தானே வித்தாகி பிறந்திருக்கும் அப்பெருமானின் ஏவலாய் மாயையிடம் இருந்து மகத்தத்துவம் உண்டாயிற்று. அதனிடமிருந்து முக்குணங்களோடு கூடிய அகங்காரம் உண்டானது. தாமசம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து ஒலி எழுந்தது. பேரொலியிடமிருந்து ஆகாயமும், அதிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் உண்டாயின.

வைகாரிகம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து இந்திரியங்களுக்கு அதிஷ்டான தெய்வம் உண்டாயிற்று. தைஜசம் என்னும் அகங்காரத்தினிடமிருந்து ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், மனமும் உண்டாயின. தத்துவங்கள் ஓர் அண்டமாகி பிரளய நீரில் மிதந்து கொண்டிருக்கையில் அதற்கு உயிர் உண்டாகி அதில் பிரம்மன் தோன்றுவார். அவரே அயன், அரி, அரன் என்று படைத்தல், காத்தல், அழித்தல் என்ற காரியங்களுக்கேற்ப அழைக்கப்படுகின்றார். பிரம்மாண்டத்தினிடையே பதினான்கு லோகங்களும் அடங்கி உள்ளன. அகங்காரத்தை மகத்தத்துவம் சூழ்ந்திருக்கும். அதனைப் பிரகிருதி புருஷன் தன்னிடம் லயம் கொண்டிருப்பான். பிரளயத்தின் முடிவில் மூவரும் ஒன்றாக ஐக்கியமாகி விடுவர்.

2. கால அளவு

இதில் பிரம்மனின் பகல், இரவு பற்றி நான்கு யுகங்கள், யுகச் சந்திகள் பற்றி விளக்குவது, மனிதர்களின் கால அளவுகளும் தேவர்களுக்கான கால அளவுகளும் விவரிக்கப்படுவதே கால அளவு (அ) காலப் பரிமாணம் எனப்படுகிறது.

3. சிருஷ்டி

அனைத்துக்கும் எட்டாது விளங்கும் அந்தப் பரம்பொருளுக்குத் தோற்றமோ அளவோ கிடையாது. அனைத்தும் அதனிடமிருந்து உண்டாகி, அதனையே அடைகின்றன. திருமால் பாம்பணையில் துயில் கொள்கையில் நான்கு லோகங்களும் பிரளய வெள்ளத்தில் அழிந்து விட்டன. அதைக் கண்டு அவர் பன்றியாக உருவெடுத்து (வராக அவதாரம்) நீரில் மூழ்கி அவற்றை மீட்டு வந்து முன் போல் அமைத்து சிருஷ்டிகளைத் தொடங்கலானார். பிரமன் சிருஷ்டியைத் தொடங்கி தாமச சிருஷ்டிகள் எனப்பட்ட ஐந்து வகை சிருஷ்டிகள் அவரிடமிருந்து தோன்றின. அவை தமசு, மோகம், மகாமோகம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் ஆகும். அடுத்து பசு முதலான விலங்குகள், தேவர்கள், மனிதர்கள், பூதம், பேய் முதலான சிருஷ்டிகள் தோன்றின. பின்னர் பிரம்மனிடமிருந்து சனகர், சனந்தனர், சனத்சுஜாதர், சனத்குமாரர், ருத்திரர் தோன்றினர். அவர்கள் சிருஷ்டித் தொழிலில் ஈடுபடாமல் மகேசுவரனிடம் மனத்தைச் செலுத்தி அவனது தியானத்தில் ஈடுபட்டனர். அடுத்து பிரமன், புலஸ்தியர், கிருது, பிருகு, அத்திரி, மரீசி, புலகர், தக்கன், வசிஷ்டர், ஆங்கிரசு, தருமர் ஆகிய பத்துப் பேரைத் தோற்றுவித்தார். அவர்கள் மூலம் உலகிலே சிருஷ்டியைப் பரப்ப சுவாயம்பு மனு என்ற ஆணையும், சதரூபை என்னும் பெண்ணையும் பிரமன் படைத்தார். இவ்வாறு சிருஷ்டி பெருகலாயிற்று. தக்கன் மகள் சசியை வையகம் அனைத்துக்கும் ஆதிகாரணனான ஈசன் மணந்தார். ஈசன் அனேக ருத்திரதைத் தோற்றுவித்தார். உலகம் முழுவதும் அவர்கள் நிறைந்தனர். சம்சார பந்தத்தில் சிக்காது, சிறப்பின்றி ருத்திரர்களை ஈசன் படைத்ததைக் கண்டு பிரமன் அவரிடம் அவ்வகை சிருஷ்டி உலகுக்கு ஏற்றதல்ல என்று கூற, ஈசன் நீ குறிப்பிடும் சிருஷ்டிகள் எமக்கு ஏற்றதல்ல; அவற்றை நீயே படைப்பாயாக என்று பிரம்மனிடம் தெரிவித்தார். நான்முகன் மாயையைக் கொண்டு சிருஷ்டிகளை வகுத்தார். ருத்திரன் தாம் படைத்த சிருஷ்டிகளை யோகத்தால் உலகை விட்டு மறையச் செய்தார்.

4. அஷ்டாங்க யோகம்

ஈசன் திருவருளால் தெளிந்த ஞானத்தைப் பெற்று, அதனால் யோகத்தைக் கடைப்பிடித்தால் பிறவாப் பேரின்பமாகிய முக்தி கிட்டும். ஈசன் சனகாதி முனிவர்களுக்கு கூறிய யோக சாரம் ஜனகர், அத்திரி, வியாசர் முதலியோரால் உலகின் பிரசித்தமாயிற்று.

1. பற்றின்றி இருத்தல் இயமம். இது உண்மை பேசுவதாலும் ஒழுக்கம் வழுவாமையாலும் பற்றற்ற தன்மையாலும் ஏற்படும். மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலும் பெண்களைத் தீண்டாது இருப்பது பிரம்மச்சரிய நெறி, தூய்மையாக இல்லறத்தை நடத்துவதும் பிரம்மச்சரிய நெறியைச் சேர்ந்ததே. வானப்பிரஸ்த ஆசிரமம் கடைபிடிப்போர் முற்றும் துறந்த சந்நியாசிகள், மனைவியருடன் காட்டில் உறைவர்.

2. பற்றற்று இருக்குமாறு உள்ளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நியமம். இதன் மூலம் சவுசம், தவம், மகிழ்ச்சி, ஜபம், சிவ பிரணிதானம் ஆகியவற்றை அடையலாம். ஆசையின்மை என்ற மண்ணால், ஞான நீரில் உள்ளத்தை நீராட்டித் தூய்மை செய்தல் அகச்சவுசம் எனப்படும். புனித நீராடி, திருநீறு அணிதல் புறச்சவுசமாகும். தவம் என்பது சாந்திராயண விரதம் அனுஷ்டிப்பதாகும். அதாவது, வளர்பிறை அமாவாசை அன்று உபவாசம் இருந்து மறுநாள் முதல் நாள் ஒரு கவளம், இரண்டாம் நாள் இரண்டு கவளம் என்று கூட்டிக் கொண்டே சென்று பௌர்ணமி அன்று மறுபடியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்னர் தேய்பிறையில் நாளொன்றுக்கு ஒரு கவளமாக குறைத்துக் கொண்டே வந்து அமாவாசை தினம் திரும்பவும் உபவாசம் இருக்க வேண்டும். மறைநெறிகளில் நின்று ஆசிரம நிலைகளுக்கு ஏற்ப இருப்பது மகிழ்ச்சி ஆகும். ஈசனைத் தியானித்தல் சிவப்பிரணிதானம் ஆகும்.

3. ஆசனம் : யோக நிலைக்கான அங்கங்களில் ஆசனமும் ஒன்று. அது பத்மாசனம் போன்ற பல. அவற்றில் ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும்.

4. பிராணாயாமம் : ஏதேனும் ஒரு பொருத்தமான ஆசனத்தில் அமர்ந்து பிராணாயாமம் செய்ய வேண்டும். அது மூன்று வகை. பிராணாயாமம் செய்யும் போது வியர்வை தோன்றினால் அதமம், மனதில் சஞ்சலம் இருந்தால் மத்திமம், சிந்தையில் மகிழ்ச்சி ஏற்படின் உத்தமம். ரேதஸ் மேல் நோக்கி எழும் மந்திரம் ஜபித்துப் பிராணாயாமம் செய்வது சகற்பம் என்றும், இன்றி செய்வது விகற்பம் என்றும் பெயர் பெறும். நம் உடலில் பத்து வித வாயுக்கள் உள்ளன.

1. உயிருக்கு அத்தியாவசியமானதால் இதயத்தில் தங்குவது பிராணவாயு.
2. கீழ்நோக்கிப் பிரிவது அபானவாயு.
3. உடலெங்கும் நிறைந்து இரத்த ஓட்டம், சீரணமான உணவு உடலில் பரவ உதவுவது வியானவாயு.
4. உறுப்புகளின் சந்திகளில் தங்குவது உதானவாயு.
5. உடலைச் சமனப்படுத்தவது சமன வாயு.
6. விக்கல், கக்கல் ஏற்படக் காரணமானது கூர்ம வாயு.
7. தும்மலை உண்டாக்குவது கிரிகா வாயு.
8. கொட்டாவிக்கு உதவுவது தேவதத்தவாயு.
9. உடலை வீங்கச் செய்வது தனஞ்செய வாயு.
10. நாகன் வாயு - பாடுதல், கண் சிமிட்டல், மயிர்க்கூச்சலுக்கு உதவுவது.

இந்தப் பத்துவித வாயுக்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல் மிகவும் அவசியம்.

5. பிரத்தியாகாரம் : இச்சைகளினால் பாதிக்கப்படும் ஐம்புலன்களைத் தடுத்து நிறுத்துவது இது.
6. புலன்களை அடக்கி மனதில் தெளிவை ஏற்படுத்தி ஒரு நிலையில் நிறுத்துவது தாரணை.
7. ஆதியந்தமில்லாப் பரம்பொருளை மனக்கண்முன் நிறுத்தி நிலைப்பது தியானம் ஆகும்.
8. ஈசனைத் தியானித்து மனம் உருகி மெய் மறந்த நிலையில் இருப்பது சமாதி ஆகும். இந்த எட்டும் யோக அங்கங்கள் ஆகும்.

யோகம் கடைப்பிடிக்கும் போது பல இடையூறுகள் ஏற்படும். அவை நோய், சிரத்தையின்மை, பிரமாதம், ஐயுறல், விஷயங்களில் இச்சை, துன்பம், அப்பிரதிஷ்டை, பிராநிதி தரினம் என்று கூறப்படும் ஆதிதெய்வீகம், ஆதிபௌதிகம், ஆத்யாத்மிக துக்கங்கள் என்பன. இவையே அன்றி குறிப்பாக உணரக்கூடிய உபசருக்கம் ஆறு உள்ளன. அவை முறையே பிரதிபை, தேவதரிசனம், சிரவணம், வார்த்தை, சுவாதம், ரசனை ஆகும். மேலும் பஞ்சபூதத்தின் குணங்கள், பிரமத்தின் குணங்கள் என்று பல குணங்களும் விளக்கப்பட்டன. யோகியானவள் தன் முயற்சிக்கு ஏற்படும் இடையூறுகளை நன்குணர்ந்து அவற்றை விலக்கி, எம்பெருமான் திருவடிகளைச் சேவித்தால் அவர் அருளைப் பெற்று முக்தி அடைவான். யோகத்தைக் கடைப்பிடித்து ஈசன் அருள்பெறலாம். அதுமட்டுமின்றி நல்லறத்தைக் கடைபிடித்து அவ்வழி நின்றோர்க்கும் ஈசன் அருள் கிட்டும். ஒரு சமயம் பார்வதி சிவபெருமானிடம், எந்த வழியில் வழிபட்டால் அவரது அருள் கிடைக்கும் என்று கேட்டார். ஒரு சமயம் பிரம்மனிடம் தான் கூறியதைப் பார்வதிக்கு எடுத்துரைத்தார். மகாமேரு முதல் மங்கையர் வரை எவராக இருந்தாலும் உள்ளம் கனிந்து உருகி என்னிடம் செலுத்தும் அன்புக்கு நான் அருள் செய்வேன் என்றார்.

5. ஈசனின் ஐவகைத் தோற்றம்

1. சுவாத லோகித கற்பத்தில் பிரமன் ஈசனைத் தொழுது தியானிக்கும் போது, ஈசன் அவர் முன் அழகிய இளம்பாலகனாய்த் தோன்றினார். இது சத்தியோசாதம் என்னும் தோற்றம்.

2. படைப்புக் கடவுள் பிரம்மன், ஈசன் திருவடிகளில் அர்ச்சித்து வேதங்களால் துதித்தார். அப்போது ஈசன் திருமேனியிலிருந்து நான்கு முனிவர்கள் தோன்ற இத்தோற்றத்தை மனதில் தியானித்து ஈசனை வழிபடுவோர் சிவலோகம் அடைவர். முப்பதாவது இரத்த கற்பத்தில் பிரமன் ஈசனைத் தியானித்த போது சடையில் பாம்பணிந்து, கரங்களில் மானும், மழுவும் ஏந்தி ஈசன் தோன்றினார். இத்தோற்றம் வாமதேவம் எனப்படும்.

3. அப்போது பந்த பாசம் அறுத்த; தெளிந்த ஞானம் பெற்ற நால்வர் ஈசனிடம் தோன்றி உலகம் உய்ய தருமம் கடைப்பிடித்தும், மற்றவர்களுக்கு உணர்த்தியும் பல்லாண்டுகள் வாழ்ந்து ஈசன் திருவடிகளை அடைந்தனர். இத்திருவுருவைத் தியானித்து வணங்கி வழிபடுவோர் பிறப்பிறப்பு நீங்கி செஞ்சடையோன் தாள் சேர்வர். பீதகற்பத்தில் நான்முகனுக்கு, எம்பெருமான் சடையில் இளம் மதி அணிந்து தோன்றினார். இத்தோற்றம் தத்புருஷம் எனப்படும். ஆனந்தம் கொண்டு பிரமன் பரமனைப் பூசித்து வேதங்களால் துதித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஈசனார் அழகிய காயத்திரியை உண்டாக்கி அவருக்கு அளித்தார். உத்தமமான காயத்திரியைப் பக்தியுடன் ஆராதிப்பவர்களுக்கு நரகவாசம் இல்லை. கைலாச வாசம் தேடி வரும். ஈசன் திருமேனியிலிருந்து தோன்றிய நால்வர் நரகவாசமளிக்கும் கர்மாக்களை நீக்கி பஞ்சாக்ஷரத்தை உணர்ந்து ஜபித்து முதலில் ஈசன் திருவடியில் சேர்ந்தனர். இத்தத் புருஷனைத் தியானித்து அவரடித் தாமரையை வழிபடுவோர் பிறவிக்கடல் நீந்தி கயிலையை அடைவர்.

4. நீல கற்பத்தில் முக்கண்ணன் நெருப்பும், வாளும் கைகளில் ஏந்தி கரியரூபத்துடன் தோன்றினார். இது அகோரரூபம். மிக்க ஆனந்தத்துடன் பிரமன் அகோர வடிவில் ஈசனைப் பூசிக்க ஐயன் மனமகிழ்ந்து வேண்டுவன கேள் என்றிட பிரமன் ஐயனிடம் என்றும் குன்றாத அன்பைத் தர பிரார்த்தித்தார். அப்போது சிவனார் யாராலும் யாகம் செய்யும் அந்தணரைத் தடுத்து நிறுத்த முடியாதென்று உரைத்தார். சிவமந்திரத்தை லட்சம் முறை உச்சரித்தோர் பாபங்கள் நீங்கி கைலாசத்தில் வீற்றிருப்பர் என்று அருள்பாலித்து மறைந்தார்.

5. விஸ்வரூப கற்பத்தில் மலரயன் சிவனாரைத் தியானித்த போது ஈசன் சடையில் பிறைச் சந்திரன், நெற்றிக்கண், கோரைப்பற்கள் கொண்டு இருபுறம் இரு மாதர்களுடன் தோன்றினார். அப்போது பிரமன் சிவனாரின் இருபுறம் இருக்கும் மாதர்கள் யாவர் என்று வினவ, ஒருத்தி தேவர்களை ஈன்ற அன்னை, மற்றவள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் வாணி என்று கூறினார். இவ்வாறு  இப்பகுதியில் பரமனின் ஐவகைத் தோற்றம் விளக்கப்பட்டுள்ளன.

6. அரி, அயன் கண்ட ஜோதி

பிரகிருதித் தத்துவமே ஒளிப் பிழம்பாய் லிங்கமாய் மாறியது. திங்கள் முடிசூடி, நஞ்சுண்ட முக்கண்ணனே அந்த லிங்கமாகி நின்றான். பிரளய வெள்ளத்தில் ஆதிசேஷன் மீது நாராயணன் யோக துயில் கொண்டு இருந்தான். நித்திரை கலைந்து எழுந்த பிரமன் உலகை மீண்டும் படைக்க எண்ணுகையில் பிரளய நீரில் மாதவனைக் கண்டார். நாராயணன் தானே சகல உலகங்களையும் தோற்றுவிப்பவன் என்றான். ஈரேழு புவனங்களையும் அனைத்து உயிர்களையும் படைப்பவன் நானே என்றான் பிரம்மன். இருவரில் யார் பெரியவன் என்ற போட்டி துவங்கி சண்டையாக மாறியது. அவ்வமயம் அங்கே அவர்கள் எதிரில் ஓர் ஒளி தோன்றியது. அதன் அடிமுடி காணப்படாததால் அது என்ன என்று இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அதன் முடியைக் காண அன்னப்பறவை வடிவில் பிரம்மன் புறப்பட, அடியைக் காண வராக வடிவில் நாராயணன் புறப்பட்டான். இருவரும் முடி, அடி காணமுடியாமல் களைத்துத் திரும்பி வந்து ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அவர்கள் அகந்தை அகன்றது. இருவரும் கைகூப்பி அனற்பிழம்பாக, ஜோதி லிங்கமாக நிற்கும் அப்பொருளை வணங்கினர். அண்டம் கிடுகிடு என நடுங்குமாறு பேரொலி ஒன்று கேட்டது. அப்போது ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்ற ஐந்து முகங்களுடன் சடையில் பிறைச்சந்திரன் கைகளில் மான் மழுவேந்தி எம்பெருமான் தரிசனம் அளித்தார். இருவரும் வணங்கினர். அவர்கள் அப்பொருளைப் பலவாறு போற்றி சிரம்தாழ்த்த, கரம்கூப்பி, ரோமாஞ்சனம் பெற்றவராய் வணங்கினர். மகிழ்ச்சி அடைந்த ஈசனார் தன் வலப்புரத்தில் தோன்றியவன் மலரோன் என்றும், இடப்புறத்தில் தோன்றியவன் திருமால் என்றும் கூறி இருவரும் தம் மக்களாகிய முருகன், கணபதிக்கு ஒப்பானவர்கள் என்றுரைத்து வேண்டுவதைக் கேட்குமாறு பணித்தார். நான்முகன் அவருடைய அருளைப் பெற்ற தனக்கு வேறென்ன வேண்டும் என்று கூறி சிவனாரிடம் என்றும் குறையாத பக்தி அருள் செய்யுமாறு வேண்டினார். அவ்வாறே என்று அருள்பாலித்தார் பரமன். மாதவனிடம் பத்ம கற்பத்தில் நான்முகன் அவருக்குப் புத்திரனாக உந்திக் கமலத்தில் தோன்றுவான் என்று அருளினார். அன்று முதல் ஈசனார் லிங்க வடிவில் அடியவர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

7. பகவான் உந்தியில் தோன்றிய பரமன்

மாதவன் உந்தித் தோன்றல் மலரோன் பிரம்மனாவான். மாதவனுக்கும், மலரோனுக்கும் ஏற்பட்டபோட்டி பற்றி ஏற்கனவே கண்டோம். அப்போது திருமால் பிரமனிடம், உலகைப் படைப்பவன் அவன் என்றால், ஈரேழு உலகங்களையும் அவன் உதிரத்தில் காட்டமுடியுமா என்று கேட்டு பிரமன் வாய்வழிச் சென்று அவன் வயிற்றில் சகல புவனங்களையும் கண்டு திருப்தி பெற்றவனாய் வெளிவந்தான். அப்போது பிரமன் திருமாலிடம் ஐயம் தீர்ந்ததா என்று கேட்டு, அவர் வயிற்றிலும் அனைத்து லோகங்களையும் காட்ட முடியுமா என்று கேட்க, திருமால் அதற்கு ஒப்பி அவர் வாய்வழியாகச் செல்ல அனுமதித்தார். நான்முகன் நாராயணன் வயிற்றை அடைந்து அங்கே சகல புவனங்களையும் கண்டான். பின்னர் திரும்ப எண்ணி மேல் நோக்கிப் புறப்பட, அஃதறிந்த மாதவன் அவர் வெளிப்படாதிருக்க வழியில்லாது செய்து விட்டார். வெளியில் செல்லும் வழியை அடைய முடியாமல் சுற்றிச் சுற்றிக் களைந்து விட்டார் பிரமன். அப்போது மாதவன் தொப்புள் குழியிலிருந்து தாமரை மலரின் தண்டைக் கண்டார். தன் உடலை அணுவாக்கிக் கொண்டு தண்டின் வழியே மேலே ஏறி வந்தார். மேலே வந்ததும் மொட்டின் மீது வெளிப்பட்டு மலர் மேல் அமர்ந்தார். அப்போது அங்கே சூலம் ஏந்தி சிவபெருமான் தோன்றினார். ஆனால் அவரை அடையாளம் தெரியாமல் பிரம்மன், நான் வெளிவர முடியாமல் வழிகளை மறைத்தது மட்டுமின்றி புதிய தோற்றத்துடன் நிற்கிறாயா நீ என்று திருமாலைக் கேட்பதாக எண்ணி ஈசனிடம் கேட்டார். அது கேட்டுத் திருமால் பிரம்மனிடம் அவன் பெருமையை அறிய தானே வழிகளை அடைத்ததாகவும், அவனைத் தன் மகனாகக் கமலத்தில் இருத்திக் கொள்ளவே அவ்வாறு செய்ததாகவும் மாலவன், மலரவனிடம் கூறினான். அப்பொழுது தன் எதிரில் இருக்கும் அப்புருஷன் யார்? என்று பிரமன் கேட்க, நாராயணன் இவருக்கு நிகர் இவரே! இவரைத் தவிர வேறு தலைவன் இல்லை. சகல ஜீவராசிகளுக்கும் இவரே உயிராக விளங்குகிறார் என்றார். மாயையால் சூழப்பட்ட பிரம்மனால் ஈசனை உணர முடியவில்லை. ஒவ்வொரு கற்பத்திலும், பிரம்மன் மாயையால் மயங்கி அலைய, ஈசன் அவர் மயக்கம் தீர அழற்சுடராகத் தோன்றி அருளுகிறார். இனியாவது ஈசனை உணர்ந்து அவரைத் தொழுது அருள் பெறுவாய் என்று மாதவன் பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். இருவரும் பக்தியோடு ஈசனைத் துதித்துப் போற்றினர்.

8. ருத்திரர் தோற்றம்

பிரமன் தவம் மேற்கொண்டு தன் படைப்புத் தொழிலைத் தொடங்க, கொடிய நஞ்சுடை பாம்புகள் தோன்றின. அதனால் வேதனைப்பட்ட அயன் உயிரை விட, பிரமனின் ஆவி பதினோரு ருத்திரராகியது. அழுது கொண்டே தோன்றியதால் அவர்கள் ருத்திரர் எனப்பட்டனர். ஈசன் தோன்றி பிரமனை உயிர்ப்பித்தார். எழுந்த பிரமன் சிவபெருமானைத் துதிக்க ஒவ்வொரு சமயமும் ஒவ்வோர் உருவில் பரமன் காணப்பட்டான். சத்தியோசாதம், வாமதேவம், தத்புருஷம், அகோரம், விஸ்வரூபம் என்ற வடிவங்களில் தோன்றியதுடன் காயத்திரியையும் தோற்றுவித்தார். பரமன் பிரமனிடம் துவாபர யுகத்தில் வியாசர் தோன்றி வேதங்களைப் பகுத்தளிப்பார். என்னிடம் தோன்றிய நால்வர் ஞானத்தை அனைவருக்கும் உணர்த்துவதோடு அவர்களும் சிறந்த ஞானம் பெற்று கைலையங்கிரியை அடைவர். இந்திரனும், திருமாலும் நீயும் லிங்கபூசை செய்து கிடைத்தற்கரிய பேறு பெறுவீர்களாக என்று கூறி மறைந்தார். இவ்வுடலைப் புனிதம் ஆக்குபவை, ஆற்றில் நீராடல், அக்கினிப் பிரவேசம், மந்திரங்களை உணர்ந்து நடத்தல் ஆகும். நீராடும் போது வருணனையும், சிவனையும் பக்தியுடன் தியானிக்க வேண்டும்.
தருப்பை, பலாச இலை, நறுமண மலரை நீரில் தோய்த்து சிரசில் தெளித்துக் கொள்ள வேண்டும். அதே போல கைகளில் நீர் ஏந்தி மந்திரம் ஜபித்து மும்முறை அர்க்கியம் விட வேண்டும். ஆயிரத்தெட்டு முறை காயத்திரி ஜபிக்க வேண்டும். பின்னர் முனிவர்களுக்கு, தேவர்களுக்கு பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆசமனம் செய்து சுத்தாசனத்தில் அமரவேண்டும். பட்டு, மான்தோல், கம்பளி ஆகியவற்றின்மீது அமரலாம். தர்ப்பையின் மீது அமர்தல் சிறப்புடையது. பவித்திரம் அணிந்து வலது முழங்கால் மீது இடதுகையின் மீது வலதுகையை வைத்து பிரம்ம யஜ்ஞம் செய்ய வேண்டும். பிரணவத்தை உச்சரித்து நெற்றி, கைகள், மார்பு, வயிறு தோள்களிலும் கழுத்துகளிலும் விபூதியைப் பக்தியுடன் தரித்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் செய்து உடலைப் புனிதமாக்க வேண்டும். விநாயகரையும், முருகனையும் பிம்பத்தில் ஆவாகனம் செய்து உமாமகேசுவரனைத் தியானித்து வாசம் கொண்ட நீரால் மந்திர ஜபத்துடன் அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்து ஆடை ஆபரணங்களை அணிவித்து, தூய மலர் கொண்டு அர்ச்சித்து, தூப தீப நைவேத்தியங்களால் ஆராதித்துக் கற்பூரம் காட்டித் தரிசிக்க வேண்டும்.

பரப்பிரம்மம் இருபத்தாறாம் தத்துவம்

அப்பிரம்மத்தை நாடும் உயிர் இருபத்தைந்தாம் தத்துவம். அவ்வியத்தம் இருபத்தி நான்காம் தத்துவம், மகத்தத்துவம், அலங்காரம், பஞ்ச தன்மாத்திரைகள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம், பஞ்சபூதங்கள் ஆகிய இருபத்திரண்டும் சேர்ந்து இருபத்து மூன்று தத்துவங்களாகும். இருபத்தாறாம் தத்துவமாய் நின்ற தனி முதலே கர்த்தா. அவரிடமிருந்து தோன்றிய மூவரும் இவ்வுலகை நடத்திச் செல்கின்றனர்.

9. தாருகாவனத்தில் திகம்பர சந்நியாசி

தாருகாவனத்தில் இருந்து முனிவர்களுக்கு உண்மையை உணர்த்த எண்ணி சிவபெருமான் புறப்பட்டார். திகம்பரராய், சிறந்த அழகனாய், கையில் ஓடு ஏந்தி பிக்ஷõடனாராய் புறப்பட்டார் ஈசன். அவரைக் கண்ட ரிஷிபத்தினிகள் தம் சுய அறிவின்றி, ஈசன் வசத்தினராகி அவரைப் பின் தொடர அனைவருடனும் முனிவர்கள்  இருந்த யாகசாலைக்கு அருகில் வந்தார் ஈசன். இந்நிலையில் முனிவர்கள் சினம் கொண்டு யாரோ ஒரு காமுகனை தன் பத்தினிகள் பின் தொடர்ந்து வந்திருப்பதைக் கண்டு நிலைகுலைந்தனர். அவர்கள் அந்த திகம்பர சன்னியாசியைச் சபித்தனர். ஆனால், அவர்களுடைய சாபம் பலனற்றுப் போகவே திகைப்படைந்தனரே அல்லாமல், வந்தவர் பரமன் என்பதை அறிந்து கொள்ளவில்லை. அப்போது சன்னியாசி திடீரென்று மறைந்துவிட்டார். சன்னியாசி மறைந்தவுடன் கொடுந்துன்பங்கள் முனிவர்களைப் பற்றிக் கொண்டன. செய்வதறியாது அவர்கள் உதவிக்காக பிரமனை நாடினர். நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த பிரமன் முனிவர்களிடம் கீழ்க்கண்டவாறு கூறினார். நீங்கள் பெரும் தவறு இழைத்துவிட்டீர்கள். முக்கியமாக அனைத்துக்கும் மேலான பரம்பொருள் ஒன்று இருப்பதை ஏற்கவில்லை. அதனை உணர்த்துவதற்கே எம்பெருமான் உங்களிடையே வந்தார். அவரை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. சாபமும் கொடுத்தீர்கள். அந்த அபசாரமே வெப்ப நோயால் உங்களைத் துன்புறுத்துகிறது என்றார். ஈசனிடம் பக்தி உள்ளவன், அதிதியாக வரின், அவனை ஈசனாகவே எண்ணி உபசரிக்க வேண்டும் என்ற மறைகள் கூற்றை நீங்கள் அறியவில்லை. அதிதியை உபசரித்து அழியாப் பேரின்பம் பெற்ற சுதரிசனன் வரலாற்றைக் கேளுங்கள் என்று அந்த வரலாற்றைக் கூறினார் பிரமன்.

10. சுதரிசனன் வரலாறு

உத்தம குலத்தில் பிறந்த அந்தணன் சுதரிசனனும், கற்பிற் சிறந்த மனைவியும், அன்றாடம் தன் இல்லத்திற்கு வரும் அதிதிகள் மனம் கோணாமல் அவர்களுக்கு உணவிட்டு, மகிழ்வித்து அனுப்பி வந்தனர். ஒருநாள் ஓர் அதிதி வந்தார். அவரையும் எல்லா வகையிலும் உபசரித்து உணவூட்டினர். இடையில் சுதரிசனன் ஓர் அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால் மனைவியிடம் அதிதி மனம் கோணாமல் அவரை உபசரிக்குமாறு கூறிவிட்டுச் சென்றான். உணவருந்திய அதிதி அவளிடம் தனக்கு உடல் சுகமும் அளிக்கும்படி கேட்டான். அவள் பதைபதைத்து விட்டாள். கற்புக்குப் பங்கம் வரும், அல்லது அதிதிக்கு உபசாரக் குறைவு ஏற்படும் என்று எண்ணி செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது சுதரிசனன் வீடு திரும்பினான். அதிதிக்கு எல்லாச் சௌகரியமும் கிடைத்ததா? பூரண திருப்தியா? என்று கேட்க மனைவி பதைபதைத்திருக்க, அதிதி அந்தணர் மனைவி அறுசுவை உண்டியுடன், உடலுக்குச் சுகம் அளித்து திருப்தி கொடுத்தாள் என்று கூறினார். அப்போது அந்தணன் சினமோ, வெறுப்போ கொள்ளாமல், தன் மனைவியை அவர் அனுபவித்து விட்டதால் அவள் அதிதியின் சொத்து என்று கூறி, அவளையும் உடன் அழைத்துச் செல்லுமாறு வேண்டினான். அப்போது அந்த அதிதி மறைந்து விட்டார். அங்கே அவர்களுக்குச் சிவபெருமான் காட்சி தந்து, தான் அவர் மனைவியைத் தீண்டவும் இல்லை. அவள் கற்புக்கரசி. புனிதமானவள். பிறவிப் பெரும் துயரினின்று நீங்கள் இருவரும் விடுபட்டு என்னிடம் வந்து சேர்வீராக என்று அருள்பாலித்தார். இவ்வாறு அதிதி பூஜையின் மேன்மையைப் பிரமன் தாருகாவனத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், அம்முனிவர்கள் இறைவன் திருவடிகளிலேயே சரண் புக, அவரை வழிபடின் அவர் அருளால் முனிவர்களின் துன்பங்கள் நீங்கும் என்று அறிவுறுத்தினார். அடுத்து, பிரமன் அவர்களுக்குத் துறவின் தன்மையை எடுத்துக் கூறியதுடன் துறவிகள் மட்டுமின்றி மற்றோரும் ஈசன் பேரருளுக்குப் பாத்திரமானவர்களே. தாம் செய்யும் கர்மாக்களை அந்தப் பெருமானுக்கே அர்ப்பணித்து, அனைத்திலும் ஈசனைக் காண்பவர் முக்தி அடைவர் என்றார்.

11. காலனை வென்ற சுவேதன் வரலாறு

சுவேதன் என்ற மறையோன் தன் வாழ்நாள் மிகக்குறைவே என்று அறிந்து ஈசன்தாள் பற்றி, சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து பக்தியுடன் வழிபட்டு வந்தான். எந்த நேரமும், அவன் செயல் நினைப்பு அனைத்தும் ஈசனைப் பற்றியதாகவே இருந்தது. அவன் ஆயுள் முடியும் நேரம் காலனே நேரில் வந்தான். காலனைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. மேலும் ஈசன் திருவடிகளைப் பற்றினார்க்கு யாராலும், எவ்விதமும் துன்பம் நேராது என்று காலனிடம் சொன்னான். உன்னால் எனக்கு என்ன பயம் என்றான். அதைக் கேட்ட காலன் கடுஞ்சினம் கொண்டு பாசக்கயிற்றை சுவேதன் மீது வீசினான். கயிறு இறுகத் தொடங்கியது. ஆனால் சுவேதன் என்னைக் காப்பது நீயே அல்லவா? என்று எண்ணியவாறு தான் பூஜித்து வந்த லிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். அடுத்த கணம் லிங்கத்திலிருந்து தோன்றிய பரமன் கோபத்துடன் காலனை உற்று நோக்க அவன் வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிர் நீத்தான். பரமன் சுவேதனுக்கு அழியா வாழ்வைக் கொடுத்து தம் கணங்களில் ஒருவனாக இருக்க அருள் செய்தார். உயிரற்றுக் கிடந்த யமுனை எழுப்பி அவனிருப்பிடம் அனுப்பி வைத்தார். சுவேதன் வரலாற்றைக் கூறிய பிரமன் முனிவர்களிடம், ஈசனைத் தியானித்து அவரைப் பக்தியுடன் ஆராதித்து வாருங்கள். சிவலிங்கம் ஒன்றை அமைத்து அதில் ஈசனைத் தியானித்து மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுங்கள். உங்கள் அன்புக்கு ஈசன் கட்டுண்டு அருள்புரிவான் என்றார். அவ்வாறே முனிவர்கள் பக்தியுடன் பூசிக்க திருப்தி அடைந்த ஈசன் அவர்களுக்கு அருள்புரிய முன் தோன்றிய அதே திகம்பர சந்நியாசி கோலத்தில் தாருகாவனம் வந்து சேர்ந்தார். இம்முறை முனிவர்கள் ஈசனை அன்புடன் வரவேற்றனர். வணங்கினர். முனி பத்தினிகளும் அவர்களுடன் ஈசனை வழிபட்டனர். மேலும் அவர்கள் ஈசனை நோக்கி, நாங்கள் செய்த அபசாரங்களை மன்னித்து, அடியார்களாகிய எங்களிடம் அளவற்ற அன்பு பூண்டு, பக்தியுடன் நாங்கள் அளிக்கும் உபசாரங்களை மனமுவந்து ஏற்று அருளவேண்டும் என்று வேண்டினர். அப்போது ஈசனின் திகம்பர வடிவம் மறைந்து, கைகளில் மானும், மழுவும் ஏந்தி உமாதேவியுடன் காட்சி அளித்தார். முனிவர்கள் பரமானந்தக் கடலில் மூழ்கினர். நெஞ்சம் உருக ஈசனைப் பக்தியுடன் துதித்து வணங்கினர். சுவேதன் வரலாறு, மார்க்கண்டேயன் வரலாறு போன்றது. மேலும், விரிஞ்சன் முதலான தேவர்கள் பாசுபத விரதத்தை ஆற்றியே அழியா உயர் பதத்தை அடைந்தனர். ஆகவே நீங்களும் அவ்விரதத்தைப் பக்தியுடன் கடைப்பிடியுங்கள் என்று கூறி மறைந்தார் ஈசன். முனிவர்களும் பக்தியுடன் பாசுபத விரதத்தைக் கடைப்பிடித்து வல்வினைகள் தொலையப் பெற்றனர்.

12. மாயனை வென்ற ததீசி

சனத்குமாரர் நந்தியை வணங்கி, ஐயனே, ததீசி முனிவர் மாயனை வென்ற, தாங்கள் கூற்றினைக் கடந்த வரலாற்றினை அன்பு கூர்ந்து சொல்ல வேண்டும் என்று வேண்டினார். ஒரு சமயம் பிரமன் தூங்கிய போது எழுந்த தும்மலிலிந்து சுபன் தோன்றினான். அவன் இந்திரன் அருளால் வச்சிராயுதம் பெற்றும் மக்கள் நலம் காக்கும் மன்னனாகத் திகழ்ந்தான். மன்னனும், ததீசியும், ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது யார் பெரியவர் என்ற போட்டி எண்ணம் தோன்ற ஒவ்வொருவரும் தானே பெரியவன் என்று வாதித்தனர். மன்னவர்களை அண்டியே மறையோர் வாழ்கிறார் என்று கூற, ததீசி முனிவருக்குக் கோபம் வந்தது. அவர் அந்தணனே பெரியவர்.  எம்மை நீங்கள் பூஜிக்க வேண்டும் என்று கூறி அரசன் தலையில் ஓங்கி அறைந்தார். மன்னன் மிக்க கோபத்துடன் வஜ்ஜிராயுதத்தை எடுத்து ததீசி மார்பிலே அடிக்க, அவர் ரத்தம் கக்கி துடிதுடித்து மயங்கி விழுந்தார். நினைவு திரும்பியதும் முனிவர் அரண்மனையை விட்டு வெளியேறினார். ததீசி சுக்கிராச்சாரியாரை நோக்கித் தவம் இயற்ற அவர் தோன்றினார். அவரிடம் நிகழ்ந்ததை எல்லாம் கூறி, அரசரின் வஜ்ஜிராயுதத்தால் ஊறு நேர்வதற்கு முன் இருந்த உடலைப் பெற வேண்டினார். அப்போது சுக்கிரர் தனக்கு அச்சக்தி இல்லை என்றும் பரமனை வழிபட்டுக் கோரியதை பெறுமாறும் அறிவுறுத்தினார். ததீசி முனிவர் சிவனை வழிபட, அவர் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க முனிவர் வஜ்ஜிராயுதத்தால் ஊறு நேரா தேகத்தை அருள வேண்டினார். அவ்வாறே ஈசனார் வரம் அருள ததீசி அரசனுடைய அரண்மனைக்கு வந்தார். வந்தவர் மன்னனிடம் இப்போது உன் பலத்தைக் காட்டு என்று கூற, மன்னன் மறுபடியும் முனிவரை வஜ்ஜிராயுதத்தால் தாக்க, வஜ்ஜிராயுதம் பொடிப் பொடியாகி விட்டது. முனிவர் கேலியாகச் சிரித்து விட்டுச் சென்றார். மன்னன் திருமாலைக் குறித்து தவமியற்ற, அவரும் அவன் முன் தோன்றினார். மன்னன் நிகழ்ந்தவற்றைக் கூறி ததீசியின் உடலைச் சோதிக்க ஒரு ஆயுதம் வேண்ட, ஈசனார் திருவருள் பெற்று முனிவரைப் பணிய வைப்பது எப்படி முடியும். எனினும் தானே அந்தணனாக அங்கு வருவதாகக் கூறினார். இவ்வாறு தோன்றிய திருமாலைப் பார்த்த முனிவர், பரந்தாமா அன்பனுக்கு அருள் புரிய ஏன் இந்த வேடம்? என்று கேட்க, என திருமால் சுய உருவில் தோன்றி முனிவரிடம் வேணியன் அருள் பெற்றவரால் ஆகாதது உண்டோ! மன்னன் சுபன் என் பக்தன். அவனுடன் நட்புடன் இருக்க வேண்டுகிறேன் என்றார். ததீசி அதை ஏற்கவில்லை. தான் நேரில் வந்து கேட்டும் ஏற்காத முனிவர் மீது கோபம் கொண்ட திருமால், அவர்மீது சக்கராயுதத்தை வீச, முனிவர் ஈசனைத் தியானித்து நின்றார். சக்கரம் முனிவரை மும்முரம் வலம் வந்து திருமாலிடமே திரும்பியது. அப்போது முனிவர், இந்தச் சக்கரம் நீலகண்டன் தந்ததல்லவா! அது அவர் பக்தருக்குத் துன்பம் தருமா? என்று கேட்டார். இப்போரில் மாதவனுக்கு உதவ வந்து தேவர்கள் தோற்று ஓடினர். தன்னந்தனியாய் நின்ற மாதவன் மாயையால் முனிவரைக் குழப்ப, ஈசன் தந்த ஞானக்கண் மூலம் முனிவர் எதையும் நன்கு காண முடிந்தது. இவ்வாறு ததீசி முனிவரை வெல்ல முடியாமல் விஷ்ணு மயங்கி இருக்கையில் அங்கே பிரமன், சிவன் தோன்றி இருவரையும் கோபம் நீங்கி சாந்தமடையுமாறு வேண்டினார். திருமால் ததீசியிடம் அவர் தவத்துக்குத் தலை வணங்குவதாகக் கூறி பாற்கடல் திரும்பினார். அது கண்ட சுபன் பாற்கடல் சென்று மாதவனிடம் தன் நிலைமை என்ன என்று கேட்க திருமால் விரோதம் நீக்கி நட்பு பெறுமாறு கூற, மன்னன் ததீசியை வணங்கித் தான் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான். முனிவரும் முன்போல் அவனிடம் நட்பு கொண்டிருந்தார். அடுத்து, நந்தி காலனைக் கடந்த விவரத்தைக் கூறலானார்.

13. சிலாதரும் நந்தியும்

சிலாதர் என்ற முனிவர் இந்திரனைக் குறித்துத் தவம் செய்ய, இந்திரன் தோன்ற, இறவாப் புதல்வன் ஒருவனை வேண்டினான். அதற்கு இந்திரன், பிரமனே பரார்த்தம் இரண்டும் கடந்த பின் இறப்பை அடைவதால் அத்தகைய புதல்வனைக் கோருவது சாத்தியமாகாது என்றான். பின்னர் சிலாதர் சிவனை வேண்டிப் பல்லாண்டுகள் தவம் செய்ய அவர் உடம்பிலுள்ள எலும்புகள் தவிர மற்றவை எல்லாம் அரிக்கப்பட்டன. அந்நிலையில் ஈசன் அவர் முன் தோன்றி அவர் உடலை முன்போல் ஆக்கி அவர் வேண்டுதலுக்கு இணங்க, தானே அவருடைய மகனாக நந்தி என்ற பெயரில் தோன்றுவதாகக் கூறி மறைந்தார். அடுத்து சிலாதன் ஒரு யாகம் செய்ய, அதிலிருந்து நந்தி தோன்றினார்.  அவருக்கு மூன்று கண்கள், நான்கு கரங்கள் இருந்தன. ஒரு கையில் சூலம், மற்றொன்றில் கதையும் இருந்தன. வைரக் கவசம் இருந்தது. அப்போது கந்தவர்கள் பாடினர். தேவலோக நடனமாதர்கள் நடனமாடினர். நந்தியை சிலாதர் வீட்டிற்குள் எடுத்துச் செல்ல, அவர் சாதாரண மானிடக் குழந்தையாக மாறிவிட்டார். ஏழாண்டு வயதிலேயே அவர் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். மித்திரர், வருணர் எனும் இரு தேவர்கள் சிலாதரைக் காண வந்தனர். நந்தியின் உடலில் எல்லா சுபலக்ஷணங்களும் காணப்படுகின்றன. எனினும் எட்டு வயதுக்குள்ளாகவே இறந்து விடுவான் என்றனர். இதுகேட்ட சிலாதர் வருந்தி அழ, அதைக் காணச் சகியாத நந்தி சிவபெருமானைப் பிரார்த்திக்கலானார். அப்போது சிவபெருமான் நந்தியின் முன் தோன்றி நந்திக்கு மரணமே இல்லை. எப்போதும் சிவனார் அருகிலேயே அவர் இருப்பார் என்று கூறி, தன் கழுத்திலிருந்து ஒரு கழுத்தணியை எடுத்து நந்தியின் கழுத்தில் அணிவித்தார். உடனே நந்தி ஒரு தெய்வ வடிவம் பெற்றார். பத்துக் கரங்கள், மூன்று கண்களுடன் தோன்றிய அவரைப் பார்வதி தன் மகனாக ஏற்றாள். அன்று முதல் அவர் கணநாதராக சிவத்தொண்டு செய்து வந்தார்.

14. யுகங்களும், யுக தருமங்களும்

கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்கு. கிருத யுகத்தில் மக்கள் ஈசன் திருவடியை எப்போதும் துதி செய்த வண்ணம் இருப்பர். தரும தேவதைக்கு நான்கு கால்கள் இருக்கும். அனைவருக்கும் வாழ்நாள் ஒரே அளவில் இருக்கும். வருண பேதங்கள் இன்றி, மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பர். ஆசிரம வேறுபாடுகள் இல்லை. ஞானம் தெளிந்தவர்களாய் பரமன் அருளுக்குப் பாத்திரங்களாக இருப்பர். எங்கும் எல்லாம் இன்பமயம். மக்கள் சாத்துவிக குணம் உடையவர்களாய் பொறாமை, பொச்சரவு முதலியன இன்றி எல்லா உலகுக்கும் செல்லலாம். திரேதா யுகத்தில் சிறந்த யாகங்கள் புரிவர். தரும தேவதை ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருக்கும். மழை பொழியும். மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து காய் கனிகள் குறைவின்றிக் கிடைக்கும். மக்கள் சினமுற்று சண்டையிடுவர். மக்கள் பொன், பொருள், ஆடைகள் அறுசுவை ஆகியவற்றில் விருப்பம் கொண்டிருப்பர். இளம் கன்னியர்களுடன் கூடி, இன்பமாக வசதியுள்ள வாழ்வு வாழ்வர். மன்னர்கள் நாட்டைப் பெருக்க போர் புரிவர். எளியோரை, வலியோர் வாட்டுவர். சில அரசர்கள் தரும நெறியில் நின்று உயர் பதம் அடைவர். துவாபர யுகத்தில் மக்களுக்கு கோபம், போட்டி மனப்பான்மை, சண்டை சச்சரவு இருக்கும். இந்த யுகத்தில் தரும தேவதை இரண்டு கால்களை இழந்து இரண்டு கால்களிலேயே நிற்கும். இந்த யுகத்தில் பாபம், புண்ணியம் வேறுபாடு புரியாமல் குழம்பிய மனத்துடன் மக்கள் தவிப்பர். சரியான குழம்பி இருக்கும். வியாசர் வேதங்களைப் பாகுபடுத்தி நான்காக வகுப்பார். புராணங்களும் இயற்றுவார். கலியுகத்தில் மெய்ஞானம் விளங்கத் தானம் புரிவர். தரும தேவதை இந்த யுகத்தில் மூன்று கால்களையும் இழந்து ஒற்றைக் காலிலே இருக்கும். அதர்மம் தலைதூக்கி பொய்ம்மை, கொடுமை, இழப்பு, களவு, வஞ்சனை, கொலை, கொள்ளை ஆகியவை தழைத்திருக்கும். அந்தணர், அரசர், வணிகர் பலவகை இன்னல்களுக்கு ஆளாவர். ஒழுக்கம் தவறி நடப்பர். மன்னர்கள் (அ) ஆட்சியாளர்கள் பொன்னும், பொருளும் சேர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பர். அந்தணர்கள் வேதம், வேள்வி பின்பற்றாமல் போக வாழ்வு வாழ்வர். வணிகர் பேராசை கொண்டு அதர்ம வழிகளில் செல்வர். வேடதாரிகள் மிகுதியாக இருப்பர். பெண்களிடம் ஒழுக்கக் குறைவு காணப்படும்.

கிருதயுகத்தில் ஓராண்டு தவம் செய்து பலன் பெறுவர். திரேதா யுகத்தில் மூன்றே மாதங்களில் அத்தகைய பலனைப் பெறலாம். துவாபர யுகத்தில் ஒரே மாதத்தில் பெறலாம். கலியுகத்தில் இறைவனிடம் பக்தி செலுத்தி, தூய உள்ளத்துடன் பூசனை புரிந்து ஒரே நாளில் அருளும், மேற்படி பலனும் பெறுவர். ஈசன் திருவடிகளில் சரண் புகுந்து அவரே அனைத்தும் எனக் கொள்பவர் வீடுபேறு பெறுவர்.

15. ஈசனுக்குப் பற்பல உருவங்கள்

ஒரு நாமம் ஓரூருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ
-மாணிக்கவாசகர்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருட்சோதி. பிரணவ வடிவன், ஞானச்சொரூபன் ஆகிய ஈசனுக்கு அவரவர் செய்யும் கருமம், அவரவர் இச்சைக்கேற்ப விளங்கிடும் பற்பல உருவங்களைக் காண்போம்.

1. ஈசனின் தலை சுவர்க்கம்; ஆகாயம் தொப்புள்; சூரியன் சந்திரன், அக்கினி-முக்கண்கள்; திக்குகள் செவி; பாதாளம் திருவடி, விண்மீன்கள், முத்துக்களாலான ஒரு மணி மாலை, விண்ணவர்கள் புயங்கள், அலைகடல்கள் ஆடை, ஞானம் ஒளி; மேகங்கள் ஜடாபாரங்கள்; வாயு-மூச்சு; பிரகிருதியே தேவி என்று இயற்கை வடிவில் ஈசனைக் காண்பர். அவர் முகத்திலிருந்து அந்தணர், தோள்களிலிருந்து இந்திரன், உபேந்திரன்; தொடையிலிருந்து வணிகர்கள், மற்றவர் பாதங்களிலிருந்து தோன்றினர். விருப்புடன் சிவபெருமான் சில உருவங்களைத் தாங்கினார்.

2. தியானத்தின் மூலம் உயர்ந்தோர் தம் சிந்தையில் கண்டு, ஒளிமயமான அப்பெருமானை வழிபட்டு குழகனே அருளாம் என்று வந்தனை செய்வர். அந்த லிங்கம் வாயிகலிங்கம் ஆகும்.

3. பரமன் உமாதேவியோடும், முருகனுடனும், பிறை அணிந்தவனாக காணப்படுவது சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும்.

4. திரிசூலம் தாங்கி நான்கு கரங்கள், மூன்று கண்கள், ஏக பாதத்துடன் விளங்குபவர் ஏகபாத மூர்த்தி எனப்படுபவர்.

5. இரு முகம், ஏழு புயம், மூன்று பாதங்கள் கொண்ட வடிவம் யஞ்ஞ தேவன்.

6. உமாமகேசுவரராக ரிஷபாமூர்த்தியாகத் தோன்றுவது ஓர் உருவம்.

7. நந்தியுடன், சிவகணங்கள் பரமனைப் பணிந்து வணங்கிடும் உருவம் கண் கொள்ளாக் காட்சி ஆகும்.

8. ஒரு கையில் உடுக்கை, மற்றொன்றில் தீ, தூக்கிய பாதம், ஒரு கை தொங்க, மற்றொன்று அபயகரமாக நடனமாடும் உருவம் நடராஜர் ஆகும்.

9-12 . மேலும் ஈசன் கொண்ட பஞ்சத்தோற்றங்கள் வாமதேவம், தத்புருஷம், அகோரரூபம் ஆகியவை.

13. இடுப்பில் சிங்கத்தின் தோல், புயங்களில் பொன்னகைகள், மார்பில் சங்குமணி ஆரம், ஜடையிலே பிறைமதி, கையில் குருதியுடன் கூடிய கபாலம் கொண்ட உரு ஒன்று.

14. அபயக்கரம், வரதஹஸ்தம், சூலமேந்திய கரம், தாமரைக் கொண்ட கரம் என்று நான்கு கைகளுடன் உள்ள உருவம்.

15. நெற்றிக்கண் தீ கக்க, மண்டையோட்டு மாலை அணிந்து, அயன், அரி, அரவம் கையில் பற்றி சுடுகாட்டில் வெண்ணீறு பூசி ஆடும் நடன உருவம்.

16. ஜலந்தரனைக் கால் கட்டை விரலால் பூமியில் வட்டம் எழுதி, அச்சக்கரத்தால் அவன் உயிர் வாங்கி ஜலந்தாரசுர வதமூர்த்தி வடிவம்.

17. கூரிய சூலம் தாங்கி, தேவியை அணைத்து லிங்கத்திலிருந்து தோன்றி காலனை அழித்த கால சம்ஹாரமூர்த்தி உருவம்.

18. தேவர்கள் அமைத்த தேரிலே இருந்து முப்புரங்களைச் சிரிப்பினால் எரித்துச் சாம்பலாக்கிய திரிபுர தகனமூர்த்தி உருவம்.

19. வேலவனை இடது தொடையில் அமர்த்தி அருள் புரியும் குகானுக்கிரக மூர்த்தி.

20. அவ்வாறே விநாயகரை சுமந்திருக்க காணப்படும் விநாயக அனுக்கிரக மூர்த்தி.

21. சப்த மாதர்களுக்கு அனுக்கிரகம் செய்த சப்தகன்னியர் அனுக்கிரக மூர்த்தி.

22. காளியாகிய துர்க்கைக்கு அருள்புரியும் துர்க்கானுக்கிரக மூர்த்தி மற்றும் ஜோதிலிங்க மூர்த்தி, தக்ஷிணாமூர்த்தி, பைரவ மூர்த்தி போன்றவைகளே அன்றி ஈசன் விளையாட்டாக கொண்ட கோலங்கள் எதையும் வடிவுற அமைத்து வழிபடுவோர் எம்பெருமான் பேரருளுக்குப் பாத்திரராகி வினைகள் நீங்கப்பெற்று என்றென்றும் அவன் திருவடி நிழலிலே வாழ்ந்திருக்கும் பேறு பெறுவர்.

16. பாசுபத விரதம்

நந்திகேச்வரர் சனத்குமாரருக்கு உபதேசித்த பாசுபத விரதம் பற்றி சூதர் முனிவர்களுக்கு விவரிக்கலானார். பிரமாதி தேவர்கள் கைலயங்கிரி வாசனை கைகூப்பித் தொழுது பசுபாசம் அகன்றிட அருள்புரியுமாறு பிரார்த்திக்க ஈசன் பாசுபத விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூற அவர்களும் அந்த விரதத்தை அனுஷ்டித்து பசுத்தன்மை நீங்கப்பெற்றனர். பாசுபத விரதம் என்பது ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனைத் தரக்கூடியது. சித்திரைத் திங்களில் படிக லிங்கத்தில் ஈசனை ஆவாகனம் செய்து, அபிஷேகம் செய்து, அலங்கரித்து பொற்றாமரை நடுவில் வைத்து நறுமண மலர்கள் கொண்டு அர்ச்சித்து, தூப தீப நைவேத்ய உபசாரங்கள் செய்து, இறைவன் நாமத்தை உளமுருக ஜபித்து வணங்க வேண்டும். தென்திசையில் அகில், மேற்கில் மனோசிலை, வடக்கில் சந்தனம், கிழக்கில் அரிதாரம் ஆகியவற்றை பீடத்தின் அருகில் வைத்து ஈசனை ஆராதிக்க வேண்டும். வைகாசியில் வைர லிங்கத்தை வைத்தும், ஆனியில் மரகத லிங்கம், ஆடியில் முத்துலிங்கம், ஆவணியில் நீலலிங்கம், புரட்டாசியில் மரகத லிங்கம், ஐப்பசியில் கோமேதக லிங்கம், கார்த்திகையில் பவள லிங்கம், மார்கழியில் வைடூர்ய லிங்கம், தையில் புஷ்பராக லிங்கம், மாசியில் சூரியகாந்தத்தால் ஆன லிங்கம், பங்குனியில் பளிங்குக் கல்லினால் ஆன லிங்கம் என்று வைத்து பரமனைத் தொழ வேண்டும். ரத்தினங்களுக்குப் பதிலாக பொன், வெள்ளி, செம்பினால் ஆகிய லிங்கங்களையும் பூஜிக்கலாம். இவ்வாறு பன்னிரண்டு மாதங்களும் நன்கு பூசை செய்து, அந்தணர்களுக்கு உணவு முதலிய உபசாரங்கள் செய்து அவர்களை ஈசன் வடிவாக எண்ணி அர்ச்சித்து வணங்கி லிங்கங்களைத் தானம் செய்ய வேண்டும். பூஜித்த லிங்கங்களைச் சிவாலயத்தில் சேர்க்கலாம். பின்னர் வியபோகன தோத்திரத்தால் சிவனைத் துதிக்கவேண்டும். அவ்வாறு செய்பவர்கள் பசுபாசம் நீங்கி சிவலோகம் அடைவர்.

நம: சிவாய சுத்தாய நிர்மலாய யசஸ்விநே:
துஷ்டாந்தகாய ஸர்வாய பவாய பரமாதிமநே
என்று தொடங்கும் துதி வியபோகன ஸ்தோத்திரம் ஆகும்.

உமாமகேசுவர விரதம் : அஷ்டமி, சதுர்த்தசி ஆகிய நாட்களில் உபவாசமிருந்து ஓராண்டு விரதம் இயற்றிய பின் பொன்னாலோ, வெள்ளியாலோ லிங்கத்தை அழகுடன் செய்து உமையுடன் பிரதிஷ்டித்து என் வினை தீர்த்தருள்வாய் என்று பிரார்த்தித்து மேள தாளங்களுடன் லிங்கத்தைச் சிவாலயத்துக்கு எடுத்துச் சென்று மறையோர்க்குப் பொருள்களுடன் தானம் செய்ய வேண்டும். பசும்பொன்னால் அமைந்த லிங்கத்துடன் ரிஷபமும், சூலமும் அமைத்து ஓராண்டு வழிபடுவோர் சிவலோகப் பிராப்தி அடைவர். இந்த உமாமகேசுவர விரதத்தை ஆண் பெண் இருபாலாரும் பக்தியுடன் கடைபிடிக்கலாம். ஈசன் திருவருளை வேண்டி அனுஷ்டிக்கும் விரதத்தின் முடிவில் பஞ்சாக்ஷரத்தை பக்தியுடன் பூஜிக்க வேண்டும்.

17. பஞ்சாக்ஷர மந்திர பெருமை

ஒரு சமயம் தேவி ஈசனிடம் பஞ்சாக்ஷர மந்திரத்தின் பெருமையைப் பற்றிக் கேட்க, ஈசன் ஐந்தெழுத்தின் மகிமை குறித்து பார்வதி தேவிக்கு விவரித்தார்.

பரமன் கூறியதாவது : சிருஷ்டிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட பிரமன் படைக்கும் சக்தி அடைய என் அருள் வேண்டி என்னைத் துதி செய்ய, வேதங்களும் போற்றி வணங்கும் பஞ்சாக்ஷரத்தை (திரு ஐந்தெழுத்தை) அவனுக்கு என் ஐந்து முகங்களாலும் உபதேசம் செய்ய, பிரமன் சகல ஞானமும் பெற்று படைக்கத் தொடங்க அவனிடமிருந்து தசப் பிரம்மாக்கள் தோன்றினர். அவர்கள் இல்லற பந்தம் பற்றாதிருப்பதற்காக தவம் செய்ய நான் அவர்கள் முன் தோன்றி யோகத்தையும், ஐந்தெழுத்தையும் உபதேசித்தேன். அவர்கள் அதனை வையகம் முழுவதும் பரப்பினர். வேதத்தின் சாரமாகவும், விவரிக்க முடியாத உட்பொருளை உடையதும், முக்தியும் அளிக்கவல்லதாக பஞ்சாக்ஷரத்தை ஜபித்தவர் பிறவித் துன்பம் நீங்கப் பெறுவர் என்றார் பரமன்.

ஜபிக்கும் முறை

ஈசனை நன்கு உணர்ந்து, அவர் திருஉருவைத் தெளிவுற மனத்திலேயே சிந்தித்து, அவர் அருள் ஒன்றையே வேண்டி உருகி ஐந்தெழுத்தை ஜபிக்க வேண்டும். திருவைந்தெழுத்தை குரு முகமாக உபதேசம் பெற வேண்டும். நாளொன்றுக்கு எத்தனை என்று சங்கல்பித்துக் கொண்டு விரதம் எடுத்து, இரவு மட்டும் உணவு கொண்டு ஆற்றங்கரை, சமுத்திர தீரம், சிவாலயம் ஏதாவது ஓரிடத்தில் உடல், உள்ளம் தூய்மையோடு இறைவனை வணங்கி வல்வினைகள் நீங்கிடப் பிரார்த்தனை கொண்டு ஜபிக்க வேண்டும். தினமும் ஜபிப்பதாயின் பகல் உணவுக்கு முன் ஜபிக்க வேண்டும். எண்ணிக்கையை விரலினால், விரல் ரேகையால் (அ) மணிகளைக் கொண்ட ஜபமாலையால் எண்ண வேண்டும்.
ஜபமாலை, பவளமணி மாலை, ஸ்படிக மாலை, முத்து மாலை, ருத்ராக்ஷமாலை ஏதாவதொன்றைப் பயன்படுத்தலாம். ஈசன் திருவடிகளை மனத்தில் சிந்தித்து ஜபிப்பதே உத்தமமான பலன்களைத் தரவல்லது. திருவைந்தெழுத்தை ஜபிப்பவர்கள் தூயவராக இருத்தல் வேண்டும். பஞ்சமபாதகங்கள் பற்றிய எண்ணமே கூடாது. ஈசன் திருவடிகளைத் தியானித்து சிறிதளவே உணவு உட்கொள்ள வேண்டும். பட்டை விரித்து அல்லது பலகையின் மீது அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும். ஆசாரியனே இறைவன். இறைவனே ஆசாரியன். மந்திரமே இறைவன். ஆகவே குருவைப் பணிந்து அவர் ஆசி பெற்று ஜபத்தைத் தொடங்க வேண்டும். தெளிந்த உள்ளத்தில் ஈசன் திருஉருவைத் தியானித்து, மலரடி வணங்கி அருள் வேண்டிப் பிரார்த்தித்து, அமைதியான மலைக்குகையில் அமர்ந்து புலனடக்கத்தோடு பத்துலக்ஷம் முறை பஞ்சாக்ஷரம் ஜபிப்பவர்கள், வல்வினைகள் பொடிபட இறைவன் திருவடி நிழலில் சேர்வர்.

18. சிவனார் சனகாதியர்களுக்கு அருளுதல்

ஒரு சமயம் சனகாதி முனிவர்கள் பரமேச்வரனை அணுகி அவர்களுக்கு அருள்புரிய வேண்டினர். அப்பொழுது பரமன் அவர்களுக்கு அருளியது, ஜீவன் உற்பிசம், சுவேதசம், சராயுசம், அண்டசம் எனப்படும் நால்வகைப் பிறப்புகளுக்குள் உட்படுகிறது. ஷட்கோசம் எனப்படும் உதிரம், தோல், தசை, எலும்பு, மூளை, நிணம் எனும் ஆறினோடு ஜீவன் அன்னை வயிற்றில் தோன்றி இறக்கும் வரையில் துன்பமே அடைகிறது. வித்தையானது பரமவித்தை, பரவித்தை என இருவகை. நான்மறைகளைக் கற்று அவற்றால் பெறுவது பரமவித்தை. அறிவினால் உணரப்படுவது பரவித்தை ஆகும். மேலும் நிறம், குணம், மாசுமறுவற்று, உறுப்புகள் ஏதுமின்றி கருத்துக்கு எட்டாதது, தன்னைத் தவிர வேறு பொருள் இல்லாத பரம்பொருளை அறிவது பரவித்தை. பரம் என்றும் பரமன் என்றும் சொல்லப்படும் பரம்பொருள் ஒன்றே. முத்தொழில் புரிவதும் அதுவே. அழியும் உலகப்பொருள்களைத் தவிர வேறொன்று உண்டு என்று உள்ளத்தில் தியானித்து அதனில் மனத்தைச் செலுத்தினோர் இன்புற்றிருப்பர். கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் சித்தம், புத்தி, மகம், அகங்காரம் ஆகியவற்றை உடைய ஆத்மா ஜீவாத்மா எனப்படும். பதினான்கு இந்திரியமும், பதினான்கு வாயுக்களும் கொண்ட மனித உடலில் எழுபத்திரண்டாயிரம் நாடிகள் உள்ளன. அன்னத்தின் மயமான கோசம் பூதான்மா, பிராணமய கோசம் இந்திரியான்மா, மனோமய கோசமானது கால ஆன்மா, ஆனந்தமய கோசம் முறையே உரைக்கப்படாமல் நின்றது விஷயான்மா. இவ்வாறு கற்றறிந்தோர் தெரிந்து உணர்வார்கள்.

தெளிந்த ஞானமுள்ள குருவைப் பணிந்து, அவரருள் பெற்றுக் கருமங்கள் யாவும் முடித்துச் சுத்த நெறியில் இருப்போமானால் ஈசனைக் காணமுடியும். உயர் ஞானம் பெற்றார் இருவினைகள் ஒழிந்து போகின்றன. எனவே, பிறவாப் பேரின்ப முக்தியை அடைய விரும்புவோர் முதலில் தெளிந்த ஞானத்தைப் பெறுவகையே முயற்சிக்க வேண்டும். தெளிந்த ஞானமுடையவனுக்கு வேறு உடல் வராது முக்தியே சித்திக்கும். ஞானம் பெறாது முக்தி அடைய முடியாது. ஞானத்தைச் சிறந்த தியானத்தால் மட்டுமே பெற இயலும். உந்திக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தின் முடிவில் மென்மையான தாமரை இருப்பதாகத் தியானிப்பது ஞானத்தின் முதல் அங்கம் அணிமா முதலிய எண் வகை சித்திகள் அத்தாமரைக்கு இதழ்களாகும். அம்மலரின் மீது அனைத்துக்கும் ஆதியாய் தனியாய் தெளிந்த பரஞ்சுடராய் ஈசன் உலவுவதாகச் சிந்திக்க வேண்டும். அவ்விதமே உச்சியிலும், ஞான ஒளியாய் நினைவிற்கு எட்டாப் பரம்பொருளாய் விளங்கும் ஈசனைத் தெளிவுடன் கண்டு அப்பொருளின் திவ்ய வடிவில் தன்னையே மறந்து தன்னையும் ஈசனாகவே காண்பவர் கிடைத்தற்கரிய பேரின்ப வீட்டை அடைவர்.
பூமிக்குச் சர்வன், புனலுக்குப் பவன், அக்கினிக்கு ருத்திரன், காற்றுக்கு உக்கிரன், ஆகாயத்தில் பீமன், சூரிய மண்டலத்துக்கு மகாதேவன், சந்திர மண்டலத்துக்கு ஈசானன், பரமேச்வரன் ஆன்மாவுக்கெல்லாம் பசுபதியாகவும், அஷ்டமூர்த்தியாகவும் விளங்குகிறார். நல்ல காரியங்களைச் செய்வதன் மூலம் ஞானம் வரும். ஞானம் வந்ததும் அறிவு தெளிவுறும். அடுத்து, பரம வைராக்கியம் ஏற்படும். அதனால் யோகம் சித்திக்கும். யோகத்தின் மூலம் அழியாத பேரின்ப வாழ்வைப் பெறலாம். ஞானம், தியானம் இவற்றை அனுஷ்டிக்கும் ஆன்மாவுக்கு பந்தம் நீங்கிவிடும். மாயையை அறிந்தோன் பற்றற்று தன்னைக் காத்துக் கொள்வான். தேவி வித்தை என்றும், ஞானசக்தி, க்ரியாசக்தி என்றும் கூறப்படுகிறாள். என்னுடன் உள்ள தேவி என் உடலின் ஒரு பகுதியே ஆவாள். இந்தச் சராசரங்களில் நிலவும் உலகங்கள் அனைத்தும் மாயாவிகாரமே. இவ்விதம் சொன்ன பரமன் பார்வதியின் முகம் நோக்க, ஈசன் திருவுள்ளத்தை அறிந்த தேவி அன்று பகலிலேயே சனகாதியருக்கு மாயையை அகற்றி பிறவாப் பேரின்ப வீட்டை அடைய அருள்புரிந்தாள்.

19. அனுசரிக்க வேண்டிய ஆசார விதிகள்

எண் வகை சித்திகள். 1) அணுவைப் போலாகும் சக்தி அணிமா. 2) பஞ்சென இலேசாக இருத்தல் லகிமா. 3) பருத்தல் மகிமா. 4) நினைத்த இடம் செல்லும் சக்தி பிராத்தி. 5) யாவையும் உணர்ந்திடும் சக்தி பிராகாமியம். 6) அனைத்திலும் ஆணை செலுத்திடும் சக்தி ஈசத்துவம். 7) நினைத்த உருவை எடுத்தல் வாசித்துவம். 8) பிறப்பொடு இறப்பு நீக்கல் சாயுச்சியம். இந்த எண்வகை சித்திகள் பெற்றவர் அழியாப் பரம்பொருளாய், மூவர்க்கும் முதலாய் பரஞ்சுடராய் விளங்கும் இறைவனை உணர்ந்து சமாதியிலிருந்து முக்தி பெறுவர். சித்திகளைப் பெறாதவர்களும் கூட ஈசனை நன்குணர்ந்து அவரைத் தம் மனத்திலே இருத்தி தியானத்தால் முக்தி அடைவர். பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேறிப் பிறப்பிறப்பு அற்ற பேரின்ப வாழ்வு பெற ஜோதிப் பிழம்பான சுடரொளியின் மலரடிகளைச் சேவித்தல் வேண்டும். பிரம்மச்சாரி சிறந்த குருவை அடைந்து உபதேசம் பெற்று, இயம நியமங்களை குறைவற ஆற்ற நன்னெறியில் பிரம்மச்சரிய வாழ்வைக் கடைப்பிடிக்க பிரம்மச்சாரி பிøக்ஷ பெற்றே உணவு உட்கொள்ள வேண்டும். முற்றும் துறந்தவர்களைக் கண்டால், மும்முறை வலம் வந்து வணங்க வேண்டும். தண்டம், கமண்டலம், குடை, செருப்பு, மான் தோல் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும். வசிக்கும் கிரகத்தில் தரையைப் பசுஞ்சாணத்தால் மெழுகித் தூய்மையாக்க வேண்டும்.
வேதியருக்குப் பத்து நாட்களும், வேந்தருக்குப் பன்னிரண்டு நாட்களும், வைசியருக்குப் பதினைந்து நாட்களும், பின்னவருக்கு முப்பது நாட்களும் தீட்டு உண்டாம். மங்கையர் தீட்டமான நான்காம் நாள் விடியற்காலையில் நீராடி சூரிய தரிசனம் செய்து பால் (அ) பஞ்சகவ்யம் உட்கொள்ள வேண்டும். நீராடிய 4,6,8,10,12,14,16 நாட்களில் கணவனுடன் கூடினால் புதல்வரையும் மற்ற நாட்களில் கூடினால் பெண் குழந்தையும் பெறுவர். துறவிகள் இடம் தேடிவரும் உணவை உட்கொள்ள வேண்டும். எதிலும் ஆசை கொள்ளக்கூடாது. துர் நிமித்தங்களையும், கனவுகளையும் கண்டவர் வடதிசை சென்று, பஞ்சகவ்வியத்தில் ஒன்றை உட்கொண்டு, பிரணவம் ஓதி, பரமனைத் தியானித்து வேண்டினால் தோஷம் நீங்கி மரணம் அடையமாட்டார்.

20. காசியின் சிறப்பு

காசியின் மகிமை ஏராளம். கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் காசியே முக்தி தரும் நகரம். இத்தலத்தில் ஈசன் என்றும் நீங்காது உறைவதால் இதற்கு அவிமுக்தேச்வரம் என்ற பெயர் உண்டு. முனிவர் அவ்வியன் காசியில் பரமனை வழிபட்டு வீடுபேறு பெற்றார். குபேரன் நவநிதிகளைப் பெற்றான். சம்வர்த்தன் என்பவன் இங்கு ஈசனை வழிபட்டு பரமன் திருவடிகளை நீங்காத வாழ்வு பெற்றான். இங்குதான் வியாசர் இறைவனின் திருவடிகளைப் பெற்றார். மாயோன், நான்முகன், அக்கினி, சூரியன், சந்திரன், இந்திரன் ஆகியோரும் இந்தக் காசியில் பரமனை வழிபட்டு அவர் திருவருளைப் பெற்றனர். காமதேனு காசியில் ஈசனை லிங்க வடிவில் ஆராதித்துப் பேறு பெற்றது அந்த இடம் கோப்பிந்ரேக்கம் ஆகும். அந்த லிங்கத்தின் பெயர் கோப்பியேச்சுவரர் ஆகும். பிரம்மன் கபிலாகாரம் என்ற குளக்கரையில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன் பெயர் ரிஷபத்து வாசன். மற்றொரு லிங்கத்தை பத்திரோதயம் என்ற தடாகக் கரையில் பிரதிஷ்டை செய்ய, அதனை மாதவன் வழிபட்டான். அது அரணிய சர்ப்யேசுவரர் எனப்படும். மற்றொரு லிங்கம் பிரம்மன் வழிபட்டது. இச்சுவலினேச்சுவரர் எனப்படுகிறது.
பர்வதராஜனால் காசியில் வழிபாடு செய்யப்பட்ட லிங்கம் சைலேச்சுவரர் ஆகும். மற்றொரு லிங்கம் பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அசுரர்களாலும், அமரர்களாலும் வழிபாடு பெறப்பட்டது. அது மத்திமேசர் ஆகும். சுக்கிராச்சாரியாரால் அமைக்கப்பட்டது சுக்கி ரேசுவரர் ஆகும். இத்தலத்தில் உயிர்விடும் மனிதனே அன்றி மற்ற எந்த ஜீவராசியும் முக்தி அடையும். பிரளய காலத்திலும் அழியாது விளங்கும் இத்தலம் அவிமுக்தம் என்ற பெயர் பெற்று விளங்குகிறது. இவ்வாறு காசியின் சிறப்பைத் தேவிக்கு விளக்கிய ஈசன் அவிமுக்தீசுவர லிங்கத்தில் மறைந்தார். எனவே, கற்றோர்கள் தங்கள் அந்திமக் காலத்தை உணர்ந்து, காசிக்குச் சென்று தங்கி, கங்கையில் நீராடி பிரணவம் ஜபித்து, ஈசன் திருவடிகளை, ஒரு கணமும் மறவாது தியானித்து ஆவி நீத்து பிறவாப் பேரின்ப வீட்டை அடைவர்.

21. கணத் தலைவனாகிய அந்தகன்

சிவனைத் தவிர வேறு எவராலும் வெற்றி கொள்ள முடியாத பராக்கிரமம் வேண்டும் என அந்தகாசுரன் பிரம்மனிடம் வரம் வேண்டினான். அவன் இரணியாக்ஷனின் மகன். அவன் திக் விஜயம் புறப்பட்டு உலகை வென்று பின் விண்ணுலகை முற்றுகையிட்டான். தேவர்கள் திருமாலிடம் உதவிக்காகச் செல்ல வைகுந்தத்தை முற்றுகையிட்டான் அசுரன். ஈசனால் மட்டுமே அவனுக்கு மரணம் என்று வரம் பெற்றவனானதால் எல்லோரும் ஈசனிடம் முறையிட, பரமன் அவர்களுக்கு அபயம் அளித்தார். அங்கு வந்த அந்தகாசுரன் சிவனை வணங்கி, தேவர்களை விட்டு செல்லும்படி விடும்படி கேட்டான். சிரித்தார் சிவபெருமான். தேவர்களை விட்டுச் செல்லுமாறு அந்தகனிடம் கூற, அவன் ஈசனையே எதிர்த்தான். அதனால் அளவில்லாக் கோபம் கொண்ட பரமன், அசுரர்களை அழித்தார். அந்தகாசுரனை சூலத்தால் குத்தி உயரத் தூக்கி நிறுத்தினார். அந்தகன் உடலிலிருந்து குருதி பாய அவன் ஆணவம் அழிந்தது. ஈசன் கைப்பட்டதால் அவன் பாபங்கள் தொலைந்தன. அவனிடம் சத்வகுணம் மிகுந்திட, அவன் இருகரம் கூப்பி ஈசனைத் தொழுதான். சரணம் அடைந்த அவனுக்கு அபயம் அளித்து ரக்ஷிக்குமாறு வேண்டினான் அந்தகாசுரன். அந்தகனைச் சூலத்திலிருந்து இறக்கி விட அவன் ஈசனை வலம் வந்து வணங்க, ஈசன் கரம் பட்டு அவன் பொன்மேனி பெற்று புனிதனாக, அவனைக் கணங்களுக்குத் தலைவனாக்கினார் பெருமான்.

22. வராகன் சுயரூபம் பெறுதல்

இரணியாக்ஷன் வராஹ வடிவில் வந்த பரந்தாமனை எதிர்த்துப் போரிட, வராஹாவதாரம் எடுத்த திருமால் அசுரன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளி, அவன் மார்பில் ஏறி கூரிய கோரைப் பற்களால் அவன் மார்பைப் பிளந்து இரத்தத்துடன், ஆவியையும் குடித்து, அவன் பதுக்கி வைத்திருந்த பூமியை மீட்டுத் தம் கொம்புகளில் தாங்கியவாறு வெளிப்பட்டார். அது கண்டு தேவர்களும், நிலமாதும் மகிழ்ச்சி பெற்றனர். அரக்கனைக் கொன்ற பின்னும் அரியின் கோபம் தணியவில்லை. அதனால் அச்சமுற்ற தேவர்கள் பரமேச்வரனிடம் முறையிட ஈசன் மாதவனை நெருங்கி அவருடைய கடைவாய் கொம்புகளில் ஒன்றைப் பற்றி உடைத்தார். அப்போது பன்றி வடிவில் இருந்த பரந்தாமன் சுயரூபம் பெற்று ஈசனைத் துதி செய்து வணங்கினார்.

23. நரசிம்மர் வெறி அடங்குதல்

பக்த பிரகலாதன் தந்தையாகிய இரணியகசிபுவிடம், ஸ்ரீமந் நாராயணனிடம் விரோதம் பாராட்ட வேண்டாம் என்றும் அழிவைத் தடுக்க அவரிடம் பக்தி கொள்ளுமாறும் வேண்டினர். அப்போது இரணியகசிபு, இப்போது அந்த நாராயணன் வந்து உன்னைக் காப்பாற்றட்டும் என்று கூறி ஆங்கோர் கம்பத்தை உதைக்க, அதிலிருந்து திருமால் நரசிம்ம வடிவில் தோன்றி இரணியகசிபுவைக் கொன்றார். தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனைத் துதி செய்து சாந்தமடையுமாறு வேண்டினர். லக்ஷ்மியும் பிரகலாதனும் பிரார்த்தித்தனர். இரணியன் மார்பைப் பிளந்து குருதியுடன் ஆவியையும் குடித்த அச்சுதன் வெறி அடங்காதது குறித்து விண்ணப்பித்து அவரைச் சாந்தமுறச் செய்யுமாறு பரமனிடம் வேண்டினர். ஈசன் சரபம் என்ற பறவை வடிவுடன் நரசிம்மன் முன் வர சரபமும், நரசிம்மமும் மோதினர். முடிவில் நரசிம்மர் களைத்துவிட ஈசன் அவரது தோலைக் கிழித்து உரித்துத் தன் மேல் போர்த்திக் கொண்டார். நரசிம்மரின் வெறி அடங்கியது. அவர் சாந்தமடைந்தார்.

 
மேலும் லிங்க புராணம் »
temple news
24. ஜலந்தரன் வரலாறு: ஜலத்திலிருந்து தோன்றிய அசுரன் ஜலந்தரன் எனப்பட்டான். அவன் பரமனை நோக்கித் தவம் செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar