ஆண்டாள், மாணிக்கவாசகரால் மார்கழியின் மாண்புகள் உச்சநிலையை அடைந்தன. குறிப்பாக இவர்கள் அருளிய திருப்பாவை, திருவெம்பாவை என்ற பாவை நூல்களைப் பக்தர்கள் மார்கழியில் தினமும் பாராயணம் செய்யத் தொடங்கிய பிறகு மார்கழியின் சிறப்பு உச்சநிலையை நோக்கி நகரத் தொடங்கின. ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தாரில் நீராட்டு, தைலக்காப்பு விழா மார்கழியில் நடைபெறுகிறது. ஆவுடையார் கோவில், மதுரை, சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம் முதலிய சிவத்தலங்களில் மாணிக்கவாசகர்-திருவெம்பாவை உற்சவம், மார்கழியில் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த உற்சவம் பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம். மாணிக்கவாசகருக்கு சிறப்பு அர்ச்சனை, ஆராதனை, அபிஷேகங்களுடன் பவனி ஊர்வலமும் உண்டு. பத்தாம் நாள் நடைபெறுவதே திருவாதிரை.