மார்கழி நோன்பு - பாவை நோன்பு: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மகளிர் தை நீராடல் என்ற நோன்பு வழிபாட்டை தை மாதத்தில் மேற்கொண்டனர். துர்க்கையை நினைந்து நீராடுவதால் இதற்கு அம்பா ஆடல் என்பது மற்றொரு பெயர். தை நீராடும் போது மகளிர் ஆற்றங்கரையில், ஈர மணலில் பாவையைச் செய்தனர். பூக்களால் அழகு செய்தனர். அதைத் தேவியாகப் பாவித்தனர், வழிபட்டனர். நாடு குளிர நல்மறை பொழிய வேண்டும் என்று வேண்டினர். அப்போது அவர்கள் பாடிய பாட்டே பாவைப்பாட்டு. சில நூற்றாண்டுகள் கடந்த பிறது, தை நீராடல், மார்கழி நீராடலாக மாறியது. இந்த மாற்றம் நிலைத்து விட்டது. மகளிர் பாடிய பாவைப் பாட்டு பக்தி உணர்வுகள் பெருகி வழிய, சமயக் கருத்துகள் நிரம்பிப் பெருகத் திருப்பாவையாக, திருவெம்பாவையாக மலர்ந்தது.