பதிவு செய்த நாள்
22
டிச
2020
06:12
நாமக்கல்: நாமக்கல், மலைக்கோட்டையை சுற்றி, பக்தர்கள் செல்லும் மார்கழி ஞாயிறு கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நாமக்கல்லில், ஹிந்து சமய பேரவை சார்பில், மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில், திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி, கிரிவலம் வருவர். பெண்கள், சிறுவர், சிறுமியர் கைகளில் திருவிளக்கை ஏந்தியபடி பஸ் ஸ்டாண்ட், மணிக்குண்டு, பரமத்தி சாலை, கோட்டை சாலை, ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் கோவில், நேதாஜி சிலை, பலப்பட்டரை மாரியம்மன் கோவில் வழியாக, மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் சென்று, மீண்டும் அரங்கநாதர் கோவிலை வந்தடைவர். அந்த வகையில், 50வது ஆண்டாக, மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை, 5:00 மணிக்கு அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் கூடினர். ஆனால், கொரோனா தொற்று பரவாமல் இருக்க, கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஏமாற்றம் அடைந்த பக்தர்கள், அரங்கநாதர் கோவில் படிவாசலிலேயே திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, பாசுரம் உள்ளிட்டவை பாடப்பட்டது.