பதிவு செய்த நாள்
24
டிச
2020
12:12
வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபானங்கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி , பிரசாத ஹேது ஆகி படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்கிரமரணம், அர்ச்சி ராத்திரி, திவ்ய தேசப்பிராத்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும்; மறுபிறவி இல்லை.
அன்று பட்டினி இருந்து, ஹரியின் நாமத்தை ஜெபித்து நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஏகாதசி மகிமை, புருஷசூக்தம் போன்றவற்றை பாராயணம் செய்தால் அளவற்ற பயன் பெறலாம். ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்ய வேண்டும். துவாதசியன்று நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
மாதத்திற்கு இருமுறை வரும் எல்லா ஏகாதசிகளிலும்கூட விரதம். இருக்கலாம். முடியாவிடில் மார்கழி வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் மகாவிஷ்ணு மகிழ்வுடன் சொர்க்கத்தில் இடம் தருவார். இவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். எட்டு வயது முதல் 80 வயது வரை இவ்விரதத்தை ஆண்-பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்.
வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங்களைக் கடைப்பிடித்த பலம் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும்; மோட்ச ஏகாதசி என்றும்; பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு. பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர்.