வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல, கர்நாடக மாநிலம் தலக்காடு வைத்திய நாதர் கோயிலில் பொங்கலன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் மூலவருக்கு நேராகவுள்ள கோபுரவாசல் தவிர மற்றொரு வாசலும் உள்ளது. இவ்வாசலை சொர்க்க வாசல் என்று அழைக்கின்றனர். பொங்கலன்று இவ்வாயில் திறக்கப்படும். இவ்விழாவை சொர்க்க வாசல் தையலு என அழைக்கின்றனர்.
பொங்கலன்று இரவு சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் ராஜகோபுரத்தின் வழியாக கிளம்புவர். மீண்டும் கோயிலுக்கு வரும்போது சொர்க்க வாசல் வழியாக நுழைவர். இவ்வாசல் வழியாக வந்து வைத்தியநாதரைத் தரிசிப்பவர்கள் கைலாயத்தில் வாழும் பாக்கியத்தை அடைவர் என்பது ஐதிகம். தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாலய ஈசனை வணங்கினால் நோயின் தாக்கம் குறையும் என்கின்றனர்.