பதிவு செய்த நாள்
27
டிச
2020
10:12
தஞ்சாவூர், கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் அருகாட்சியத்தை மத்திய அரசுதிறக்க வேண்டும் என மாநாட்டில் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 28-வது மாநாடு கடந்த மூன்று நாட்களாக (டிச.25 முதல் 27 வரை) நடந்தது.
அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்த மகராஜ் ஆன்லைன் மூலம் மாநாட்டை முதல் நாள் துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார். தமிழ்நாடு பாவ பிரசார பரிஷத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சத்திய ஞானானந்த மகராஜ், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்த மகராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். விவேகானந்தரின் எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் மாநாட்டு மலரை ஸ்ரீமத் கமலாத்மானந்த மகராஜ் வெளியிட விழா வரவேற்புக் குழுத் தலைவர் முரளி பெற்றுக் கொண்டார். தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடம் தலைவர் சுகபோதானந்தா மகராஜ் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கோணக்கரை ராமகிருஷ்ணா சாதனா குடில் நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி பத்மநாப சுவாமிகள், உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமம் யதீஸ்வரி சச்சிதானந்தபிரியா மாதாஜி, சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநர் என்.காமகோடி ஆகியோர் ஆன்லைனில் சிறப்புரை ஆற்றினார். உலகம் முழுவதும் உள்ள ராமகிருஷ்ண மடம் துறவியர்கள் காணொலி வாயிலாக ஆசியுரை வழங்கினர். துறவியரின் பஜனை நிகழ்ச்சிகள், மாணவ மாணவியரின் பரத நாட்டியம், நாடகம், சிலம்பாட்டம் நடந்தது. மாற்றுத் திறனாளி ஒருவருக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்காக நிதியுதவி அளிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள ராமகிருஷ்ண, விவேகானந்த பக்தர்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியினை காணொலி வாயிலாக கண்டுகளித்தனர். மூன்று நாட்களும் நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியின்போது தமிழகத்தில் உள்ள பாவ பிரசார பரிஷத் அனைத்து உறுப்பினர் ஆசிரமங்களின் ஆரத்தி நிகழ்ச்சியும், கும்பகோணத்தில் உள்ள 12 சிவாலயங்கள், 5 வைணவத் தலங்கள், மகாமகம் குளம், பொற்றாமரை குளம் ஆகியவையும் நேரலையில் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் ஒளிபரப்பப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு சிட்டி யூனியன் வங்கி பவுண்டேஷன் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் சத்தியநாராயணன் நன்றி கூறினார். கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன், தமிழ்நாடு பாவ பிரசார் பரிஷத் கன்வீனர் பாண்டுரங்கன், இணை கன்வீனர்கள் பிரபாகரன், ராஜகோபால் மற்றும் மன்ற உறுப்பினர்கள், விழாக்குழு பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
மாநாட்டில் தமிழ்நாடு பாவ பிரசார பரிஷத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சத்தியஞானானந்த மகராஜ் கூறியதாவது: கும்பகோணம் தமிழகத்தின் ஆன்மீக நகரமாக விளங்குகிறது. பழமையான கோயில்கள், கட்டட அமைப்புகள் அனைத்தும் மக்களின் பாரம்பரிய பெருமையை பறைசாற்றும் வகையில் உள்ளது . மக்கள் மிகுந்த கல்வி அறிவோடு செழிப்போடும் வாழ்ந்ததன் அடையாளமாக இவைகள் உள்ளது. எனவே கும்பகோணம் பாரம்பரிய நகரமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். சுவாமி விவேகானந்தர் 1897ல் கும்பகோணம் விஜயம் செய்ததை போற்றிடும் வகையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2017-ம் ஆண்டு அப்போது ரயில்வே மத்திய அமைச்சராக இருந்த சுரேஷ்பிரபு கும்பகோணத்தில் அறிவித்தார். அதனை மத்திய அரசு விரைந்து திறக்க வேண்டும் என்றார்.