பதிவு செய்த நாள்
28
டிச
2020
09:12
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை நடந்த சனிப் பெயர்ச்சி விழாவை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில், உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வரர் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சனீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், பால், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 27 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.அதிகாலை, 5:22 மணிக்கு சனீஸ்வரர், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தபோது, சனி பகவானுக்கு, நவரத்தின அங்கி அலங்காரத்தில், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தங்க காகம் வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் இருந்த உற்சவர் சனீஸ்வரருக்கும், மகா தீபாராதனை நடந்தது.
கட்டுப்பாடு: சனிப் பெயர்ச்சி விழாவிற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தனர்.ஆன்லைன் பதிவு வைத்திருந்தவர்களை மட்டும் அனுமதித்தனர்; மற்றவர்களை திருப்பி அனுப்பினர். கோவில் வளாகத்தில், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் தரிசனம் செய்தனர்.
நளன் குளம்: பரிகார தலமான திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலின், நளன் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, பழைய ஆடைகளை குளத்தில் விட்டு, சனீஸ்வரரை தரிசனம் செய்தால், சனி தோஷத்தால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும் என்பது ஐதீகம்.கொரோனா தொற்று காரணமாக, நளன் குளத்தில் குளிக்க, கோவில் நிர்வாகம் தடை விதித்ததால், நேற்று நளன் குளம் வெறிச்சோடியது. வியாபாரிகள் வேதனை விழாவுக்கு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. நளன் குள விநாயகருக்கு தேங்காய் உடைக்கவும், மூலவருக்கு அர்ச்சனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.இதனால், தேங்காய் கடை, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், தள்ளுவண்டி கடைகள் என, அனைத்தும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடின.