Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மச்ச புராணம் பகுதி-1
முதல் பக்கம் » மச்ச புராணம்
மச்ச புராணம் பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 மே
2012
16:32

8. ஸ்ரீவெங்கடேஸ்வரரும், அலமேலு மங்கைத் தாயாரும்

கஜனி முகம்மதுவுக்கு ஓர் அழகிய மகள் இருந்தாள். அவளுடைய அந்தப்புரத்திற்கு ஸ்ரீவெங்கடேச்வரர் ஓர் இரவு வந்து தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறி அதுபற்றி வேறொருவருக்கும் தெரியாமல் இருக்குமாறு கூறினார். இவ்வாறு தினமும் இரவில் இருவருடைய சந்திப்பும் நடைபெற்று வந்தது. எனினும் இது பற்றி ஐயப்பட்டு, காவலாளிகள் எங்களுக்குத் தெரியாமலேயே ஓர் ஆண் அந்தப்புரத்தில் பிரவேசித்து இளவரசியுடன் பேசிச் செல்கிறான் என்று சுல்தானிடம் கூறினர். சுல்தான் அந்தப்புரம் வந்து தன் பெண்ணிடம் வரும் ஆண் யார் என்று கேட்க, அவள் மவுனம் சாதிக்க அவள் தலையை வெட்ட அவன் கத்தியை ஓங்க, அங்கு விக்கிரக வடிவில் இருந்த ஸ்ரீவெங்கடேச்வரர் அவன் கையைப்பிடித்து இவ்வாறு கூறினார். அன்று நீ பலாத்காரமாக என்னிடம் வரம் பெற்றாய். அது சாதுவான வழி இல்லாததால் உன் மதத்திலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டு யவன மன்னன் ஆனாய். இன்னும் உன் அஞ்ஞானம் அழியவில்லை. உன் சனாதன இந்து மதத்தையே அழிக்க முற்பட்டாய். மதங்கள் வேறானாலும் தெய்வம் ஒன்றே என்பதை உணரவில்லை நீ. உனக்கு அறிவுரை வழங்கவே வந்தேன். உன்னால் தொல்லைகளுக்கு ஆளான அர்ச்சகர்கள் உன் கோட்டத்திலேயே உள்ளனர்.

உன்னால் அழிக்கப்பட்ட கோயில்களைப் புனர் நிர்மாணம் செய்து, அவற்றில் விக்கிரகங்களையும், லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து, அர்ச்சகர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் கொடுத்து அனுப்பி வை. இல்லாவிடில் உன்னுடைய எல்லாச் செல்வங்களும் உன்னை விட்டு விலகி விடும் என்று எச்சரிக்கை செய்து மறுபடியும் விக்கிரமாக மாறிவிட்டார். கஜனி முகம்மது தனக்கு அறிவுரை அளித்துக் கண்களைத் திறந்துவைத்த இறைவனுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியுற்று, தன் தவருக்குப் பச்சாத்தாபப்பட்டு அவர் கூறியபடியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தான். ஸ்ரீவெங்கடேச விக்கிரகமும், திருப்பதி அர்ச்சர்களும் அங்கு இருந்தனர். அவர்கள் தமது விக்கிரகத்தை தம்மிடம் கொடுத்தனுப்புமாறு வேண்ட அவன் அவ்வாறே தந்து, அத்துடன் பாவபரிகாரமாக தன் மகளையும் சுவாமி சேவைக்குத் தக்க சன்மானங்களுடன் அனுப்பி வைத்தான். மற்றும் கோயிலுக்குக் காணிக்கையாகப் பொன்னும் பொருளும், கோவில் நிர்வாகத்திற்காகச் சில கிராமங்களையும் எழுதிக் கொடுத்தான். பாதுகாவலாகப் படைகளையும் அனுப்பி வைத்துத் தன் இருப்பிடம் திரும்பினான்.

அலர்மேல் மங்கைத் தாயார்: ஸ்ரீ வெங்கடேச்வர விக்கிரகம் முகம்மதுவால் அபகரிக்கப்பட்டு விலகி விட நிலமகள், மலர்மகள், நீலாதேவி ஆகியோர் வருத்தமுற்றிருக்க தற்போது ஸ்ரீவெங்கடேச்வரர் முகம்மதுக்கு அறிவுரை வழங்கிட, அவன் மனம் மாறி ஸ்ரீவெங்கடேசுவரர், அர்ச்சகர்கள் ஆகியோர் முகம்மதுவின் மகள் வேலைக்காரியாக வருவது குறித்துக் கூறினார். அத்துடன் மகாலக்ஷ்மியைப் புகழ்ந்து துதி செய்தார். தேவி உன்னைப் பெற்றவர்கள் செல்வம் பெற்றவர்களாவர். அல்லாதவர் அனைத்தும் இல்லாதவராவர். உன்னை ஜகன் மாதாவாக பூசிப்பவர்களுக்கு நீ அஷ்ட ஐச்வர்யமும் அளிப்பாய். உன்னை இதயத்தில் ஏற்று, கவுஸ்துப மணியைத் தரித்திருக்கும் மகாவிஷ்ணு ஸ்ரீநிவாசனெனப் பேர் பெற்றார். உன்னாலேயே பெருமாளுக்கு மந்திர சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி அனைத்தும் கிடைத்தன. உன் பக்தர்களுக்கு நீ கல்ப தருவாய் அனைத்தும் அருள்கிறாய். உன் மகிமையை என்னென்று புகழ்வது என்றெல்லாம் நாரதர் போற்றினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மகாலக்ஷ்மி நாரதரிடம், மற்றப்பெண்கள் மீது மோகம் கொண்ட ஒருவரை நம்பக்கூடாது. எனவே இந்த சேஷாத்திரி மலையில் நான் இருக்கமாட்டேன் என்று கூறி சுகமுனிவர் ஆசிரமத்துக்குச் சென்று, அவரால் தக்க மரியாதைகளுடன் வரவேற்று, உபசரிக்கப்பட்டு அவர் நிர்மாணித்த கமலாகரத்தில் தங்கி இருந்தாள்.

நாரதர் உலக சஞ்சாரம் செய்து கொண்டு யவனப் பெண்ணுடன் சேஷாத்திரி மலைக்கு வந்து கொண்டிருக்கும் ஸ்ரீவெங்கடேச்வரரை நமஸ்கரித்து, லக்ஷ்மி தேவியின் விவகாரத்தைக் கூறி அனைவரையும் சேக்ஷõத்திரிக்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் ஸ்ரீவெங்கடேச்வரர் சுகமுனிவர் ஆசிரமம் அடைய மகாலக்ஷ்மி மகிழ்ச்சியுற்று தான் அங்கேயே இனி தங்கி இருக்கப் போவதாகவும் முனிவர்களும், தேவர்களும், பக்தர்களும் இங்கு வந்து என்னைத் தரிசிப்பார்களாக. இவ்விடத்தை அனைவரும் புனிதமாக்கியதால் இனி இவ்விடம் அலர்மேல் மங்கை புரம் என்ற பெயரில் விளங்குவதாக. நானும் அலர்மேல் மங்கை என்ற பெயரில் இங்கிருப்பேன். நீ இரவில் ஏழு மலைகள் இறங்கி வந்து ஏற்றிடுக என்றாள் மகாலக்ஷ்மி. தேவர்களும் அங்கு ஆலய நிர்மாணம் செய்து பூசித்து வரலாயினர். இவ்வாறு சூதமுனிவர் சனகாதி முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்.

9. பிரம்மதத்தன்

கவுசிக முனிவருக்கு சுவஸ்ரிபன், குரோதனன், ஹிம்ஸ்ரன், பிஸ்துனன், கவி, வாகஷ்டன், பித்ரிவர்த்தி என்று ஏழு குமாரர்கள். இந்த எழுவரும் கர்க்கமுனிவரின் சீடர்கள். கவுசிகள் இறந்த பிறகு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. கர்க்கர் தன் சீடர்களைப் பசுக்களை மேய்த்து வர காட்டிற்கு அனுப்பினார். சகோதரர்கள் மிகவும் பசியினால் அவதியுற அவர்கள் ஒரு பசுவைக் கொன்று தின்றனர். பசுவைக் கொல்வது மகாபாவம் என்று இளையவன் கூற ஈமச்சடங்குகளைச் செய்வதன் மூலம் பாவத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்று கூறி பசுவைக் கொல்வதற்கு முன் சடங்குகளைச் செய்து முடித்தனர். ஆசிரமம் திரும்பிய அவர்கள் ஒரு பசுவைப் புலி அடித்துத் தின்று விட்டதாகக் கூறினர். பசுவதை பாவத்தினால் மறுபிறவியில் அவர்கள் வேடர்களாய் பிறந்தனர். ஆனால், அவர்கள் ஜதிஸ்மரர்களாக விளங்கினர். அதாவது முற்பிறவி இரகசியங்களை அறிந்திருந்தனர். எனவே வேடர்களாகப் பிறந்ததற்கு வருத்தமடையாமல் பட்டினி கிடந்து உயிர் விட்டனர். அடுத்து அவர்கள் மான்களாகப் பிறந்தனர். அப்போது முற்பிறவி ரகசியங்களை அறிந்ததால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தனர். அடுத்து அவர்கள் பறவைகளாய்ப் பிறந்தனர். அவர்களுள் நால்வர் பற்றற்று தியானத்தில் மூழ்கினர். மற்ற மூவர்கள் அத்தகைய பேற்றினைப் பெறவில்லை.

ஒரு சமயம் பாஞ்சால மன்னன் விப்ரஜன் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட வந்தான். அவனால் கொல்லப்பட்ட ஒரு பறவை அடுத்த பிறவியில் அரசனாகப் பிறக்க விரும்பியது. இரண்டு பறவைகள் மந்திரிகளாகப் பிறக்க ஆசைக் கொண்டன. மன்னனாக விரும்பிய பறவை மன்னன் விப்ரஜன் மகனாகப் பிறந்தது. இரண்டு பறவைகள் மந்திரிகளாகப் பிறந்தன. அந்த மந்திரிகளின் பெயர்கள் புண்டரீகன், சுவலகன் ஆகும். இவர்கள் மன்னனுடன் இருந்த மந்திரிகளின் மகன்களாகப் பிறந்தனர். மற்ற மூன்றும் பற்றற்ற அந்தணர்களாய் பிறந்தன. அவர்களால் கொல்லப்பட்ட பசு கல்யாணி என்ற பெயரில் தோன்றியது. பிரம்மதத்தன் கல்யாணியை மணந்தான். பிரம்மதத்தன் எல்லா உயிரினங்களின் மொழியும் அறிந்திருந்தான். ஒருநாள் நந்தவனத்தில் பிரம்மதத்தன், கல்யாணியுடன் உலாவிக் கொண்டிருக்க இரண்டு எறும்புகள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டறிந்தான்.

ஆண் எறும்பு பெண் எறும்பிடம், அது ஏன் தன் மீது கோபமாய் உள்ளது என்றும், பேச மறுக்கிறது என்றும் கேட்டது. பெண் எறும்பு தன்னைத் தொந்தரவு செய்யாமல் போய் விடுமாறு கூறிற்று. மேலும் அது ஆண் எறும்பைப் பார்த்து அது தன்னை அதிகம் நேசிப்பதாகக் கூறியும், ஆனால் முன் நாள் சர்க்கரைத் துணுக்கை வேறொரு எறும்புக்குக் கொடுக்கக் காரணம் என்ன என்றும் கேட்டது. அப்போது ஆண் எறும்பு தான் அந்த எறும்பை இந்தப் பெண் எறும்பு என்று எண்ணிக் கொடுத்ததாகவும், அது தான் செய்த தவறு என்றும், இனி ஒரு போதும் அவ்வாறு செய்யமாட்டேன், மன்னித்து சிரிக்குமாறு வேண்டியும், அதனைக் கோபத்துடன் பார்க்க தன்னால் முடியவில்லை என்றும் கூறியது. அவை ஒன்று கூடின. இதனைக் கேட்ட பிரம்மதத்தன் சிரிக்க, கல்யாணி அவன் சிரிப்புக்குக் காரணம் கேட்க, அவன் நிகழ்ந்ததைக் கூற, கல்யாணி நம்பவில்லை. என்ன செய்வதென்று அவனுக்குத் தோன்றவில்லை. இரவில் கனவில் விஷ்ணு தோன்றி, மறுநாள் காலை வரை காத்திருக்குமாறும், மறுநாள் காலை அவன் மனம் அமைதி அடையும் என்றும் கூறினார். சகோதரர்களில் நால்வர் சுதரித்திரன் என்றே அந்தணரின் புதல்வர்களாகப் பிறந்து பற்றற்று கானகம் சென்று தவம் செய்ய விரும்பினர். அவர்கள் திரிதிமனன், தத்துவதர்சி, வித்யாசந்தன், தயோத்சுகன் என்று பெயர் பெற்றிருந்தனர்.

ஆனால், சுதரித்திரன் அவர்களைத் தடுத்து, தனது தள்ளாத வயதில் தன்னைக் காப்பாற்ற வேண்டியது அவர்கள் கடன் என்றும், இல்லாவிடில் தான் பட்டினியுடன் இறக்க நேரிடும் என்று கூறித் தடை செய்தான். அவர்கள் சுதரித்திரனிடம் அவன் பட்டினியாக இருக்க வேண்டாம். பிரம்மதத்தனிடம் செல்வம் கேள் என்றும், அவன் பொன்னும் பொருளும், கிராமங்களும் அளிப்பான் என்றனர். மேலும் அவனிடம் கர்க்க முனிவர், வேடர்கள், மான்கள், பறவைகளைப் பற்றி நினைவூட்டும்படிக் கூறினர். பின்னர் தவம் செய்ய வனம் சென்றனர். பிரம்மதத்தன் கனவு கண்ட மறுநாள் சுதரித்திரன் அவனைக் காண வந்தான். பழைய செய்திகளை நினைவூட்டினான். அவன் அந்த பிராமணனுக்குச் செல்வம் பல நல்கி, தன் நாட்டை இளவரசன் விச்வக்சேனனுக்கு பட்டம் கட்டிவிட்டுத் தவம் செய்ய கானகம் சென்றான். அவனுடன் புண்டரீகனும், சுவலகனும் வனம் சென்றனர். இவ்வாறு கவுசிகனின் ஏழு புத்திரர்களும் வீடுபேறு எய்தினர். விப்ரஜ மன்னன் விஷ்ணுவிடம் பெற்ற வரத்தின்படி அவன் மகன் உயிரினங்களின் மொழிகளை அறிய முடிந்தது.

10. வச்சிரங்கன்

காசியபர் மனைவி திதிக்குத் தோன்றிய மருத்துக்கள் இந்திரனின் நண்பர்களாகி விட, திரும்பவும் திதி தேவர்களை வெல்ல ஒரு மகனுக்காக காசியபரிடம் வேண்டினாள். அதற்கு அவர் அவள் பல்லாயிரமாண்டுகள் தவம் செய்தால் தான், இந்திரனை வெல்வதற்கு வச்சிராயுதம் போன்ற திடமான உடல் கொண்ட ஒரு புத்திரனைப் பெறமுடியும் என்று அறிவுரை கூறினார். அவ்வாறே அவள் தவமிருந்து பெற்ற குழந்தை வச்சிரம் போல் உடல் பெற்றிருந்ததால் அவனுக்கு வச்சிரங்கன் என்று பெயரிடப்பட்டது (வச்சிர+அங்கன்). தாயின் சொற்படி அவன் இந்திரனை வென்று, அவனைத் தாயின் முன் கொண்டு வந்து நிறுத்தி கொல்லத் தயாரானான். இதைத் தடுக்க பிரம்மாவும், காசியபரும் அங்கு தோன்றி, இந்திரனைக் கொல்ல வேண்டாம் என்றும், மரியாதையை இழந்த ஒருவன் கொல்லப்பட்டவனாகவே கருதப்படுவான். உன்னால் தோற்கடிக்கப்பட்ட இந்திரன் இறந்தவனே ஆவான். எங்கள் சொற்படி அவனை விட்டுவிடுவதே நல்லது. எனவே இந்திரனைப் போக விடு என்றனர்.

நான் என் தாயின் சொற்படி நடந்தேனே தவிர, இந்திரனைக் கொல்ல வேண்டுமென்றில்லை. உங்களில் ஒருவர் என் பிதா, மற்றொருவர் உலகப் படைப்பாளியாகிய பிதாமகர். நான் இந்திரனைப் போக விடுகிறேன். அதற்கு முன் எனக்கொரு வரம் அளியுங்கள் என்று கேட்டான். நான் பெருமளவில் தவம் செய்ய அருள்புரிக எனக் கேட்க அவ்வரம் அளிக்கப்பட்டது. மேலும், பிரம்மா வரங்கி என்றொரு அழகியைத் தோற்றுவித்து வச்சிரங்கனுக்கு மணம் செய்வித்தார். வச்சிரங்கன் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் இயற்றினான். வச்சிரங்கி பொறுமையுடன் அவனுக்காகக் காத்திருந்தது மட்டுமின்றி அவளும் தவம் புரியலானாள். அச்சமயம் அடிப்பட்ட புலியான இந்திரன் சும்மா இருக்கவில்லை. அவன் குரங்கு வடிவில் வச்சிரங்கியின் ஆசிரமத்தில் உள்ள மரங்களை எல்லாம் வேரோடு சாய்த்தான். அங்கு வளர்ந்துள்ள புல்லை எல்லாம் ஆடு உருவத்தில் தின்று அழித்தான். பின்னர் மேகமாக வந்து பெருமழை பெய்து ஆசிரமத்தை மூழ்கடிக்கச் செய்தான். அவள் அதைத் தடுக்கவோ, தன்னைக் காத்துக் கொள்ளவோ முயலவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். தவம் முடிந்து வந்த வச்சிரங்கன் நடந்ததை எல்லாம் அறிந்து இந்திரனைக் கொல்லக்கூடிய ஒரு மகனை வேண்டித் தவம் செய்ய பிரம்மா தோன்றி தேவர்களுக்குச் சிம்மசொப்பனம் போன்ற ஒரு மகன் பிறப்பான். அவன் பெயர் தாரகன் என்று கூறி மறைந்தார். வயது வந்ததும் வச்சிராங்கன் தாரகனை அரசனாக்கி மகுடாபி÷க்ஷகம் செய்வித்தான்.

11. தாரகனின் தவமும், அவன் கொல்லப்படுதலும்

தான் மிகவும் சக்தி வாய்ந்தவனாக ஆனாலொழிய தேவர்களை வெல்ல முடியாதென்று பரிபத்திர மலையில் ஒரு குகையில் தவம் செய்யச் சென்றான். அன்னபானம் நீக்கி தன் உடலிலிருந்து மாமிசம் எடுத்து அக்கினியில் சேர்த்துக் கோரத் தவம் செய்தான். அவன் முன் பிரம்மா தோன்றி, அவனுக்கு வேண்டிய வரம் யாதெனக் கேட்டார். தேவர்களை வெல்வதற்குத் தான் மரணம் இல்லாதவனாகவும், யார் கண்ணுக்கும் புலப்படாதவனாகவும் இருக்கும் வரம் வேண்ட, பிரம்மா மரணம் இல்லாதது உலகில் எதுவும் இல்லை. எனவே மரணத்துக்கு எத்தனை கடினமான நிபந்தனை வேண்டுமாயினும் தருகிறேன் என்றார். அப்படியானால் நான் ஏழு ஆண்டு பாலகனால் மட்டுமே கொல்லப்பட வேண்டும் என்று தாரகன் வேண்டிட, பிரம்மாவும் அந்த வரத்தை அளித்தார். வரமும், பலமும் பெற்ற தாரகன் பெரும்படைத் தலைவர்களுடன் தேவர்களுடன் போர் செய்தான். அதில் விஷ்ணுவிடம், காலநேமி என்பவன் போர் செய்ய விஷ்ணுவின் கதை அவன் மீது பிரயோகிக்கப்பட்டது. அவன் மயங்கி விழுந்தான். மற்றொரு அரக்கர் தலைவன் கிராசனன் தலையைச் சக்கராயுதம் வெட்டியது. ஜம்பா என்பவனால் விஷ்ணு தாக்கப்பட இந்திரன் அவனை ஒரு தெய்வீக ஆயுதத்தால் தாக்கிக் கொன்றான்.

இனி தாரகனை வெல்ல வழி அறியாமல் தேவர்கள் பிரம்மனை அண்டி வேண்டினர். அப்போது சிவபெருமான் திருமணம் நடந்து சிவபாலன் பிறந்தால் தாரகன் அழிக்கப்படுவான் என்றார். பின்னர் தேவர்கள் வேண்டியவாறு மன்மதன் சிவபெருமானிடம் தன் மலர் பாணங்களை எய்து அரனால் எரிக்கப்பட்டு விட்டான். பின்னர் பார்வதி பரிணயம் நடைபெற்றது. சிவன் கண் பொறிகளிலிருந்து குமரன் தோன்றி ஏழு வயது வந்தவுடன் தாரகனைக் கொன்று தேவர்களைக் காத்தருளினார். (காமதகனம், பார்வதி பரிணயம், முருகன் அவதாரம், தாரகாசுரன் சம்ஹாரம்-விரிவு கந்தபுராணம், சிவபுராணங்களில் காண்க).

12. காளி, கவுரியானாள்

ஒரு சமயம் சிவபெருமான் தமாஷாக பார்வதியைப் பார்த்து காலி (காளி) என்றழைத்தார். (காலி=கருப்பி) பார்வதி கருப்பாய் இருப்பதால் அவ்வாறு அழைத்தார். பரமன் என்றெண்ணி பார்வதி தவம் செய்து அழகு பெறச் சென்றாள். மரவுரி தரித்தும், வெய்யிலிலும், மழையிலும், அக்கினியிலும் இருந்து உபவாசமும் இருந்து தவம் செய்ய பிரம்மா அவள் முன் தோன்றி அவள் நல்ல அழகி ஆகும் வரம் தந்தார். தவத்திற்குச் செல்வதற்கு முன் பார்வதி நந்தியிடம், வேறெந்த பெண்ணையும் உள்ளே விடக்கூடாது என்று ஆணையிட்டுச் சென்றாள். ஆதி என்ற ஓர் அரக்கன் பிரம்மனை நோக்கித் தவம் புரிந்து ஒரு வரம் கேட்டான். தனக்கு மரணமே வரக்கூடாது என்று. பிரம்மா அதை மறுத்தார். ஆனால் அவன் தன் உருவை இரண்டு முறை மாற்றினால் அவன் மரிப்பான் என்று வரம் தந்தார். ஆதி பாம்பு உருவில் நந்தியை ஏமாற்றி உள்ளே நுழைந்தான். முதல் உருமாற்றம் இது. அடுத்து பார்வதியின் உருவில் பரமனை நெருங்கினான். பரமனும் அவளை வரவேற்றான். அவள் கோபம் தணிந்து திரும்பி வந்ததற்கு மகிழ்ச்சி என்றார். சிறிது நேரத்தில் அவள் பார்வதி அல்ல என்று அறிந்த சிவனார் ஆதி என்ற அந்த அரக்கனைக் கொன்றார்.

பிரம்மாவிடம் வரம் பெற்ற பார்வதி கவுரி (அழகி) என்னும் பெயர் பெற்றாள். பார்வதியின் உடல் அணுவிலிருந்து (செல்) கவுசிகி என்ற தேவி தோன்றினாள். கோசம் (செல்) என்பதால் கவுசிகி ஆனாள். அவள் உடலில் பார்வதியின் கருப்புநிறம் இணைந்தது. பிரம்மா கவுசிகயை விந்திய மலைக்குச் சென்று அங்கு வசிக்குமாறு கூற அவள் அங்கு வசிக்கச் சென்றாள். அதனால் அவளுக்கு விந்திய வாசினி என்ற பெயர் உண்டாயிற்று. (மார்க்கண்டேய புராணத்திலும் கவுசிகி பற்றிய விவரம் காண்க.)

13. கட்டட நிர்மாணக்கலை

கட்டட நிர்மாணக்கலை வளர்ச்சியில் பதினெண் முனிவர்களுக்கும் பங்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. அவர்கள் பிருகு, அத்திரி, வசிஷ்டர், விசுவகர்மா, மயன், நாரதர், நக்னஜிதன், விஹலக்ஷன், புராணதரன், பிரம்மா, கார்த்திகேயன், நந்தீசுவரன், சவுனகன், கர்க்கர், வாசுதேவன், அனிருத்தன், சுக்கரன், பிருகஸ்பதி.

கட்டட நிர்மாணத்திற்கு முன் கவனிக்க வேண்டியவை

1. சைத்ர (சித்திரை) மாதத்தில் கட்டடம் துவங்கக்கூடாது. அப்படித் துவங்குபவர் நோய்வாய்படுவர்.
2. விசாகம் (வைகாசி) கட்டடம் ஆரம்பிக்க நல்ல நேரம். அவருக்குப் பசு சம்பத்து நிறைய இருக்கும்.
3. ஆக்கிரஹாயனம் (மார்கழி) மாதம் (மாசி) பால்குனம் (பங்குனி) ஆகியவையும் கட்டடம் பணி துவங்குவதற்கான நல்ல மாதங்களே. ஆக்கிரஹாயனத்தில் ஆரம்பிப்பவர் தானிய விருத்தியும், மாசி மாதம் தொடங்குபவர் சகலவித சம்பத்தும், பங்குனியில் ஆரம்பிப்பவர் பொன்னும், புத்திரர்களும் பெறுவர்.
4. ஆஷாட மாதமும் (ஆடி) கட்டடம் துவங்க நல்ல மாதமே. அவனுக்கு நிறைய பிராணிகளும், பணியாளர்களும் இருப்பர்.
5. ஜேஷ்ட, சிராவண, பாத்ர, ஆசுவின, பவுஷ மாதங்கள் நல்லவை அல்ல. (அதாவது ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, தை).
(கொடுக்கப்பட்ட தமிழ் மாதம் பெயர்கள் கூறப்பட்ட நேஷனல் மாதக் காலண்டர் மாதங்களுக்கு எது, எது என்று அறியவே. மாதங்களின் நிகழ்ச்சிகள் மேலே கூறியவை தமிழ்நாட்டில் மாறுபடுகின்றன. அதாவது நமது பஞ்சாங்கப்படி ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மட்டுமே கட்டடக் காலிட தவிர்க்கப்படுகின்றன.)
கிழமைகளில் ஞாயிறும், செவ்வாயும் கூடாது. மற்ற நாட்கள் ஏற்கக்கூடியவை. அசுவினி, ரோகிணி, மூலம், உத்தரம், உத்தராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் நட்சத்திரங்கள் கட்டடம் துவங்க உகந்தவை.

கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்ந்தெடுத்தல் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டிருப்பது போன்றவையே. வீடுகள் பலவகைப்படும்.

1. நாராயணன் கோயிலுக்கு நாலுபக்கம் வாசல் என்ற முதுமொழிப்படி ஆலயங்களுக்கு நான்கு புறம் வாயில்கள், கோபுரங்கள் இருக்கலாம். ஆனால், வீடுகளுக்கு அவ்வாறு கூடாது. இது சர்வதோபத்ர எனப்படும்.
2. மேற்கில் வாயில் இல்லாத வீடு நந்தியவர்த்தம் எனப்படும்.
3. தெற்கில் வாயில் இல்லாதது வர்த்தமனம் எனப்படும்.
4. கிழக்கில் வாயில் இல்லாதது ஸ்வஸ்திகர் எனப்படும்.
5. வடக்கில் வாயில் இல்லாதது ருசிகம் எனப்படும்.

சாதாரண மக்கள் இல்லம் முப்பத்திரண்டு முழம் (அ) 16 கஜம் (அ) 48 அடி நீளம் இருக்க வேண்டும். சமூகப்பிரஷ்டன் வீடு 16 முழம் (அ) 8 கஜம் நீளம் இருக்கலாம். மரங்கள் வீட்டின் பின்புறம் இருத்தல் நலம். மேலும், எவ்வகையான மரம் தேர்ந்தெடுக்க வேண்டும், அரண்மனைகள் நிர்மாணம் போன்றவையும் கூறப்பட்டுள்ளன. அடுத்து விக்கிரகங்கள் அமைப்பது பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.

(விவரங்கள்-அக்கினி புராணம் காண்க)

அடுத்து மண்டபங்களின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
1) 64 தூண்கள் கொண்டது புஷ்பக மண்டபம். 2) 62 தூண்கள் கொண்டது புஷ்பபத்திர மண்டபம். 3) 60 தூண்கள் கொண்டது சுவ்ரத மண்டபம். 4) 58 தூண்கள் கொண்டது அமிர்தநந்தன மண்டபம். 5) 56 தூண்கள் கொண்டது தவுஷல்ய மண்டபம். 6) 54 தூண்கள் உடையது புத்திஸங்கீர்ண மண்டபம். 7) 52 தூண்கள் உடையது கஜபத்திர மண்டபம். 8) ஜயவாஹ மண்டபத்துக்கு 50 தூண்கள். 9) 48 கால்கள் உடையது ஸ்ரீவத்ச மண்டபம். 10) 46 தூண்கள் உடையது விஜய மண்டபம். 11) வாஸ்து கீர்த்தி மண்டபத்திற்கு 44 தூண்கள். 12) சிருதிஞ்ஜய மண்டபத்துக்கு 42 கால்கள். 13) யஜ்ஞபத்திர மண்டபத்துக்கு 40 தூண்கள். 14) 38 தூண்கள் உடையது விசால மண்டபம். 15) சுஷ்லிஷ்ட மண்டபத்திற்கு 36 தூண்கள். 16) சத்ருமர்த்தன மண்டபம் 34 தூண்கள். 17) பாக பஞ்ச மண்டபம் 32 தூண்கள். 18) 30 தூண்கள் நந்தன மண்டபம். 19) 28 தூண்கள் மானவ மண்டபம். 20) 26 தூண்கள் மான பத்திரக மண்டபம். 21) சுக்கிரீவ மண்டபம் 24 கால்கள். 22) ஹரித மண்டபம் 22 தூண்கள். 23) கர்ஹிகர மண்டபம் 20 கால்கள். 24) சதர்த்திகா மண்டபம் 18 தூண்கள். 25) 16 கால் மண்டபம் சிம்ம மண்டபம். 26) சியாமபத்திர மண்டபம் 14 கால்கள். 27) 12 தூண்கள் உடையது சமுத்திர மண்டபம். இவை முக்கோணம், அரைவட்டம், செவ்வக அமைப்பில் நிர்மாணம் செய்யலாம்.

14. தான தருமங்கள்

(அக்கினி புராணம், கருட புராணம், பவிஷ்ய புராணம் போன்ற பல புராணங்களிலும் தான பலன்கள் உள்ளன. காண்க)

1. துலாபுருஷ தானம் : தற்போது குருவாயூரில் நடைபெறுகிறது. ஸ்ரீகிருஷ்ண துலாபாரம் புகழ் மிக்கது. இதில் எடைக்கு எடை தராசில் பொருள்களை நிறுத்தி அளிப்பது.
2. ஹிரண்ய கர்ப்பதானம் : அந்தணர்க்கு பொருள், பணம் அளிப்பது.
3. பிரம்மாண்ட தானம் : உலக உருவை அளிப்பது.
4. கல்பாபதாப தானம் : பொன்னால் மரம் செய்து அளிப்பது.
5. கோ ஸஹஸ்ர தானம் : பசுக்கள் தானம் (ஆயிரம்)
6. காமதேனு தானம் : பசுவும், கன்றும் பொன்னால் செய்து அளித்தல்
7. ஹிரண்ய அசுவதானம் : பொன்னாலான குதிரை.
8. அசுவ ரத தானம் : குதிரைகளுடன் கூடிய தேர் (பொன்னால் ஆனது).
9. ஹேம ஹஸ்தி ரத தானம் : பொன் யானை, ரதம்.
10. பஞ்சலங்கலக தானம் : ஏர் 5 மரத்தாலானவை. ஐம்பொன்னாலானவை அளித்தல்.
11. தரை தானம் : தரை போன்ற பொன் வடிவம்.
12. விச்வசக்கர தானம் : பொன் சக்கரம்.
13. மகாகல்பலதா தானம் : பொன்னாலான பத்து கொடிகள்.
14. சப்த சாகர தானம் : ஏழு குதிரைகள் (அ) கிண்ணங்கள் உப்பு, பால், நெய், பாகு, தயிர், சர்க்கரை, புனிதநீர் ஆகியவை நிரப்பி அவற்றுள் பொன் விக்கிரகங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், யமன், லக்ஷ்மி, பார்வதி ஏழ்கடல் வடிவமாக எண்ணித் தானம் அளித்தல்.
15. ரத்தின தேனு தானம் : பொன்னாலான பசுவின் உறுப்புக்களில் ரத்தினங்கள் புதைந்து அளிக்கப்படும் தானம்.
16. மகா பூத கட தானம் : பொன், ஆபரணங்களால் நிரப்பப்பட்ட கலத்தைத் தானமாக அளித்தல். இப்படிப்பட்ட தானங்கள் நல்ல புண்ணியம் தரும் என்று எண்ணி செய்யப்படுவது நலம் பயக்கும்.

மச்சபுராணம் முற்றிற்று.

 
மேலும் மச்ச புராணம் »
temple news
1. தோற்றுவாய்: பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் இருபதுக்கும் மேற்பட்டவை என்று பாகவதம் கூறுகிறது. எனினும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar