பழநி முருகன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்: முருகனுக்கு காப்பு கட்டப்பட்டது
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2026 05:10
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி விழா காலையில், கால சந்தி பூஜை முடிந்தவுடன் காப்பு கட்டுதல் உடன் துவங்கியது. பெரியநாயகி அம்மன், சிவபெருமான், சோமஸ்கந்தர், நடராஜர், பரிவார தெய்வங்கள், கோயில் யானை கஸ்தூரி ஆகியவற்றிற்கு காப்பு கட்டப்பட்டது.
மதியம் உச்சிக்கால பூஜையில் முருகன் கோயிலில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமி, உற்சவர் சின்னகுமாரசுவாமி, சண்முகர், துவாரபாலகர்கள், மயில், நவவீரர்கள் ஆகியவற்றுக்கு காப்பு கட்டப்பட்டது. விழா நாட்களில் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். நவராத்திரி விழா நாட்களில் பக்தி இசை, சொற்பொழிவு, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெறும். தொடர்ந்து நவராத்திரி நாட்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெறும். பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், ஆகியவை நடைபெறும்.
அக்.,20ல் முருகன் கோயிலில் மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மதியம் 2:45 மணிக்கு மேல் பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலை அடையும். தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு கோதைமங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்வு நடைபெறும். அம்பு போடுதல் நிகழ்வுக்கு பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைந்து, பராசக்தி வேல் முருகன் கோயில் அடைந்த பின் அர்த்தசாம பூஜை நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று (அக்.11,) முதல் அக்.20., வரை நவராத்திரி விழா நாட்களில் முருகன் கோயில் தங்கரத புறப்பாடு நடைபெறாது. அக்.,21, முதல் வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.