பதிவு செய்த நாள்
31
டிச
2020
02:12
திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்களில் நடந்த ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள், சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வீடுகளில் பெண்கள் சுமங்கலி பூஜை நடத்தி வழிபாடு செய்தனர்.நேற்று அதிகாலை, 3:00 மணி முதல் நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி தாயாருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் தரிசனம் நடந்தது. அவிநாசியில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில், திருமுருகன் பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரசுவாமி கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உட்பட சிவாலயங்களில் நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.அதிகாலையில் நடந்த சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆருத்ரா தரிசனத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பின், காலை, 6:00 மணி முதல், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.