திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உற்சவத்தில் பெருமாள் பனிப் போர்வை போர்த்தி ஆஸ்தானம் எழுந்தருளினார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ஒரு பகுதியாக, ராப்பத்து உற்சவம் கடந்த 25ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி, கோவிலை வலம் வந்து, உடையவர் சன்னதியில் மண்டகப்படி நடந்தது. சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருள, நம்மாழ்வார் எதிர்கொண்டு செய்விக்க, பரமபத மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 8:30 மணிக்கு திருவாய்மொழி, சேவை சாற்றுமறை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் நடந்தது. பெருமாள் மெல்லிய இழை கொண்ட போர்வையால் திருமுகம் தெரிய போர்த்தப்பட்டு ஆஸ்தானம் எழுந்தருளினார். பரமபத மண்டபத்திலிருந்து பெருமாள் பனிப் போர்வை போர்த்தி ஆஸ்தானம் எழுந்தருளும் இக்காட்சியைக் காணும் பக்தர்களுக்கு பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜராச்சாரிய சுவாமிகளின் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.