பதிவு செய்த நாள்
12
ஜன
2021
08:01
க.அருச்சுணன் எழுதிய, பெரியோர் வாழ்வில் சுவையானவை நுாலிலிருந்து: அமெரிக்காவில், மெட்காப் நகர் மகளிர் மன்றத்தில், விவேகானந்தர் பேச்சை கேட்டு வியந்த இளம் பெண் ஒருவர், அவரை தனிமையில் சந்தித்து பேச ஆவல் கொண்டார். பல இடங்களில் விவேகானந்தரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும், தனியாக அவரிடம் பேச முடியவில்லை. எங்கும் அவரைச் சுற்றி ஏராளமான கூட்டம். அமெரிக்காவிலிருந்து, பாரீஸ் புறப்படும் சமயம்... அமெரிக்க விமான தளத்தில், விவேகானந்தரை, அப்பெண் சந்தித்து, தங்களிடம் தனியாக பேச வேண்டும்... என்றார். கூட்டத்திலிருந்து தனியாக வந்த, விவேகானந்தர், சொல்லு தாயே... என்றார். அந்த பெண்ணுக்கு வயது, 20 இருக்கும். விவேகானந்தருக்கு, 30 வயது. அந்த பெண், நவநாகரிக மங்கை; விவேகானந்தரோ, முற்றும் துறந்த முனிவர். அமெரிக்க இளைஞர்கள் பலர், என் அழகில் மயங்கி, என்னை சுற்றி வருகின்றனர். நானோ, உங்கள் அறிவில் மயங்கி, உங்களை சுற்றி வருகிறேன்... என்றார்.
நான் என்ன செய்ய வேண்டும் தாயே... என்றார், விவேகானந்தர். என்னுடைய அழகும், உங்களுடைய அறிவும் சேர்ந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் திருமணம் செய்து கொண்டால், என் அழகோடும், உங்கள் அறிவோடும் குழந்தை பிறக்கும். அதற்காக தான், உங்களை தனியாக பேச அழைத்தேன்... என்றார், அப்பெண். தாயே... எனக்கு, 30 வயது. உங்களுக்கோ, 20 வயது இருக்கலாம்... நாம் திருமணம் செய்து, நமக்கு குழந்தை பிறந்து, வளர்ந்து, 20 வயதை தொடுகிற போதுதான், அந்த குழந்தை அறிவுமிக்கதா, இல்லையா என்பது தெரியும். அதற்கு பதிலாக, என்னையே நீங்கள், மகனாக ஏற்றுக்கொள்ளலாமே... இன்று முதல் நான், உங்கள் மகன்... என்றார், விவேகானந்தர். எல்லா பெண்களையும், தாயாக காணுகிற விவேகானந்தர் குணம், அப்போது தான், அப்பெண்ணுக்கு, புரிந்தது.
லண்டனில், ஒரு பல்கலைக்கழகத்தில், சமயச் சொற்பொழிவு செய்தார், விவேகானந்தர். அச்சொற்பொழிவு இன்றும், இங்கிலாந்தில், சிறப்பானதாக கருதப்படுகிறது. அச்சொற்பொழிவில் சில வரிகள்... நான், இந்தியாவின், ஹிந்து மதத்தின் பிரதிநிதியாக வந்துள்ளதாகவும், என்னுடன் சில பிரதிநிதிகள் வந்துள்ளதாகவும் மட்டும் எண்ணி விடாதீர்கள். எங்களுடன், இந்திய திருநாட்டின், 3,000 ஆண்டு பாரம்பரியம், எங்களின் சகிப்புத் தன்மை எல்லாமும் வந்துள்ளதாக, தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்... என்றார்.
ச.குமார் எழுதிய, சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் என்ற நுாலிலிருந்து: விவேகானந்தரின் இயற்பெயர், நரேந்திரநாத். சிறு வயதில் நரேந்திரநாத், பெரியவர்களை பார்த்து, அவரது நண்பர்களுடன் சேர்ந்து தியானம் செய்ய அமர்வார். சிறிது நேரத்திலேயே அவருக்கு, தியானம் கை கூடிவிடும். இதை புரிந்து கொள்ளாத அவரது நண்பர்கள், நரேந்திரநாத் உட்கார்ந்து கொண்டே துாங்குகிறார்... என்று, கேலி செய்வர்.ஒருநாள், இப்படி அவரும், நண்பர்களும் தியானம் செய்யும்போது, அந்த அறையினுள் நாகப் பாம்பு ஊர்ந்து வந்தது. இதை பார்த்த சக நண்பர்கள் பயந்து, ஓடு ஓடு... நரேந்திரா பாம்புடா... என்று, அலறி, ஓடினர். ஆனால், நரேந்திரநாத் மட்டும், தியானத்திலிருந்து எழவில்லை. பாம்பு தன் நண்பனை கடித்து விடுமே என்று பயந்து உற்று நோக்கினர். சிறிது நேரத்தில், வந்த வழியே போய் விட்டது, பாம்பு.