திருவாரூர்: ஞானபுரீ ஸ்ரீ மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட சேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர் சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இங்கு ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டால் சங்கடம் நீங்கி, மங்களம் உண்டாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் நேற்று மார்கழி மாத அமாவாசை மூலம் நட்சத்திரம் கூடிய நாளில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை முன்னிட்டு ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஷகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீஸ்ரீகிருஷ்ணா நந்த தீர்த்த மஹா சுவாமிகளின் முன்னிலையில் அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சேலத்தில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பட்டு வஸ்திரம் அலங்காரம் செய்யப்பட்டு, 10,500 வடை மாலை, மலர் மாலை சாற்ற பட்டது அதனை தொடர்ந்து பகல் 11 மணிக்கு உலகத்தில் முதன் முறையாக தம்மால் ஏற்றப்பட்ட திரிஷதியை கொண்டு மகா சுவாமிகள் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனையும், மகா தீபாராதனையும் செய்துவைத்தார் இதில் கோவில் ஸ்தாபகர் ரமணி அண்ணா திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரர் அறங்காவலர் ஜெகநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து ஆஞ்சநேயர் சுவாமியின் திருவருளையும், மகா சுவாமிகளின் குருவருளையும் பெற்றனர். அதனை அடுத்து மஹாஸ்வாமிகள் பீடத்தில் இருந்த படி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மகா சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீகாரியம் சந்திரமௌலீஸ்வரர் திருமடத்தின் காலண்டரை வெளியிட ரமணி அண்ணா பெற்றுக்கொண்டார்.