பதிவு செய்த நாள்
12
ஜன
2021
07:01
சாலவாக்கம், : உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்துள்ளது எடமச்சி ஏரி. இந்த ஏரிக்கு, நேற்று முன்தினம், அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என, 100க்கும் மேற்பட்டோர், மேளதாளம் முழங்க, ஊரில் இருந்து, ஊர்வலமாக ஏரிக்கு வந்தனர்.
பொன்தாலி, கூரை புடவை, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை, முறம் ஒன்றில் வைத்து, உபரி நீர் வெளியேறும் வழியில் அனுப்பி, கைக்கூப்பி வழிபாடு செய்தனர்.கிராமத்தினர் கூறியதாவது:நவம்பர் மாத பருவ மழைக்கு, ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்து, 7ம் தேதி, ஏரி முழுமையாக நிரம்பியது. தற்போது, ஏரியின் கலங்கல் வழியாக உபரி நீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.இந்த உபரி நீரால், விவசாய நிலங்களில் நீர்ப்பிடித்து, சாகுபடி செய்த பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மழை பொழிவை நிறுத்த வேண்டி, இவ்விதமான தாலி கூரம் என்ற சிறப்பு பூஜை நடத்தினோம். தண்ணீர் தாய்க்கான இந்த சீர்வரிசை பூஜைக்கு பின், மழை பொழியாது என நம்புகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.