காஞ்சி மகாபெரியவர் முன்னிலையில் மதமாற்றம் பற்றிய பேச்சு எழுந்தது. ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவது என்பது சரிதானா எனக் கேட்டார் பக்தர் ஒருவர். ‘‘எல்லா மதங்களின் லட்சியமும் கடவுளை அடைவது தான். எனவே மதமாற்றம் தேவையில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தாய்மொழி, தாய்நாட்டின் மீது பற்று கட்டாயம் தேவை. தாய்நாட்டின் மீது பற்றில்லாதவனை தேசத் துரோகி என்கிறோம். இதைப் போல ஒருவர் எந்த மதத்தில் பிறந்திருக்கிறாரோ அதன் மீது பற்று அவசியம். அந்தந்த மதநெறிப்படி தான் வாழவேண்டும். அதை மக்களிடம் ஏற்படுத்தினால் போதும். மதமாற்றம் ஒழியும். ரயில் நிலையம் வந்ததும் ஜட்காக்காரர், டாக்சிக்காரர், ரிக்ஷாக்காரர் என்று பலரும் சூழ்ந்து கொள்வர். யாருடைய வண்டியில் ஏறினாலும் தேவையான இடத்திற்கு நாம் போகலாம். ஆனால் அவர்கள் கிராக்கி பிடிப்பதற்காக தங்களுக்குள் போட்டியிடுவர். ஆனால் கடவுள் என்னும் ஒரே லட்சியத்திற்கு அழைத்துச் செல்ல வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவதும், மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதும் அர்த்தமற்ற கேலிக்கூத்து. கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள பாலம் தான் மதம். அதன் மூலம் கடவுளை அடையலாம். பாலத்தில் பல வளைவுகள் இருக்கும். எல்லாம் ஒரே அளவாகக் கட்டப்பட்டவை தான். ஒவ்வொரு வளைவும் பக்கத்தில் இருப்பவருக்குப் பெரிதாகவும், துாரத்தில் இருப்பவருக்கு சிறியதாகவும் தோன்றும். ஆனால் அது உண்மையானதல்ல. அதுபோலத் தான் மதங்களும். எனவே யார் எந்த மதத்தை சேர்ந்தவர் என்றாலும் தாய்மதத்தை விட்டு விலகத் தேவையில்லை. மதங்களுக்கு இடையே கொள்கை, நெறிமுறைகளில் வேறுபாடுகள் இருப்பதில் தவறில்லை. அதைச் சரி செய்வதாகச் சொல்லி மதங்களை எல்லாம் ஒன்றாக்க வேண்டிய அவசியமில்லை. பலவிதமாக அமைந்திருப்பதுதான் இயற்கை. பூக்களில் எத்தனை வகை! ஜீவராசிகளில் எத்தனை வகை! ஏன் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி தானே இருக்கிறார்கள்? எனவே மதங்களில் வேற்றுமை இருப்பது இயல்பானதே. ஆனால் அனைவரும் ஒற்றுமையோடு இருப்பது அவசியம். யூனிபார்மிடி அவசியமில்லை. யூனிடி தான் அவசியம். அவரவர் மதநெறிகளை பின்பற்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும். மதம் மாறுவது, மாற்றுவது எல்லாம் தவறு என்பதை உணர வேண்டும்’’ என்றார். விளக்கம் கேட்டு பக்தர் மனநிறைவுடன் புறப்பட்டார்.