பதிவு செய்த நாள்
15
ஜன
2021
06:01
சேலம்: சவுடேஸ்வரி அம்மன் திருவிழாவையொட்டி, ஏராளமான வீரகுமாரர்கள், கத்தி போட்டபடி, ஊர்வலமாக சென்றனர்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா, தை பிறப்பில் நடத்தப்படும். கொரோனா சூழலால், கட்டுப்பாடுகளுடன், முதல்நாள் விழா, நேற்று நடந்தது. வேம்படிதாளம் சவுடேஸ்வரியம்மன் கோவிலில், சக்தி அழைப்பு நடந்தது. பெருமாள் கோவில் வளாகத்திலிருந்து, சக்தி அழைக்கப்பட்டு, பிரதான சாலையில் மட்டும் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது. சுவாமிக்கு முன், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறுவர்கள், கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனை அழைக்கும் கோஷத்துடன், சலங்கைகள் கட்டிய கத்திகளை, இரு கைகளில் ஏந்தி, நெஞ்சில் வீசியபடி, ஊர்வலமாக சென்றனர். சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் வீதியுலா நிறைவடைந்தது. இன்று சாமுண்டி அழைப்பு, நாளை ஜோதி ஊர்வலம் நடக்கிறது. அதேபோல், பெருமாகவுண்டம்பட்டி, குகை, கருங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், சவுடேஸ்வரியம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுகிறது.