பதிவு செய்த நாள்
17
ஜன
2021
03:01
உடுமலை: உடுமலை ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி, கால்நடை வளம் பெருக, உருவார பொம்மைகளை வைத்து, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற, ஆல்கொண்டமால் கோவில் உள்ளது.கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு, தீர்வு வேண்டியும், உருவார பொம்மைகளை வைத்து, இக்கோவிலில், வழிபாடு செய்கின்றனர். பொங்கலன்று, மாடுகள் ஈன்றெடுக்கும் கன்றுகளை, கோவிலுக்கு காணிக்கையாக சுற்றுப்பகுதி மக்கள் வழங்கி வருகின்றனர். இங்கு, பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் திருவிழா நடக்கும். நடப்பாண்டு, கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன், விழா நடத்த அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, நேற்று காலை, 6:00 மணி முதலே, கோவிலில், ஆல்கொண்டமாலனுக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள், பாலாபிஷேகம் செய்தும், ஆடு, மாடு, காளை, நாய் உட்பட உருவார பொம்மைகளை வைத்தும், சிறப்பு பூஜை செய்தனர். முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும், கோவில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.