குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நடந்த சந்து பொங்கல் விழாவில் பொய்க்கால் குதிரைகளுடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. குமாரபாளையத்தில் மார்கழி, தை மாதங்களில், ஒவ்வொரு வீதி பொதுமக்கள், சந்து பொங்கல் எனும் பெயரில் விழா நடத்துவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் நகரின் பல பகுதிகளில் இந்த விழா நடந்து வருகிறது. நேற்று, அரசு மேல்நிலைப் பள்ளி சாலை சத்யாபுரி பகுதியில் விழா நடந்தது. இதையொட்டி காவிரி ஆற்றிலிருந்து மேளதாளம் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில் அம்மன் வேடமிட்டு ஆடியவாறும், பொய்க்கால் குதிரைகள் ஆட்டத்துடனும் பக்தர்கள் பங்கேற்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார். சுந்தரம் மில் எதிரில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலின் கீழ் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.