திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவில் ஆற்றுத் திருவிழா தீர்த்தவாரி வைபவம் நடந்தது. தட்சணா பினாகினி என போற்றப்படும் புண்ணிய நதியாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றில் தைத்திங்கள் முதல் நாளில் இருந்து 5 தினங்களுக்கு அனைத்து நதிகளும் தத்தம் தீவினையை போக்கிக் கொள்ள சேர்கிறது என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புவாய்ந்த திருக்கோவிலுார் தென்பெண்ணையாற்றில் வீரட்டானேஸ்வரர்க்கு ஆண்டு தோறும் தீர்த்தவாரி வைபவம் நடைபெறுவது வழக்கம். தீர்த்தவாரி முடிந்து தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு பந்தலில் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பர்.ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக ஆற்றுத் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், காலை 8:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சிவானந்தவல்லி உள்ளிட்ட மூல மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருள, தென்பெண்ணையில் அஸ்திரதேவர் எனப்படும் சக்திக்கு மகாபிஷேகம் நடந்தது. தீர்த்தவாரி முடிந்து மூல மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் இன்றி சிவாச்சாரியார்கள் மட்டுமே பங்கேற்றனர்.