பதிவு செய்த நாள்
19
ஜன
2021
04:01
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள தேவராடிபாளையத்தில் பூ பொங்கலான நேற்று முன் தினம் (ஜன. 16ல்) வீடு, வீடாக வந்த சலங்கை மாட்டுக்கு, பொதுமக்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். கிணத்துக்கடவு அடுத்துள்ள தேவராடிபாளையம் கிராமத்தில், பொங்கல் விழாவின், காப்பு கட்டும் நாளில் இருந்து, பூ பொங்கல் வரை, வீடுகளில் உள்ள மாடு கன்று ஈன்றால், அந்த கன்று குட்டியை மாலகோவிலுக்கு நேர்ந்து விடுகின்றனர். இந்த மாடுகளை பூ பொங்கலான, நேற்று முன்தினம், இரண்டு சலங்கை மாடுகளை மைதானத்தில் நிறுத்தி, கழுத்தில் மணி கட்டிவிட்டு, வீடு, வீடாக அழைத்து சென்றனர்.அங்கு, சலங்கை மாட்டின் வரவுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மஞ்சள் நீர் மாட்டுக்கு ஊற்றி, தேங்காய், பழம் வைத்து வழிபட்டனர். மேலும், வீட்டுக்குள் சலங்கை மாட்டை அழைத்து சென்று வந்தனர். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற ஐதீகம் காலம் காலமாக உள்ளது. பின், சலங்கை மாட்டுடன் வருபவர்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றியும், உறவினர்கள் மீதும் மஞ்சள் நீர் ஊற்றி அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிபடுத்தி விளையாடினர். பின், மதியம் சலங்கை மாடுகளை அழைத்துக் கொண்டு, அருகில் உள்ள கோதவாடி ஆல்கொண்ட திருமால் கோவிலுக்கு அழைத்து சென்றுவிட்டு, பின் மாலை திரும்பி வந்து, மீண்டும் மாட்டுடன் விளையாடினர். இதனால், தேவராடிபாளையம் கிராமமே திருவிழாகோலம் பூண்டு காணப்பட்டது.