பதிவு செய்த நாள்
22
ஜன
2021
02:01
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பழநியில் தைப்பூசம் வரும் 28 ம் தேதி நடக்க உள்ளது. விழாவை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூச திருவிழாவை கோயிலில் கொடியேற்றத்தின் போது முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள் பாதயாத்திரையாக காவடிகள், அலகுகுத்தி வந்தனர் 27ல், திருக்கல்யாணமும், 28ம் தேதி தைப்பூச தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான 31ம் தேதி தெப்ப திருவிழாவிற்கு பின் கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: தைப்பூசம் வரும் 28 ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் டி.ஐ.ஜி., முத்துச்சாமி ஏற்பாட்டில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.முக்கிய இடங்களில் உள்ள கேமராக்களை, அடிவாரம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டு அறை மூலமாக 24 மணி நேரமும் கண்காணிப்பர். கூட்டத்தை கண்காணிக்க 30 கோபுரங்கள், 30 காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 51 ரோந்து வாகனங்கள் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது.மருத்துவ உதவிக்கு குழு ஜன.26 முதல் 28 ம்தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து பழநி செல்லும் வாகனங்கள் ஒட்டன்சத்திரம் வழியாக கள்ளிமந்தையம், தொப்பம்பட்டி வழியாகவும், பொள்ளச்சியில் இருந்து வரும் வாகனங்கள் தாளையம் வழியாக வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய யானைப்பாதையில் 11 இடங்களிலும், மற்ற இடங்களில் தேவைக்கேற்பவும் குழுவாக நிறுத்தி பக்தர்களை அனுப்ப உள்ளனர். மருத்துவ உதவிக்கு பக்தர்களை சிகிச்சைக்கு அனுப்ப என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஒளிரும் பட்டை அணிந்த உடையோடு தயார் நிலையில் இருப்பர். இடும்பன்குளம், சண்முகநதியில் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் ரப்பர் படகுடன் தயாராக இருப்பர். போலீசார், குற்றத்தடுப்பு பிரிவினர், வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், சிறப்பு காவல் நிறுவனங்கள், வீடியோ கிராபர்கள், ஊர்காவல் படையினர் உட்பட 3500 போலீசார் பணியில் ஈடுபடுவர்.