பதிவு செய்த நாள்
22
ஜன
2021
06:01
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம், நடத்த அனுமதி கோரி, முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுப்பது குறித்து, அனைத்து இந்து சமுதாயத்தினர் பங்கேற்கும் கூட்டம், இன்று காரமடையில் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள, வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். மிகவும் பழமையான கோயில் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் மாசிமக தேரோட்டம், வெகு விமரிசையாக நடைபெறும். நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், இவ்விழாவில் பங்கேற்பர். கொரோனா பிரச்னையால், இந்த ஆண்டு மாசிமகத் தேரோட்டம், நடைபெறுமா என்ற சந்தேகம், பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோவில் விழாக்களும், தேரோட்டமும் நடைபெற்றுள்ளன. இதே போன்று, காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத் தேரோட்டம் மற்றும் விழா ஆகியவை நடத்த, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். என்பது குறித்து அனைத்து இந்து சமுதாய தலைவர்கள் கூட்டம், இன்று மாலை, 4:00 மணிக்கு காரமடை, தாசபளஞ்சியக திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் தீர்மானம் நிறைவேற்றி, காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும், தமிழக முதல்வர் பழனிசாமியிடம், கோரிக்கை மனு கொடுக்க உள்ளனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை, இந்து முன்னணி அமைப்பினர் செய்து வருகின்றனர்.